கினியாவில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு சதி ஜனாதிபதி ஆல்பா கொடேயின் பதவியைக் கவிழ்க்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஞாயிறன்று காலை, அமெரிக்க மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்துடன் தொடர்புகளைக் கொண்ட கினிய சிறப்புப் படைகள் கர்னல் மமாடி டூம்போயா தலைமையில் தலைநகர் கொனாக்ரியில் ஓர் ஆட்சிக்கவிழ்ப்பைத் தொடங்கி, ஜனாதிபதி ஆல்பா கொன்டே ஐ பதவியிலிருந்து வெளியேற்றி, மேற்கு ஆபிரிக்காவின் அந்த முன்னாள் பிரெஞ்சு காலனி நாட்டில் இராணுவச் சட்டத்தைத் திணித்தன.

காணொளியில் இருந்து எடுக்கப்பட்ட இந்த படத்தில், அடையாளம் தெரியாத சிப்பாய் கினியாவின் தலைநகர் கோனாக்ரியில், ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 5, 2021 அன்று ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகே ஒரு டிரக்கின் கீழ் நிலை எடுக்கிறார் (AP Photo)

கோவிட்-19 பெருந்தொற்று தாக்கத்தின் கீழ் கினியாவின் பொருளாதாரம் சுழன்று கொண்டிருக்கையில், எரிபொருள் மற்றும் உணவு விலை உயர்வுகள், ரொட்டி பற்றாக்குறைகள் மற்றும் வரி அதிகரிப்புகளால் மக்களின் அதிகரித்த கோபத்திற்கு மத்தியில் இந்த ஆட்சிக்கவிழ்ப்பு நடந்தது. 2032 வரை அதிகாரத்தில் இருப்பதற்கு அவரை அனுமதிக்கும் வகையில் கினியாவின் அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி எழுத 2019 இல் கொன்டே செய்த முயற்சி பாரிய போராட்டங்களைத் தூண்டியிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 8 மணி வாக்கில், சிறப்புப்படை துருப்புகள் (Groupement des forces spéciales – GFS) செக்கொடொஹ்ரியாஹ் (Sekhoutoureah) ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள கொனாக்ரியின் காலொம் அண்டைப்பகுதியை முழுமையாக அடைத்தன. ஜனாதிபதி மாளிகை பாதுகாவலர்களுடன் நடந்த ஒரு சிறிய துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர் அவர்கள் கொன்டேயை சுற்றி வளைத்தாக செய்திகள் குறிப்பிட்டன.

பின்னர் சீருடையுடன் ஆயுதமேந்திய நிலையில் மக்களுக்கான Radio-Télévision guinéenne (RTG) இல் தோன்றிய டூம்போயா, ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கான தேசிய கமிட்டியை (Comité national du rassemblement et du développment - CNRD) நிறுவுவதாக அறிவித்தார். “ஜனாதிபதி பிடிக்கப்பட்டு, இப்போது அவர் எங்கள் காவலில் இருக்கும் நிலையில் … இப்போதிருக்கும் அரசியலமைப்பையும், அமைப்புகளையும் கலைக்க நாங்கள் முடிவெடுத்துள்ளோம்,” என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில், “கொனாக்ரி மொத்தமும் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது, அத்துடன் மொத்த இராணுவமும் பாதுகாப்பு படைகளும் எங்கள் வசம் உள்ளன, முடிவாக நாங்கள் கினியாவின் தீயசக்திகளுக்கு முடிவு கட்ட செயல்படுவோம்,” என்றார்.

ஒரு வாரத்திற்கு கினியாவின் எல்லைகளை அடைத்து வைக்குமாறும், மாலை 8 மணியிலிருந்து காலை 5 மணி வரை ஊரடங்கை அமல்படுத்துமாறும் உத்தரவிட்ட டூம்போயா, அரசுத்துறை தொழிலாளர்கள் வழமையாக வேலைக்குத் திரும்புமாறு கோரியுள்ளார். அரசாங்க அமைச்சர்கள் ஆட்சிக் குழுவிடம் விபரங்களைச் சமர்பிக்க வேண்டும் அல்லது கிளர்ச்சி குற்றச்சாட்டுக்கள் பேரில் தண்டனையை முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்றவர் உத்தரவிட்டார். சிப்பாய்கள் சூழ்ந்திருக்க, கொன்டே கசங்கிய ஆடையுடன் ஆனால் வெளிப்பார்வைக்கு எந்த பாதிப்பும் இன்றி அவர்களின் தடுப்புக் காவலில் இருப்பதைக் காட்டும் ஒரு காணொளியையும் CNRD படைகள் நேற்று வெளியிட்டன.

டூம்போயா அவரது உரையில், ஒரு 'தேசிய ஐக்கிய அரசாங்கத்தை' அமைக்கவும் மற்றும் கொன்டே ஆட்சியின் பிரமுகர்களுக்கு எதிராக 'பழிவாங்கும் பின்புல வேட்டை' எதுவும் இருக்காது என்றும் உறுதியளித்தார். 'மாற்றங்களுக்கான பரந்த நிலைப்பாட்டை வகுக்க பரிசீலனைகள் தொடங்கும், அதன் பின்னர் அந்த மாற்றங்களைச் செய்ய தேசிய ஐக்கிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும்,” என்றார்.

உலகளாவிய அலுமினிய உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் கினியாவின் பாக்சைட் சுரங்கங்களின் உரிமையாளர்கள் உட்பட, முதலாளித்துவ சொத்துக்களை மதிப்பதாகவும் டூம்போயா உறுதியளித்தார். 'இந்த நாட்டில் பொருளாதார நடவடிக்கைகளை இயல்பாக நடத்தும் நமது பொருளாதார மற்றும் நிதிய பங்காளிகளுக்கு' CNRD உத்தரவாதம் அளிக்கும் என்று கூறிய அவர், 'இந்த குழு அதன் அனைத்து கடமைகளையும் மதிக்கும் என்று அதன் பங்காளிகளுக்கு உறுதியளிக்கிறது,' என்றார்.

டூம்போயா அவரது உரையின் போது, அவரது GFS பிரிவு உண்மையில் தலைநகரின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி உள்ளதா என்பதைத் தெளிவுபடுத்தவில்லை. ஜனாதிபதியின் பாதுகாப்புப் படை ஆட்சிக்கவிழ்ப்பை தடுத்து விட்டதாக கினிய பாதுகாப்பு அமைச்சகம் ஓர் அறிக்கையை வெளியிட்டது. ஆனால், நிலைமை 'திடமாக இல்லாது' இருந்தாலும் CNRD “கட்டுப்பாட்டை வைத்திருப்பதை' ஒப்புக் கொண்ட பெயர் வெளியிடாத 'மேற்கத்திய பாதுகாப்பு அதிகாரிகளை' வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் மேற்கோளிட்டது.

கோனாக்ரி நேற்று CNRD இன் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிந்தது. வீதிகளில் இருந்த சிப்பாய்களைத் தவிர்க்க பல தொழிலாளர்கள் வீட்டிலேயே இருந்ததால், நகரத்தில் போக்குவரத்து குறைவாக இருந்ததாக பத்திரிகை அறிக்கைகள் சுட்டிக் காட்டின.

குறிப்பிடத்தக்க வகையில், கினிய தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கம் (syndicale des travailleurs de Guinée – USTG) இந்த பதவிக் கவிழ்ப்பு சதியை ஆதரித்தது. IndustriALL எனும் உலகளாவிய தொழிற்சங்கக் குழும குடையின் கீழ் அமெரிக்காவை மையமாக கொண்ட ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கம் (UAW) மற்றும் பிரான்ஸின் தொழிலாளர் பொது கூட்டமைப்பு (CGT) ஆகிய இரண்டுடனும் இணைந்துள்ள USTG அதிகாரத்துவம் புதிய CNRD ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஆமோதித்து ஓர் அறிக்கை வெளியிட்டது.

USTG பொதுச் செயலாளர் அப்துலாயே சோ பின்வருமாறு அறிவித்தார்: 'வரலாற்றில் நடந்ததே திரும்ப நடக்கிறது, செப்டம்பர் 5, 2021 இல் கினியாவின் மக்கள் ஒரு புதிய யதார்த்தத்தின் முடிவுக்கு இணங்க அதை ஏற்றுக் கொண்டு விட்டார்கள். இந்தப் புதிய ஒப்பந்தத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால், கினியத் தொழிலாளர்களின் தேசிய தொழிற்சங்கம் (USTG) நமது நாட்டின், கினியாவின், நிலைமையை மிகுந்த ஆர்வத்துடன் கவனிக்கிறது. ...புதிய இராணுவ அதிகாரிகள் கட்டுப்பாட்டுடன் நடந்து, நம் நாட்டின் பொருளாதார மற்றும் சமூக அமைப்பைக் காப்பாற்ற அது அவர்களுக்கு முறையிடுகிறது.”

உண்மையில், மேற்கு ஆபிரிக்காவில் இராணுவ ஆட்சியின் வரலாறோ அல்லது 1958 இல் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றதில் இருந்து இந்த 63 ஆண்டு கால கினியாவின் வரலாறோ எதுவுமே, கினிய முதலாளித்துவ வர்க்கத்தால் செல்வவளம் மற்றும் ஜனநாயகத்தின் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்க முடியும் என்றோ அல்லது ஏகாதிபத்தியத்திடம் இருந்து உண்மையான சுதந்திரத்தை ஸ்தாபிக்க முடியும் என்பதையோ எடுத்துரைப்பதாக இல்லை. நீண்ட காலமாக இராணுவ ஆட்சிக்கு ஒரு 'ஜனநாயக' எதிர்ப்பாளராக அடையாளம் காணப்பட்டு வந்த கொன்டே, 2010 இல் கினியாவின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியாக ஆனார். ஆனால், ஆட்சிக்கு வந்ததும், கினிய பாக்சைட் சுரங்கங்களில் சர்வதேச முதலீடுகள் இருந்த போதினும், அவர் சர்வதேச பிரச்சினைகளை எதிர்கொண்டார், அவற்றுக்கு அவரிடம் எந்த ஜனநாயகத் தீர்வுகளும் இருக்கவில்லை.

அதன் அண்டை நாடான மாலியில் 2013 இல் தொடங்கப்பட்ட பிரெஞ்சுப் போராலும் மற்றும் 2014-2015 இல் மேற்கு ஆபிரிக்க எபோலா வெடிப்பாலும் அதிர்ந்து போன கொன்டேயின் ஆட்சி, கோவிட்-19 பெருந்தொற்றின் நாசகரமான தாக்கம் மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக ஏகாதிபத்திய சக்திகள் பின்பற்றிய கொலைபாதக சுகாதார மற்றும் நிதிக் கொள்கைகள் ஆகியவற்றால் நிலைகுலைந்தது.

கினியாவில் 30,000 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளும், கோவிட்-19 இன் 355 உறுதிப்படுத்தப்பட்ட இறப்புக்களும் அறிவிக்கப்பட்டுள்ளன, இவை பெரும்பாலும் பாரியளவில் குறைமதிப்பீடுகளாக இருக்கலாம். அது அந்நாட்டில் 100 இல் 9.2 பேருக்கு மட்டுமே கோவிட்-19 தடுப்பூசிகளைச் செலுத்தி உள்ளது. ஆனால் பயங்கரமான நோய் எண்ணிக்கைக்கு அப்பாற்பட்டு, உலகளவில் தானியங்கள் மற்றும் எரிபொருட்களின் விலையேற்றமும், இந்த பெருந்தொற்றால் கட்டவிழ்த்து விடப்பட்ட உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக் குறைவு மற்றும் நிதிய ஊக வணிகத்தின் காரணமாக ஏற்றுமதி வருவாய் வீழ்ச்சியும் கொன்டே அரசாங்கத்தைக் கீழறுத்தது.

இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை விலை அதிகரித்த போது, கொடே 250 கிராம் ரொட்டியின் விலையை 1,500 இல் இருந்து 4,000 கினிய பிராங் ஆக உயர்த்திய போது ஜனவரியில் அங்கே பாரிய கோபம் இருந்தது. கடந்த மாதம் அந்த அரசாங்கம் ஒரு லீட்டர் எரிபொருளின் விலையை 9,000 இல் இருந்து 11,000 கினிய பிராங் ஆக உயர்த்தியது. இந்த கடுமையான விலையுயர்வுகள், ஆண்டுக்கு 459,000 கினிய பிராங் (வெறும் 830 அமெரிக்க டாலர்) சராசரி வருமானம் கொண்ட கினிய மக்களின் பரந்த அடுக்குகளை வறுமைப்படுத்தி வருகிறது.

ஏகாதிபத்தியத்துடனும் மேற்கு ஆபிரிக்கா மீதான மேலாதிக்கத்திற்கான அதன் போர்களுடனும் நெருக்கமாக தொடர்புபட்ட கினியாவின் பாதுகாப்புப் படைகளின் ஓர் அடுக்கை டூம்போயா பிரதிநிதித்துவம் செய்கிறார். பிரெஞ்சு வெளிநாட்டு படைப்பிரிவில் அவர் இராணுவத் தொழில் வாழ்வைத் தொடங்கிய அவர், பிரான்சின் போர் பயிற்சி பள்ளியிலும், இஸ்ரேலிலும், மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்துடன் நீண்டாக உறவுகளைக் கொண்ட இரண்டு மேற்கு ஆபிரிக்க நாடுகளான செனகல் மற்றும் காபோன் இராணுவ பயிலகங்களிலும் கூடுதலாக இராணுவப் பயிற்சிகள் பெற்றார். ஆப்கானிஸ்தானில் நேட்டோ போரில் பங்கெடுத்த அவர், 2019 இல் அருகிலுள்ள பர்கினா பாசோ தலைநகரான ஒவாகடோகுவில் அமெரிக்க தலைமையிலான பிளின்ட்லாக் (Flintlock) இராணுவப் பயிற்சிகளிலும் பங்கேற்றார்.

2019 ஃபிளின்ட்லாக் பயிற்சியில் பங்கெடுத்த டூம்போயாவின் சக பங்களிப்பாளர்களில் மாலியின் கர்னல் அசிமி கோய்தாவும் ஒருவராக இருந்தார், இவர் மாலியில் அதிகரித்து வந்த போர்-எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில் ஆகஸ்ட் 2020 இல் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்குத் தலைமை தாங்கினார். டூம்போயாவை போலவே, கோய்தாவும் பதவியேற்ற உடனே வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவரது நாட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ள பிரெஞ்சு படைகள் மற்றும் ஏனைய படைகளுடன் இணைந்து இயங்க சூளுரைத்தார்.

2019 இல், டூம்போயா ஃபிளின்ட்லாக் பயிற்சியைப் புகழ்ந்துரைத்ததுடன் மாலியில் — அதுவும் குறிப்பாக கிடாலுக்கு அருகில் வடக்கே— போர் தொடுக்க பாரீஸிற்குப் பக்க உதவியாக கினியா அதன் துருப்புகளை வழங்கியதையும் பாராட்டினார். அவர் Guinée News க்கு பின்வருமாறு தெரிவித்தார்: “பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பின்னணியில், கிடாலில் அதன் மாலி சகோதரர்களுக்குப் பக்கவாட்டில் கினியா போர் புரிந்து வருகிறது. எங்கள் நிலைப்பாட்டில் இருந்து, அது எங்களைக் கவலைப்படுத்தும் ஒரு விவகாரமாகும்,” என்றார்.

ஆகஸ்ட் 2020 இல் மாலி ஆட்சிக்கவிழ்ப்பு சதி மற்றும் பிரான்சின் மற்றொரு முக்கிய ஆபிரிக்க இராணுவ கூட்டாளியான சாட் இல் ஏப்ரல் 2021 ஆட்சிக்கவிழ்ப்பு ஆகியவற்றுக்குப் பின்னர், கோனாக்ரியில் இந்த பதவிக் கவிழ்ப்பானது, சம்பிரதாயமான ஜனநாயக சாக்குப்போக்குகள் கூட ஏகாதிபத்திய போருக்குப் பொருத்தமற்றதாக ஆகிவிட்டதைச் சுட்டுக் காட்டுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, இது ஆபிரிக்காவிலுள்ள முன்னாள் பிரெஞ்சு காலனிகளின் பிரச்சினை மட்டுமல்ல. சமூக சமத்துவமின்மையும் கோவிட்-19 பெருந்தொற்று உத்தியோகபூர்வமாக கையாளப்பட்ட விதமும் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற செல்வச் செழிப்பான ஏகாதிபத்திய நாடுகளில் கூட ஜனநாயக ஆட்சி வடிவங்களுக்குக் குழிபறித்து வருகின்றன.

ஜனவரி 6 இல் வாஷிங்டனின் அமெரிக்க தலைமை செயலகத்தில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சிக்குப் பின்னர், ஆபிரிக்காவில் நிலைநிறுத்தப்பட்ட பல பிரெஞ்சு அதிகாரிகள் உட்பட, இவர்கள் ஓர் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு சதியை ஆமோதித்தும், பிரான்சில் மரணப் படைகளைப் பயன்படுத்துவதை ஆமோதித்தும் ஓர் அறிக்கையில் கையெழுத்திட்டனர். இத்தகைய சம்பவங்கள் ஏகாதிபத்தியம், போர் மற்றும் சர்வாதிகார அச்சுறுத்தலுக்கு எதிராக சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஐக்கியப்படுத்த வேண்டிய அவசியத்தைச் சுட்டிக் காட்டுகிறது.