மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
உக்ரேன்-ரஷ்ய போரில் அமெரிக்காவின் தலையீடு அதிகரிப்பது, ஒரு மூன்றாம் உலகப் போரை விரைவாகத் தூண்டிவிடும் என வெள்ளை மாளிகையின் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிகளுக்குள் இருந்து இன்னும் தீவிரமான அமெரிக்க இராணுவத் தலையீட்டிற்கு அழைப்புகள் அதிகரித்து வருகின்றன.
போர் அதன் மூன்றாவது வாரத்தில் நுழையும் போது, உக்ரேனில் சண்டை வேகமாக தீவிரமடைந்து வருகிறது. இதனால் இராணுவப் படைகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் ஒரு பதிப்பில், முன்னாள் கொனெக்டிகட் செனட்டரும், ஜனநாயகக் கட்சியின் துணைத் தலைவர் வேட்பாளருமான ஜோ லீபர்மான், 'உக்ரேனில் பறக்கக் கூடாத பகுதிக்கான விடயத்தை' முன்வைத்தார். 'வடக்கு அட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பு உக்ரேன் மீது வானத்தில் இருந்து தொடரும், கண்மூடித்தனமான மற்றும் மனிதாபிமானமற்ற ரஷ்ய தாக்குதல்களில் இருந்து ஆகாயப் பாதுகாப்பை வழங்க மறுப்பது மூலோபாயரீதியாக பலவீனமானது மற்றும் தார்மீகரீதியாக தவறானது' என்று லீபர்மான் எழுதினார்.
இதேபோன்ற கோரிக்கைகளுக்கு பதிலளித்த வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி செவ்வாயன்று, 'ரஷ்ய விமானங்கள் உங்களின் பறக்கக் கூடாத பகுதிக்குள் பறந்தால் சுட்டு வீழ்த்த பறக்கத்தடை மண்டலத்தை அமைப்பது தேவை. எனவே அது ரஷ்யாவுடனான போருக்கு நம்மை இட்டுச்செல்லக்கூடிய ஒரு மோதல் நடவடிக்கையை நோக்கிய அடியாக இருக்கும் என எங்களுக்கு கவலைகள் இருக்கின்றன. இது ஜனாதிபதி செய்ய விரும்பாத ஒன்று” என்று தெரிவித்தார்.
வெள்ளை மாளிகையின் எச்சரிக்கைகளுக்குப் பதிலளித்து, லீபர்மான் எழுதினார், “பறக்கத் தடை மண்டலத்தை நிறுவுவதற்கு எதிரான மற்றொரு வாதம், அது திரு. புட்டினைக் கோபப்படுத்தலாம் மற்றும் மூன்றாம் உலகப் போரைத் தூண்டலாம் என்பதாகும். ஆனால் பயத்தின் அடிப்படையிலான செயலற்ற தன்மை பொதுவாக நம்பிக்கையின் அடிப்படையிலான செயலை விட அதிக மோதலை ஏற்படுத்துகிறது. செயல்பட பயப்படுவது, திரு. புட்டின் தனது மனிதாபிமானமற்ற போரில் வெற்றி பெறுவதை எளிதாக்குவது மட்டுமல்லாமல், அமெரிக்காவின் பதிலுக்கு அஞ்சாமல் அண்டை நாடுகளை ஆக்கிரமிக்க முடியும் என்று சீனா போன்ற நாடுகளை நம்புவதை ஊக்குவிக்கிறது” என்றார்.
லீபர்மான் பின்வருமாறு முடித்தார், 'ரஷ்ய விமானங்களை விலக்கி வைப்பதற்காக உக்ரேன் மீது அமெரிக்க அல்லது பிற நேட்டோ விமானங்களை அனுப்புவது உக்ரேனிய உயிர்களையும் தரையில் சுதந்திரத்தையும் பாதுகாக்கும். ரஷ்ய சாம்ராஜ்யத்தை மீண்டும் கட்டமைக்கும் மற்றும் அமெரிக்காவின் உலக தலைமையை இல்லாதொழிக்கும் மற்றும் நாமும் எங்கள் கூட்டாளிகளும் கட்டியெழுப்பிய உலக ஒழுங்கை அழிக்கவும் திரு. புட்டினின் வெட்கக்கேடான மற்றும் மிருகத்தனமான முயற்சியை முறியடித்து, தோற்கடிக்க முடியும்.
'மேற்கு நாடுகள் ஏன் உக்ரேன் மீது பறக்க தடை மண்டலத்தை திணிக்க வேண்டும்' என்று கேட்கும் வாஷிங்டன்போஸ்ட்டில் ஒரு தலையங்க பதிப்பு: “உக்ரேன் மீது பறக்க தடை மண்டலத்தை அறிவிப்பதன் மூலம் மேலும் பேரழிவைத் தடுக்க நேட்டோ உதவ வேண்டும். கடந்த காலங்களில் மேற்குலகம் லிபியா, பொஸ்னியா மற்றும் ஈராக் மீது இத்தகைய மண்டலங்களை திணித்தது. உக்ரேன் அதன் உதவிக்கு தகுதியற்றதா? என வலியுறுத்தியது.
உக்ரேனுக்கான போலந்தின் தூதர் பார்டோஸ் சிச்சோக்கியும் இதே போன்ற அழைப்புகளை விடுத்தார். 'ஒவ்வொரு நாளும் தாமதிப்பதும் நூற்றுக்கணக்கான மனித உயிர்கள் இழக்கப்ப்படுகின்றது' என்று அவர் வியாழன் ஒரு துருக்கிய ஒளிபரப்பாளரிடம் கூறினார். 'இது மோதலை நீட்டிப்பதாகும். இது வான்வெளியை துல்லியமாக மூடுவதன் மூலம் விரைவாக முடிவுக்கு கொண்டுவர முடியும்.'
செவ்வாயன்று, போலந்து தனது சோவியத் கால MiG-29 விமானங்கள் அனைத்தையும் அமெரிக்காவிற்கு மாற்றி ஜேர்மனிக்கு கொண்டு செல்லும் திட்டத்தை அறிவித்தது. அங்கிருந்து அவை ரஷ்ய விமானங்களை எதிர்க்க உக்ரேனிய வான்வெளியில் பறக்கவிடப்படலாம்.
'போலந்து குடியரசின் அதிகாரிகள் உடனடியாகவும் இலவசமாகவும் தங்கள் MIG-29 ஜெட் விமானங்கள் அனைத்தையும் ரம்ஸ்ரைன் விமானத் தளத்திற்கு அனுப்பவும், அவற்றை அமெரிக்காவின் அரசாங்கத்தின் கைவசம் கொடுக்கவும் தயாராக உள்ளனர்' என போலந்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தற்போது அமெரிக்க இராணுவம் இந்த திட்டத்தை நிராகரித்துள்ளது. கடுமையான வார்த்தைகள் கொண்ட அறிக்கையில், பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி, 'போலந்தின் முன்மொழிவு உறுதியான ஒன்று என்று நாங்கள் நம்பவில்லை' என்றார்.
'அமெரிக்க அரசாங்கத்தின் வசம் உள்ள போர் விமானங்கள் ஜேர்மனியில் உள்ள அமெரிக்க/நேட்டோ தளத்திலிருந்து புறப்பட்டு ரஷ்யாவுடன் மோதுவதற்கு உக்ரேனில் வான்வெளியில் பறக்கும் வாய்ப்பு முழு நேட்டோ கூட்டணிக்கும் தீவிர கவலையை எழுப்புகிறது' என கிர்பி எச்சரித்தார்.
வெள்ளை மாளிகையின் இந்த எச்சரிக்கைகள் அமெரிக்க பத்திரிகைகளில் ஆவேசமாக கண்டிக்கப்பட்டன. 'இப்போதே உக்ரேனுக்கு விமானங்களை அனுப்புக' என்று வாஷிங்டன்போஸ்ட் கட்டுரையாளர் மார்க் ஏ. தீசென் கோரினார்.
வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், அதன் பங்கிற்கு, போலந்தின் முன்மொழிவை வெள்ளை மாளிகை நிராகரித்ததை 'தோல்வி' என்று அறிவித்தது: 'திரு. பிளிங்கெனின் ஒப்புதலுக்கும் பென்டகனின் நிராகரிப்புக்கும் இடையே என்ன நடந்தது? உக்ரேனுக்கு ஆயுதம் அளிப்பதை மேற்குலகம் நிறுத்த வேண்டும் என்று கோரும் திரு. புட்டினைத் தூண்டிவிடுமோ என்ற பயத்தில் வெள்ளை மாளிகை கண்ணை மூடிக்கொண்டது என்று முடிவு செய்வது கடினமல்ல” என அது குறிப்பிட்டது.
“ஆனால் நேட்டோ நாடுகள் ஏற்கனவே அனைத்து வகையான ஆயுதங்களையும் உக்ரேனுக்குள் அனுப்பி வருகின்றன. உக்ரேனிய விமானியுடன் போலந்து மிக் விமானம், துருக்கிய ட்ரோன் அல்லது அமெரிக்க டாங்கி எதிர்ப்பு ஏவுகணையை விட எவ்வகையிலும் ஆத்திரமூட்டும் செயலா? விமானங்களை மாற்றுவது நேட்டோ விமானங்கள் ரஷ்ய ஜெட் விமானங்களை நேரடியாக சுட்டு வீழ்த்துவது போலல்ல” என்றது.
ஒரு அச்சமூட்டும் அறிக்கையில், ஜேர்னல் மேலும், “தீவிரமடைகையில், அவர் இரசாயன ஆயுதங்கள் அல்லது தந்திரோபாய அணுவாயுதங்களை பயன்படுத்துவாரா? மூன்றாம் உலகப் போருக்கு பயப்படுவதால் நேட்டோ இதற்கு பதிலளிக்க மறுக்குமா? மிக் விமானத்தவறு, தனது அச்சுறுத்தல்கள் நேட்டோவை நிலைகுலையச் செய்யும் என்று திரு. புட்டினை நம்ப வைக்கலாம்” எனக் குறிப்பிட்டது.
ரஷ்ய அதிகாரிகள் இத்தகைய அறிக்கைகளை மிகுந்த தீவிரத்துடன் எடுத்துக்கொள்கிறார்கள். முன்னதாக வியாழன் அன்று, ரஷ்ய வெளியுறவு மந்திரி சேர்ஜி லாவ்ரோவ்விடம் அமெரிக்கா நேட்டோ உடன் அணுசக்தி போர் சாத்தியம் என்று நம்புகிறீர்களா என்று கேட்கப்பட்டது.
லாவ்ரோவ் பின்வருமாறு பதிலளித்தார்: 'பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் ரஷ்யாவிற்கும் நேட்டோ சக்திகளுக்கும் இடையே போரை முன்காண்பதாக கூறினார். நேட்டோவின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பேர்க், நேட்டோ விரும்பினால், கூட்டணியின் கிழக்கு உறுப்பினர்களின் பிரதேசத்தில் அணு ஆயுதங்கள் நிலைநிறுத்தப்படும் என்று கூறினார். பிரான்சிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன என்பதை புட்டின் கருத்தில் கொள்ள வேண்டும் என்று திரு. லு திரியோன் கூறினார். மேலும் ரஷ்யாவிற்கு எதிராக மேற்குலகம் ‘முற்றுமுழுதான போரை’ பிரகடனப்படுத்துகிறது என்று பிரெஞ்சு பொருளாதார அமைச்சர் [புருனோ லு மேர்] பெருமிதத்துடன் கூறினார்.”
லாவ்ரோவ் இந்த வார்த்தையின் ஜேர்மன் மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தினார்: “Totaler Krieg” (முற்றுமுழுதான போர்) இரண்டாம் உலகப் போரில் சோவியத் ஒன்றியத்தின் மீதான ஜேர்மன் படையெடுப்பைத் தூண்டியது.
'எனவே, நிச்சயமாக இது எங்களை விழித்தெழச் செய்கின்றது' என லாவ்ரோவ் கூறினார்.
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ரஷ்யாவிற்கு எதிராக விதிக்கப்படும் தடைகள் 'முற்றிலும் முன்னோடியில்லாதது' என்று கூறினார். அவர் முடித்தார், 'நம் நாட்டிற்கு எதிராக தொடங்கப்பட்டதைப் போன்ற ஒரு பொருளாதாரப் போர் இதுவரை இருந்ததில்லை. எனவே எதையும் கணிப்பது மிகவும் கடினம்' என்றார்.
ரஷ்யாவை அரக்கனாக்கும் பிரச்சாரம் ஒரு உச்சக் கட்டத்தை எட்டுவதால் சண்டை தீவிரமடைந்து வருகிறது.
Facebook மற்றும் Instagram, ரஷ்ய பொது அதிகாரிகள் மற்றும் இராணுவப் படைகளுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவதற்கு அனுமதிக்கும் வகையில், அவர்களின் ஊடகங்களின் வெறுப்பு பேச்சு தொடர்பான கொள்கைகளை மாற்றும் என ராய்ட்டர்ஸ் வியாழன் அன்று தெரிவித்தது.
'மெட்டா (பேஸ்புக்கின் தாய் நிறுவனம்) பொதுவாக தடைசெய்யப்பட்டுள்ள வலதுசாரி அசோவ் படைப்பிரிவை புகழ்வதை அனுமதிக்கும் என்று மின்னஞ்சல்கள் காட்டுகின்றன,' என்றும் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
