மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரப் போரை மேலும் தீவிரப்படுத்துவதற்கு அறிவித்து, அமெரிக்க துணை கருவூல செயலர் வாலி அடியேமோ, திங்களன்று, ரஷ்யா மீது முழு பொருளாதாரத் தடையை விதிப்பதற்கும் மற்றும் அந்நாட்டிற்கான சர்வதேச கடல் வழிகளை மூடுவதற்கும் பரிசீலித்து வருவதாக அச்சுறுத்தல் விடுத்தார். இவ்விரண்டு கோரிக்கைகளும் முன்னரே உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியால் முன்வைக்கப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை மோதலின் மற்றொரு ஆபத்தான தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னர் இந்த அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன, அதாவது நேட்டோ அங்கத்துவ நாடான போலந்துடனான உக்ரேனின் எல்லையில் இருந்து வெறும் 10 மைல் தொலைவில் உள்ள யாவோரிவ் நகர்புறத்தில் உள்ள அமைதி காத்தல் மற்றும் பாதுகாப்புக்கான சர்வதேச மையத்தை 8 ரஷ்ய கப்பல் ஏவுகணைகள் தாக்கி அழித்துவிட்டன. இந்த வான்வழித் தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டதாகவும், 134 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை மாலை, தாக்குதலில் ‘180 வெளிநாட்டு கூலிப்படையினர்’ கொல்லப்பட்டதாகவும், மேற்கத்திய நாடுகளின் ஆயுத விநியோகங்களை அது சீர்குலைத்ததாகவும் கூறி, அத்தகைய தாக்குதல்கள் இன்னும் தொடரலாம் என்று ரஷ்யா அறிவித்தது. முழு விபரம் அறியப்படாத நிலைமையில், வாஷிங்டன் போஸ்ட் க்கு பேசிய ஒரு அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி, மேற்கத்திய இராணுவ உதவிக்கான ஏற்றுமதி தகர்க்கப்பட்டதாக கூறப்படுவதை மறுத்தார்.
இருபது நேட்டோ நாடுகள், வெடிமருந்துகள், கையடக்கமான அல்லது தோளில் தாங்கும் டாங்கி எதிர்ப்பு மற்றும் விமான ஏவுகணை எதிர்ப்பு அமைப்புக்களை பெரியளவில் உக்ரேனுக்கு ஏற்றுமதி செய்வதில் ஈடுபட்டுள்ளன, இந்த ஆயுதங்கள் குறிப்பாக கிளர்ச்சிகளில் பயன்படுத்துவதற்கு ஏற்றவையாகும். பைடென் சனிக்கிழமையன்று 200 மில்லியன் டாலர் சமீபத்திய நிதியுதவிக்கு அறிவித்தது உட்பட, இந்த ஆண்டு உக்ரேனுக்கு அமெரிக்கா மட்டும் 1.2 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க உறுதியளித்துள்ளது.
நேட்டோவும் உக்ரேனிய அரசாங்கமும், வெளிநாட்டுப் போராளிகளையும், அத்துடன் உலகெங்கிலும் உள்ள தீவிர வலதுசாரி சக்திகளையும் உக்ரேனுக்கு வந்து ‘சர்வதேச படையணியில்’ சேருமாறும், மற்றும் அசோவ் படையணி போன்ற பாசிச துணை இராணுவ அமைப்புக்களில் சேர்ந்து போராடுமாறும் வெளிப்படையாக ஊக்குவிக்கின்றன. அதன்படி, பிந்தையது சமீபத்திய வாரங்களில் அதன் உறுப்பினர்களை கணிசமாக அதிகரிக்க முடிந்தது.
‘சர்வதேச படையணியின்’ உறுப்பினர்கள் தங்கியுள்ள யாவோரிவ் இல் உள்ள மையமானது, 2014 ஆம் ஆண்டு அமெரிக்க ஆதரவு பெற்ற தீவிர வலதுசாரி சதிக்குப் பின்னர் உக்ரேனின் இராணுவத்திற்கு நேட்டோ வழங்கிய இராணுவ உபகரண விநியோகங்கள் மற்றும் பயிற்சிக்கான முக்கிய மையமாக நீண்ட காலமாக இருந்து வருகிறது. BuzzFeed செய்தியின்படி, புளோரிடா தேசிய காவல் பிரிவின் துருப்புக்கள் சமீபமாக பெப்ரவரி தொடக்கத்தில் நேட்டோ பணியின் ஒரு பகுதியாக இந்த மையத்தில் உக்ரேனிய படையினருக்கு பயிற்சி அளித்தன.
சண்டைகள், குறிப்பாக தெற்கு உக்ரேன் மற்றும் மரியுபோல் நகரைச் சுற்றி தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இந்நிலையில், பொதுவாக இரு தரப்புக்களும் பொதுமக்கள் வாழும் பகுதிகளை பெரிதும் குறிவைப்பதான, மற்றும் ரஷ்ய இராணுவம் உக்ரேனிய நகரங்கள் மீது அதன் தாக்குதல்களை இன்னும் தீவிரப்படுத்துவதான அறிகுறிகள் தென்படுகின்றன.
ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத அதிகாரிகளின் கூற்றுப்படி, திங்களன்று, கிழக்கு உக்ரேனில் உள்ள டொனெட்ஸ்கில் நடந்த ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் 20 பொதுமக்கள் மற்றும் பல குழந்தைகள் அடங்குவர். உக்ரேனிய இராணுவத்தின் தாக்குதலை குறைகூறி, பிரிவினைவாதத் தலைவர் டெனிஸ் பிஷூலின் இதை ‘போர்க் குற்றம்’ என்று கூறினார். அதேவேளை இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்க உக்ரேனிய இராணுவம் மறுத்து, ரஷ்யாவை குற்றம்சாட்டியுள்ளது, இந்த போரில் இதுவரை நிகழாத பொதுமக்கள் உயிரிழப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து மேற்கத்திய ஊடகங்கள் வெளிப்படையாக மௌனம் சாதிக்கின்றன.
ஐ.நா.வின் மிக சமீபத்திய மதிப்பீட்டின்படி, 596 பொதுமக்கள் இறப்புக்கள் நிகழ்ந்துள்ளன, அவர்களில் 43 குழந்தைகளும் அடங்குவர். 4 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர்; அவர்களில் சுமார் 1.5 மில்லியன் பேர் இப்போது போலந்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
ரஷ்யாவிற்கும், உக்ரேனுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன, செலென்ஸ்கி நிர்வாகத்தின் பிரதிநிதி ஒருவர் திங்களன்று, “ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் அல்லது மே மாதத்தில்” ஒரு தீர்வு எட்டப்படலாம் என்பதைச் சுட்டிக்காட்டினார். உக்ரேனிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இரு தரப்பினருமே, கிரெம்ளின் தரப்புடன் ‘சமரசம்’ செய்து கொள்ளத் தயாராக இருப்பதைச் சுட்டிக்காட்டினர்.
ரஷ்ய இராணுவப் பிரமுகரான, ரஷ்யாவின் தேசிய காவல்படைத் தலைவர் ஜெனரல் விக்டர் சோலோடோவ், திங்களன்று ஒரு உரையில் “நாங்கள் எதிர்பார்த்த வேகத்தில் அனைத்தும் நடக்கவில்லை” என்று கூறி, திட்டமிட்டபடி போர் நடக்கவில்லை என்பதை முதன்முதலாக ஒப்புக்கொண்டார். அவரது உரை தேசிய காவல்படை இணைய தளத்தில் இருந்து பின்னர் நீக்கப்பட்டது. கட்டாய இராணுவ சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் உக்ரேனுக்கு அனுப்பப்படுவதை ரஷ்யா முன்னர் மறுத்திருந்தது, ஆனால் இப்போது கிரெம்ளின் ஒப்புக்கொண்டுள்ளது.
சீனாவிடம் இருந்து ரஷ்யா இராணுவ உதவி கோரியுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் வெளியாகியுள்ளன. உக்ரேனை விட பல மடங்கு வான்வழித் தாக்குதல் சக்தியை கொண்டுள்ள ரஷ்யா, இதுவரை அதை மிகக் குறைவாக பயன்படுத்துவது ஏன் என்று இராணுவ ஆய்வாளர்கள் ஊகிக்கிறார்கள். ஜேர்மன் பத்திரிகை Der Spiegel இன் ஒரு பகுப்பாய்வு, மோசமான உபகரணங்கள், விமானிகளின் அனுபவமின்மை, படையினர் அதிகமாக உயிரிழக்கக்கூடும் என்ற அச்சம் ஆகியவை கிரெம்ளினின் தயக்கத்தின் பின்னணியாக இருக்கலாம் என்று கூறுகிறது. மேற்கத்திய வான் பாதுகாப்பு அமைப்புக்கள் ரஷ்யாவின் விமானப்படைக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளிவிபரங்கள் 498 ரஷ்ய சிப்பாய்கள் இறந்துள்ளதாகக் கூறுகின்றன, ஆனால் இரண்டு வாரங்களுக்கு மேலாக இந்த புள்ளிவிபரங்கள் புதுப்பிக்கப்படவில்லை என்பதுடன், கடுமையாக குறைத்து மதிப்பிடப்படுவதாக பரவலாக நம்பப்படுகிறது.
போரும் பொருளாதாரத் தடைகளின் தாக்கமும், புட்டின் ஆட்சியின் ஏற்கனவேயுள்ள தீவிர நெருக்கடியை கணிசமாக ஆழப்படுத்தியுள்ளன. வெள்ளியன்று, வெள்ளை மாளிகையின் செய்திச் செயலர் ஜென் சாகி, தற்போதைய பொருளாதாரத் தடைகளால், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் “அடிப்படையில் ரஷ்ய பொருளாதாரத்தை நசுக்கிவிட்டதாக” பெருமகிழ்ச்சியடைந்தார்.
ஏகாதிபத்திய சக்திகளின் பொருளாதாரப் போர் விளைவிக்கும் சமூகப் பேரழிவின் அசாதாரண அளவைப் பற்றி Foreign Affairs பத்திரிகையின் ஒரு சமீபத்திய துணுக்குச் செய்தி ஒரு குறிப்பை வழங்கியது: “ரஷ்யர்கள் விரைவில் அடிப்படை பொருட்களின் பற்றாக்குறையை எதிர்கொள்வர் – அதாவது, இப்போது இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ள iPhones மற்றும் iPads ஆகிய ஆடம்பர பொருட்களினது மட்டுமல்லாமல், உடைகள், வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற மிகச் சாதாரண பொருட்களினது பற்றாக்குறையையும் எதிர்கொள்வார்கள்.” மேலும், “வரும் மாதங்களில் அனைத்து தொழில்களும் மூடப்படலாம், இது பொருட்களின் பற்றாக்குறையை மட்டுமல்லாது, பாரிய வேலையின்மை, வரி அடிப்படை சரிவு, மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க இயலாமை ஆகியவற்றை துரிதப்படுத்தக்கூடும். ஏற்கனவே, ரஷ்யாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனம், இறக்குமதி செய்யப்பட்ட உதிரிபாகங்களின் பற்றாக்குறையால் அதன் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த நேரிட்டுள்ளது” என்றும் அந்த துணுக்குச் செய்தி எச்சரிக்கிறது.
போருக்கு முன்பே, மில்லியன் கணக்கான ரஷ்ய தொழிலாளர்கள் 1991 ஆம் ஆண்டு முதலாளித்துவ மறுசீரமைப்பினால் முற்றிலும் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டு, அடிப்படை உணவுப் பொருட்களை வாங்குவதற்கு கூட போராடிக் கொண்டிருந்தனர். பலர், குறிப்பாக ஓய்வூதியதாரர்கள், வாழ்க்கையை கழிக்க நீண்ட காலமாக வீட்டில் வளர்க்கப்படும் உணவுகளையே நம்பியுள்ளனர்.
பொருளாதாரத் தடைகளின் தாக்கம் ரஷ்யாவின் எல்லைகளுக்கு அப்பால் நீண்டு, போரின் உடனடித் தாக்கத்தையும் அதிகரிக்கும். ரஷ்யாவும் உக்ரேனும் சேர்ந்து, உலகின் கோதுமை நுகர்வில் 30 சதவீதத்தை வழங்குகின்றன. உக்ரேனின் பொருளாதாரம் போரினால் ஸ்தம்பித்துபோயுள்ள நிலையில், ரஷ்யா அதன் மீதான பொருளாதாரத் தடைகளின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில், அனைத்து தானியங்கள் மற்றும் சர்க்கரை ஏற்றுமதிக்கு ஆகஸ்ட் 31 வரை தடைவிதித்துள்ளது.
கடுமையான உணவு நெருக்கடியை எதிர்பார்த்து, உலகின் அனைத்து நாடுகளும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளன, மேலும் கோதுமை சந்தைகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளன. ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் திங்களன்று, “பசியின் சூறாவளி மற்றும் உலகளாவிய உணவுமுறை உருக்குலைவு” குறித்து எச்சரித்தார்.
பொருளாதாரத் தடைகளின் தாக்கத்துடன் இணைந்து, நேட்டோவுடனான ஒரு வெளிப்படையான மோதலின் வடிவினதாக அதிகரித்தளவில் கருதப்படுவதான உக்ரேன் போர் கூட, ரஷ்யாவின் ஆளும் வர்க்கத்திற்குள் பிளவுகளை ஆழப்படுத்தியுள்ளன, மேலும் உயர் நடுத்தர வர்க்கத்தினரில் பெரும் பகுதியினரை நாட்டை விட்டு வெளியேற்றுகிறது, அல்லது அலெக்ஸி நவால்னியின் அமெரிக்க-சார்பு ‘தாராளவாத’ எதிர்ப்பை வெளிப்படையாக ஆதரிக்க முனைகிறது அல்லது இரண்டையும் செய்கிறது.
வெளிநாட்டில் சேமிப்பையும் தொடர்பையும் கொண்டிருக்கும் ரஷ்யாவின் குறுகிய உயர் மற்றும் நடுத்தர வர்க்க உறுப்பினர்கள், நாட்டை விட்டு வெளியேறி பால்டிக் நாடுகளிலும் காகசஸில் உள்ள முன்னாள் சோவியத் குடியரசுகளிலும் தஞ்சம் புகுந்துள்ளனர். கடந்த வார நிலவரப்படி, அவர்களின் எண்ணிக்கை 150,000 முதல் 200,000 என மதிப்பிடப்பட்டிருந்தது, ஆனால் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம்.
திங்களன்று, ரஷ்ய அரசுக்கு சொந்தமான Channel 1 தொலைக்காட்சி நிலையத்தின் ஆசிரியர் பரவலாக விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில், ‘போர் இல்லை’ என்ற சமிக்ஞையுடன் குறுக்கிட்டார். மேலும், ஒரு காணொளி செய்தியில், அவர் நவால்னிக்கு தனது ஆதரவை அறிவித்ததுடன், தாராளவாத எதிர்ப்பால் அரசியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தப்படும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் சேருமாறு ரஷ்யர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஒலெக் டெரிபாஸ்கா (Oleg Deripaska) உட்பட, புட்டினுக்கு நெருக்கமாக இருந்த பல தன்னலக்குழுவினரும் போருக்கு எதிராகப் பேசியுள்ளனர்.
இந்த சக்திகளுக்கு தொழிலாளர்கள் எந்தவித ஆதரவையும் வழங்கக் கூடாது. அவர்கள் ‘அமைதி’க்காக நிற்கவில்லை, மாறாக நேட்டோவுடனான ஒருங்கிணைப்பை நாடும் தன்னலக்குழு மற்றும் உயர் நடுத்தர வர்க்க பிரிவினருக்காக நிற்கின்றனர், மேலும் சிக்கன நடவடிக்கை மற்றும் போர்களுக்கு மட்டுமே வழிவகுக்கும் ஏகாதிபத்திய ஆதரவு ஆட்சி மாற்ற நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்கள் புட்டின் ஆட்சியையும், உக்ரேனில் அதன் குற்றகரமான போரையும் தங்கள் சொந்த, சுயாதீனமான வர்க்க நலன்களின் நிலைப்பாட்டில் இருந்து எதிர்க்க வேண்டும், மேலும் முதலாளித்துவ அமைப்புமுறையை தூக்கியெறிவதற்கு புரட்சிகர சர்வதேசியத்தின் அடிப்படையிலும், உக்ரேன், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்களுடன் கூட்டணி சேர்ந்தும் போராட வேண்டும்.