மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
முக்கிய முதலாளித்துவ சக்திகள், ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரப் போரை தீவிரப்படுத்தி, அதன் வங்கி மற்றும் நிதிய அமைப்பை முடக்கி, அதன் பொருளாதாரத்தை செயலிழக்கச் செய்யும் நோக்கத்துடன் தொடர்ச்சியான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
ஐரோப்பிய ஆணையம், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, கனடா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுக் கூட்டம் சனிக்கிழமையன்று 'தேர்ந்தெடுக்கப்பட்ட' ரஷ்ய வங்கிகளை Swift சர்வதேச நிதிச் செய்தித்தொடர்பு அமைப்பிலிருந்து (international financial messaging system) துண்டித்து, ரஷ்ய மத்திய வங்கியின் வெளிநாட்டு செலாவணி நடவடிக்கைகளை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.
மத்திய வங்கியின் மீதான தடை என்பது, அதன் வெளிநாட்டு கையிருப்பு முற்றாக முடக்கப்பட்டுள்ளதை குறிக்கின்றது. கூட்டத்தின் முடிவில், 'ரஷ்யாவின் மத்திய வங்கியின் சொத்துக்களை முடக்குவோம்' என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லெயன் கூறினார்.
கூட்ட அறிக்கையின்படி, Swift எடுத்த நடவடிக்கைகள், இலக்கு வைக்கப்பட்ட வங்கிகள் 'சர்வதேச நிதிய அமைப்பில் இருந்து துண்டிக்கப்படுவதையும், உலகளவில் செயல்படும் அவற்றின் திறனுக்கு தீங்கு விளைவிப்பதையும்' உறுதி செய்யும் என தெரிவிக்கிறது.
இந்த புதிய நடவடிக்கைகளுக்கு இத்தாலி மற்றும் ஜேர்மனியின் எதிர்ப்புத் தெரிவித்த பின்னரே இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. இவை இரண்டும் இயற்கை எரிவாயு விநியோகத்திற்கு ரஷ்யாவை பெரிதும் சார்ந்துள்ளது. எரிபொருள் பரிவர்த்தனைகளுக்கு நிதியளிக்கும் முக்கியமான ரஷ்ய வங்கிகள் இலக்கு வைக்கப்படாது என ஒப்புக்கொள்ளப்பட்ட பின்னரே இந்த எதிர்ப்பு சமாளிக்கப்பட்டது.
கனடா மற்றும் இங்கிலாந்துடன் இணைந்து Swift தடைகளுக்கு அமெரிக்கா கடுமையாக அழுத்தம் கொடுத்தது. ஆனால் அவற்றை சுமத்துவது ஒரு 'கடினமான செயல்' என விவரிக்கப்பட்டது. ஏனெனில் ரஷ்யாவுடனான ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகம் 80 பில்லியன் யூரோக்களாகும். இது ஐக்கிய அமெரிக்காவினதை விட 10 மடங்கு அதிகமாகும்.
இந்த ஒப்பந்தம் பற்றிய வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் (WSJ) அறிக்கை, 'பைடென் நிர்வாக மூத்த அதிகாரியை' மேற்கோள் காட்டி, எரிசக்தி சந்தைகளில் ஏற்படும் இடையூறுகளை குறைக்கும் நோக்கில் ஒரு செயல்முறை தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறியது.
'பெரும்பாலான எரிபொருள் ஓட்டங்கள் எங்கு நிகழ்கின்றன, எந்த வங்கிகள் மூலம் அவை நிகழ்கின்றன என்பதை நாங்கள் அறிவோம்' என்று அந்த அதிகாரி WSJ இடம் கூறினார். 'நாங்கள் அந்த அணுகுமுறையை எடுத்துக் கொண்டால், பெரும்பாலான எரிபொருள் ஓட்டங்கள் இடம்பெறாத நிறுவனங்களை நாம் தேர்வு செய்யலாம்.' தடை அனுமதிக்கப்படாதவற்றில் எண்ணெய் மற்றும் எரிவாயு சம்பந்தப்பட்ட நிதி பரிவர்த்தனைகளுக்கான முக்கிய ஊடகமான ரஷ்யாவின் மூன்றாவது பெரிய காஸ்ப்ரோம் பாங்க் (Gazprombank) உள்ளது.
WSJ அறிக்கையின்படி: 'அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள் உட்பட பரந்த அளவிலான பொருளாதாரங்களின் ஒருங்கிணைந்த மற்றும் மேலதிக அழுத்த பிரச்சாரத்திற்கான அரசியல் ஆதரவைப் பெறுவதற்கு இவ்விதிவிலக்குகள் முக்கியமானவை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.' ஐரோப்பிய ஒன்றிய முடிவுகள் ஒருமனதாக இருக்க வேண்டும் என்பதால், ஜேர்மனிய ஆட்சேபனைகள் நிறைவேற்றப்படாவிட்டால் இந்த நடவடிக்கைகள் முன்னேறியிருக்க முடியாது.
எரிபொருள் பரிவர்த்தனைக்கு நிதியளிக்கும் வங்கிகளுக்கு விதிவிலக்கு வழங்கப்பட்டிருந்தாலும், Swift முடிவு பதட்டத்தை அதிகரிக்கும். 2014 ஆம் ஆண்டில், உலகளாவிய கொடுப்பனவு செய்தித்தொடர்பு அமைப்பில் இருந்து ரஷ்யாவை விலக்குவது பற்றி பரிசீலிக்கப்பட்டபோது, இது ஒரு போர் அறிவிப்புக்கு சமமானதாக இருக்கும் என்று மாஸ்கோ கூறியது.
வெள்ளியன்று கருத்துக்களில், பிரெஞ்சு நிதி மந்திரி புருனோ லு மேர், Swift அமைப்பிற்கான ரஷ்யாவிற்கான அணுகலை தடுப்பது 'நிதிய அணு ஆயுதம்' என்று விவரித்தார்.
கூட்டறிக்கையின்படி, ரஷ்யாவின் மத்திய வங்கியின் மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் முடிவு, 'எங்கள் நடவடிக்கைகளின் தாக்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் அதன் சர்வதேச இருப்புக்களை பயன்படுத்துவதை' தடுப்பதை நோக்கமாகக் கொண்டது என கூறுகிறது.
ரஷ்யாவிடம் சுமார் 600 பில்லியன் டாலர் வெளிநாட்டு நாணய இருப்பு உள்ளது, இதில் பெரும்பகுதி எண்ணெய் மற்றும் எரிவாயு விற்பனையில் இருந்து வருகிறது. மத்திய வங்கிகள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், ரூபிளுக்கு உந்துதல் கொடுக்கவும், முழுமையான சரிவைத் தவிர்க்கவும் இந்த இருப்புக்களின் ஒரு பகுதியைப் பயன்படுத்துவதைத் தடுக்கும்.
உக்ரேன் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து, சர்வதேச சந்தைகளில் மதிப்பில் சரிந்துள்ள தேசிய நாணயத்தின் வீழ்ச்சிக்கு பயந்து, டாலர்கள் மற்றும் ரூபிள்களில் பணத்தை எடுக்க ஏராளமான மக்கள் வங்கிகள் மற்றும் தன்னியங்கி பணஇயந்திரங்களின் முன்னே வரிசையில் நிற்கின்றனர்.
மத்திய வங்கி ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டு அந்த அச்சங்களைத் தணிக்க முயன்றது. அது வங்கிகளுக்கு பணப்புழக்கத்தை வழங்குவதாகவும், அவர்கள் கடன் வாங்க விரும்பும் தொகைகளுக்கு வரம்பு இல்லை என்றும், அதே போல் அவர்கள் கடன் வாங்கும் தொகையை ஈடுசெய்ய பிணையமாக ஏற்றுக்கொள்ளும் பத்திரங்களின் பட்டியலை விரிவுபடுத்துகிறது என்றது.
'ரஷ்ய வங்கி அமைப்பு நிலையானது, போதுமான மூலதன கையிருப்பு மற்றும் பணப்புழக்கம் எந்த சூழ்நிலையிலும் செயலிழப்பு இல்லாமல் செயல்படும்,' மற்றும் அனைத்து வாடிக்கையாளர் நிதிகளும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அது கூறியது. Swift இல் இருந்து ரஷ்யா துண்டிக்கப்பட்டால் உருவாக்கப்பட்ட ஒரு உள்நாட்டு பணம்வழங்கும் முறையானது 'எந்த சூழ்நிலையிலும்' தொடர்ந்து செயல்படும் என்று அது கூறியது.
ரஷ்யாவின் மத்திய வங்கி அதன் வெளிநாட்டு நாணய இருப்புகளில் 14 சதவிகிதத்தை வைத்திருக்கும் சீனாவிடம் உதவியை நாடலாம். ஆனால் சீன அதிகாரிகள் ரஷ்யாவிற்கு வெளிப்படையான உதவியை வழங்க எச்சரிக்கையாக இருக்கக்கூடும். ஏனெனில் அவர்கள் அமெரிக்காவின் உத்தரவின் பேரில் விதிக்கப்பட்ட இரண்டாம் நிலை தடைகளின் இலக்காக இருக்கலாம் என்ற அச்சம் உள்ளது.
அதன் இராணுவ நடவடிக்கைகளுடன் இணைந்து, உலகப் பொருளாதாரப் போரில் ரஷ்ய நிதிய அமைப்பை இலக்கு வைப்பது, அதன் எதிரிகளைத் தாக்கும் வகையில், சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்கா பெருகிய முறையில் கடைப்பிடித்து வரும் ஒரு பெரிய தீவிரப்படுத்தலாகும்.
அமெரிக்கா இதைச் செய்யக்கூடியதாக இருப்பது ஏனெனில் அனைத்து உலகளாவிய கொடுப்பனவுகளில் கிட்டத்தட்ட பாதி டாலர்களில் செய்யப்படுகிறது. அமெரிக்க டாலர் சுமார் 90 சதவீத வர்த்தகத்திற்கு நிதியளிக்கப் பயன்படுகிறது. ஈரான் மற்றும் வெனிசுவேலாவை குறிவைக்க அமெரிக்கா இந்த மேலாதிக்கத்தை பயன்படுத்தியது. ஆனால் ரஷ்யாவிற்கு எதிரான நடவடிக்கை, ஒரு பண்பு ரீதியாக புதிய கட்ட நிதிய ஆக்கிரமிப்பு ஆகும்.
ரஷ்ய மத்திய வங்கி மீதான தாக்குதல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, சர்வதேச நாணய நிதியத்தில் பணிபுரிந்தவரும், தற்போது அட்லாண்டிக் குழுவின் புவி பொருளாதார மையத்தின் இயக்குநராக உள்ள ஜோஷ் லிப்ஸ்கி, இது ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு 'அசாதாரண முக்கியமான மற்றும் சேதப்படுத்தும் நடவடிக்கை' என்று கூறினார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 1.7 டிரில்லியன் டாலர்களுடன், ரஷ்யா உலகின் பன்னிரண்டாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. 'ஒரு G20 மத்திய வங்கி இதற்கு முன்பு இலக்காகவில்லை,' என லிப்ஸ்கி கூறினார். “இது ஈரான் அல்ல. இது வெனிசுவேலா அல்ல” என்றார்.
முன்னாள் அமெரிக்க அதிகாரியும், இப்போது புதிய அமெரிக்கப் பாதுகாப்பு மையத்தில் உள்ளவருமான எட்வர்ட் பிஷ்மான், பைனான்சியல் டைம்ஸிடம் இந்த நடவடிக்கை ரஷ்யப் பொருளாதாரத்திற்கு “பேரழிவு தரும் அடி” என்று கூறினார். ரஷ்யாவின் வெளிநாட்டு நாணய கையிருப்பின் 'குறிப்பிடத்தக்க பகுதி' 'ஒரே இரவில் பயன்படுத்த முடியாததாக' மாற்றப்படும்.
போர் நெருக்கடி உலகப் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பின்னடைவு விளைவுகளை ஏற்படுத்தும். கோதுமை மற்றும் பிற தானியங்கள் மற்றும் உலோகங்களுடன் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலைகள் அதிகரித்து வருகின்றன.
WSJ மேற்கோள் காட்டிய ஒரு முன்னறிவிப்பு நிறுவனத்தின் ஒரு மதிப்பீட்டின்படி, எண்ணெய் அதன் தற்போதைய அளவான $100 இல் இருந்து ஒரு பீப்பாய்க்கு $110 ஆக உயர்ந்தால், இது அமெரிக்காவின் வருடாந்திர பணவீக்க விகிதம் 10 சதவீதத்தை தாண்டும். இது அமெரிக்க பெடரல் ரிசர்வ் மற்றும் மத்திய வங்கிகளுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது, ஏனெனில் உயரும் விலைகள் உலக வளர்ச்சிக்கு ஒரு அடியை கொடுக்க அச்சுறுத்துகிறது.
ஃபெடரல் ரிசர்வ் மார்ச் நடுப்பகுதியில் நடந்த கூட்டத்தில் அதன் அடிப்படை வட்டி விகிதத்தில் 0.25 சதவீத புள்ளி உயர்த்தும் போக்கில் இருந்தது. அதைத் தொடர்ந்து ஆண்டு முழுவதற்கும் ஆறு அல்லது ஏழு அதிகரிப்புகள் இருந்தன. ஆனால் அது இப்போது 'தேக்கவீக்க' (stagflation) நிலைமைகளின் கீழ் விகிதங்களை உயர்த்தக்கூடிய ஒரு சூழ்நிலையை எதிர்கொள்கிறது. இது விலைவாசி உயர்வு மற்றும் குறைந்த அல்லது வீழ்ச்சியடையும் வளர்ச்சியை ஏற்படுத்தும்.
ஜேபி மோர்கனின் தலைமைப் பொருளாதார நிபுணர் புரூஸ் காஸ்மன், WSJ இடம்: 'பல தசாப்தங்களாக பணவீக்கத்தில் இவ்வளவு பெரிய மற்றும் பரந்த அடிப்படையிலான மிதமிஞ்சிய வளர்ச்சியை நாங்கள் கொண்டிருக்கவில்லை.' ஒரு நீடித்திருக்கும் அதிர்ச்சி பணவீக்கத்தை இன்னும் அதிகமாக உயர்த்தலாம். இது மத்திய வங்கிக்கு 'சில கடினமான தேர்வுகளை' விட்டுச்செல்கிறது என்று கூறினார்.
பங்குச் சந்தையில் உடனடி விளைவுகளைத் தவிர, வோல் ஸ்ட்ரீட்டின் அனைத்து எதிர்கால குறியீடுகளும் இதை எழுதும் நேரத்தில் வீழ்ச்சியடைந்த அதே நேரத்தில், ஆசிய சந்தைகள் ஸ்திரமாக இருந்தன. முக்கிய ஏகாதிபத்திய சக்திகளின் வார இறுதியில் எடுக்கவுள்ள முடிவுகளால் ஏனைய நிதிய விளைவுகள் உணரப்படலாம்.
அதிக இலாபத்தை தேடி ரஷ்ய நிதிச் சந்தைகளில் முதலீடு செய்த வங்கிகள் மற்றும் தனியார் முதலீட்டு நிதியங்கள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் உட்பட உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவது உறுதி.
ரஷ்ய நிறுவனங்களால், வெளிநாட்டு வங்கிகள் சுமார் 121 பில்லியன் டாலர்கள் இழப்பை அடைய வேண்டியுள்ளது என்று சர்வதேச தீர்வுகளுக்கான வங்கி (Bank for International Settlements) மதிப்பிட்டுள்ளது. இதில், சுமார் 14.7 பில்லியன் டாலர்கள் அமெரிக்க வங்கிகளுக்கும், 25 பில்லியன் டாலர்கள் பிரெஞ்சு மற்றும் இத்தாலிய வங்கிகளுக்கும் செலுத்த வேண்டியுள்ளது.
ரஷ்ய தேசிய கடனை கொண்டுள்ள மிகப் பெரிய மேற்கத்திய நிறுவனங்களாக ஜேர்மன் காப்புறுதி நிறுவனமான Allianz மற்றும் அமெரிக்க முதலீட்டு நிறுவனமான BlackRock ஆகியவை உள்ளன. இந்த பெரும் நிறுவனங்கள் நிதிப் புயலின் உடனடி விளைவுகளைச் சமாளிக்கும் அளவுக்கு பெரியவை. ஆனால் தற்போதைய நெருக்கடிக்கு முற்றிலும் தயாராக இல்லாத சிறிய நிறுவனங்களுக்கு இது பொருந்தாது.
ரஷ்யா மீதான 'பேரழிவுகரமான' மேலும் பொருளாதாரத் தடைகள் பற்றிய பேச்சு, 'உலகப் பொருளாதாரத்திலும் குறிப்பாக மேற்கு ஐரோப்பாவிலும் அது ஏற்படுத்தும் வலிமிகுந்த சுய-அதிர்வுகளை கருத்தில் கொண்டால் கட்டுக்கதை போன்றது' என்று ஜனவரி இறுதியில் கூறிய இந்த நிறுவனங்களில் ஒன்றின் தலைவரின் கருத்துக்களை FT மேற்கோள் காட்டியது.
1998 ஆம் ஆண்டு செப்டம்பரில் 3 பில்லியன் டாலர் தனியார் முதலீட்டு நிதியமான நீண்டகால மூலதன மேலாண்மையின் (Long Term Capital Management) அழிவு, ரஷ்ய ரூபிள் பந்தயங்களில் பெரிதும் ஈடுபட்டிருந்ததால், மத்திய வங்கியால் பிணை எடுக்கப்பட வேண்டியிருந்தது மற்றும் அதன் சரிவு அமெரிக்க நிதி அமைப்புக்கு ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது என்பது நினைவுகூரத்தக்கது.
