மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஆகஸ்ட் 2019 முதல் நாட்டை ஆளும் சிவிலியன்-இராணுவ கூட்டு அமைப்பான இறையாண்மை கவுன்சிலின் தலைவர் ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் (Abdel Fattah al-Burhan), பிரதமர் அப்துல்லா ஹம்டோக்கின் (Abdulla Hamdok) அரசாங்கத்தை திங்களன்று அகற்றினார்.
ஹம்டோக், 2023 ஆம் ஆண்டில் முழு சிவிலியன் ஆட்சிக்கு மாறுவதாக கூறப்படும் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தார். அல்-புர்ஹான் தனது பதவியை ஒரு குடிமகனிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு இந்த நடவடிக்கை வந்துள்ளது.
ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் இதுவரை தலைமறைவாக உள்ள ஹம்டோக், அவரது மனைவி மற்றும் பல அமைச்சரவை உறுப்பினர்களை கைது செய்ய அல்-புர்ஹான் உத்தரவிட்டுள்ளார். ஹம்டோக்கின் அரசாங்கம் கலைக்கப்பட்டதையும், நாடு முழுவதும் அவசர நிலையைப் பிரகடனப்படுத்துவதையும், இணையத்தை முடக்குவதையும் அவர் தொலைக்காட்சியில் அறிவித்தார். அவரது போட்டியாளரும் துணை தளபதியுமான ஜெனரல் முகமது ஹம்தான் டகாலோ (ஹெமெட்டி என்றும் அழைக்கப்படுபவர்) ஆல் கட்டளையிடப்பட்ட டார்பூர் (Darfur) மோதலில் அதன் மிருகத்தனமான நடவடிக்கைகளுக்காக பரவலாக வெறுக்கப்பட்ட ஆயுதக் குழுவினரான அதிவிரைவு உதவிப் படையின் (Rapid Support Forces-RSF) உறுப்பினர்கள், நைல் நதியின் பாலங்கள் மற்றும் கார்ட்டூம் (Khartoum) நகர்ப்புறத்தில் உள்ள பிற முக்கிய உள்கட்டமைப்புக்களில் நிலைகளை எடுத்தனர்.
அல்-புர்ஹான் அதிகாரத்தை திடீரென கைப்பற்றியமை, தொடர்ச்சியான இராணுவ ஆட்சிக்கான இடைக்கால சிவிலியன் முன்னணியை உருவாக்கிய 2019 ஒப்பந்தத்திற்கு ஒரு “இடையூறு” என்றும், சூடானியர்களை அமைதியாக அது “எதிர்க்க” தூண்டியுள்ளது என்றும் ஹம்டோக் கண்டித்தார். 2018 ஆம் ஆண்டின் இறுதியில் தேசியளவில் வெடித்த போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய சுதந்திரம் மற்றும் மாற்றத்திற்கான படைகளின் (Forces of Freedom and Change-FFC) ஒரு பகுதியான, சூடான் வல்லுநர்களின் சங்கம் மற்றும் எதிர்ப்புக் குழுக்கள் (Sudan Professionals’ Association and Resistance Committees), உம்மா கட்சியும் (Umma Party) சூடானின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியும் (Stalinist Communist Party) செய்தது போல, பாரிய போராட்டங்களுக்கும் மற்றும் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளன.
ஜூலையில் தேர்தல் நடத்த உறுதியளித்து இந்த ஆட்சி மாற்றம் ஒரு தற்காலிக நடவடிக்கையே என்று சமிக்ஞை செய்வதன் மூலம் மக்கள் எதிர்ப்பைத் தணிக்க அல்-புர்ஹான் முனைந்தார். என்றாலும், தலைநகர் கார்ட்டூமின் வீதிகளிலும், மற்றும் பிற நகர்ப்புறங்களிலும் நகரங்களிலும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், “மக்கள் வலிமையானவர்கள், வலிமையானவர்கள்” மேலும் “பின்வாங்குவது ஒரு விருப்பத்தேர்வு அல்ல!” என்று கோஷமிட்டனர். இந்நிலையில் துருப்புக்கள், மக்கள் கூட்டத்தை நோக்கி கண்ணீர்ப்புகையையும் மற்றும் நேரடி தோட்டாக்களையும் பாய்ச்சின. இதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர், டஜனுக்கு அதிகமானோர் காயமடைந்தனர், மேலும் இது வணிக வாழ்க்கையை ஸ்தம்பிக்கச் செய்தது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (United Arab Emirates-UAE) மற்றும் சவுதி அரேபியாவின் ஆதரவுடன் நீண்டகால சர்வாதிகாரியாக இருந்த ஜனாதிபதி ஒமர் அல்-பஷீரை பதவி நீக்கம் செய்து ஏப்ரல் 2019 இல் அல்-புர்ஹான் ஆட்சிக்கு வந்தார். முஸ்லீம் சகோதரத்துவத்துடன் இணைந்த அல்-பஷீரின் இராணுவ ஆட்சிக்கு எதிராக பல மாதங்கள் நீடித்த போராட்டங்களை எதிர்கொண்டு, முழு அரசு எந்திரமும் தூக்கியெறியப்படுவதைத் தடுப்பதே, அதன் நோக்கமாக இருந்தது.
சில மாதங்களுக்குப் பின்னர், 22 முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ எதிர்ப்பு அமைப்புக்களின் குடை குழுவான சுதந்திரம் மற்றும் மாற்றத்திற்கான படைகள் (FFC), இராணுவத்துடன் ஒரு இழிவான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. முதலில் ஆபிரிக்க வளர்ச்சி வங்கியின், அதன் பின்னர் ஆபிரிக்காவிற்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார ஆணையத்தின் பொருளாதார நிபுணராக இருந்த டாக்டர் ஹம்டோக்கின் தலைமையிலான ஒரு இடைக்கால “தொழில் வல்லுனர்” அரசாங்கத்தால் இராணுவம் முன்னிலைப்படுத்தப்படும்.
1956 இல் சுதந்திரம் பெற்றதிலிருந்து நாட்டை இராணுவத்தின் காலடியின் கீழ் கட்டுப்படுத்திய சிறிய ஊழல்வாத உயரடுக்கின் அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்ட அரசாங்கத்தில் இந்த துரோகத்திற்கு தூண்டுதல் அளிக்கப்பட்டது. நடைமுறையில், அல்-புர்ஹானின் துணைத் தளபதி டகாலோவால் நாடு ஆளப்படுகிறது, இவரது அதிவிரைவு உதவிப் படை சூடான் இராணுவத்தை விட அதிக சக்திவாய்ந்தது என்பதுடன், சூடானின் பெரும்பாலான நகர்ப்புறங்களையும் நகரங்களையும் அது கட்டுப்படுத்துகிறது.
ஜூன் 2019 இல் கார்ட்டூமில் நடந்த பாரிய உள்ளிருப்பு போராட்டத்தின் போது நிகழ்ந்த 1,800 எதிர்ப்பாளர்களின் மரணம், 400 சதவீத அளவிற்கு பணவீக்கம் உயர்ந்துள்ளமை, தேசியளவில் நிலவும் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகளின் பற்றாக்குறை, தொற்றுநோயை தவறாக கையாளுதல் மற்றும் சமீபத்திய திடீர் வெள்ள பெருக்கு ஆகியவற்றுக்கு பொறுப்பானவர்களை நீதிக்கு முன் நிறுத்த அரசாங்கம் தவறியது குறித்து பல மாதங்களாக அதிகரித்துவரும் அமைதியின்மையைத் தொடர்ந்து திங்கட்கிழமை ஆட்சிக்கவிழ்ப்பு நிகழ்த்தப்பட்டது. 2018 ஆம் ஆண்டில், 40 மில்லியன் மக்களில் குறைந்தது 80 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு ஒரு டாலருக்கும் குறைவான வருமானத்தில் வாழ்ந்த ஒரு நாட்டில், 5.8 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்பட்டது, அல்லது 2017 ஆம் ஆண்டை விட 700,000 அதிகமாக இருந்தது. 2.7 மில்லியன் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஹம்டோக் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) கடன் நிவாரணம் கோரினார், இதற்கான அரசியல் விலை, டார்பூரில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக்காக அல்-பஷீரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கு ஒரு ஒப்பந்தம் செய்வதாகும், மேலும் அதன்படி, மற்ற மூத்த அதிகாரிகளின் பங்கை ஆராய்ந்து, பரந்த ஈரான்-எதிர்ப்பு கூட்டணியின் ஒரு பகுதியாக இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்குவதற்கு கையெழுத்திடுவதாகும். சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார விலை, எரிபொருள் மானியங்களை முடிவுக்குக் கொண்டுவருவது, காற்றழுத்த விசைக் குழாய்களின் (pumps) விலையை இரட்டிப்பாக்குவது, சூடானின் நிலையான பரிமாற்ற விகிதத்தை கைவிட்டு, மிதக்கும் நாணய முறைக்கு மாறுவது, ஒரு வருடத்திற்கு முன்னர் 144 சதவீதமாக இருந்த பணவீக்கத்தை இப்போது 400 சதவீத அளவிற்கு கடுமையாக உயர்த்தியுள்ளது ஆகியவற்றை உள்ளடக்கியது. ஆனால், இராணுவம் மற்றும் உளவுத்துறை எந்திரத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பல நிறுவனங்கள் உட்பட, 600 அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கான IMF இன் கோரிக்கைகள், இராணுவ ஆட்சிக்குழுவின் நிதிய நலன்களின் மையத்தை தாக்குகின்றன.
இத்தகைய நடவடிக்கைகள் குறித்த பயம் என்னவென்றால், அரசு நிதி ஒதுக்கீடுகளை ஜெனரல்கள் அணுகுவதையும், ஹம்டோக் அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு இட்டுச் சென்ற போர்க்குற்றங்களுக்கான குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர்கள் நடைமுறையில் விடுபடுவதையும் அவை தடுத்துவிடும்.
போர் தலைவர்கள், இராணுவத் தளபதிகள், ஆயுதக் குழு தலைவர்கள், மற்றும் பலமுறை பக்கம் மாறிய அல்-பஷீர் விசுவாசிகள் என பலதரப்பட்டவர்களால் உருவாக்கப்பட்ட கூட்டணியான இடைக்கால இராணுவ கவுன்சில் (Transitional Military Councile-TMC) கருத்து வேறுபாடுகளால் பிளவுபட்டுள்ளது. அல்-புர்ஹானும் டகாலோவும் முன்னணியிலுள்ள இரண்டு போட்டியாளர்களாவர், முதலாமவர் கெய்ரோவுக்கும், அடுத்தவர் ரியாத் மற்றும் அபுதாபிக்கும் நெருக்கமாக உள்ளனர்.
அக்டோபர் 2020 இல் ஏழு ஆயுதமேந்திய கிளர்ச்சிக் குழுக்களில் ஐந்தை ஒருங்கிணைத்து, ஜூபா அமைதி ஒப்பந்தத்தில் TMC கையெழுத்திட்ட போதிலும், மேற்கில் உள்ள டார்பூர், மற்றும் தெற்கில் தெற்கு கோர்டோஃபன் மற்றும் மேற்கு நைல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரண்டு பெரிய குழுக்கள் அதில் கையெழுத்திட மறுத்துவிட்டன. முன்னாள் தலைவர் அல்-பஷீருடன் கூட்டணி ஏற்படுத்திய இந்த ஒப்பந்தம், பழங்குடித் தலைவர்கள் மற்றும் கிழக்கு சூடானில் உள்ள வறிய இனக்குழுக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது, அதாவது கிளர்ச்சிக் குழுக்களுக்கும் அவர்களின் பிராந்தியங்களுக்கும் அதிக பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதால் தங்கள் நிலை மேலும் நீர்த்துப்போகும் என்று அவர்கள் அஞ்சினர்.
செங்கடலில் உள்ள சூடானின் முக்கிய துறைமுகமான போர்ட் சூடானிலும், மற்றும் கார்ட்டூமிற்குச் செல்லும் சாலைகளிலும் அவர்கள் அதிகரித்தளவில் மறியல் போராட்டத்தில் இறங்கியமை, தலைநகரில் எண்ணெய் உள்ளிட்ட அடிப்படை பொருட்களின் கடும் தட்டுப்பாட்டை விளைவித்தது. சுதந்திரம் மற்றும் மாற்றத்திற்கான படைகளின் தலைவர்கள், இனப் பிளவுகளை விதைப்பதற்காக இராணுவம் முற்றுகைப் போராட்டங்களை ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டினர். கடந்த மாதம், ஆட்சியைக் கவிழ்க்க இராணுவம் தீவிரமாக முயன்றது திங்கட்கிழமை ஆட்சிக்கவிழ்ப்புக்கான ஒரு ஒத்திகையாக பார்க்கப்பட்டது. இது சிவில் அரசாங்கத்தை தூக்கியெறிய அழைப்பு விடுத்து தலைநகரில் இராணுவ-சார்பு ஆர்ப்பாட்டங்களை தூண்டியது, அப்போது கார்ட்டூமிற்கு வெளியே இருந்து ஏராளமானோர் வந்து குவிந்தனர், மற்றும் பாதுகாப்புப் படையினர் அரசாங்க கட்டிடங்களைப் பாதுகாத்தனர் மற்றும் ஊழியர்கள் மீண்டும் வேலைக்கு திரும்ப வைக்கப்பட்டனர்.
அல்-புர்ஹானின் ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கை, சர்வதேச நாணய நிதியத்தின் அரசியல் மற்றும் பொருளாதார கோரிக்கைகளை சூடான் தொடர்ந்து கடைபிடிக்குமாறு கோருவதற்கு Horn of Africa வுக்கான அமெரிக்கத் தூதர் ஜெஃப்ரி ஃபெல்ட்மேன் கார்ட்டூமுக்கு விஜயம் செய்த மறு தினத்தன்று எடுக்கப்பட்டது. வாஷிங்டனின் முதன்மையான அக்கறை என்னவென்றால், பிராந்தியம் முழுவதும் பெருகிவரும் ஒரேமாதிரியான சமூக பதட்டங்கள், தமது சொந்த தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழை விவசாயிகளுக்கு பயப்படும் அதன் நட்பு நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் எகிப்துக்கு பரவாமல் இருப்பதை உறுதிசெய்வதாகும். மூலோபாய ரீதியாக Horn of Africa வில் அமைந்துள்ள சூடானில் ஸ்திரமின்மையை அமெரிக்காவும் ஐரோப்பாவும் கடைசியாக விரும்புகின்றன, மற்றொருபுறம் செங்கடலும் மற்றும் பிராந்தியத்தின் பெரும்பகுதி எண்ணெய் தடங்களைக் கொண்டுள்ள சூயஸ் கால்வாயும் அமைந்துள்ளது, மற்றும் ஐரோப்பாவை நோக்கி ஏராளமான அகதிகள் அலையென பயணிக்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையும் அரபு லீக் உம் இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி குறித்து “ஆழ்ந்த அக்கறையுடன்” இருப்பதாகக் கூறி, 2019 ஒப்பந்தத்தை மதிக்கும்படி “அனைத்து தரப்பையும்” அழைக்கின்றன. தற்போது சூடானின் தலைமையில் இயங்கும் முக்கிய பிராந்திய அமைப்பான, அபிவிருத்தி குறித்த அரசாங்கங்களுக்கு இடையேயான சங்கம் (Inter-Governmental Association on Development-IGAD) இந்த ஆட்சிக்கவிழ்ப்பைக் கண்டித்தது. அவர்களின் அறிக்கைகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்டனங்களைத் தொடர்ந்து வெளிவந்தன, அத்துடன் வாஷிங்டன் சூடான் இராணுவம் உடனடியாக சிவிலியன் தலைவர்களை விடுவிக்கவும், இடைக்கால அரசாங்கத்தை மீட்டெடுக்கவும் கோருவதுடன், அந்நாட்டிற்கு வழங்கும் 700 மில்லியன் டாலர் உதவித் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
எகிப்தின் ஜனாதிபதி அப்தல் பத்தாஹ் எல்-சிசி இன் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக தளபதிகள் நம்புகின்றனர். வறட்சி ஏற்பட்டால் சூடான் மற்றும் எகிப்துக்கு நீர் பாய்வதை கட்டுப்படுத்தக்கூடிய வகையில் நைல் நதியில் அமைந்துள்ள மாபெரும் எத்தியோப்பிய மறுமலர்ச்சி அணையை (Grand Ethiopian Renaissance Dam) நிரப்பி மின்சார உற்பத்தியைத் தொடங்குவதற்கான எத்தியோப்பிய அரசாங்கத்தின் திட்டங்களை எதிர்க்கும் ஒரு அரசாங்கம் தான் கார்ட்டூமில் இருக்க வேண்டும் என கெய்ரோ விரும்புகிறது. ஆனால், புர்ஹானின் ஆட்சியை வெளிப்படையாக ஆதரிப்பதை எல்-சிசி தவிர்த்துவிட்டார். எகிப்திய வெளியுறவு அமைச்சர் சமேஹ் ஷோக்ரி தனது நாட்டின் “இருத்தலுக்கான அச்சுறுத்தல்” என்று விவரித்த நெருக்கடிக்கு தீர்வு காண பேச்சுவார்த்தைகள் நடக்கையில் பதட்டங்கள் அதிகரித்து ஸ்தம்பிக்கச் செய்துள்ளன.
ஊழல், வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மை ஆகியவற்றுக்கு எதிராக அல்ஜீரியா, துனிசியா, லெபனான் மற்றும் ஈரானில் ஆர்ப்பாட்டங்களும் வேலைநிறுத்தங்களும் நடப்பது உட்பட, அல்-புர்ஹானின் ஆட்சி அபகரிப்புக்கான தொழிலாளர்களின் எதிர்ப்பு, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா முழுவதும் வளர்ந்து வரும் போர்க்குணத்தின் மத்தியில் நடக்கிறது.
சூடானில் ஜனநாயக ஆட்சியை ஸ்தாபிப்பதற்கான ஒரே வழி, முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் பரந்த சர்வதேசப் போராட்டத்தின் பின்னணியில், ஆட்சியின் முறைகேடாகச் சம்பாதிக்கப்பட்ட செல்வத்தை அபகரிப்பதற்கும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் தாராளவாத மற்றும் போலி-இடது சக்திகளுக்கு எதிராக சுயாதீனமாக தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் போராட்டம் நடத்தப்படுவதாகும்.
மேலும் படிக்க
- தொற்றுநோயால் தூண்டப்பட்ட பூகோள அளவில் அதிகரித்துவரும் பசி மற்றும் சமூக நெருக்கடிக்கு மத்தியில் மே மாதத்தில் உணவு விலைகள் 40 சதவிகிதம் அதிகரிப்பு
- உலகளவில் உணவு விலைகளின் உயர்வு சமூக அமைதியின்மையைத் தூண்டக்கூடும் என்று ஐ.நா எச்சரிக்கிறது
- டைக்ரேயில் மோதல் அதிகரிக்கையில், எத்தியோப்பியா உள்நாட்டு போருக்குள் செல்கிறது