உக்ரேனின் நவ-நாஜி அசோவ் படைப்பிரிவு மறுபெயரிட முயற்சிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மரியுபோல் நகரில் நூற்றுக்கணக்கான அதன் உறுப்பினர்கள் ரஷ்யப் படைகளிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து, உக்ரேனின் அசோவ் பட்டாலியன் ஒரு நவ-நாஜி அமைப்பாக அதன் சூழலில் இருந்து தன்னைத் தூர விலக்கிக்கொள்ள அதன் PR குறியீட்டை மாற்ற முயற்சிக்கிறது. இந்த நோக்கத்திற்காக, அசோவ் 'மூன்று வாள்கள்' அல்லது தங்க திரிசூலம் என்று குறிப்பிடும் புதிய சின்னத்தை அது ஏற்றுக்கொண்டது. கார்கோவ் நகரில் புதிதாக உருவாக்கப்பட்ட அசோவ் சிறப்புப் படைப் பிரிவால் இந்த சின்னம் பயன்படுத்தப்படும்.

'மூன்று வாள்கள்' குறிப்பாக மரியுபோலில் உள்ள அசோவ் படைப்பிரிவின் தளத்தில் நிறுவப்பட்ட ஒரு நினைவுச் சின்னத்தைக் குறிக்கிறது. அசோவ் படைப்பிரிவின் உறுப்பினரான ஒலெக்ஸி ரெய்ன்ஸ் (Oleksyi Reins) இதை, 'இராணுவ மகிமையின் சின்னம் மற்றும் அதன் எதிரிகளுக்கு எதிராக பழிவாங்கும் வாக்குறுதி' என விவரித்தார்.

முன்னதாக, அசோவ் படைகள் பழைய சிரிலிக் ஸ்கிரிப்டில் 'I' மற்றும் 'N' எழுத்துக்களை ஒன்றிணைத்து 'தேசத்தின் யோசனை' என அசோவ் கூறும் நாஜி-இணைக்கப்பட்ட வொல்ப்சாங்கல் (Wolfsangel) சின்னத்தைப் பயன்படுத்தினர். உண்மையில், இந்த சின்னம் என்பது, வொல்ப்சாங்கல் (Wolfsangel) சின்னத்தின் அப்பட்டமான நகலாகும், இது இரண்டாம் உலகப் போரின் போது படுகொலைகளை செய்த பல்வேறு SS பிரிவுகள் உட்பட பல்வேறு நாஜி இராணுவ அமைப்புகளால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.

நாஜிக் கொடியுடன் அசோவ் பட்டாலியன் போராளிகள் (விக்கிகாமன்ஸ்) [Photo by Heltsumani / CC BY-SA 4.0]

மரியுபோல், மூலமுதல் அசோவ் பட்டாலியனின் முக்கிய தலைமையகமாக இருந்தபோதிலும், அசோவ் குடையின் கீழ் செயல்படும் பல்வேறு படைகள் கார்கோவ் மற்றும் கியேவ் ஆகிய பல முக்கிய உக்ரேனிய நகரங்களில் உள்ளன.

சின்னம் மாற்றம் செய்யப்பட்டதை முதலில் ஆங்கிலத்தில் டைம்ஸ் பரவலாகப் புகாரளித்தது, 'ரஷ்ய பிரச்சாரகர்களால் சுரண்டப்பட்ட நவ-நாஜி சின்னத்தை அசோவ் பட்டாலியன் கைவிடுகிறது' என்ற தலைப்பில், மேற்கத்திய நாடுகளால் ஆதரிக்கப்படும் இராணுவ அமைப்பால் நவ-நாஜி உருவப்படங்களைப் பயன்படுத்துவதை பரிந்துரைப்பது, பரவலான 'ரஷ்ய தவறான தகவல்' காரணமாக மட்டுமே கவனிக்கத்தக்கது.

அசோவ் சிறப்புப் படைகளுக்கு கார்கோவில் புதிய சின்னம் வெளியிடப்பட்டது என்றும், முன்பு மரியுபோலில் இருந்த அசோவ் பட்டாலியனில் இருந்து தனித்தனியாக இருந்ததாகக் கூறப்படுவதை சுட்டிக்காட்டி, உக்ரேனிய அரசாங்கம் ஒரு வெளிப்படையான மறுபெயரிடுதல் முயற்சியை மேற்கொள்கிறது என்பதை அந்தக் கட்டுரை மறுக்க முயன்றது.

எவ்வாறாயினும், உண்மையில், அசோவ் உறுப்பினர் ஒலெக்ஸி ரெயின்ஸ் ஒப்புக்கொண்டது போல், கார்கோவில் உள்ள அசோவ் சிறப்புப் படைகள் 'அசோவ் பட்டாலியனின் மூத்தவீரர்களால் நிறுவப்பட்டது'.

மேலும், கார்கோவில் புதிய “மூன்று வாள்கள்” சின்னத்தை வெளியிடும் போது, புதிய பிரிவின் தளபதி மாக்சிம் ஜோரின், “பழம்பெரும் அசோவ் பட்டாலியனின் அதே கோட்பாடுகள் மற்றும் கருத்தியல் அடித்தளத்தின் அடிப்படையில், நாங்கள் புதிய பிரிவுகளை உருவாக்குகிறோம். ஒவ்வொரு நாளும் அவர்கள் அதிக எண்ணிக்கையிலும் தொழில்முறை ரீதியாகவும் வளர்கின்றனர்.

உக்ரேனிய அரசாங்கத்தின் கூற்றுப்படி, உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் நாளான பிப்ரவரி 24, 2022 அன்று, பிராந்திய பாதுகாப்புப் படைகளின் ஒரு பகுதியாக புதிய “அசோவ்” உருவாக்கப்பட்டது, இப்போது உக்ரேனிய சிறப்புப் படையின் ஒரு பகுதியாக உள்ளது.

உக்ரேனிய அரசிற்குள் அசோவின் பெயரிடல், சின்னங்கள் மற்றும் உத்தியோகபூர்வ அந்தஸ்தில் உள்ள பல்வேறு மாற்றங்கள் அதன் நவ-நாஜி உறவுகளை மழுங்கடிக்கும் ஒரு வெளிப்படையான முயற்சியாகும்.

உக்ரேன் போர் மற்றும் குறிப்பாக ஏகாதிபத்திய சக்திகளின் “ஜனநாயக” பாசாங்குகள் பற்றிய மேற்கத்திய பிரச்சாரத்தின் மீதான சந்தேகம் மற்றும் அவநம்பிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த முயற்சிகள் வாஷிங்டனுடன் “சேதத்தைக் கட்டுப்படுத்தும்” முயற்சியின் ஒரு பகுதியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்பதில் சந்தேகமில்லை. கோவிட் நிவாரண நடவடிக்கைகள் படிப்படியாக அகற்றப்பட்டு, உள்நாட்டில் பணவீக்கம் அடிப்படை வாழ்க்கைத் தரத்தை அழித்து வருகையில், அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகள், இந்த நவ-நாஜி போராட்டக்காரர்களுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை நிதியளித்து வருகின்றன.

அசோவின் வரலாறு மற்றும் சித்தாந்தத்தின் அடிப்படையில், இது தெளிவாக ஒரு பாசிச அமைப்பாகும், அதன் பாரம்பரியத்தை நாஜிசம் மற்றும் தீவிர வலதுசாரி உக்ரேனிய தேசியவாத அமைப்புகளான உக்ரேனிய தேசியவாதிகளின் அமைப்பு (OUN-B) மற்றும் உக்ரேனிய கிளர்ச்சி இராணுவம் (UPA) ஆகிய இரண்டிற்கும் பின்னோக்கி செல்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது பல்லாயிரக்கணக்கான யூதர்கள், போலந்துகள் மற்றும் உக்ரேனியர்களின் படுகொலைகளுக்கு பொறுப்பானவர்களாவர்.

அதன் நிறுவனர் ஆண்ட்ரி பிலெட்ஸ்கி (Andriy Biletsky), முன்பு உக்ரேனிய தேசபக்த பாசிச துணை இராணுவ அமைப்பின் தலைவர், ஒரு வெளிப்படையான வெள்ளை மேலாதிக்கவாதி ஆவார், அவர் 2010 இல் உக்ரேனின் நோக்கம் 'உலகின் வெள்ளை இனங்களை இறுதி சிலுவைப் போரில் வழிநடத்துவதாகும்' என்று கூறினார்.

2014 இல், பல எதிர்கால அசோவ் உறுப்பினர்கள் உட்பட தீவிர வலதுசாரி குண்டர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட, ரஷ்ய சார்பு ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சிற்கு எதிராக அமெரிக்க ஆதரவுடன் ஆட்சிக்கவிழ்ப்பை நடத்த உதவினார்கள். அசோவ் பட்டாலியன் ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர்தான் உருவாக்கப்பட்டது. கிழக்கு டொன்பாஸ் பகுதியில் உள்நாட்டுப் போர் வெடித்ததைத் தொடர்ந்து, முதன்மையாக அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்தில் இருந்து வரும் இராணுவ உதவி மற்றும் பயிற்சியுடன் அது முறையாக கட்டமைக்கப்பட்டு ஆதரிக்கப்பட்டது.

நவம்பர் 2014 இல், உத்தியோகபூர்வ உக்ரேனிய இராணுவம் சிதைந்து, பாரிய வெளியேற்றங்களால் பாதிக்கப்பட்ட நிலையில், அசோவ் புதிதாக உருவாக்கப்பட்ட உக்ரேனின் தேசிய பாதுகாப்பில் இணைக்கப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில், உக்ரேன் மேற்கத்திய இராணுவ அதிகாரிகளிடமிருந்து பில்லியன் கணக்கான நிதியுதவி மற்றும் பயிற்சியைப் பெற்றது மற்றும் பெரும்பாலும் கொடூரமான தந்திரங்களுடன் கிழக்கில் ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளுக்கு எதிரான போரை நடத்துவதில் முக்கிய பங்கு வகித்தது.

2015 மற்றும் 2016 க்கு இடையில், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகர் அலுவலகம், வெகுஜன கொள்ளை, சட்டவிரோத தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதை உள்ளிட்ட போர்க்குற்றங்களுடன் அசோவை தொடர்புபடுத்தியது.

உக்ரேனுக்குள் குறைந்தபட்ச தேர்தல் ஆதரவு இருந்தபோதிலும், உக்ரேனிய அரசுக்குள் அசோவ் மிகவும் சக்திவாய்ந்ததாக மாறியது, அக்டோபர் 2019 இல், டொன்பாஸில் உள்ள முன்னணியில் இருந்து உக்ரேனியப் படைகளைத் திரும்பப் பெறுவதற்கும், 2015 மின்ஸ்க் அமைதி ஒப்பந்தங்களை செயல்படுத்துவதற்கும் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி வோல்டிமிர் செலென்ஸ்கியின் ஆரம்ப முயற்சிகளை அசோவ் திறம்பட முடக்கியது.

Zolotoye கிராமத்திற்கு அருகிலுள்ள எல்லைக் கோட்டுக்கு விஜயம் செய்தபோது, செலென்ஸ்கியை அசோவ் படையினர்கள் எதிர்கொண்டனர், அவர்கள் மின்ஸ்க் உடன்படிக்கையின்படி துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கும் அமைதி செயல்முறையைத் தொடர்வதற்கும் எதிராக அவரை எச்சரித்தனர். அசோவின் தலைவரான பிலெட்ஸ்கி அச்சமயத்தில் அச்சுறுத்தினார், 'ஜனாதிபதியும் அரசாங்கமும் உக்ரேனிய நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாப்பதற்கான அவர்களின் நேரடி கடமையை நிறைவேற்றவில்லை என்றால், நாங்கள், தன்னார்வ வீரர்கள், அதை மீண்டும் செய்வோம்.'

போர் மற்றும் பரவலான வறுமையின் காரணமாக 2019 இல் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட செலென்ஸ்கி, பின்னர் வாஷிங்டன் மற்றும் தீவிர வலதுசாரிகளுடன் உடன்பாட்டின் மூலம் பெருகிய முறையில் போர்-சார்பு தேசியவாத கொள்கைகளை பின்பற்றி, தற்போதைய பேரழிவுகரமான போருக்கு வழிவகுத்த நிலைமைகளை உருவாக்க உதவினார். அது ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று, மில்லியன் கணக்கானவர்களின் வாழ்க்கையை அழித்துவிட்டது.

பிப்ரவரியில் உக்ரேன் மீதான ஆரம்ப ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து, அசோவ் துருப்புகள் அவர்களின் நவ-நாஜி சித்தாந்தம் மற்றும் வரலாற்றிற்கு ஏற்ப கொடூரமான தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி போர்க்குற்றங்களைச் செய்வதைக் காணலாம்.

மேற்கத்திய ஊடகங்களில் அசோவ் பட்டாலியனை உத்தியோகபூர்வமாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பாரிய பிரச்சாரம் இருந்தபோதிலும், முதலாளித்துவ ஊடகங்கள் உட்பட மேலும் பல அறிக்கைகள் வெளிவந்துள்ளன, அவை அசோவின் பாசிச நோக்குநிலையை தெளிவாகக் காட்டுவதோடு, போர் பற்றிய ஏகாதிபத்திய பிரச்சாரத்தின் 'ஜனநாயக' பாசாங்குகளை மறுக்கின்றன.

மரியுபோலில், அசோவ் படைகள் அசோவ்ஸ்டல் ஆலைக்குள் (Azovstal plant) பதுங்கு குழிக்குள் நுழைந்து ரஷ்யப் படைகளிடம் இருந்து மறைந்திருந்த போது, தப்பியோடிய கார்கள் மற்றும் குடியிருப்பாளர்களைக் கடத்திச் சென்று மனிதக் கேடயங்களாகச் செயல்படுவதற்காக வேண்டுமென்றே சுட்டுக் கொன்றதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பிரெஞ்சு செய்தித்தாள் Le Monde இன் படி, சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், அசோவ் உறுப்பினர்கள் பாதுகாப்பற்ற ரஷ்ய வீரர்களின் முழங்கால்களில் சுடுவதை அடையாளம் காண முடியும். முன்னாள் பிரெஞ்சு சிப்பாய் அட்ரியான் புக்கே (Adrien Bocquet), உக்ரேனுக்குப் பயணம் செய்து, அசோவ் பட்டாலியனுடன் கியேவ் மற்றும் லிவிவ் இல் தன்னார்வ மருத்துவராகப் பணியாற்றினார், அவர் ரஷ்யப் படைகள் சாதாரண மக்களைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட புச்சாவில் உள்ள பொதுமக்கள் மீது அசோவ் துருப்புக்கள் ஷெல் வீசுவதைக் கண்டதாக கூறினார்.

அசோவை மறுபெயரிடுவதற்கான கியேவின் அரைகுறை முயற்சிகள், உக்ரேனிய அரசாங்கம் இந்த பாசிச சக்திகளை தொடர்ந்து பெரிதும் நம்பியிருக்கும் என்பதை தெளிவுபடுத்துகிறது, ஏனெனில் அது ரஷ்யாவுடனான ஏகாதிபத்திய சக்திகளின் நேரடியான போருக்கு பினாமியாக செயல்படுகிறது.

Loading