மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
85 வயதான ரிட்லி ஸ்காட் இயக்கிய நெப்போலியனின் மிக சமீபத்திய வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம், பிரெஞ்சு புரட்சியின் உச்சியில் உயர்ந்து, 1799 ஆம் ஆண்டில் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை ஏற்பாடு செய்து, 1804 இல் தன்னை பேரரசராக முடிசூட்டிக் கொண்ட இராணுவ அதிகாரி நெப்போலியன் போனபார்ட்டின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை கையாள முயற்சிக்கிறது. நெப்போலியன் இறுதியில் ஜூன் 1815 இல் வாட்டர்லூவில் (இப்போது பெல்ஜியம்) பல ஐரோப்பிய சக்திகளின் கூட்டுப் படைகளால் தோற்கடிக்கப்பட்டார். இதன்பிறகு, அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள செயின்ட் ஹெலனா தீவிற்கு அவர் நாடுகடத்தப்பட்டு ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் இறந்தார்.
போனபார்ட் (1769-1821) ஒரு சிக்கலான, உலக வரலாற்று மனிதர் ஆவார். 1789 ஆம் ஆண்டின் மாபெரும் புரட்சியில் தோன்றிய நெப்போலியப் போர்களின் சகாப்தம் (1803-1815), 1792-1802 வரை நடந்த புரட்சிகரப் போர்கள் நவீன சமூகத்தின் வளர்ச்சியில் முக்கியமானவைகள் ஆகும்.
இருப்பினும், ஸ்காட் தனது பொதுக் கருத்துகளிலோ அல்லது திரைப்படத்தின் உள்ளடக்கத்திலோ வரலாறு மற்றும் வரலாற்று செயல்முறைகளில் எந்தப் பெரிய ஆர்வத்தையும் குறிப்பிட்டு காண்பிக்கவில்லை. அவரது நெப்போலியன் மனப்பதிவுகளின் மேலோட்டமான தொகுப்பு, மேலோட்டமான “உளவியல்” நுண்ணறிவு புரிதல் மற்றும் சுருக்கமான போர்க் காட்சிகள், இவைகள் நெப்போலியனின் இராணுவ வலிமையை விளக்கும் வகையில் கூட முன்வைக்கப்படவில்லை.
நெப்போலியன் திரைப்படம் பின்வரும் தலைப்புகளுடன் தொடங்குகிறது: “1789—பிரான்சில் புரட்சி,” “மக்கள் பெருந்துயரால் புரட்சியை நோக்கி உந்தப்படுகிறார்கள் ... புரட்சியால் மீண்டும் பெருந்துயரத்திற்குத் தள்ளப்பட்டனர்.” இந்த வகையான ஆழமான உட்பார்வையாக திரைப்படத் தயாரிப்பாளர்களின் பார்வையை சுருக்கமாகத் தொகுத்தளிக்கிறது. அதாவது புரட்சி - மற்றும் பொதுவாக வரலாறு - நேரத்தை வீணடிப்பதாகும். புரட்சியானது ஒரு அர்த்தமற்ற நிகழ்வாகும், எல்லோரும் இறுதியில் அவர்கள் ஆரம்பத்தில் இருந்த அதே மோசமான சூழ்நிலைகளில் தங்களைக் கண்டார்கள். மொத்தத்தில், அவர்கள் வெறுமனே படுக்கையில் இருந்திருக்க வேண்டும் என்ற பார்வையை கொடுக்கிறது.
எப்படியிருந்தாலும், திரைப்படத்தின் அதிரடிக் காட்சி தொடங்கும் போது, 1793 அக்டோபரில் அரசி மேரி அந்துவானெட் (கேத்தரின் வாக்கர்) தூக்கிலிடப்படுவதை சித்தரிக்கும் ஒரு காட்சிக்கு பார்வையாளர்களை அவசரமாக கொண்டு செல்கிறார். அழுகிய காய்கறிகளால் தாக்கப்பட்டு கில்லட்டினை (தலையைத் துண்டித்து மரணதண்டனை அளிக்கும் கருவி) நோக்கி நடந்து செல்லும் அரசியை இரத்த வெறி பிடித்த “கும்பல்” திட்டுவதாகக் காண்கிறோம். ஸ்காட்டின் அனுதாபம் இங்கே எங்கு இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. இளம் போனபார்ட் (ஜோக்வின் பீனிக்ஸ்) ஒரு தனிமையான மற்றும் அலட்சியமான பார்வையாளராக இருக்கிறார். அவரது இருப்பு உண்மையில் எந்த அடிப்படையும் இல்லாத கலைத்துவச் சுதந்திரத்தை எடுத்துக் கொள்கிறது.
பின்னர் ஜாகோபின் புரட்சியாளர் மாக்சிமிலியன் ரோபெஸ்பியர் (சாம் ட்ராப்டன்) தேசிய மாநாட்டுக்கு (National Convention) முன்னர் அரசி தூக்கிலிடப்படுவது குறித்த கேள்விக்கு உரையாற்றுவதைக் காண்கிறோம். “பயங்கரவாதம் என்பது நீதியைத் தவிர வேறொன்றுமில்லை— உடனடியானது, கடுமையானது, நெகிழ்ச்சியற்றது” என்று ரோபெஸ்பியர் வலியுறுத்துகிறார்.
நெப்போலியன் மாநாட்டின் (Convention) கூட்டத்தைப் பார்க்கிறார். அவர் ஒரு சக்திவாய்ந்த அரசியல்வாதியும் பின்னர் ஆளும் பொதுச்சபையின் (Directory) உறுப்பினருமான போல் பர்ராஸை (தஹர் ரஹீம்) சந்திக்கிறார், அவர் தெற்கு பிரெஞ்சு நகரமான துலோனை பிரிட்டிஷாருடன் இணைந்த அரச படைகளிடமிருந்து மீட்டெடுக்க முயற்சிக்கிறார். “துறைமுகத்தில் ஆதிக்கம் செலுத்தும் கோட்டையைக் கைப்பற்றுங்கள், உங்களிடம் நகரம் உள்ளது” என்று இளம் பீரங்கி அதிகாரி (நெப்போலியன்) பர்ராஸிடம் கூறுகிறார். நகரைத் தாக்கி பிரிட்டிஷ் கடற்படையைத் தோற்கடித்த பின்னர், துலோனில் நெப்போலியனின் வெற்றி அவரது அந்தஸ்தையும் மதிப்பையும் உயர்த்துகிறது.
இராணுவ வெற்றியைத் தொடர்ந்து, பர்ராஸ் நெப்போலியனிடம் ரோபெஸ்பியர் தனது “சட்டத்திற்குப் புறம்பான பயங்கரவாதம்” காரணமாக “ஆட்சி செய்யத் தகுதியற்றவர்” என்று கூறுகிறார். முன்பு ரோபெஸ்பியரின் ஆதரவாளராக இருந்த நெப்போலியன், அந்த இளைஞனை பிரிகேடியர்-ஜெனரல் பதவிக்கு உயர்த்த உதவினார். அவர் விரைவாக பிற்போக்கின் பக்கம் நகர்கிறார். ஜூலை 1794 இன் தெர்மிடோரிய எதிர்வினையில் (Thermidorian Reaction of July 1794) மாநாட்டின் கொந்தளிப்பான கூட்டத்தில் ரோபெஸ்பியர் தன்னைக் குற்றம்சாட்டப்பட்டவராக காண்கிறார் (”தெர்மிடோர்” புதிய பிரெஞ்சு குடியரசு நாட்காட்டியில் 11 வது மாதமாகும்). அவர் கில்லட்டினுக்கு அனுப்பப்படுகிறார், மேரி அந்துவானெட்டின் மரணதண்டனையைத் உற்சாகப்படுத்தியதைப் போலவே, திரைப்படத்தில் இரத்தவெறி கொண்ட ஒரு கும்பல் இந்த மரணதண்டனையை உற்சாகப்படுத்துகிறது. இவ்வாறாக பிரெஞ்சுப் புரட்சியின் தீவிரக் கட்டம் முடிவுக்கு வந்து, புதிய முதலாளித்துவ அரசு மற்றும் சமூகத்தின் ஒருங்கிணைப்பு இயக்கப்படுகிறது.
இரண்டரை மணி நேரப் திரைப்படத்தின் மீதிப் பகுதியானது பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்பட்ட அல்லது வரலாற்று ஒத்திசைவற்று, ஒரு நிகழ்வு அல்லது அத்தியாயத்திலிருந்து அடுத்த அத்தியாயத்திற்குத் தாவுகிறது. பிரபுத்துவ விதவையான ஜோஸபின் டு போஹர்னைஸ் (வனேசா கிர்பி) உடனான நெப்போலியனின் தாம்பத்தியத்தையும், பின்னர் எகிப்தில் அவரது 1798 படையெடுப்பையும் நாங்கள் பின்தொடர்கிறோம். எகிப்தில் நடக்கும் சம்பவங்கள் சற்றே நகைப்புக்குரியதாக சித்தரிக்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு துருப்புக்கள் பிரமிடுகள் மீது குண்டுகளை வீசுகின்றன, இது திரைப்படத்தின் கண்டுபிடிப்பாகும்.
பிரான்சுக்குத் திரும்பிய நெப்போலியன், பொதுச்சபையின் (Directory) தலைவர்களை ஊழல் மற்றும் திறமையில்லாதவர்கள் என்று குற்றம் சாட்டுகிறார்: “பிரான்ஸ் திவாலாகி விட்டதைக் காண நான் பிரான்சுக்குத் திரும்பியுள்ளேன்” என்கிறார். ரோபெஸ்பியரின் வீழ்ச்சிக்கு, முன்னர் உதவிய பொலிஸ்துறை அமைச்சரான இமானுவேல் சியையெஸ் (ஜூலியன் ரிண்ட்-டுட்), சார்லஸ் மெளரிஸ் டு டாலேராண்ட் (பால் ரைஸ்) மற்றும் ஜோசப் ஃபூசே (ஜான் ஹாட்ஜ்கின்சன்) போன்ற நபர்களுடன் அவர் ஆளும் குழுவுக்கு எதிராக சதி செய்யத் தொடங்குகிறார்.
18 வது புரூமேரின் துரதிர்ஷ்டவசமான ஆட்சிக்கவிழ்ப்பு (நவம்பர் 9, 1799) மேற்கொள்ளப்படுகிறது. இது, நெப்போலியன் ஆட்சிக்கு வர வழிவகுக்கிறது. திரைப்படம் இங்கே ஒப்பீட்டளவில் துல்லியமாக உள்ளது. போனபார்ட் தனது தைரியத்தை இழந்து, ஐந்நூறு பேர் கவுன்சிலுக்கு (Council of Five Hundred) எதிரான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் கிட்டத்தட்ட தோல்வியுற்றார். ஆத்திரமடைந்த பிரதிநிதிகள் நெப்போலியனை ஒரு “சட்டவிரோதமானவர்” மற்றும் “அதிகார பசி கொண்டவர்” என்று கேலி செய்து அவரைத் தாக்கினர். இறுதியில், அவரது சகோதரர் லூசியன் மற்றும் துப்பாக்கி ஏந்திய வீரர்களின் உதவியுடன், இரத்தம் தோய்ந்த ஆட்சிக் கவிழ்ப்பில் மட்டுமே அவரால் வெற்றி பெற முடிந்தது. நெப்போலியன் பிரான்சின் தலைமைப் பிரதிநிதியானார் (First Consul).
ஸ்காட்டின் திரைப்படம் நெப்போலியன் வாழ்க்கையின் மற்றைய முக்கிய நிகழ்வுகளை முன்னெடுத்துச் செல்கிறது. 1804 ஆம் ஆண்டில், அவர் தன்னை பேரரசராக முடிசூட்டினார், இது லுட்விக் வான் பீத்தோவனை பிரபலமாக கோபப்படுத்தியது, அவரது சிம்பொனி எண் 3 (”ஈரோய்கா”) ஆரம்பத்தில் நெப்போலியனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
அடுத்து வந்த தசாப்த யுத்தத்தின் போக்கில், ஓஸ்டர்லிட்ஸில் (1805) ஆஸ்திரியர்கள் மற்றும் ரஷ்யர்களுக்கு எதிரான புகழ்பெற்ற பிரெஞ்சு வெற்றி உட்பட பல்வேறு போர்களின் காட்சிகளை இந்தத் திரைப்படம் வழங்குகிறது.
இறுதியாக, ரஷ்யா மீது படையெடுப்பதற்கான போனபார்ட்டின் துரதிர்ஷ்டவசமான முடிவும், அதன் விளைவுகளும் உள்ளன. போரோடினோ போர்ச் சமர் (1812, Battle of Borodino), நெப்போலியனுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும், இதில் அவரது இராணுவம் பெரும் இழப்புகளைத் தக்க வைத்துக் கொள்கிறது, அதைத் தொடர்ந்து பிரெஞ்சுப் படைகள் மாஸ்கோவை ஆக்கிரமித்தன. ரஷ்யர்கள் பெரும்பாலும் நகரத்தைக் கைவிட்டு தீவைத்து நெப்போலியனின் படைகளுக்கு உணவு மற்றும் பிற பொருட்களை இழக்கச் செய்தனர்.
வாட்டர்லூவில் இந்தத் திரைப்படத்தின் உச்சக்கட்டக் காட்சி நடைபெறுவதில் ஆச்சரியமில்லை.1815 ஆம் ஆண்டில் வாட்டர்லூவில் பிரெஞ்சு துருப்புக்கள் இரண்டு படைகளால் தோற்கடிக்கப்படுகின்றன, அவற்றில் ஒன்று வெலிங்டன் பிரபு (ரூபர்ட் எவெரெட்) தலைமையேற்ற பிரிட்டிஷ் தலைமையிலான படையாகும். நெப்போலியன் மிகவும் கடுமையான இரண்டாவது நாடுகடத்தலுக்கு அனுப்பப்படுகிறார். செயின்ட் ஹெலினாவில், அங்கு அவர் தனது இறுதி நாட்களைக் கடக்கிறார்.
ஸ்காட்டின் திரைப்படம் வரலாற்றைக் குறித்த ஆர்வத்தைத் தூண்டுகிறது. ஆனால், பார்வையாளரின் புரிதலுக்கு கணிசமாக பங்களிக்கவில்லை. நெப்போலியன் ஒரு ஆளுமையும் மற்றும் வரலாற்று நபரும் என்ற முறையில் மிகவும் மேம்போக்கானவற்றைத் தவிர, இது சிறிய உட்பார்வையை வழங்குகிறது அல்லது பிரெஞ்சுப் புரட்சி —அறிவொளிக் காலத்தில் அதன் பூமியை உலுக்கிய புத்திஜீவித ஆதார வளங்கள் உட்பட— மற்றும் அதற்குப் பிந்தைய விளைவுகளை வழங்குகிறது.
நெப்போலியனுக்கும் ஜோஸபினுக்கும் இடையிலான அவர்களுடைய செக்ஸ் பிரச்சினைகள் மற்றும் பொறாமைகள், மேலும் அவரது குழந்தையின்மை (மற்றும் அதன் விளைவாக தம்பதியரின் பிரிவு) ஆகியவற்றுக்கு இந்த படைப்பு அதன் பெரும்பகுதியை ஒதுக்குகிறது. இது சமகால பாலின அரசியலால் ஓரளவு உந்தப்பட்ட கவனம் கட்டாயமாக செலுத்தப்படுகிறது. நெப்போலியனின் வாழ்க்கையிலும் தொழிலிலும் ஒரு தீர்க்கமான சக்தியாக இருக்க ஜோஸபின் கடமைப்பட்டிருக்கிறார். இந்த நெப்போலியன் திரைப்படம் முட்டாள்தனமாக போனபார்ட்டின் ரஷ்யா மீதான படையெடுப்பு அவரது முன்னாள் மனைவி இளம் ஜார் முதலாம் அலெக்சாண்டருடன் (எட்வார்ட் பிலிப்பொன்னாட்) உல்லாசமாக இருந்ததால் ஏற்பட்ட பொறாமையால் உந்தப்பட்டது என்று கூட முட்டாள்தனமாக சுட்டிக்காட்டப்படுகிறது.
பீனிக்ஸ் கணிசமான ஆளுமையாக நடிக்க முயற்சித்தாலும், பொதுவாக நடிப்பு திருப்திகரமானது. அவரது நடிப்பின் வரம்புகள் திரைக்கதை மற்றும் இயக்கத்தின் வரம்புகளாக இருக்கின்றன. அவர் அந்தக் கதாபாத்திரத்தை பெரும்பாலும் ஒரு அவநம்பிக்கையான தனிமையானவராகவும், ஐரோப்பிய மேல்தட்டினருக்கு தன்னை நிரூபிக்க முயற்சிக்கும் ஒருவராகவும், நம்பமுடியாத “நடிப்பு முறைப்” பாணியில் முணுமுணுப்பவராகவும் அவர் கடந்து செல்கிறார்.
குறிப்பிட்டுள்ளபடி, நெப்போலியன் திரைப்படத்தின் பல காட்சிகள் அவசர அவசரமாக கடந்து செல்கின்றன, பார்வையாளருக்கு அவற்றைப் பதிவு செய்யவோ அல்லது அவற்றின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொள்ளவோ திறனைக் கொடுக்கவில்லை. தொழில்நுட்ப கூறுகள், ஒளிப்பதிவு மற்றும் காட்சி அனைத்தும் ஈர்க்கக்கூடியவைகளாக இருக்கின்றன, ஆனால் அவைகள் ஒருவரின் அறிவை சிறிதேதான் சேர்க்கின்றன.
ஸ்காட், நெப்போலியனை ஒரு இராணுவ மேதை என்று பாராட்டுகிறார், அவர் நிச்சயமாக அப்படித்தான் இருந்தார். ஆனால், இது 1789 புரட்சியால் ஏற்படுத்தப்பட்ட சமூக மாற்றங்களில் பெரும்பகுதியில் வேரூன்றியிருந்தது. இது எந்த விவாதத்தையும் அதில் இடம்பெறச் செய்யவில்லை. “புரட்சியும் நெப்போலியனும் உருவாக்கிய போர் விஞ்ஞானம் புரட்சியால் கொண்டுவரப்பட்ட புதிய உறவுகளின் அவசியமான விளைவாகும்” என்று பிரடெரிக் ஏங்கெல்ஸ் குறிப்பிடுகின்றார். நெப்போலியனின் “மாபெரும் கண்டுபிடிப்புகளின்” இரண்டு குணாதிசயங்களாக இருப்பவைகள், வெகுஜனப் போர் (mass warfare) மற்றும் படைகளை வேகமாக நகர்த்துதல் (mobility), “முதலாளித்துவ சகாப்தத்தின் நாகரிகத்தின் அளவை” இது முன்னிறுத்துகின்றது.
இறுதியில், ஸ்காட் பிரெஞ்சுப் புரட்சியையும் முழு சகாப்தத்தையும் மில்லியன் கணக்கான இறப்புகளுக்கு இட்டுச் செல்லும் மாபெரும் தவறுகளைத் தவிர வேறொன்றுமில்லை என்று கருதுகிறார். நெப்போலியன் 1789 க்குப் பிறகு பல்வேறு மோதல்களில் இறந்தவர்களின் நீண்ட பட்டியலுடன் திரைப்படத்தை முடிக்கிறார். இந்த பிலிஸ்தீனியக் (அறிவில்லாத) கருத்தாக்கத்தின்படி, வரலாறு என்பது ஒன்றன் பின் ஒன்றாக அர்த்தமற்றது என்றாகிவிடுகிறது.
நெப்போலினிய சகாப்தம் கடந்த காலங்களில் தீவிர இலக்கியம் மற்றும் கலையின் கருப்பொருளாக இருந்தது. 19 ஆம் நூற்றாண்டின் மிகவும் குறிப்பிடத்தக்க சில நாவல்கள் இக்காலகட்டத்தை பிரதிபலிக்கின்றன, இதில் ஸ்டெண்டலின் பர்மாவிலுள்ள துறவிகள் மடாலயம் (Stendhal, The Charterhouse of Parma), தாக்கரேவின் வேனிட்டியிலுள்ள சந்தை அல்லது தற்பெருமை உலகம் (Thackeray,Vanity Fair) மற்றும் விக்டர் ஹ்யூகோவின் முழுமையான பரிதாபகரமானவர்கள் (Victor Hugo, Les Misérables) ஆகியவை அடங்கும். இவைகள் அனைத்தும் வாட்டர்லூ போரை விவரிக்கின்றன. மேலும், நிச்சயமாக, நெப்போலியனின் ரஷ்யா மீதான படையெடுப்பை விவரிக்கும் டால்ஸ்டாய்யின் மிகச் சிறந்த போரும் அமைதியும் இதில் அடங்கும். இந்தப் படைப்புகள் மற்றும் பல, அப்போதிருந்த ஐரோப்பிய சமூகம் மற்றும் அதன் இயக்கவியல் தொடர்பான நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள முயன்றன.
ரிட்லி ஸ்காட், அத்தகைய ஆர்வத்தை அல்லது திறனை ஒருபோதும் வெளிப்படுத்தியதில்லை (Alien, Blade, Runner, Gladiator, ஆகிய திரைப்படங்களில்), அது இங்கேயும் நிரூபிக்கப்படவில்லை. ஸ்காட் இன்று புரட்சியின் வாய்ப்புகளைப் பற்றி பதட்டமாக இருக்கலாம் என்று கூட ஒருவர் சந்தேகிக்கலாம், அத்தகைய நிகழ்வு பரந்த சமூக துயரத்திற்கான விடையிறுப்பாக எவ்வளவு நியாயமானதாக இருந்தாலும் கூட.
மேலும், தனது திரைப்படத் தயாரிப்பில் கருப்பொருளை விட காட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஸ்காட், திரைப்படத்தின் பிழைகள் குறித்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு தனித்துவமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறார். ஸ்காட் இவ்வாறு இது குறித்து கருத்துரைத்தார், “வரலாற்றாசிரியர்களுடன் எனக்கு பிரச்சினைகள் இருக்கும்போது, நான் கேட்கிறேன், ‘மன்னிக்கவும் நண்பரே, நீங்கள் அங்கு இருந்தீர்களா? இல்லையா? சரி, f––k மூடுங்கள்.” கலைச் சுதந்திரங்கள் தவிர்க்க முடியாதவையாகும், ஆயினும்கூட, பிந்தையது மதிப்பாய்வு செய்யப்பட்ட உள்ளடக்கத்தின் முக்கிய மற்றும் பொருளுடன் அர்த்தமுள்ளதாகவும் ஆக்கபூர்வமாகவும் தொடர்புபடுத்தப்பட வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, ஸ்காட் இங்கே தனது ஆழத்தை விட்டு வெளியே இருக்கிறார்.
பிரெஞ்சு இயக்குனர் அபெல் கான்ஸ் 1927 ஆம் ஆண்டில் தனது ஒலிவடிவமற்ற திரைப்படமாக, 330 நிமிட காவியமான நெப்போலியனை உருவாக்கினார்.
ஸ்டான்லி குப்ரிக் நெப்போலியனின் வாழ்க்கையைக் கையாள எண்ணி விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டார். அவரால் இப்படத்தை உருவாக்க முடியவில்லை, அதற்கு பதிலாக பேரி லிண்டன் (1975) என்ற திரைப்படத்தை இயக்கினார். இது ஏழு வருட யுத்தத்தின் (Seven Years War) நிகழ்வுகளை உள்ளடக்கியது. குப்ரிக்கின் திட்டத்தை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ஒரு HBO வலையமைப்பின் தொலைக்காட்சித் தொடரின் வடிவத்தில் எடுத்துள்ளார். நெப்போலியனாக ராட் ஸ்டீகர் மற்றும் வெலிங்டனாக கிறிஸ்டோபர் பிளம்மர் நடித்த செர்ஜி போண்டார்ச்சுக்கின் வாட்டர்லூ (1970) இல் பதினாறாம் லூயியாக ஆர்சன் வெல்லெஸ் ஒரு சிறிய தோற்றத்துடன் நடித்ததும் கவனிக்கத்தக்கது.
நெப்போலியன் போனபார்ட்டின் வரலாற்றுப் பாத்திரமானது நீண்ட காலமாக மார்க்சிச பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது, இது அதன் முரண்பாடுகளை அவிழ்த்துள்ளது, பிரெஞ்சுப் புரட்சியின் தீவிரமான, சமத்துவ உந்துதல் தொடர்புகளை எதிர்ப்பதாகவும், மற்றும் நிலப்பிரபுத்துவ ஐரோப்பாவிற்கும் பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்திற்கும் ஒரு பயங்கரமான “ஜாக்கோபின்” வெறுப்பாகவும் இருந்த இரண்டு எதிர்வினையின் ஒரு உருவமாக உள்ளது.
பிரெஞ்சுப் புரட்சியானது, “உற்பத்தி மற்றும் வணிகத்தில் உழைத்துவந்த தேசத்தின் பெரும் திரளான மக்கள், சோம்பேறியான சலுகை பெற்ற வர்க்கங்களான, பிரபுக்கள் மற்றும் மதகுருமார்கள் மீது” பெற்ற வெற்றியாகும் என்று ஏங்கெல்ஸ் வலியுறுத்தினார். ஆனால், இந்த வெற்றியானது “இந்தப் ‘பிரிவு’ (‘estate’) இன் ஒரு சிறிய பகுதியின் பிரத்யேகமான வெற்றியாகவும், சமூக சலுகை பெற்ற பிரிவினரால் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியதாகவும், அதாவது முதலாளித்துவ உடைமையாளர்களின் வெற்றியாகவும் விரைவாக தன்னை பிரத்யேகமாக வெளிப்படுத்தியது”.
ட்ரொட்ஸ்கி ஒருமுறை எழுதினார், போனபார்ட் புரட்சியை “ஒரு இராணுவ சர்வாதிகாரத்தின் மூலமாக” தடுத்து நிறுத்தினார். இருப்பினும், பிரெஞ்சுப் படைகள் போலந்தை ஆக்கிரமித்தபோது, நெப்போலியன் ஒரு ஆணையில் கையெழுத்திட்டார்: அதாவது “பண்ணையடிமை முறை ஒழிக்கப்படுகிறது.” இந்த நடவடிக்கை விவசாயிகள் மீதான நெப்போலியனின் அனுதாபத்தாலோ அல்லது ஜனநாயகக் கோட்பாடுகளாலோ கட்டளையிடப்படவில்லை, மாறாக போனபார்ட்டிச சர்வாதிகாரம் நிலப்பிரபுத்துவத்தை அல்ல, மாறாக முதலாளித்துவ சொத்துறவுகளின் மீது அடித்தளமாக கொண்டிருந்தது என்ற உண்மையால் ஆணையிடப்பட்டது.”
மற்றொரு சந்தர்ப்பத்தில், ட்ரொட்ஸ்கி சுட்டிக் காட்டினார், “ரோபெஸ்பியர் கைவினைஞர்கள் மத்தியிலும், நடுத்தர பூர்சுவாசி மத்தியிலுள்ள பொதுச்சபை (Directory) இலும் தனது ஆதரவை நாடினார். போனபார்ட் வங்கிகளுடன் கூட்டு சேர்ந்தார். எவ்வாறெனினும், இந்த மாற்றங்கள் அனைத்தும் —நிச்சயமாக, ஒரு அரசியல் முக்கியத்துவத்தை மட்டுமல்ல, ஒரு சமூக முக்கியத்துவத்தையும் கொண்டிருந்தன— புதிய பூர்சுவா சமூகம் மற்றும் அரசின் அடிப்படையில் இவை நிகழ்ந்தன.”
இவைகள் சிக்கலானவையாகும். ஆனால் புதிரானதோ அல்லது அணுக முடியாத பகுப்பாய்வுகளோ அல்ல. தீவிரமான வரலாற்று ஆய்வுக்கும் ஆராய்ச்சிக்கும் வேண்டுமென்றே கண்ணை மூடிக்கொண்டு, சகாப்த நிகழ்வுகளை படைக்கும் போது “திட்டமிடல் இல்லாமல், தன்னிச்சையாக ஒன்றை தயாரிப்பது” என்று முடிவு செய்யும் கலைஞர், ஒரு அழுத்தமான அல்லது நீடித்து நிலைக்க வைக்கும் படைப்பை உருவாக்குவதற்கு வாய்ப்பில்லை. ஸ்காட்டின் நெப்போலியன் திரைப்படமும் அப்படி ஒரு விளைவாகத்தான் இருக்கிறது.