Print Version|Feedback
Free the framed-up Maruti Suzuki workers!
ஜோடிப்பு வழக்கில் சிக்க வைக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுதலை செய்!
International Committee of the Fourth International
20 March 2017
ஓர் இந்திய நீதிமன்றம் குரூரமாகவும் பழியுணர்ச்சியோடும் ஆயுள் தண்டனை வழங்கியுள்ள 13 மாருதி சுசூகி தொழிலாளர்களை பாதுகாக்க இந்தியா எங்கிலும், ஆசியா பூராவும் மற்றும் உலகம் முழுவதிலுமான தொழிலாளர்கள் முன்வர வேண்டும். இந்திய சிறைச்சாலைகளில் கொடுமையான நிலைமைகள் நிலவுகின்ற நிலையில், இந்த தொழிலாளர்கள் நரக வாழ்க்கைக்கு சமமான ஒன்றில் சிக்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் ஒரு குற்றமும் செய்திராத அப்பாவிகளாவர். டெல்லிக்கு அருகிலுள்ள அவர்களது வாகன ஆலையில் நிலவும் மூர்க்கமான நிலைமைகளுக்கு எதிராக அவர்கள் போராடினார்கள் என்பது மட்டுமே அவர்கள் செய்த ஒரே "குற்றமாகும்".
இந்தியாவின் பிரதான அரசியல் கட்சிகளான காங்கிரஸ் கட்சி மற்றும் இந்து மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சியின் (பிஜேபி) முழு ஆதரவுடன், சுசூகி பெருநிறுவனம், பொலிஸ் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் தொடுத்த ஒரு கொடூரமான ஜோடிப்பு வழக்கின் இறுதி விளைவே, அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த தீர்ப்புகளாகும்.
மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்ட மூர்க்கமான இந்த தண்டனைகள் திரும்பப் பெற வேண்டும்! இந்த தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டு, அவர்கள் குடும்பங்களிடமும் மற்றும் அவர்களது வேலைகளுக்கும் திரும்ப அவர்களை அனுமதிக்க வேண்டும்.
மாருதி சுசூகி தொழிலாளர் சங்கத்தின் (MSWU) மொத்தம் 12 நிர்வாக அங்கத்தவர்கள் உட்பட 13 தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஹரியானாவின் மானேசர் மாருதி சுசூகி உற்பத்தி ஆலை தொழிலாளர்கள் மீதான சுரண்டலுக்கு நிறுவனத்துடன் சேர்ந்து உடந்தையாய் இருந்த ஒரு தலையாட்டி தொழிற்சங்கத்திற்கு எதிரான ஒரு கடுமையான போராட்டத்தில் அவர்கள் MSWU ஐ நிறுவினர்.
இந்த ஜோடிப்பு வழக்கில் சிக்க வைக்கப்பட்ட தொழிலாளர்கள், வெளிநடப்புகள் மற்றும் உள்ளிருப்பு வேலைநிறுத்தங்கள் உட்பட தொடர்ச்சியாக போர்குணமிக்க தொழில்துறை நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர், இவை மாருதி சுசூகியும், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுக்கு சொந்தமான ஏனைய பிரதான வேலைவழங்குனர்களும் பேணி வந்த மலிவுகூலி உழைப்பு முறைக்கு சவால்விடுத்தன.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவும், இந்த தொழிலாளர்களும் இவர்களுடன் சேர்ந்து சற்று குறைந்த தண்டனை வழங்கப்பட்ட ஏனைய 18 தொழிலாளர்களும் தண்டிக்கப்பட்டதை சாத்தியமான அளவிற்கு பலமான வார்த்தைகளில் மிகத்தெளிவாக கண்டிக்கிறது. இந்திய அரசும் மற்றும் அரசியல் ஸ்தாபகமும், மலிவு கூலிகள், படுமோசமான ஒப்பந்த-தொழிலாளர் வேலைவாய்ப்பு, கடுமையான வேலையிட நிலைமைகளுக்கு எதிரான தொழிலாளர் எதிர்ப்பை நசுக்க அவை சிறிதும் ஈவிரக்கமின்றி செயல்படும் என்பதை பெருவணிகங்களுக்கு எடுத்துக்காட்டவும் மற்றும் இந்தியா எங்கிலுமான தொழிலாளர்களை மிரட்டவும் மானேசர் மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீது ஜோடிப்பு வழக்கு தொடுக்க சதி செய்துள்ளன.
அரசாங்க அதிகாரிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளும், முதலீட்டாளர்களுக்கு "மறுஉத்தரவாதம்" வழங்க மானேசர் மாருதி சுசூகி தொழிலாளர்களை கடுமையாக கையாள வேண்டுமென மீண்டும் மீண்டும் கோரியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை தண்டனை மீதான விசாரணையில், வாதி தரப்பு இந்த 13 தொழிலாளர்களுக்கும் தூக்கு தண்டனை வழங்க கோருமளவிற்குச் சென்றது.
மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான இந்த ஜோடிப்பு வழக்கிற்கும் மற்றும் அந்நிறுவனம் 2,300 தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கி வேறு ஆட்களைக் கொண்டு பிரதியீடு செய்த ஆகஸ்ட் 2012 தொழிலாளர் களையெடுப்பிற்கும் சாக்குபோக்காக இருந்தது என்னவென்றால், ஜூலை 18, 2012 இல் நடந்த, நிர்வாகத்தால் தூண்டிவிடப்பட்ட கைகலப்பு மற்றும் நெருப்பிடல் சம்பவமாகும், அது நிறுவனத்தின் ஒரு மனிதவள மேலாளர் அவனிஷ் குமார் தேவ் மூச்சுதிணறி உயிரிழப்பதில் போய் முடிந்தது.
தேவ் உயிரிழப்பிற்காக "மரணம் விளைவிக்கும் குற்றம்" புரிந்ததாக இவர்கள் 13 பேரை குற்றவாளிகளாக நீதிமன்றம் காண்பதில், பொலிஸ் அந்த ஜப்பானிய வாகன உற்பத்தி நிறுவனத்தின் நிர்வாகத்துடன் கூட்டுச்சதியில் ஈடுபட்டது மற்றும் இத்தொழிலாளர்களுக்கு எதிரான ஆதாரங்கள் போலியாக உருவாக்கப்பட்டவை என்ற அதன் சொந்த விசாரணைகளையே வேண்டுமென்றே கவனத்திற்கெடுக்கவில்லை.
2012 ஆலை-தளத்தில் நடந்த கைகலப்பை தொடர்ந்து பொலிஸ் நடத்திய பாரிய கைது நடவடிக்கைகள், நிறுவனம் வழங்கிய "சந்தேகத்திற்குரியவர்கள்" பட்டியலின் அடிப்படையில் இருந்தன என்பதையும், நேரில் பார்த்ததாக கூறும் சாட்சிகள் பயிற்றுவிக்கப்பட்டிருந்தார்கள் என்பதையும், கலகம் மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபட்டதாக அவர்கள் குறிப்பிட்டவர்களை அவர்களாலேயே முறையாக தொடர்ந்து அடையாளம் காட்ட முடியவில்லை என்பதையும் பிரதிவாதி வழக்கறிஞர்கள் எடுத்துக்காட்டினர்.
நீதிமன்றம், அதன் மார்ச் 10 ஆம் தேதி தீர்ப்பில், அதிகாரிகள் யாரை விடாப்பிடியாக குற்றவாளிகள் என்று வலியுறுத்தி வந்தார்களோ அந்த 117 மானேசர் மாருதி சுசூகி தொழிலாளர்களை அது விடுவிக்க நிர்பந்தப்பட்டிருந்த அளவிற்கு வாதி தரப்பு வழக்கு மதிப்பிழந்திருந்தது.
வாதி தரப்பிலிருந்து இந்த 13 தொழிலாளர்களுக்கு எதிரான ஒட்டுமொத்த வழக்கும் அந்த நெருப்பு வைத்தலை சுற்றியே வலம் வந்திருந்தது. ஆனால் மத்திய இலக்கில் குறி வைக்கப்பட்டிருந்த இந்த 13 பேரைத் தொடர்புபடுத்தி தீயை பற்ற வைத்ததற்கான ஒரேயொரு ஆதாரத் துணுக்கை கூட அதனால் வழங்க முடியவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், வேறெந்தவொரு தொழிலாளரை தொடர்புபடுத்தியும் கூட அது ஒரேயொரு ஆதாரத்தையும் வழங்கி இருக்கவில்லை. அந்த நெருப்பு, எங்கே, எப்போது அல்லது எவ்வாறு பற்றியது என்பது குறித்தும் வாதி தரப்பால் நம்பகமான எதையும் கூற முடியவில்லை.
அனைத்துலகக் குழு இந்த 13 மாருதி சுசூகி தொழிலாளர்களின் விடுதலைக்காக உலகெங்கிலுமான உழைக்கும் மக்களும், மாணவர்களும், இளைஞர்களும் போராட வேண்டுமென அழைப்பு விடுக்கிறது. அத்தொழிலாளர்களின் பெயர்களாவன: ராம் மெஹர், சந்தீப் தில்லன், ராம் பிலாஸ், சரப்ஜீத் சிங், பவன் குமார், சோஹன் குமார், அஹ்மர் சிங், சுரேஷ் குமார், அமர்ஜீத், தன்ராஜ் பாம்பி, பிரதீப் குஜ்ஜார், யோகேஷ் மற்றும் ஜியாலால் ஆகும்.
மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு எதிராக நிறுவனம் மற்றும் அரசின் சதி வேட்டையை தோற்கடிக்க, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இந்தியாவிலும், தெற்காசியா மற்றும் உலகெங்கிலுமான தொழிலாள வர்க்கத்தின் தொழில்துறை மற்றும் சுயாதீனமான அரசியல் பலத்தை அணித்திரட்டும் நோக்கில் ஒரு சர்வதேச பாதுகாப்பு பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. ஜோடிப்பு வழக்கில் சிக்க வைக்கப்பட்ட இந்த சகல தொழிலாளர்களையும் உடனடியாக விடுவிப்பதற்கும், அவர்கள் மீதான சகல குற்ற தண்டனைகளை நீக்குவதற்கும் மற்றும் 2012 இல் களையெடுக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் மீண்டும் நியமிப்பதற்குமான போராட்டத்தை சர்வதேச தொழிலாள வர்க்கம் முன்னெடுக்க வேண்டும்.
மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான ஜோடிப்பு வழக்கு மற்றும் சிறையிலடைப்பு, ஓர் உலகளாவிய நிகழ்ச்சிப்போக்கின் மிகவும் அதீத முன்னுதாரணமாகும். ஒவ்வொரு நாட்டிலும், பிரமாண்ட பெருநிறுவனங்களும் அவர்களது அரசியல் கைக்கூலிகளும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஒரு போரைத் தொடுத்துள்ளன.
அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பானில், டொனால்ட் ட்ரம்ப் போன்ற அதிவலது அரசியல்வாதிகள் தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவினது வேலைகள், வாழ்க்கை தரங்கள் மற்றும் சமூக திட்டங்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்ற அதேவேளையில் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். குற்றகரமான போர்களுக்கு நிதி வழங்குவதற்கும் மற்றும் பெருநிறுவன நிதியியல் தன்னலக் குழுக்களைக் கூடுதலாக செழிப்பாக்கவும் இன்னும் அதிக பணத்தை பாய்ச்சுவதே அவர்களின் நோக்கமாகும்.
இந்தியாவில், பங்களதேஷில், ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்கா எங்கிலும், ஜப்பானிய சுசூகி நிறுவனம் போன்ற நாடுகடந்த நிறுவனங்கள் அதிநவீன உற்பத்தி ஆலைகளை அமைத்து, அங்கே தொழிலாளர்கள் மிகவும் கொடூரமான சுரண்டல் வடிவங்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான ஜோடிப்பு வழக்கில் எடுத்துக்காட்டப்பட்டதை போல, அனைத்து தொழிலாளர்களது எதிர்ப்பையும் ஈவிரக்கமின்றி ஒடுக்க வேண்டியுள்ளபோது, அரசியல் ஸ்தாபகமும் அரசு எந்திரமும் இவ்வாறு அழைப்புவிடுவதற்கு தயாராக இருக்கின்றன.
சகல தொழிலாளர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு பொதுவான போராட்டத்தில் உலகெங்கிலுமான அவர்களின் வர்க்க சகோதர மற்றும் சகோதரிகளை ஐக்கியப்படுத்துவதற்கு வெளியே, அவர்கள் தங்களைத்தாங்களே காப்பாற்றிக் கொள்ள எந்தவொரு தொழிலாளர்களுக்கும் சாத்தியமில்லை.
இந்திய தொழிலாளர்களிடையே, மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு மிகப் பெரியளவில் ஆதரவும் அனுதாபமும் உள்ளது. பாரிய போராட்டங்களுக்கு அஞ்சி, இந்திய தலைநகரான டெல்லியை ஒட்டி அமைந்துள்ள ஒரு மிகப் பெரிய வாகன உற்பத்தி மையமாக மானேசர்-குர்காவ் தொழில்துறை பகுதியில் அரசு அதிகாரிகள் ஐந்து நபர்களுக்கு மேல் கூடும் எல்லா கூட்டங்களுக்கும் மீண்டும் மீண்டும் முற்றுமுழுதான தடைகளை விதித்து வருவதுடன், ஆயிரக் கணக்கான பொலிஸை ஒன்றுதிரட்டியுள்ளனர்.
உலகெங்கிலும் போலவே, இந்தியாவிலும் தொழிற்சங்கங்களும் மற்றும் பாரம்பரிய "இடது" கட்சிகளும் முற்றிலுமாக தொழிலாள வர்க்கத்தைக் கைவிட்டுள்ளன. ஸ்ராலினிச தலைமையிலான அகில இந்திய தொழிற்சங்க சம்மேளனம் (AITUC) மற்றும் இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU) ஆகியவை கடந்த ஐந்தாண்டுகளாக மாருதி சுசூகி தொழிலாளர் வஞ்சிக்கப்படுவதிலும் மற்றும் அவர்கள் மீது ஜோடிப்பு வழக்கு செலுத்தப்படுவது குறித்தும் ஒரு குற்றகரமான கிட்டத்தட்ட முற்றுமுழுதான மவுனத்தை காட்டிவருகின்றன. அவற்றின் வலைத் தளங்களும், அவை இணைப்பு கொண்டுள்ள அரசியல் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM) ஆகியவை மார்ச் 10 ஆம் தேதி தீர்ப்பு குறித்தும் மற்றும் தொழிலாளர்கள் மீதான மார்ச் 18 தண்டனை குறித்தும் மௌனமாக உள்ளன.
ஒப்பந்த தொழிலாளர், மலிவு கூலிகள் மற்றும் மலிவுழைப்பு வேலையிட நிலைமைகளுக்கு எதிரான ஒரு சுயாதீனமான தொழில்துறை மற்றும் அரசியல் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதுடன், மாருதி சுசூகி தொழிலாளர்களின் பாதுகாப்பை இணைக்கும் ஒரு பிரச்சாரத்தை ஸ்ராலினிஸ்டுகளும் மற்றும் ஏனைய தொழிற்சங்க எந்திரங்களும் விடாப்பிடியாக எதிர்க்கின்றனர்.
அவர்கள், பெருவணிகங்களின் சர்வாதிகாரம், வறுமை அதிகரிப்பு மற்றும் அதிகரித்து கொண்டே செல்லும் சமூக சமத்துவமின்மையை திணிக்கும் அதே அமைப்புகளுக்கு, அதாவது பெருவணிக அரசியல்வாதிகள் மற்றும் இந்திய பொலிஸ் மற்றும் நீதிமன்றங்களுக்கு முறையிடுவதில் மானேசர் தொழிலாளர்கள் அவர்களின் ஆற்றலை செலவிடுமாறு செய்வதற்காக, அவர்களது செல்வாக்கை அத்தொழிலாளர்கள் மற்றும் MSWU மீது மேலாளுமை செய்வதற்காக பயன்படுத்துகிறார்கள்.
காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்திய மற்றும் ஹரியானா மாநில அரசாங்கங்கள்தான் மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான ஆரம்ப அரசு தாக்குதலுக்கு தலைமை தாங்கின. பாரிய கைது நடவடிக்கைகள் மற்றும் மானேசர் தொழிலாளர் சக்தியை களையெடுத்ததற்கு முந்தைய 14 மாதங்களில், ஹரியானா மாநில அரசாங்கம் மீண்டும் மீண்டும் தொழிலாளர்களின் நடவடிக்கைகளை உடைக்க பொலிஸ் கூட்டத்தை அணிதிரட்டியதுடன், மாநிலத்தின் பொருளாதாரத்தை "நாசமாக்க" தீர்மானகரமாக இருந்த ஏனைய "வெளியாட்கள்" மற்றும் “பயங்கரவாதிகளுடன்" MSWU தொழிற்சங்கம் இரகசிய சதியில் ஈடுபட்டிருந்ததாக குறிப்பிட்டது. அதற்கடுத்து தில்லியிலும் மற்றும் ஹரியானாவில் அதிகாரத்திற்கு வந்த பிஜேபி தலைமையிலான அரசாங்கங்கள், நிறுவனம் மற்றும் அரசின் சதி வேட்டையை இடைவிடாது தொடர்ந்தன.
இந்த கேலிக்கூத்தை எதிர்க்குமாறும் மற்றும் சிறையிலடைக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களை உடனடியாக விடுவிக்க கோருமாறும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) வாகனத்துறை தொழிலாளர்கள் மற்றும் அனைத்து உலக சோசலிச வலைத் தள வாசகர்கள் மற்றும் ஆதரவாளர்களையும் வலியுறுத்துகிறது. இந்த தொழிலாளர்களின் அவலநிலையை, தொழிலாளர்களின் கவனத்திற்கும் மற்றும் உலகெங்கிலும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பவர்களின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் வர்க்க பலத்தை அணிதிரட்டுவதன் அடிப்படையில் ஒரு சர்வதேச பாதுகாப்பு பிரச்சாரத்தை அபிவிருத்தி செய்யும் போராட்டத்தில் எங்களுடன் இணையுங்கள்.
மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுதலை செய்யக் கோரி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இணைவழி மனு ஒன்றை உருவாக்கி உள்ளது. இந்த மனுவில் கையெழுத்திடுமாறும் மற்றும் ஆதரவை ஒன்றுதிரட்டி ஒழுங்கமைக்க அமைக்கப்பட்ட பேஸ்புக் பக்கத்தில் இணையுமாறும் நாம் நமது வாசகர்கள் அனைவரையும் அழைக்கிறோம்.