இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இன்று, சுமார் 50,000 இலங்கை சுகாதாரப் ஊழியர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்து, அவர்களின் நீண்ட கால கோரிக்கையான சம்பள உயர்வு மற்றும் முன்னேற்றமான வேலை நிலைமைகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். கடந்த கால ஆட்சிகளைப் போலவே, ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் அரசாங்கமும் எந்தவொரு முன்னேற்றத்தையும் மேற்கொள்வதை நிராகரித்துள்ளது.
சுகாதார ஊழியர்களின் கோரிக்கைகளில் சம்பள முரண்பாடுகளை சரிசெய்தல், போக்குவரத்து மற்றும் அவசர கடமைக்கான அழைப்புக்குரிய கொடுப்பனவுகளை 3 ஆயிரம் ரூபாயில் இருந்து (15 டொலர்) 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும், மேலதிக நேர கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் மற்றும் பதவி உயர்வு நடைமுறைகள் அபிவிருத்தி செய்ய்பட வேண்டும் ஆகியவை அடங்கும்.
தாதிமார், துணை மருத்துவர்கள், பொது சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மருந்தாளர்களை உள்ளடக்கிய, சுகாதாரத் துறையில் உள்ள 18 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான சுகாதார தொழில் வல்லுனர்களின் கூட்டமைப்பு (சு.தொ.வ.கூ.) இந்த வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
பெப்ரவரி 7 அன்று, 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் இதே கோரிக்கைகளுக்காக காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். பல்லாயிரக்கணக்கான தாதியர்களும் அந்த நடவடிக்கையில் கலந்து கொண்டனர், ஆனால் இப்போது அவர்கள் தற்போதைய வேலை நிறுத்தத்தில் சேர சட்டப்பூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
காலவரையற்ற வேலைநிறுத்தத்தை கலைக்கும் முயற்சியில், அரசாங்கம் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. சட்டமா அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க, கொழும்பு மாவட்ட நீதிமன்றமானது அரசாங்க தாதி உத்தியோகத்தர்கள் சம்மேளனம் (அ.தா.உ.ச.) மீது தடை உத்தரவு பிறப்பித்து, அதன் உறுப்பினர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க தடை விதித்ததுள்ளது. ஜனாதிபதி இராஜபக்ஷ, அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தை (ESPA) அமுல்படுத்தி சுகாதார துறை வேலைநிறுத்தங்களை குற்றமாக்கினார்.
அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு அடிபணிந்த சு.தொ.வ.கூ., தொழிலாளர்களை காட்டிக்கொடுத்து, எந்த கோரிக்கையையும் அடையாமல் ஒன்பது நாட்களில் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
சு.தொ.வ.கூ. தலைவர் ரவி குமுதேஷ், பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்குவதற்காக வேலைநிறுத்தத்தை நிறுத்தியதாகக் கூறினார். இராஜபக்ஷ தலையிட்டு தீர்வு வழங்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வேலைநிறுத்தத்தை நிறுத்துவதற்கான இந்த அற்ப நியாயப்படுத்தல், ஒரு கொடூரமான மாயை என்பதை நிரூபித்தது.
தங்கள் கோரிக்கைகள் தொடர்ந்து நிராகரிப்படுவதால் உறுப்பினர்கள் இடையே அதிகரித்து வரும் கோபத்தை எதிர்கொண்டுள்ள சு.தொ.வ.கூ. மீண்டும் வேலை நிறுத்தங்களுக்கு அழைப்பு விடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. பிப்ரவரி 24 அன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சம்பள முரண்பாடுகள் பற்றி கலந்துரையாட ஒரு 'தொழில்நுட்பக் குழுவை' அமைக்குமாறு குமுதேஷ் சுகாதார அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார். அத்தகைய குழுவில், 'புறநிலை ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும், கோட்பாட்டு ரீதியாகவும்' அதன் நிலைப்பாட்டை விளக்க தொழிற்சங்க கூட்டணி தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
“அமைச்சு மூன்று நாட்களில் தீர்வு எட்டத் தவறினால், கூட்டமைப்பு மார்ச் 10 முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்,” என்று நேற்று குமுதேஷ் எச்சரித்தார்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சு.தொ.வ.கூ. கோரிக்கைகளை பற்றி கலந்துரையாட ஒரு 'தொழில்நுட்பக் குழுவை' கோருவது, கோரிக்க்கைளை வழங்குவதற்கு அல்ல! இராஜபக்ஷ அரசாங்கங்கள் உட்பட இலங்கை ஆட்சிகள் தொழிலாளர்களின் போராட்டங்களை கவிழ்ப்பதற்கு இத்தகைய குழுக்களையும் ஆணைக்குழுக்களையும் பயன்படுத்தியுள்ளன. அத்தகைய சூழ்ச்சியில் ஒத்துழைக்க சு.தொ.வ.கூ. தயாராக உள்ளது.
சு.தொ.வ.கூ. இன் இந்த இழிந்த சூழ்ச்சியை நிராகரிக்குமாறு நமது சகோதர சகோதரிகளை சுகாதார ஊழியர்கள் நடவடிக்கைக் குழு (சு.ஊ.ந.கு.) வலியுறுத்துகிறது. வாழ்க்கை நிலைமைகளைப் பாதுகாக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஏனைய தொழிலாளர்களைப் போலவே, சுகாதார ஊழியர்களுக்கும், ஆபத்தான கோவிட்-19 தொற்றுநோய் உட்பட, ஒழுக்கமான ஊதிய உயர்வுகள், முன்னேற்றமான வேலை நிலைமைகள் மற்றும் வேலைத் தள பாதுகாப்பும் அவசியமாகும்.
அதன் பங்கிற்கு, தொழிலாளர்களின் கோரிக்கைகளை வழங்கத் தயாராக இல்லாத அரசாங்கம், அதன் அடக்குமுறை நடவடிக்கைகளைத் தொடர்ந்து தீவிரப்படுத்துகிறது. கடந்த வாரம், இராஜபக்ஷ தனது அத்தியாவசிய சேவைகள் பிரகடனத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டித்தார். அதன் விதிமுறைகளை 'மீறிய' தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ய இது பயன்படுத்தப்படலாம் மற்றும் கடுமையான சிறைத்தண்டனை மற்றும் அபராதங்கள் விதிக்க முடியும்.
கடந்த வெள்ளிக்கிழமை, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அ.தா.உ.ச. மீதான தடை உத்தரவை மார்ச் 11 வரை நீட்டித்தது, அதன் உறுப்பினர்களை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடை செய்தது. சுமார் 20,000 செவிலியர்கள் அ.தா.உ.ச. உறுப்பினர்களாக உள்ளனர். அதன் தலைவர் சமன் ரத்னபிரிய, தொழிற்சங்க உறுப்பினர்கள் தற்போதைய வேலைநிறுத்தத்தின் போது, ஆர்ப்பாட்டங்களில் மாத்திரமே பங்கேற்பார்கள் என்று கூறினார்.
சனிக்கிழமையன்று ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய இராஜபக்ஷ, வேலைநிறுத்தக்காரர்களுக்கு எதிராக அச்சுறுத்தும் கருத்துக்களைக் கூறினார். எந்தவொரு பொறுப்பான தரப்பினரும் இடையூறு விளைவிக்கும் வேலைநிறுத்தங்கள் மற்றும் பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுப்பர் என எதிர்பார்க்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். 'தற்போதைய சவால்களை சமாளிக்க எதிர்க்கட்சிகள், மக்கள் மற்றும் அரசாங்கம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்' என்று அவர் கோரினார்.
உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மோசமாக்கப்பட்ட வரலாறு காணாத பொருளாதார கொந்தளிப்பில் அரசாங்கம் மூழ்கியுள்ளது. ஊதிய உயர்வு அல்லது தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்கான கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்கு மாறாக, அரசாங்கம் நெருக்கடியின் சுமையை மக்களின் முதுகில் சுமத்துவதற்கு சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துகிறது.
அத்தியாவசிய தேவைகளுக்கு போதிய அன்னியச் செலாவணி இல்லாமல் நாடு கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளது. அனல் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளை வாங்குவதற்கு அதனிடம் டொலர்கள் இல்லை, அதனால் மக்கள் நீண்ட மின்வெட்டுக்கு ஆளாவதுடன் போக்குவரத்து ஸ்தம்பிக்கத் தொடங்கியுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு தட்டுப்பாடும் தலைவிரித்தாடுகிறது.
இப்போது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகளால் ஏவிவிடப்பட்ட, ரஷ்ய படையெடுப்பால் தூண்டிவிடப்பட்டுள்ள உக்ரேனிய போர் நெருக்கடி, ஒவ்வொரு நாட்டிலும் பொருளாதார நெருக்கடியை மேலும் ஆழப்படுத்தும் ஒரு பரந்த மோதலுக்கு அச்சுறுத்துகிறது.
உழைக்கும் மக்களை நெருக்கடிக்கு விலை கொடுக்கச் செய்யும் அரசாங்கத்தினதும் அதன் பெருவணிகத்தினதும் கொள்கைகளை தோற்கடிக்காமல், தொழிலாள வர்க்கம் அரசாங்கத்தால் கட்டவிழ்த்து விடப்படும் தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாது.
சுகாதார ஊழியர்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடன் ஒத்துழைக்கின்றன. தாதிமார்களுக்கு எதிரான நீதிமன்ற உத்தரவுகளையும், வேலைநிறுத்தத்தை தடை செய்யும் அத்தியாவசிய சேவை ஆணையையும் கண்டித்து எந்த ஒரு தொழிற்சங்கமும் அறிக்கை வெளியிடவில்லை. தொழிற்சங்கங்கள் உண்மையில் தங்கள் உறுப்பினர்களின் போராட்டங்களை நசுக்குவதில் மும்முரமாக உள்ளன.
அரசாங்கத்திற்கு ஆதரவான பொதுச் சேவை தாதியர் சங்கமும் எதிர்க்கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கட்டுப்பாட்டில் உள்ள அகில இலங்கை சுகாதார ஊழியர் சங்கமும், பெப்ரவரி 7 வேலைநிறுத்தத்திற்கு குழிபறிப்பதில் ஈடுபட்டதுடன் தற்போதைய வேலைநிறுத்தத்திலும் அதையே செய்கின்றன.
எங்கள் சக ஊழியர்கள் பலர் அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் மீதான தங்கள் எண்ணத்தை விளக்கினர். பேராதனை சிறுவர் வைத்தியசாலையைச் சேர்ந்த தாதி ஒருவர், சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை சு.தொ.வ.கூ. காட்டிக்கொடுத்தமை மற்றும் ஏனைய தாதியர் சங்கங்கள் துரோகம் செய்தமை குறித்து தனது வெறுப்பை வெளிப்படுத்தினார். “தாதிமார் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை பிளவுபடுத்தும் தொழிற்சங்கங்களின் செயல்பாடுகளை நான் எதிர்ப்பதால் சுகாதார ஊழியர் நடவடிக்கை குழுவை ஆதரிக்கிறேன். இந்தப் போராட்டத்தின் தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்பில் இருந்து சுகாதார தொழலாளர்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்,” என அவர் கூறினார்.
சுகாதார ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்யும் போது மட்டும் நோய்வாய்ப்பட்டவர்கள் பற்றி முதலைக் கண்ணீர் வடிப்பதாக கம்பளை வைத்தியசாலையைச் சேர்ந்த தாதி ஒருவர் அரசாங்கத்தைக் கண்டித்துள்ளார். 'நாங்கள், செவிலியர்கள் தொழிற்சங்கங்களால் உருவாக்கப்பட்ட தனிமைப்படுதலில் இருந்து உடைந்து மற்ற தொழிலாளர்களுடன் ஐக்கியமான போராட்டத்திற்கு திரும்ப வேண்டும். இந்த அடக்குமுறை அரசாங்கத்திற்கு எதிராக ஒரு கூட்டுப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறேன்.”
கண்டி மருத்துவமனையின் ரேடியோகிராஃபர் ஒருவர்: “சு.தொ.வ.கூ. தலைவர்கள் எங்களைப் போன்ற உறுப்பினர்களுக்கு கூட தெரிவிக்காமல் வேலைநிறுத்தத்தை மூடிவிட்டனர். இப்போது அவர்கள் மீதான தொழிலாளர்களின் வெறுப்பை திசை திருப்ப இந்த அடையாள வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். காலவரையற்ற வேலைநிறுத்தம் காட்டிக்கொடுக்கப்பட்ட பின்னர், இந்த அடையாள வேலைநிறுத்தம் எங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்கும் என்று யாராவது நம்ப முடியுமா? சு.தொ.வ.கூ. வேண்டுமென்றே தொழிலாளர்களின் போராட்ட உணர்வை ஊக்கமிழக்கச் செய்கிறது,” என தெரிவித்தார்.
காலவரையற்ற வேலைநிறுத்தத்தின் ஆரம்பத்தில், இராஜபக்ஷ ஆட்சியின் தாக்குதல்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் வகிபாகம் பற்றி சுகாதார ஊழியர்களின் நடவடிக்கை குழு எச்சரித்தது. தொழிலாளர்கள் போராடுவதற்கான வேலைத்திட்டத்தையும் நாங்கள் விரிவுபடுத்தினோம். 'இலங்கை தேசிய சுகாதார வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்க தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுங்கள்' என்று எங்கள் அறிக்கையில் கூறினோம்:
“சு.தொ.வ.கூ. மாயையை தூண்டுவதையும், இராஜபக்ஷ அரசாங்கத்திடம் அது திவாலான வேண்டுகோள் விடுப்பதையும் சுகாதார ஊழியர்கள் நிராகரிக்க வேண்டும், மேலும் கண்ணியமான ஊதியங்கள், வேலை நிலைமைகள், ஜனநாயக உரிமைகள் மற்றும் கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பான வேலைக்கான போராட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
“தொழிற்சங்கங்கள் மற்றும் அதன் அதிகாரத்துவத்தில் இருந்து சுயாதீனமாக, ஒவ்வொரு சுகாதார நிறுவனத்திலும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட நடவடிக்கை குழுக்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
'மோசமடைந்து வரும் சுகாதார சேவையை மாற்றியமைக்கவும், நவீனமயமாக்கவும், அதிக சுகாதார ஊழியர்களை நியமிக்கவும், தேவையான ஊதியம் மற்றும் பணி நிலைமைகளை முழுமையாக வழங்கவும் அவர்கள் பில்லியன் கணக்கான ரூபாய்களை கோர வேண்டும். தொழிலாளர்களை தரங்களின் அடிப்படையில் பிரிக்கும் தொழிற்சங்கங்களின் முயற்சிகளை நடவடிக்கை குழுக்கள் நிராகரிக்க வேண்டும், மற்றும் அனைத்து சுகாதார தொழிலாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தினதும் ஐக்கியத்துக்காகப் போராட வேண்டும்.
'இந்த கோரிக்கைகளை அடைவதற்கான போராட்டம் முதலாளித்துவ இலாப முறைமைக்கு எதிரான அரசியல் போராட்டத்தையும் மற்றும் ஒரு சில செல்வந்தர்களின் நலன்களுக்காக அன்றி பெரும்பான்மை வெகுஜனங்களின் நலன்களின் பேரில் பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்குமான போராட்டத்தையும் உள்ளடக்கியதாகும் என்று சுகாதார ஊழியர்கள் நடவடிக்கை குழு வலியுறுத்துகிறது. இது, சோசலிச கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தை அர்த்தப்படுத்துகிறது.
இலங்கையின் சுகாதார ஊழியர்களை சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்புமாறும், தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியில் இணையுமாறும் எமது அறிக்கை வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கா, துருக்கி, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள சுகாதாரப் தொழிலாளர்கள் இதேபோன்ற போராட்டங்களில் முன்னணியில் உள்ளனர்.
சோசலிச சமத்துவக் கட்சியால் தொடங்கப்பட்ட வேலைத்திட்டத்திற்காக போராடுவது அவசரமானது. எங்களுடன் இணைந்து நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குமாறு உங்களை வலியுறுத்துகிறோம்.
சுகாதார ஊழியர்கள் நடவடிக்கை குழு (HWAC) தொடர்பு தொலைபேசி எண்: 0773562327
மின்னஞ்சல்: healthworkers-sl@wsws.org
மேலும் படிக்க
- இலங்கை சுகாதார ஊழியர்களின் தேசிய வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு
- இலங்கை ஜனாதிபதி சுகாதார மற்றும் மின்சார ஊழியர்கள் மீது அத்தியாவசிய சேவைகளின் கீழ் வேலை நிறுத்தத்திற்கு தடை விதித்துள்ளார்
- இலங்கை தாதியர்கள் நீதிமன்றத் தடையை மீறி ஏனைய சுகாதார ஊழியர்களுடன் இணைந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்
