போரிஸ் ஜோன்சன் நம்பிக்கையில்லா வாக்கெடுப்ப்பில் குறுகிய வெற்றியுடன் இப்போதைக்கு இங்கிலாந்து பிரதமராக உயிர் பிழைத்தார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன், கன்சர்வேடிவ் கட்சியில் உள்ள தனது சொந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் கசப்பான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் இருந்து குறுகிய அளவில் உயிர்பிழைத்துள்ளார். 54 பாராளுமன்ற உறுப்பினர்கள் (பாராளுமன்றத்தில் கன்சர்வேடிவ் குழுவில் 15 சதவீதம்) பின்வரிசைத் தலைவர் சர் கிரஹாம் பிராடிக்கு நம்பிக்கையில்லா கடிதத்தை சமர்ப்பித்ததை அடுத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

பிரிட்டிஷ் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் (இடது) இலண்டனில், ஜூன் 6, திங்கட்கிழமை, 2022 இல் பாராளுமன்றத்தை விட்டு வெளியேறுகிறார். ஜோன்சன் திங்கள்கிழமை இரவு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொண்டார், அதில் அவர் சிறிய பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். (AP Photo/David Cliff) [AP Photo/David Cliff]

திங்கள் மாலை நடைபெற்ற வாக்கெடுப்பில், 359 டோரி எம்பிக்களில் 148 பேர் (41 சதவீதம்) ஜோன்சன் மீது நம்பிக்கையில்லை என வாக்களித்தனர். இந்த முடிவு மிகவும் தீங்கு விளைவிப்பதோடு கிளர்ச்சியாளர்கள் எதிர்பார்த்திருந்ததை விட பலத்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கட்சியின் குறிப்பிடத்தக்க பிரிவு, தலைமைக்கு எதிராக வாக்களித்த முந்தைய வாக்குகள் —டிசம்பர் 2018 இல் தெரசா மே க்கு எதிராக 37 சதவிகிதம் மற்றும் 1990 இல் மார்கரெட் தாட்சருக்கு எதிராக 41 சதவிகிதம்— சில மாதங்களுக்குள் அவர்களை இராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தி இருந்தது.

ஆனால் ஜோன்சன் அதைச் செய்வதற்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை, பின்னர் பிபிசியிடம் இது ஒரு 'மிகச் சிறந்த, சாதகமான, உறுதியான முடிவு' என்றும், டோரி கட்சிக்கு 'ஒன்றுபட்டு வழங்குவதற்கு' ஒரு வாய்ப்பு என்றும் கூறினார். சட்ட விதிகளின்படி, பிரதம மந்திரிக்கு இப்போது ஒரு அவகாச காலம் உள்ளது, அதில் ஒரு வருடத்திற்கு அவரது தலைமைக்கு எதிராக எந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்புகளுக்கும் அழைப்பு விட முடியாது, இருப்பினும் 'விதிகளை மாற்றுவது சாத்தியம்' என்று பிராடி அன்று கருத்து தெரிவித்தார்.

எதிர்வரும் இடைத்தேர்தல்கள், வடக்கு அயர்லாந்து நெறிமுறை மீதான நெருக்கடி மற்றும் ஜோன்சன் தெரிந்தே பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்தினாரா என்பது பற்றிய விசாரணைகள் ஆகியவற்றுடன், பிரிட்டனின் ஆளும் கட்சியில் நீண்டகால கெரில்லா போர் தொடங்கியுள்ளது. கல்விச் செயலர் நாதிம் ஜஹாவி டோரிகள் 'தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளும் உள் மோதல் பழிவாங்கல் அணியை' ஏற்பாடு செய்திருப்பதாக புலம்புவதன் மூலம் சூழ்நிலையை சுருக்கமாகக் கூறினார்.

ஒரு ஒத்திசைவான சவாலை முன்வைப்பதில் அவரது எதிர்ப்பாளர்களின் தோல்விக்குப் பின்னர் ஜோன்சன் தப்பிப்பிழைத்தார். நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பானது, கட்சியின் ஆதரவு தளத்தின் முக்கிய பிரிவுகள் அந்நியப்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளையில், ஜோன்சன் ஒரு கொந்தளிக்கும் அரசியல் சூழ்நிலையைத் தூண்டிவிடுகிறார் என்ற வளர்ந்து வரும் ஆனால் ஒழுங்கமைக்கப்படாத கவலையால் தூண்டப்பட்டது.

இப்போது அரை வருடமாக இழுத்துச் செல்லப்படும் தொற்றுநோய் பூட்டுதல்களின் போது அரசாங்க மதுபான விருந்துகளில் ஜோன்சனின் பங்கேற்பைச் சுற்றியுள்ள “பார்ட்டிகேட்” ஊழல், ஜோன்சனின் தலைவிதியின் மையத்தில் உள்ளது. இது, 'உடல்கள் ஆயிரக்கணக்கில் குவியட்டும்!' என்ற ஜோன்சனின் பிரகடனத்தின் மூலம், சுருக்கமாக, வெகுஜன இறப்புகள் மற்றும் நோய்தொற்று தொடர்பாக டோரி கட்சியின் கொடூரமான அலட்சியத்தை மில்லியன் கணக்கான மக்களுக்கு எடுத்துக்காட்டுகிறது.

இதையொட்டி, ஜோன்சனின் பரவலான செல்வாக்கற்ற தன்மை, இப்போது காட்டுமிராண்டித்தனமான சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசாங்கத்தின் திறனுக்கு ஒரு தடையாகவும் மற்றும் மக்கள் எதிர்ப்பைத் தூண்டாமல் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் பினாமி போரில் பங்கெடுப்பை அதிகரிக்கவும், டோரிக்களின் பயத்தின் மையமாக இது மாறியுள்ளது

ஸ்டீவ் பிரைன், சர் பாப் நீல் மற்றும் ஜெர்மி ரைட் ஆகியோர் ஜோன்சனுக்கு எதிராக வாக்களிக்க விரும்புவதாக அறிவிக்கும் நோக்கங்கள் வழக்கமானவை, 'விதிகளை உருவாக்குபவர்கள் சட்டத்தை மீறுபவர்களாக இருக்க முடியாது', 'நிகழ்வுகள் பிரதம மந்திரி அலுவலகத்தின் மீதான நம்பிக்கையை மட்டுமல்ல அரசியல் நிகழ்ச்சிப்போக்கையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளன,' மற்றும் 'எதிர்காலத்தில் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுடன் பொதுமக்கள் இணங்குவதைப் பாதுகாப்பதற்கும், தற்போதைய அரசாங்கம் அறிமுகப்படுத்திய முக்கியமான சட்டத்தை வழங்குவதற்கும்' பிரதமர் முன்வர வேண்டும்.

சமீபத்திய கருத்துக் கணிப்புகள், Tiverton மற்றும் Honiton இடைத்தேர்தல்களில் தாராளவாத ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாகவும் Wakefield இல் தொழிற் கட்சிக்கு ஆதரவாகவும் டோரி கட்சி கடுமையான இழப்புகளை சந்திக்கும் என கணிக்கின்றன. வெள்ளியன்று செயின்ட் பால்ஸ் கதீட்ரலில் இராணிக்கு நன்றி செலுத்தும் ஆராதனையின் போது, டோரிக்களின் தீவிர ஆதரவாளர்கள், யூனியன் கொடிகளை அசைத்தபடி ஜோன்சனை நோக்கி உரத்த குரலில் கூச்சலிட்டனர்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனது மனைவி கேரியுடன் இராணிக்கு நன்றி தெரிவிக்கும் பவளவிழா நிகழ்வுக்காக செயின்ட் பால் கதீட்ரலுக்கு செல்கிறார். ஜோன்சன் செயின்ட் பால் கதீட்ரலுக்குள் நுழையும் போது கூட்டத்தினரால் கூச்சலிடப்பட்டார். 03/06/2022. (Credit: Picture by Andrew Parsons/No 10 Downing Street/Flickr)

ஆனால் ஜோன்சனுக்குப் பதிலாக யார் வருவார்கள் என்ற பிரச்சனையை, டோரி கிளர்ச்சியாளர்களால் தீர்க்க முடியவில்லை என்ற அரசியல் நெருக்கடி ஆளும் வர்க்கத்தைப் பற்றிக் கொண்டது. ஒரு சாத்தியமான போட்டியாளர் முன் வந்திருந்தால், வாக்குகள் மாறியிருக்கலாம். கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ள வேட்பாளர்களில், டேவிட் கேமரூனின் சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ஜெர்மி ஹன்ட் மட்டுமே பிரதமருக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக அறிவித்தார். ஆனால் பிந்தையவர் எப்படியும் வலதுசாரி கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினர்களை மகிழ்விக்கவில்லை.

ஜோன்சனுக்கு மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பு டோரி கட்சியின் வலதுபுறத்தில் இருந்து வருகிறது, அவர்கள் “பார்ட்டிகேட்” நெருக்கடியைப் பயன்படுத்தி தொடர்ச்சியான பிற்போக்கு சட்டங்களை முழு வேகத்தில் செயல்படுத்துகின்றனர் மற்றும் அவர்கள் பிரெக்ஸிட்டால் சாத்தியமான வரிகள் அல்லது விதிமுறைகள் இல்லாத சுதந்திர சந்தை சொர்க்கத்திற்கு ஜோன்சனை ஒரு தடையாக கருதுகின்றனர். அவர்களின் விருப்பமான வேட்பாளர் வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ். அப்பெண்மணி தனது ரஷ்ய எதிர்ப்பு நற்சான்றிதழ்களை நிரூபித்துள்ளார் மற்றும் ஜோன்சனை விட ஒரு பொருளாதார பருந்தாக கருதப்படுகிறார். முன்னாள் எம்.பி.யும் கன்சர்வேடிவ் அமைச்சரவை அமைச்சருமான டேவிட் காக், நியூ ஸ்டேட்ஸ்மனில், டிரஸ் 'குறைந்த வரிகள் மற்றும் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான நிகழ்ச்சி நிரலை உண்மையாக வெளிப்படுத்தக்கூடிய ஒரு தலைமை வேட்பாளர்' என்று எழுதினார்.

வெளிவிவகாரச் செயலர் வெளிப்படையாக ஜோன்சனுக்கு எதிராக பேசவில்லை, இருப்பினும், அவர் கவிழ்ந்தால் அவரது ஆதரவுக் குழுவின் வாரிசாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அவர் திங்கள்கிழமை அதிகாலை ட்வீட் செய்தார்: 'இன்றைய வாக்கெடுப்பில் பிரதமருக்கு எனது 100 சதவீத ஆதரவு உள்ளது, அவருக்கு ஆதரவளிக்க எனது சகாக்களைக் கேட்டுக்கொள்கிறேன்.' பாதுகாப்பு செயலர் பென் வாலஸ், சான்சிலர் ரிஷி சுனக் மற்றும் சுகாதார செயலர் சஜித் ஜாவித் உள்ளிட்ட பிற சாத்தியமான தலைமைத்துவ போட்டியாளர்களும் அவ்வாறே செய்துள்ளனர்.

ஜோன்சன் மாற்றப்பட்டாலும் சரி இல்லாவிட்டாலும் கட்சி போர், சிக்கனம், எதேச்சாதிகாரம் மற்றும் வெகுஜன நோய்த்தொற்று பாதையில் உறுதியாக செல்கிறது. டோரி எம்.பி.க்களுக்கு ஜோன்சன் தனது நிலைப்பாட்டை பாதுகாத்து எழுதிய கடிதம், கோவிட் தொற்றுநோய்களின் போது அவரது அரசாங்கத்தின் 'பொருளாதாரத்தை விரைவாகத் திறந்தது', ரஷ்யா மீதான நேட்டோ போரில் 'உக்ரேனியர்களுக்கு உதவும் முதல் ஐரோப்பிய நாடாக மாறியது' மற்றும் ருவாண்டாவுடனான பொருளாதார மற்றும் இடம்பெயர்வு கூட்டாண்மையை' முடித்து புகலிட உரிமையை கிழித்தெறிந்தது அவரது முக்கிய வெற்றிகளாகும்.

டோரி எம்.பி.க்களின் தனிப்பட்ட கூட்டத்தில் அவர் கூறினார்: 'பணவீக்கத்திலிருந்து வெளியேறவும், வளர்ச்சியை உருவாக்க வரி செலுத்தவும், நீங்கள் செலவு செய்ய முடியாது என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம்.' உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தனக்கு 'வலுவான இங்கிலாந்து' வேண்டும் என்று அன்று காலை தொலைபேசியில் தெரிவித்ததாக ஜோன்சன் கூறினார். 'இங்கிலாந்து உக்ரேனிய ஆயுதப் படைகளுக்கு பல-ஏவுகணை ராக்கெட் அமைப்புகளை வழங்கும், அதனால் அவர்கள் தொடர்ந்து ரஷ்ய தாக்குதலை திறம்பட தடுக்க முடியும்' என்று அவர் அன்று பகலில் மீண்டும் அறிவித்தார்.

போர்க்கால பிரதம மந்திரியாக ஜோன்சனின் ஆடுகளம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தடுக்க போதுமானதாக இல்லை. ஏனெனில் அவரது சாத்தியமான எதிர்ப்பாளர்களின் மத்தியில் போருக்கான உலகளாவிய ஆதரவால் அதன் முறையீடு குறைந்துவிட்டது மற்றும் பொய்யர் என்று பரவலாக அறியப்படும் ஒருவர், மக்கள் மத்தியில் எந்த ஒரு பபரந்த போர் ஆதரவு உணர்வும் இல்லாததை எதிர்த்துப் போராடும் நிலையில் இல்லை.

இந்த காரணத்திற்காக, வெறுக்கப்பட்ட ஜோன்சன் அரசாங்கத்தின் பிழைப்பு பற்றிய கேள்வியை முழுவதுமாக டோரி பாராளுமன்ற உறுப்பினர்களின் கைகளில் விடும் தொழிற் கட்சியின் முயற்சிகளால் முழு அழுகிய நிகழ்ச்சியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஸ்டார்மர் LBC வானொலியில் திங்கள் காலை கூறினார், 'அவர் இப்போது வெளியேறுவது தேசிய நலனுக்கானது'. டோரி கட்சியின் தலைமையில் ஜோன்சன் இருப்பது தொழிற் கட்சிக்கு ஒரு தேர்தல் வரமாக பரவலாகக் காணப்பட்டது என்பதை அவர் ஒப்புக்கொண்டார். அவர் தொடர்ந்தார்: 'ஆனால் தேசிய நலனைப் பார்க்கும்போது, டோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமைத்துவத்தைக் காட்டி அவரை அகற்ற வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.'

மே 2022 இல் இராணியின் உரையைக் கேட்க தொழிற்கட்சி தலைவர் சேர் கெய்ர் ஸ்டார்மர் (இடது) மற்றும் போரிஸ் ஜோன்சன் பிரபுக்கள் மாளிகைக்கு நடந்து செல்கிறார்கள். (Credit: UK Parliament Jessica Taylor)

ரேடியோ 4 இன் Today நிகழ்ச்சியில் தொழிற் கட்சியின் (நிழல்) சுகாதாரச் செயலர், வெஸ் ஸ்ட்ரீடிங், டோரி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்: “அரசாங்கத்தின் வேலையை தொடருங்கள். நாட்டுக்கு தகுதியான பிரதமரை கொடுங்கள்.”

தொழிற்கட்சி ஒரு சுயாதீனமான உரையை செய்யும் வரை, அது தேசிய நலன்களின் உண்மையான கட்சியாக தன்னைக் காட்டிக் கொள்ள வேண்டும். ஞாயிற்றுக்கிழமை, கட்சியின் கலாச்சார செயலாளர் லூசி பவல், 'பிரிட்டனை முதலிடம் வகிக்கும்' 'தேசபக்தி கொள்கைகளின்' கட்சியாக தொழிற் கட்சியை அறிவிக்கும் ஒரு சந்தர்ப்பமாக பவள விழாவை பயன்படுத்தி அப்சர்வரில் ஒரு கட்டுரையை வெளியிட்டார். தொழிற் கட்சியின் நற்சான்றிதழ்களை நிரூபிக்க, பவல் விளக்குகிறார், “10 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் 5G தொழில்நுட்பத்திற்கான சொந்தத் திறனில் முதலீடு செய்திருந்தால், இன்று Huawei மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தயவில் நாங்கள் இருக்க மாட்டோம். டோரிகள் இங்கிலாந்தில் கரையோரக் காற்றை திறம்பட பயன்படுத்தியிருந்தால், ரஷ்யாவிலிருந்து நாம் இறக்குமதி செய்வதை விட கூடுதல் எரிசக்தியை உற்பத்தி செய்திருப்போம்.

இந்த நிகழ்ச்சி நிரலை முன்தள்ள, டோரிகளைப் போலவே தொழிற் கட்சியும் வர்க்கப் போராட்டத்தை நசுக்குவதற்கும் தொழிலாள வர்க்கத்தை அரசியல் அரங்கில் இருந்து ஒதுக்கி வைப்பதற்கும் தொழிற்சங்கங்களைச் சார்ந்திருக்கிறது. ஆனால் இந்த நிலைமையை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகி வருகின்றன. ஏனெனில் இரயில் வலையமைப்பு, பிரிட்டிஷ் டெலிகாம் (BT) மற்றும் பிற இடங்களில் உள்ள தொழிலாளர்களின் முக்கிய பிரிவுகள் மோசமான வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு மத்தியில் ஊதியங்களைக் குறைக்கும் முயற்சிகளுக்கு எதிராக வேலைநிறுத்தங்களை நடத்த முனைகின்றன. இது, டோரி அரசாங்கத்தை எந்த அரசியல் குற்றவாளி வழிநடத்தினாலும் அதை அகற்றும் ஒரு இயக்கத்திற்கான அடிப்படையை உருவாக்குகிறது.

Loading