மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
நேட்டோ சக்திகள் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான தங்கள் பினாமிப் போரை தீவிரப்படுத்திய நிலையில், ரஷ்ய வெளியுறவு மந்திரி சேர்ஜி லாவ்ரோவ் புதன்கிழமை துருக்கியின் தலைநகரான அங்காராவிற்கு விஜயம் செய்து தனது துருக்கிய பிரதிநிதியான மெவ்லூட் சாவுசோக்லுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
லாவ்ரோவ் மற்றும் சாவுசோக்லு இருவரும் கருங்கடலில் உள்ள உக்ரேனிய துறைமுகங்களிலிருந்து துருக்கிய ஜலசந்தி வழியாக 'பாதுகாப்பான தானிய வினியோக பாதையை' உருவாக்குவதற்கான அழைப்புகளை ஆதரித்தனர். எவ்வாறாயினும், நேட்டோ ஆதரவுடைய உக்ரேனிய அரசாங்கம் இந்த முன்மொழிவை நிராகரித்து, இது நம்பத்தகுந்ததல்ல என்று குறிப்பிட்டதாக அசோசியேட்டட் பிரஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
துருக்கிய மற்றும் ரஷ்ய வெளியுறவு மந்திரிகள் கியேவ் மற்றும் மாஸ்கோ இடையே சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது பற்றியும் விவாதித்தனர். அவை முக்கிய நேட்டோ சக்திகளின் அழுத்தத்தின் கீழ் குழப்பப்பட்டன.
ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும், இறுதியில் இந்தப் பரந்த நாட்டின் வளங்களை கொள்ளையடிப்பதற்கும் ஏகாதிபத்தியத்தானால் பிளவுபடுத்துவதை நடைமுறைப்படுத்துவதற்கு போரைத் தூண்டிவிடுவதற்கான அமெரிக்க தலைமையிலான நேட்டோ சக்திகளின் திட்டத்துடன் இந்த இரண்டு திட்டங்களும் பொருந்தவில்லை.
இதற்காக, ரஷ்யாவிற்கு எதிரான போரில் நேட்டோ வடக்கு முன்னணியை திறந்துள்ளது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடன், சுவீடனும் பின்லாந்தும் மே மாதத்தின் நடுப்பகுதியில் நேட்டோவில் இணைவதற்கான தங்கள் விருப்பத்தை அறிவித்ததிலிருந்து, சுவீடன் ரஷ்யாவிற்கு எதிரான கடற்படை காவலரணாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையில், மாஸ்கோவின் பிற்போக்குத்தனமான உக்ரேன் படையெடுப்பு, வாஷிங்டனால் தனக்கு சாதகமாக பயன்படுத்தப்படுவதுடன், அது உக்ரேனின் கிழக்கில் இராணுவ முன்னேற்றங்களை கண்டுவருவதாகக் கூறப்படுகிறது.
கிரெம்ளின் மேற்கத்திய பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்கிறது. அதில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தடைகள் மற்றும் சர்வதேச SWIFT நிதி அமைப்பில் இருந்து முக்கிய ரஷ்ய வங்கிகளை விலக்குவது உட்பட, ரஷ்ய நிறுவனங்கள் மேற்கு நாடுகளுடன் வர்த்தகம் செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்கியுள்ளது. பதிலுக்கு, அது நேட்டோ அங்கத்துவ நாடான துருக்கி மற்றும் அமெரிக்க சார்பு வளைகுடா முடியாட்சிகளுடன் சூழ்ச்சியில் ஈடுபட முயற்சிக்கிறது.
துருக்கிக்கு செல்வதற்கு முன், லாவ்ரோவ் பஹ்ரைன், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தார். Arab News இன் படி, 'ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளில் வளைகுடா கூட்டமைப்பு குழுவின் (GCC) உறுப்பினர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று லாவ்ரோவ் தெளிவுபடுத்தினார். மேலும், இந்த சந்திப்பிற்கு முன், லாவ்ரோவ் இளவரசர் பைசலுடன் பேசியபோது ரஷ்ய இராஜதந்திரி OPEC+ இல் ஒத்துழைப்பின் அளவைப் பாராட்டினார். ஏனெனில் ரஷ்ய இராணுவ நடவடிக்கையின் தொடக்கத்திற்குப் பின்னர் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்குமாறு அமெரிக்க கொடுத்த அழுத்தத்தை சவூதி அரேபியாவும் பிற உறுப்பு நாடுகளும் நிராகரித்தன.
இராணுவப் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட சாவுசோக்லு-லாவ்ரோவ் சந்திப்புக்குப் பின்னர், இருவரும் கூட்டாக செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். 'ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளுக்கு திரும்புவதற்கான ஒரு பொதுவான விருப்பத்தை நாங்கள் காண்கிறோம்,' என்று சாவுசோக்லு கூறினார். துருக்கிய கடற்படை படைகளின் கீழ் உக்ரேனில் இருந்து உணவு வினியோகப்பாதையை அமைப்பதற்கான ஐ.நா திட்டங்களை தனது அரசாங்கம் 'நியாயமானது மற்றும் சாத்தியமானது' என்று பார்க்கிறது என்றார். ஐ.நா மற்றும் உக்ரேனுடன் இஸ்தான்புல்லில் ஒரு சந்திப்பை நடத்த அவர் முன்மொழிந்தார்.
அவர் மேலும் கூறினார், 'உக்ரேன் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பால் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் முழு உலகத்திற்கும் தேவைப்பட்டால், நாங்கள் போதுமான வழி மற்றும் பொறிமுறைகளை நிறுவ வேண்டும்.' உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை அங்காரா கண்டித்து, கியேவ் ஆட்சியை வெளிப்படையாக ஆதரிக்கும் அதே வேளையில், மாஸ்கோவுடனான அதன் வலுவான உறவுகளின் காரணமாக ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கத் தலைமையிலான பொருளாதாரத் தடைகளில் அது இணைந்துகொள்ளவில்ல்லை. 'உணவு பாதைக்கு' மாஸ்கோ ஒப்புக்கொண்டதற்கு ஈடாக மேற்கு நாடுகள் பொருளாதாரத் தடைகளை தளர்த்த வேண்டும் என்று Çavuşoğlu கூறினார்.
AP எழுதியது, 'தொழில்நுட்ப ரீதியாக உணவு ஏற்றுமதிகள் தடைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், ரஷ்யா தனது கப்பல்கள் மற்றும் வங்கிகள் மீதான கட்டுப்பாடுகள் அதன் தானியங்களை உலக சந்தைகளுக்கு வழங்குவதை சாத்தியமற்றதாக்குகிறது என்று கூறுகிறது.' AP இன் படி, 22 மில்லியன் டன் தானியங்கள் உக்ரேனின் கருங்கடல் துறைமுகங்களில் குழிகளில் அமர்ந்துள்ளன, இது 'உலகின் கோதுமை, சோளம் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களில் ஒன்றாகும்.'
செய்தியாளர் சந்திப்பின் போது, லாவ்ரோவ் ரஷ்யா-உக்ரேன் போரால் தான் உலகளாவிய உணவு நெருக்கடி ஏற்பட்டது என்பதை மறுத்தார். உலகளாவிய சந்தையில் உக்ரேனிய தானிய ஏற்றுமதியின் பங்கு மொத்தத்தில் 1 சதவிகிதம் என்று அவர் கூறினார். எனவே இது குறிப்பிடத்தக்கதாக இருக்க மிகவும் சிறிய தொகையாகும். உக்ரேனிய துறைமுகங்கள் ஊடாக தானியங்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் நிலைமையை தணிக்க செய்யும் துருக்கியின் முயற்சிகளை ரஷ்யா மதிப்பதாக கூறினார்.
செவ்வாயன்று துருக்கிக்கு தனது விஜயத்திற்கு முன்னர், மேற்கத்திய நாடுகள் ரஷ்ய கப்பல்களுக்கு தங்கள் துறைமுகங்களை மூடுவதன் மூலம் 'செயற்கையான பிரச்சனைகளை' உருவாக்கியுள்ளதாகவும் கூறினார்.
ஜூன் 3 அன்று, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்: 'உக்ரேனிய தானியங்களை ஏற்றுமதி செய்வதில் உள்ள சிக்கலை யாராவது தீர்க்க விரும்பினால்—தயவுசெய்து, பெலாருஸ் ஊடாக எளிதான வழியாகும். யாரும் அதைத் தடுக்கவில்லை” என்றும் “ஆனால் இதற்காக நீங்கள் பெலாருஸிலிருந்து பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என மேலும் கூறினார். ரஷ்ய உரங்கள் மீதான பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கத் தடைகள் உலகளாவிய உணவுச் சந்தைகளில் சிக்கல்களை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.
உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடுகளுக்கு ரஷ்யாதான் காரணம் என்று நேட்டோ கூறுவது அரசியல் பொய். உலக நிதிய மையங்களில் உள்ள மத்திய வங்கிகள் பெரும் நாணயங்களை பெருமளவில் அச்சடித்து நிதியப் பிரபுத்துவத்திடம் ஒப்படைக்கப்படுவதால், போருக்கு முன்பே உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்து கொண்டிருந்தன. நேட்டோவும் வாஷிங்டனும் ரஷ்யாவிற்கு எதிரான 'நீண்ட மற்றும் வலிமிகுந்த போருக்கு' அழைப்பு விடுத்துள்ள நிலையில், அமெரிக்கா தலைமையிலான பொருளாதாரத் தடைகளால் தானிய விநியோகம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
உணவுக் கப்பல்கள் உக்ரேனை விட்டு வெளியேற அனுமதிப்பதற்கு ஈடாக உக்ரேனின் துறைமுகங்களைச் சுற்றிலும் கடல் கண்ணிவெடிகளை அகற்றுமாறு ரஷ்யா கோருகிறது. துருக்கிய அரசுக்கு சொந்தமான Anadolu Agency யின் கூற்றுப்படி, லாவ்ரோவ், 'உக்ரேனின் தானியங்களை ஏற்றுமதி செய்வதில் உள்ள முக்கிய பிரச்சனை, கடல் கண்ணிவெடிகளை அகற்றுவது பற்றி விவாதிக்க அந்நாட்டின் ஜனாதிபதி வோலோடிமியர் செலென்ஸ்கி மறுப்பதே' என்றார்.
ஒரு பாதையினூடாக சாத்தியமான ரஷ்ய கடற்படைத் தாக்குதல்கள் பற்றிய உக்ரேனிய அதிகாரிகளின் கூற்றுக்களை மறுத்த லாவ்ரோவ் 'நாங்கள் நாட்டைத் தாக்க உக்ரேனிய துறைமுகங்களில் கண்ணிவெடி அகற்றலைப் பயன்படுத்த மாட்டோம் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். … உக்ரேனிய துறைமுகங்களை விட்டு வெளியேறும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். எங்கள் துருக்கிய சக கூட்டாளிகளின் ஒத்துழைப்புடன் இதைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்” எனக் கூறினார்.
புதனன்று, உக்ரேனிய தானிய ஒன்றியத்தின் தலைவர் செர்ஹி இவாஷ்செங்கோ இதை நிராகரித்தார். எவ்வாறாயினும், 'கருங்கடலில் பொதிகளுக்கும் மற்றும் உக்ரேனிய துறைமுகங்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க துருக்கிக்கு போதுமான சக்தி இல்லை.' கடல் கண்ணிவெடிகளை அகற்ற மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகும் என்றும் அவர் மேலும் கூறினார்.
சாத்தியமான 'உணவு வழிப்பாதையில்' ஐரோப்பிய சக்திகளின் பிரதிபலிப்பும் சாதகமானதாக இல்லை. ஐரோப்பிய குழுவின் தலைவர் சார்லஸ் மிஷேல் கிரெம்ளின் 'உணவு விநியோகங்களை ஆயுதமாக்குகிறது' என்று குற்றம் சாட்டினார். அதே நேரத்தில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வொன் டெயர் லெயன் பாசாங்குத்தனமாக: 'எங்கள் தடைகள் அடிப்படை உணவுப் பொருட்களைத் தொடவில்லை. ரஷ்யாவிற்கும் மூன்றாம் நாடுகளுக்கும் இடையிலான தானியங்கள் அல்லது பிற உணவுப் பொருட்களின் வர்த்தகத்தை அவை பாதிக்காது” என்று கூறினார்
மேலும் அவர் மேலும் கூறுகையில், “துறைமுகத் தடையில் குறிப்பாக விவசாயப் பொருட்களுக்கு முழு விலக்கு உண்டு. எனவே உண்மையைக் கூறுவோம். புட்டினின் ஆக்கிரமிப்புப் போர்தான் உணவு நெருக்கடியைத் தூண்டுகிறது, வேறு எதுவும் இல்லை” என்றார்.
உக்ரேன் வெளியுறவு அமைச்சகம் செவ்வாயன்று உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமியர் செலென்ஸ்கி மற்றும் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் ஆகியோர் பாதுகாப்பான கடல் வழிப்பாதையை உருவாக்குவது குறித்து கடந்த வாரம் விவாதித்ததாகக் கூறியது. அசோசியேட்டட் பிரஸ் இன் படி, உக்ரேனிய அரசாங்கம் 'கடல்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிராக தற்காத்துக் கொள்ள ஆயுதங்களை வழங்குதல் மற்றும் கருங்கடலில் நேட்டோ கப்பல்களின் பங்கேற்பு போன்ற பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கு' அழைப்பு விடுத்துள்ளது.
அங்காராவின் முயற்சிகள் குறித்து கேட்டதற்கு, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், “இராஜதந்திர கலந்துரையாடல்களுக்கு மத்தியஸ்தம் செய்யும் துருக்கியின் முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம். … ரஷ்யாவின் போரினால் இன்னமும் தீவிரமடைந்துள்ள உலகளாவிய உணவுப் பாதுகாப்பின்மையைத் தணிக்க உக்ரேனிலிருந்து தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதை நாங்கள் வலுவாக ஆதரிக்கிறோம். உக்ரேன் 'எந்தவொரு முடிவுகளிலும் முழுமையாக ஈடுபட வேண்டும்'. ஏனெனில் ரஷ்யாவிற்கு அனுமதிகொடுக்காத எந்தவொரு திட்டமும் அதனது சொந்த இராணுவ நோக்கத்தினை அடைவதற்கு உதவும்” என்று அவர் அழைப்பு விடுத்தார்.
உண்மையில், 'உணவு பாதை'க்கான ரஷ்ய-துருக்கிய முன்முயற்சியானது, ரஷ்யாவிற்கு எதிரான போரை அதிகரிக்க உணவு நெருக்கடியை சுரண்டுவதற்கும், கருங்கடலுக்கு போர்க்கப்பல்களை அனுப்புவதற்கும் மற்றும் நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான முழுப் போருக்கான நிலைமைகளை உருவாக்குவதற்குமான நேட்டோவின் திட்டங்களுக்கு எதிரான ஒரு நடவடிக்கையாகும்.
எவ்வாறாயினும், கருங்கடலை நோக்கிச் செல்லும் ஜலசந்திகளைக் கட்டுப்படுத்தும் துருக்கிய அரசாங்கத்தின் அங்கீகாரம் அத்தகைய நேட்டோவின் ஈடுபாட்டிற்குத் தேவைப்படும். உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பின்னர், ரஷ்ய மற்றும் நேட்டோ போர்க்கப்பல்களுக்கான நீரிணையை அங்காரா மூடியது.
அங்காராவிற்கும் மாஸ்கோவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் உடனடி முடிவுகள் என்னவாக இருந்தாலும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ சக்திகள் ரஷ்யாவுடனான போரை தீவிரப்படுத்துவதில் உறுதியாக உள்ளன. உலகளாவிய பஞ்சத்தைத் தடுப்பதற்கும், ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் கொன்று மில்லியன் கணக்கான மக்களை இடம்பெயர்த்துள்ள ஒரு போரை, அணுவாயுதங்களுடனான மூன்றாம் உலகப் போராக மாறுவதிலிருந்து நிறுத்துவதற்கும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தினை கொண்டு ஏகாதிபத்திய போருக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான புரட்சிகர அணிதிரட்டல் தேவைப்படுகிறது.