மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஜேர்மனியைப் போல வேறு எந்தவொரு நாடும் தற்போது கோவிட்-19 நோய்தொற்றுக்களின் விரைவான அதிகரிப்பை பதிவு செய்யவில்லை. திங்கட்கிழமை, ஏழு நாள் நிகழ்வு வீதம் 100,000 குடியிருப்பாளர்களில் 201 நோய்தொற்றுக்கள் என்றளவிற்கு உச்சபட்சமாக இருப்பதாக ராபர்ட் கோச் நிறுவனம் (RKI) பதிவு செய்தது, இது டிசம்பர் 22, 2020 அன்று பதிவான முன்னைய உச்சபட்ச எண்ணிக்கையை விஞ்சியது. அதுவே செவ்வாய்க்கிழமை, 100,000 குடியிருப்பாளர்களில் 214 நோய்தொற்றுக்கள் என அதிகரித்துவிட்டது. திங்களன்று அங்கு 20,800 கோவிட்-19 நோய்தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டன, தொடர்ந்து செவ்வாயன்று 26,622 ஆக அது அதிகரித்தது.
ஜேர்மனியின் 16 மாநிலங்களில் சாக்சோனியில் 491, துருங்கியாவில் 427, மற்றும் பவேரியாவில் 316 என்றளவிற்கு உச்சபட்ச ஏழு நாள் நிகழ்வு வீதங்கள் உள்ளன. Sachsische Schweiz/Ost-Ergebirge போன்ற மாவட்டங்கள் ஏற்கனவே 1,000 க்கும் அதிகமான நிகழ்வு வீதத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றன, அதாவது தற்போதைய நிகழ்வு வீதம் கடந்த ஏழு நாட்களில் 100,000 குடியிருப்பாளர்களுக்கு 924 நோய்தொற்றுக்கள் என உள்ளது. இதன் பொருள் கடந்த வாரத்தில் அங்கு வசிக்கும் 100 குடியிருப்பாளர்களில் ஒருவருக்கு கோவிட்-19 நோய்தொற்று பாதிப்பு இருந்தது. ஷெல்ஸ்விக்-ஹோல்ஸ்டீனில் 75 மற்றும் பிரெமனில் 89 என இந்த இரண்டு கூட்டாட்சி மாநிலங்களில் மட்டும் 100,000 பேருக்கு 100 நோய்தொற்றுக்களுக்கு குறைவாக நிகழ்வு வீதங்கள் இருந்தன.
செப்டம்பர் தொடக்கத்தில் கடுமையான நடவடிக்கைகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான அளவுகோலாக நிகழ்வு வீதம் 50 என இருந்ததை அரசாங்கம் இரத்து செய்ததிலிருந்து, தொற்றுக்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வந்துள்ளது. ஆனால் கடந்த மூன்று வாரங்களாக நோய்தொற்றுக்கள் உண்மையிலேயே வெடித்து பரவியுள்ளன. அதிகரித்த தொற்று விகிதங்களை காட்டும் அனைத்து வரைபடங்களும் விகிதங்கள் ஒரே மாதிரி செங்குத்தாக மேல்நோக்கிச் செல்வதையே காட்டுகின்றன. தொற்றுநோய் தினசரி இறப்புக்களை உச்சபட்சமாக அதிகரித்ததற்கு சற்று முன்னதாக, கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் நேரத்தில் கடைசியாக பதிவான உச்சபட்ச தொற்றுக்களின் அளவிற்கு தற்போது ஒவ்வொரு நாளும் சராசரியாக 24,000 பேர் பாதிக்கப்படுகின்றனர்.
உலக அளவில் கால் பில்லியன் மக்கள் கோவிட்-19 நோய்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் உத்தியோகபூர்வமாக 5 மில்லியனுக்கும் அதிகமானோர், உத்தியோகபூர்வமற்ற வகையில் 17 மில்லியனுக்கு நெருக்கமானோர் இறந்துள்ளனர். Worldometers இணைய தளத்தின்படி, ஜேர்மனியில் 97,073 இறப்புக்கள் உத்தியோகபூர்வமாக பதிவாகியுள்ளன. மேலும் தற்போதைய இறப்பு விகிதத்தில், இந்த எண்ணிக்கை விரைவில் 100,000 ஐ தாண்டும்.
பல தீவிர சிகிச்சைப் பிரிவுகள் ஏற்கனவே மீண்டும் நிரம்பி வழிகின்றன. இந்த வாரம் தொடக்கத்தில், 2,532 தீவிர சிகிச்சை நோயாளிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளதுடன், தற்போது 1,280 நோயாளிகள் செயற்கை சுவாச உதவியில் உள்ளனர். Divi தீவிர சிகிச்சை பதிவேட்டின் விஞ்ஞான இயக்குநர் பேராசிரியர் கிறிஸ்டியன் கராகியான்னிடிஸ், தேசியளவில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் 90 சதவீத திறனை நெருங்குவதாக WDR பொது தொலைக்காட்சியில் திங்களன்று எச்சரித்தார்.
மன்ஸ்டர் பல்கலைக்கழக மருத்துவமனையின் பராமரிப்பு இயக்குநர் தோமஸ் வான் டென் ஹூவன் திங்களன்று தெரிவித்தபடி, வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் (NRW) நிலைமை தற்போது கவலைக்கிடமாக உள்ளது. அடுத்த சில வாரங்களை கவலைக்குரிய காலமாக பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். NRW இல் தற்போது 640 இலவச தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளை மட்டுமே கோவிட்-19 நோயாளிகளுக்கு பயன்படுத்த முடியும். மேலும், சுகாதாரப் பணியாளர்களும் சோர்வடைந்துவிட்டதுடன், அவர்களின் திறனின் விளிம்பில் உள்ளனர் என்றும் கூறினார்.
கடந்த ஆண்டைப் போலவே, முதியோர் இல்லங்கள் மீண்டும் மரணப் பொறிகளாக மாறி வருகின்றன. கடந்த வாரத்தில் மட்டும் முதியோர் பராமரிப்பு இல்லங்களில் 135 தீவிர நோய்தொற்று வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக RKI தெரிவித்துள்ளது.
பணியிடங்களிலும் நோய்தொற்று வெடிப்புக்கள் அதிகரித்து வருகின்றன, இருப்பினும் பல பெரும் நிறுவனங்களும் மற்றும் நிறுவனங்களும் இது தொடர்பான அனைத்து தகவல்களையும் முறையாக மூடிமறைக்கின்றன, மேலும் ஊடகங்கள் இந்த பிரச்சினையை பெரிதும் புறக்கணிக்கின்றன.
ஒரு தீயணைப்புத்துறை சஞ்சிகை அத்தகைய வெடிப்புக்கான உதாரணத்தைப் பற்றி அறிக்கை செய்தது. கடந்த செவ்வாய்க்கிழமை காலை ஸ்டெல்லிங்கனில் உள்ள ஹாம்பர்க் தீயணைப்பு நிலையத்தில், மாற்றுப்பணி நேரம் தொடங்குவதற்கு முன்னர் நடத்தப்பட்ட ஒரு வழமையான சுற்று விரைவு பரிசோதனையில் அனைத்து சக ஊழியர்களுக்கும் நோய்தொற்று இல்லை என்பது உறுதியானது. இருப்பினும், பகலில், ஒரு சக ஊழியர் தனது குடும்பத்தில் ஒருவருக்கு நோய்தொற்று இருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்ததால், ஒட்டுமொத்த குழுவுக்கும் PCR பரிசோதனை எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டது. அன்று மாலைக்குள், 31 ஆண்களில் 12 பேருக்கு குறையாமல் நோய்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
சில்ட்டில் உள்ள ஒரு கட்டுமான தளத்தில் 12 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டது. மேலும், லோயர் சாக்சோனியில் உள்ள பல இறைச்சிக் கூடங்களில் கடந்த சில வாரங்களில் ஏராளமான நோய்தொற்று வெடிப்புக்கள் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
க்ளோப்பன்பர்க் மாவட்டத்தில், அக்டோபர் மாத இறுதியில் 100,000 பேருக்கு 200 நோய்தொற்றுக்கள் என்றளவிற்கு நிகழ்வு வீதம் அதிகரித்தது. லோயர் சாக்சோனியில் அதிக நிகழ்வு விகிதங்களைக் கொண்ட மாவட்டத்தில், மருத்துவமனைகள் அவற்றின் திறனைத் தாண்டி இயங்குகின்றன. துல்லியமான விபரங்கள் எதுவும் தெரிவிக்காமல், மாவட்ட நிர்வாகம், “குறிப்பாக பெரும் எண்ணிக்கையிலான கிழக்கு ஐரோப்பிய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்று தெரிவிக்கிறது, உதாரணமாக “காரெல், எசென் மற்றும் எம்ஸ்டெக் ஆகிய இடங்களில் உள்ள இறைச்சிக் கூடங்களிலும், மேலும் காய்கறி பண்ணைகளிலும் உள்ள தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்கிறது. கடந்த கோடையில் இறைச்சி பொதியிடும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட பாரிய வெடிப்புக்களிலிருந்து பொறுப்புக்குரிய அதிகாரிகள் எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
எல்லா இடங்களிலும் குறிப்பாக குழந்தைகளும் இளைஞர்களும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக பாதுகாக்கப்பட வேண்டிய இந்த குழுக்களிடையே நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
பிராண்டன்பர்க்கில் உள்ள எல்பே-எல்ஸ்டர் மாவட்டம் மிகுந்த ஆபத்துள்ள கோவிட்-19 மையங்களில் ஒன்றாகும் என News4Teachers கூறியுள்ளது, இங்கு நோய்தொற்று பரவும் வீதம் 100,000 பேருக்கு 615 ஆக உள்ளது. 5 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையேயான நோய்தொற்று நிகழ்வுகள் நம்பமுடியாத அளவிற்கு 2,421 ஆக உள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மாவட்டத்தில் வசிக்கும் குழந்தைகளில் 40 பேருக்கு ஒருவர் வீதம் கடந்த வாரம் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் 100 க்கும் மேற்பட்ட புதிய கோவிட்-19 நோய்தொற்றுக்கள் பதிவாகின்ற நிலையில் கேள்விக்குரிய சுகாதாரத் துறை, நோய்தொற்றாளர்களுடன் தொடர்பில் இருப்பவர்களைக் கண்காணிப்பதை நிறுத்திவிட்டது. இவையனைத்தும் ஒருபுறமிருக்க, பள்ளிகளும் பகல் நேர குழந்தை பராமரிப்பு மையங்களும் தொடர்ந்து திறந்து வைக்கப்பட்டுள்ளன.
பள்ளிகளில் ஏற்படும் நோய்தொற்று வெடிப்புக்கள் பிராண்டன்பர்க்கில் நோய்தொற்று வீதத்தை அதிகரித்துள்ளன. கடந்த ஏழு நாட்களில் 100,000 பேருக்கு 227 நோய்தொற்றுக்கள் என்றளவிற்கு இது தற்போது உயர்ந்துள்ளது. பிராண்டன்பர்க்கில் உள்ள ஆசிரியர்களில், 124 பேர் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது முன்னைய வார எண்ணிக்கை 56 விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
அனைத்து கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் என்ன விலை கொடுத்தேனும் புதிய பூட்டுதலைத் தடுப்பதில் உறுதியாக உள்ளனர். “தேசியளவிலான தொற்றுநோய் அவசரநிலை” நவம்பர் 25 அன்று காலாவதியாகிறது. முன்பு பொதுமக்களுக்கு இலவசமாகக் கிடைத்த விரைவு பரிசோதனைகள் கடந்த மாதம் நிறுத்தப்பட்டது என்பதுடன், பள்ளிகளில் நடைமுறையில் இருந்த முகக்கவச கட்டுப்பாடுகளும் பெரும்பாலும் நீக்கப்பட்டுவிட்டன.
புதிய கூட்டாட்சி அரசாங்கத்தை அமைக்கவுள்ள சமூக ஜனநாயகக் கட்சி, சுதந்திர ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சி ஆகிய கட்சிகள் அடங்கிய “போக்குவரத்து விளக்கு” என்றழைக்கபடும் கூட்டணியைச் சேர்ந்த முன்னணி அரசியல்வாதிகள், தற்போது வெளியேறும் பெரும் கூட்டணியின் கொலைகார கோவிட்-19 கொள்கையை அப்படியே பின்தொடர தீர்மானித்துள்ளன. நிலையான பொது சுகாதார நடவடிக்கைகளையும் பூட்டுதல்களையும் அவர்கள் தீவிரமாக நிராகரித்துள்ளனர். பொது ஒளிபரப்பு நிறுவனமான ARD இன் Tagesschau நிகழ்ச்சியில் பசுமைக் கட்சியைச் சேர்ந்த Katrin Goring-Eckardt, “ஏராளமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில் சட்டபூர்வமாக முழுமையான பூட்டுதலை நீங்கள் செயல்படுத்த முடியாது” என்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
வரவிருக்கும் அரசாங்கத்திற்கு, நடைமுறையில் தடுப்பூசி திட்டம் மட்டும் தான் தொற்றுநோய்க்கு எதிரான ஒரே எதிர் நடவடிக்கையாக உள்ளது. இது பல காரணங்களின் அடிப்படையில் குற்றகரமானதாகும். முதலாவதாக, தற்போது 99 சதவீதத்திற்கு அதிகமான நோய்தொற்றுக்களுக்கு காரணமாக உள்ள டெல்டா மாறுபாட்டை தடுப்பூசியினால் மட்டும் கட்டுப்படுத்த முடியாது. இது, கோவிட்-19 இன் “காட்டு மாறுபாடு” என்றழைக்கப்படும் வைரஸ் வகையை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிக தொற்றும் தன்மையுள்ளதாகும். இரண்டாவதாக, மொத்த மக்கள்தொகையில் வெறும் 67 சதவீதத்தினருக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டுள்ள குறைந்த தடுப்பூசி விகிதம் காரணமாக, 12 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் உட்பட அண்ணளவாக 30 மில்லியன் மக்கள், வைரஸூக்கு எதிராக எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் உள்ளனர். மூன்றாவதாக, தடுப்பூசியை பிரத்யேகமாக நம்பியிருக்கும் ஒரு மூலோபாயம், வைரஸை வெடித்து பரவ அனுமதிக்கையில், புதிய, இன்னும் அதிக தொற்றும் தன்மை கொண்ட வைரஸ் பிறழ்வுகள் உருவாவதற்கான நிலைமைகளை உருவாக்குகிறது.
ஜேர்மனியின் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் பாரிய நோய்தொற்று குறித்து, மனித உயிர்களை விட இலாபத்திற்கே பாதுகாப்பளிக்கும் மற்றும் இலட்சக்கணக்கான மக்களின் ஆரோக்கியத்திற்கும் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் வீண் பிடிவாதமான கொள்கையையே பின்பற்றுகின்றன. நிர்வாகங்கள் வரம்பு மீறி செயலாற்றுவதாக சிடுமூஞ்சித்தனமான வாதத்தின் அடிப்படையில் மக்களைப் பாதுகாப்பதற்கான மிக அடிப்படையான நடவடிக்கைகள் கூட அகற்றப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டாக, பாடன்-வூட்டம்பேர்க் மாநிலம் கோவிட்-19 நோய்தொற்றுக்களைக் கண்காணிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டது. ஜேர்மன் மருத்துவ இதழான Arzteblatt, நவம்பர் 5 அன்று, “பாடன்-வூட்டெம்பேர்க்கில் கோவிட்-19 நோய்தொற்றுக்கள் உச்சபட்ச எண்ணிக்கையில் பரவுவதை கருத்தில் கொண்டால், சுகாதார அதிகாரிகள் இனி எதிர்காலத்தில் பெரும்பாலான பாதிக்கப்பட்ட நபர்களையும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் நேரடியாக அழைக்க மாட்டார்கள். நோய்தொற்றுக்குள்ளான ஒருவர் தமக்குத் தாமே கவனித்துக் கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. ‘ஒவ்வொரு நோயாளியையும் பராமரிப்பது’ என்று அழைக்கப்படுவது அதிகாரிகளை விடுவிப்பதற்காக ஒட்டுமொத்த தென்மேற்கு பகுதியிலும் நிறுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலைமைகளின் கீழ், கோவிட்-19 ஐ முற்றிலும் ஒழிப்பதற்கான முன்முயற்சியை கைப்பற்றுவதும், மேலும் அதற்கு விஞ்ஞான ரீதியாக தேவைப்படும் நடவடிக்கைகளை செயல்படுத்துவதும் தொழிலாள வர்க்கத்தின் பணியாகும். இதில், பாரிய தடுப்பூசி திட்டம், தொடர்பு தடமறிதல் மற்றும் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் உட்பட, கடுமையான பூட்டுதல் நடவடிக்கைகள் அடங்கும், எல்லாவற்றிற்கும் மேலாக, பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களையும், மற்றும் தொழிலாளர்களுக்கு முழு இழப்பீடு வழங்கி அத்தியாவசியமற்ற பணியிடங்களையும் மூடுவதும் அடங்கும்.
