மௌனத்தால் யார் இலாபம் அடைகிறார்கள்?

மொறிஸ் பப்போனும் அக்டோபர் 1961 பாரிஸ் படுகொலையும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இக் கட்டுரை முதலில் பிரெஞ்சு மொழியில் டிசம்பர், 1999 இல் வெளியிடப்பட்டது. அக்டோபர் 17, 1961 பாரிஸ் படுகொலையின் 60 வது ஆண்டு தினத்திற்காக நாங்கள் அதை தமிழில் முதல் முறையாக மீண்டும் வெளியிடுகிறோம். ஆண்டுதினம் குறித்த கருத்து தனியாக வெளியிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1998 இல், அப்போது 88 வயதான மொறிஸ் பப்போனுக்கு போர்க்கால விச்சி ஆட்சியின் போது பிரான்சில் இருந்து 1,690 யூதர்களை நாடுகடத்த ஏற்பாடு செய்ததற்காக பிரெஞ்சு நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் அப்போது ஜிரோண்ட் மாகாணத்தின் பொலிஸ் அலுவலகத்தின் பொதுச் செயலாளராக இருந்தார்.

இரண்டு ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கு சர்வதேச ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டது. இது நாஜிக்களுடன் பிரெஞ்சு அரசாங்கம் ஒத்துழைத்ததன் ஒரு முக்கியமான அத்தியாயத்தின் மீது கவனத்தை ஈர்த்தது. அதுவரை, பெரும்பாலும் புதைக்கப்பட்டிருந்த, பிரெஞ்சு ஆளும் ஸ்தாபகத்தின் பார்வையில் என்றென்றும் அவ்வாறே இருக்க வேண்டிய முக்கியமான வரலாற்று உண்மைகளையும் இந்த விசாரணை வெளிப்படுத்தியது. 1981 வரை பிரெஞ்சு அரசில் நிதியமைச்சகம் உட்பட உயர்மட்ட பதவிகளை தொடர்ந்து வகித்த பப்போன், போருக்குப் பிந்தைய காலத்திலும் அதே அளவு குற்றங்களைச் செய்தார். 1998 ஆம் ஆண்டு விசாரணையில் சிவில் கட்சியின் சாட்சியாக பங்கேற்ற வரலாற்றாசிரியர் ஜோன்-லூக் ஐனோடியின் சாட்சியத்தில் இது நிரூபிக்கப்பட்டது.

ஐனோடி 'The Battle of Paris: 17 October 1961 (Éditions du Sueil) என்ற 1991ம் ஆண்டு புத்தகத்தின் ஆசிரியர் ஆவார். போர்தோ நீதிமன்றத்தின் முன்னர் பப்போன் சார்ல்ஸ் டு கோல் அரசாங்கத்தின் கீழ் பாரிசின் காவல்துறை அதிகாரியாக, 36 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தபோது பாரிஸில் என்ன நடந்தது என்பதை அக்டோபர் 1997 இல் விவரித்தார். அந்த நேரத்தில், அல்ஜீரியாவுடனான போரின் உச்சக்கட்டத்தில் நூற்றுக்கணக்கான அல்ஜீரியர்கள் பிரெஞ்சு தலைநகரில் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் அல்ஜீரியாவின் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் 30,000 க்கும் மேற்பட்ட மக்கள் ஈடுபட்டபோது 12,000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அல்ஜீரியா மற்றும் பாரிஸில் உள்ள காவல்துறை அதிகாரி

பப்போனின் அரசியல் வாழ்க்கை 1929 இல் தொடங்கியது. அப்போது 19 வயதான அவர் ஒரு தீவிர சோசலிச இளைஞர் அமைப்பான, நடவடிக்கைக்கான குடியரசுக் கட்சி மற்றும் சோசலிச பல்கலைக்கழக குழு (la Ligue d'action universitaire républicaine et socialiste) இல் சேர்ந்தார். போருக்குப் பின்னர் கோலிசத்தின் செல்வாக்குமிக்க அரசியல் பிரமுகர்களாக மாறிய ஜாக் சுஸ்ட்ரெல் (Jacques Soustelle), மொறிஸ் சூமான் (Maurice Schumann), ஜோர்ஜ் பொம்பிடு (Georges Pompidou) உள்ளிட்ட ஏராளமான எதிர்கால அரசியல் ஒத்துழைப்பாளர்களை அவர் அங்குதான் சந்தித்தார்.

1930களில், ஜெனரல் பிலிப் பெத்தானின் விச்சி ஆட்சியின் கீழ் பணியாற்றுவதற்கு முன்பு, பப்போன் மக்கள் முன்னணி (Front populaire) அரசாங்கம் உட்பட பல்வேறு அரசாங்கங்களின் கீழ் ஒரு உயர் அதிகாரியாக பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் அவர் செய்த குற்றங்களுக்காகவே அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 1944 இல், நேச நாடுகள் பிரான்சில் தரையிறங்கியபோது, எதிர்ப்பு இயக்கத்திற்கு (Resistance) சில தகவல்களை வழங்கியதன் மூலம் அவர் ஒரு 'எதிர்ப்பாளி' என ஒரு போலிச்சாட்சியை தயார் செய்தார். இதனால் போருக்குப் பின்னரும் அவரால் தொடர்ச்சியான தனது தொழில்வாழ்க்கையை உறுதிப்படுத்த முடிந்தது.

1956 ஆம் ஆண்டில், அப்போதைய சோசலிஸ்ட் கட்சி பிரதம மந்திரியான கீ மொலே, அல்ஜீரியாவின் கான்ஸ்டன்டைனில் நிர்வாகத்தின் பொலிஸ் அதிகாரி பதவியை பப்போனுக்கு வழங்கினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், ரடிக்கல்-சோசலிஸ்ட் கட்சியின் உள்துறை மந்திரி பூர்ஜெஸ்-மொனோரி (Bourgès-Maunoury) அவரை பாரிஸ் நகர காவல்துறை தலைவராக நியமித்தார்.

அல்ஜீரியாவில் நடந்த போரின் போது கான்ஸ்டன்டைனில் இரும்புக்கரம் கொண்டு சட்டம் ஒழுங்கை அமல்படுத்திய அவரது நடவடிக்கைகள் விச்சி அதிகார் என்னென்ன திறமையை கொண்டவர் என்பதை நிரூபித்தது. மிகவும் கொடூரமான சித்திரவதை விசாரணைகள் சாதாரணமாக இருந்தன. 1957 வரையிலான ஆண்டில், ஆயிரக்கணக்கான அல்ஜீரியர்கள் கொல்லப்பட்டனர், 114,000 பேர் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டனர். Le Monde இல் வெளியிடப்பட்ட மிஷேல் ரொக்கா (Michel Rocard) வின் அறிக்கையின்படி, ஒவ்வொரு நாளும் 50 முதல் 60 பேர் வரை இறந்தனர். உள்ளூர் மக்களை வேட்டையாட மனிதர்கள் நடமாட்டமற்ற பிரதேசங்கள் அறிவிக்கப்பட்டன.

அல்ஜீரியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 1957 இல் தனது பதவியை இராஜினாமா செய்த ஜெனரல் ஜாக் டு பொலாடியேர் (Jacques de Bollardière) போலல்லாமல், பப்போன் கடுமையான நடவடிக்கைகளை ஊக்குவித்ததன் மூலம் தன்னை வேறுபடுத்திக்காட்டிக் கொண்டார். 1948க்குப் பின்னர் அவரது முதல் உயர்பதவியான வெளிநாட்டு படையணிப் பிரிவின் அதிகாரியாக அவர் பதவி உயர்வு பெற்ற காலம் இதுவாகும்.

1958 இல், பிரான்ஸ் உள்நாட்டுப் போரின் விளிம்பில் இருந்தது. அல்ஜீரியாவை பிரான்சின் ஒரு பகுதியாக இருக்க கட்டாயப்படுத்தும் நோக்கத்துடன், ஜெனரல் ஜாக் மாசு (Jacques Massu) வின் பாராசூட் படையணிப்பிரிவு ஒரு ஆட்சிக் கவிழ்ப்புக்கு அச்சுறுத்தியது. நிலைமையை கட்டுப்படுத்த, ரடிக்கல் சோசலிஸ்ட் அரசாங்கம் ஜெனரல் டு கோலிடம் முறையிட்டது. அந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் பப்போனை பாரிசின் பொலிஸ் தலைவராக பெயரிட்ட பின்னர், டு கோல் அவரது தெரிவை உறுதிப்படுத்தி அல்ஜீரியாவுடனான ஒரு பேச்சுவார்த்தை உடன்படிக்கையை நாடியபோது, பப்போனுக்கு 'பாரிஸை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்' பணியை வழங்கினார்.

பப்போன் டு கோலுக்கு முன்னர் தெரியாதவர் அல்ல. ஆகஸ்ட் 1944 இல், அவர் ஏற்கனவே டு கோலின் நெருங்கிய ஒத்துழைப்பாளர்களில் ஒருவரின் கீழ் பணியாற்றினார். ஏனெனில், பப்போனின் விசாரணையின் போது கோலிஸ்ட் சாட்சிகளில் ஒருவர் கூறியது போல், 'விடுதலைக்கு (Libération) பின்னர், டு கோல் விச்சியின் சிவில் சேவையை நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப பயன்படுத்தினார்.'

தலைநகரில் ஒழுங்கை நிலைநிறுத்த எந்த அளவிலான வன்முறையிலும் பின்வாங்காத நம்பகமான பணியாளராக பப்போன் தன்னை வெளிப்படுத்தினார். அரபு மாணவர்களை கைது செய்து சித்திரவதை செய்யவும், புத்தகங்களை பறிமுதல் செய்யவும், நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களை தடை செய்யவும் உத்தரவிட்டார்.

மொறிஸ் பப்போன்

அக்டோபர் 5, 1958 அன்று, அனைத்து அல்ஜீரியர்களுக்கும் இரவு 8:30 மணி முதல் காலை 5:30 மணி வரை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் ஒரு ஊரடங்கு உத்தரவை பப்போன் ஆணையிட்டார். இவ்வாறு பிரிப்பது அரசியலமைப்பிற்கு எதிரான நடவடிக்கையாகும். இது பாரிஸில் ஒரு சூனிய வேட்டையின் ஆரம்பமாகும். வன்சென் (Vincennes) காடுகளில், விச்சியின் காலத்திலிருந்த மெரினியாக் (Mérignac) முகாமைப் போலவே எல்லா வகையிலும் ஒரு தடுப்பு முகாம் கட்டப்பட்டுள்ளது. அல்ஜீரியர்கள் பலதடவைகள் சுற்றி வளைத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு, மேலும் அல்ஜீரியத் தொழிலாளர்கள் பொலிஸாரின் கைகளால் தாக்குதலுக்கும் ஆளாகினர்.

ஒரு பொலிஸ் அதிகாரி எத்தனை பேரை கைது செய்யவேண்டும் என்று ஒதுக்கப்பட்டு பப்போன் பாரிய கைதுக்கான பொலிஸ் உத்தரவுகளை வெளியிட்டார். 1960 ஆம் ஆண்டில், அவர் பிரெஞ்சு பொலிஸின் கட்டுப்பாட்டின் கீழ், பிரெஞ்சு இராணுவத்தில் பணியாற்றும் அல்ஜீரியர்களான 'ஹர்கிஸ்' கொண்ட ஒரு துணை பொலிஸ் படையை உருவாக்கினார். இது அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணியில் (FLN) ஊடுருவுவதற்கு பயன்படுத்த நேரடியாக பப்போனின் கட்டளையின் கீழ் இருந்தது. பாரிஸின் தென்மேற்கு 15 நிர்வாகப் பிரிவு மற்றும் வடக்கு 18 வது நிர்வாகப் பிரிவில் சுற்றுலா பயணிகளுக்கான விடுதிகள் தேவைப்பட்டன. அங்கு கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டனர்.

பப்போனின் முறைகள் பிரெஞ்சு அதிகாரிகளால் ஒருமனதாக பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1959 முதல் நீதி அமைச்சராகவும் டக்ஹோவ் Dachau நாஜி கொலை முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த எடுமோன்ட் மிஷ்லே (Edmond Michelet), சித்திரவதைக்கு எதிராக பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தார். அவரை நீதிமன்றங்களில் பணியாற்றிய மற்றுமொரு ஒரு முன்னாள் வதை முகாம் கைதியாகவும் இருந்த சிமோன் வையில் (Simone Weill) ஆதரித்தார். பிரதமரின் அழுத்தத்தின் கீழ், மிஷ்லே 1961 கோடையில் இராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

1961 அக்டோபர் 17 படுகொலை

ஜனவரி 1961 இல் பிரான்சில் அல்ஜீரிய சுயநிர்ணயம் குறித்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 75.2 சதவீத பெரும்பான்மையினர் சுயநிர்ணயத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஒரு மாதத்திற்குப் பின்னர், இரகசிய இராணுவ அமைப்பு (Organisation de l’armée secrete — OAS) ஸ்தாபிக்கப்பட்டது. இது பிரெஞ்சு கட்டுப்பாட்டில் உள்ள அல்ஜீரியாவை நிர்வாகிக்கப் போராடும் ஒரு இரகசிய பயங்கரவாத அமைப்பாகும். இதில் அல்ஜீரியாவில் உள்ள பிரெஞ்சு வம்சாவழியை சேர்ந்தவர்கள் (pieds-noirs) மற்றும் இராணுவத்தின் உறுப்பினர்கள் அங்கத்தவர்களாக இருந்தனர், மேலும் இது 1962 இறுதி வரை பயங்கரவாத தாக்குதல்களை ஒழுங்கமைத்தது. இதற்கு பழிவாங்கும் தாக்குதல்களை பிரான்சில் ஏற்பாடு செய்ததன் மூலம் FLN பதிலளித்தது.

1961 அக்டோபரில் பிரெஞ்சு பொலிஸ் படைகளுடனான வெறித்தனமான மோதல் தீவிரமடைந்தது. பப்போன் அக்டோபர் 2, 1961 அன்று பொலிஸாருக்கு பின்வருமாறு அறிவுறுத்தினார்: 'ஒவ்வொரு தாக்குதலுக்கும், நாங்கள் பத்து தாக்குதலுடன் பதிலளிப்போம்.' அவர் பொலிஸாரை முதலில் சுட ஊக்குவித்தார் '... நாங்கள் உங்களைப் பாதுகாப்போம், நீங்கள் சட்டபூர்வமான தற்காப்பு நிலையில் இருப்பீர்கள்' என்றார்.

அல்ஜீரியர்களின் நிரந்தர ஊரடங்கு உத்தரவிற்கு எதிராக, FLN தனது ஆதரவாளர்களை பாரிஸ் தெருக்களில் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்ய உத்தரவிட்டது. இது அக்டோபர் 17 அன்று இரவு 8:30 மணிக்கு ஒரு பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. பாரிஸின் மிகவும் பிரபலமான பொது இடங்களில் அல்ஜீரியர்களை தங்கள் குடும்பங்களுடன் வருமாறு அழைப்பு விடுத்தனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 30,000 அல்ஜீரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். சுதந்திரத்திற்கான அமைதியான போராட்டத்திற்கு பாரிஸ் மக்களின் ஆதரவை வெல்லும் நோக்கத்துடன், போராட்டக்காரர்களிடையே ஒரு தனி ஆயுதம் கூட அனுமதிக்கப்படக்கூடாது என்று FLN உத்தரவு பிறப்பித்தது. அவர்கள் ஒரு பயங்கரமான பொறியினுள் சென்றனர்.

அக்டோபர் 17 பிற்பகலில் இருந்து, பப்போனின் நன்கு ஆயுதம் தரித்த பொலிஸ் படைகள் பாரிஸின் மையப்பகுதிக்கு வரத் தொடங்கிய அல்ஜீரியர்களை சுற்றிவளைத்தது. மாலையில், அல்ஜீரியர்கள் பொலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் மத்தியில் பொய்யான வதந்திகள் பரப்பப்பட்டன. அதைத் தொடர்ந்து மிகக் கொடூரமான ஒரு படுகொலை நடந்தது.

அல்ஜீரியர்களின் குழுக்கள் Opera விலிருந்து Place de la République வரை தொடர்ந்து தள்ளப்பட்டன. Neuilly பாலத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் ஒலித்தன. மேலும் பொலிஸார் பாதிக்கப்பட்டவர்களை செயினுக்குள் வீசுவதைக் கண்ட சாட்சிகள், அவர்களில் சிலர் தங்களுக்கு நீந்தத் தெரியாது என்று கூச்சலிட்டதாக தெரிவித்தனர். மெட்ரோ ரயில் நுழைவாயில்களில் அல்ஜீரியர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். பொலிஸ் வாகனங்கள் மற்றும் பெருநகர பேருந்துகளில் வைக்கப்பட்டு, வடக்கு பாரிஸில் உள்ள Porte de Versailles இல் உள்ள Le Dôme de Paris மாளிகை, Coubertin மைதானம் மற்றும் ஆயிரக்கணக்கான யூதர்கள் நாடு கடத்தப்படுவதற்கு முன்பு சுற்றி வளைக்கப்பட்ட அதே கட்டிடமான Velodrome d'hiver க்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பொலிஸாரின் 'வரவேற்புக் குழுக்கள்' அவர்களை தாக்கினர், கொன்றனர்.

1961 அக்டோபர் படுகொலைக்குப் பின்னர், பாரிஸில் உள்ள செயின் நதிக்கு அருகிலுள்ள சுவரில் 'இங்கே நாங்கள் அல்ஜீரியர்களை மூழ்கடித்தோம்' என எழுதப்பட்டுள்ளது

Ile de la Cité இல் உள்ள பொலிஸ் தலைமையகத்தின் முற்றத்தில், மேலும் மேலும் அல்ஜீரியர்கள் கொண்டு வரப்பட்டு, பப்போன் முன்னிலையில் அடித்து கழுத்தை நெரித்தனர். படுகொலைகளை நிறுத்துவதற்காக ஒரு பொலிஸ் அதிகாரி நடவடிக்கைகளை தலைமை நிர்வாக அதிகாரிக்கு அறிவித்தார். நள்ளிரவில், அதிர்ச்சியடைந்த பல போலீஸ் அதிகாரிகள், France Observateur செய்தித்தாளின் பத்திரிக்கையாளர் குளோட் போர்டே (Claude Bourdet) ஐ பார்க்கச் சென்றனர், 50 அல்ஜீரியர்கள் பொலிஸ் தலைமையகத்தின் முற்றத்தில் செயினுக்குள் வீசப்படுவதற்கு முன்பு கொல்லப்பட்டதாக அவருக்கு அறிவித்தனர்.

மாலை நேரத்தில், தற்போதைய மதிப்பீட்டின்படி, 11,730 அல்ஜீரியர்கள் கைது செய்யப்பட்டு, Vincennes காடுகளில் உள்ள தடுப்பு முகாம் உட்பட பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். வாரக்கணக்கில், உடல்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு செயின் ஆற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டன. குளோட் போர்டே, அக்டோபர் 27 அன்று பாரிஸ் கவுன்சிலில் நடந்த ஒரு அமர்வின் போது, இந்த நிகழ்வுகள் குறித்து நேரடியாக கருத்து தெரிவிக்குமாறு பப்போனிடம் கேட்டபோது, அவர் அமைதியாக இருந்தார்.

உத்தியோகபூர்வ எண்ணிக்கையானது 'மூன்று' இறப்புகளைக் குறிப்பிடுகிறது. இது போட்டி அல்ஜீரிய குழுக்களுக்கு இடையேயான எண்ணிக்கை என காரணம் காட்டியது. வட-ஆபிரிக்கர்களை அவர்களின் சொந்தப் பாதுகாப்பிற்காக பேருந்துகளில் ஏற்றிச் செல்லும் அளவுக்கு பொலிஸாரின் நடவடிக்கை குறைக்கப்பட்டது. அடுத்த முப்பது ஆண்டுகளாக அதிகாரிகளால் பராமரிக்கப்பட்ட உத்தியோகபூர்வ விளக்கம் இதுதான்.

டு கோல் பப்போனை பாதுகாத்து மற்றும் அவரை இராஜினாமா செய்யக் கோரிய அனைவரையும் அமைதிப்படுத்தினார். 'போராட்டம் சட்டவிரோதமானது,' என்று அவர் கூறினார். “பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தல்களைப் பெற்றதுடன் மற்றும் போராட்டத்தை எதிர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர் செய்ய வேண்டியதைத்தான் செய்தார்”.

அரசு வன்முறையின் ஒரு புதிய நடவடிக்கை, விரைவில் நடைபெறவிருந்தது. அல்ஜீரியாவின் முறையான சுதந்திரம் அங்கீகரிக்கப்பட்ட Evian ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட மார்ச் 18, 1962 க்கு சில நாட்களுக்கு முன்பு, OAS (இரகசிய இராணுவ அமைப்பு) அதன் பயங்கரவாதத் தாக்குதல்களை இரட்டிப்பாக்கியது. பிப்ரவரி 7, 1962 அன்று, கண்மூடித்தனமான தாக்குதலை அது ஏற்பாடு செய்தது. அதில் Delphine Renard என்ற நான்கு வயது சிறுமி கண்பார்வை இழந்தார். அடுத்த நாள், தொழிற்சங்கங்களால் அழைப்பு விடுக்கப்பட்ட ஒரு போராட்டம் 'OAS – கொலைகாரர்கள்!' என்று கோஷம் எழுப்பியது.

மீண்டும் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒரு பகுதியினர் அருகிலுள்ள மெட்ரோ நிலையமான சரோன் (Charonne) இல் தஞ்சமடைய முயன்றனர். ஆனால், நிலையத்தின் நுழைவு வாயிலில் உலோகக் கதவுகள் பூட்டப்பட்டதால், முதலில் கீழே இறங்கியவர்கள் பின்தொடர்ந்தவர்களால் நசுக்கப்பட்டு மூச்சுத் திணறினர். CGT இன் எட்டு உறுப்பினர்கள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். சில வாரங்களுக்குப் பின்னர், பொலிஸ் தொழிற்சங்கத்தின் செயலாளர் பிரான்சுவா ரூவ் (François Rouve) பப்போனை எதிர்த்தபோது, அவர் அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதே நேரத்தில் படுகொலை பற்றி செய்தி வெளியிட்ட வாராந்திர Express கைப்பற்றப்பட்டது.

தீவிர கோலிஸ்ட்டான தகவல் அமைச்சர் அலான் பெய்ரிஃபிட் (Alain Peyrefitte) அனைத்து செய்தித்தாள் அறிக்கைகளையும் கண்காணித்து, வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவைகள் கொலைகள் பற்றிய எந்த தகவலையும் அடக்குவதை உறுதி செய்தார். அவர் பத்திரிகையாளர்களை பணியமர்த்துவதை மேற்பார்வை செய்தார் மற்றும் அமைதியாக இல்லாத எவரும் அகற்றப்படுவதை உறுதி செய்தார். பின்னர், பிரதமர் ரேய்மோண்ட் பார் (Raymond Barre) இன் கீழ் நீதி அமைச்சராக இருந்த அவர், மரண தண்டனையை ஆதரிப்பதன் மூலம் தணிக்கையாளர் என்ற தனது பாத்திரத்திற்கு விசுவாசமாக இருந்தார். நவம்பர் 1999 இல் அவர் இறக்கும் வரை, அக்டோபர் படுகொலையில் அவர் வகித்த பங்கிற்காக ஒருபோதும் பொறுப்பேற்கச் செய்யப்பட்டவில்லை.

இறுதியாக, அக்டோபர் 1965 இல், மொரோக்கோ எதிர்க் கட்சி தலைவரான மெஹ்தி பென் பர்கா (Mehdi Ben Barka) பாரிஸில் பட்டப்பகலில் கடத்தப்பட்டு காரில் தூக்கியெறியப்பட்டார். பின்னர் அவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இக்கொலையில் உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளின் ஈடுபாடு, டு கோலை தனது வைராக்கியமான முகவரிடமிருந்து பகிரங்கமாக தன்னைப் பிரித்துக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தியது.

மன்னிப்பிலிருந்து நினைவிழப்பு

பப்போன், 1958 முதல் 1967 வரை, Michel Debré, Georges Pompidou, Couve de Murville ஆகிய மூன்று கோலிச பிரதம மந்திரிகளின் கீழ் காவல்துறையின் தலைவராக இருந்தார். ஆனால் அவரது தொழில்வாழ்க்கை முடிவதற்கு வெகு தொலைவில் இருந்தது.

Sud-Aviation (இப்போது Aérospatiale) இன் நிர்வாக இயக்குனராக தனியார் துறையில் இருந்த ஒரு குறுகிய இடைவெளிக்குப் பின்னர், அவர் 1968 இல் கோலிச UDF கட்சியின் தேசிய பொருளாளராக ஆனார். இது பின்னர் ஜிஸ்கார்ட் டெஸ்ராங் (Giscard d’Estaing) அரசாங்கத்தில் பிரதம மந்திரி ரேய்மோண்ட் பார் இடம் இட்டுச் சென்றது. 1978 இல் அவரை டெஸ்ராங் நிதியமைச்சராகப் பெயரிட்டார். Michel Debré இன் மகன் Jean-Loius Debré அவரது தலைமை அதிகாரியானார்.

துல்லியமாக இந்த நேரத்தில்தான் அவரது கடந்த காலம் அவரைப் பற்றிக்கொண்டது. மே 1981 இல், வாராந்திர நையாண்டி இதழான Le Canard Enchainé இல் ஒரு கட்டுரை வெளிவந்தது. அது 1940 களில் நாஜி ஒத்துழைப்பாளராக அவரது பங்கை வெளிப்படுத்தியது. 1981 ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி, ஜனாதிபதித் தேர்தலின் இரண்டு சுற்றுகளுக்கு இடையே கட்டுரை வெளிவந்தது. இது, முதன்முறையாக மித்ரோனுக்கு சோசலிஸ்ட் கட்சியின் தலைவராக அதிகாரத்திற்கு வருவதற்கான வாய்ப்பைக் கொடுத்தது. இதனால் தான் Le Canard Enchainé இல் வெளியிடப்பட்ட கட்டுரையை மித்திரோன் பகிரங்கமாக எதிர்க்கவில்லை. ஆனால் அவர் ஆட்சிக்கு வந்தவுடன் இது மாறும்.

பப்போன் பற்றிய அம்பலப்படுத்தல்கள் உடனடியாக கோலிசக் கட்சிகளால் 'அவதூறான தாக்குதல்கள்' என்று கண்டனம் செய்யப்பட்டன. டிசம்பர் 1981 இல் ஜெரார் புளோஞ்சே (Gérard Boulanger) ஆலும், பின்னர் மே 1982 இல் சேர்ஜ் கிளார்ஸ்ஃபெல்ட் (Serge Klarsfeld) ஆலும் பப்போனுக்கு எதிராக முதல் சட்டபூர்வ குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. விசாரணை முதலில் இழுத்துச் செல்லப்பட்டு பிப்ரவரி 11, 1987 அன்று, மித்ரோன் மற்றும் பிரதமர் ஜாக் சிராக்கின் அரசாங்கத்தின் கீழ் இரத்துச் செய்யப்பட்டது.

போர்தோவில் பாதிக்கப்பட்ட யூதர்களின் குடும்பங்கள் இதை கைவிட மறுத்துவிட்டன. மேலும் 1988 இல் இரண்டாவது முறையாகவும், பின்னர் 1992 இல் மூன்றாவது முறையாகவும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக பப்போன் மீது குற்றம் சாட்டப்பட்டது. இறுதியாக, அக்டோபர் 1997 இல் அவரது வழக்கு விசாரணை தொடங்கி, ஏப்ரல் 1998 இல் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததற்காக மொறிஸ் பப்போனுக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. போருக்குப் பிந்தைய காலத்தில் அவர் செய்த குற்றங்களுக்காக அவர் ஒருபோதும் குற்றம் சாட்டப்படவில்லை.

வரலாற்றாசிரியர் ஜனோடி பப்போனின் விசாரணையின் போது ஒரு முறையான வாக்குமூலம் அளிக்க அனுமதிக்கப்பட்டாலும், போருக்குப் பிந்தைய நிகழ்வுகள் விசாரணைக்கு தலைமை நீதிபதிகளால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டன. மேலும் 1961 இன் ஆவணங்கள் அணுகமுடியாதவாறு தேசிய ஆவணக் காப்பகத்தில் வகைப்படுத்தப்பட்டன.

இந்த ஆவண காப்பகங்கள் ஐரோப்பாவில் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட சட்டவரைறைக்கு உட்பட்டவை. 1979 ஆம் ஆண்டின் ஒரு சட்டம், ஆவணங்கள் 30 ஆண்டுகள் வரை வகைப்படுத்தப்படும் என்றும் சில சமயங்களில் 60 அல்லது 100 ஆண்டுகள் வரை வைத்திருக்க வேண்டும் என்றும் விதித்தது. பிப்ரவரி 1999 இல், Libération பத்திரிகையின் கருத்துப்படி: “போரின் முடிவில் இருந்து, நமது வரலாற்றில் முன்னுதாரணமாக இல்லாத வேகத்துடனும், நோக்கத்துடனும் முடிவு செய்யப்பட்ட பொதுமன்னிப்பு (Charonne படுகொலையில் பங்கேற்றவர்கள் எவரும் விசாரிக்கப்படவில்லை) நடைமுறையில் அரசு மறதியின் இரட்டிப்பான வடிவமாகிவிட்டது.'

1997 விசாரணையின் போது ஐனோடி அளித்த சாட்சியத்தைத் தொடர்ந்து, காப்பகங்கள் சிறிது திறக்கப்பட்டன. கலாச்சார அமைச்சர் கத்தரின் துரோட்மான் (Catherine Trautmann) அவற்றைத் திறப்பதாக பகிரங்கமாக உறுதியளித்தார். 1990 ஆம் ஆண்டு 'நினைவின் பெயரால்' (Au nom de la Mémoire) சங்கத்தின் உறுப்பினரான வரலாற்று பேராசிரியர் டாவிட் அசூலின் (David Assouline), உடனடியாக துரோட்மான் இன் உறுதிமொழியை அடுத்து பாரிஸ் ஆவணக் காப்பகத்திற்குச் சென்றார். அங்கு தலைமைப் பாதுகாப்பாளரான பிலிப் கிரோண்ட் (Philippe Grand) அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். அவரே அமைச்சரின் உறுதிமொழியை அவ்வாறே எடுத்துக் கொண்டார். ஒன்றாக, அவர்கள் பொலிஸ் தலைமையகத்தின் பெட்டிகளை மதிப்பீடு செய்து, கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போனவர்களின் பட்டியலுடன் ஒப்பிட்டு பார்த்தனர். இது ஐனோடியால் அவரது புத்தகத்தில் ஸ்தாபித்து காட்டப்பட்டிருந்தது.

அசூலின் விளக்கினார்: 'அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கான பக்கங்கள் FMA (அல்ஜீரியாவில் இருந்த பிரெஞ்சு முஸ்லிம்கள்) களின் பெயர்களால் நிரப்பப்பட்டு 'இறந்தவர்கள்' என முத்திரையிடப்பட்டுள்ளது. அவற்றில் சில repêché [நீரில் இருந்து பெறப்பட்டனர்] என்ற வார்த்தையும் அடங்கும்.' ஒரு சுருக்கமான பரிசோதனைக்குப் பின்னர், அவர்கள் ஏற்கனவே 70 இறப்புகளைக் கணக்கிட்டனர்.

எனினும் அமைச்சர் துரோட்மானின் வாக்குறுதி காப்பாற்றப்படவில்லை. காப்பகத்தை திறப்பதற்குப் பதிலாக, உள்துறை மந்திரி ஜோன்-பியர் செவென்னுமோ (Jean-Pierre Chevènement), அவரது ஒத்துழைப்பாளரும், அரச ஆலோசகருமான டியூடொனே மொன்டேல்கேர்ன் (Dieudonné Mandelkern) என்பவருக்கு, பொலிஸ் தலைமையக மற்றும் உள்துறை அமைச்சரின் காப்பகங்களை ஆய்வு செய்யும்படி அறிவுறுத்தினார். ஜனவரி 8, 1998 இல், மொன்டேல்கேர்ன் தனது அறிக்கையை செவென்னுமோ இடம் சமர்ப்பித்தார். அவர் மூன்று இறப்புகளின் உத்தியோகபூர்வ கணக்கை மிகவும் சுருக்கமான முறையில் 'திருத்தி', மதிப்பீட்டை ஏழாக உயர்த்தினார். அவர் கொல்லப்பட்ட ஏழு பேரின் பெயர்களை உள்ளடக்கியதோடு, கேள்விக்குரிய காலகட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட 88 சடலங்களில் 25 உடல்களுக்கும் போராட்டத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை ஒருவர் 'விலக்கிவிட முடியாது' என்று கூறினார்.

சோசலிஸ்ட் கட்சியின் பிரதம மந்திரி லியோனல் ஜோஸ்பன் இன் பிரதிபலிப்பு குறிப்பிடத்தக்கது: நான்கு நாட்களுக்குப் பின்னர், ஜனவரி 12, 1998 அன்று, அவர் மீண்டும் காப்பகங்களை முறையாக மூடினார். இதனை அவர் பின்வரும் வார்த்தைகளில் உத்தியோகபூர்வ அறிக்கையுடன் நியாயப்படுத்தினார்: “... அவை தற்போதைய விசாரணையில் உள்ள திரு. மொரிஸ் பப்போன் தொடர்பாக தலையிடலாம். இந்த நிலைமைகளின் கீழ், அறிக்கையை வெளியிடுவதற்கும் காப்பகங்களை திறப்பதற்கும் அரசாங்கம் முன்முயற்சி எடுக்க முடியாது.”

ஆயினும்கூட, பல முக்கியமான ஆவணங்கள் சமீபத்தில் காணாமல் போயுள்ளன என்பதை மொன்டேல்கேர்ன் தெளிவாகக் குறிப்பிட்டார். இது, உள்துறை அமைச்சகத்திற்கு பொலிஸ் அதிகாரியாக இருந்த பப்போன் வழங்கிய அறிக்கையையும் உள்ளடக்கியது. அதன் நகல்களை ஜனாதிபதி மற்றும் பிரதமரும் டிசம்பர் 26, 1991 அன்று பெற்றனர். பொலிஸாரின் நதிப் படைப்பிரிவின் (brigade fluviale) கோப்புக்கள், அல்ஜீரிய விவகாரங்களின் ஒருங்கிணைப்பு சேவையின் கோப்புக்கள் (service de coordination des affaires algériennes) மற்றும் வன்சென் முகாமின் கோப்புகள், பிற ஆவணங்கள் அனைத்தும் மறைந்துவிட்டன.

மொன்டேல்கேர்ன் அறிக்கை பகிரங்கமாக எதிர்க்கப்பட்டதால், இரண்டாவது அறிக்கைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த முறை நீதி அமைச்சகம் வழக்கறிஞர் ஜோன் ஜெரோமினி (Jean Geromini) இடம் பொறுப்புக்கொடுத்தது. அவரது அறிக்கை மே 5, 1999 அன்று ஜோஸ்பனுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் 48 அல்ஜீரியர்கள் கொல்லப்பட்டதாகவும், இது குறைத்து மதிப்பிடப்பட்டதாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. அந்த ஆவணம் கூறுகிறது: “அக்டோபர் 27, 1961 தேதியிட்ட நீதித்துறை அமைச்சகத்தின் தலைமைப் பணியாளர் பிரதம மந்திரியின் தலைமை அதிகாரிக்கு வழங்கிய குறிப்பில், சுமார் 100 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் மற்றும் பெரும்பாலும், குறிப்பிட்ட சில சான்றுகளின்படி, இந்தக் கொலைகளை பொலிஸாரே செய்திருக்கலாம் என்று கூறலாம்” எனக் குறிப்பிட்டது. நவம்பர் 2, 1961 அன்று நேரடியாக பிரதமர் டுபிரேக்கு அனுப்பப்பட்ட இரண்டாவது குறிப்பு, கொலைகள் பெரிய அளவில் பொலிஸ் நடவடிக்கைகளால் விளைகின்றன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஜெரோமினி இன் அறிக்கை, படுகொலையின் உண்மைகள் குறித்து அரசாங்க அதிகாரிகளுக்கு முழுமையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கிறது. நீதி அமைச்சகம் பொதுவாக விசாரித்தது, ஆனால் அனைத்து விசாரணைகளும் குற்றச்சாட்டுகளை நிராகரிக்க வழிவகுத்தன. அக்டோபர் 17, 1961 படுகொலையை கண்டித்த செய்தித்தாள்கள் அல்லது பத்திரிகையாளர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இரண்டைத் தவிர, அனைத்து குற்றச்சாட்டுகளும் தண்டனைகள் இல்லாமல் மூடப்பட்டன.

ஐனோடி தனது குற்றச்சாட்டுகளை Le Monde க்கு அனுப்பிய கடிதத்தில் மீண்டும் கூறினார். 1991 இல் தனது புத்தகத்தை வெளியிட்டது அல்லது அவரது சாட்சியத்திற்குப் பின்னர் ஐனோடிக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்யாத மொறிஸ் பப்போன், இப்போது அவர் மீது ஒரு மில்லியன் பிராங்குகளுக்காக அவதூறு குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார். அதிகாரிகளின் காப்பகங்களை அணுகாமல், பல ஆண்டுகளாக விலைமதிப்பற்ற ஆவணங்களைச் சேகரித்து உன்னிப்பாகப் பணியாற்றிய ஐனோடியால், தன்மீது குற்றம்சாட்டியவருக்கு எதிராக விசாரணையை திருப்ப முடிந்தது.

ஐனோடியின் புத்தகம் உண்மையில் துல்லியமானது என்பதை உறுதிப்படுத்திய இரண்டு சாட்சிகளான ஆவண பராமரிப்பாளர்களான பிலிப் கிரோண்ட் மற்றும் அவரது சகா வழங்கிய சாட்சிகள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. அவர்கள் இப்போது ஒழுங்காற்று நடவடிக்கைகளுக்கு உட்பட்டு, பின்னர் அவர்கள் சிராக் ஆதரவாளரான பாரிஸ் மேயர் ஜோன் திபேரியால் தங்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர்.

இன்று எவ்வாறுள்ளது?

நவம்பர் 1999 வரை, மொறிஸ் பப்போன் நாஜி ஒத்துழைப்பாளராக பொதுவில் அறியப்பட்ட காலத்திற்காக மொத்தத்தில் மூன்று இரவுகளை சிறையில் கழித்தார். அவர் Légion d'honneur பதக்கத்தை அணிந்தவாறு நீதிமன்ற கூண்டில் தோன்றினார். அவரது வயது முதிர்ந்த மற்றும் மோசமான உடல்நிலை காரணமாக, மூன்று நாட்களுக்குப் பின்னர் சுதந்திர மனிதராக அவர் தனது கடவுச்சீட்டை வைத்துக்கொண்டு விசாரணையை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார்.

அவரது எதிர்முறையீடுகளின் முடிவை எதிர்பார்த்து அவர் சுதந்திரமாக இருந்தார். அவரது தனிப்பட்ட பாதுகாப்பிற்காகவும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பிற்காகவும், அவருக்கு 24 மணி நேர கண்காணிப்பு வழங்கப்பட்டது. பப்போன் தனது வேண்டுகோளின் பேரில் இந்த கண்காணிப்பை நீக்க முடிந்தது. பப்போன் சுவிட்சர்லாந்திற்கு தப்பியோடும் தனது விமானப் பயணத்தை அமைதியாக ஒழுங்கமைக்க முடிந்தது என்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

பப்போன் கைது செய்யப்பட்டு பிரெஞ்சு சிறைகளில் வைக்கப்பட்டிருந்தாலும், போருக்குப் பிந்தைய காலத்தில் அவரின் மற்றும் அவரது ஒத்துழைப்பாளர்களின் செயல்பாடுகளின் உண்மைகள் கருத்தில் எடுக்கப்படாமல் உள்ளன. தேசிய ஆவணக் காப்பகங்கள் அணுக முடியாத நிலையில் உள்ளதுடன் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் உள்நாட்டில் முரண்படுகின்றன. மேலும் பொலிஸ் முகவர்களும் பல்வேறு வலைப்பின்னல்களும் மறைவில் உள்ளன. தற்போதைய அரசாங்கங்கள் ஏன் உண்மையை மறைப்பதில் இவ்வளவு உறுதியாக உள்ளன? இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் இது.

Loading