எதிர்கால அரசாங்கத்தின் உருவாக்கம் தெளிவில்லாது இருக்கையில் அதி-வலதுசாரி சுவீடஷ் ஜனநாயகக் கட்சியினர் தேர்தலில் வெற்றி பெறுகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஸ்காண்டிநேவிய நாட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் சுவீடனின் நவ-நாஜி இயக்கத்தில் இருந்து தோன்றிய அதி-வலதுசாரி சுவீடஷ் ஜனநாயகக் கட்சி தெளிவான வெற்றியைப் பெற்றது. இரண்டு முக்கிய கட்சிகளும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை மிக நெருக்கமாக இருந்தாலும், புதன் அல்லது வியாழன் அன்று தபால் வாக்குகள் மற்றும் வெளிநாட்டு வாக்குகள் எண்ணப்பட்ட பின்னரே இறுதி முடிவு அறியப்படும். சுவீடன் ஜனநாயகக் கட்சியினர் மற்ற கட்சிகளை விட தங்களுக்கான ஆதரவை அதிகரித்து, இப்போது சுவீடனில் இரண்டாவது பெரிய அரசியல் கட்சியாகி உள்ளனர்.

சுவீடனின் பிரதம மந்திரி மாக்டலேனா ஆண்டர்சன், இடதுபுறம், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லெயென், பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஆணையத்தில் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 10, 2021 இல் வரவேற்கப்பட்டார் [AP Photo/Johanna Geron/Pool Photo via AP]

திங்கள் பிற்பகல் நிலவரப்படி, பூர்வாங்க முடிவுகளின்படி பழைமைவாத மிதவாதிகள் தலைமையிலான வலதுசாரிக் கூட்டணிக்கு 175 இடங்களும், சமூக ஜனநாயகவாதிகள் தலைமையிலான 'இடது' பிரிவிற்கு 174 இடங்களும் கிடைத்தன. எவ்வாறாயினும், மிதவாதிகள், சுவீடன் ஜனநாயகக் கட்சியினரால் மிகப்பெரிய கட்சியாக பிரதியீடு செய்யப்பட்டனர். வலதுசாரி நான்கு கட்சிகளின் முகாம், இதில் மிகச் சிறிய கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள் மற்றும் தாராளவாதிகள் உள்ளனர். சுவீடன் ஜனநாயகக் கட்சியின் வாக்குகள் 2018 இல் 17.5 சதவீதத்திலிருந்து 20.6 சதவீதமாக அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் மிதவாதிகள் 19.8 இலிருந்து 19.1 ஆகக்குறைந்துள்ளனர்.

சமூக ஜனநாயகக் கட்சி மிகப்பெரிய தனிக் கட்சியாக நீடித்து, அவர்களின் 2018 முடிவிலிருந்து 30.5 சதவீத வாக்குகளைப் பெற்று, சிறிது வெற்றி ஈட்டியுள்ளது. மத்திய கட்சி, பசுமைக் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சி ஆகியவற்றின் சகிப்புடன் அதிகாரத்தில் நீடிக்க, வெளியேறும் நாடாளுமன்றத்தில் தங்கியிருந்த பிரதம மந்திரி மக்டலேனா ஆண்டர்சன், உத்தியோகபூர்வமாக தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார். 349 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு தேவையான 175 இடங்களை சமூக ஜனநாயகக் கட்சி தலைமையிலான கூட்டணி பெறுவதற்கு எஞ்சியுள்ள வாக்குகளால் இன்னும் ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது.

இந்த தேர்தல் முடிவுகள் சுவீடனை 'இடது' அரசியலாக கடந்த காலத்தில் காட்டிவந்ததன் மீது ஒரு மோசமான குற்றச்சாட்டாகும். சர்வதேச அளவில் இடதுசாரி சார்பான ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சிகளால் 'முற்போக்கான' சொர்க்கமாக நீண்டகாலமாகப் கண்டுபிடிக்கப்பட்ட சுவீடன், 'இடது' மற்றும் 'வலது' ஆகிய அடுத்தடுத்த அரசாங்கங்களால் தனியார்மயமாக்கல், பொதுச் செலவுக் குறைப்புக்கள், செல்வந்தர்களுக்கான வரிக் குறைப்புக்கள், இராணுவச் செலவினங்களின் அதிகரிப்பு மற்றும் புலம்பெயர்ந்தோரை பலிகடா ஆக்குதல் போன்றவற்றை அலைகளுக்குப் பின் அலைகளாகக் கண்டுள்ளது.

இது கடந்த எட்டு ஆண்டுகளாக ஆண்டர்சன் மற்றும் முன்னாள் பிரதம மந்திரி ஸ்டீபன் லோஃப்வெனின் கீழ் சமூக ஜனநாயகவாதிகளால் பின்பற்றப்பட்ட கொள்கைகளில் உச்சக்கட்டத்தை எட்டியது. இதில் சுவீடனை நேட்டோ இராணுவக் கூட்டணிக்குள் கொண்டு வருவது, ரஷ்யாவுடனான அமெரிக்க-நேட்டோ போருக்குப் பின்னால் முற்றாக அணிவகுத்தது மற்றும் கோவிட்-19 இலிருந்து அதிக இறப்பு விகிதங்களை கொண்ட ஒன்றாக சுவீடனை விட்டுச் சென்ற 'உயிர்களை விட இலாபத்திற்கு முன்னுரிமை' தொற்றுநோய் கொள்கை அடங்கும். பசுமைவாதிகள் மற்றும் இடது கட்சி ஆதரவுடன், சமூக ஜனநாயகக் கட்சியினர் வலதுசாரிக் கட்சிகளால் கட்டளையிடப்பட்ட வரவு- செலவுத் திட்டங்களை அமுல்படுத்தி மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக தண்டனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

வாக்கெடுப்பின் இறுதி முடிவு எதுவாக இருந்தாலும், சுவீடன் ஜனநாயகக் கட்சியினர் அரசியல்ரீதியாக வலுப்பெற்றுள்ளதுடன், முழு அரசியல் ஸ்தாபகமும் கூர்மையாக வலது பக்கம் சாய்ந்துள்ளது. சமூக ஜனநாயகக் கட்சியினர் அதிகாரத்தில் இருக்கமுடியாத சந்தர்ப்பத்தில் கூட, தீவிர வலதுசாரி சுவீடன் ஜனநாயகக் கட்சியினர் நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக இருப்பார்கள்.

தேர்தலுக்கு முன், மிதவாதத் தலைவர் உல்ப் கிறிஸ்டெர்சன், மூன்று பாரம்பரிய வலதுசாரிக் கட்சிகளைக் கொண்ட அரசாங்கத்தை அமைக்கும் வாய்ப்பை எழுப்பினார். அதில் அவர் பிரதம மந்திரியாக இருக்கும் தீவிர வலதுசாரி சுவீடன் ஜனநாயகக் கட்சியினர் வெளியில் இருந்து பாராளுமன்ற ஆதரவை வழங்குவர் என்றார். இந்த முன்மொழிவு, இதுவரை அரசாங்கப் பதவியை வகித்திருக்காத தீவிர வலதுசாரி கட்சிக்கு சுவீடிஷ் மக்களின் பரந்த பிரிவினரின் ஆழமான விரோதப் போக்கை மறைமுகமாக அங்கீகரிப்பதாகும்.

ஆனால் தேர்தல் இரவில், சுவீடன் ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜிம்மி அகெசன், சுவீடன் ஜனநாயகக் கட்சியினர் துணைப் பாத்திரத்தில் திருப்தி அடைய மாட்டார்கள் என்பதைத் தெளிவுபடுத்தினார். “இப்போது அதிகார மாற்றம் ஏற்படும் போல் தெரிகிறது. ஆட்சியில் அமர்வதே எங்கள் இலட்சியம்” என்றார்.

திங்கட்கிழமை மதியம், Aftonbladet முன்னணி செய்தித்தாள் அகெசன் மத்திய ஸ்டாக்ஹோமில் மிதவாதிகளின் தலைமையகத்திற்கு விஜயம் செய்ததாக அறிவித்தது. கிறிஸ்தவ ஜனநாயவாதிகளின் தலைவர் எபா புஷ் மற்றும் தாராளவாத தலைவர் ஜோஹன் பெஹர்சன் ஆகியோருடன் மிதவாதிகளால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சுவீடன் ஜனநாயகக் கட்சியினரும் தாராளவாதிகளும் மிதவாதிகள் மற்றும் கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள் அடங்கிய சிறுபான்மை அரசாங்கத்தை ஆதரிக்கும் ஒரு ஏற்பாட்டிற்கு பேச்சுவார்த்தை நடத்த கிறிஸ்டெர்சன் நம்புவதாக கூறப்படுகிறது.

அனைத்து ஸ்தாபக கட்சிகளாலும் எதிர்விருக்கும் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் கூட்டை தீர்மானிப்பதில் அகெஸன் மற்றும் சுவீடன் ஜனநாயகக் கட்சியினரின் திறமையானது, உத்தியோகபூர்வ அரசியல் வாழ்க்கையில் தீவிர வலதுசாரிகளை திட்டமிட்டு ஒருங்கிணைப்பதன் விளைவு ஆகும். 2010 தேர்தலில் பாசிச சுவீடன் ஜனநாயகக் கட்சி முதன்முதலில் பாராளுமன்றத்தில் நுழைந்தபோது, மற்ற அனைத்துக் கட்சிகளும் அவர்களுடன் ஒத்துழைக்க மறுப்பதாகக் கூறின. 2014 இல், சமூக ஜனநாயகக் கட்சியின் பிரதம மந்திரி லோஃப்வென், தீவிர வலதுசாரிகளின் எழுச்சியைத் தடுப்பதற்குத் தேவையான பாரம்பரிய வலதுசாரிக் கட்சிகளுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதை நியாயப்படுத்தினார். பல தசாப்தங்களாக வெட்டுக்கள் மற்றும் தனியார்மயமாக்கல்களுக்குப் பின்னர் பொதுச் சேவைகளுக்கான தொடர்ச்சியான சிக்கனத்தை உள்ளடக்கிய வலதுசாரிக் கட்சிகளின் வரவு-செலவுத் திட்டத்தின் அடிப்படையில் அதனை செயல்படுத்த சமூக ஜனநாயகக் கட்சியினருக்கு லோஃப்வென் உறுதியளித்தார். பதிலுக்கு, வலதுசாரி கட்சிகள் சுவீடன் ஜனநாயகக் கட்சியினரின் வாக்குகளால் லோஃப்வெனின் சிறுபான்மை அரசாங்கத்தை கவிழ்க்க மாட்டோம் என்று உறுதியளித்தன.

கிறிஸ்டெர்சன் 2017 இல் மிதவாதத் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர், மிதவாதிகள் போக்கை மாற்றிக்கொண்டு சுவீடன் ஜனநாயகக் கட்சியினருடன் வெளிப்படையாக ஒத்துழைக்கத் தொடங்கினர். இந்த ஒத்துழைப்பின் விளைவாக, கடந்த ஆண்டு மிதவாதிகள் மற்றும் சுவீடன் ஜனநாயகக் கட்சியினரால் தயாரிக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக பாராளுமன்றம் வாக்களித்து, ஆண்டர்சன் தலைமையிலான சிறுபான்மை சமூக ஜனநாயக அரசாங்கம் செயல்படுத்த ஒப்புக்கொண்டது. சுவீடன் ஜனநாயகக் கட்சியை உள்ளடக்கிய அரசாங்கத்தில் இணைவதையோ அல்லது ஆதரிப்பதையோ கொள்கையளவில் எதிர்ப்பதாக தொடர்ந்து கூறிவரும் மத்திய மற்றும் தாராளவாத கட்சிகளும் வரவு-செலவுத் திட்டத்திற்கு வாக்களித்தன.

நாடாளுமன்ற சூழ்ச்சிக்கு பின்னால், சக்திவாய்ந்த புறநிலை சக்திகள் சுவீடன் ஆளும் உயரடுக்கை தீவிர வலதுசாரி சுவீடன் ஜனநாயகக் கட்சியினரை அரவணைக்க உந்தியுள்ளன. OECD நாடுகளில் சுவீடன் சமூக சமத்துவமின்மையின் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாகும். போருக்குப் பிந்தைய காலத்தில் ஐரோப்பாவில் மிகவும் தாராளமனத்துடனான சமூக நல அமைப்பு மற்றும் பொதுச் சேவைகள் 1990களில் இருந்து பரவலான முறையில் அகற்றப்பட்டதன் மூலம் இந்தப் போக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறையின் மிகவும் வெளிப்படையான வெளிப்பாடுகளில் ஒன்று, சுவீடனின் முக்கிய நகரங்கள் பெருகிய முறையில் பிரிக்கப்பட்டுள்ள தன்மை ஆகும். அவை புலம்பெயர்ந்த மக்களால் ஆதிக்கம் செலுத்தும் வறிய புறநகர்ப் பகுதிகளைக் கொண்டுள்ளன. அங்கு வேலையின்மை சில நேரங்களில் தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

ரஷ்யாவுடனான அமெரிக்க-நேட்டோ போரில் ஸ்காண்டிநேவியாவை இரண்டாவது முன்னணியாக மாற்றுவதில் அதன் அண்டை நாடான பின்லாந்துடன் நேட்டோவில் சேர விண்ணப்பித்தல் மற்றும் உக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்புதல் உட்பட சுவீடிஷ் ஆளும் வர்க்கம் ஒரு முன்னணி பாத்திரத்தை வகிக்கிறது. இறுதியாக, ஸ்டாக்ஹோம் கோவிட்-19 தொற்றுநோயின் ஆரம்ப கட்டங்களில் கொலைவெறி 'சமூக நோய் எதிர்ப்பு சக்தி' கொள்கையை முன்னெடுத்தது. இது பாசிச சிந்தனை கொண்ட முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உட்பட உலகெங்கிலும் உள்ள மிகவும் பிற்போக்குத்தனமான அரசியல் சக்திகளின் ஆதரவைப்பெற்றது.

முதலாளித்துவ அமைப்பின் உலகளாவிய நெருக்கடியின் நிலைமைகளின் கீழ் இந்தக் கொள்கைகள் தீவிரமடைவது, தொழிலாள வர்க்க எதிர்ப்பை அச்சுறுத்துவதற்கு வெளிப்படையான பாசிச சக்திகளை அணிதிரட்டுவது அதற்கு அவசியமாகிறது. இது அனைத்து முக்கிய முதலாளித்துவ நாடுகளின் நிகழ்வுகளால் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. சுவீடன் ஜனநாயகக் கட்சியினர் நாட்டின் மேலாதிக்கமிக்க வலதுசாரிக் கட்சியின் நிலைக்கு உயர்ந்தமை ஜனவரி 6, 2021 அன்று நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியைத் தொடர்ந்து அமெரிக்காவில் குடியரசுக் கட்சியினர் இன்னும் வெளிப்படையான பாசிசக் கட்சியாக மாறுவதை ஒத்திருக்கிறது. பிரித்தானியாவின் பழைமைவாதிகள் போரிஸ் ஜோன்சன் மற்றும் இப்போது லிஸ் ட்ரஸ் தலைமையின் கீழ் ஒரு தீய தீவிர வலதுசாரி கட்சியாக வெளிப்படுகின்றது. இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், பாசிச சர்வாதிகாரி முசோலினியை கௌரவிக்கும் நவ-பாசிச Fratelli d’Italia வின் தலைவரான ஜியோர்ஜியா மெலோனி, இத்தாலிய பிரதம மந்திரி ஆவதற்கான வலுவான வாய்ப்புகளைக் கொண்டுள்ளார்.

இந்த தீவிர வலதுசாரி சக்திகள் எதுவும் வெகுஜன மக்கள் ஆதரவைப் பெறவில்லை. மாறாக, இந்த சக்திகளின் அரசியல் பலம் இரண்டு முக்கிய காரணிகளில் இருந்து வருகிறது: முதலாவதாக, ஆளும் உயரடுக்கின் முக்கிய பிரிவுகள் மற்றும் அதன் அரசு அமைப்புகளில் இருந்து அவர்களுக்கு கிடைக்கும் ஆதரவு; இரண்டாவதாக, உத்தியோகபூர்வ 'இடது' கட்சிகளும் அவற்றின் தொழிற்சங்க கூட்டாளிகளும் தொழிலாள வர்க்கத்தை அரசியல் வாழ்வில் சுயாதீனமாக தலையிடுவதை தடுப்பதில் ஆற்றிய பங்கு. பிந்தைய காரணி சுவீடனில் குறிப்பாக முக்கியமானதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அங்கு முன்னாள் ஸ்ராலினிச இடது கட்சியும் தொழிற்சங்கங்களும் சமூக ஜனநாயகக் கட்சியினர் உறுதியாக வலதுசாரி திசையில் செல்கையிலும் மற்றும் சுவீடன் ஜனநாயகக் கட்சியினரின் பல முக்கிய கொள்கைகளை கையகப்படுத்திக் கொண்டுள்ளபோதிலும் உழைக்கும் மக்களை அரசியல்ரீதியாக அவை சமூக ஜனநாயகக் கட்சியினருக்கு அடிபணிய வைத்துள்ளன.