மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடூரமான நவகாலனித்துவ ஆக்கிரமிப்பை கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களில் முடிவுக்குக் கொண்டு வர, C-17 இராணுவ துருப்பு வாகனங்களில் காபூலில் இருந்து அமெரிக்க துருப்புக்களின் கடைசிப் பிரிவினர் வெளியேறியதின் ஒரு வருடத்தைக் கடந்த செவ்வாய்க்கிழமை குறித்தது. 1975 இல் வியட்நாமின் சைகோனில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மேற்கூரையில் இருந்து வெளியேறியதைப்போல், வழமைக்கு மாறாக புறப்படுவதற்கு முந்தைய வாரங்களில், இஸ்லாமிய தலிபான்களின் முன்னேற்றத்திற்கு மத்தியில் காபூலில் வாஷிங்டனின் கைப்பாவை ஆட்சி சிதைந்தது.
காபூலில் இருந்து கடைசியாக அமெரிக்க இராணுவ விமானம் புறப்பட்ட ஒரு நாளுக்குப் பின்னர், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் ஒரு உரையை நிகழ்த்தினார். அதில் அவர் 'நாங்கள் நீண்ட காலமாக போரில் ஈடுபட்டுள்ள ஒரு தேசமாக இருக்கிறோம். இன்று உங்களுக்கு 20 வயதாக இருந்தால், அமெரிக்காவை சமாதானமான ஒன்றாக நீங்கள் ஒருபோதும் அறிந்திருக்க மாட்டீர்கள். என்றென்றுக்குமான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நேரம் இது” என அறிவித்தார்,
'என்றென்றுக்குமான போர்' பைடென் குறிப்பிடுவது இரண்டு தசாப்தங்களாக இரத்தக்களரி எதிர்ப்பு கிளர்ச்சிப் போர் மற்றும் ஆக்கிரமிப்பைக் கொண்டிருந்தது. இதன்போது அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் ஒரு முழு சமூகத்தையும் அழித்தனர். ஒரு குறைத்துக்காட்டிய மதிப்பீட்டின்படி மோதலின் போது 175,000 முதல் 250,000 ஆப்கானியர்கள் கொல்லப்பட்டனர் என்னும்போது, ஏகாதிபத்திய சக்திகள் நாட்டை அழிவினில் விட்டுச்செல்கின்றன. இந்த மரணங்களில் ஆயிரக்கணக்கானோர் திருமண விழாக்களிலும், அவர்களது வீடுகளிலும், மருத்துவமனைகளிலும் காட்டுமிராண்டித்தனமான ஆளற்ற ட்ரோன் விமானத் தாக்குதல்களால் படுகொலை செய்யப்பட்டனர். வாஷிங்டனின் ஊழல் பொம்மை ஆட்சி, சுமார் 80 பில்லியன் டாலர் நிதியுதவியுடன் கட்டமைக்கப்பட்டது. அதன் முன்னணி பிரதிநிதிகள் நாட்டை விட்டு வெளியேறியதால், அதற்கு மக்கள் ஆதரவு முற்றிலும் இல்லை என்பது நிரூபிக்கப்ப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து விலகியமை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு தோல்வியை பிரதிநிதித்துவப்படுத்தியது. இது 1990-91 முதல் வளைகுடாப் போரில் தொடங்கி, வாஷிங்டனின் வேகமான பொருளாதார வீழ்ச்சியை இராணுவ பலத்தினால் ஈடுசெய்ய முடியும் என்ற நம்பிக்கை முப்பது ஆண்டுகால இடைவிடாத போர்கள் முழுவதும் அதன் கொள்கைக்கான அடிப்படையாகக் கொண்டிருந்தது. மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் 'ஆட்சி மாற்றம்' நடவடிக்கைகளில் பொம்மை அரசாங்கங்களை நிறுவுவது யூரேசிய நிலப்பரப்பில் அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை ஒருங்கிணைப்பதில் இன்றியமையாததாகக் காணப்பட்டது. யூரேசிய நிலப்பரப்பு 1991 இல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டதாலும் மற்றும் சீனாவில் முதலாளித்துவ மறுசீரமைப்பின் மூலமும் இரக்கமற்ற முதலாளித்துவ சுரண்டலுக்குத் திறக்கப்பட்டது. ஏகாதிபத்திய பூகோள- மூலோபாயத்தின் இந்த நோக்கங்கள், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஆப்கானிஸ்தானில் 'ஜனநாயகத்திற்கும்', 'பெண்களின் உரிமைகளுக்காக' ஒரு போராட்டத்தை நடத்தி வருகின்றது என்ற போலியான பிரச்சாரத்தின் மூலம் பொதுமக்களிடமிருந்து மறைக்கப்பட்டன.
உலக சோசலிச வலைத் தளம் அந்த நேரத்தில் பெரிய அளவிலான இராணுவ மோதலில் இருந்து பின்வாங்குவது 'என்றென்றுக்குமான போர்களுக்கு' ஒரு முடிவையும் பிரதிநிதித்துவப்படுத்தாமல், ஆகஸ்ட் 31 தனது உரையில் பைடென் வலியுறுத்தியது போல், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவது மிகப் பெரிய எதிரிகளை எதிர்கொள்வதற்கான ஏகாதிபத்திய மூலோபாயத்தில் ஒரு மாற்றத்தைக் குறித்தது. ஆப்கானிய தோல்வியின் தாக்கங்கள் பற்றிய ஆரம்ப பகுப்பாய்வில் உலக சோசலிச வலைத் தளம் எழுதியது போல்: “இது போரின் ஆபத்தை சிறிதும் குறைக்கவில்லை. உண்மையில், பைடென் தனது உரையைப் பயன்படுத்தி, அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆப்கானிஸ்தான் அல்லது உலகில் உள்ள வேறு எந்த நாடு மீதும் கொலைகார 'எல்லைகளை தாண்டி' தாக்குதல்களை தொடரும் திறனை வலியுறுத்தினார். அதே நேரத்தில் அதன் இராணுவ வலிமையை அணுவாயுத சக்திகளான சீனாவுடனும், ரஷ்யாவுடனும் மிகவும் ஆபத்தான மோதல்களை நோக்கி நகர்த்தினார்.
இரண்டு வாரங்களுக்கு பின்னர், நியூயோர்க் நகரம் மற்றும் வாஷிங்டன் டிசி மீதான இன்னும் தெளிவுபடுத்தப்படாத 9/11 பயங்கரவாதத் தாக்குதல்களின் 20 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் ஒரு கட்டுரையில், நாங்கள் பின்வருமாறு வலியுறுத்தினோம்: 'பயங்கரவாதத்தின் மீதான போரின்' தோல்வி அமெரிக்க இராணுவவாதத்தின் முடிவினை குறிக்கவில்லை. மாறாக, பைடென் தெளிவுபடுத்தியுள்ளபடி, ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவது அமெரிக்க இராணுவ சக்தியை பென்டகன் விவரிக்கும் 'மூலோபாய போட்டியாளர்கள்' அல்லது 'பெரும் சக்தி' போட்டியாளர்களான அணு ஆயுதம் கொண்ட சீனா மற்றும் ரஷ்யாவுடன் மோதலை நோக்கி நகர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மூன்றாம் உலகப் போரின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது”.
பன்னிரண்டு மாதங்களுக்கு பின்னர், அமெரிக்க ஏகாதிபத்திய கொள்கையின் இந்த மதிப்பீட்டின் சரியான தன்மை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. காபூலில் இருந்து வெளியேறி ஆறு மாதங்களுக்குள், பைடென் நிர்வாகமும் அதன் ஐரோப்பிய மற்றும் கனேடிய கூட்டாளிகளும் விளாடிமிர் புட்டினின் ரஷ்ய தேசியவாத ஆட்சியைத் தூண்டி உக்ரேன் மீது படையெடுப்பை தொடங்குவதில் வெற்றி பெற்றனர். இது ஒரு தசாப்தமாக தயாரிக்கப்பட்ட ஒரு போரைத் தூண்டியது. கியேவில் 2014 பாசிச ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னர் நேட்டோவால் பயிற்சியளிக்கப்பட்ட மற்றும் ஆயுதம் ஏந்திய நவ-நாஜிப் படைகளைக் கொண்ட உக்ரேனிய இராணுவம், பெப்ரவரியில் இருந்து பல பில்லியன் டாலர்கள் உயர் சக்தி வாய்ந்த ஆயுதங்களைப் பெற்றுள்ளது. பைடென் நிர்வாகத்தின் குறிக்கோள், அணு ஆயுதங்களால் போரிடப்படும் உலகளாவிய வெடிப்பின் அபாயத்தின் மத்தியிலும், இயற்கை வளங்கள் மற்றும் முக்கியமான கனிமங்களின் கணிசமான வைப்புகளின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் நோக்கத்துடன் ரஷ்யாவுடனான போரை பொறுப்பற்ற முறையில் தீவிரப்படுத்துவதாகும். இந்த நோக்கத்திற்காக, ஏகாதிபத்தியங்கள் ஏகாதிபத்திய கொள்ளையின் காலடியின் கீழ் அதன் பரந்த நிலப்பரப்பை சிறிய நாடுகளாக உடைப்பதன் மூலம் ரஷ்யாவை ஒரு அரை-காலனி நிலைக்கு அடிபணியச் செய்ய விரும்புகிறார்கள்.
சீனாவின் ஒரு மாகாணமாக பெய்ஜிங் கருதும் மற்றும் அமெரிக்காவின் பெய்ஜிங்குடனான போருக்கான அமெரிக்க இராணுவ தளமாக மாற்ற விரும்பும் தைவானின் நிலை குறித்த கேள்வியில் சீனாவுடனான பதட்டங்களை ஆத்திரமூட்டும் வகையில் அதிகரிப்பதற்கு வாஷிங்டன் திட்டமிட்டுள்ளது. தைவானிய இராணுவப் படைகளுக்கு பயிற்சி அளிப்பதாக வாஷிங்டன் ஒப்புக்கொண்டதுடன், ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் காங்கிரஸின் சபாநாயகர் நான்சி பெலோசியின் தைபேயிற்கான வருகை ஆகியவை வாஷிங்டனின் நீண்டகால கொள்கையான 'மூலோபாய இரட்டைத்தன்மை' என்ற கொள்கையை உடைத்துவிட்டது. இக்கொள்கை பெய்ஜிங் மற்றும் தைபே இடையே இராணுவ மோதல் ஏற்பட்டால் தைவானின் பாதுகாப்பிற்கு வெளிப்படையாக உறுதியளிக்க மாட்டாது என்ற சீனாவுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டை அடிப்படையாக கொண்டதாகும். பெலோசியின் வருகையானது அமெரிக்க கடற்படை விமானம் தாங்கி போர்க்கப்பல் மற்றும் தாக்குதல் குழு அப்பகுதிக்குள் சென்றதுடன் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பதட்டத்தை அதிகரித்தது. இதற்கு சீனாவின் கடற்படை உண்மையான சூடு நடாத்தும் பயிற்சிகளை தாய்வானின் கடற்கரையில் நடாத்தியதன் மூலம் பதிலளித்தது.
வாஷிங்டனும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும், ஊடகங்களில் அவர்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து, உக்ரேனில் 'ஜனநாயகம்', 'ரஷ்ய ஆக்கிரமிப்பிற்கு' எதிராக 'மனித உரிமைகளை' பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை அல்லது சீனாவின் 'சர்வாதிகாரத்திற்கு' எதிராக தைவானைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை பறைசாற்றுவதில் சோர்வடைய மாட்டார்கள். மேற்கத்திய அரசியல் தலைவர்களும் செய்தி ஊடகங்களும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய உளவுத்துறை மற்றும் இராணுவப் படைகளின் ஆதரவுடன் கியேவில் உள்ள ஊழல் மிகுந்த தன்னலக்குழு ஆட்சியை ஜனநாயக விழுமியங்களின் உருவகமாக சித்தரிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், கடந்த ஆறு மாதங்களாக இந்த பிரச்சாரத் தாக்குதல் ஒரு காது கேட்கமுடியாத உச்சத்தை எட்டியுள்ளது. மார்ச் மாதம் போலந்தில் ஆற்றிய ஒரு முக்கிய உரையில், பைடென் அமெரிக்காவையும் அதன் கூட்டாளிகளையும் ரஷ்யாவுடனான 'தசாப்தங்களான' போருக்கு உறுதியளித்து, உக்ரேனிய ஆட்சி 'சுதந்திரத்திற்கான பெரும் போரில்' ஈடுபட்டுள்ளது என்று அறிவித்தார். ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பெயபொக், ரஷ்யப் படையெடுப்பிற்கு ஒரு வாரத்திற்குப் பின்னரும், ஹிட்லருக்குப் பின்னர் மிகப் பெரிய மறுஆயுதமயமாக்கல் திட்டத்தில் ஜேர்மன் அரசாங்கம் தனது இராணுவ வரவு-செலவுத் திட்டத்தை மூன்று மடங்காக உயர்த்திய சில நாட்களுக்குப் பின்னர் பேசுகையில், 'இந்தத் தாக்குதலுக்கு எதிராக நாம் எழுந்து நிற்க வேண்டும். மனித உரிமைகள் உலகளாவியது” என்றார்.
இரண்டு தசாப்தங்களாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளான ஜேர்மனி மற்றும் பிரிட்டனின் கொள்ளையடிப்பிற்குப் பின்னர் மில்லியன் கணக்கான ஆப்கானியர்கள் எதிர்கொள்ளும் சமூக மற்றும் பொருளாதார பேரழிவு இத்தகைய மோசமான கூற்றுகளுக்கு சிறந்த நிராகரிப்பை வழங்குகிறது. ஆப்கானிய மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் தற்போது ஒரு நாளுக்கு 1டாலருக்கும் குறைவான வருமானத்தில் வாழ்கின்றனர். அதே சமயம் 97 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளனர். 2001 மற்றும் 2021 க்கு இடையில் தங்கள் அமெரிக்க மற்றும் நேட்டோ ஆக்கிரமிப்பாளர்களின் கைகளில் வறிய ஆப்கானியர்கள் அனுபவித்த பயங்கர ஆட்சியினால் பரந்த அளவிலான மக்கள் உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் உடல் ஊனமுற்றும் உள்ளனர்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தினை எதிர்கொண்ட ஆப்கானிய மக்களின் பேரழிவுகரமான வரலாறு, 'மனித உரிமைகள்' மற்றும் 'ஜனநாயகம்' ஆகியவை ஏகாதிபத்திய சக்திகள் தங்கள் கொள்ளையடிக்கும் புவிசார் மூலோபாய மற்றும் பொருளாதார அபிலாஷைகளைப் பின்தொடர்வதை நியாயப்படுத்தும் அளவிற்கு மட்டுமே அக்கறை கொண்டுள்ளன என்பதை நிரூபிக்கிறது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் தலையீடு நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் 1979 இல் தொடங்கியது. கார்ட்டர் நிர்வாகம் சோவியத் ஆதரவுடைய ஆட்சிக்கு எதிராக இஸ்லாமிய போராளிகளை ஆயுதமயமாக்கியபோது நாட்டை உள்நாட்டுப் போரில் மூழ்கடித்து சோவியத் ஒன்றியத்திற்கான 'சொந்த வியட்நாமை' உருவாக்கியது. இந்த முஜாஹிதீன்களை ஆயுதமயமாக்கிமை, பிராந்தியம் முழுவதும் ஒசாமா பின்லேடனினதும் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் எழுச்சிக்கான சூழ்நிலையை உருவாக்கியது. வாஷிங்டன் சவுதி அரேபியாவையும் பாகிஸ்தானையும் இஸ்லாமிய ஆயுததாரிகளை பயிற்றுவிப்பதற்கும் ஆப்கானிஸ்தானுக்குள் அனுப்புவதற்கும் ஊக்குவித்தது. 9/11க்குப் பின்னரும், இந்த இஸ்லாமிய ஆயுதக்குழுக்கள் ஏகாதிபத்திய சக்திகளால் லிபியா மீதான இரத்தக்களரி தாக்குதல் மற்றும் சிரியா மற்றும் ஈராக் போரின் போது தங்கள் நலன்களை முன்னேற்றுவதற்கு பினாமி சக்திகளாக பயன்படுத்தப்பட்டனர். உக்ரேனில் ரஷ்யாவுடனான தற்போதைய மோதலை 1980 களில் ஆப்கானிஸ்தானுடன் இராணுவத் திட்டமிடுபவர்கள் வெளிப்படையாக ஒப்பிட்டுப் பார்த்தனர். ஆப்கான் மக்களின் மீதான அழிவுகரமான விளைவுகள் பற்றி எவ்வாறு அலட்சியமாக இருந்தார்களோ அதேபோல்தான் ஏகாதிபத்தியவாதிகள் இன்று சாதாரண உக்ரேனியர்கள் மற்றும் ரஷ்யர்கள் மீது பல ஆண்டுகளாக நீடிக்கும் போரின் பயங்கரமான விளைவுகளைப் பற்றியும் அலட்சியமாக இருக்கின்றனர் என்பதை எடுத்துக்காட்டியுள்ளனர்.
9/11 பயங்கரவாத தாக்குதல்கள் ஆப்கானிஸ்தான் போரின் தொடக்கத்தை நியாயப்படுத்துவதற்காக கைப்பற்றப்பட்டன. இது 2001 க்கு பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. நவ காலனித்துவ ஆக்கிரமிப்பு ஆப்கானிய மக்களுக்கு 'ஜனநாயகத்தை' கொண்டு வருவதற்கும், 'பெண்களின் உரிமைகளை' பாதுகாப்பதற்கும் மற்றும் 'பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுதல்' ஆகியற்றை நியாயப்படுத்தும் போர்-சார்பு பிரச்சாரம் அடுத்தடுத்த இரண்டு தசாப்தங்களில் முழுமையாக அம்பலப்படுத்தப்பட்டன. ஆக்கிரமிப்புப் படைகள்தான் கிளர்ச்சி எதிர்ப்புப் போரில் மக்களைப் பயமுறுத்தியது. பக்ராம் விமானப்படைத் தளம் மற்றும் பிற 'கருப்புத் தளங்களில்' ஆயிரக்கணக்கானோரை சித்திரவதை செய்து, ஊழல் மற்றும் சுய-செல்வமயமாக்கலின் அடித்தளமாக கொண்ட ஒரு பொம்மை ஆட்சியைக் கட்டமைத்தது.
படைகள் வெளியேறிய பின்னரும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் அவர்களது கூட்டாளிகளும் ஆப்கானிய மக்களுக்கு எதிரான தங்கள் பழிவாங்கலைத் தொடர்ந்தனர். காபூலில் ஒரு நிலையான புதிய காலனித்துவ ஆட்சியை நிறுவுவதற்கான அவர்களின் முயற்சிகள் தோல்வியடைந்ததற்கு அவர்களை குற்றம் சாட்டினர். வெட்கக்கேடான திருட்டுச் செயலில், பைடென் நிர்வாகம் பெப்ரவரியில் நியூயோர்க்கின் பெடரல் ரிசர்வ் வங்கியில் கையிருப்பு செய்யப்பட்ட ஆப்கானிஸ்தான் மத்திய வங்கிக்கு சொந்தமான 7 பில்லியன் டாலர்கள் நிதி சொத்துக்களை திருடுவதற்கான அதன் முடிவை அறிவித்தது. இந்த ஆண்டு 23 மில்லியன் ஆப்கானியர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டையும், பட்டினியையும் எதிர்கொள்கின்றனர், மேலும் ஒரு மில்லியன் குழந்தைகள் இறக்கக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் இரண்டு தசாப்தகால மிருகத்தனமான நவ காலனித்துவ ஆக்கிரமிப்பு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கும் பேரழிவு தரும் சமூக, பொருளாதார விளைவுகளையும் உருவாக்கியது. அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நியாயப்படுத்த இப்போர் பயன்படுத்தப்பட்டது. ஏனெனில் இதனூடாக புலனாய்வு அமைப்புகளுக்கு மக்கள் மீது உளவு பார்க்க வரம்பற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டன. சமூகத்தினை மிருகத்தனமயமாக்குவதால், ஆயிரக்கணக்கான முன்னாள் படையினர்கள் மற்றும் அவர்களின் முழு நனவான வாழ்க்கையும் முடிவில்லாத போர்களால் மூழ்கடிக்கப்பட்ட மில்லியன் கணக்கான இளைஞர்களின் மன ஆரோக்கியத்தின் மீதான தாக்கம் உட்பட, துப்பாக்கி வன்முறை, தற்கொலைகள், போதைப்பொருள் அளவுக்கதிகமான பாவனை மற்றும் பிற சமூக துயரங்களின் எழுச்சியைக் கண்டுள்ளது. இது ட்ரம்ப் போன்ற ஒரு பாசிச நபர் குடியரசுக் கட்சியின் பரந்த பிரிவுகளுடன் இணைந்து ஜனாதிபதித் தேர்தலின் ஜனநாயகரீதியான முடிவை தூக்கியெறிந்து ஒரு தனிப்பட்ட சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்க வெளிப்படையாக சதி செய்யக்கூடிய அரசியல் நிலைமைகளை உருவாக்க உதவியுள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஆளும் உயரடுக்கு இராணுவ வன்முறையில் எப்போதும் அதிக பொறுப்பற்ற முறையில் தஞ்சமடைவதானது முதலாளித்துவத்தின் தீர்க்க முடியாத உலகளாவிய நெருக்கடியை வெளிப்படுத்துகிறது. பல தசாப்தங்களாக இடைவிடாத போர்கள் சமூக சமத்துவமின்மையை மோசமாக்கியுள்ளன. ஏனெனில் சமூக சேவைகளும், தொழிலாளர்களின் ஊதியங்களும் பெருத்த இராணுவ வரவு-செலவுத் திட்டங்களை ஈடுகட்ட குறைக்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானின் மிருகத்தனமான ஆக்கிரமிப்பில் மனித வாழ்க்கைக்கு ஆளும் வட்டங்கள் காட்டிய அதே அலட்சியம், கோவிட்-19 தொற்றுநோய்களின் போது பாரிய தொற்று மற்றும் இறப்பு என்ற அவர்களின் கொலைகார கொள்கையில் வெளிப்பாட்டைக் கண்டுள்ளது. பல தசாப்தங்களாக முடிவடையாத போர்கள் முதலாளித்துவ அரசின் அனைத்து அமைப்புகளையும், போர்களை ஆதரித்த உத்தியோகபூர்வ அரசியல் கட்சிகள், அவற்றுக்காக பிரச்சாரம் செய்த ஊடகங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தண்டிக்கப்படாமல் இருக்க அனுமதித்த நீதித்துறை வரை மதிப்பிழக்க செய்துள்ளன. இந்த நிகழ்ச்சிப்போக்குகள் புரட்சிகரமான தாக்கங்களைக் கொண்டுள்ளன.
ஏகாதிபத்திய சக்திகள் அணுவாயுதங்களுடன் போரிடும் ஒரு மூன்றாம் உலகப் போருக்கு விரைந்து செல்வதற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தில் ஒரு சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தை அணிதிரட்டுவதே இப்போது தீர்க்கமான பணியாகும். இப்போராட்டத்தில், ஆப்கானிய சமுதாயத்தின் அழிவுக்கு பொறுப்பான போர்க்குற்றவாளிகளுடனும் மற்றும் இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் எழும் முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பு முறையுடனும் தொழிலாளர்கள் கணக்குகளை தீர்த்துக்கொள்ள வேண்டும்.