இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கையில் நாளை நடைபெறவுள்ள ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்தில் இலட்சக்கணக்கான இலங்கை தொழிலாளர்கள் பங்கேற்பார்கள். கடந்த வியாழன் அன்று இதே போன்றதொரு வேலை நிறுத்தத்தை நடத்தியிருந்தார்கள்.
தொழிற்சங்கங்கள் வெள்ளிக்கிழமை நடவடிக்கையை 'ஹர்த்தால்' (பொது வேலைநிறுத்தம் மற்றும் முழு அடைப்பு) என்று அறிவித்துள்ளதுடன், அதற்கு ஆதரவளிக்குமாறு அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளன. விரிவடைந்து வரும் வெகுஜன கோபத்தை திசை திருப்பும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, தொழிற்சங்கங்கள் மே 11 அன்று மற்றொரு ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கவுள்ளன.
இந்த வேலைநிறுத்தங்கள் முழு தொழிலாள வர்க்கத்தையும் அரவணைக்கும் அதே வேளை, கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகள் மற்றும் சிறு வணிகர்கள் உட்பட, ஜனத்தொகையில் அதிக ஒடுக்கப்பட்ட அடுக்கினர் இணைந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மில்லியன் கணக்கானவர்கள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் இராஜினாமா செய்யுமாறும், இராஜபக்ஷ ஆட்சியினாலும் முழு ஆளும் வர்க்கத்தினராலும் அவர்கள் மீது குவிக்கப்பட்டிருக்கும் சமூகப் பேரழிவிற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறும் கோருகின்றனர்.
இலங்கையில் தொழிலாள வர்க்கத்தின் தலையீடு குறிப்பிடத்தக்கதும் வரவேற்கத்தக்கதுமாகும். இது சூடான், ஈரான், பெரு, துருக்கி மற்றும் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பரவி வரும் வர்க்கப் போராட்டங்களின் ஒரு பகுதியாகும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உட்பட பிரதான முதலாளித்துவ மையங்களிலும் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் வெளிப்பட்டு வருகின்றன.
இந்த அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதல், வானளாவ உயரும் பணவீக்கம் மற்றும் ஊதியங்களும் வேலைகளும் வெட்டப்படுவதற்கும் எதிராக கைகளை உயர்த்தியுள்ளனர். உலக முதலாளித்துவ நெருக்கடியானது கோவிட்-19 தொற்றுநோயால் எரியூட்டப்பட்டு, ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேனில் நடந்து வரும் அமெரிக்க-நேட்டோ பினாமி யுத்தத்தினால் ஒரு புதிய கட்டத்திற்கு வெடித்துள்ளது.
தீவு முழுவதும் ஏப்ரல் ஆரம்பத்தில் தொடங்கிய தொடர் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களின் உச்சத்திலேயே இலங்கையில் தொழிலாள வர்க்கம் போராட்டத்திற்குள் நுழைகின்றது. இந்த வெகுஜன இயக்கம் இராஜபக்ஷ அரசாங்கத்தின் இருப்பை மட்டுமன்றி, முதலாளித்துவ முறைமைக்கு இன்றியமையாத முட்டுக்கட்டையாக செயல்படும் தொழிற்சங்கங்கள் உட்பட முழு ஆளும் ஸ்தாபனத்தையும் ஆட்டங்காணச் செய்துள்ளது.
நாளைய பொது வேலைநிறுத்தம் பற்றிய போர்க்குணமிக்க தோரணைகள் அனைத்திலும், தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சியடைந்து வரும் வேலைநிறுத்த இயக்கத்திற்கு முட்டுக்கட்டை போட தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
சுகாதார தொழில் வல்லுநர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ், “நாங்கள் அரசாங்கத்தை இராஜினாமா செய்ய மே 6 வரை அவகாசம் அளித்தோம், அரசாங்கம் மக்களின் பேச்சைக் கேட்கவில்லை என்றால் நாங்கள் ஹர்த்தால் நடத்துவோம்” என்று அறிவித்தார்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், 'அரசாங்கம் வெளியேறத் தயாராக இல்லை என்றால், நாங்கள் அதை வெளியேற்ற வேண்டும்' என்று முழங்கினார்.
எவ்வாறாயினும், தொழிற்சங்கங்கள் இந்த வெற்று வாய்ச்சவடால்களின் பின்னால் கொண்டுசெல்லும் அரசியல் வேலைத்திட்டம் என்ன?
அவர்கள் அனைவரும் தொழிலாள வர்க்கத்தை பாராளுமன்ற அரசியலின் முட்டுச்சந்துக்குள்ளும் முதலாளித்துவ எதிர்க்கட்சிகளின் கைகளுக்குள்ளும் திசை திருப்பிவிட முயல்கின்றனர்.
மே 1 அன்று, தேசிய தொழிற்சங்க முன்னணி மற்றும் வெகுஜன அமைப்புக்கள் வெளியிட்ட அதன் அறிக்கையில், அதன் பிரதான கோரிக்கைகளை பின்வருமாறு பட்டியலிட்டுள்ளன: 'மதிப்பிழந்த ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கமும் இராஜினாமா செய்ய வேண்டும்; ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இடைக்கால ஆட்சியை அனுமதிக்கவும்; சிறிய அமைச்சரவையுடன் அரசியல் ஸ்திரத்தன்மை; பாராளுமன்றத்தின் மூலம் மக்களின் இறையாண்மையை நடைமுறைப்படுத்துதல்; குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மக்கள் ஆணையுடன் ஒரு அரசாங்கத்தை நிறுவ வேண்டும்.
வெள்ளிக்கிழமை பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள தொழிற்சங்க முன்னணியான தொழிற்சங்க ஒருங்கிணைப்புக் குழுவும் அதே அடிப்படையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.
இந்தக் கோரிக்கைகளின் அர்த்தம் என்ன? இது முற்றிலும் மதிப்பிழந்த இராஜபக்ஷ அரசாங்கத்திற்குப் பதிலாக எதிர்க்கட்சிகளின் தேர்ந்தெடுக்கப்படாத இடைக்கால அரசாங்கத்தை அமைத்து பின்னர் தேர்தலை நடத்துவதாகும். இடைக்கால ஆட்சியின் நோக்கம் மிகத் தெளிவாக உள்ளது: அது 'அரசியல் ஸ்திரத்தன்மையை' நிறுவுவதாகும். வேறுவிதமாகக் கூறினால், முதலாளித்துவ ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக, வெகுஜன வேலைநிறுத்தம் மற்றும் எதிர்ப்பு இயக்கத்தை நசுக்குவதாகும்.
தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள், கிட்டத்தட்ட எதிர்க் கட்சிகளான வலதுசாரி ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மற்றும் சிங்கள இனவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) மற்றும் கூட்டுத்தாபன கருத்தாலோசனை குழுக்களின் கோரிக்கைகளுடன் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவையாக உள்ளன. 'அரசியல் ஸ்திரத்தன்மை' என்பது பெருவணிகங்களும் சர்வதேச நாணய நிதியமும் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் வலியுறுத்தி வரும் ஒன்றகும்.
அரசாங்க கட்சிகள், எதிர்க் கட்சிகள் இரண்டும் சேர்த்து, எந்தவொரு பாராளுமன்றக் கட்சிகளுக்கும், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சிக்கன திட்டத்திற்கு மாற்று வேலைத் திட்டம் கிடையாது. சர்வதேச நாணய நிதியத்திடம் அவசர பிணையெடுப்பு கடன் பெறுவதற்கான அரசாங்கத்தின் முடிவை யாரும் எதிர்க்கவில்லை, அல்லது அத்தகைய கடன், தவிர்க்க முடியாமல் சிக்கன வெட்டுக்களை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அமுல்படுத்த நிர்ப்பந்திக்கும் என்று விளக்கவில்லை. ஐ.ம.ச. மற்றும் ஜேவிபி இரண்டும், சந்தை சார்பு மறுசீரமைப்பை செயல்படுத்துவதில் சாதனை படைத்தவை ஆகும்.
உழைக்கும் மக்களுக்கு இன்னும் மோசமான சமூகப் பேரழிவுகளே தயாரிக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச நாணய நிதியத்துடனான இரண்டு வார பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, நிதி அமைச்சு மே 2 அன்று வெறியிட்ட ஒரு அறிக்கை, பிணை எடுப்புக்கு என்ன விலை கொடுக்க வேண்டும் என்பதை கலந்துரையாடிக்கொண்டிருப்பதாக தெரிவித்தது.
'கல்வி, சுகாதாரம், பொது போக்குவரத்து மற்றும் சேவை வழங்கல் போன்ற துறைகளில் முதலீடு' தேவைப்படுவதால், குறித்த திட்டநிரலில் தனியார்மயமாக்கல் நடவடிக்கை உள்ளது என்பதை அது தெளிவுபடுத்தியது. 'உற்பத்தியற்ற அரசாங்க மானியம் மற்றும் கொடுப்பனவுகளின் கலாச்சாரம் இனி சாத்தியமில்லை' என்று அறிக்கை அப்பட்டமாக அறிவித்தது. அதாவது விலை மானியங்கள், நலன்புரி கொடுப்பனவுகள் மற்றும் சமூக சேவைகள் மேலும் குறைக்கப்பட்டு முழுமையாக வெட்டித்தள்ளப்பட வேண்டும் என்பதாகும்.
செவ்வாயன்று பாராளுமன்றத்தில் பேசிய நிதியமைச்சர் அலி சப்ரி, நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு 50 மில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்துவிட்டது என்று கூறினார். “இரண்டு வருடங்களிலாவது இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியும் என நான் நினைக்கவில்லை,” என அவர் மேலும் கூறினார். பெரிய வரி உயர்வுகள் விதிக்கப்படும் என்று தெளிவுபடுத்திய அவர், 'சம்பாதிப்பவர்கள் கொஞ்சம் பணத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும், இல்லையெனில் சமூகம் வீழ்ச்சியடையும். அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் வரி வருவாய் சுமார் 15 சதவீதம் அதிகரிக்கப்பட வேண்டும்,” என்றார்.
தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் ஏற்கனவே சிதைந்து வரும் இலவச சுகாதாரம், குழந்தைகளின் கல்வி மற்றும் பிற அனைத்து சேவைகளுக்கும், அவர்களின் சொற்ப ஊதியத்தில் இருந்து பணம் செலுத்த நிர்பந்திக்கப்பட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கோருகிறது. அதே நேரத்தில் வேலைகள், ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்கள் வெட்டித் தள்ளப்படும். சுருக்கமாகச் சொன்னால், சிதைந்து கொண்டிருக்கும் முதலாளித்துவத்தின் உயிர்வாழ்விற்காக தொழிலாளர்களும் ஏழைகளும் தியாகம் செய்ய வேண்டும்.
எதிர்க் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் உட்பட முழு அரசியல் ஸ்தாபனமும், ஏற்கனவே நிலவும் மோசமான சமூக நெருக்கடியின் மீது குவிந்து வரும் இத்தகைய சிக்கன நடவடிக்கைகளை, ஜனநாயக ரீதியாக செயல்படுத்தப்பட முடியாது என்பதை நன்று அறிந்தே இருக்கின்றன. திரைக்குப் பின்னால், இராஜபக்ஷ ஆட்சியினாலோ அல்லது அதற்குப் பதிலாக வெரும் எந்தவொரு முதலாளித்துவ அரசாங்கத்தினாலோ, எதிர்ப்புக்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காகப் பாதுகாப்புப் படைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் முன்னறிவிப்பின்றி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
தொழிற்சங்கங்கள் குற்றவியல் அரசியல் பாத்திரத்தை வகிக்கின்றன. அவை வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பது, தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக அல்ல. மாறாக, தொழிலாள வர்க்கத்தின் மீது கடுமையான தாக்குதல்களைத் தயாரிக்கும் அரசியல் ஸ்தாபனத்திற்கு நேரத்தை வாங்கிக் கொடுப்பதற்காகவே அவை வேலை நிறுத்தங்களுக்கு அழைக்கின்றன. ஒரு 'இடைக்கால ஆட்சி' மற்றும் தேர்தல்கள் தாங்கள் எதிர்கொள்ளும் சமூகப் பேரழிவை முடிவுக்குக் கொண்டுவரும் என்று தொழிலாளர்களை நம்பவைத்து ஏமாற்றவே தொழிற்சங்கங்கள் முயல்கின்றன.
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரே வழி, அதன் அவசர வர்க்கத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் -அதாவதுவே ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில்- அதன் சுயாதீனமான பலத்தை அணிதிரட்டுவதே ஆகும்.
உங்களின் வர்க்க நலன்களுக்காகப் போராட தொழிற்சங்கங்கள் சாராத நடவடிக்கை குழுக்களை அமைக்க உங்கள் தொழிற்சாலைகள் மற்றும் வேலைத் தளங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் தொழிலாள வர்க்க அயல் பகுதிகளிலும் உள்ள தொழிலாளர்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும், அவசரகாலச் சட்டங்கள், அத்தியாவசியப் பொதுச் சேவைகள் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் உட்பட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களுடன் நிறைவேற்று ஜனாதிபதி முறையை உடனடியாக ஒழிக்க வேண்டும் என்று சோ.ச.க. கோருகிறது.
உழைக்கும் மக்களுக்கு, சுழன்று அடிக்கும் விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் பட்டினிக்கும் முதலாளித்துவ அமைப்பிற்குள் தீர்வு கிடையாது.
சோ.ச.க. தனது நடவடிக்கைக் குழுக்களின் மூலம், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் போராட்டத்திற்கான அடிப்படையாக பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது:
- பொது வாழ்விற்கு இன்றியமையாத அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஏனைய வளங்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும்!
- வங்கிகள், பெருநிறுவனங்கள், பெரிய தோட்டங்கள் மற்றும் பிற முக்கிய பொருளாதார மையங்களை தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் தேசியமயமாக்க வேண்டும்!
- சர்வதேச வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் சிக்கன கோரிக்கைகளை நிராகரிக்கவும்!
- பில்லியனர்கள் மற்றும் பெருநிறுவனங்களின் பிரமாண்டமான செல்வத்தை கைப்பற்ற வேண்டும்!
- ஏழை விவசாயிகள் மற்றும் சிறு வியாபரம் செய்பவர்களின் அனைத்து கடன்களையும் ரத்து செய்! விவசாயிகளுக்கு உர மானியம் உட்பட அனைத்து மானியங்களையும் மீண்டும் வழங்கு!
- ஒழுக்கமான மற்றும் பாதுகாப்பான வேலை நிலைமையுடன் அனைவருக்கும் வேலை உத்தரவாதம் வேண்டும்! வாழ்க்கைச் செலவுப் புள்ளிக்கு ஏற்ப ஊதியம் வேண்டும்!
- அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் நிராகரி!
நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்பி தமது சமூக உரிமைகளுக்காகப் போராடுவதன் மூலம், தொழிலாள வர்க்கமானது அதே போன்ற தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள கிராமப்புற மக்களைத் தன் பக்கம் அணிதிரட்டத் தொடங்கும்.
ஒரு இடைக்கால ஆட்சியை கொண்டுவரவும் முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் பிரச்சாரத்திற்கு எதிராக, இலாப அமைப்பை புரட்சிகரமாக தூக்கி எறிந்து, சோசலிச அடிப்படையில் சமுதாயத்தை மறுவடிவமைப்பதன் பேரில், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்று சோ.ச.க. பரிந்துரைக்கின்றது.
இந்த அரசியல் போராட்டத்தில், இலங்கைத் தொழிலாளர்கள் உலகெங்கிலும் இதேபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்கின்ற, இப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளின் பக்கம் திரும்ப வேண்டும். தொழிலாளர்கள் எதிர்கொள்கின்ற, உலக முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட நெருக்கடிக்கு எந்த நாட்டிலும் தேசிய தீர்வு கிடையாது.
அதனால்தான், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் தொடங்கப்பட்ட தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியின் மூலம் மற்ற நாடுகளில் உள்ள தொழிலாளர்களுடன் ஒருங்கிணைப்பதற்கு நடவடிக்கை குழுக்களின் வலையமைப்பை உருவாக்குமாறு தொழிலாளர்களை சோ.ச.க. வலியுறுத்துகிறது.
தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் பணிகளின் அவசரத்தன்மை மற்றும் சோ.ச.க. விளக்கியவாறு, அதன் அரசியல் போராட்டத்தை சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை கடந்த மாத நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன. அத்தகைய போராட்டத்திற்கு புரட்சிகர தலைமைத்துவம் அவசியமாகும். நடவடிக்கை குழுக்களை அமைக்க விரும்பும் தொழிலாளர்களை சோ.ச.க. உடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து அதை ஒரு வெகுஜனக் கட்சியாகக் கட்டியெழுப்புமாறும் அழைப்பு விடுக்கின்றோம்.
மேலும் படிக்க
- இலங்கை: ரம்புக்கனை பொலிஸ் படுகொலை தமிழ் தேசிய கூட்டமைப்பை அம்பலப்படுத்துகிறது
- இலங்கையில் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் எதிர்கொள்ளும் தீர்க்கமான அரசியல் பிரச்சினைகள்
- இலங்கையின் இராஜபக்ஷ அரசாங்கத்தை வீழ்த்து! நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்திடு! சிக்கன நடவடிக்கையும் பட்டினியும் வேண்டாம்! அனைவருக்கும் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகளைப் பெறக்கூடிய ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராடுவதற்கு நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கு!
