முன்னோக்கு

கனடா தொழிற்சங்கங்கள், ஒன்டாரியோவில் பொது வேலைநிறுத்த இயக்கத்தை முறியடிக்க முனைவதைத் தடுப்போம்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வேலைநிறுத்தச் சட்டத்திற்கு எதிராக ஒன்டாரியோ பள்ளிக் கல்வித்துறையின் 55,000 தொழிலாளர்களின் மிகவும் தைரியமான எதிர்ப்பு பாரிய தொழிலாள வர்க்க ஆதரவைப் பெற்றுள்ள நிலையில், அவர்களின் 'போராட்டக் களங்களை' விட்டு, நவம்பர் 8 இல், இன்று வேலைக்குத் திரும்புமாறு கனடிய பொதுத்துறை பணியாளர்கள் சங்கம் (CUPE) நேற்று உத்தரவிட்டது.

கனடாவின் அந்த மிகப்பெரிய தொழிற்சங்கம் அவ்வாறு செய்தது ஏனென்றால் வெள்ளிக்கிழமை தொடங்கிய அந்த வேலைநிறுத்தம் டக் ஃபோர்டின் (Doug Ford) கடுமையான வலதுசாரி முற்போக்கு பழமைவாத அரசாங்கத்தைப் பின்னால் நகரத் தள்ளியதுடன், மாகாணம் தழுவிய ஒரு பொது வேலைநிறுத்தத்தைத் தூண்ட அச்சுறுத்தியது.

ஃபோர்டின் எதேச்சதிகார சட்ட மசோதாவான மாணவர்களை வகுப்பறையில் வைத்திருக்கும் சட்டத்தை (மசோதா 28) எதிர்ப்பதில், ஒட்டுமொத்தத் தொழிலாள வர்க்கத்தின் சார்பாக பள்ளிக் கல்வித்துறை உதவியாளர்கள் ஒரு சக்தி வாய்ந்த அடியை வழங்கி இருந்தனர்.

பள்ளிக் கல்வித்துறை தொழிலாளர்களில் பெரும்பான்மையினர் ஆண்டுக்கு 39,000 டாலருக்கும் குறைவாகச் சம்பாதிக்கின்ற நிலையில், அவர்கள் மீது ஃபோர்டு அரசாங்கத்தின் வர்க்கப் போர் தாக்குதல், ஒன்டாரியாவிலும் கனடா முழுவதிலும் உள்ள ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் குறி வைத்துள்ளதால், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் அவர்களின் ஆதரவைக் காட்ட பேரணியில் இறங்கினர்.

மசோதா 28 முன்கூட்டியே வேலைநிறுத்தத்தை சட்டவிரோதமாக்கி, தொழிலாளர்களின் நிஜமான கூலிகளை வெட்டுகின்ற, சம்பளத்துடன் கூடிய விடுப்புகளைக் குறைக்கின்ற மற்றும் வேலைப் பாதுகாப்புக்குக் குழிபறிக்கின்ற ஒப்பந்தங்களை அரசாங்க உத்தரவாணைகள் மூலம் திணித்தது. அது அடிப்படை ஜனநாயக உரிமைகளை மிதித்ததாக ஒப்புக் கொண்ட ஃபோர்டு, கனடாவின் 'கடைபிடிக்க இயலாத ஷரத்தை' பயன்படுத்தினார்—இது, கனடாவின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான உரிமை சாசனம் உத்தரவாதமளிக்கும் உரிமைகளை மீறும் சட்டங்களை அரசாங்கங்கள் நிறைவேற்ற அனுமதிக்கும் வகையில், கனடாவின் அரசியலமைப்பில் உள்ள ஓர் எதேச்சதிகார ஷரத்து ஆகும்.

பள்ளிக் கல்வித்துறை உதவியாளர்களின் எதிர்ப்பு நிலைப்பாடு ஒரே இரவில் அரசியல் இயக்கவியலை மாற்றி, இப்போதைக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தாலும், தொழிலாள வர்க்கத்தின் அளப்பரிய சமூக சக்தியை வெளிப்படுத்துகிறது.

அக்டோபர் 31 இல் ஒன்டாரியோ சட்டமன்றத்தில் கல்வித்துறை அமைச்சர் ஸ்டீபன் லெஸ்சி அவரின் வேலைநிறுத்தத் தடைச் சட்டத்தை முன்வைத்த போது, அரசாங்கத்தின் அந்த நடவடிக்கைகளை ஒன்டாரியோவின் பெரும்பான்மையினர் ஆதரிப்பதாகப் பெருநிறுவன ஊடகங்கள் வேகவேகமாக பிரகடனப்படுத்த விரைந்தன. ஆனால் இந்தக் கதை விரைவிலேயே தோற்றுப் போனது.

வேலைநிறுத்தத் தடைச் சட்டம் மற்றும் 'கூலி உயர்வைக் கட்டுப்படுத்தும்' சட்டங்களை பல தசாப்தங்களாக அமலாக்கி உள்ள தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகள், பாரிய எதிர்ப்பை அனுமதிக்க சாமானியத் தொழிலாளர்களிடம் இருந்து மிகப் பெரிய அழுத்தத்தின் கீழ் இருப்பதாக ஒப்புக் கொண்டனர்.

ஒரு தொழிலாளருக்கு ஒரு நாளைக்கு 4,000 டாலர் என்றளவில் அது அபராதம் செலுத்த வேண்டியதாக இருக்கலாம் என்று, வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தத்திற்கு முன்னதாக, CUPE அறிவிக்க வேண்டியிருந்தது. பள்ளிக் கல்வித்துறை உதவியாளர்கள், மழலையர் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மெய்காப்பாளர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் வெளிநடப்பு செய்த போது, சில ஒன்டாரியோ பள்ளிகளில் அதே வேலைகளைச் செய்து வரும் ஒன்டாரியோ பொதுச்சேவை பணியாளர்கள் சங்கத்தின் 8,000 தொழிலாளர்களும் அவர்களுடன் இணைந்தனர்.

வெள்ளிக்கிழமை வேலைக்குச் செல்லுமாறு நான்கு ஒன்டாரியோ ஆசிரியர் சங்கங்கள் அவற்றின் உறுப்பினர்களைக் கண்டிக்கும் விதத்தில் உத்தரவிட்டதும், ஆசிரியர்கள் பெருந்திரளாக அவர்களின் பாசாங்குத்தனமான பிரதிநிதிகளைக் கண்டிக்க சமூக ஊடகங்களைக் கையில் எடுத்தனர். வேலைநிறுத்தம் செய்யும் பள்ளி உதவியாளர்களுக்கு ஆதரவாக வேலை நடவடிக்கையை ஒழுங்கமைக்கக் கோரிய ஓர் இணையவழி மனு விரைவிலேயே பரந்த ஆதரவைப் பெற்றது.

48 சதவீத ஒன்டாரியர்கள் பள்ளிக் கல்வித்துறைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அனுதாப வேலைநிறுத்தங்களை விரும்பியதை அபாகஸ் டேட்டா அமைப்பின் ஒரு கருத்துக்கணிப்பு கண்டறிந்தது. எப்படி 'நாம் இந்த விளிம்பில் இருந்து மீளப் போகிறோம்' என்று ஃபோர்டுக்கு எழுதிய ஒரு முறையீட்டில், உள்ளூர் ஒன்டாரியோ இடைநிலைப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு ஒரு நிர்வாகி ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு குரல் எழுப்புவர்களைப் பதட்டத்துடன் சுட்டிக்காட்டினார்: 'இதைத் தொழிற்சங்கத் தலைவர்கள் செய்யவில்லை. என் மின்னஞ்சலில், என் தொலைபேசியில் எத்தனை சேதிகள் வந்துள்ளன என்பதை என்னால் சொல்லத் தொடங்க முடியாது. இதை மக்கள் செய்கிறார்கள்,” என்றார்.

ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான வளர்ந்து வரும் இயக்கத்தின் மீது கட்டுப்பாட்டை எடுத்து, தலையைத் துண்டித்து அதை நசுக்கும் அவர்களின் முயற்சியில், தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகள் தொடர்ந்து அவர்கள் திட்டங்களை மாற்றி மாற்றி திருத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவசரமாக ஒழுங்கமைக்கப்பட்ட சனிக்கிழமை போராட்டங்களுக்கு மாகாணம் முழுவதிலும் இருந்து தொழிலாளர்கள் குவிந்ததும், CUPE சங்கத் தலைவர் மார்க் ஹான்காக் மற்றும் ஒன்டாரியோ பள்ளிக் கல்வி வாரிய தொழிற்சங்கங்களின் கவுன்சில் (OSBCU) தலைவர் லாரா வால்டன் ஆகியோருடன் கனடாவின் மிகப் பெரிய தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் இணைவார்கள் என்று CUPE தொழிற்சங்கம் அறிவித்தது. அங்கே அவர்கள், நவம்பர் 12 சனிக்கிழமை ஒன்டாரியோ சட்டமன்றத்திற்கு வெளியே ஒரு வெகுஜன ஆர்ப்பாட்டமும் மற்றும் நவம்பர் 14 திங்கட்கிழமை மாகாணம் தழுவிய ஒரு நாள் பொதுத்துறை மற்றும் தனியார்துறை 'எதிர்ப்பு வேலைநிறுத்தமும்' நடத்த இருப்பதை அறிவிப்பார்கள் என்று விரைவிலேயே பத்திரிகைகளுக்குச் செய்திகள் கசிந்தன.

ஆனால் இந்த அறிவிப்பு ஒருபோதும் வெளியிடப்படவில்லை. தொழிற்சங்க உயர்மட்ட நிர்வாகிகள் ஒன்றுகூடுவதற்கு வெறும் ஒரு மணி நேரத்திற்கு முன்னர், ஃபோர்டும் மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஸ்டீபன் லெஸ்சும் ஒரு தந்திரோபாய பின்வாங்கலை அறிவிப்பதற்காக அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட அவர்களின் சொந்த பத்திரிகையாளர் கூட்டத்தை நடத்தினர். வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர CUPE உத்தரவிட்டால் அதற்கு பிரதியீடாக மசோதா 28 ஐ இரத்து செய்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

பின்புல அறைகளில் நடந்த சதியாலோசனைகளில் அரசாங்கத்தின் வேலைநிறுத்தத் தடைச் சட்டத்திற்கு ஒருபோதும் சட்டரீதியான பலம் இருக்கவில்லை என்று அரசாங்கம் ஒப்புக் கொண்டதாக செய்திகள் அறிவிக்கின்ற நிலையில், அதற்குப் பல மணிநேரத்திற்குப் பின்னர் தான் ஹான்காக்கும் வால்டனும் மேடைக்கு நடுவில் வந்தனர். கனடாவின் ஒவ்வொரு பெரிய தொழிற்சங்க அமைப்புகளின் உயர்மட்டத் தலைவர்களும் சூழ்ந்திருக்க, பள்ளிக் கல்வித்துறை உதவியாளர்கள் அவர்களின் வேலைநிறுத்தத்தை நிறுத்திக் கொள்ளுமாறு அவர்கள் ஒருதலைப்பட்சமாக உத்தரவிட்டனர்.

பல கோடி மில்லியனிய வியாபாரியும் சமீபத்திய வரையில் ட்ரம்பை ஆதரித்து வந்தவருமான அவர் குறிப்பிட்ட 'ஆலிவ் மரக்கிளை' என்பது உண்மையில் ஒரு விஷக் கோப்பை ஆகும். அதை இரு கரமேந்தி ஆர்வத்துடன் வாங்கிய தொழிற்சங்கங்கள், இப்போது வேலைநிறுத்தக்காரர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை அதைப் பருகச் செய்ய முயன்று வருகின்றன, ஏனென்றால் தொழிலாள வர்க்கத்தை ஒன்றுபடாமல் கலைத்து விடுவதற்கும் மற்றும் முதலாளித்துவ ஆட்சியைப் பலப்படுத்துவதற்கும் அதை அவர்கள் ஓர் இயங்குமுறையாகப் பார்க்கிறார்கள்.

வெறும் 18 சதவீத வாக்காளர்களின் ஆதரவுடன் கடந்த ஜூனில் ஒரு நாடாளுமன்ற பெரும்பான்மை வென்ற ஃபோர்டு அவரது டோரிக்களின், சிக்கன நடவடிக்கைகள், தனியார்மயமாக்கல், நிஜமான கூலி வெட்டுக்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கான அவர்களின் வர்க்கப் போர் திட்டநிரலுக்கு மக்களின் உத்தரவாணை இல்லை என்பதை இந்த வேலைநிறுத்தத்திற்கான ஆதரவு எடுத்துக்காட்டியது.

ஃபோர்டு மற்றும் அவர் அரசாங்கத்தைப் பதவியில் இருந்து கீழிறக்க தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டி இந்த சாதகமான சூழலைக் கொண்டு அழுத்தமளிப்பதற்குப் பதிலாக, தொழிற்சங்கங்களோ அவர் உயிர்பிழைப்பதற்குத் தேவைப்படும் கால அவகாசத்தை அவருக்கு வழங்கி வருகின்றன.

இதில் அவர்கள் வெற்றி பெற்றால், இன்னொரு நாள் சண்டையிட ஃபோர்டு உயிர்ப்போடு இருப்பார் என்பது மட்டுமல்ல, இந்த முனைவை மீண்டும் சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு, ஆளும் வர்க்கம் ஒட்டுமொத்தமாக பலம் அடைந்து விடும்.

பள்ளிக் கல்வித்துறை உதவியாளர்களை வேலைக்குத் திரும்ப உத்தரவிடுவதன் மூலம், CUPE அதுவே மசோதா 28 இன் முதல் நோக்கத்தை அமுலாக்கி உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, வாக்குறுதியளிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் ஒரு மோசடியாகும்—அது தொழிலாளர்களுக்கு எதிராக அரசாங்கம் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் சூழ்ச்சியாகும். வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தத்திற்கு முந்தைய நாட்களில், CUPE தொழிலாளர்களின் கூலி உயர்வு கோரிக்கையைப் பாதியாகக் குறைக்க ஒப்புக் கொண்டது உட்பட, தொழிலாளர்களின் முதுகுக்குப் பின்னால் ஒரு விட்டுக்கொடுக்குப்பு இன் ஒரு விட்டுக்கொடுப்பை வழங்கியது.

அரசாங்கம் மற்றும் அதன் பெருவணிக ஆதரவாளர்களைப் போலவே, தொழிற்சங்க அதிகாரத்துவமும் தொடக்க நிலையில் உள்ள இந்தப் பொது வேலைநிறுத்த இயக்கத்தைக் குறித்து அஞ்சுவதுடன், அதற்கு விரோதமாக உள்ளது. தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளுக்கு எண்ணற்ற விதத்தில் ஆதாயமாக உள்ள பெருநிறுவன தொழிற்சங்க-அரசாங்க-பெருவணிக பங்காண்மை உட்பட, தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளின் தனிச்சலுகைகளுக்கு மூல ஆதாரமாக விளங்கும், அரசால் வடிவமைக்கப்பட்ட கூட்டு பேரம்பேசும் முறையை நிலைநிறுத்துவதே அவர்களின் அடிப்படை இலட்சியம் என்பதை அவர்கள் முழுவதும் வலியுறுத்தி உள்ளனர்.

ஃபோர்டை வார்த்தையளவுக்குக் கண்டிக்கும் இதே தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகள் ட்ரூடோ மற்றும் அவரின் தாராளவாத மத்திய அரசில் தொழிற்சங்க ஆதரவுடன் கூட்டணியில் உள்ள புதிய ஜனநாயகக் கட்சிக்கு (NDP) உற்சாகமான ஆதரவாளர்களாக உள்ளனர். CLC, OFL, CUPE, Unifor et al ஆகியவற்றின் முழு ஆதரவுடன், NDP சிறுபான்மை தாராளவாதிகளை ஜூன் 2025 வரை பதவியில் தக்க வைக்க உறுதியளித்துள்ளது, அதேவேளையில் அவர்களோ ரஷ்யா மீது போர் தொடுத்துள்ளதுடன், இராணுவச் செலவினங்களைப் பெருமளவில் அதிகரித்து வருகின்றனர், 'பெருந்தொற்றுக்குப் பிந்தைய' சிக்கன நடவடிக்கைகளைத் திணித்துள்ளதுடன், வேலையின்மையை அதிகரிக்கவும் மற்றும் பணவீக்கத்தால் உந்தப்பட்ட சம்பள குறைவுகளுக்கு எதிராக அதிகரித்து வரும் வேலைநிறுத்த அலையைத் தடுக்கவும் வட்டி விகிதங்களை உயர்த்தி வரும் பேங்க் ஆஃப் கனடாவின் நடவடிக்கைகளை ஆதரிக்கின்றனர்.

கடந்த பல நாட்களாக நடந்துள்ள ஒன்டாரியோ சம்பவங்கள், உலகளாவிய தன்மை கொண்ட வர்க்கப் போராட்ட மீளெழுச்சியில் முண்டியடித்து வரும் சமூக சக்திகள் வகிக்கும் பாத்திரத்தில் ஒரு சிறு பகுதியாகும். 1930 களின் பெருமந்தநிலைக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள ஆழமான இந்த முதலாளித்துவ நெருக்கடியானது, பிரதான சக்திகள் அனைத்தினது ஆளும் உயரடுக்குகளையும் வெளிநாட்டில் ஏகாதிபத்தியப் போரைத் தொடரவும், உள்நாட்டில் தொழிலாளர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களைத் திணிக்கவும், ஜனநாயக ஆட்சி வடிவங்களுடன் ஒத்துப் போகாத கொள்கைகளையும் நோக்கி நகர்த்தி வருகிறது. ஆனால் அதே புறநிலை நெருக்கடி உலகெங்கிலும் மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களைப் போராட்டத்திற்குள் தள்ளி வருகிறது.

மீளெழுச்சி பெறும் வரும் தொழிலாள வர்க்கத்தை அடக்குவதற்கு ஆளும் உயரடுக்குகள் இரண்டு முக்கிய இயங்குமுறைகளைக் கொண்டுள்ளன: ஒன்று, அப்பட்டமான அரசு ஒடுக்குமுறை, மற்றொன்று, தொழிற்சங்க எந்திரங்கள். அமெரிக்காவில், ஜனநாயகக் கட்சியின் பைடென் நிர்வாகம், கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக ஒரு சட்டப்பூர்வ வேலைநிறுத்த நிலைப்பாட்டில் இருந்துள்ள 120,000 க்கும் அதிகமான இரயில்வே தொழிலாளர்களின் ஒரு வேலைநிறுத்தத்தைத் தடுக்க இரயில்வே தொழிற்சங்கங்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளது. பைடெனும் மற்ற முன்னணி ஜனநாயகக் கட்சியினரும் அரசு ஒடுக்குமுறை அதிகாரங்களைக் கையிருப்பில் வைத்திருக்க தான் முடிவெடுத்திருந்தார்கள் என்றாலும், தொழிற்சங்க அதிகாரத்துவம் வேலைநிறுத்தத்தின் குரல்வளையை நெரிக்கத் தவறினால் காங்கிரஸ் சபை தலையீட்டின் மூலமாக வேலைநிறுத்தத்தை ஈவிரக்கமின்றி நசுக்க தயங்கி இருக்க மாட்டார்கள் என்பதை அவர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர்.

இங்கிலாந்தின் 'கோடைகால (இப்போது குளிர்கால) அதிருப்தியின்' போது, இந்த வெறுக்கப்படும் டோரி அரசாங்கத்திற்கு எதிராக மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் ஒரு பொது வேலைநிறுத்தம் வளரும் பாதையில் பிரிட்டன் தொழிற்சங்க அதிகாரத்துவம் தீர்க்கமான ஒரு தடையாக இருந்துள்ளது. அவர்களின் கனடிய சமபலங்களைப் போலவே பல தசாப்தங்களாக விட்டுக்கொடுப்புகளுக்குத் தலைமை தாங்கிய தொழிற்சங்கங்களின் அதிகாரம் பலவீனமடைந்து வருவதைக் குறித்து அஞ்சி, விண்ணைத் தொட்டு வரும் எரிபொருள் விலைகள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வுகளால் வரவிருக்கும் நாட்களில் வெடிக்க உள்ள சமூக கோபத்தை அவற்றால் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம் என்று அஞ்சி, டோரி அரசாங்கம் வேலைநிறுத்தங்களைக் குற்றமாக்கவும் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளை அகற்றவும் எதேச்சதிகார நடவடிக்கைகளின் ஒரு பொதியை நிறைவேற்றி வருகிறது.

வர்க்கப் போராட்டத்தின் எழுச்சியைக் கட்டுப்படுத்துவதில் ஆளும் உயரடுக்கு இதுவரை அதன் இருமுனைத் தாக்குதலால் வெற்றி பெற்றுள்ளது என்றால், அதற்கு காரணம், எல்லாவற்றிற்கும் மேலாக, ஆளும் உயரடுக்கிற்கும் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் உள்ள அதன் உடந்தையாளர்களுக்கும் எதிராக உழைக்கும் மக்களிடையே கொதித்தெழுந்து வரும் எதிர்ப்பு, இன்னும் சுயாதீனமான, ஜனநாயக மற்றும் போர்குணமிக்க சாமானியத் தொழிலாளர்கள் அமைப்பாக உருவெடுத்து நனவுப்பூர்வமான வெளிப்பாட்டைக் காணவில்லை என்பதாலேயே ஆகும்.

சாமானியத் தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி உருவாக்குவது குறித்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அதன் ஏப்ரல் 2021 அறிக்கையில் அறிவித்தவாறு, “தொழிலாளர் வர்க்கம் போராடத் தயாராக உள்ளது. ஆனால் எதிர்ப்பின் ஒவ்வொரு வெளிப்பாட்டையும் அடக்கும் பிற்போக்குத்தனமான அதிகாரத்துவ அமைப்புகளால் அது சிதைக்கப்படுகிறது … பாரிய போராட்டத்திற்கான புதிய பாதைகள் உருவாக்கப்பட வேண்டும்.'

ஒன்டாரியோ பள்ளிக் கல்வித்துறை தொழிலாளர்கள் போராட்டத்தில் தலையிடுவதற்கு, கனடா சோசலிச சமத்துவக் கட்சியும், சோசலிச சமத்துவக் கட்சி ஆதரிக்கும் ஒன்டாரியோ பள்ளிக் கல்வித்துறைத் தொழிலாளர்களின் சாமானியத் தொழிலாளர் குழுவும் (OEWRFC) இந்த முன்னோக்கைத் தான் அடித்தளமாக கொண்டுள்ளன. ஒப்பந்தம் மீதான பள்ளிக் கல்வித்துறை உதவியாளர்களின் போராட்டத்தில் அவர்களின் வெற்றியானது போராட்டத்தின் கட்டுப்பாட்டைத் தொழிற்சங்க அதிகாரத்துவத்திடம் இருந்து கைப்பற்றி, கல்வித்துறைத் தொழிலாளர்களின் பின்னால் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் ஐக்கியப்படுத்தும் விதத்தில் ஒவ்வொரு பள்ளிகள் மற்றும் வேலையிடத்திலும் சாமானியத் தொழிலாளர் குழுக்களின் ஒரு வலையமைப்பை உருவாக்குவதைச் சார்ந்துள்ளது என்று, OEWRFC உறுப்பினர்கள் பொதுக் கூட்டங்களிலும் தொழிலாளர்கள் உடனான விவாதங்களிலும், தொழிலாளர்களுக்குப் புரிய வைக்க போராடுகின்றனர்.

'ஃபோர்டின் வேலைநிறுத்தத் தடைச் சட்டத்தை மீறுவதற்கும் தோற்கடிப்பதற்கும் ஒன்டாரியோ தொழிலாளர்களை அணிதிரட்டவும்!' என்ற அதன் அறிக்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (SEP) விளக்கியதைப் போல, ஃபோர்டு மற்றும் லெஸ்சியுடன் பேரம்பேச அங்கே எதுவும் இல்லை. கல்வித்துறைத் தொழிலாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை அபிவிருத்தி செய்வதன் பாகமாக இந்த ஃபோர்டு அரசாங்கத்தைப் பதவியில் இருந்து இறக்க ஒரு பொது வேலைநிறுத்தத்திற்குத் தயாரிப்பு செய்து, ஒரு தொழிலாள வர்க்க அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

அந்த அறிக்கை அறிவித்தது, 'தற்போதைய போராட்டம்' 'இந்த அடிப்படை கேள்வியை எழுப்புகிறது: சமூகம் யாருடைய நலன்களுக்காக ஆளப்பட வேண்டும்?... ஆளும் உயரடுக்கின் குற்றகரமான பெருந்தொற்றுக் கொள்கைகள் மற்றும் சூறையாடல்களுக்கான போர்களால் தீவிரப்படுத்தப்பட்ட முதலாளித்துவ நெருக்கடிக்குத் தொழிலாளர்களை விலை கொடுக்கச் செய்யும் அவர்களின் முனைவை எதிர்க்க, தொழிலாள வர்க்க அரசியல் அதிகாரத்திற்கான அவர்களின் போராட்டத்தை வழிநடத்தும் ஒரு சர்வதேசியவாத சோசலிச வேலைத்திட்டத்தை ஏற்க வேண்டும்.