'சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தை தோற்கடிப்பது எப்படி?' என்ற தலைப்பில், ஜனவரி 03 அன்று, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பு நடத்த திட்டமிட்டிருந்த விரிவுரை, அந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரால் தடை செய்யப்பட்டது.
இந்த ஜனநாயக-விரோத நடவடிக்கையை கண்டித்து அதற்கு எதிராக முன்நிற்குமாறு தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கும் அழைப்பு விடுத்து ஐ.வை.எஸ்.எஸ்.இ. வெளியிட்ட அறிக்கைக்கு பிரதிபலிப்பாக, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும், பரந்த அளவில் எதிர்ப்பு அறிக்கைகள் வெளியாகி வருகின்றன.
ஐ.வை.எஸ்.எஸ்.இ. அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளபடி, பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான மாணவர் சங்கத்தின் ஆதரவுடன், ஜனவரி 03 அன்று மாலை 3.30 மணிக்கு, அரசியல் விஞ்ஞான துறையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த விரிவுரைக்குத் தேவையான அனுமதி அந்த துறையின் தலைவர் பேராசிரியர் உபுல் அபேரத்தினாவிடமிருந்து முன்கூட்டியே பெறப்பட்டிருந்தது.
எவ்வாறெனினும், கூட்டம் நடத்தப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, அரசியல் விஞ்ஞான சங்கத்தின் ஆலோசகரும் பிரதான பொருளாளரும், அரசியல் விஞ்ஞானத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான சுமுது வலாகுளு, ஐ.வை.எஸ்.எஸ்.இ. அழைப்பாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, விரிவுரை ரத்து செய்யப்பட்டதை 'வருத்தத்துடன்' தெரிவித்தார்.
இதை விளக்கும் விதமாக வலாகுளு, பின்வருமாறு கூறியிருந்தார்: 'கூட்டம் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு சவால் விடுக்காத வகையில் இருப்பதை உறுதி செய்யும் வகையில் விரிவுரையின் தலைப்பை திருத்தி, அதற்கேற்ப விளம்பரப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் கூட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று துணைவேந்தரிடமிருந்து, கலைப் பீட தலைவர் மற்றும் அரசியல் விஞ்ஞானத் துறைத் தலைவர் மூலம் எனக்கு ஒரு செய்தி வந்துள்ளது.'
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரிடமிருந்து பெறப்பட்ட 'செய்தியின் பாரதூரத் காரணமாக', கூட்டத்தை ரத்து செய்யுமாறு அரசியல் விஞ்ஞான மாணவர் சங்கத்தின் தலைவருக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
மேலே குறிப்பிடப்பட்ட ஐ.வை.எஸ்.எஸ்.இ. அறிக்கை, துணைவேந்தரின் இந்த நடவடிக்கையின் பாரதூரமான தாக்கங்களை விளக்கி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது: 'துணைவேந்தரின் செயல்கள், அரசியல் விஞ்ஞான மாணவர் சங்கம், ஒட்டுமொத்தமாக பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யின் ஜனநாயக உரிமைகளை அப்பட்டமாக மீறுவதாகும்.'
ஜனநாயக உரிமைக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த தாக்குதலை கண்டித்து வெளியிடப்பட்டுள்ள பல அறிக்கைகளை நாம் கீழே வெளியிடுகிறோம்.
'இன்று பேராதனையில் துணைவேந்தர் மாணவர்களின் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் மற்றும் பேச்சுரிமைக்கு கைவைத்துள்ளதாக செய்திகள் வருகின்றன. பன்முக ஜனநாயகத்தை ஏற்கும் நமக்கு, இது கடுமையான கண்டனத்தையும் மிகுந்த வருத்தத்தையும் ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாகும். எந்த சூழ்நிலையிலும், எந்த நபருக்கும் அல்லது குழுவிற்கும் கருத்து தெரிவிக்கும் உரிமையையும், அந்த கருத்துகளின் வன்முறைத் தன்மை அல்லது முக்கியத்துவத்தை விமர்சிக்கும் உரிமையையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம். பல்கலைக்கழகங்கள் என்பது கருத்துகளுக்கிடையேயான மோதல்கள் நடக்கும் மற்றும் அந்த விவாத மொழியில் வன்முறைகளையும் சவால் செய்யும் இடமும் ஆகும். பேராதனை துணைவேந்தர் மாணவர்களின் ஜனநாயக உரிமைகள் மீது கைவைப்பதை நிறுத்த வேண்டும்!' (மேற்கோள்: அதுலசிறி சமரகோனின் முகநூல் பக்கத்தில் இருந்து)
'என் மூலமாக அரசியல் விஞ்ஞானத் துறைத் தலைவருக்கு அனுப்ப துணைவேந்தரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. கூட்டத்தின் தலைப்பு அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிரானது என்பதால் அதை மாற்றுமாறும், அது முடியாவிட்டால் கூட்டத்தை இரத்துசெய்யுமாறும் அதில் கூறப்பட்டிருந்தது.... இந்த உத்தரவு கொழும்பிலிருந்து வந்ததாக தகவல் கிடைத்துள்ளது. கொழும்பிலிருந்து என்றால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவில் இருந்து வந்திருக்கலாம்.... நான் பீடாதிபதியாக இருந்தாலும் ஒரு கல்வியாளர் தானே. சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டம் பற்றி மக்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பு இருக்க வேண்டும். தாங்கள் ஏற்கும் கருத்தை வெளிப்படுத்தும் ஜனநாயக உரிமைக்கு நான் மதிப்பு கொடுக்கிறேன். உங்களால் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தை விமர்சிக்க முடியும்.' (உலக சோசலிச வலைத்தளத்தின் நிருபர்களுடன் நடத்திய பேட்டியில் தெரிவித்தார்.)
பேராதனை பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்த தனது அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, ஐ.வை.எஸ்.எஸ்.இ.யின் முன்னோடி இயக்கமான இளம் சோசலிஸ்டுகள் குறித்து தனக்குள்ள மரியாதையை வெளிப்படுத்தி ஏகநாயக்க கூறியதாவது:
'காலஞ்சென்ற விஜே டயஸ் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.க்கு தலைமை கொடுக்கும் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர்) இருந்த காலத்திலிருந்து நான் உங்கள் இயக்கத்திலிருந்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். தற்போதைய மாணவர்களுக்கும் அந்த அறிவு தேவை.'
கே. சிவராஜினி, பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் மாணவி:
'பேராதனை பல்கலைக்கழகத்தில் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யின் விரிவுரை ரத்து செய்யப்பட்டதைப் பற்றி நான் கடுமையாக அதிர்ச்சியடைந்து மனவேதனை அடைகிறேன். இந்த முடிவு ஏமாற்றமளிப்பது மட்டுமன்றி, இது ஒரு அடிப்படை ஜனநாயக உரிமையை மீறுவதாகும். நமது பேச்சு சுதந்திரத்திற்கு எதிரான ஒரு தாக்குதல்.
'மாணவர்களாக, தணிக்கை பற்றிய அச்சமின்றி நம் வாழ்க்கை மற்றும் எதிர்காலத்தை பாதிக்கும் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கவும் கலந்துரையாடவும் நமக்கு உரிமை உண்டு. இந்த விவாதங்களை மௌனப்படுத்துவது ஜனநாயகம் மற்றும் கல்வி சுதந்திரத்தின் கொள்கைகளுக்கு முரணானது.
'நான் இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டிப்பதோடு நம் குரலை அடக்குவதற்கோ அல்லது பல்கலைக்கழகத்திற்குள் திறந்த விவாதத்தை கட்டுப்படுத்துவதற்கோ எடுக்கப்படும் எந்த முயற்சிக்கும் எதிராக உறுதியாக நிற்கிறேன்.'
அரசியல் விஞ்ஞான மாணவர் சங்க ஆலோசகரும் விரிவுரையாளருமான வலாகுளு:
'...தலைப்பை திருத்துவது, உண்மையான நெருக்கடி குறித்து பல்கலைக்கழக சமூகத்திடையே விழிப்புணர்வை பகிர்ந்துகொள்ள எதிர்பார்க்கும் சங்கத்தின் நோக்கத்துடன் பொருந்தவில்லை.' (கூட்டத்தை தடை செய்ததை அறிவித்து ஐ.வை.எஸ்.எஸ்.இ.க்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருந்தார்.)
பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் (FUTA) முன்னாள் தலைவர் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிரி:
'பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் (பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்) அவர்களுக்கு; இந்த வேலையை உடனடியாக நிறுத்துங்கள். இதை விட மிகவும் கடுமையான கருத்துக்கள், இதை விட மிகவும் அடக்குமுறை நிலைமைகள் பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்துள்ளன. நீங்களும் நாங்களும் அந்த நாட்களில் போராடியது இதுபோன்ற கட்டுப்பாடுகளை பராமரிப்பதற்காக அல்ல என்பதை தயவுசெய்து கருத்தில் கொள்ளுங்கள்.' (நிர்மல் ரஞ்சித் தேவசிரியின் முகநூல் பக்கத்தில் இருந்து)
தேவசிரி, தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் அவரது தேசிய மக்கள் சக்தி / மக்கள் விடுதலை முன்னணி (தே.ம.ச./ஜே.வி.பி.) அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவருவதில் முக்கிய பங்கு வகித்தவர்.
ஜனநாயக உரிமைகளுக்காக முன்நின்று போராடும் சமூக ஆர்வலர் சமிந்த ஹெட்டியாரச்சி:
'சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்திற்கு எதிரான ஐ.வை.எஸ்.எஸ்.இ. விரிவுரையை தடை செய்து, பேராதனை பல்கலைக்கழகத்தின் தற்காலிக துணைவேந்தர் மேற்கொண்ட கண்மூடித்தனமான ஜனநாயக-விரோத செயலை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.... இந்த செயல் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு பொருந்தாதது என்பது எனக்கு தெரிகிறது. இது பல்கலைக்கழக சமூகத்தின் பேச்சு சுதந்திரத்தை நேரடியாக மீறுவதாகும்.' (சமிந்த ஹெட்டியாரச்சியின் முகநூல் கணக்கிலிருந்து)
பேராதனை பல்கலைக்கழகத்தில் மாணவராக படிக்கும் போது, அவர் இளம் சோசலிஸ்டுகள் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.யின் முன்னோடி இயக்கம்) உடன் இணைந்து அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டதாகவும், ஜே.வி.பி. மாணவர் ஆர்வலர்கள் அவற்றை சீர்குலைக்க தொடர்ந்து முயற்சித்ததாகவும் கூறிய ஹெட்டியாரச்சி, 'தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அழுத்தத்தின் கீழ் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொள்ளும் செயல்பாட்டிற்கு எதிராக அனைத்து ஜனநாயக குடிமக்களும் எதிர்ப்பு தெரிவிக்குமாறு நான் அழைப்பு விடுக்கிறேன்,' என அழைப்பு விடுத்தார்.
'கடைசி நிமிடத்தில் நீங்கள் (கூட்டத்தை) இரத்து செய்தது, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களின் சுயாதீன கருத்துக்களுக்கு ஆளும் வர்க்கத்தின் பீதி மற்றும் வெறுப்பை வெளிப்படுத்துவதாகும் என்று நாங்கள் கூறுகிறோம். பொதுமக்களின் ஜனநாயக உரிமையை பறிக்காமல், இப்போது அரசாங்கத்தால் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டங்களை செயல்படுத்த முடியாது.'
கனடாவின் மொண்ட்ரியலில் உள்ள கல்வியாளர் மார்க் ஜேம்ஸ் லெகர்:
'உங்களுக்குத் தெரிந்தபடி, பல்கலைக்கழக மாணவர்கள் கல்விக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தின் கொடூரமான விளைவுகளுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கத்தின் தடம்புரண்ட அரசியல் பொருளாதாரத்தைப் பற்றி மாணவர்களுக்கு புரியவைக்கும் நோக்கத்துடன், பேராதனை பல்கலைக்கழகத்தில் ஒரு கூட்டத்தை நடத்த ஐ.வை.எஸ்.எஸ்.இ. எடுத்த முயற்சிக்கு மதிப்பளிக்குமாறு நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
'சிறந்த கருத்துக்கள் மற்றும் தீர்வுகளைக் கொண்டவர்கள் நிறுவனங்களால் அடக்குமுறைக்கு உள்ளாகும்போது, பொதுமக்களின் வாழ்க்கை எவ்வாறு மேம்படும்?'
'முதலாளித்துவத்தின் வரையறைகள் எல்லா இடங்களையும் நெருக்கடிக்கு உட்படுத்துவதால், இந்த பிரச்சினைகள் பூகோள ரீதியானவை. நாளைய தலைவர்களாக இருக்க வேண்டிய மாணவர்கள், நாளைய ஊழல்வாதிகளாக மாறாமல் இருக்க, பல்கலைக்கழக நிர்வாகம் ஒரு கடமையை செய்ய வேண்டும். தங்களுக்கு என்ன தேவை என்பதை மாணவர்கள் தீர்மானிக்க முடியும். பெரும்பாலானவர்களை விட, அவர்கள் தற்போது புரிந்துகொண்டிருக்கின்ற விடயங்களை மறுக்கும் ஒரு அடக்குமுறை அரசியல் இயந்திரம் அவர்களுக்குத் தேவை இல்லை.'
மேலும் படிக்க
- இலங்கை: பேராதனைப் பல்கலைக்கழகம் IYSSE ஏற்பாடுசெய்த விரிவுரை மீதான தடையை நியாயப்படுத்த முயற்சிக்கின்றது
- இலங்கையில் சர்வதேச நாணய நிதிய சிக்கனத் திட்டத்திற்கு எதிரான IYSSE விரிவுரைக்கு பேராதனைப் பல்கலைக்கழகம் தடை விதித்ததை கண்டனம் செய்!
- இலங்கை அரசாங்கம் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்விச் சுதந்திரத்தில் கைவைப்பதை பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் கண்டனம் செய்கிறது
- சர்வதேச நாணய நிதிய திட்டத்திற்கு எதிரான போராட்டம் குறித்து இலங்கை IYSSE கண்டியில் நடத்திய கூட்டம்