தீவிரமடையும் சமூக அமைதியின்மைக்கு மத்தியில் துனிசிய ஜனாதிபதி சர்வாதிகார அதிகாரங்களை பெற்றுக்கொள்கின்றார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த ஜூலை மாதம் ஆட்சிக்கவிழ்ப்பை மேற்கொண்ட பின்னர் தனக்கு வழங்கிய கொடூரமான அதிகாரங்களை இரத்து செய்ய அதன் உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வாக்களித்த பின்னர் துனிசிய ஜனாதிபதி கையிஸ் சயீத் கடந்த வாரம் பாராளுமன்றத்தை கலைத்தார்.

இவ்வதிகாரங்களில் பாராளுமன்றத்தை இடைநிறுத்துதல், அமைச்சர்களை நியமனம் செய்தல் மற்றும் அமைச்சர்கள் சபையின் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குதல், சட்டத்தை இயற்றுவதற்கு ஜனாதிபதியின் ஆணைகளைப் பயன்படுத்துதல் மற்றும் நீதித்துறை சுதந்திரம் மற்றும் நீதிபதிகளை தெரிவுசெய்தல் மற்றும் பதவியுயர்வு கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்வது ஆகியவற்றைக் கையாளும் உச்ச நீதிக் குழுவை பெப்ரவரியில் கலைத்தல் ஆகியவை அடங்கும்.

துனிஸில் ஆர்ப்பாட்டக்காரர்கள், துனிஸ், ஞாயிறு, ஜூலை 25இல் (AP Photo/Hedi Azouz)

சயீத்தின் இறுதி நடவடிக்கை, துனிசியாவின் அரசியல் உயரடுக்கிற்குள் நிலவும் கசப்பான உட்கட்சிப் பூசல்களுக்கு சட்டப்பூர்வமாக கட்டுப்படாமல் இருப்பதன் மிகவும் வெளிப்படையான அறிகுறியான வாக்களிப்பிற்கு எதிரானதாகும். இது நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்துவதற்கான களத்தை அமைக்கிறது.

கடந்த ஆண்டு அவர் இஸ்லாமிய என்னாஹ்டா கட்சி அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்து, பாராளுமன்றத்தை இடைநிறுத்தி, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற தடையுரிமையை நீக்கி மற்றும் இராணுவத்தை அரசு கட்டிடங்களின் பாதுகாப்புக்கு அனுப்பினார். நாட்டின் 12 மில்லியன் மக்கள்தொகையில் 28,000 இற்கும் அதிகமான மக்களைக் கொன்ற கோவிட்-19 தொற்றுநோயை அரசாங்கம் கையாண்ட விதத்திற்கு எதிரான எதிர்ப்புக்கள் மீதான பொலிஸ் மிருகத்தனம், பொருளாதார நெருக்கடி போன்ற அரசாங்கத்தின் மீதான பல மாதங்களாக நடந்து வந்த போராட்டங்களைத் தொடர்ந்து இது வந்துள்ளது. அவரது சதியை எதிர்ப்பவர்களுக்கு எதிராக இராணுவம் பலத்தை பிரயோகிக்க தயங்காது என அவர் தொலைக்காட்சியில் அறிவித்தமை தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும்.

சயீத் டஜன் கணக்கான நீதிபதிகள், அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் பயணம் செய்ய தடை விதித்தார் மற்றும் மற்றவர்களை வீட்டுக் காவலில் வைத்தார். அவர் தேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை மூடிவிட்டு, தேர்தலுக்கான சுதந்திர உயர் ஆணையத்தை ஓரங்கட்டினார். அவர் புவி இயற்பியல் பேராசிரியரான நஜிலா பவுடனை ஒரு அரசாங்கத்தின் தலைவராக நியமித்து மற்றும் 2014 அரசியலமைப்பை இரத்து செய்தார். ஜனாதிபதியின் அதிகாரங்களை வலுப்படுத்தும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படும் பொது இணையவழி ஆலோசனை செயல்முறைக்குப் பின்னர், நிபுணர்கள் குழுவினால் உருவாக்கப்படும் புதிய அரசியலமைப்பின் மீது இந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த உள்ளதாக சயீத் கூறினார். ஜூலை 25ஆம் தேதி நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பிற்கு பின்னர் டிசம்பர் 17ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும்.

இந்த ஆலோசனை நிகழ்வில், 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்காளர்களே கலந்துகொண்டனர். இது ஜனாதிபதிக்கும் அவரது கொள்கைகளுக்கும் பரவலான விரோதப் போக்கைக் குறிக்கிறது. இரண்டு பெரிய கட்சிகளான என்னாஹ்டா (Ennahda) மற்றும் சுதந்திர அரசியலமைப்புக் கட்சி ஆகிய இரண்டும், ஆழமாக மதிப்பிழந்தவையாகும். ஜூலையில் வாக்கெடுப்பு நடத்துவதற்கான சயீத் இன் திட்டங்களை நிராகரித்து, பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் சட்டபூர்வமாக கடமையான 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன.

26 பெப்ரவரி 2020 இல் துனிசியாவின் ஜனாதிபதி கையிஸ் சயீத் (Photo by Houcemmzoughi badoo)

2011 இல் நீண்ட கால சர்வாதிகார ஆட்சியாளர் சீன் எல் அபிடீன் பென் அலி வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து அவர் ரியாத்திற்கு தப்பிச் சென்றார். முன்னாள் சட்டப் பேராசிரியரும், பழமைவாதக் கருத்துக்களைக் கொண்ட அரச பிரமுகருமான சயீத் அரசியலில் நுழைந்து, 2019 இல் ஜனாதிபதியானார்.

சயீத்தின் நீண்டகாலமாகத் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே பெருகிவரும் அமைதியின்மையை எதிர்கொள்ளும் வகையில், பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரத்தின் மீதான துனிசிய உயரடுக்கின் பிடியை தக்கவைத்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை அமைப்பதற்கான முன்னோடியாக இருந்தது. பிரதான ஏகாதிபத்திய சக்திகள் அரசியல் சாசனத்தை மதிக்குமாறு அவரை வலியுறுத்தும் வெற்று அறிக்கைகளை வெளியிட்டன. மிகப்பெரிய தொழிற்சங்கமான துனிசிய பொது தொழிலாளர் இயக்கம் (UGTT), 'இந்த கடினமான நேரத்தில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளின் அரசியலமைப்பு சட்டபூர்வமான தன்மைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்' என்று அழைப்பு விடுத்தது.

அவரது ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து எட்டு மாதங்களில் பொருளாதார நிலை மோசமாகிவிட்டது. திங்களன்று துனிசியா 2022 என வெளியிடப்பட்ட OECD இன் அறிக்கையின் படி, ஒரு தலைமுறையில் மிக மோசமான நெருக்கடியை துனிசியர்கள் எதிர்கொள்கின்றனர். ஏனெனில் கோவிட்-19 ஏற்கனவே மந்தமடைந்து கொண்டிருந்த பொருளாதாரத்தை தாக்கியுள்ளது' எனக் குறிப்பிட்டது. தொற்றுநோய் குறிப்பாக சுற்றுலா மற்றும் சேவைத் துறைகளில் கடுமையான பொருளாதாரச் சுருக்கத்திற்கு வழிவகுத்தது. ஏற்கனவே உயர் மட்டத்தில் இருந்த வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இது துனிசியாவின் இளம் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினரான 15-29 வயதுடையவர்களை பாதித்துள்ளது. வறுமை அதிகரித்து வருகிறது. சர்க்கரை மற்றும் அரிசிக்கு பரவலாக தட்டுப்பாடு உள்ளது.

அரச நிதிகள் வீழ்ச்சியடைந்துள்ளன. சில பொதுத்துறை ஊதியங்கள் சமீபத்திய மாதங்களில் தாமதமாக வழங்கப்பட்டன. இது அரசாங்கத்தால் நடத்தப்படும் நிறுவனங்களை தனியார்மயமாக்குவது, அதன் பொதுத்துறை ஊதிய மசோதாவை குறைப்பது, புதிய வரிகளை விதிப்பது மற்றும் ஏற்கனவே உள்ளவற்றை அதிகரிப்பது மற்றும் பரவலான உணவு பற்றாக்குறையாக உள்ள நிலைமைகளின் கீழ் ரொட்டி மானியங்களை வெட்டுவதற்கு இட்டுச்செல்வது போன்றவற்றுடன் கடனுக்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு அரசாங்கத்தை தூண்டியது. ஆனால், முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் UGTTஇன் ஒப்புதல் தேவைப்படும் அத்தகைய கடனுக்கு கோடைகாலத்திற்கு முன் ஒப்புக்கொள்ளப்பட வாய்ப்பில்லை. இது நாணயத்தின் சரிவைத் தடுக்க மிகவும் தாமதமாகலாம் என்பதுடன், அரச சம்பளம் தாமதமாக அல்லது கொடுக்கப்படாமல் இருக்கலாம். மற்றும் அடிப்படை அரச மானியத்துடனான உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் நாட்டின் திறனையும் பாதிக்கலாம்.

ஏப்ரல் 1, 2022 வெள்ளிக்கிழமை, துனிசியாவின் துனீசில் உள்ள நீதித்துறை பொலிஸ் தலைமையகத்திற்கு துனிசியாவின் இஸ்லாமிய என்னஹ்டா கட்சியின் தலைவரான சபாநாயகர் ராச்செட் ஹான்னூச்சி (மத்தியில்) விசாரணைக்கு வந்தார் (AP Photo/Hassene Dridi)

உக்ரேனில் அமெரிக்கா/நேட்டோ தூண்டிவிட்ட போருக்கான துனிசியாவின் பிரதிபலிப்பால் இந்தக்கடன் மேலும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. ஏனெனில் துனிசியா சுற்றுலா மற்றும் வர்த்தகத்திற்காக நம்பியிருக்கும் ரஷ்யாவுடன் உறவுகளைப் பேண முயற்சிக்கின்றது. அதே நேரத்தில் பொருளாதாரத்தை தக்க வைக்க அதன் நிதி மற்றும் இராஜதந்திர ஆதரவுக்கு முக்கியமான அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை எதிர்க்காமல் இருக்க விரும்பகின்றது. உக்ரேன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பைக் கண்டிக்கும் ஐ.நா பொதுச் சபை தீர்மானத்திற்கு ஆதரவாக துனிசியா வாக்களித்த போதிலும், ரஷ்யாவை பகிரங்கமாக கண்டனம் செய்வதைத் தவிர்த்துள்ளது. சில நாட்களுக்குப் பின்னர் துனிசியாவுக்கான புதிய ரஷ்ய தூதரை வரவேற்ற வெளியுறவு அமைச்சர் ஓத்மான் ஜெராண்டி இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த விரும்புவதாக வலியுறுத்தினார்.

இந்த ஆண்டு சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளை எதிர்த்து ஏராளமான ஆர்ப்பாட்டங்களை கண்டுள்ளது. சயீத்தின் ஜூலை ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் எட்டு மாதங்களில் நடந்த மொத்த ஆர்ப்பாட்டங்களின் எண்ணிக்கை அதற்கு முன்னர் நடந்த எல்லாவற்றையும் விட அதிகமாக உள்ளது.

கடந்த மாதம், 13 துனிசிய மற்றும் சர்வதேச உரிமைக் குழுக்கள் கசிந்த ஒரு வரைவுச் சட்டத்தைப் பற்றி அறிவித்தன. இது அரசாங்க அதிகாரிகளுக்கு பெரும் அதிகாரங்களையும் விருப்புரிமையையும் வழங்குவதுடன் அரசுசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொது சமூக அமைப்புகளின் உருவாக்கம், நிதியளிப்பு, செயல்பாடு மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றில் தலையிடும் உரிமைகளையும் உள்ளடக்கியுள்ளது. இவை அடக்குமுறை பென் அலி ஆட்சியின் கட்டுப்படுத்தும் விதிமுறைகளே மீண்டும் நடைமுறைப்படுத்துகின்றது. 2011 எழுச்சிகளினால் வென்ற உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை நிலைநாட்டுவதாக உறுதியளித்த ஜனாதிபதியினால் ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறை அதிகரித்து வருவதாக மனித உரிமைக் குழுக்கள் எச்சரித்துள்ளன.

யதார்த்தத்தை தலைகீழாக மாற்றி, 'சட்டவிரோத' கூட்டத்தை நடத்தியதன் மூலம் இது சட்டமன்ற உறுப்பினர்களின் 'சதிப்புரட்சி முயற்சி' என்று சயீத் குற்றம் சாட்டி மற்றும் அரசின் பாதுகாப்பிற்காக பாராளுமன்றத்தை கலைக்கும் தனது முடிவை ஆதரித்தார். 'அரச பாதுகாப்புக்கு எதிராக சதி செய்ததற்காக' இணையவழி கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது விசாரணை நடத்த நீதி அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பேரவையின் நாடாளுமன்ற சபாநாயகரும், 217 ஆசனங்களில் கால் பங்கைக் கொண்ட என்னஹ்டா கட்சியின் தலைவருமான ராச்செட் ஹான்னூச்சி, பயங்கரவாதக் குற்றப் புலனாய்வுப் பிரிவு தன்னையும் என்னஹ்டா மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்த குறைந்தது 20 சட்டமன்ற உறுப்பினர்களையும் விசாரணைக்கு அழைத்ததாகக் கூறினார்.

சயீத் மீண்டும் UGTT இன் ஆதரவைப் பெற முடியும். அதன் பொதுச்செயலாளர் நூரெடின் தபோபி, அரசியல்வாதிகள் தங்கள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு தேர்தலுக்கு முன் 'தேசிய உரையாடலை' நடத்த வேண்டும் என்று நீண்ட காலமாக அழைப்பு விடுத்து வருகிறார். மேலும் 'கடந்த ஜூலை 25 அன்று நடந்ததை ஒரு சதியா அல்லது சதியில்லையா என்ற கருத்து வேறுபாட்டை நாம் கடந்துவரவேண்டும்” என்றார்.

அவர் சயீத்தை பாராளுமன்றத்தைக் கலைக்க அழைப்பு விடுத்து, மேலும் அவர் அவ்வாறு செய்தபோது அவரைப் பாராட்டினார். இது 'நாட்டை சீர்குலைத்து, அதை சட்டப்பூர்வமான மோதல்களின் அலைக்கு இட்டுச் செல்லும்' முயற்சிக்கு எதிரான ஒரு பிரதிபலிப்பாகும் என்று கூறினார். ஏப்ரல் 1 ஆம் தேதி, அவர் சயீத்துடன் பேச்சு வார்த்தைகளை நடத்தி, மற்றும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஒரு 'கூட்டுழைப்பு' தேவை என்பதை ஒப்புக்கொண்டார்.

பெரும் வல்லரசுகள் பெரும்பாலும் அமைதியாக இருக்கின்றபோதிலும் நாட்டின் சரிவைத் தடுக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் (EU) நிதி உதவியைத் தொடர்ந்தும் தக்க வைத்துக்கொண்டுள்ளது. சயீத் பாராளுமன்றத்தை கலைத்த அதே நாளில், துனிஸில் சயீத் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய விரிவாக்க ஆணையர் ஒலிவர் வார்ஹேலி ஆகியோருக்கு இடையே நடந்த சந்திப்பைத் தொடர்ந்து, இந்த ஆண்டு துனிசியாவிற்கு 450 மில்லியன் யூரோக்கள் நிதிய ஆதரவை வழங்குவதாக ஐரோப்பிய ஆணையம் அறிவித்தது.

பென் அலி ஆட்சியைக் கவிழ்த்த எதிர்ப்புக்களுக்குப் பின்னரான கடந்த 11 ஆண்டுகால நிகழ்வுகள், தொழிலாள வர்க்கம் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக தலையிடாமல்விட்டால், துனிசியா, லெபனான் மற்றும் ஈராக்கில் 'தொழில்நுட்பவாதிகள்' என்ற போர்வையிலும் அல்லது எகிப்தில் உள்ளதுபோல் இராணுவ நபரூடாகவும் நிதிய கொள்ளைக்காரர்களின் ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் உயரடுக்கு பெருகிய முறையில் அடக்குமுறை வழிகளை நாடும் என்பதை நிரூபித்துள்ளது.