முன்னோக்கு

போயிங் விற்பனை ஒப்பந்தத்திற்கு "இல்லை" என வாக்களி! IAM அதிகாரத்துவத்தின் துரோகங்களுக்கு எதிராக சாமானிய தொழிலாளர் அணிகளை ஒழுங்கமை!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

இந்த விற்றுத்தள்ளலை நிராகரித்து உறுப்பினர்களின் விருப்பத்தை அமுல்படுத்துவதற்கு ஒரு அமைப்பை கட்டியெழுப்பு! போயிங்கில் ஒரு சாமானிய தொழிலாளர் குழுவை உருவாக்குவது பற்றிய தகவலுக்கு இன்று உலக சோசலிச வலைத்தளத்துடன் (WSWS) தொடர்பு கொள்ளவும்.

போயிங் தொழிலாளர்கள் கிட்டத்தட்ட ஒருமனதாக வேலைநிறுத்தத்திற்கு வாக்களித்த பிறகு, சியாட்டில் நகரத்தில் உள்ள டி-மொபைல் (T-Mobile) ஆலையை விட்டு வெளியேறுகிறார்கள்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்ட புதிய விற்றுத்தள்ளும் ஒப்பந்தத்தை நிராகரிக்குமாறு, போயிங்கில் உள்ள சர்வதேச இயந்திர வல்லுநர்கள் சங்கத்தின் ( International Association of Machinists - IAM) 33,000ம் உறுப்பினர்களை சர்வதேச தொழிலாளர் குழுக்களின் சாமானிய தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) வலியுறுத்துகிறது.

“போயிங்கை, அதனிடமிருந்து காப்பாற்ற” விரும்புவதாக IAM நீண்ட காலமாக கூறி வந்தது. ஆனால், உண்மையில் போயிங்கைக் “காப்பாற்றுவது” என்பதன் அர்த்தமானது, நிர்வாகச் செலவுக் குறைப்பினால் ஏற்பட்ட நூற்றுக்கணக்கான இறப்புகளுக்கு காரணமான பாதுகாப்பு ஊழலின் செலவை, அதன் தொழிலாளர்கள் மீது திணிப்பதன் மூலம், அதன் பணக்கார பங்குதாரர்களைக் “காப்பாற்றுவதாகும்”. இதைத்தான் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

முன்மொழிவின் பலவீனமான புள்ளிகள் பின்வருமாறு: ஒரு தசாப்த கால ஊதிய முடக்கத்தை தொழிலாளர்கள் தாங்கிய பிறகு, நான்கு ஆண்டுகளில் 25 சதவீத ஊதிய உயர்வு; இல்லாத புதிய விமான மாதிரிகளை உருவாக்க ஒரு பயனற்ற வாக்குறுதி; செயல்திறன் போனஸ்களை நீக்குதல்; மற்றும் “அவசர காலங்களில்” வரம்பற்ற கூடுதல் நேரத்திற்கான ஏற்பாடுகள் ஆகியவைகளாகும்.

IAM, இயக்குநர்கள் வாரியத்தில் ஒரு இருக்கையை கோரியுள்ளது. இது, அதிக வேலை மற்றும் விமானப் பாதுகாப்பை வெட்டிக் குறைப்பதற்கு பேச்சுவார்த்தையில் பங்கேற்க “மேசையில் இருக்கையை” அளிக்கிறது. மேலும், இந்த புதிய ஒப்பந்தமானது, இருக்கையை வழங்குவதாகத் தெரியவில்லை என்றாலும், இயக்குநர்கள் குழுவுடன் கூடுதல் “உரையாடல்களை” வழங்குகிறது. அங்கு IAM அதிகாரத்துவத்தினர், வோல் ஸ்ட்ரீட்டில் இருந்து நேரடியாக தங்கள் நடைமுறை உத்தரவுகளைப் பெறுவார்கள். 

கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற ஒப்பந்த எதிர்ப்புப் பேரணியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்த நடவடிக்கை கோரி கலந்து கொண்டனர். ஆனால், இந்த பெரும் எதிர்ப்பு இப்போது தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் இருந்து சுயாதீனமாக ஒழுங்கமைக்கப்பட வேண்டும். தொழிலாளர்கள் தங்கள் விருப்பத்தை மீறும் முடிவுகளை மேலெழுதவும், உண்மையான போராட்டத்திற்குத் தயாராகவும் தங்களைத் தாங்களே வலுப்படுத்திக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக, முறைகேடுகளைத் தடுக்கவும், தொழிலாளர்கள் இந்த ஒப்பந்தத்தை குப்பைத் தொட்டிக்கு அனுப்பியவுடன் உடனடியாக வேலைநிறுத்தம் நடைபெறுவதை உறுதிசெய்யவும், இந்த வியாழன் அன்று வாக்கெடுப்பின் மீது தொழிலாளர்கள் சாமானிய தொழிலாளர் குழுக்களின் கண்காணிப்பை அமுல்படுத்த வேண்டும்.

தீவிரமடைந்து வருகின்ற வர்க்கப் போராட்டத்தில், போயிங்கில் எடுக்கும் நிலைப்பாடு சக்திவாய்ந்த ஆதரவை சந்திக்கும். சமீபத்திய வேலைநிறுத்தங்களில் தெற்கில் நடந்து வரும் AT&T வேலைநிறுத்தமும், மற்றும் தொழிலாளர்கள் ஐந்து தொடர்ச்சியான சரணாகதி ஒப்பந்தங்களை எதிர்கொண்ட டக்கோட்டாவில் கார் உதிரிபாகங்கள் தொழிற்சாலை வேலைநிறுத்தமும், மற்றும் டெட்ராய்டில் மராத்தான் சுத்திகரிப்பு தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் ஆகியவையும் அடங்கும். செவ்வாயன்று, போயிங்கின் முக்கிய வசதிகள் அமைந்துள்ள வாஷிங்டன் மாநிலம் முழுவதும் 50,000ம் பொதுத்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

UPS, வாகனத் தொழில், ரயில் பாதைகள், கப்பல்துறைகள் மற்றும் பிற இடங்கள் உட்பட, உலகெங்கிலும் உள்ள தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் தொடர்ச்சியான பெரிய விற்றுத்தள்ளலில் இது சமீபத்தியதாகும். ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு முன்பு தொழிலாளர்களை உறங்கச் செய்வதுக்கு அதிகாரிகள் “தீவிரமான” சொல்லாட்சியைப் பயன்படுத்தும் முறை உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும், மறைக்கப்பட்ட சலுகைகள் ஒப்பந்தம் உறுதிசெய்யப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு மட்டுமே கண்டுபிடிக்கப்படுகின்றன. இது, போயிங்கிலும் நடக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இது ஒப்பந்தம் அல்ல சதி. சனிக்கிழமையன்று, IAM அதிகாரத்துவத்தினர் முக்கிய பிரச்சினைகளில் போயிங்குடன் வெகு “தொலைவில்” இருப்பதாகக் கூறினர். ஆனால், ஏற்கனவே இல்லாத ஒப்பந்தத்தில் வாக்களிக்க திட்டமிட்டிருந்த அவர்கள், ஒரு நாள் கழித்து ஒப்பந்தத்தை அறிவித்தனர். உண்மையில், அவர்கள் எல்லா நேரத்திலும் ஒரு ஒப்பந்தத்தை வைத்திருந்தனர். மேலும், அதை தொழிலாளர்கள் மீது எவ்வாறு திணிப்பது என்பதுதான் அவர்களின் உண்மையான பிரச்சினையாக இருந்தது.

அவர்கள் ஜனநாயக விரோத ஓட்டையைப் பயன்படுத்தி ஒரு பாரிய “வேண்டாம்” என்ற வாக்கை மீறுவதற்கும் கூட தயாராக உள்ளனர். வாக்களிப்பவர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் குறைவானவர்கள் வேலைநிறுத்தத்தை அங்கீகரிக்க இரண்டாவது முறை வாக்களிக்கவில்லை என்றால் ஒப்பந்தம் “அங்கீகரிக்கப்படுகிறது”.

போயிங் ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாகும். அதன் பணியாளர்கள் 2008 இல் இரண்டு மாத வேலைநிறுத்தம் உட்பட நீண்டகால போர்க்குணமிக்க வரலாற்றைக் கொண்டுள்ளனர். ஆனால், மீண்டும் மீண்டும் தொழிலாளர்கள் ஒரு பெரிய தடையை எதிர்த்து போராடி வருகின்றனர்: அந்த தடை IAM தொழிற்சங்க அதிகாரத்துவமாகும்.

2008ல் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த பிறகு, IAM அதிகாரத்துவம், நம்பமுடியாத 16 ஆண்டுகளாக அது வைத்திருந்த ஒரு ஒப்பந்தத்தை நிறைவேற்றியது. அதில் 10 வருடங்கள், சந்தேகத்திற்கு இடமான சூழ்நிலையில் 2014 ஆம் ஆண்டு நீட்டிப்பு “ஒப்புதல்” செய்யப்பட்ட பின்னர், தொழிலாளர்களின் ஊதியம் முடக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை வாக்கெடுப்புக்கு கொண்டு வருவதில், 751வது மாவட்டத்தின் தலைவர் ஜோன் ஹோல்டன் உட்பட IAM அதிகாரத்துவத்தினர், தாங்கள் தொழிலாளர்களின் பக்கம் அல்ல, நிர்வாகத்தின் பக்கம் இருப்பதை மீண்டும் ஒருமுறை காட்டியுள்ளனர்.

பைடென் நிர்வாகத்தின் சார்பாகவும் செயல்பட்டுவரும் அவர்கள், ஒரு பெரிய பாதுகாப்பு ஒப்பந்தக்காரரில் இடம்பெறும் வேலைநிறுத்தத்தை விரும்பவில்லை. அமெரிக்க ஏற்றுமதிகளில் முக்கிய அங்கமாக உள்ள போயிங் நிறுவனம், ஐரோப்பிய போட்டியாளரான ஏர்பஸ் நிறுவனம் உட்பட கசப்பான உலகளாவிய பொருளாதாரப் போர்முறைக்கு முக்கியமானதாக இருக்கிறது. பைடெனின் ஏற்றுமதி கவுன்சிலில், IAM அதிகாரத்துவத்தின் தலைவரான பிரையன் பிரியோன்ட், பில்லியனர்கள் மற்றும் சக தொழிற்சங்க அதிகாரத்துவமான, ஐக்கிய வாகனத்துறை சங்கத்தின் (UAW) ஷான் ஃபைனுடன் அமர்ந்துள்ளார்.

பைடெனின் வெள்ளை மாளிகையானது, ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கா மற்றும் நேட்டோ போரின் தொடர்ச்சியையும் புதிய போர்களுக்கான தயாரிப்புகளையும் உறுதிசெய்வதற்காக, குறிப்பாக சாமானிய தொழிலாளர்களிடம் இருந்து வரும் அச்சுறுத்தலுக்கு எதிராக முக்கியமான விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாக்க தொழிற்சங்க அதிகாரத்துவத்தைப் பயன்படுத்துகிறது. அவர்களது வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரு அரசியல் கட்சிகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய தேவைகளை ஆதரிக்கின்றன மற்றும் இந்த திட்டங்களை சீர்குலைக்கும் போயிங் தொழிலாளர்களின் போராட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றன. 

இழிவான முறையில் 2022 இல் ஒரு இரயில்வே வேலைநிறுத்தத்தை தடைசெய்த பைடென், இப்போது ஆயிரக்கணக்கான வேலைகளைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் புதிய வாகன ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தார்.  கடந்த வாரம், தற்காலிக தொழிற்துறை செயலாளர் ஜூலி சு IAM அதிகாரிகளை சந்தித்தார். கூட்டம் பகிரங்கமாக இல்லாவிட்டாலும், இந்த ஒப்பந்தத்தை என்ன விலை கொடுத்தும் நிறைவேற்றுவதற்கு அவர்கள் வெள்ளை மாளிகையிலிருந்து தங்கள் உத்தரவுகளைப் பெற்றனர் என்பதில் சந்தேகம் இல்லை.

போயிங்கில் நடக்கும் சண்டைக்கு IAM எந்திரத்திற்கு எதிரான கிளர்ச்சி தேவைப்படுகிறது. தொழிற்சங்க அதிகாரிகளின் சமூக நலன்கள் தொழிலாளர்களுக்கு எதிரான நிர்வாகத்துடன் முற்றிலும் இணைந்திருப்பதால், எவ்வளவு கோபம் வந்தாலும் அதிகாரிகளை மீண்டும் வழிக்கு கொண்டு வர முடியாது. அவர்கள் கிட்டத்தட்ட $300 மில்லியன் சொத்துக்களை கட்டுப்படுத்துகிறார்கள். தொழிலாளர்களின் நிலுவைத் தொகையிலிருந்து நிதியளிக்கிறார்கள், அதில் இருந்து அவர்கள் தங்களுக்கு ஆறு இலக்க சம்பளத்தை  எடுத்துக் கொள்கிறார்கள்.

அனைத்து செல்வங்களுக்கும் ஆதாரமான தொழிலாளர்கள், ஒரு சில அதிகாரத்துவத்தினர், நிர்வாகிகள் மற்றும் கார்ப்பரேட் அரசியல்வாதிகளை விட சக்திவாய்ந்தவர்கள் ஆவர். ஆனால் இந்த அதிகாரம் சாமானிய நடவடிக்கை குழுக்கள் மூலம் ஒழுங்கமைக்கப்பட்டு இயக்கப்பட வேண்டும்.

இது ஒரு புதிய வகை கட்டமைப்பாகும். தொழிற்சங்க அதிகாரிகளைத் தவிர்த்து, தொழிலாளர்களின் ஜனநாயக விருப்பத்தை செயல்படுத்துவதற்கான அதிகாரத்தை தொழிலாளர்களுக்கு வழங்குவதுடன், தொழிற்சங்க இயந்திரத்தைப் பொருட்படுத்தாமல் தொழிலாளர்களை ஒன்றிணைக்க இது போராடுகிறது.

ரயில்வே தொழிலாளர்கள், வாகனத் தொழிலாளர்கள், பல நாடுகளில் உள்ள அஞ்சல் ஊழியர்கள் மற்றும் பலர் உட்பட ஏற்கனவே கமிட்டிகளை நிறுவிய தொழிலாளர்களின் உதாரணத்திலிருந்து போயிங் தொழிலாளர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதிகாரத்துவத்தை ஒழிக்கும் ஒரு தளத்தில், UAW சங்கத் தலைவருக்கான மேக் ட்ரக்ஸ் ஆலையின் சோசலிச தொழிலாளி வில் லெஹ்மனின் பிரச்சாரமும் இதனுடன் சேர்க்கப்பட வேண்டும். இந்த குழுக்கள் சர்வதேச தொழிலாளர் குழுக்களின் சாமானிய தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) என்ற உலகளாவிய இயக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

மிக உடனடி பிரச்சனை வாக்குகளாகும். வாக்கெடுப்பு நியாயமாக நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக வாக்கெடுப்பின் ஒவ்வொரு அம்சத்தையும் மேற்பார்வையிட தொழிலாளர்கள் நடவடிக்கை குழுக்களை ஒழுங்கமைக்க வேண்டும். இந்தக் குழுக்கள் போயிங் தொழிலாளர்கள் தங்கள் சொந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பையும் வழங்கும். IAM ஆனது, மூன்றில் இரண்டு பங்கு சாக்குப்போக்கைப் பயன்படுத்தி அல்லது வேறு எந்த முறையையும் பயன்படுத்தி “இல்லை” என்ற வாக்கை மீற முயற்சித்தால், நடவடிக்கை குழுக்கள் அந்த முடிவை மீறும் திறனை தொழிலாளர்களுக்கு வழங்கும்.

இந்த குழுக்கள் போயிங் தொழிலாளர்கள் தங்கள் சொந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பையும் வழங்கும், அதைத் தாண்டி அவர்கள் எந்த ஒப்பந்தத்தையும் ஏற்க மாட்டார்கள். IWA-RFC பின்வருவனவற்றை முன்மொழிகிறது:

  • 10 ஆண்டுகள் முடக்கப்பட்ட ஊதியங்களுக்கு ஈடுசெய்யும் வகையில், 50 சதவீத ஊதிய உயர்வுடன் வாழ்க்கைச் செலவை சரிசெய்தல்.

  • பணத்தை மிச்சப்படுத்த நிர்வாகம், பொறுப்பற்ற முறையில் குறைத்த, பாதுகாப்பு நிலைகளை பெருமளவில் பணியமர்த்துதல்;

  • பாதுகாப்பு மற்றும் தர உத்தரவாதம் தொடர்பான அனைத்து சிக்கல்களிலும் தொழிலாளர்களின் கட்டுப்பாடு; 

  • AMPP இன் மறுசீரமைப்பு;

  • ஓய்வூதியங்களை மீட்டெடுத்தல், 

  • மற்றும் போயிங்கில் உள்ள அனைவரும் கண்ணியமாக வாழ முடியும் என்பதை உறுதிப்படுத்த வேலை நேரங்களின் எண்ணிக்கையை குறைத்தல்.

சாமானிய தொழிலாளர் கூட்டணி, பரந்த சாத்தியமான ஆதரவைப் பெற தொழிலாள வர்க்கத்தை அணுக வேண்டும். போயிங்கில் எடுக்கும் நிலைப்பாடு, எல்லா இடங்களிலும் உள்ள தொழிலாளர்களுக்கு அவர்கள் மீண்டும் போராட முடியும் என்ற சமிக்ஞையை அனுப்பும்.

போயிங் தொழிலாளர்கள் குறிப்பாக கிழக்கு கடற்கரை கப்பல்துறை பணியாளர்களுடன் உறவுகளை உருவாக்க வேண்டும். அங்கு தொழிற்சங்க அதிகாரிகள் வேலைநிறுத்தம் பற்றி IAM பாணியில் முட்டாள்தனமாக பேசுகிறார்கள், மற்றும் இரயில்வே ஊழியர்களுடன், தொழிற்சங்கங்கள் - IAM உட்பட - இரகசியமாக போயிங் ஒப்பந்தங்களை விட மோசமான புதிய ஒப்பந்தங்களை நிறைவேற்ற முயற்சிக்கின்றன.

போயிங் தொழிலாளர்கள், ஐரோப்பாவில் உள்ள ஏர்பஸ் தொழிலாளர்கள் உட்பட, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களை அணுக வேண்டும். இது ஒரு பெரிய வேலை வெட்டு பிரச்சாரத்தின் மத்தியில் உள்ளது.

அவர்கள் சிறந்த ஊதியம் மற்றும் பணிச்சூழலுக்கான கோரிக்கையையும், தொழிலாளர்களால் நடத்தப்படும் பொதுப் பயன்பாட்டு நிறுவனமாக போயிங்கை மாற்றுவதற்கான அழைப்புடன் இணைக்க வேண்டும்.

அவர்கள் சிறந்த ஊதியம் மற்றும் சிறந்த வேலை நிலைமைகளுக்கான கோரிக்கையை, தொழிலாளர்களால் நிர்வகிக்கப்படும் பொது சேவையாக போயிங்கை மாற்றுவதற்கான அழைப்போடு இணைக்க வேண்டும். இரக்கமற்ற இலாபவெறியால் ஏற்படும் விமான பேரழிவுகளுக்கு போயிங் தொழிலாளர்கள் பொறுப்பல்ல. வோல் ஸ்ட்ரீட் மற்றும் பெருநிறுவன தன்னலக்குழுவின் ஒட்டுண்ணி நலன்கள் இல்லாமல், இந்த ஊழல் நடந்திருக்காது.

எல்லாவற்றிற்கும் மேலாக, போயிங்கில் நடக்கும் போராட்டம் ஒரு வர்க்கப் போராட்டமாகும். இது, தொழிலாளர்களை ஒரு பேராசை கொண்ட நிறுவனத்திற்கு எதிராக மட்டுமல்ல, முதலாளித்துவ இலாப முறைக்கு எதிராகவே நிறுத்துகிறது.

இந்த விற்றுத்தள்ளலை நிராகரிப்பதற்கும், உறுப்பினர்களின் விருப்பத்தை அமுல்படுத்துவதற்கும் ஒரு இயக்கத்தை உருவாக்குங்கள்! போயிங்கில் சாமானிய நடவடிக்கைக் குழுவை உருவாக்குவது பற்றிய தகவலுக்கு இன்று WSWSஐத் தொடர்புகொள்ளவும்.

Loading