இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
லியோன் ட்ரொட்ஸ்கி, 1905 ரஷ்ய புரட்சியின் படிப்பினைகளை கிரகித்துக்கொண்டு, நிரந்தரப் புரட்சி தத்துவத்தை விரிவுபடுத்துவதற்காக மேற்கொண்ட முக்கியமான தத்துவார்த்த பங்களிப்பான நிரந்தரப் புரட்சி: முடிவுகளும் வாய்ப்புக்களும்என்ற நூலை, இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் விஜே டயஸ், சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ளார். குறித்த சிங்கள மொழிபெயர்ப்பிற்காக விஜே டயஸ் எழுதிய முன்னுரையை இங்கு பிரசுரிக்கின்றோம். இந்த மொழிபெயர்ப்பை வாங்க விரும்புவோர் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் அல்லது 0773562327 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளுங்கள்.
***
நிரந்தர புரட்சி தத்துவத்தின் வரலாறு - ஜனநாயக புரட்சியானது, சோசலிச புரட்சி வரை தொடர்வது சம்பந்தமான தத்துவத்தின் வரலாறு- மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் வரை நீண்டதாகும். அந்த தத்துவம், ட்ரொட்ஸ்கி, மார்க்சிசத்திற்கு சேர்த்த ஒரு திரிபுபடுத்தல் என விஞ்ஞான சோசலிசத்தின் கொலைகாரர்களான ஜோசப் ஸ்ராலினும் அவரை பின்பற்றுகின்ற பிற்போக்காளர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட பிரமைகளை இந்த வரலாறு நிர்மூலமாக்குகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், ஐரோப்பாவில் சமூக உறவுகளில் ஏற்பட்ட ஆழமான மாற்றங்கள் காரணமாக, எல்லாவற்றிற்கும் மேலாக, வளர்ச்சியடைந்து வந்த முதலாளித்துவ அமைப்பு முறைக்குள், ஆளும் வர்க்கத்திற்கு சவால் விடக்கூடியளவுக்கு தொழிலாள வர்க்கம் வளர்ச்சியடைந்ததன் காரணமாக, முதலாளித்துவ வர்க்கம், ஜனநாயக புரட்சிக் கடமையில் இருந்து விலகிச் சென்றது. அந்த கடமையை இப்போது முன்னெடுக்கக்கூடிய ஒரே வர்க்கமாக தொழிலாள வர்க்கம் உருவாகியுள்ளது.
ஜனநாயகப் புரட்சியின் பங்கை ஆற்றுவதற்கான ஒரு சமூக சக்தியாக, தொழிலாள வர்க்கமானது அரசியல் அரங்கில் நுழைவதன் மூலம், அந்த வர்க்கம் வெறுமனே ஜனநாயக கடமைகளை இட்டு நிரப்பிவிட்டு, அரசியல் அரங்கை மீண்டும் முதலாளித்துவத்தின் கைகளில் திருப்பித் தரும் என்று எதிர்பார்க்க முடியாது. அத்தகைய ஒன்று, நிச்சயமாக, ஒரு வரலாற்றுக்கு எதிரான நிகழ்வாகும்.
தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் புரட்சிகர போராட்டத்திற்கு தலைமை ஏற்கும் தொழிலாள வர்க்கம், அதற்காக அரச அதிகாரத்தை தமது கையில் எடுப்பதை தடுப்பதெனில், அது ஒரு இரத்தக்களரி எதிர் புரட்சியினால் மாத்திரமே முடியும். இதனாலேயே, ஜனநாயக கடமைகளை இட்டு நிரப்புவதில் இருந்து தப்பி ஓடும் முதலாளித்துவ ஆளும் வர்க்கம், தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன அரசியல் இயக்கத்தின் மூலம் அந்த கடமைகளை நிறைவேற்றுவதற்கு முற்றிலும் விரோதமாக இருக்கின்றது.
அதிகாரத்தை பிற்போக்கின் கைக்கு பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் சகல வர்க்க சமரசவாத, சீர்திருத்தவாத மற்றும் போலி-இடது அமைப்புகளால் நிறைவேற்றப்படுகிறது.
ஜனநாயகக் கடமைகளைச் செய்ய முன்வரும் தொழிலாள வர்க்கத்துக்கு, ஜனநாயக உரிமைகள் இல்லாதொழிக்க்கப்பட்டுள்ள விவசாயிகள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் வேலையற்றோர் மற்றும் இளைஞர்களை தனது தலைமைத்துவத்தின் கீழ் அணிதிரட்டவும், புரட்சிக்காக வெற்றிகொள்ளவும் முழு வாய்ப்பும் திறந்துவிடப்படும். இதனாலேயே பொதுமக்களின் ஜனநாயக ஒற்றுமைக்கு முற்றிலும் விரோதமான முதலாளித்துவ வர்க்கம், தனது வர்க்கப் போருக்காக அனைத்துவித இன, மத மற்றும் சாதிவாத பிரிவினை விஷங்களையும் கட்டவிழ்த்துவிட்டு, தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக, ஆயுதங்களைப் பலப்படுத்திக்கொண்டு பாய்கிறது.
தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் இந்த பிற்போக்கு சவாலுக்கு மத்தியில், அந்த வர்க்கத்துக்கு, முதலாளித்துவத்தின் பலம்வாய்ந்த அனைத்து பிரிவுகளில் இருந்தும் தனது அரசியல் சுயாதீனத்தை உறுதிப்படுத்துவது மிகவும் தீர்க்கமானதாகும். தனது சொந்த சுயாதீன புரட்சிகர அரசியல் கட்சியை கட்டியெழுப்புவதன் மூலமே தொழிலாள வர்க்கம் இதை நிறைவேற்ற முடியும்.
1850 ஆம் ஆண்டில், ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் கடமைகளை தெளிவுபடுத்தி, மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் "கம்யூனிஸ்ட் லீக்கின் மத்திய குழுவின் அறிக்கையில்" இந்த புரட்சிகர நிலைப்பாட்டை வெளியிட்டனர்: ஜேர்மன் தொழிலாள வர்க்கம், "முடிந்தளவு விரைவாக தனது சுயாதீன அரசியல் நிலைபாட்டை உறுதி செய்துகொள்ளவதன் மூலமே, அதன் புரட்சிகர பாத்திரத்தை நிறைவேற்ற தயாராக வேண்டும். இதைச் செய்ய வேண்டுமெனில், சுயாதீனமாக ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாள வர்க்கக் கட்சியின் தேவையை, ஒருநிமிடம் கூட சந்தேகம்கொள்ள வைக்க கூடிய, ஜனநாயக குட்டிமுதலாளித்துவத்தின் கபடத்தன வார்த்தைகளால் திசைதிருப்ப அனுமதிக்கக் கூடாது. தொழிலாள வர்க்கத்தின் போர் முரசு: நிரந்தர புரட்சி! ஆகும்." (1850 மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ்)
எந்தவொரு சந்தேகத்திற்கும் இடமின்றி, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபித்துக்கொண்டு, சோசலிச வேலைத்திட்டத்தை செயல்படுத்துகின்ற தொழிலாள வர்க்கத்தின் அரச அதிகாரத்தை கட்டியெழுப்புவதற்காக, அந்த வர்க்க இயக்கத்துக்கு தலைமைத்துவத்தை வழங்க அர்ப்பணித்துக்கொண்டமையால், மார்க்சிசத்தின் மீது தொடுக்கப்படும் தொடர்ச்சியான எதிர்த்தாக்குதல்களுக்கு கதவு திறந்துவிடப்பட்டது. அனைத்து பழமைவாத இயக்கங்களின் நோக்கமாக இருந்த, நடப்பு முதலாளித்துவ அமைப்பு முறையை பாதுகாப்பதற்காக அர்ப்பணித்துக்கொண்ட அனைவரும், அந்த பிற்போக்கு நடவடிக்கைக்கு தோள்கொடுத்து அணிதிரண்டனர். உலகளாவிய அளவில் முதலாளித்துவ அமைப்பைத் தூக்கியெறியும் வரை நிறுத்தப்படாத இந்த தாக்குதல்கள், முதலாளித்துவ அமைப்பு எதிர்கொள்ளும் தற்போதைய கொடிய நெருக்கடி நிலைமைகளின் கீழ் இன்னும் விஷமத்தனமான அவதாரத்தை எடுக்கின்றன.
மார்க்சிச தத்துவத்தின் சரியான தன்மையும் சாத்தியப்பாடும் இதனால் கலாவதியாகிவிடப் போவதில்லை. உலக சோசலிசத்தை ஸ்தாபிக்கும் 1917 ரஷ்ய அக்டோபர் புரட்சியின் முன்னோக்கை, ஏகாதிபத்திய உலக அமைப்பு முறைக்கு அடிபணியவைப்பதன் பேரில் ஓரங்கட்டிய ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால், சோவியத் ஒன்றியத்தில் மட்டுமன்றி, சர்வதேச அளவிலும் முன்னெடுக்கப்பட்ட தொடர் படுகொலைகளால் கூட துடைத்துக் கட்ட முடியாமல் போன ட்ரொஸ்கிச இயக்கத்தின் உயிர்வாழ்வு மட்டுமன்றி, அதன் முன்னெப்போதும் இல்லாதவாறான வளர்ச்சியும், மேற்குறிப்பிட்ட விடயத்திற்கு சாட்சியங்களாகும்.
நிரந்தர புரட்சி தத்துவத்திற்கும் லெனினிசத்திற்கும் இடையில் வேறுபாடும் இடைவெளியும் இருப்பதாக மிகைப்படுத்திக் காட்டியமை, ட்ரொட்ஸ்கி மற்றும் ட்ரொட்ஸ்கிஸ்டுகளை வேட்டையாடுவதற்கும் படுகொலை செய்வதற்கும் தளம் அமைத்துக்கொள்வதன் பேரில், ஸ்ராலினிஸ்டுகளால் (அதன் ஒரு பகுதியான மாவோயிஸ்டுகளாலும்) பரவலாகப் பயன்படுத்தப்பட்ட சதிகளில் ஒன்றாகும். அதைப் பற்றி ஒரு வார்த்தையாவது இங்கு குறிப்பிட வேண்டியது அவசியம் என்று நான் நினைக்கிறேன்.
தொழிலாள வர்க்கப் புரட்சியின் நிரந்தரத் தன்மை குறித்து லெனினுக்கு எந்தவிதமான சந்தேகமும் இருக்கவில்லை என்ற உண்மையை, அவரது எழுத்துக்களில் இருந்து எண்ணற்ற மேற்கோள்களை காட்டுவதன் மூலம் உறுதிப்படுத்த முடியும். ஆனாலும், இங்கே உள்ள இடத்தின் வாய்ப்பைக் கருத்தில் கொண்டு ஒரு மேற்கோள் மாத்திரம் காட்டப்படுகிறது.
புரட்சியின் நிரந்தர தன்மை பற்றி லெனின் எந்தளவு குறிப்பிட்டிருந்தாலும், பல இடங்களில் அதற்குப் பயன்படுத்தியுள்ள சொல் தொடர்ச்சி என்பதே ஆகும். தொடர்ச்சியான மற்றும் நிரந்தர என்ற சொற்கள் ஒன்றையொன்று ஒத்ததாக இருந்தன என்பது ரஷ்ய மொழியைப் படித்தவர்களுக்குத் தெரியும்.
ரிச்சர்ட் பி. டே மற்றும் டானியல் கைடோ என்ற இரண்டு கல்விமான்கள், "நிரந்தர புரட்சிக்கான சாட்சிகள்" என்ற தலைப்பில் 520 பக்கத்தில் எழுதிய புத்தகத்தின் பக்கம் 449 இல் இந்த சிக்கல் தீர்க்கப்பட்டுள்ளது.
"இந்த விவாதத்திலிருந்து என்ன புரிதலைப் பெற முடியும்? எளிய பதில் என்னவென்றால், ரஷ்ய மொழியில் தொடர்ச்சியான புரட்சியும் நிரந்தர புரட்சியும் ஒரே சொற்களாகும். ஒரே வித்தியாசம் என்னவென்றால், "தொடர்ச்சி" என்பது ரஷ்யாவில் மிகவும் பழக்கப்பட்ட சொல் மற்றும் உள்ளூர் மொழியிலும் அதிகம் பயன்படுத்தப்படும் சொல்லும் அதுவாகும்."
இப்போது சொற்களின் சிக்கல் தீர்க்கப்பட்டதால், நம் கவனத்தை மைய புள்ளிக்கு திருப்பலாம்.
1905 ஆம் ஆண்டில், லெனின், "விவசாய மக்கள் சம்பந்தமாக சமூக-ஜனநாயகவாதிகளின் நிலைப்பாடு" என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரையில் குறிப்பிட்ட கருத்து பின்வருமாறு: "ஜனநாயக புரட்சியிலிருந்து ஒரேயடியாக, விசேடமாக எமது சக்தி அளவின் அடிப்படையில், அதாவது வர்க்க நனவுடன் அமைப்பு ரீதியாக ஒன்றிணைந்த தொழிலாள வர்க்கத்தின் பலத்தின் அடிப்படையில், நாங்கள் சோசலிச புரட்சியை நோக்கி முன்னேறவேண்டும். தொடர்ச்சியான புரட்சிக்காக நாங்கள் முன்நிற்கிறோம். நாங்கள் பாதியிலேயே நின்றுவிடப் போவதில்லை.” ஜனநாயக கடமைகளை தீர்ப்பதுடன் நின்றுவிடாது, சோசலிச வேலைத் திட்டத்தை செயல்படுத்தும் பணிக்கு தோள்கொடுப்பது சம்பந்தமாக லெனினுக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
மேலும், ரஷ்ய புரட்சியின் ஆரம்ப கட்டங்களில் நிறுவப்பட்ட அரசின் வடிவத்தை, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஜனநாயக சர்வாதிகாரம் என்று விவரித்த போதிலும், லெனின், அந்த அரசின் கீழ் இட்டுநிரப்பப்படும் புரட்சிகர பணிகள் சம்பந்தமாக லெனின் இரண்டு கட்டங்களை வேறுபடுத்திக் காட்டவில்லை. அந்தப் புரட்சிகர ஆட்சி அதிகாரம், தனது பணிகளை முன்னெடுக்கும் போது, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர ஆதரவைப் பெற வேண்டியதன் அவசியத்தையும் லெனின் ஒருபோதும் மறக்கவில்லை.
ரஷ்யப் புரட்சியிலிருந்து உருவாகும் அரச கட்டமைப்பு, தொழிலாளர்களதும் விவசாயிகளதும் ஜனநாயக வடிவத்தை எடுக்கும் என்று லெனின் சுட்டிக்காட்டியமை, ரஷ்ய மக்களில் அதிகப் பெரும்பான்மையானவர்கள் ஒடுக்கப்பட்ட விவசாயிகளாவர் என்பதைக் கருத்தில் கொண்டு, அவர்கள் ஒரு தனியான அரசியல் கட்சியின் கீழ் ஒழுங்கமைவதையும் கருத்தில் கொண்டு முன்வைக்கப்பட்டதாகும். அவ்வாறே, அந்த மக்கள் பகுதியினரை நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கு எதிரான சமரசமற்ற போராட்டத்திற்கு கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு முன்வைக்கப்பட்டதே அன்றி, விவசாயிகளின் ஜனநாயக நலன்களைப் பூர்த்தி செய்யும் ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தில் ஒரு துணை சக்தியாக மட்டுமே தொழிலாள வர்க்கம் செயல்படும் என்ற அர்த்தத்தில் முன்வைக்கப்பட்ட ஒன்றல்ல. எவ்வாறாயினும், நேரடியாகவே விவசாயிகளின் ஆதரவை வென்றெடுத்து, ஸ்தாபிக்கப்படும் தொழிலாள வர்க்க சர்வாதிகாரத்திற்காக பிரச்சாரம் செய்த ட்ரொட்ஸ்கியின் வேலைத்திட்டத்திற்கும், லெனினின் போல்ஷிவிக் கட்சியின் வேலைத்திட்டத்திற்கும் இடையில் காணப்பட்ட வித்தியாசத்திற்குள் நுழைந்து செல்வதற்கு முதலாளித்துவ கைக்கூலிகளுக்கு ஒரு இடைவெளியை ஏற்படுத்தியது என்பதை அலட்சியம் செய்ய முடியாது. ரஷ்யாவில் 1917 புரட்சிகர அனுபவத்தின் ஆரம்ப கட்டங்களிலும், இந்த ஆபத்து தலைதூக்கியது.
1917 பெப்ரவரி புரட்சியின் பின்னர், ஜார் மன்னராட்சியை தூக்கி வீசி நிறுவப்பட்ட முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தை, புரட்சியின் முதலாளித்துவ-ஜனநாயக முதல் கட்டமாக அர்த்தப்படுத்திக்கொண்டு, லெனினின் போல்ஷிவிக் கட்சியின் தலைமைத்துவத்தில் இருந்த ஸ்ராலின்-புக்காரின் தலைமயிலான குழு முன்வந்தமை கூட, அந்த ஆபத்தை வெளிக்கொணர்ந்திருந்தது. 1917 ஏப்ரல் மாதத்தில் மீண்டும் ரஷ்யாவுக்கு திரும்பிய பின்னர், லெனின் தனது முதலாவது நடவடிக்கையாக “இடைக்கால அரசாங்கம் ஒழிக! தொழிலாள வர்க்க சர்வாதிகாரத்தை நோக்கி முன்னேறு!” என்ற முழக்கத்தின் கீழ் தனது கட்சியை மீண்டும் ஒருமுகப்படுத்துவதற்காக சமரசமற்ற போராட்டத்தை மேற்கொண்டதன் ஊடாகவே அந்த ஆபத்து தவிர்க்கப்பட்டது. லெனின், தனது தத்துவார்த்த மேற்பார்வையின் கீழ், கட்சியை புரட்சிகர பாதைக்கு நகர்த்துவதில் வெற்றிகண்டார். லெனினின் கட்சியினுள், அவருடன் இணைத் தலைவராக ஆகி, 1917 அக்டோபர் புரட்சியின் வெற்றிக்காக அர்ப்பணித்துக்கொள்வதற்கு ட்ரொட்ஸ்கிக்கும் அவரது மெட்சியோரஸ்ட் கட்சி காரியாளர்களுக்கும் கதவு திறந்துவிடப்பட்டது.
வரலாற்று ரீதியாக காலம் கடந்து அதிகாரத்திற்கு வந்த முதலாளித்துவ வர்க்கத்தை கொண்ட பின்தங்கிய நாடுகளின் முதலாளித்துவ ஆட்சியாளர்கள், விவசாயிகளை நிலப்பிரபுத்துவ பிடியிலிருந்து விடுவிப்பதற்கு பதிலாக என்ன செய்வார்கள் என்பது குறித்த துல்லியமான வரலாற்று மதிப்பீட்டை ட்ரொட்ஸ்கி கொண்டிருந்தார். நிரந்தர புரட்சி தத்துவத்தை விவரித்த 1906 இல், அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்:
"இந்த விஷயத்தின் மேலதிக வளர்ச்சியில், கிராமப்புற மக்கள், இறுதியாக, மூலதனத்தின் அடிமைகளாக்கப்பட்டனர், அவ்வாறே, விவசாயிகள், முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் அரசியல் அடிமைகளாக்கப்பட்டனர். இந்த கட்சிகளால், பாராளுமன்ற அரசியலில், நிலப்பிரபுத்துவ அமைப்பு முறை புதுப்பிக்கப்பட்டது. முதலாளித்துவத்தினருக்கு வாக்கு சேகரிக்கும் வேட்டையின் ஒரு பகுதியாக விவசாயிகளை மாற்றும் வகையிலேயே இது முன்னெடுக்கப்பட்டது. நவீன முதலாளித்துவ அரசு, அதன் வரிக் கொள்கைகள் மற்றும் இராணுவமயமாக்கல் மூலம், விவசாயிகளை வட்டி முதலாளித்துவ மூலதனத்தின் கோரப்பிடியில் சிக்க வைப்பதோடு, அரச மதகுரு கும்பல், அரச பள்ளிகள் மற்றும் சிறை வாழ்க்கையின் ஊழல் மூலம் வட்டிக்காரர்களின் அரசியலுக்கு அவர்கள் இரையாக்கப்பட்டனர்.”
நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் மற்றொரு முக்கிய அம்சமான, தொழிலாள வர்க்க புரட்சியை, சர்வதேச சோசலிச புரட்சிக்கான மாற்றத்தை நோக்கி அடியெடுத்து வைப்பது உடனடியாக நடைமுறைக்கு வரவில்லை. லெனினும் ட்ரொட்ஸ்கியும் மூன்றாம் அகிலத்தை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுத்து, அதற்குத் தேவையான புரட்சிகரக் கட்சிகளைக் கட்டியெழுப்ப அக்கறை எடுத்த போதிலும், இரண்டாம் அகிலத்தின் பெரும் காட்டிக்கொடுப்புகளின் விஷத்தை, சர்வதேச தொழிலாள வர்க்கத்திலிருந்து அகற்றுவதும், புதிய தலைமைத்துவத்தின் கீழ் அந்த வர்க்கத்தை ஒழுங்கமைத்து வழிநடத்துவதும், முதலாவது ஏகாதிபத்திய போருக்குப் பிந்தைய காலகட்டத்தில், ஒரு கடுமையான தத்துவார்த்த மற்றும் அரசியல் பணியாக இருந்தது. குறிப்பாக, புரட்சிகர எதிர்பார்ப்பு கொண்டிருந்த ஜேர்மனியில், 1923 புரட்சிகர எழுச்சியின் தோல்வி, உடனடியாகவே ஐரோப்பாவிலும் உலகிலும் புரட்சியை பல ஆண்டுகளுக்கு பின் தள்ளியது.
இதனால் உருவான சூழ்நிலையினால், மூன்று ஆண்டு உள்நாட்டுப் போரின் காயங்கள் குணமடைவதற்கு முன்பே, புதிதாக பிறந்த சோவியத் ஒன்றியத்தின் தனிமைப்படுத்தலின் பலம்வாய்ந்த அழுத்தம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இந்த புறநிலை காரணிகள், நாட்டினுள் மற்றும் கட்சிக்குள் ஒரு அதிகாரத்துவம் ஸ்தாபிக்கப்படுவதில் தாக்கத்தை ஏற்படுத்தின. ஜோசப் ஸ்ராலின், அந்த அதிகாரத்துவத்தின் தலைவராக உருவெடுத்தார். சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சியும், படிப்படியாக மூன்றாம் அகிலமும் சர்வதேசியவாத புரட்சிகர அடித்தளத்தில் இருந்து விலகி, 'தனிநாட்டில் சோசலிசம்' என்ற மார்க்சிச-விரோத தேசியவாத பிற்போக்கு 'தத்துவத்தின்' அடிப்படையில் அவற்றை ஸ்தாபிப்பதற்கு, சினோவியேவ், காமனேவ் மற்றும் புக்காரின் ஆகியோரின் முக்கூட்டு கூட்டணி ஸ்ராலினுடன் இணைந்து ட்ரொட்ஸ்கிக்கு எதிராக ஒரு எதிர் புரட்சிகர அணியை ஸ்தாபித்தனர்.
இதற்கு சமாந்தரமாக, நிரந்தர புரட்சி தத்துவத்தின் மீது பாரிய விஷமத்தனமான தாக்குதலை கட்டவிழ்த்து விடுவதும் தொடங்கியது. 1917 அக்டோபரில் நிரந்தர புரட்சி தத்துவத்தின் அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட்ட, ரஷ்ய தொழிலாள வர்க்கத்தினரால் கட்டியெழுப்பப்பட்ட, சோவியத் ஒன்றியத்தின் பரந்த பொருள் வளங்களைப் பயன்படுத்திக்கொண்டே, எதிர்-புரட்சியின் சகல இரத்தக்களரி முத்திரைகள் அனைத்திலிருந்தும், இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதன் மூலம் சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு ஏற்படுத்தப்பட்டது சாதாரண அழிவு அல்ல. அத்துடன், உலகின் தொழிலாள வர்க்கத்தினரும் ஒடுக்கப்பட்ட மக்களும் அந்த அழிவின் சுமைகளை இன்றுவரை சுமகின்றனர்.
இலங்கையின் தொழிலாள-ஒடுக்கப்பட்ட மக்களாலும் இந்த மோசமான கசப்பான அனுபவத்திலிருந்து தப்ப முடியவில்லை. இந்த நாட்டில் எதிர்-புரட்சிகர ஸ்ராலினிச விதையை வளர்ப்பதற்கான முயற்சிகள் 1930 களிலேயே தொடங்கிவிட்டன. 1935 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட லங்கா சம சமாஜ கட்சியினுள் (ல.ச.ச.க.) ஊடுருவி, அதற்குள் ஒரு பிரிவைக் கட்டியெழுப்புவதன் மூலம் இந்த திட்டம் தொடங்கியது. லங்கா சம சமாஜ கட்சியின் தலைமைத்துவத்துக்குள் இரகசியமாக இயங்கிய டி குழு அல்லது ட்ரொட்ஸ்கிச குழு, எதிர்காலத்தில் பரந்த வெகுஜன புரட்சிகர கட்சியை கட்டியெழுப்புவதன் ஊடாக, இலங்கையிலும் இந்திய உபகண்டத்திலும் தொழிலாள வர்க்கத்துக்கு தலைமைத்துவத்தை வழங்கும் திறனைக் கொண்ட ஒரு புரிதலுடன் செயற்பட்டது. அது, ட்ரொட்ஸ்கியவாதிகளை இரத்தக்களரி மூலம் அழித்து விடுவதற்கு, சோவியத் ஒன்றியத்தினுள்ளும், சர்வதேச அளவிலும் கட்டவிழ்த்துவிடப்பட்ட வேட்டை நாய் படைகளுக்கு ஸ்ராலினிச அதிகாரத்துவம், தலைமைத்துவத்தையும் மற்றும் பொருள் வளங்களையும் வழங்கிக் கொண்டிருந்த காலமாகும். ட்ரொட்ஸ்கிஸ்டுகள், புரட்சிகர தத்துவார்த்த மற்றும் அரசியல் புடம்போடல் மூலமாக ஒரு புதிய தலைமையை கட்டியெழுப்புவதற்காக செயல்பட்ட எல்லா இடங்களுக்கும் படையெடுத்த ஸ்ராலினிச வேட்டை நாய்கள், தமது எதிர்-புரட்சிகர நடவடிக்கைகளை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றிருந்தாலும், ல.ச.ச.க. உள்ளே, அதற்கு எதிரான ஒன்றே இடம்பெற்றது. 1939 இல், சமசமாஜ கட்சிக்குள் செயல்பட்ட டி குழு, ஸ்ராலினிஸ்டுகளை கட்சியிலிருந்து வெளியேற்றுவதில் வெற்றி பெற்றது.
இரண்டாம் உலகப் போரின் மத்தியில், தமது காலனியான இலங்கையில், ஏகாதிபத்திய போருக்கு எதிராக ஒரு இயக்கத்தை கட்டியெழுப்பவதை பொறுத்துக்கொள்ளாத பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், தேசிய சிங்கள முதலாளித்துவத்தினரால் அமைக்கப்பட்டிருந்த இலங்கை தேசிய காங்கிரஸ், தமிழ் முதலாளித்துவத்தின் ஒரு அமைப்பான தமிழ் காங்கிரசினதும் ஆதரவுடன், சமசமாஜ கட்சியை சட்டவிரோதமாக்கி அதன் தலைவர்களை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர். அதே நேரம், நாட்டில் ஒரு ஸ்ராலினிச அரசியல் கட்சியை அமைக்க, ல.ச.ச.க. இல் இருந்து வெளியேற்றப்பட்ட எஸ்.ஏ. விக்ரமசிங்க தலைமையிலான குழுவிற்கு ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் அனைத்து வசதிகளையும் வழங்கினர். இது ல.ச.ச.க.யை செயலிழக்கச் செய்தமையின் சாதகத்தை பற்றிக்கொண்டும், தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுங்கு கருங்காலி வேலை செய்தும், ஏகாதிபத்திய ஆட்சியின் பாதுகாவலர்களாக, தொழிலாளர்களை தம் வசப்படுத்திக்கொள்ள செயற்பட்டது.
ஆனால், அதற்கு மாறாக, டி குழு தலைமையிலான ட்ரொட்ஸ்கிஸ்டுகள், ஒரு சர்வதேச புரட்சிகர கண்ணோட்டத்தால் தூண்டப்பட்டிருந்தனர். டி-குழுவின் பல உறுப்பினர்கள் சிறையிலிருந்து தப்பி, இரகசியமாக இந்தியாவுக்கு சென்று 1942 இல் அகில இந்திய போல்ஷிவிக் லெனினிசக் கட்சியை உருவாக்கினர்.
போர்க்காலம் முழுவதும் ஸ்ராலினிஸ்டுகள், ட்ரொட்ஸ்கிச புரட்சியாளர்களுக்கு எதிராக, பிரிட்டிஷ் ஆட்சியின் ஒரு பகுதியாக இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள ட்ரொட்ஸ்கிச புரட்சியாளர்களை வேவு பார்பதிலும் வேட்டையாடுவதிலும் ஈடுப்பட்டனர். ஸ்ராலினிஸ்டுகள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் போலி சுதந்திரத்தை வழங்கிய தினத்திலிருந்தே இரு நாடுகளினதும் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தை ஆட்சிக்கு கொண்டுவரவும், அதை ஆட்சியில் வைத்து பாதுகாப்பதற்குமான கொந்தராத்துக்கு தோள்கொடுத்தனர். இதன் மூலம், தெற்காசியா முழுதும் தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்ட பேரழிவு பிரமாண்டமானது. இது குறித்த வரலாற்றை எழுதும் இடம் இதுவல்ல. அதை தனியாக எழுத வேண்டும்.
நிரந்தர புரட்சி தத்துவம் தொடர்பாக 1906 ஆம் ஆண்டில், தனது 27 வயதில் இருந்த ட்ரொட்ஸ்கி வழங்கிய இந்த விளக்கம் (1915 இல் வெளியிடப்பட்ட கட்டுரை உட்பட), சர்வதேச சோசலிசப் புரட்சி பாதைக்குள் மீண்டும் பிரவேசித்துக்கொண்டிருக்கின்ற, உலகத் தொழிலாள வர்க்கத்தின், ஒடுக்கப்பட்ட மக்களின் மற்றும் இளைஞர்களின் ஒரு பகுதியான இலங்கையில் உள்ள சோசலிச சக்திகளை, சரியான முன்னோக்குடன் ஆயுத பாணியாக்குவதற்கு, இந்த சிங்கள மொழிபெயர்ப்பு குறிப்பிட்டளவு சேவை செய்யும் என சோசலிச சமத்துவக் கட்சி சரியான முறையில் எதிர்பார்க்கிறது. சோசலிச சமத்துவக் கட்சியானது சர்வதேச சோசலிசத்திற்காகப் போராடும் தொழிலாள வர்க்கத்தின் உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியாகும்.
சிறந்த கணினி அச்சுக்கலை செய்து இந்த புத்தகத்தை அச்சிட்டமைக்கு டிசைன் சிஸ்டம்ஸ் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.
விஜே டயஸ்