வடமாகாண மீனவர்களாகிய நாங்கள், நாடு முழுவதிலும் உள்ள எமது சகோதர, சகோதரிகளைப் போன்று நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் சகிக்க முடியாத வாழ்க்கை சூழ்நிலைமையில் உள்ளோம்.
சமீபகாலமாக மண்ணெண்ணெய் விலை ஏறக்குறைய மூன்று மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது நமது நிலைமையை மோசமாக்கியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம், ஒரு லீட்டர் மண்ணெண்ணெயின் விலையை 87 ரூபாவிலிருந்து 340 ரூபாவாக உயர்த்தியுள்ளது. மண்ணெண்ணெய், இலங்கை பூராவும் உள்ள மில்லியன் கணக்கான ஏழைக் குடும்பங்களுக்கு எரிசக்திக்கான மலிவான ஆதாரமாக உள்ளது.
பதிவு செய்யப்பட்ட படகு ஒன்றிற்று, வாரத்திற்கு 30 லிட்டர் மட்டுமே வழங்கும் பங்கீட்டு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு சுற்று மீன்பிடி பயணத்திற்கு மட்டுமே போதுமானது. நாங்கள், அதிக ஆபத்தை ஏற்படுத்தும் பழமையான மீன்பிடி முறைகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
சில நேரங்களில், இந்த காலாவதியான மீன்பிடி முறையுடன், போதுமான மீனை பிடிக்க கூடிய இடத்தை கண்டுபிடிக்க, கடலில் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக செலவிட வேண்டியிருக்கும். பெரும்பாலான மீனவர்கள். ஆழ்கடல் மீன்பிடியைக் கைவிட்டுவிட்டனர்.
இந்த நிலைமை. ஏற்கனவே வீழ்ச்சியடைந்துள்ள வாழ்க்கை நிலைமைகள் மற்றும் வானளவு உயர்ந்துள்ள பணவீக்கத்திற்கும் மேலதிகமாக வந்துள்ளது. மீன்பிடித் தொழிலாளிகள் தமது உணவைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அத்தோடு, ஊட்டச்சத்து குறைபாடும் எமது குழந்தைகளை வாட்டி வதைக்கிறது.
கொழும்பு அரசாங்கம், பெரிய மூலதனச் சுரண்டல்களுக்காக மீன்பிடிக் கைத்தொழில் முறையைத் திறந்து விடுகின்றது. பெரு வணிக நிறுவனங்கள், கடல் அட்டைப் பண்ணைகளை அறிமுகப்படுத்தப்படுத்தி, அதற்காக கடலில், ஏக்கர் கணக்கில் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளை கவர்ந்துள்ளன. இந்தப் பண்ணைகளால் நாம் சுதந்திரமாக கடலில் பயணம் செய்ய முடியாதுள்ளது.
அட்டைப் பண்ணைகளின் உரிமையாளர்கள் ஏழை மீனவர்களுக்கு எதிராக, கடற்படையுடன் நெருக்கமாகச் செயல்பட்டு வருகின்றனர். பல மீனவர்கள், இந்த நிறுவனங்கள் மற்றும் பெரிய பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்களிலும் மலிவு கூலி தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.
விக்கிரமசிங்க அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவுகளுக்கு அமைவாக, தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது புதிய சுற்று கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை சுமத்துகிறது. வெகுஜனப் போராட்டங்களை நசுக்குவதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற அடக்குமுறைச் சட்டங்களை அது அதிகரித்து வருகிறது.
முதலாளித்துவ இலாபத்தை உயர்த்தவும், தமிழர் விரோத இனவாதப் போருக்காக வாங்கிய வெளிநாட்டுக் கடன்களைச் திருப்பிச் செலுத்தவும், பெருவணிக நிறுவனங்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் எமது அடிப்படைத் தேவைகள் கீழறுக்கப்படுகின்றன. இந்த முதலாளித்துவ வர்க்கக் கொள்கையை நாம் நிராகரிக்க வேண்டும்.
முதலாளிகளின் பொருளாதார நெருக்கடிக்கு, நாம் ஏன் எமது வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகளை தியாகம் செய்ய வேண்டும்?
மண்ணெண்ணெய் விலை உயர்வைக் கண்டித்து, முல்லைத்தீவு, இரணைதீவு மற்றும் தென்பகுதி உட்பட நாட்டின் பல பகுதிகளிலும், மீனவர்கள் போராட்டம் நடத்தினர். ஆனால், அரசாங்கம் அவர்களை புறக்கணித்தது.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கைத் தளமாகக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவை எமது மோசமடைந்து வரும் பிரச்சினைகள் குறித்து எதுவித அக்கறையையும் காட்டவில்லை.
வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள அடக்குமுறை நிலைமைகள் பற்றி இந்த முதலாளித்துவக் கட்சிகளுக்கு கவலையம் இல்லை. ஏகாதிபத்திய சக்திகளின் புவிசார் அரசியல் நலன்களை ஆதரிக்கும் அதே வேளை, தங்களுடைய தனிச் சலுகைகளைப் பெறுவதற்கு பாராளுமன்ற இடங்களைப் பெறுவதற்கான வாக்குகள் மட்டுமே அவர்களின் தேவையாகும்.
ஏப்ரலில் இருந்து கடந்த நான்கு மாதங்களில், இராஜபக்ஷ மற்றும் விக்கிரமசிங்கவின் தாக்குதல்களுக்கு எதிராக மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் ஏழைகளும் போராட்டங்களுக்கு வந்தனர். வடக்கு, கிழக்கில் உள்ள உழைக்கும் மக்கள் இந்தப் போராட்டங்களில் இணைந்து கொள்வதைத் தடுப்பதற்கு இந்த தமிழ்க் கட்சிகள் முயற்சித்தன. எனினும், அவற்றையும் மீறி, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தொழிலாளர்களும் இந்த வெகுஜனப் போராட்டங்களில் இணைந்து கொண்டனர். கொழும்பில் உள்ள உயரடுக்கினரைப் போலவே, தமிழ் முதலாளித்துவ வர்க்கமும் இன வேறுபாடுகளுக்கு அப்பால் தொழிலாளர்களின் ஐக்கியப்பட்ட போராட்டங்களை கண்டு அஞ்சுகிறது.
வடக்கில் கடல் அட்டைப் பண்ணையை அபிவிருத்தி செய்யும் சீன நிறுவனங்களுக்கு எதிராக வடக்கில் உள்ள மீனவர் சங்கங்கள் குரல் எழுப்பியுள்ளன. எமது காணிகளை சீனாவுக்கு வழங்குவதாக இருந்தால் அதனை எதிர்த்துப் போராடுவோம் என யாழ்.மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தொழிற்சங்கங்கள், தமிழ் கட்சிகள் போன்று சீனாவை எதிர்க்கின்றன, ஆனால் அமெரிக்க நலன்களை ஆதரிக்கின்றன.
நீண்டகாலமாக கொழும்பு அரசாங்கங்களின் ஆதரவாளரும் அமைச்சருமான, ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து வடபகுதி மீனவர்களின் சமூக அவலத்திற்கு மூலகாரணமாக, இந்திய மீனவத் தொழிலாளர்களை பலிக்கடா ஆக்குகின்றார்.
கடற்படையை எங்கள் பாதுகாவலர்களாக காட்டிக் கொண்டு, இலங்கை கடற் பரப்பிற்குள் வரும் இந்திய சகோதர மீனவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று மீனவ சங்கங்கள் பிரச்சாரம் செய்கின்றன.
உள்நாட்டுப் போரின் போது, வட மாகாணத்தில் வாழும் தமிழ் மீனவர்கள், இலங்கை கடற்படை மற்றும் ஏனைய படைகளாலும் பாதிக்கப்பட்டனர். 2009 மே மாதம் இனவாதப் போர் முடிவடைந்த போதிலும், மீன்பிடி அனுமதி முறை, சோதனை, கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளை கடற்படையினர் தொடர்கின்றனர். போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை என்ற போர்வையில் கடற்படையினர், கடல் மற்றும் கடலோரப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதாகவும் அனுமதியின்றி கடல் அட்டைகளைப் பிடிப்பதாகவும் குற்றஞ்சாட்டிக்கொண்டு, இலங்கை கடற்படை மீனவர்களை அடிக்கடி கைது செய்து சித்திரவதை செய்து வருகின்றது. பல மீனவர்கள் நீதிமன்ற வழக்குகளை சந்திக்கின்றனர். அத்தோடு, பெரும் தொகையான அபராதத்தையும் செலுத்தியுள்ளனர்.
இந்தச் சங்கங்கள், தமிழ் முதலாளித்துவக் கட்சிகளை அல்லது அரசாங்கத்தை ஆதரிக்கின்றன. அவர்கள் மீனவர்களின் சார்பாக அல்லாமல், தமிழ் உயரடுக்கினருக்கு மீனவர்களை அடிபணியச் செய்ய முற்படுகின்றனர்.
நடாளாவிய ரீதியிலும் மற்றும் சர்வதேச ரீதியிலும் ஏற்பட்டுள்ள, மோசமான வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகளின் ஒரு பகுதியாகவே, மீனவர்களினது வறுமை நிலைமைகள் உள்ளன. கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் உக்ரைனில் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா மற்றும் நேட்டோ வினால் நடத்தப்படும் பினாமிப்போர் ஆகியவற்றால் உலகப் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. இது முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட காலமாக நிலவி வரும் அடக்குமுறைகளை முறியடிக்க, மீனவர்கள் தங்கள் உரிமைகளுக்காக தொழிலாளர்கள் மற்றும் பிற ஒடுக்கப்பட்டவர்களுடன் ஒன்றிணைந்து போராடுவதற்கு ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும். இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு, நாம் வடமாகாண மீனவர் நடவடிக்கைக் குழுவை அமைத்துள்ளோம். இவ்வாறு, தங்கள் பகுதிகளிலும் மீனவர்கள் நடவடிக்கைக் குழுக்களைக் உருவாக்குமாறு நாம் வலியுறுத்துகின்றோம். உங்களுக்கு உதவ நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.
ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம்: மீனவர்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும்; மீனவர்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து சோடிக்கப்பட்ட வழக்குகளையும் இரத்து செய்ய வேண்டும்; மேலும், அவமானகரமான மீன்பிடி அனுமதி மற்றும் பிற அடக்குமுறை முறைமைகள் நிறுத்தப்பட வேண்டும்; பயங்கரவாத தடைச் சட்டம் உட்பட அனைத்து அடக்குமுறை சட்டங்களையும் இரத்து செய்ய வேண்டும்; வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இலங்கை இராணுவத்தை திரும்பப் பெற வேண்டும்.
ஒழுக்கமான வருமானத்தைப் பெறுவதற்கும், வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தவும்: மீனவர்கள் பிடிக்கும் மீன்களுக்கு உத்தரவாத விலை முறை தேவையாகும். ஏழை மீனவர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்! அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்க மலிவான கடன் வழங்கப்பட வேண்டும்; எரிபொருள் மீன்பிடி கருவிகள் மற்றும் படகுகள் மலிவான விலையில் வழங்கப்பட வேண்டும்.
உற்பத்தி மற்றும் விநியோகத்தை தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதன் மூலம் மட்டுமே, இந்த உரிமைகளை அடைய முடியும் என்று நமது நடவடிக்கைக் குழுவை அமைப்பதற்கு ஆதரவளித்த சோசலிச சமத்துவக் கட்சி விளக்குகிறது. தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வங்கிகள், பெரிய நிறுவனங்கள் மற்றும் பெரிய தோட்டங்களை தேசியமயமாக்குவது இதன் பொருளாகும். கடல் அட்டைப் பண்ணைகள், கடல் உணவுத் தொழிற்சாலைகள் மற்றும் பெரிய மீன்பிடித் தொழில்களை தொழிலாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். உருவாக்கப்பட்டுள்ள நடவடிக்கை குழு இந்த திட்டத்துடன் உடன்படுகிறது.
அனைத்து வேலைத் தளங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் அவற்றின் சுற்றுப்புறங்களில் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை அமைப்பதன் மூலம் இத்தகைய போராட்டத்தை ஏற்பாடு செய்ய முடியும். அத்தகைய குழுக்களை அமைப்பதற்கு சோசலிச சமத்துவக் கட்சி முன்முயற்சி எடுத்துள்ளது. இந்த போராட்டத்தில் அணிதிரள்வதற்காக, கிராமப்புற மக்களும் இதுபோன்ற நடவடிக்கை குழுக்களை உருவாக்க வேண்டும் என்றும் அது அழைப்பு விடுத்துள்ளது.
சோசலிச சமத்துவக் கட்சி இந்த போராட்டத்தை ஒன்றிணைக்க, இந்த நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகளின் அடிப்படையில் தொழிலாளர் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் ஜனநாயக மற்றும் சோசலிச மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கிறது. இந்த போராட்டம் சோசலிச கொள்கைகளை செயல்படுத்தும் ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்கு வழி வகுக்கும்.
பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழும், 1948 சுதந்திரம் முதல் 1980கள் வரை, இரு நாட்டு மீனவர்களும் பொதுவாக கடல் வளங்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்த நீண்டகால நிலைப்பாடுகள் 1983ல் இருந்து இலங்கை அரசாங்கங்களால் நடத்தப்பட்ட இரத்தக்களரி தமிழர் விரோதப் போரினால் கீழறுக்கப்பட்டன.
இலங்கை மற்றும் இந்திய கடல் எல்லையை கடக்கும் போது இலங்கை மற்றும் இந்திய மீனவர்களை கைது செய்யப்படுவதோடு, கொழும்பு அரசாங்கங்களும், தமிழ் கட்சிகளும் இரு நாட்டு மீனவர்களிடையே பகைமையை உருவாக்கி வருகின்றன. தமிழகத்தில் உள்ள பெரும் வணிகர்களுக்கு சொந்தமான இழுவைப் படகுகள், இலங்கை மீனவர்களின் வலைகள் மற்றும் படகுகளையும் சேதப்படுத்தியுள்ளன. இரு தரப்பு மீனவர்களும் கடற்படையினரால் பரஸ்பரம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரு தரப்பிலிருந்தும் மேற்கொள்ளப்படுகின்ற இந்த அடக்குமுறை நிலைமைகளை, இந்திய மற்றும் இலங்கை முதலாளித்துவ அரசுகளின் தேசிய எல்லைகளை ஒழிப்பதன் மூலமும், இரு நாட்டிலும் உள்ள தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளான பெரும்பான்மையான சமூகத்தின் நலனுக்காக, இரு நாடுகளின் பொருளாதாரங்களை பகுத்தறிவுடன் ஒழுங்கமைப்பதன் மூலமும் மட்டுமே அகற்ற முடியும். இது இரு நாடுகளிலும் சோசலிசத்திற்கான போராட்டமாகும்.
அதனால்தான், சோசலிச சமத்துவக் கட்சி, சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தின் ஒரு பாகமாக, தெற்காசிய சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் ஒரு பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசிற்காகப் போராடுகிறது