மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஷியா ஜனரஞ்சக மதகுருவான முக்தாத்ர் அல்-சதரின் ஆதரவாளர்கள் அரசாங்கக் கட்டிடங்களைத் தாக்கி பாதுகாப்புப் படைகளுடனும், ஒருங்கிணைப்பு கட்டமைப்பில் (Coordination Framework) உள்ள அவரது ஷியா போட்டியாளர்களுக்கு சொந்தமான துணை இராணுவக்குழுக்களுடன் மோதலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, பாக்தாத்தில் பல ஆண்டுகளாகக் காணப்படாத மிக மோசமாக இரண்டு நாட்களில் நடந்த வன்முறை மோதல்களில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டதுடன், 380 பேர் காயமடைந்துள்ளனர்.
அல்-சதர் அரசியலில் இருந்து தனது 'இறுதி ஓய்வு' அறிவித்ததை அடுத்து இந்த வன்முறை வெடித்தது. அவரது சைரூன் இயக்கத்தில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் தெருக்களில் இறங்கி, ஈராக்கின் கூட்டாட்சி நாடாளுமன்றம், அரசாங்க கட்டிடங்கள், அத்துடன் அமெரிக்க மற்றும் பிற வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள மிகவும் பாதுகாப்பான பசுமை மண்டலத்தின் கான்கிரீட் தடைகளை உடைத்தனர்.
ஈராக்கின் தெற்கு மாகாணங்களிலும் எதிர்ப்புக்கள் வெடித்தன. அங்கு அல்-சதரின் ஆதரவாளர்கள் டயர்களை எரித்ததுடன், எண்ணெய் வளம் நிறைந்த மாகாணமான பாஸ்ராவில் சாலைகளைத் தடுத்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் மிசானில் உள்ள ஆளுனர் கட்டிடத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பிரதம மந்திரி முஸ்தபா அல்-காதிமியின் காபந்து அரசாங்கம் மாலை முதல் விடியற்காலை ஊரடங்கு உத்தரவை விதித்தது. அதே நேரத்தில் ஈராக்கின் ஷியைட் பிரிவுகளை நெருக்கமாகக் கொண்டுவர முயன்ற ஈரான், ஈராக்கில் உள்ள ஷியா மதத்தலங்களுக்கான வருடாந்த யாத்திரைக்கு மில்லியன் கணக்கான ஈரானியர்கள் தயாராகும் போது ஈராக் உடனான தனது எல்லைகளை மூடியது.
திங்கட்கிழமை இரவு, வன்முறையையும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நிறுத்தும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அல்-சதர் கூறினார். அடுத்த நாள், வன்முறையில் இருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொள்ளும் முயற்சியில், அவர் மன்னிப்புக் கேட்டு, தனது ஆதரவாளர்களை பசுமை மண்டலத்தையும் முகாம்களையும் விட்டு வெளியேறுமாறு அழைப்பு விடுத்தார். இது கடந்த நான்கு வாரங்களாக போராட்டம் நடத்தி வரும் அவரது ஆதரவாளர்கள் பலரை வெளியேறத் தூண்டியது.
அல்-சதரின் இந்த ஓய்வு அச்சுறுத்தலானது கடந்த எட்டு ஆண்டுகளில் இந்த ஒழுங்கற்ற மற்றும் கொள்கையற்ற அரசியல்வாதி செய்த நான்காவது அச்சுறுத்தலாகும். மற்றும் கட்டவிழ்த்துவிடப்படும் என்று அவர் அறிந்திருந்த வன்முறை ஈராக்கின் குறுங்குழுவாத-இன அரசியல் அமைப்புமுறையை, ஒருங்கிணைப்பு கட்டமைப்பில் உள்ள அவரது ஷியா போட்டியாளர்களின் இழப்பில் நேரடியாகக் கட்டுப்படுத்தும் அவரது உறுதியுடன் பிணைந்துள்ளது.
ஒரு முன்னணி ஷியா மதகுரு குடும்பத்தில் இருந்து வந்த அல்-சதர், அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக முக்கியமான ஷியா பிரிவின் எதிர்ப்புக்கு தலைமை தாங்கினாலும், ஈராக்கிய மக்கள் எதிர்கொள்ளும் பாரிய சமூக பிரச்சனைகளுக்கு அவரிடம் முற்போக்கான பதில்கள் இல்லை. ஈராக்கில் வெளிநாட்டு தலையீட்டை எதிர்க்கும் ஒரு தேசியவாதியாகக் காட்டிக்கொண்ட அவர், வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் ஆகிய இரண்டுடனும் தொடர்புகளைக் கொண்டுள்ளார். அவர் ஆளும் கூட்டணிகளை உருவாக்குவதில் முக்கிய நபராக செயல்பட்டதுடன் மற்றும் அமைச்சரவை, அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனம், சக்திவாய்ந்த அமைச்சகங்கள் மற்றும் உள்ளூர் அதிகாரங்களில் தனது சொந்த ஆதரவாளர்களை முக்கிய பதவிகளில் அமர்த்தியுள்ளார். பாக்தாத்தின் சேரிகளில் உள்ள அவரது ஏழ்மையான ஆதரவாளர்களுக்கு வேலைகள் மற்றும் சமூக நலன்களை வழங்கும் ஒரு போராளிக்குழுவை நடத்தி வரும் அவரது அமைப்பிற்கு வழங்க அரசாங்க ஒப்பந்தங்களில் ஒரு பங்கினை எடுத்துக்கொள்கின்றார்கள்.
அல்-சதரின் தந்தையின் நெருங்கிய கூட்டாளியும், சத்ரிஸ்டுகளின் ஆன்மீகத் தலைவருமான 83 வயதான பெரும் அயதுல்லா காதிம் அல்-ஹேரி இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அல்-சதர் தனது 'இறுதி ஓய்வு' அறிவிப்பை வெளியிட்டார். அவரது தந்தையின் வாரிசான முகமது சதேக் அல்-சதர், “அவர்களின் பெயர்களால் நீங்கள் வழிநடத்த முடியாது. உண்மையில் நீங்கள் சத்ரிஸ்டுகளின் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நீங்கள் ஒரு சத்ரிஸ்ட் அல்ல. ஈரானின் ஆயத்தொல்லா அலி கமேனிக்கு தங்கள் விசுவாசத்தை மாற்றுமாறு தனது ஆதரவாளர்களுக்கு ஹேரி அழைப்பு விடுத்தார். அத்துடன் முஸ்லீம் நாட்டை வழிநடத்துவதற்கு மிகவும் பொருத்தமானதும் தகுதியானதுமான ஈரானின் பெரும் தலைவரை “பின்தொடருமாறு” கூறினார்.
அல்-சதரின் ஷியா போட்டியாளர்கள் முன்னாள் பிரதமர் நூரி அல்-மாலிகியின் கட்சி, சட்டத்திற்கும் ஒழுங்கிற்குமான கூட்டணி மற்றும் ஷியா தலைமையிலான முன்னாள் துணை இராணுவக் குழுவான ஹஷெட் அல்-ஷாபியின் அரசியல் பிரிவான ஈரான் சார்பு பஹ்தா கூட்டணி ஆகியவற்றின் கீழ் ஒருங்கிணைப்பு கட்டமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்துமே ஊழல்மிக்கவையும் மற்றும் பரவலாக வெறுக்கப்படுகிறார்கள்.
பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் மோதல்களின் மையத்தில் இருக்கும் வாஷிங்டனின் கைப்பாவை நாட்டில் மோசமடைந்து வரும் அரசியல் நெருக்கடி, போட்டியான ஷியா கட்சிகளுக்கும் அவற்றின் துணை இராணுவக் குழுக்களுக்கும் இடையே நேரடி நாடு உடைத்துவிடும் ஒரு உள்நாட்டுப் போருக்கு அச்சுறுத்துகிறது. மேலும், கடந்த அக்டோபரில் நடந்த தேர்தல்களைத் தொடர்ந்து நாட்டின் எண்ணெய் வளத்தையும் மற்றும் அரசியல் பதவியை பறித்துக்கொள்ளவும் ஈராக்கின் விலைபோகக்கூடிய அரசியல்வாதிகள் நாட்டைக் கட்டுப்படுத்த போராடுகின்றனர்.
தேர்தல் முடிந்து 10 மாதங்களுக்கு மேலாகியும் புதிய அரசாங்கம் எதுவும் நடைமுறைக்கு வராத நிலையில், தற்போதைய அரசியல் முட்டுக்கட்டைக்கு மத்தியில் இது வருகிறது. 41 சதவீத வாக்குப்பதிவில் அல்-சதரின் சைரூன் இயக்கம் அதிக வாக்குகளைப் பெற்றது.
2003 இல் ஈராக் மீதான குற்றவியல் படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்புக்குப் பின்னர் வாஷிங்டனால் அமைக்கப்பட்ட முழு அரசியல் ஆட்சியின் மீதும் பெருகிவரும் விரோதப் போக்கிற்கு மத்தியில் தேர்தல்கள் வந்தன. வாஷிங்டனிலும் தெஹ்ரானிலும் நாட்டின் போட்டிப் பொம்மை எஜமானர்களுக்கு இடையே எந்தத் தீர்வும் ஏற்படாத நிலையில், ஈராக்கின் அரசியல் பிரிவுகளால் புதிய அரசாங்கம் தொடர்பாக ஒரு உடன்பாடு காண முடியவில்லை.
அரசியல் அடித்தளம் இல்லாத முன்னாள் உளவுத்துறை அதிகாரியான பிரதம மந்திரி முஸ்தபா அல்-காதிமி, 2019 அக்டோபரில் ஒரு மாத கால வெகுஜன சமூகப் போராட்டங்களுக்கு பிறகு, மே 2020 இல் வாஷிங்டனின் ஆதரவுடன் பிரதமராகப் பதவியேற்றார். அந்த போராட்டங்கள் வேலைகளையும், வறுமையையும் ஊழல்களுக்கும், முழு இன-குறுங்குழுவாத அரசியல் அமைப்புக்கும் முடிவு கட்ட வேண்டுமென கோரியதுடன், மற்றும் பிரதமர் அடேல் அப்துல் மஹ்தியின் கட்டாய இராஜினாமாவிற்கு வழிவகுத்தது.
மஹ்தியின் அரசாங்கம் கொடிய பலத்துடன் போராட்டங்களை நசுக்க முயன்றது. 600 க்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்களை சுட்டுக் கொல்ல பாதுகாப்புப் படைகள் மற்றும் துணை இராணுவக் குழுக்களை பயன்படுத்தி, தொற்றுநோய் மற்றும் அதனுடன் வரும் கட்டுப்பாடுகள் தெருக்களைக் காலி செய்யும் வரை பதட்டங்களை மேலும் தூண்டியது.
அல்-காதிமி தனது முன்னோடியின் பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளைத் தொடர்ந்தது மட்டுமல்லாமல், தொழிலாளர்களின் வருமானத்தை அழித்த சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து கடன்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட புதிய நடவடிக்கைகளையும் செயல்படுத்தினார். அவர் எதிர்ப்பாளர்களின் மீது அடக்குமுறையை தொடர்ந்ததுடன், பாதுகாப்புப் படைகளின் கொலைகளை விசாரிப்பதாகவும், எதிர்ப்பு இயக்கத்தின் முக்கிய கோரிக்கைகளான ஈராக்கின் குறுங்குழுவாத அரசியல் அமைப்பை பின்வாங்கும் சட்டத்தை அறிமுகப்படுத்துவதாகவும் அவர் அளித்த உறுதிமொழிகளைத் துறந்தார்.
ஈராக்கின் அரசியல் பிரிவுகள் தங்களின் சலுகைகள், அனுசரணை மற்றும் செல்வத்தை மட்டுப்படுத்தும் எந்த மாற்றங்களுக்கும் எதிராக தம்மை நிறுத்தியுள்ள நிலையில், எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ள போதிலும், பெரும்பான்மையான ஈராக்கிய மக்களை பீடித்துள்ள மோசமான சமூக பொருளாதார நிலமைகளையும் தவிர்த்துக்கொள்ள உதவக்கூடிய 2022 ஆம் ஆண்டுக்கான வரவு அமைக்க அல்-காதிமியால் முடியவில்லை.
அனைத்து அரசியல் கட்சிகளையும் அரசாங்கத்தில் சேர்க்கும் நடைமுறையை முறித்து, ஈரானுடன் இணைந்த ஷியா கட்சிகளை எதிர்க்கட்சியாக விட்டுவிட்டு, மிகப்பெரிய சுன்னி மற்றும் குர்திஷ் முகாம்களுடன் ஆட்சி அமைக்கும் தனது விருப்பத்தை அல்-சதர் அறிவித்தார். பராமரிப்பாளர் அமைப்புமுறையில் இருந்து விலக்கப்பட மறுத்து, ஒருங்கிணைப்புக் கட்டமைப்பில் உள்ள அவரது ஷியா எதிர்ப்பாளர்கள், ஜனாதிபதியின் நியமனத்தைத் தடுக்க மத்திய உச்ச நீதிமன்றத்தைப் பயன்படுத்துதல் மற்றும் தொடர்ச்சியான நடைமுறை, சட்டத் தலையீடுகள் மூலம் அவரது கூட்டணியை உருவாக்கும் செயல்முறையைத் தடுத்தனர். அத்துடன் அவரின் குர்திஷ் கூட்டாளிகள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தினர்.
ஜூன் மாதம், அல்-சதர் தனது முழு பிரிவையும் நாடாளுமன்றத்தில் இருந்து விலக்கிக் கொண்டார். இது தனது போட்டியாளர்களை ஒரு புதிய அரசாங்கத்திற்கு ஒப்புக்கொள்ளும்படி கட்டாயப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதும் மற்றும் தெருப் போராட்டங்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஸ்திரமின்மைக்கான கதவைத் திறந்து, நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தல்களை கட்டாயப்படுத்துவதுமாகும். இப்போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கட்சியாக உள்ள ஒருங்கிணைப்பு கட்டமைப்பு முகமது அல்-சூடானியை பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தபோது, அல்-சதர் ஆதரவாளர்கள் குர்திஷ் கட்சிகளில் இருந்து ஒரு அதிபரை தேர்ந்தெடுப்பதைத் தடுக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர். மேலும் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை நகர மறுத்துவிட்டனர்.
ஊழல்மிக்க பர்சானி குடும்பத்தால் ஆளப்படும் அரை-தன்னாட்சி குர்திஸ்தான் பிராந்திய அரசாங்கம் (KRG), முதலில் அல்-சதரின் பிரிவினை ஆதரித்தது. ஈராக்கிய மத்திய உச்ச நீதிமன்றத்தின் பிப்ரவரி தீர்ப்பின்படி, KRG க்கு துருக்கிக்கான விற்பனையிலிருந்து பெறப்பட்ட அதன் எண்ணெய் மற்றும் எரிவாயு வருவாயை வைத்திருக்க உரிமை இல்லை. KRG ஒரு புதிய அரசியலமைப்பு ஏற்பாட்டிற்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது. இது குர்துகள் மற்றும் பிற இனப்பிரிவினருக்கு அதிக அதிகாரத்தை விட்டுக்கொடுத்து, அல்-சதர் உடனான உறவுகளை முறித்துக் கொள்ளும்.
அல்-சதரின் சைரூன் பிரிவு நாடாளுமன்றத்தில் இருந்து இராஜினாமா செய்ததில் இருந்து, அல்-சதர் முன்கூட்டியே தேர்தல், நாடாளுமன்றம் கலைப்புக்கும், அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். அவரது ஆதரவாளர்கள் பசுமை மண்டலத்தில் உள்ள உச்ச நீதி மன்றத்திற்கு வெளியே அது நாடாளுமன்றத்தை கலைக்க உத்தரவிட மறுத்தபோது, அதற்கு அதிகாரம் இல்லை என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈராக்கின் அனைத்து அரசியல் கட்சிகளின் தேசிய பேச்சுவார்த்தையை உருவாக்குவதற்கான காதிமியின் முயற்சிகளில் பங்கேற்க அல்-சதர் மறுத்துவிட்டார். அதன் முதல் அமர்வு இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் முன்கூட்டியே தேர்தலை நடத்த சம்மதித்துள்ள நிலையில், தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும், யார் ஏற்பாடு செய்வது என்பது குறித்தும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
புதிய அரசாங்கம் எப்படி அமைந்தாலும், அது உருவாகும்போது, இப்போதே பரந்த கஷ்டங்களை உருவாக்கியுள்ள மின்சாரம், தண்ணீர் பற்றாக்குறை மற்றும் உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வு ஆகியவற்றின் மேல் அதிக கஷ்டங்களையும் துன்பங்களையும் குவிக்கும் என்பது தெளிவாகிறது.
தோல்வியுற்ற எகிப்தியப் புரட்சியின் படிப்பினைகள் ஈராக்கிய தொழிலாள வர்க்கத்திற்கு மகத்தான முக்கியத்துவம் வாய்ந்தவை. அங்கு தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன இயக்கம் 2011 இல் ஹோஸ்னி முபாரக்கின் வெறுக்கப்பட்ட இராணுவ சர்வாதிகாரத்தை வீழ்த்தியது.
எவ்வாறாயினும், அந்த வெகுஜன இயக்கம் முதலாளித்துவ எதிர்க் கட்சிகளாலும், வசதியான நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகளால் ஆதிக்கம் செலுத்தியதால், அவர்கள் அனைவரும் முதலாளித்துவ ஆட்சிக்கு எந்த சவாலையும் கடுமையாக எதிர்த்ததால், அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் வளைகுடா நட்பு நாடுகளின் ஆதரவுடன் இராணுவம் இந்த வாய்ப்பை மூர்க்கமாக ஒடுக்குவதற்கு பயன்படுத்திக் கொண்டது. முபாரக்கின் முன்னாள் ஜெனரலும் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி முகமது மோர்சியின் பாதுகாப்பு அமைச்சருமான அப்தெல் பத்தாஹ் அல்-சிசியின் கீழ் பயங்கரவாத ஆட்சியை ஏற்படுத்திய கொடூரமான அடக்குமுறையை உருவாக்கியது.
ஈராக்கிய தொழிலாள வர்க்கம் ஈராக்கின் அரசியல் குழுக்களாலும், மதகுருமார்களாலும் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கக் கூடாது. அதற்குப் பதிலாக அரசியல் முன்முயற்சியை எடுக்க வேண்டும். அது ஈராக்கிய முதலாளித்துவத்தின் அனைத்து அரசியல் கட்சிகளிலிருந்தும் தன்னைத்தானே உடைத்துக்கொண்டு முதலாளித்துவ வர்க்கத்திலிருந்து முற்றிலும் சுயாதீனமான ஒரு கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டும். இது தொழிலாளர்களின் அதிகாரத்தை நிறுவுவதற்கும், முதலாளித்துவத்தை ஒழிப்பதற்கும் மற்றும் மத்திய கிழக்கின் ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக போராடுவதற்கும் ஒரு சர்வதேச புரட்சிகர வேலைத்திட்டத்தினை அடிப்படையாக கொள்ளவேண்டும்.