மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
புதனன்று, ஜேர்மன் பாராளுமன்றம், ஆளும் கட்சிகளான சமூக ஜனநாயக் கட்சி பசுமைக் கட்சி, தாராளவாத ஜனநாயகக் கட்சி மற்றும் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம், கிறிஸ்தவ சமூக ஒன்றியம் (CDU/CSU) ஆகிய எதிர் கட்சிகள் ஒரு கூட்டுப் பிரேரணைக்கு கருத்து வேறுபாடு இல்லாமல் ஒப்புதல் அளித்தன. இந்தப் பிரேரணை 1932-1933 இல் உக்ரேனில் ஏற்பட்ட பஞ்சத்தை ஒரு இனப்படுகொலை (ஹோலோடோமர் - “Holodomor”) என்று அங்கீகரித்துள்ளது. ஜேர்மனிக்கான தீவிர வலதுசாரி மாற்றீட்டு கட்சி (AfD) மற்றும் இடது கட்சி (Die Linke) ஆகியவை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
'மக்களைத் தூண்டுதல்' என்ற குற்றவியல் சட்டத்தின் 130 வது பத்தியை பாராளுமன்றம் திருத்திய சில வாரங்களுக்குப் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் அல்லது போர்க்குற்றங்களை 'வெளிப்படையாகவோ அல்லது ஒரு சபையிலோ' 'மன்னிப்பது, மறுப்பது அல்லது மொத்தமாக சிறுமைப்படுத்தும்' எவருக்கும் இப்போது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உக்ரேனில் பஞ்சத்தை ஒரு இனப்படுகொலை இல்லை என்பவர் இப்போது சிறைவாசத்தை எதிர்கொள்கிறார். இரண்டையும் இணைத்துப் பார்த்தால், இரண்டு முடிவுகளும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் மட்டுமல்லாது, வரலாற்று ஆய்வின் மீதும் முன்னோடியில்லாத தாக்குதலாகும். அவர்கள் தீவிர வலதுசாரிகளின் வரலாற்றுப் பொய்களை நியாயப்படுத்துகிறார்கள்.
1932-1933 பஞ்சம்: வரலாற்று ஆராய்ச்சியின் நிலைப்பாடு
சமீபத்திய தசாப்தங்களில் பஞ்சத்தின் மிக முக்கியமான வரலாற்றாசிரியர்கள், ஆயிரக்கணக்கான ஆவணங்கள் மற்றும் புள்ளிவிவரங்களை மதிப்பீடு செய்த பின்னர், 1932-1933 இல் உக்ரேனில் ஏற்பட்ட பஞ்சம் ஒரு இனப்படுகொலை அல்ல என்று முடிவு செய்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் படி,
இனப்படுகொலை என்பது ஒரு தேசிய, இன அல்லது மதக் குழுவை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் செய்யப்படும் பின்வரும் செயல்களில் ஏதேனும் ஒன்றாகும்:
அ. ஒரு குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது;
ஆ. இக் குழுவின் உறுப்பினர்களுக்கு கடுமையான உடல் அல்லது மன பாதிப்பை ஏற்படுத்துவது;
இ. முழு அல்லது பகுதியாக அதன் சரீரரீதியான அழிவைக் கொண்டு வர கருத்திலெடுக்கப்பட்ட வாழ்க்கை நிலைமைகளை அக்குழுவின் மீது வேண்டுமென்றே செலுத்துவது;
ஈ. இக் குழுவிற்குள் பிறப்புகளைத் தடுக்கும் நடவடிக்கைகளை சுமத்துவது;
உ. குழுவின் குழந்தைகளை வலுக்கட்டாயமாக மற்றொரு குழுவிற்கு மாற்றுவது.
உக்ரேனில் 1932-1933 பஞ்சத்தின் விஷயத்தில் இந்த உண்மைகள் எதுவும் இருக்கவில்லை. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் 1991 இல் சோவியத் ஒன்றியம் அழிக்கப்பட்ட பின்னர், முன்னர் மூடப்பட்ட சோவியத் காப்பகங்கள் திறக்கப்பட்டதிலிருந்து வரலாற்றாசிரியர்கள் இதை நிரூபித்துள்ளனர்.
முதலாவதாக, பஞ்சம் பற்றிய சோவியத் ஆவணங்களின் ஆயிரக்கணக்கான பக்கங்கள் வெளியிடப்பட்ட போதிலும், உக்ரேனிய அல்லது சோவியத் மக்கள் தொகையின் வேறு எந்தப் பிரிவினரையும் அது இனப்படுகொலை என்று பெயரிடப்படுவதற்கான அடிப்படை நிபந்தனையான பட்டினியால் கொல்லும் நோக்கத்தை நிரூபிக்கும் ஒன்றைக்கூட 1991 இல் இருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கு நேர்மாறாக, 1930களின் ஸ்ராலினிச பயங்கரம் தொடர்பாக இதுபோன்ற ஏராளமான ஆவணங்கள் உள்ளன.
இரண்டாவதாக, பஞ்சம் என்பது உக்ரரேனுக்கு மட்டும் வரையறுக்கப்பட்ட ஒரு நிகழ்வு அல்ல. சுமார் 7 மில்லியன் இறப்புகளில் குறைந்தது 3.5 மில்லியன் இறப்புகளுடன், சோவியத் உக்ரேன் (அதன் எல்லைகள் அண்ணளவாக இன்றைய கிழக்கு உக்ரேனுடன் ஒத்துள்ளது) சோவியத் ஒன்றியத்தின் மற்ற எந்தப் பகுதியையும் விட முழுமையான அடிப்படையில் பஞ்சத்தால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், விகிதாசாரப்படி, கசாக் மக்களிடையே இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்தது. அவர்களில் 1 முதல் 1.5 மில்லியன் பேர் இறந்தனர்.
எப்படியிருந்தாலும், பஞ்சம் என்பது சோவியத் ஒன்றியம் முழுவதும் பரவிய ஒரு நிகழ்வாகும். இது சோவியத் மக்கள் தொகையின் பல இனக்குழுக்களை பாதித்தது மற்றும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களில் வெகுஜன இறப்புகளை ஏற்படுத்தியது. இருப்பினும் கிராமப்புற மக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இவ்விஷயத்தில் சிறந்த வரலாற்றாசிரியர்களான ஸ்டீபன் வீட்குராஃப்ட், ரோபர்ட் டபிள்யூ. டேவிஸ் ஆகிய இருவரும் 1932-1933ல் இறப்பு விகிதம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு பற்றிய சோவியத் அளவிலான புள்ளிவிவரங்களை ஆய்வு செய்த பின்னர் பின்வரும் முடிவிற்கு வந்தனர்:
இந்த பிராந்தியங்களின் கிழக்கே பாஷ்கிர் ASSR உடன் சேர்ந்து ஜேர்மன் ASSR உள்ளிட்ட கீழ் மற்றும் மத்திய வோல்கா பகுதிகளும் பஞ்சத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பிராந்தியங்களின் மக்கள் தொகை சுமார் 14 மில்லியனாக இருந்தது. மேலும் அவை உக்ரேனின் பிரதேசத்திற்கு சமமான பகுதியை உள்ளடக்கியிருந்தன. கிராமப்புற இறப்பு விகிதம் கீழ் வோல்கா பகுதியில் இயல்பான அளவை விட ஒன்பது மடங்கும், மத்திய வோல்காவில் சாதாரண அளவை விட மூன்று மடங்கும் உயர்ந்துள்ளது. பொதுவாக பஞ்சப் பிரதேசமாகப் பட்டியலிடப்படாத மத்திய கறுப்பு-பூமிப் பகுதியில், ஜூலை 1933க்குள் கிராமப்புற இறப்பு விகிதம் சாதாரண அளவை விட நான்கு மடங்கு அதிகமாக இருந்தது. யூரல் பகுதி மற்றும் தூர கிழக்குப் பகுதிகளிலிருந்தும் கடுமையான உணவுப் பிரச்சனைகள் பதிவாகியுள்ளன. கஜகஸ்தானில் பஞ்சம் தொடர்ந்து, மேலும் தீவிரமடைந்தது.
யூரல்ஸ், சைபீரியா மற்றும் தூர கிழக்குப் பகுதிகளைத் தவிர்த்து, சோவியத் ஒன்றியத்தில் உள்ள 160 மில்லியன் மக்களில் 70 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பஞ்சப் பகுதிகளில் உள்ளடங்கியிருந்தனர். (ஸ்டீபன் வீட்குராஃப்ட், ரோபர்ட் டபிள்யூ. டேவிஸ் பசியின் வருடங்கள்: சோவியத் விவசாயம், 1931-1933, போல்கிரேவ் மக்மில்லன் 2004, பக். 410-411.)
சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்ட நிலைமைகளின் 1920 களில் சோவியத் ஒன்றியத்தில் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிய ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் பேரழிவுகரமான மற்றும் பகுத்தறிவற்ற கொள்கைகளின் விளைவாக இந்த பஞ்சம் ஏற்பட்டது. 1928-1929 இல், லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையின் கீழ் இருந்த மார்க்சிச இடது எதிர்ப்பை கட்சியில் இருந்து வெளியேற்றிய பின்னர், அதிகாரத்துவம் முக்கியமாக கிராமப்புற சோவியத் ஒன்றியத்தின் விரைவான தொழிற்துறைமயமாக்கல் திட்டத்தைத் தொடங்கியது.
1927-1928 இல் ஒரு பெரிய தானிய நெருக்கடிக்கு பின்னர், அதிகாரத்துவம் விவசாயிகளிடமிருந்து தானியங்களை வலுக்கட்டாயமாக கோரத் தொடங்கியது. பின்னர், 1929 இன் பிற்பகுதியில், ஸ்ராலின் இன்னும் விவசாயத்தில் ஆதிக்கம் செலுத்தும் மில்லியன் கணக்கான சிறு விவசாயிகளின் பண்ணைகளை பலவந்தமாக கூட்டுப் பண்ணையாக்குவதை ஆரம்பிப்பதை அறிவித்தார்.
எல்லாவகையிலும், அதிகாரத்துவம் 'தனியொரு நாட்டில் சோசலிசத்தை' கட்டமைக்கும் பிற்போக்கு கருத்தாக்கத்தில் இருந்து முன்னெடுத்தது. சோவியத் ஒன்றியத்தின் விரைவான தொழிற்துறை மயமாக்கலுக்கான அனைத்து வளங்களும் என்ன விலை கொடுத்தும் உள்நாட்டு மக்களிடமிருந்து பிழியப்பட வேண்டியிருந்தது.
அதன் விளைவு பேரழிவு தருவதாக இருந்தது: ட்ரொட்ஸ்கி எச்சரித்தபடி, சோவியத் விவசாயமோ அல்லது தொழிற்துறையோ விவசாயத்தை ஒரு பெரிய அளவில் கூட்டுப்பண்ணையாக்க தேவையான தொழில்நுட்ப நிலைமைக்கு அருகில் இருக்கவில்லை. ஏராளமான சிறிய பண்ணைகள் அவற்றின் கையிருப்புகள் அல்லது உற்பத்தித் திறன்களை பொருட்படுத்தாமல் ஒன்றாக இணைக்கப்பட்டன.
ஏராளமான கால்நடைகள் மற்றும் கோழிகள் ஒன்றாக குவிக்கப்பட்டன. இதன் விளைவாக நோய் மற்றும் மோசமான சுகாதாரம் ஆகியவற்றால் பெருமளவில் இறப்பு ஏற்பட்டது. கால்நடைகளின் கணிசமான பகுதி விவசாயிகளால் கூட்டுப்பண்ணைமயமாக்கலுக்கு எதிரான அவநம்பிக்கையான எதிர்ப்பினால் கொல்லப்பட்டது. மக்கள் தொகையில் பெரும்பகுதி இன்னும் நாடோடிகளின் வாழ்க்கையை வழிநடத்தும் சோவியத் கஜகஸ்தானில், ஒட்டகங்களினதும், கால்நடைகளினதும் பாரிய மரணம் குறிப்பாக பேரழிவுகரமாக இருந்தது.
விவசாயத்தில் அதிகாரத்துவத்தின் இரக்கமற்ற மற்றும் அறியாமை தலையீட்டால் வழக்கமான சாகுபடி மற்றும் விதைப்பு முறைகளும் அழிக்கப்பட்டன. மோசமான வானிலையால் மேலும் மோசமடைந்த 1931, 1932 இன் அறுவடைகள் பேரழிவு தரும் மோசமான விளைவுகளை உருவாக்கின. 1930 ஆம் ஆண்டிலேயே, இந்த அழிவுகரமான கொள்கைகளின் விளைவாக விவசாயிகள் எழுச்சிகள் பெருமளவில் நிகழ்ந்தன.
சோவியத் ஒன்றியத்தின் குறிப்பிடத்தக்க பகுதிகளும், குறிப்பாக மிக முக்கியமான விவசாய பிராந்தியங்களில் ஒன்றாக இருந்த சோவியத் உக்ரேன், உள்நாட்டுப் போரின் விளிம்பில் இருந்தது.
பஞ்சத்தின் விளைவுகள் பேரழிவுகரமானதாகவும், நீண்டகால தாக்கங்களை கொண்டதாகவும் இருந்தது. இதனால் ஏழு மில்லியன் சோவியத் குடிமக்கள் இறந்ததுடன், மேலும் பத்து மில்லியன் மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டனர். கால்நடைகளின் எண்ணிக்கை 1958 வரை 1914 இன் நிலைகளுக்குத் திரும்பவில்லை. இது அரசியல்ரீதியாக, பலவந்தமான கூட்டுப்பண்ணைமயமாக்கல் சோவியத் ஒன்றியத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மில்லியன் கணக்கான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களிடையே சோவியத் அதிகாரத்தினதும் அக்டோபர் புரட்சியினதும் கௌரவத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது.
ஆனால் சோவியத் அதிகாரத்துவத்தின் கொள்கைகள் குற்றம்மிக்கதாகவும் பேரழிவுகரமாக இருந்தபோதும், அது இனப்படுகொலை அல்ல. வீட்குராஃப்டும் டேவிஸும் 1931-1932 பஞ்சம் பற்றிய தங்கள் ஆய்வை இவ்வாறு கூறி முடிக்கிறார்கள்:
பஞ்சம் பற்றிய எங்கள் ஆய்வு, டாக்டர் [ராபர்ட்] கொன்குவெஸ்ட்டிலிருந்து மிகவும் மாறுபட்ட முடிவுகளுக்கு நம்மை இட்டுச் சென்றுள்ளது. ஸ்ராலின் 'பஞ்சத்தை விரும்பினார்' என்றும், 'பஞ்சத்தை வெற்றிகரமாக சமாளிக்க சோவியத்துக்கள் விரும்பவில்லை' என்றும், உக்ரேனிய பஞ்சம் 'வேண்டுமென்றே அதன் சொந்த நலனுக்காக ஏற்படுத்தப்பட்டது' என்றும் அவர் கூறுகிறார். இது அவரைப் பின்வரும் பொதுவானதொரு முடிவுக்கு இட்டுச் செல்கிறது: 'முன்னோடியில்லாத வகையில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் படுகொலை செய்யப்படுவதற்கு கம்யூனிஸ்ட் சித்தாந்தம் உந்துதலாக இருந்தது என்பதே முக்கிய பாடமாகத் தெரிகிறது.'
பஞ்சத்திற்கான பொறுப்பிலிருந்து ஸ்ராலினை நாங்கள் எந்த வகையிலும் விடுவிக்கவில்லை. விவசாயிகள் மீதான அவரது கொள்கைகள் இரக்கமற்றது மற்றும் மிருகத்தனமானவை. ஆனால் இந்நூலில் வெளிவந்துள்ள கதையானது, அவர்களின் தவறான கொள்கைகளால் ஓரளவுக்கு ஏற்பட்ட ஆனால் எதிர்பாராததும் விரும்பத்தகாததுமான பஞ்ச நெருக்கடியுடன் போராடிக்கொண்டிருந்த சோவியத் தலைமையைப் பற்றியது. சித்தாந்தம் அதன் பங்கைக் கொண்டிருந்தாலும், பஞ்சத்திற்கான பின்னணி வெறுமனே சோவியத் விவசாயக் கொள்கைகள் போல்ஷிவிக் சித்தாந்தத்திலிருந்து பெறப்பட்டவை என்பது மட்டும் அல்ல. அவை ரஷ்ய புரட்சிக்கு முந்தைய கடந்த காலங்கள், உள்நாட்டுப் போரின் அனுபவங்கள், சர்வதேச சூழ்நிலைகள், புவியியல் மற்றும் வானிலை ஆகியவற்றின் மாறாத சூழ்நிலைகள் மற்றும் ஸ்ராலினின் கீழ் நிறுவப்பட்ட சோவியத் அமைப்பு முறை ஆகியவற்றால் அவை வடிவமைக்கப்பட்டன. அவை முறையான கல்வி மற்றும் விவசாயம் பற்றிய குறைந்த அறிவைக் கொண்ட நபர்களால் வடிவமைக்கப்பட்டன. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த விவசாய நாட்டை அசுர வேகத்தில் தொழிற்துறைமயமாக்கும் முடிவின் விளைவாக அவை இருந்தன. (Wheatcroft/Davies, பசியின் வருடங்கள், பக். 441)
இந்த ஆய்வு வெளியிடப்பட்ட சுமார் 20 ஆண்டுகளில், ஒரு வரலாற்றாசிரியர் கூட அவர்களின் மதிப்பீட்டிற்கு எதிராக சாத்தியமான ஆதாரங்களை வழங்கவில்லை.
இனப்படுகொலை என்ற கூற்றின் தீவிர வலதுசாரி மூலங்கள்
ஜேர்மன் பாராளுமன்ற தீர்மானம், சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான யூதப்படுகொலை மற்றும் நாஜி குற்றங்களுக்கு இணையாக 'ஹோலோடோமரை' வெளிப்படையாக வைக்கிறது. ஹோலோடோமோர் இதுவரை அவர்களின் கொடூரத்தில் கற்பனை செய்யமுடியாத 'ஐரோப்பிய கண்டத்தில் மனிதகுலத்திற்கு எதிரான மிகப் பெரிய குற்றங்களின் காலத்துடன் ஒத்துப்போகிறது” என அதில் குறிப்பிடுகின்றது. இதில் ஐரோப்பிய யூதர்களுக்கு எதிராக அதன் வரலாற்றில் தனித்துவமான வெயர்மாஹ்ட் இன் போர்க்குற்றங்கள் மற்றும் கிழக்கில் ஜேர்மனியின் இனவெறி கொண்ட நிர்மூலமாக்கும் போரின் ஒரு பகுதியாக மில்லியன் கணக்கான அப்பாவி பொதுமக்களை திட்டமிட்டு படுகொலை செய்தது ஆகியவையும் உள்ளடங்கும். இதற்கு ஜேர்மனி வரலாற்று பொறுப்பை கொண்டுள்ளது”.
இந்தவிதமான வாதத்தின் மூலம், உக்ரேனிய மற்றும் சர்வதேச தீவிர வலதுசாரிகளின் பாரம்பரியத்தில் பாராளுமன்றம் தன்னை முழுமையாக நிலைநிறுத்துகிறது. வரலாற்று ரீதியாக, 1930 களின் முற்பகுதியில் உக்ரேனில் ஒரு இனப்படுகொலை நடந்தது என்ற கூற்று, தீவிர கம்யூனிச எதிர்ப்புடன் மட்டுமல்லாமல், குறிப்பாக ஐரோப்பிய யூதர்களின் மீதான இனப்படுகொலையை முக்கியமற்றதாகக் காட்டுவதுடன் தொடர்புடையது.
இனப்படுகொலை குற்றச்சாட்டு இரண்டாம் உலகப் போரின் போது உக்ரேனில் நாஜி ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த பிரச்சாரத்தின் காலத்திற்கு செல்கிறது. போரின் போது, நாஜிக்கள் குறைந்தது 5 மில்லியன் யூதரல்லாத உக்ரேனிய குடிமக்களையும், சுமார் 900,000 உக்ரேனிய யூதர்களையும் படுகொலை செய்தனர். அவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் உக்ரேனிய தேசியவாதிகளின் பாசிச அமைப்பு (OUN) மற்றும் அதன் துணை இராணுவப் பிரிவான உக்ரேனிய கிளர்ச்சி இராணுவம் (UPA) ஆகியவற்றின் நேரடி உதவியால் கொல்லப்பட்டனர். OUN உறுப்பினர்கள் பத்திரிகையாளர்கள் உட்பட ஆக்கிரமிப்பு எந்திரத்தில் பெருமளவில் ஈடுபட்டனர்.
வரலாற்றாசிரியர்கள் தான்யா பென்டர் மற்றும் டிமிட்ரோ டைரென்கோ சமீபத்தில் இதைப் பற்றி பின்வருமாறு எழுதினார்கள்:
OUN உறுப்பினர்கள் ஆக்கிரமிப்பு செய்தித்தாள்களை நிறுவுவதற்கும் அவற்றின் பிரச்சார உள்ளடக்கத்தை வடிவமைக்க உதவுவதற்கும் உள்ளூர் சுய-அரசாங்கத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட அமைப்புகளின் மீது செல்வாக்கு செலுத்த முயன்றனர். இவை அனைத்தும் உக்ரேனிய மக்களிடையே தேசிய உணர்வை ஊக்குவிப்பதற்கும் உக்ரேனின் அங்கீகரிக்கப்பட்ட சுதந்திர தேசம் என்ற நிலையை பிரபலப்படுத்துவதற்கும் உதவியது.
1932-33 பஞ்சம் OUN ஆர்வலர்களுக்கு உக்ரேனிய மக்களை தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு அணிதிரட்ட ஒரு சிறந்த விடயமாக இருந்தது. OUN இந்த தலைப்பை முன்பு அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தியது. ... நாஜி ஆக்கிரமிப்பு பத்திரிகைகளில் பல கட்டுரைகள் பஞ்சத்தின் தன்மையை வலியுறுத்தின. இது 'செயற்கையாக போல்ஷிவிக்குகளால் உருவாக்கப்பட்டது,' 'சிவப்பு மிருகங்களால் செய்யப்பட்டது,' 'வேண்டுமென்றே தொடங்கப்பட்டது மற்றும் சிவப்பு மாஸ்கோவின் ஆக்கிரமிப்பு சக்தியால் கொடூரமாக இயக்கப்பட்டது' என எழுதின.
'உக்ரேனிய மக்களை உடல்ரீதியாக அழிக்கும் குற்றவியல் முயற்சியை' கண்டித்து அல்லது 'உக்ரேனிய மக்களின் திட்டமிட்ட அழிப்பை' கண்டித்து, பஞ்சத்தில் உக்ரேனிய தேசத்தின் குறிப்பிட்ட துன்பத்தையும் சில பிரச்சாரகர்கள் எடுத்துரைத்தனர். மற்றொரு கட்டுரையில், 'உக்ரேனியர்களான எங்களிடம் போல்ஷிவிசத்துடன் குறிப்பாக பெரிய அளவில் தீர்க்கப்படாத ஒரு கணக்கு உள்ளது' என எழுதியது.
எனவே, சில பத்திரிகை வெளியீடுகள் ஏற்கனவே, குறைந்தபட்சம் மறைமுகமாக, அந்த நேரத்தில் கூட பயன்படுத்தப்படாத இனப்படுகொலை என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் உக்ரேனியர்களின் மீதான போல்ஷிவிக் இனப்படுகொலை பற்றிய விவாதத்தை ஆதரித்தன. (Tanja Penter, Dmytro Tytarenko, 'The Holodomor, Nazi Propaganda in Ukraine, and Its Difficult Legacy,' Vierteljahreshefte für Zeitgeschichte, 2021, வெளியீடு 4, பக். 646-649, இந்த ஆசிரியரின் மொழிபெயர்ப்பு.
OUN பஞ்சத்திற்கு 'போல்ஷிவிக்குகளை' மட்டுமல்ல, மீண்டும் மீண்டும் 'யூதர்களையும்' குற்றம் சாட்டியது. எனவே, ஆக்கிரமிப்பு பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரை, பஞ்சம் 'மாஸ்கோ யூதர்களால் துன்பகரமான வகையில் விருப்பத்துடன் ஒழுங்கமைக்கப்பட்டது' என்று அறிவித்தது. (Ibid, பக்கம் 650 இல் மேற்கோள் காட்டப்பட்டது)
போருக்குப் பிந்தைய காலத்தில் இனப்படுகொலை பற்றிய பொய்
போருக்குப் பின்னர், உக்ரேனியர்களின் மீதான ஒரு இனப்படுகொலை பொய்யானது தீவிர வலதுசாரி உக்ரேனிய புலம்பெயர்ந்தோரால் தொடர்ந்து பரப்பப்பட்டது, இதில் OUN இன் முன்னாள் நாஜி ஒத்துழைப்பாளர்களும் அடங்குவர். அமெரிக்கா, கனடா மற்றும் பிரித்தானியாவின் உளவுத்துறை சேவைகள் மற்றும் ஜேர்மன் BND உடனான முன்னாள் நாஜி ஒத்துழைப்பாளர்களின் நேரடி தொடர்புகளின் உதவியுடன், அவர்கள் தொடர்ந்து தங்கள் பாசிச பிரச்சாரத்தை பரப்ப முடிந்ததுடன், கல்வி நிறுவனங்களுக்கான அணுகலையும் கண்டறிந்தனர்.
ஆயினும்கூட, பல தசாப்தங்களாக, 'உக்ரேனியர்கள் மீதான இனப்படுகொலை' என்ற கூற்று இந்த தீவிர வலதுசாரி வட்டங்களுக்குள் மட்டுமே இருந்தது. அதனை கல்வித்துறையிலும் அரசியல்ரீதியாகவும் நியாயப்படுத்துவது 1980 களில் நடந்தது. ஜேர்மனியில், தீவிர வலதுசாரி வரலாற்றாசிரியர் எர்ன்ஸ்ட் நோல்ட தேசிய சோசலிசத்தின் குற்றங்களை 'ரஷ்யப் புரட்சியின் போது நடந்த பயங்கரச் செயல்களுக்கு பயந்த எதிர்வினை' என்றும் 'போல்ஷிவிசத்தின் அழிக்கும் செயல்களின் சிதைந்த பிரதி' என்றும் நியாயப்படுத்தத் தொடங்கினார்.
நோல்டவின் கூற்றுப்படி, இந்த 'அழிப்புச் செயல்களில்' ஒன்று குலாக்குகளுக்கும் மற்றும் விவசாயத்தின் கூட்டுப்பண்ணைமயமாக்கலுக்கும் எதிரான 'வர்க்கப் போர்' ஆகும்.
அதே நேரத்தில், அமெரிக்க ஆளும் வர்க்கம் உக்ரேனிய நாஜி ஒத்துழைப்பாளர்களை அதிக அளவில் சட்டபூர்வமாக ஏற்றுக்கொண்டது. 1983 இல், அமெரிக்க ஜனாதிபதி றொனால்ட் ரீகன் யாரோஸ்லாவ் ஸ்டெட்ஸ்கோவை (Yaroslav Stetsko) வெள்ளை மாளிகையில் வரவேற்று, “உங்கள் போராட்டம் எங்கள் போராட்டம். உங்கள் கனவு எங்கள் கனவு” என்றார்.
போரின் போது, ஸ்டெட்ஸ்கோ OUN இல் ஸ்டீபன் பண்டேராவின் துணைத் தலைவராக இருந்தார். மேலும் ஜூன் 30, 1941 இல் வெயர்மாஹ்ட், லிவீவ் நகரத்தை ஆக்கிரமித்த சிறிது நேரத்திலேயே, நாஜி ஜேர்மனியின் கூட்டணியுடன் 'சுதந்திர உக்ரேனிய அரசை' நிறுவுவதாக அறிவித்தார். சில மணிநேரங்களுக்குப் பின்னர், உக்ரேனிய தேசியவாதிகள், ஜேர்மனியர்களுடன் கூட்டு சேர்ந்து, நகரத்தின் யூத மக்களுக்கு எதிராக ஒரு மிருகத்தனமான படுகொலையைத் தொடங்கினர். இதில் 7,000 முதல் 8,000 பேர் வரை கொல்லப்பட்டனர். போருக்குப் பின்னர், ஸ்டெட்ஸ்கோ CIA உடன் நெருங்கிய உறவைப் பேணி, நாடுகடத்தப்பட்ட OUN இன் தலைவராகவும், கிழக்கு ஐரோப்பாவில் இருந்து முதன்மையாக முன்னாள் நாஜி ஒத்துழைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பான போல்ஷிவிக் எதிர்ப்பு நாடுகளின் கூட்டணியின் (Anti-Bolshevik Bloc of Nations) தலைவராகவும் ஆனார்.
பின்னர், 1986 ஆம் ஆண்டில், நாஜிசத்தின் குற்றங்களை எர்ன்ஸ்ட் நோல்ட நியாயப்படுத்துவது தொடர்பாக ஜேர்மன் வரலாற்றாசிரியர்களின் சர்ச்சை (Historikerstreit) வெடித்ததை ஒட்டி, அமெரிக்க வரலாற்றாசிரியர் றோபர்ட் கொன்வெஸ்ட் துன்பங்களின் அறுவடை (Harvest of Sorrow) என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதில் அவர் உக்ரேனில் பஞ்சத்தை “இனப்படுகொலை' மற்றும் 'பஞ்ச-பயங்கரம்' என்றும், அதை நாஜிசத்தின் குற்றங்களுக்கு இணையாக வைத்து வெளிப்படையாக விவரித்தார்.
அந்த ஆண்டுகளில் ஒரு அமெரிக்க காங்கிரஸின் ஆணைக்குழு, பஞ்சம் ஒரு 'இனப்படுகொலை' என்று முடிவு செய்தது. அதன் நிர்வாக இயக்குனர், வரலாற்றாசிரியர் ஜேம்ஸ் ஈ. மேஸ், 7 மில்லியன் உக்ரேனிய பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறப்படும் இந்த 'இனப்படுகொலை' 6 மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்ட யூதப்படுகொலையைக் காட்டிலும் மோசமானது என்று வெளிப்படையாகவும், பொய்யாகவும் கூறினார்.
'ஹோலோடோமோர்' என்ற சொல், 'பட்டினியால் கொலை' என்று பொருள்படுகிறது. பஞ்சத்தை யூதப்படுகொலை போன்ற மட்டத்தில் ஒன்றாக வைக்கும் திட்டமிட்ட முயற்சிக்கு பயன்படுத்தப்பட்டது. இது OUN இன் பாசிச வழித்தோன்றல்களின் முயற்சியின் ஒரு பகுதியாகும். இது யூதப்படுகொலையிலும், ஒட்டுமொத்த கொலைகளிலும் உக்ரேனிய பாசிசத்தின் ஈடுபாட்டை குறைத்து மதிப்பிடுகிறது.
உக்ரேனிய தேசியவாத வரலாற்றில் சிறந்த நிபுணர்களில் ஒருவரான கனேடிய வரலாற்றாசிரியர் ஜோன்-பௌல் ஹிம்காவின் கூற்றுப்படி, 1980 களின் பிற்பகுதியில் உக்ரேனிய புலம்பெயர்ந்தோரால் 'ஹோலோடோமோர்' பற்றி அதிகரித்துவரும் பிரச்சாரம் உக்ரேனிய நாஜிகளிடமிருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சியாக இருந்தது. ஜோன் டெம்ஜான்ஜுக் போன்ற இணைந்து செயற்பட்டவர்கள் மற்றும் யூதப்படுகொலையில் அவர்கள் செய்த குற்றங்களை திசை திருப்பும் முயற்சியாகும். டெம்ஜான்ஜுக்கின் மீதான முதல் விசாரணையும் 1986 இல் ஆரம்பித்தது.
உக்ரேனை பூர்வீகமாகக் கொண்ட டெம்ஜான்ஜுக், டிராவ்னிகி (Trawniki) என்று அழைக்கப்படும் 2,000 முதல் 3,000 உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். ட்ரெப்ளிங்கா, சோபிபோர், அவுஷ்விட்ஸ் மற்றும் மஜ்டானெக் ஆகிய இடங்களில் உள்ள எரிவாயு அறைகளில் 1.7 மில்லியன் போலந்து யூதர்கள் கொல்லப்பட்ட போது, றைய்ன்ஹார்ட் நடவடிக்கைக்கு உதவுவதற்காக செப்டம்பர் 1941 முதல் உக்ரேனியர்களால் உருவாக்கப்பட்ட டிராவ்னிகி குறிப்பாக SS ஆல் பயிற்சியளிக்கப்பட்டது. இது தொடர்பாக ஹிம்கா பின்வருமாறு எழுதுகிறார்.
உக்ரேனியர்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவது, யூதப்படுகொலையின் போது 'உக்ரேனியர்களை யூதர்களின் இரக்கமற்ற அடக்குமுறையாளர்களாக சித்தரிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளின் சக்தியை மழுங்கடிக்கலாம்' என்று சிலர் நினைத்தனர். மேலும், சோவியத் ஒன்றியத்தை உக்ரேனிய-எதிர்ப்பு, குற்றவியல் ஆட்சியாக முன்வைப்பது, போர்க்குற்ற விசாரணைகளில் வழக்குரைஞர்களுக்கு சோவியத் வழங்கிய ஆதாரங்களை மதிப்பிழக்கச் செய்யலாம். (John-Paul Himka, “Making Sense of Suffering: Holocaust and Holodomor in Ukrainian Historical Culture, and: Holod 1932–1933 rr. v Ukrainiak henotsyd/Golod 1932–1933 gg. v Ukraine kak genotsid [The 1932–33 Famine in Ukraine as a Genocide] (review)”, in: Kritika Explorations in Russian and Eurasian History, Vol. 8, No. 3, Summer 2007, pp. 687-688.)
உக்ரேனியர்களுக்கு எதிரான 'ஹோலோடோமோர்' என்ற தவறான விவரிப்பு சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர் உக்ரேனில் பெருகிய முறையில் ஆதிக்கம் செலுத்தியது. OUN மற்றும் அதன் பாசிச வழித்தோன்றல்களின் வரலாற்றுப் பொய்களை நியாயப்படுத்துவதற்கான அனைத்து முன்னெடுப்புகளும், 20 ஆம் நூற்றாண்டைப் போலவே, உக்ரேனில் தீவிர வலதுசாரிகளை நம்பியிருந்த மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் தலையீட்டுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, 2000 களின் முற்பகுதியில் நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தின் பின்னணியில், அமெரிக்க காங்கிரஸும் அதேபோல் கனேடிய பாராளுமன்றமும் இந்த பஞ்சத்தை 'இனப்படுகொலை' என அறிவித்தது.
2004 இல், ஏகாதிபத்திய சக்திகள் உக்ரேனில் ஆரஞ்சுப் புரட்சி என்று அழைக்கப்பட்டதை ஆதரித்தன. இது விக்டர் யுஷ்செங்கோவின் நேட்டோ-சார்பு அரசாங்கத்திற்கு அதிகாரத்திற்குவர உதவியது. யுஷ்செங்கோவின் கீழ், OUN இன் பாரிய மறுஉயிர்ப்பிப்பு நடந்தது. தெருக்களுக்கு பண்டேரா மற்றும் ஸ்டெட்ஸ்கோ பெயரிடப்பட்டு, மேலும் பல நகரங்களில் அவர்களுக்கு நினைவுச்சின்னங்கள் அமைக்கப்பட்டன. ஹோலோடோமோர் வகுப்பறையில் கட்டாய பாடமாக மாறியது. இதற்கு நேர்மாறாக, 1996 முதல் உக்ரேனிய கல்வி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட உக்ரேனிய வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் யூதப்படுகொலை பற்றியோ அல்லது நாஜிகளுடன் உக்ரேனிய ஒத்துழைப்பு பற்றி ஒரு குறிப்பு கூட இல்லை.
பாசிசத்தையும் போரையும் நியாயப்படுத்துவதற்கு வரலாற்றை பொய்மைப்படுத்தல்
உக்ரேனிய பாசிசத்தின் சித்தாந்தத்தில் 'ஹோலோடோமோர்' கட்டுக்கதையின் தோற்றம் மற்றும் நாஜிசத்தின் குற்றங்களை நியாயப்படுத்தும் முயற்சிகளுடன் இந்த பாரம்பரியம் தொடர்புபட்டிருப்பது, அமெரிக்காவிலும் கனடாவிலும் அறிவித்ததைப் போன்று ஜேர்மனியின் ஆளும் வர்க்கம் நீண்ட காலமாக பஞ்சத்தை ஒரு இனப்படுகொலையாக அறிவிப்பது விவேகமற்றது அல்லது சாத்தியமற்றது என்று கருதியது ஒரு காரணமாக இருந்தது.
இப்போதைய இந்த நடவடிக்கையின் வரலாற்று மற்றும் அரசியல் தாக்கங்கள் உண்மையில் பாரியளவிலானவை. இது உக்ரேனிய பாசிஸ்டுகள், நாஜிசம் மற்றும் யூதப்படுகொலை ஆகியவற்றின் குற்றங்களை நியாயபூர்வமாக்குவதில் ஒரு மைல்கல்லை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
ஜேர்மன் பல்கலைக்கழகங்களின் வரலாற்றுப் பேராசிரியர்கள் இத்தகைய நியாயப்படுத்த்தலுக்கு பல தசாப்தங்களாக முயற்சி செய்து வருகின்றனர். 1980களின் வரலாற்றாசிரியர்களின் சர்ச்சையில் நோல்ட இன்னும் கணிசமான எதிர்ப்பைச் சந்தித்தார். ஆனால் 2014 இல், பேர்லின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜோர்க் பாபெரோவ்ஸ்கி ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டு மற்றும் ஆளும் உயரடுக்கினரிடையே அதற்காக பரந்த ஆதரவைப் பெற்றார்.
ஜேர்மன் மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள்; கியேவில் யானுகோவிச் அரசாங்கத்திற்கு எதிராக தீவிர வலதுசாரி சக்திகளின் 2014 ஆட்சிக் கவிழ்ப்பை ஏற்பாடு செய்த அதே மாதத்தில், பாபெரோவ்ஸ்கி Der Spiegel இதழில் 'ஹிட்லர் தீயவர் அல்ல' என்றும் 'நோல்டவிற்கு அநீதி இழைக்கப்பட்டது' என்றும் வரலாற்றுரீதியாகப் பார்த்தால் அவர் சொல்வது சரிதான் என அறிவித்தார்.
அதே நேரத்தில், அப்போதைய வெளியுறவு மந்திரி பிராங்க் வால்டர் ஸ்டைன்மையர் மற்றும் பிற அரசாங்க அதிகாரிகள் 'இராணுவ கட்டுப்பாடு கொள்கை' முடிவுக்கு வந்ததாக அறிவித்தனர். அப்போதிருந்து, ஜேர்மன் ஏகாதிபத்தியம் வெளிநாடுகளில் மேலும் மேலும் ஆக்ரோஷமாக செயல்பட்டு வருவதுடன், அதே நேரத்தில் உள்நாட்டில் AfD போன்ற பாசிச சக்திகள் கட்டமைக்கப்படுகின்றன. பல ஆண்டுகளாக நேட்டோவின் இராணுவ சுற்றி வளைப்பு மற்றும் ஆத்திரமூட்டலுக்குப் பின்னர் உக்ரேன் மீதான பிற்போக்குத்தனமான ரஷ்ய தாக்குதல் இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து மிகப்பெரிய ஜேர்மன் மறுஆயுதமயமாக்கல் திட்டத்திற்கு வரவேற்கத்தக்க போலிக்காரணமாக அமைந்தது.
இந்த நிகழ்ச்சிப்போக்கில், உக்ரேனும் ரஷ்யாவும் மீண்டும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களின் இலக்குகளாக உள்ளன. அவை முதல் உலகப் போரிலும் இரண்டாம் உலகப் போரிலும் அவ்வாறே இருந்தன. அதே நேரத்தில், வரலாற்றுப் பொய்களை பரப்புவது ஜேர்மனியினுள் தீவிர வலதுசாரி சக்திகளை வலுப்படுத்த உதவுகிறது.
ஜேர்மன் பாராளுமன்றத்தின் 'ஹோலோடோமோர்' தீர்மானம், போர் பிரச்சாரத்தையும் பாசிச சக்திகளை நியாயப்படுத்துவதையும் எதிர்க்கும் அரசியல் எதிர்ப்பை குற்றமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பிற்போக்குத்தனமான அரசியல் அபிலாஷைகளுக்கு எதிரான வரலாற்று ஆய்வுகளுக்கும் இது பொருந்தும். ஜேர்மன் ஆளும் வர்க்கம் ஒரு வெளிப்படையான போர் கொள்கைக்கு திரும்புவதும், அதனுடன் தொடர்புடைய சமூக தாக்குதல்களும் தொழிலாள வர்க்கத்தில் பரந்த எதிர்ப்பை சந்திக்கும் என்பதை அது நன்கு அறிந்திருக்கிறது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei - SGP) மட்டுமே வரலாற்றின் இந்த இரண்டு பொய்மைப்படுத்தல்களையும் ஜேர்மன் இராணுவவாதம் மற்றும் பாசிசத்தின் மீள்வருகையையும் பல ஆண்டுகளாக தொடர்ந்து எதிர்த்து வந்ததும் அதற்கு எதிராக ஒரு முன்னோக்கை வழங்கிய ஒரேயொரு அரசியல் கட்சியாகும். பாசிசம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்புவது இப்போது முக்கிய பணியாகும்.
மேலும் படிக்க
- ஜேர்மனியின் கூட்டணி அரசாங்கம் போருக்கும், சிக்கனத்திற்குமான வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்றுகிறது
- நேட்டோ உச்சிமாநாடு ரஷ்யாவின் எல்லைகளுக்கு துருப்புக்களை அனுப்புவதைத் தொடர உறுதியளிக்கிறது
- கனேடிய ஏகாதிபத்தியத்தின் பாசிச நண்பர்கள்: உக்ரேனிய பாசிசவாதிகளுக்கு ஒட்டாவா எவ்வாறு அடைக்கலம் அளித்தது மற்றும் தீவிர வலதுசாரி உக்ரேனிய தேசியவாதத்தை ஊக்குவித்தது