ரஷ்யாவை இலக்கு வைத்து இடம்பெறும் ஐரோப்பிய போர் உச்சி மாநாட்டிற்காக ஜெலன்ஸ்கி பாரிஸ் வந்துள்ளார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேனில் ஐரோப்பிய இராணுவத் தலையீடு குறித்து பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் ஏற்பாடு செய்திருந்த இந்த உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி புதன்கிழமை இரவு பாரிஸ் வந்தடைந்தார்.

ஐரோப்பிய ஒன்றியம் 800 பில்லியன் யூரோ மீள்ஆயுதமயமாக்கல் திட்டத்தை ஏற்றுக்கொண்ட பின்னர் நடைபெறும் இந்த உச்சிமாநாடு, உக்ரேனில் ரஷ்யா மீதான போரை இன்னும் கடுமையாக தீவிரப்படுத்துவதைக் குறிக்கிறது. அமெரிக்க கூட்டாளிகளுடன் வெடிக்கும் மோதல்கள் எழுந்துவரும் நிலையில், ட்ரம்ப் நிர்வாகம் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியதற்கு பதிலளிக்கும் விதமாக, ஐரோப்பிய சக்திகள் போரின் மிகவும் ஆக்ரோஷமான ஆதரவாளர்களாக மாறி வருகின்றன. இது, ரஷ்யாவிற்கு எதிராக சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தனது கொள்கையை சிடுமூஞ்சித்தனமாக முன்வைப்பதை அம்பலப்படுத்துகிறது.

உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இங்கிலாந்து பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆகியோருடன் எலிசே அரண்மனையில் இடம்பெற்ற உச்சிமாநாட்டில் கலந்து கொள்கிறார் [Photo by Lauren Hurley/No 10 Downing Street/Flickr / CC BY-NC-ND 4.0]

மக்ரோனும் ஐரோப்பிய ஒன்றியமும் தொழிலாள வர்க்கத்தை அப்பட்டமாக அவமதிப்புடன் நடந்து கொள்கின்றன. ரஷ்யாவுடனான முழுமையான போருக்கு ஐரோப்பிய மக்களிடையே எந்த ஆதரவும் இல்லை. மேற்கு ஐரோப்பியர்களில் 89 சதவீதத்தினர் ரஷ்யாவுடனான போரை எதிர்த்ததாக சென்ற ஆண்டு யூரேசியா குழு கருத்துக்கணிப்பு கண்டறிந்தது. 2023 ஆம் ஆண்டில் மக்ரோன், 91 சதவீத மக்களால் எதிர்க்கப்பட்ட ஓய்வூதிய வெட்டுக்கள் மூலம் பிரான்சின் இராணுவ பட்ஜெட்டில் 100 பில்லியன் யூரோ அதிகரிப்புக்கு நிதியளிக்க முயன்றபோது, பாரிய வேலைநிறுத்தங்களைத் தூண்டியது. ஆயினும்கூட, இதர முக்கிய ஐரோப்பிய சக்திகளுடன் இணைந்து, மக்ரோன், போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளின் மதிப்பிழந்த கொள்கைகளை இரட்டிப்பாக்கி வருகிறார்.

எலிசே ஜனாதிபதி மாளிகையில் ஜெலென்ஸ்கி உடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், மக்ரோன் உக்ரேனுக்கு 2 பில்லியன் யூரோ புதிய இராணுவ உதவியை வழங்க உறுதியளித்தார். பிரான்ஸ், “மிலான் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், மிராஜ் போர் விமானங்களில் பயன்படுத்தும் MICA ஏவுகணைகள் போன்ற வான் பாதுகாப்பு ஆயுதங்கள், மிஸ்ட்ரல் தரையிலிருந்து வானுக்கு செலுத்தும் ஆயுதங்கள் ஆகியவற்றை நாங்கள் வழங்கியுள்ளோம்” என்று மக்ரோன் தெரிவித்தார். மேலும், “VAB கவச வாகனங்கள், AMX-10 RC டாங்கிகள், மற்றும் நிறைய வெடிமருந்துகள், அவற்றில் சில வழிகாட்டப்பட்ட அல்லது ட்ரோன்கள்” மற்றும் பழைய போர் வாகனங்களை வழங்குவதற்கு அவர் உறுதியளித்தார்.

வரவிருக்கும் ஒரு சமாதான உடன்படிக்கைக்கு மத்தியில் உக்ரேனில் பிரெஞ்சு அமைதிப்படையினரை நிலைநிறுத்துவதற்கு தயாரிப்பு செய்து வருவதாக மக்ரோன் தன்னைக் காட்டிக் கொண்டார். உக்ரேனுக்கு “நீடித்த போர் நிறுத்தத்தை” ரஷ்யா வழங்க வேண்டும் என்று அவர் கோருவார் என்று அவர் கூறினார். ரஷ்யாவின் “எந்தவொரு புதிய ஆக்கிரமிப்பையும் தடுக்க அனுமதிக்கும் ஒரு நம்பகமான இராணுவ வடிவத்தை” உக்ரேன் தக்க வைத்துக் கொள்வதை பிரான்ஸ் உறுதிப்படுத்தும் என்று அவர் உறுதியளித்தார். இறுதியாக, ஒரு சமாதான உடன்படிக்கையின் உள்ளடக்கத்தில், ஐரோப்பிய “அமைதிகாக்கும் படைகளை” உக்ரேனுக்கு அனுப்புவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

இதுபோன்ற கொள்கைகளால் மட்டுமே உக்ரேனில் இருந்து ஐரோப்பாவிற்குள் ரஷ்ய இராணுவத் தலையீட்டின் அச்சுறுத்தலுக்கு எதிராகப் பாதுகாக்க முடியும் என்று மக்ரோன் கூறினார். “நாங்கள் உக்ரேனின் பக்கம் இருக்கிறோம், தொடர்ந்து இருப்போம்,” என்று அவர் கூறினார். “நாம் ஒரு மாறிய சகாப்தத்தில் இருக்கிறோம், ரஷ்யாவின் ஆக்ரோஷம் உலக ஒழுங்கிற்கும் உலகின் ஸ்திரத்தன்மைக்கும் ஒரு அச்சுறுத்தல் மட்டுமல்ல. இது ஐரோப்பாவில் நமது பாதுகாப்பையும் நேரடியாக பாதிக்கிறது,” என்றார். 

இது முதலும் முக்கியமானதுமாக, பேரழிவுகரமான இராணுவ விரிவாக்கத்தின் அபாயத்தை மூடிமறைக்கின்ற பொய்களின் மூட்டையாகும். ட்ரம்ப் ரஷ்ய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளார் என்ற எளிய உண்மை, சமாதானம் எட்டப்படும் என்று அர்த்தமல்ல. உண்மையில், வாஷிங்டன், உக்ரேனுக்கான அதன் இராணுவ உதவியை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த நிலையில், பாரசீக வளைகுடாவில் உள்ள அமெரிக்க தளங்களிலிருந்து உக்ரேனுக்கான ஆயுதங்களுக்கான முக்கிய இடமான போலந்தின் ரெசோவிற்கு இராணுவ தளவாடங்களை மீண்டும் கொண்டு வந்ததாக நேற்று செய்தி வெளியானது.

அனைத்திற்கும் மேலாக, வாஷிங்டன் உடனான ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் உறவுகளில் ஒரு வரலாற்று முறிவு மற்றும் ஐரோப்பாவிற்கு எதிராக ட்ரம்பின் அதிகரித்து வரும் வரிவிதிப்புப் போர் ஆகியவற்றுக்கு இடையே, ரஷ்யாவுடன் முழுவீச்சிலான போர் கொள்கைக்கு ட்ரம்ப் திரும்பினாலும் கூட, அட்லாண்டிக் கடந்த நாடுகளுக்கு இடையிலான கசப்பான மற்றும் ஆழமடைந்து வரும் மோதல்களைத் தீர்க்கப் போவதில்லை.

இந்த துருப்புகள் ரஷ்ய இராணுவ நடவடிக்கையின் இலக்காக மாறும் என்று ரஷ்ய அதிகாரிகள் எச்சரித்துள்ள போதிலும், ஐரோப்பிய சக்திகள் உக்ரேனுக்கு துருப்புகளை அனுப்புவதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

ரஷ்யா ஐரோப்பா முழுவதையும் கைப்பற்ற அச்சுறுத்துகிறது என்ற மக்ரோனின் சாக்குப்போக்கான கருத்து ஒரு மோசடியாகும். மூன்று ஆண்டுகளாக, பெரும்பாலும் ரஷ்ய மொழி பேசும் மக்கள் வசிக்கும் கிழக்கு உக்ரேனின் ஒரு பகுதியைக் கைப்பற்ற ரஷ்ய இராணுவம் போராடி வருகிறது. ரஷ்யாவின் 140 மில்லியன் குடிமக்களின் பொருளாதாரத்தை விட மிகப்பெரியதான பொருளாதாரம் கொண்ட, 500 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட ஒரு கண்டமான ஐரோப்பா முழுவதையும் இராணுவ ரீதியில் கைப்பற்றுவதற்கான எந்த யதார்த்தமான நம்பிக்கையும் அதற்கு இல்லை.

உண்மையில், உக்ரேனுக்கு “அமைதி காக்கும் படையினரை” அனுப்புவதற்கான மக்ரோனின் முன்மொழிவுகள், உக்ரேன் மீது படையெடுப்பதற்கான கிரெம்ளினின் திவாலான மற்றும் பிற்போக்குத்தனமான முடிவின் கீழமைந்துள்ள கணக்கீடுகளைத் தெளிவுபடுத்துகின்றன. உக்ரேன் நேட்டோவின் ஒரு பகுதியாக ஆக வேண்டாம் அல்லது நேட்டோ இராணுவ உதவியைப் பெறக்கூடாது என்று மாஸ்கோ கோருகிறது, ஏனெனில் அதன் எல்லைகளில் நேரடியாக பெரிய நேட்டோ இராணுவங்கள் வரக்கூடும் என்று அது அஞ்சுகிறது. கிரெம்ளினின் பிப்ரவரி 2022 படையெடுப்பு, அதைத் தொடர்ந்து ஏப்ரல் 2022 துருக்கியில் உக்ரேனுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அதன் முயற்சி, நேட்டோ ஏகாதிபத்திய அரசாங்கங்களில் உள்ள அதன் “மேற்கத்திய பங்காளிகளை” அதன் கவலைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ள நம்ப வைப்பதை நோக்கமாகக் கொண்டது.

எவ்வாறிருப்பினும், முந்தைய பைடென் நிர்வாகமும் முக்கிய ஐரோப்பிய சக்திகளும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை உலகைக் கைப்பற்றுவதில் நரகத்தில் இருப்பவராக சித்தரித்ததன் மூலம் போரை நியாயப்படுத்தவும், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான சிக்கன நடவடிக்கைகளைத் தொடரவும் முயன்றுவந்த நிலையில், கிரெம்ளினின் சூழ்ச்சிகள் தோல்வியடைந்தன. வாஷிங்டன் இப்போது மாஸ்கோவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்ற நிலையிலும் கூட, ஜெலென்ஸ்கியும் அவரது ஐரோப்பிய ஆதரவாளர்களும் ரஷ்யாவுக்கு எதிரான ஐரோப்பிய மீள்ஆயுதமயமாக்கல் மற்றும் இராணுவ தீவிரப்பாட்டை இரட்டிப்பாக்கி வருகின்றனர்.

இராணுவச் சட்டத்தின் மூலம் தேர்தல்களை நிறுத்தி வைத்து ஆட்சி செய்யும் சர்வாதிகாரியான ஜெலென்ஸ்கி, உக்ரேனும் ஐரோப்பாவும் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்காகவும், ரஷ்ய மக்கள் மீதான வெறுப்பின் அடிப்படையில் ஒரு போரை நடத்த வேண்டும் என்று லு பிகாரோ பத்திரிகைக்கு தெரிவித்தார். “எமது குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் ஒரு சுதந்திர உலகில், உக்ரேனில் ஒரு சுதந்திர உலகில் வாழ வேண்டும், அதன் எல்லைகளுக்கு வெளியேயோ, ஐரோப்பாவிலோ அல்ல... இரண்டாவது உந்துதல் ரஷ்யர்கள் மீதான வெறுப்பாகும், அவர்கள் பல உக்ரேனிய குடிமக்களைக் கொன்றுள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.

ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேனில் ஐரோப்பிய தரைப்படை துருப்புகளை நேரடியாக நிலைநிறுத்துவதற்கான மக்ரோனின் முற்றிலும் பொறுப்பற்ற திட்டங்களை ஜெலென்ஸ்கி பாராட்டினார். பாரிஸ் உச்சி மாநாட்டில், “எமது தேவைகளை நாம் வரையறுக்க வேண்டும், யார் துருப்புகளை அனுப்பத் தயாராக உள்ளனர், எவர், எத்தனை பேர், மற்றும் எங்கு செல்ல வேண்டும்? இதைச் செய்ய எத்தனை நாடுகள் உண்மையில் தயாராக உள்ளன? இது ஒரு கடினமான மற்றும் முக்கியமான விடயம்” என்று அவர் லூ பிகாரோவிடம் தெரிவித்தார்.

ரஷ்யா மீதான முழுமையான போருக்கான ஆயுதங்களை உருவாக்க தொழில்துறை மற்றும் நிதியியல் ஆதாரவளங்களின் ஒரு பரந்த பொறுப்புறுதிக்கு ஜெலென்ஸ்கி அழைப்புவிடுத்தார்: “உண்மையில், நம்மிடம் ரஷ்யாவை விட குறைவான பீரங்கிகள் மற்றும் குண்டுகளே உள்ளன. ஈரான் வழங்கிய ஆளில்லா விமானங்கள், வட கொரியா தயாரித்த பீரங்கிகள் மற்றும் ஏவுகணைகள் கிரெம்ளினிடம் உள்ளன” என்று ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார்.

ஐரோப்பிய வங்கிகளில் முடக்கப்பட்ட ரஷ்ய எண்ணெய் வருவாய்களில் இருந்து 300 பில்லியன் யூரோக்களை சட்டவிரோதமாக கைப்பற்றுவதன் மூலமாக போருக்கு நிதியாதாரம் வழங்க அவர் அழைப்புவிடுத்தார்: “முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்கள் எமது இராணுவத்தை ஆயுதபாணியாக்க பயன்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஒரு வலுவூட்டப்பட்ட மற்றும் உறுதியான உக்ரேனிய இராணுவம் எமது பாதுகாப்பிற்கான மிகப்பெரிய உத்தரவாதமாகும். எங்களுக்கு நிலைநிறுத்துவதற்கு துருப்புக்கள் தேவை. மேலும் எங்களுக்கு வான் பாதுகாப்பு தேவை. அமெரிக்கர்கள் அவற்றை வைத்திருக்கிறார்கள். இது குறித்து நாங்கள் டொனால்ட் ட்ரம்பிடம் பேசினோம். ஆனால் அமெரிக்கர்கள் இந்த ஆயத அமைப்புகளை வழங்கவில்லை என்றால், நமது வான்வெளியை முற்றிலுமாக மூடுவதற்கு ஐரோப்பியர்கள் என்ன மாதிரியான உபகரணங்களை வழங்க முடியும் என்பதை நாம் பார்க்க வேண்டும்” என்று ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார்.

இன்னும் கூடுதலான, பேரழிவுகரமான இராணுவ விரிவாக்கத்துக்கான திட்டங்கள் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளன. அமெரிக்காவுடன் அரசியல் மற்றும் இராணுவ பதட்டங்கள் அதிகரித்து வருகின்ற நிலையிலும் கூட, பிரதான ஐரோப்பிய சக்திகள் ரஷ்யாவுடன் போரை நோக்கிய ஒரு போக்கை அமைத்து வருகின்றன. பாரிஸ் உச்சிமாநாட்டிற்கான ஆயத்த பேச்சுவார்த்தைகளில் மக்ரோனின் முக்கிய பங்காளியான போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடாவின் நிலைப்பாடுகளுடன் அவர்கள் தங்களை இணைத்துக் கொண்டனர். கடந்த ஆண்டு, ரஷ்யாவை இனரீதியாக சிறு நாடுகளாகப் பிரிக்க டூடா அழைப்பு விடுத்திருந்தார். இதன்மூலம், அதன் பரந்த எண்ணெய், எரிவாயு மற்றும் மூலோபாய தாதுக்கள் வளங்களை நேட்டோ சக்திகள் எளிதாகக் கட்டுப்படுத்தி கொள்ளையடிக்க முடியும்.

போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடா பின்வருமாறு கூறினார்:

ரஷ்யா பெரும்பாலும் நாடுகளின் சிறை என்று அழைக்கப்படுகிறது, இதற்கு ஒரு நல்ல காரணமும் உண்டு. இது 200 க்கும் மேற்பட்ட இனக்குழுக்களின் தாயகமாகும், அவர்களில் பெரும்பாலோர் இன்று உக்ரேனில் பயன்படுத்தப்படும் முறைகளின் விளைவாக ரஷ்யாவில் குடியேறினர். ரஷ்யா இன்று உலகின் மிகப்பெரிய காலனித்துவ சாம்ராஜ்யமாக உள்ளது. இது ஐரோப்பிய சக்திகளைப் போலல்லாமல் ஒருபோதும் காலனித்துவ நீக்க செயல்முறைக்கு உட்படவில்லை. மேலும். அதன் கடந்த கால பேய்களை ஒருபோதும் சமாளிக்க முடியவில்லை. நவீன உலகில் காலனித்துவத்திற்கு இனி இடமில்லை. 

எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட வேண்டும். மக்ரோனால் திட்டமிடப்பட்டு பரிந்துரைக்கப்பட்டபடி உக்ரேனில் ஐரோப்பிய இராணுவத் தலையீட்டைத் தொடர்வது, ரஷ்யாவும் பிரான்சும் ஒருவருக்கொருவர் மண்ணில் நேரடித் தாக்குதல்கள் உட்பட, இராணுவ விரிவாக்கத்திற்கான உடனடி அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தொழிலாளர்கள் ரஷ்யாவுடனான போருக்கான திட்டங்களையும், அவற்றுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படும் சிக்கன நடவடிக்கைகளையும் நிராகரிக்க வேண்டும். மேலும். சமூக சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான எதிர்ப்பை ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் போர்களுக்கு எதிரான சோசலிச எதிர்ப்போடு இணைக்கும் ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.