மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்கத் தலைமையிலான போருக்கு மத்தியில், துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், நேட்டோவில் இணைவதற்கான பின்லாந்து மற்றும் சுவீடனின் நகர்வுகளுக்கு அவரின் கவலைகளையும் எதிர்ப்பையும் எடுத்துக் காட்டியுள்ளார். நேட்டோவில் ஒரு புதிய நாடு இணைய வேண்டுமானால், அதை ஆதரித்து அதன் 30 உறுப்பு நாடுகளும் ஒருமனதாக ஆதரவளிக்க வேண்டும்.
வெள்ளிக்கிழமை, எர்டோகன் கூறினார்: 'சுவீடன் மற்றும் பின்லாந்து தொடர்பான அபிவிருத்திகளை நாங்கள் கவனித்து வருகிறோம், ஆனால் எங்களுக்கு சாதகமான கருத்துக்கள் இல்லை.” துருக்கிய அரசு, பயங்கரவாத அமைப்பாகத் தடைச் செய்துள்ள குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியைச் (PKK) சுட்டிக் காட்டி, அவர் தொடர்ந்து கூறுகையில், “ஸ்கன்டினேவிய நாடுகள், துரதிருஷ்டவசமாக, பயங்கரவாத அமைப்புகளுக்கான விருந்தினர் மாளிகைகள் போல உள்ளன. PKK, DHKP-C ஆகியவை நெதர்லாந்து மற்றும் சுவீடனில் அமைந்துள்ளன. இன்னும் கூற வேண்டுமானால்; அவை அங்குள்ள நாடாளுமன்றங்களிலும் பங்கு வகிக்கின்றன,” என்றார்.
பிரெஞ்சு ஆதரவுடைய கிரீஸ் உடன் ஏகியன் மற்றும் மத்தியதரைக் கடலில் அதிகரித்து வரும் பதட்டங்களையும் எர்டோகன் குறிப்பிட்டார்: “எங்களுக்கு முன் இருந்த [துருக்கிய] அரசாங்கங்கள் நேட்டோவில் கிரீஸ் [திரும்ப] இணைந்தது தொடர்பாகத் தவறு செய்து விட்டன. நேட்டோ ஆதரவு கிடைத்ததும் துருக்கியை நோக்கி கிரீஸ் எடுத்துள்ள அணுகுமுறை உங்களுக்கே தெரியும், ஆகவே இந்த விஷயத்தில் நாங்கள் இரண்டாவது தவறைச் செய்ய விரும்பவில்லை.” 1980 இல் துருக்கியில் நேட்டோ ஆதரவுடன் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்குப் பின்னர், அந்தக் கூட்டணியின் இராணுவப் அணிக்குள் கிரீஸ் மீண்டும் திரும்புவதற்குத் துருக்கிய இராணுவ ஆட்சிக்குழு ஒப்புதல் அளித்ததை அவர் குறிப்பிடுகிறார்.
இந்த நிலைப்பாட்டையே எர்டோகன் நேற்றும் கடைப்பிடித்தார். துருக்கிக்கான பின்லாந்து மற்றும் சுவீடன் பிரதிநிதிகள் குழுவின் இன்றைய விஜயம் குறித்து கூறுகையில், “அவர்கள் திங்கட்கிழமை துருக்கிக்கு வருவார்கள். எங்களை அவர்கள் இணங்க வைப்பார்களா?” என்ற அவர் தொடர்ந்து கூறுகையில், 'முதலில், இந்த நிகழ்வுபோக்கின் போது, ஒரு பாதுகாப்பு அமைப்பான நேட்டோவில் இணைய துருக்கி மீது பொருளாதாரத் தடைகளை விதித்தவர்களுக்கு நாங்கள் 'ஆம்' என்று கூற மாட்டோம்,' என்றார்.
சுவீடனையும் பின்லாந்தையும் நேட்டோவில் அனுமதிக்க நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளின் அழுத்தத்திற்கு எர்டோகன் இறுதியில் அடிபணிவார் என்று நம்புவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை பேர்லினில் நடந்த நேட்டோ வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்திற்குப் பின்னர், அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கென் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அவை [பின்லாந்து மற்றும் ஸ்வீடன்] அதைச் செய்யத் தேர்ந்தெடுத்தால், அதில் நாங்கள் ஒருமித்த கருத்தை எட்டுவோம் என்று உறுதியாக நான் நம்புகிறேன்,” என்றார். அவர் கூறுகையில், “[துருக்கிய] வெளியுறவுத்துறை அமைச்சருடனோ அல்லது நேட்டோ அமர்வுகளுக்குள்ளோ நாங்கள் நடத்திய பிரத்யேக உரையாடலை நான் வகைப்படுத்த விரும்பவில்லை, ஆனால் நான் இவ்வளவு கூற முடியும்: அதாவது, இந்தக் கூட்டணியில் இணைய (சுவீடன், பின்லாந்துக்கு) கிட்டத்தட்ட மொத்த அணியிடமிருந்தும் மிகவும் பலமான ஆதரவைச் செவிமடுக்கிறேன்,” என்றார்.
பின்லாந்து மற்றும் சுவீடன் அரசாங்கங்கள் நேட்டோவில் இணைவதை நியாயப்படுத்தவும் அவற்றின் நீண்ட கால உத்தியோகபூர்வ நடுநிலைமைக் கொள்கைகளைக் கைவிடவும் உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைக் காரணம் காட்டுகின்றன. அடிப்படையில் வாஷிங்டன், பேர்லின் மற்றும் இலண்டனில் திட்டமிடப்பட்ட பல தசாப்தங்களாக நேட்டோ விரிவாக்கத்தின் ஒரு பாகமாக இருந்துள்ள, இந்த ஆத்திரமூட்டும் நகர்வு, உக்ரேன் மீதான அதன் பிற்போக்குத்தனமான படையெடுப்புக்கு ரஷ்யாவைத் தூண்டியது. ரஷ்யா உடனான ஒரு மோதலில் ஒட்டுமொத்த ஸ்கேன்டினேவிய பிராந்தியமும் ஒரு போர் மண்டலமாக மாற்றப்படக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது.
இத்தகைய எல்லா முயற்சிகளும் உக்ரேன் போரை ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையிலான ஒரு நேரடி இராணுவ மோதலாகவும் ஓர் அணுஆயுத உலகப் போராகவும் விரிவாக்கும் அபாயத்தை அதிகரிக்கின்றன. ஆனால் நேட்டோவின் இரண்டாவது மிகப் பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ளதும் மற்றும் பல தசாப்தங்களாக ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ விரிவாக்கத்தை ஆதரித்துள்ளதுமான ஒரு நாட்டின் தலைவராக எர்டோகனின் எதிர்வினைக்கும், நேட்டோவை அல்லது போரைக் கோட்பாட்டுரீதியில் எதிர்ப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
2014 இல் கியேவில் நேட்டோ ஒழுங்கமைத்த அதிவலது ஆட்சிக் கவிழ்ப்புச் சதி உட்பட, அங்காரா நேட்டோவின் உக்ரேன் கொள்கையை ஆதரிப்பதுடன், உக்ரேனிய இராணுவத்திற்கு முக்கியமான Bayraktar TB2 ஆயுதந்தாங்கி ட்ரோன்களை வழங்குகிறது.
எவ்வாறிருப்பினும், ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் மற்றும் தடுப்பாணைகளில் அங்காரா பங்கேற்கவில்லை. மேலும், ரஷ்யாவைப் பலவீனப்படுத்துவதற்காக போரைத் தொடரும் அல்லது இன்னும் விரிவாக்கும் நேட்டோ சக்திகளின் கொள்கைகளை, குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் கொள்கைகளை, அது விமர்சிக்கிறது.
ரஷ்யா மீதான நேட்டோ போரின் அளவைக் குறித்து துருக்கிய ஆளும் வட்டாரங்களில் பெருகிய கவலை உள்ளது. ரஷ்யாவைப் பலவந்தமாக உடைக்கவும்—குறிப்பாக ரஷ்யா அதன் இறையாண்மை பிரதேசமாக கருதும் கிரிமியாவைக் கைப்பற்றவும்—ஜனாதிபதி விளாடிமிர் புட்டினைப் பதவியிலிருந்து கவிழ்க்கவும் விரும்புவதை நேட்டோ அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். துருக்கிய ஆளும் உயரடுக்கு நேட்டோ-ரஷ்யப் போரின் சாத்தியக்கூறு குறித்தும் மற்றும் துருக்கிக்குச் சற்று வடக்கே இரத்தக்களரியோடு ரஷ்யா சிதைவதற்கான சாத்தியக்கூறு மீதும் சந்தேகத்திற்கு இடமின்றி ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.
கடந்த மாதம், துருக்கிய வெளியுறவுத்துறை அமைச்சர் Mevlüt Çavuşoğlu எச்சரித்தார்: “நேட்டோ கூட்டம் வரை, போர் நீண்ட காலம் நீடிக்காது என்று நாங்கள் நினைத்தோம். ஆனால், நேட்டோ கூட்டத்திற்குப் பிறகு, ஒரு கருத்து வெளிப்பட்டது. இந்தப் போர் தொடர வேண்டும் என்று விரும்பும் நாடுகள் உள்ளன. ரஷ்யாவைப் பின்னுக்குத் தள்ளுவதே அவற்றின் நோக்கமாக உள்ளது,” என்றார்.
துருக்கி ரஷ்யாவுடன் பரந்த இராணுவ-பொருளாதார உறவுகளைக் கொண்டுள்ளது. அது அமெரிக்காவின் ஆட்சேபணைகளையும் மீறி, ரஷ்யாவிடம் இருந்து S-400 ரக வான்வழி பாதுகாப்பு அமைப்புகளைக் கொள்முதல் செய்தது, அதன் இயற்கை எரிவாயுவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் குழாய் வழியாக நேரடியாக ரஷ்யாவிடமிருந்து பெறுகிறது. தற்போது இப்போதும் மெர்சினில் அக்குயு அணுசக்தி மின் ஆலையை ரஷ்யா தான் கட்டமைத்து வருகிறது. துருக்கி அதன் கோதுமையின் பெரும்பகுதியை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்கிறது. அனைத்திற்கும் மேலாக, மிகவும் தேவைப்படும் அன்னிய செலாவணி கையிருப்புகளைப் பெற துருக்கியின் விருந்தோம்பல் துறைக்கு ரஷ்யச் சுற்றுலாப் பயணிகள் மிகவும் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள்.
துருக்கிக்கு ஏற்படும் போர் விளைவுகளைக் குறித்த பயம் இருந்தாலும், போர் முனைவை விரிவாக்குவதற்கான அமெரிக்க நகர்வுகளை துருக்கிய முதலாளித்துவம் அதன் பிராந்திய நலன்களை முன்னெடுக்கவும் மற்றும் பிரதான ஏகாதிபத்திய சக்திகளுடன் பேரம் பேசவும் ஒரு சந்தர்ப்பமாகவும் பார்க்கிறது. 'சுவீடனும் பின்லாந்தும் நேட்டோவில் இணைவதற்கான கதவை நாங்கள் மூடவில்லை,' என்று எர்டோகனின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் கலின் கருத்துரைத்து, அங்காராவின் நடைமுறைவாத பேரம் பேசும் அணுகுமுறையை வெளிப்படுத்தினார்.
எவ்வாறாயினும், நேட்டோவில் இணைவதில் இருந்து சுவீடன் மற்றும் பின்லாந்தைத் தடுக்கும் துருக்கிய வீட்டோ அதிகாரம் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்கத் தலைமையிலான ஏகாதிபத்திய போர் முனைவுக்கு ஒரு கடுமையான சவாலாக இருக்கும் என்பதோடு, வாஷிங்டன் மற்றும் பேர்லினால் எர்டோகன் மீண்டும் இலக்கு வைக்கப்படலாம். இவ்விரு முன்னணி நேட்டோ சக்திகளும் 2016 ஆட்சிக் கவிழ்ப்புச் சதி முயற்சியை ஆதரித்தன, அந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதியின் போது அதைத் திட்டமிட்ட அதிகாரிகள் எர்டோகனைப் படுகொலைச் செய்ய முயன்றிருந்தனர்.
சிரியாவில் உள்ள குர்திஷ் தேசியவாத மக்கள் பாதுகாப்பு அமைப்புகளை (YPG) நேட்டோ நட்பு நாடுகள் ஆதரவளிப்பதை நிறுத்த வேண்டுமென அங்காரா விரும்புகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் Çavuşoğlu கூறுகையில், “துருக்கியினது நிலைப்பாட்டுக்கான காரணம் மிகவும் தெளிவாக உள்ளது. நேட்டோ ஓர் ஒன்றியம் அல்ல, அதுவொரு அமைப்பு அல்ல. நேட்டோ என்பது ஒரு கூட்டணி. இதற்கு என்ன தேவை? அது வெறுமனே பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல; அதற்கு தோளோடு தோள் நிற்கும் நல்லிணக்கம் தேவைப்படுகிறது. குறிப்பாக எந்தப் பகுதியிலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் போது. துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் குறிப்பிட்ட இந்த நாடுகள் PKK-YPG பயங்கரவாத அமைப்புகளை வெளிப்படையாகவே ஆதரிக்கின்றன,” என்றார்.
இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் துருக்கி மோதலில் உள்ளது. ஜனாதிபதி பஷர் அசாத்தின் அரசாங்கத்திற்கு எதிராக வடக்கு சிரியாவில் நடந்து வரும் ஆக்கிரமிப்பில் YPG ஐ ஒரு பினாமி படையாக வாஷிங்டன் ஆதரிக்கும் அதே வேளையில், துருக்கி YPG ஐ ஒரு பயங்கரவாத அமைப்பாகவும் PKK இன் ஒரு பாகமாகவும் பார்க்கிறது. துருக்கிய ஆளும் வர்க்கம் அதன் எல்லைகளுக்குள் YPG தலைமையில் எந்தவொரு குர்திஷ் அரசு உருவெடுப்பதையும் தடுப்பதை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறது. இதற்காக, அங்காரா 2016 இல் இருந்து சிரியா மீது பலமுறை படையெடுத்துள்ளதுடன், அந்நாட்டின் சில பகுதிகளையும் ஆக்கிரமித்துள்ளது.
எவ்வாறாயினும், சிரியாவில் 2011 இல் தொடங்கிய நேட்டோவின் தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஆட்சி மாற்றத்திற்கான போர், வாஷிங்டன் இலக்கு வைத்துள்ள மற்றொரு நாடான ஈரானுடன் துருக்கியை மோதலுக்குக் கொண்டு வர அச்சுறுத்துகிறது. வாஷிங்டனின் ஈரான்-விரோத அச்சில் முக்கிய சக்திகளான இஸ்ரேல், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றுடன் துருக்கி சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது, அதே நேரத்தில் சிரிய ஜனாதிபதி அசாத் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.
உக்ரேன் போர்க் காரணமாகச் சிரியாவில் ரஷ்யா அதன் இருப்பைக் குறைக்கத் தொடங்கி உள்ளதாகவும், ஈரான் ஆதரவுப் படைகள் இந்தப் பகுதிகளில் நுழைந்திருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. சிரியாவில் வழமையாக இஸ்ரேல் இலக்கு வைக்கும் ஈரான் ஆதரவிலான கூலிப்படைகளுக்கும் அந்நாட்டில் உள்ள துருக்கிய ஆயுதப் படைகளுக்கும் இடையே ஒரு நேரடி மோதல் அதிகரிப்பதற்கான அபாயத்தை இது சுட்டிக்காட்டுகிறது.
இத்தகைய அனைத்துச் சம்பவங்களுக்கும் மத்தியில், உணவுப் பொருட்களின் விலை உயர்வால் சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் ஓர் எழுச்சி உள்ளது, இவை ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ பொருளாதாரத் தடைகள் மற்றும் உக்ரேன் போரால் அதிகரித்துள்ளன.
கடந்த வாரம் ஈரானில் அடிப்படை உணவுப் பொருட்களுக்கான மானியங்கள் நிறுத்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து வெகுஜன போராட்டங்கள் வெடித்தன. துருக்கியில், மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்களால் வாழ்வாதாரச் செலவுகள் அதிகரிப்பைத் தாங்க முடியாததாக ஆகிவிட்ட நிலையில், 2022 தன்னிச்சையான ஒரு திடீர் வேலைநிறுத்த அலையுடன் தொடங்கியது. இந்த வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டம் உலகப் போர் அபாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய ஒரே சமூகச் சக்தியை, அதாவது ஒரு சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் போராடும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தைச் சுட்டிக் காட்டுகிறது.
