அமெரிக்காவால் பயிற்சி பெற்ற ஆப்கானிஸ்தான் உளவுத்துறை முகவர்களும் விஷேட பயிற்சிபெற்ற துருப்புக்களும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேருவதாக கூறப்படுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

20 ஆண்டுகால ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பின் போது சிஐஏ மற்றும் பென்டகனால் பயிற்சி பெற்ற புலனாய்வு முகவர்களும் விஷேட பயிற்சிபெற்ற கிளர்ச்சி எதிர்ப்புத் துருப்புகளும் இஸ்லாமிக் அரசு-கோர்சானில் (Islamic State-Khorsan - ISIS-K) இணைவதாகக் கூறப்படுகிறது.

பெயரிடப்படாத தலிபான் தலைவர்கள், வெளியேற்றப்பட்ட அமெரிக்க கைப்பாவை ஆட்சியின் அதிகாரிகள் மற்றும் குழுவில் இணைந்துள்ள முகவர்கள் மற்றும் படையினரை அறிந்தவர்கள் ஆகியோரை மேற்கோள் காட்டி, ISIS-K க்குள் இந்த அமெரிக்க பயிற்சி பெற்ற படைகளின் ஊடுருவலைப் பற்றி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இந்த வாரம் செய்தி வெளியிட்டுள்ளது.

நவம்பர் 1 அன்று Foreign Policy க்கு அளித்த பேட்டியில், அமெரிக்க ஆதரவு ஆப்கானிய ஆட்சியின் உளவு அமைப்பான தேசிய பாதுகாப்பு இயக்குநரகத்தின் (NDS) முன்னாள் தலைவரான ரஹ்மத்துல்லா நபில் இதேபோன்ற நிகழ்வைப்பற்றி அறிவித்தார்: “ஆப்கானிய தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புப் படைகளால் [ANDSF] கைவிடப்பட்டவர்கள், சில பாதுகாப்பிற்காக, இஸ்லாமிய அரசை தங்களுக்கு ஒரு சிறந்த தளமாக அவர்கள் பார்க்கிறார்கள் என்று பல்வேறு பகுதிகளில் இருந்து எனக்கு அறிக்கைகள் வருகின்றன. இஸ்லாமிக் அரசு அவர்களை ஏற்றுக்கொள்கிறது என்று நான் நினைக்கிறேன்”.

ஆப்கானிஸ்தானின் முன்னாள் தேசிய இராணுவ பயிற்சிக்கல்லூரி (NATO)

'முக்கியமாக, இந்த புதிய ஆட்சேர்ப்புகள் இஸ்லாமிய அரசுக்கு உளவுத்துறை சேகரிப்பு மற்றும் போர் நுட்பங்களில் முக்கியமான நிபுணத்துவத்தை கொண்டு வருகின்றன. இது தலிபான் மேலாதிக்கத்தை எதிர்த்துப் போட்டியிடும் தீவிரவாத அமைப்பின் திறனை வலுப்படுத்தும்' என்று ஜேர்னல் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தலிபான் அரசாங்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் ISIS-K, பொதுமக்கள் இலக்குகளுக்கு எதிராக பயங்கரவாத குண்டுவெடிப்புகளின் கொடூரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. செவ்வாயன்று, ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் உள்ள மிகப் பெரிய மருத்துவமனையான சர்தார் முகமது தாவுத்கான் மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு அது பொறுப்பேற்றுள்ளது. இத்தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு டஜன் பேர் காயமடைந்தனர். தாக்குதலில் காயமடைந்த பல தலிபான் ஆயுததாரிகளை அவர்களின் மருத்துவமனை படுக்கைகளில் சுட்டுக் கொன்றனர், துப்பாக்கிதாரிகளின் ஒரு தற்கொலை குண்டுத் தாக்குதல் மற்றும் மருத்துவமனை மீதான தாக்குதலும் இதில் அடங்கும்.

இந்த சமீபத்திய தாக்குதல், தெற்கில் காந்தஹார் மற்றும் வடக்கில் குண்டுஸ் ஆகிய இடங்களில் 100க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்ற தற்கொலைக் குண்டுகளைத் தொடர்ந்து நிகழ்ந்துள்ளது. இரண்டு நகரங்களிலும் அதன் இலக்குகள் ஷியா மசூதிகளில் பிரார்த்தனை நிகழ்வுகளாக இருந்தன. குண்டூஸில் தாக்குதல் நடத்தியவர் ஆப்கானிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ள சீனாவின் மேற்கு ஜின்ஜியாங் மாகாணத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட வீகர் இனத்தவர் என ISIS-K அடையாளம் கண்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கடந்தகால வரலாறு மற்றும் ஐஎஸ்ஐஎஸ் இன் தோற்றத்திற்கான சிஐஏ இன் நெருக்கமான தொடர்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பார்த்தால், இந்த இரத்தக்களரி பிரச்சாரம் ஆப்கானிஸ்தானை ஸ்திரமின்மைக்கு உட்படுத்தும் நோக்கத்துடன் வாஷிங்டனால் ஆதரிக்கப்படுகிறதா மற்றும் அதன் கட்டுப்பாட்டில் கீழ் இல்லாத எந்த ஆட்சியும் தோன்றுவதைத் தடுக்கிறதா என்று கேட்பதற்கு அனைத்து காரணங்களும் உள்ளன.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆயுதத் தலையீடு 40 ஆண்டுகளுக்கு முன்பு 'Operation Cyclone' மூலம் தொடங்கியது. இதில் வாஷிங்டன் -அதன் நட்பு நாடுகளான சவுதி அரேபியா மற்றும் பாக்கிஸ்தானுடன் சேர்ந்து- காபூலில் சோவியத் ஆதரவு அரசாங்கத்திற்கு எதிரான போரில் இஸ்லாமிய முஜாகிதீன் ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதம் மற்றும் நிதியுதவி அளித்தது. சிஐஏ ஆல் முன்னொருபோதும் நடாத்தப்படாத இந்த மிகப்பெரிய நடவடிக்கையானது ஒரு உள்நாட்டுப் போரைத் தூண்டி, அது இறுதியில் மில்லியன் கணக்கான உயிர்களைக் கொன்றது. இது சிஐஏ உடன் கூட்டுச் சேர்ந்த அல்கொய்தா மற்றும் வாஷிங்டன் ஆரம்பத்தில் ஆதரித்த, 1996 இல் அதிகாரத்திற்கு வந்த தலிபான் ஆகிய இரண்டையும் உருவாக்கியது.

அக்டோபர் 2001 இல், நியூயோர்க் நகரம் மற்றும் வாஷிங்டன் மீதான 9/11 தாக்குதல்களுக்கு அல் கொய்தா மீது குற்றம் சாட்டப்பட்டு அதற்கு பதிலடி கொடுக்கும் சாக்குப்போக்கில் அமெரிக்கா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது. இது இரண்டு தசாப்த கால ஆக்கிரமிப்பின் தொடக்கமாகும், இதில் சுமார் 800,000 அமெரிக்க துருப்புக்கள் நான்கு ஜனாதிபதிகளின் கீழ் பங்கேற்று, 2 டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமான செலவில் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் மற்றும் நூறாயிரக்கணக்கான ஆப்கானியர்களின் இறப்பிற்கும் மற்றும் ஊனமடைவதற்கு வழிவகுத்தது.

2003 ஈராக் மீதான இன்னும் இரத்தம் தோய்ந்த படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்புக்கான சாக்குப்போக்காகவும் இருந்த இந்த 'பயங்கரவாதத்தின் மீதான உலகளாவிய போரின்' ஒரு தசாப்தத்தில், ஒபாமா நிர்வாகம் லிபியா மற்றும் சிரியாவில் புதிய போர்களை தொடங்கியது. இந்த இரண்டு போர்களிலும், வாஷிங்டன் அல் கொய்தாவிற்கு எதிரான அதன் உலகளாவிய சிலுவைப் போரில் இருந்து விலகி, முயம்மர் கடாபியின் லிபிய அரசாங்கத்தை வீழ்த்துவதற்கும், சிரியாவின் பஷார் அல்- அசாத்தை வீழ்த்துவதற்கும் அல் கொய்தாவுடன் தொடர்புடைய இஸ்லாமிய ஆயுதக்குழுக்களுக்கு ஆதரவு, நிதி மற்றும் ஆயுதம் வழங்குவதற்கு மாறியது.

2014 இல், புலனாய்வுப் பத்திரிகையாளர் சீமோர் ஹெர்ஷ், லிபியாவின் கிழக்கு துறைமுக நகரமான பெங்காசியிலிருந்து தெற்கு துருக்கி வழியாக சிரியாவிற்கும் சிஐஏ 'கடத்தல் பாதை' இருப்பதை அம்பலப்படுத்தினார். இது அமெரிக்க ஆதரவுடன் ஆட்சி மாற்றத்திற்கான போரை நடத்த ஆயுதங்கள் மற்றும் வெளிநாட்டு ஆயுதக்குழுக்களைக் கடத்த பயன்படுத்தப்பட்டது.

ஈராக்கிய ஷியா ஆயுதக்குழுக்கள் சிரிய அரசாங்கப் படைகள் மற்றும் அமெரிக்க ஆதரவு பெற்ற குர்திஷ் ஆயுதக்குழுக்களுடன் இணைந்து அமெரிக்க இராணுவத்தால் ஐஎஸ்ஐஎஸ் பின்வாங்க செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்குள் இதேபோன்ற 'கடத்தல் பாதை' உருவாக்கப்பட்டது என்பதற்கான வலுவான அறிகுறிகள் உள்ளன.

ஜூன் மாதம் ஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை, சீனாவின் ஜின்ஜியாங்கில் வீகர் அரசைக் கட்டமைக்க அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இஸ்லாமிய பிரிவினைவாதக் குழுவான கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் (ETIM) 'அங்கு மிகப் பெரிய எண்ணிக்கையில் உறுப்பினர்களை கொண்டுள்ள சிரிய அரபுக் குடியரசிற்கும் ஆப்கானிஸ்தானில் அதன் போர் வலிமையை வலுப்படுத்தவும் ஆயுதக்குழுக்களை நகர்த்துவதற்கான பாதைகளை நிறுவியுள்ளது. மற்றும் 'ஆப்கானிஸ்தானில் இருந்து சீனாவிற்கு ஆயுதக் குழுக்களின் நகர்வை எளிதாக்கவும் உதவும்.' என அறிவித்துள்ளது.

கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் (ETIM) தலிபான் அரசாங்கத்திற்கு எதிராக ISIS-K உடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கமும் (ETIM) மற்றும் பிற 'வெளிநாட்டுப் ஆயுதக் குழுக்களும்' எப்படி அமெரிக்கா மற்றும் நேட்டோவால் ஆக்கிரமிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்குள் 'பாதைகளை நிறுவ முடிந்தது' என்பதை ஐ.நா. அறிக்கை விளக்கவில்லை.

ISIS-K அமெரிக்காவால் உருவாக்கப்பட்டது என்று குற்றம் சாட்டுபவர்களில் 2001 முதல் 2014 வரை காபூல் ஆட்சியில் ஜனாதிபதியாக இருந்த வாஷிங்டனின் நீண்டகால கைப்பாவையான ஹமீத் கர்சாய் உள்ளடங்குகிறார். 2017 இல், அவர் அல் ஜசீராவிடம், “என் பார்வையில், அமெரிக்காவின் முழு பிரசன்னம், கண்காணிப்பு, இராணுவ, அரசியல், உளவுத்துறையினால் Daesh [ISIS என்பதன் அரபு சுருக்கம்] உருவாகியுள்ளது. இரண்டு ஆண்டுகளாக, ஆப்கானிஸ்தான் மக்கள் வந்து, தங்கள் துன்பங்கள், மீறல்கள் பற்றி உரத்த குரலில் அழுதனர். எதுவும் செய்யப்படவில்லை” எனக் கூறினார்.

அதே காலகட்டத்தில், கர்சாய் Voice of America விடம் கூறினார்: 'நான் Daesh இனை [அமெரிக்காவின்] கைக்கருவியாக கருதுகிறேன்.' அவர் மேலும் கூறுகையில், 'நான் Daesh இனையும் அமெரிக்காவினையும் வேறுபடுத்தி பார்க்கவில்லை' என்றார்.

ISIS-K ஆக்கிரமித்துள்ள பகுதிகளுக்குள் அடையாளம் தெரியாத ஹெலிகாப்டர்கள் ஆயுதங்கள் மற்றும் பொருட்களை வினியோகிப்பதாக ஆப்கானிஸ்தானில் இருந்து பல தகவல்கள் வந்திருந்தன. அப்போது, அமெரிக்காவும் நேட்டோவும் ஆப்கானிஸ்தானின் வான்வெளியை முழுக் கட்டுப்பாட்டி வைத்திருந்தன.

அதன் பங்கிற்கு, தலிபான் சமீபத்திய பயங்கரவாத குண்டுவெடிப்புகளில் 'வெளிநாட்டு கை' இருப்பதாக குற்றம்சாட்டி, ஐஎஸ்ஐஎஸ் இற்கு எதிராக போரிடுவதில் ஒத்துழைப்பதற்கான அமெரிக்க முன்மொழிவுகளை நிராகரித்து, அக்குழு அமெரிக்க ஆதரவுடன் வளர்ந்ததாக குற்றம் சாட்டியுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் இல் இணைந்த முன்னாள் உளவுத்துறை முகவர்கள் மற்றும் சிறப்புப் படைத் துருப்புக்களைத் தவிர, இரவுத் தாக்குதல்கள், படுகொலைகள் மற்றும் பிற போர்க்குற்றங்களைச் செய்து, CIA இன் மேற்பார்வையின் கீழ் இயங்கிய பூஜ்ஜிய பிரிவுகள் (Zero units) என்று அழைக்கப்படும் ஆயிரக்கணக்கான கமாண்டோக்களை ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேற்றியது. இது ஆப்கானிஸ்தானில் ஒரு புதிய உள்நாட்டுப் போரைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தலையீட்டிற்கான ஆட்சேர்ப்புக் குழுவை அமெரிக்க உளவுத்துறை அமைப்பிற்கு வழங்குகிறது.

வாஷிங்டன் 20 ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்த நாட்டில் அதிகபட்ச உறுதியற்ற தன்மையையும் எழுச்சியையும் தூண்டுவதை நோக்கமாகக் கொண்ட கொள்கையை பின்பற்றுகிறது. அமெரிக்க நிதி நிறுவனங்களின் கையிருப்பிலுள்ள 10 பில்லியன் டாலர்கள் தலிபான் அரசாங்கத்திற்கு கிடைப்பதை மறுத்துவிட்டது. மேலும் ஆப்கானிய அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டத்தில் 80 சதவீதமாக இருந்த அதன் அனைத்து உதவிகளையும் நிறுத்திவிட்டது. இதன் விளைவாக பொருளாதாரச் சரிவு மற்றும் நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் அங்குள்ள வெளிநாட்டு உதவிக் குழுக்களை முடங்கியுள்ளன. இதனால் மூன்று ஆப்கானியர்களில் ஒருவர் என்ற விகிதத்திலுள்ள 14 மில்லியன் மக்கள் பட்டினியின் விளிம்பில் இருப்பதாகவும், மேலும் குளிர்காலம் நெருங்கி வருவதால் பஞ்சத்தின் மோசமான அச்சுறுத்தல் நெருங்கி வருவதாகவும் உலக வங்கி தெரிவிக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆப்கானிஸ்தானை சீனா மற்றும் ரஷ்யாவுடனான 'பெரும் சக்தி' மோதலை மையமாகக் கொண்ட அதன் அறிவிக்கப்பட்ட இராணுவ மூலோபாய பட்டகம் மூலம் பார்க்கிறது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Zbigniew Brzezinski 1970கள் மற்றும் 1980 களில் CIA திட்டமிட்ட முஜாஹிதீன் போரை சோவியத் ஒன்றியத்திற்கு அதன் 'சொந்த வியட்நாமை' வழங்குவதற்கான வழிமுறையாக ஊக்குவித்தது போல், இன்று சீர்குலைந்திருக்கும் ஆப்கானிஸ்தானை, மத்திய ஆசியாவில் சீனாவினதும் ரஷ்யாவினதும் நலன்களை கீழறுப்பதற்கான ஒரு கருவியாக வாஷிங்டன் காண்பதுடன், இரு நாடுகளுக்கு எதிராகவும் பயங்கரவாதப் பிரச்சாரங்களை தூண்டுகின்றது.

ஆகஸ்ட் 29, 2021 அன்று அமெரிக்க ட்ரோன் தாக்குதலுக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள அஹ்மதி குடும்பத்தினரின் வீடு. (AP Photo/Khwaja Tawfiq Sediqi)

இதற்கிடையில், பென்டகன் புதன்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டது. ஆகஸ்ட் 29 அன்று காபூலில் நடந்த வான்வழித் தாக்குதலில் ஒரு மேற்கத்திய மனிதாபிமான அமைப்பின் ஊழியர் மற்றும் ஏழு குழந்தைகள் உட்பட 10 அப்பாவி ஆப்கானியர்கள் கொல்லப்பட்டதிலிருந்து அமெரிக்க இராணுவம் விடுவிக்கப்பட்டதாக அறிவித்தது. ஆரம்பத்தில் அமெரிக்க இராணுவம், நான்கு ISIS-K குண்டுவீச்சாளர்களை கொன்றதாக கூறியது.

அந்த அறிக்கை 'சட்டம் அல்லது போர்ச்சட்ட மீறல்கள்' காணப்படவில்லை, மாறாக பலர் ஈடுபட்டுள்ள 'ஒரு நிலைமுறிவு நிகழ்வின் மோசமடைந்த நிலமை' என்றது. இந்த ட்ரோன் ஏவுகணை படுகொலையை ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் 13 அமெரிக்க படையினர்களைக் கொன்றது மற்றும் ஏராளமான ஆப்கானிய குடிமக்கள் கொல்லப்பட்டதன் பின்னணியில் பார்க்க வேண்டும் என்று அது வலியுறுத்தியது. இந்த தாக்குதலை அடுத்து, அமெரிக்காவிடம் ஒரு பழிவாங்கும் முனைப்பு ஏற்பட்டது.

இந்த பென்டகன் அறிக்கை, ஆப்கானிஸ்தானில் 'பயங்கரவாதிகள்' என்று கூறப்படுபவர்களுக்கு எதிரான அமெரிக்க இராணுவத்தின் 'வான்வெளிக்கு அப்பாற்பட்ட' நடவடிக்கைகளின் போர்வையின் கீழ் இத்தகைய படுகொலைகள் தொடரும் என்ற ஒரு கொடிய எச்சரிக்கையாகும். நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான ஆப்கானிய மக்களின் துன்பகரமான மோதல் இன்னும் முடியவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.