மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கடந்த வார இறுதியில், சீனாவின் அனைத்து பிரதான நகரங்களிலும் போராட்டங்கள் வெடித்தன. பெரும்பாலும் நடுத்தர வர்க்க அடுக்குகளிலிருந்து எழுந்ததான இந்த ஒப்பீட்டளவிலான சிறிய எதிர்ப்புக்கள், உத்தியோகபூர்வ பூஜ்ஜிய-கோவிட் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பது மற்றும் பாரிய பரிசோதனை, தனிமைப்படுத்தல் மற்றும் பூட்டுதல்கள் போன்ற கோவிட் கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பான கோரிக்கைகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்டன. ‘எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்’ என்ற அவர்களின் முழக்கம் அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் சில சமயங்களில் அவர்களின் வணிக நலன்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் தேவையான பொது சுகாதார நடவடிக்கைகளுக்கு அவர்களின் விரோதத்தை பிரதிபலித்தது. சீன அரசாங்கம் தற்போது செயல்படுத்தி வரும் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையின் முடிவானது, ஒரு சமூகப் பேரழிவை மட்டுமே விளைவிக்கும் – அதாவது, பாரிய நோய்தொற்றுக்கள், மில்லியன் கணக்கான இறப்புக்கள் மற்றும் பல நெடுங்கோவிட் நோய்தொற்றுக்கள் போன்ற பாதிப்புகளை அது உருவாக்கும்.
சீன சமூக ஊடகங்களிலும், மற்றும் குறிப்பாக பூஜ்ஜிய-கோவிட் கொள்கை பற்றிய இணையவழி விவாதங்களிலும் தொழிலாள வர்க்கத்தின் குரல் அரிதாகவே முக்கியத்துவம் பெறுகிறது. சீனாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் இரண்டு பதிவுகள், கடந்த வார இறுதியில் நடந்த போராட்டங்களை மக்களின் குரலாகப் பொய்யாக சித்தரித்த அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்களின் வெற்று மூடிமறைப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்ட விளக்கத்தை உருவாக்கியுள்ளன. கஷ்டங்கள் இருந்தபோதிலும், தொழிலாளர்கள் நோய்தொற்றின் ஆபத்துகள் குறித்து மிகவும் நனவாக இருப்பதுடன், அதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளுக்கு ஆதரவாக உள்ளனர்.
பெய்ஜிங்கில் உள்ள உணவு விநியோகத் தொழிலாளர்கள்
சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு, சீனாவின் இரண்டு பெரிய உணவு விநியோக தளங்களில் ஒன்றான Meituan ஐச் சேர்ந்த உணவு விநியோக பணியாளர் சமூக ஊடகங்களில் ஒரு இடுகையை பதிவிட்டார்.
அவர்கள் வசித்து வந்த குடியிருப்பு வளாகம் நவம்பர் 20 ஆம் தேதி காலை பூட்டப்பட்டிருந்ததுடன், யாரும் வளாகத்திற்குள் நுழையவோ வெளியேறவோ அனுமதிக்கப்படவில்லை. பல உணவு விநியோகத் தொழிலாளர்கள் அங்கு வசிப்பதை நிறுத்திக்கொள்ள முடிவு செய்து, பூட்டுதல் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே வளாகத்தை விட்டு வெளியேறினர். அங்கேயே தொடர்ந்து தங்கினால், கடந்த முறை இந்த வளாகம் ஒரு வாரத்திற்கு பூட்டப்பட்டபோது நடந்ததைப் போல, தங்களுக்கு கிடைக்கும் ஒரே வருமானத்தை தாம் இழந்துவிடுவோம் என்ற கவலை அவர்களுக்கு இருந்தது.
15 மற்ற விநியோகத் தொழிலாளர்களுடன், அன்றிலிருந்து அவர்கள் வீடில்லாமல் இருந்தனர். அந்த தொழிலாளி தனது பதிவில் விவரித்துள்ளபடி, “எங்களில் சிலர் உணவு விநியோக நிலையங்களிலும், சிலர் மலிவான ஹோட்டல்களிலும் வசித்து வருகிறோம், எங்களில் பெரும்பாலோர் அலுவலக கட்டிடங்களின் நடைபாதைகளில் அல்லது உணவகங்களின் நுழைவாயிலிலோ தூங்குகிறோம்.” நவம்பர் பிற்பகுதியில் பெய்ஜிங்கில் வெப்பநிலை மாலை நேரங்களில் உறைவு நிலைக்குக் கிழே சென்றது. இந்த ‘தங்கும்’ இடங்களில் பெரும்பாலானவற்றில் வெப்பமூட்டுதல் வசதி இல்லை.
இருப்பினும், இந்த வாய்ப்புகள் கூட இனி சாத்தியமில்லை. “பெய்ஜிங்கில் உள்ள உணவகங்கள் உணவளிக்கும் சேவைகளை நிறுத்துவதற்கு நகர்ந்த நிலையில், அவர்கள் இனி அங்கு கூட மக்களை [தூங்க] விடமாட்டார்கள். பெரும்பாலான மக்கள் தொலைதூர இடங்களில் வேலை செய்யத் தொடங்கியதால், அவர்கள் அலுவலக கட்டிடங்களுக்குள் செல்வதும் கடினமாக இருந்தது” என்று தொழிலாளி மேலும் கூறினார். அத்துடன், மலிவான குறுகிய உள்குத்தகை இருப்பிடங்கள் காணக்கூடிய பெரும்பாலான தொழிலாள வர்க்க சுற்றுப்புறங்களும் பூட்டப்பட்டுள்ளன, மேலும் ஹோட்டல்கள் வெறுமனே கட்டுப்படியாகாது.
தொழிலாளி இரவில் தூங்குவதற்கு ஒரு மலிவு இடத்திற்காக மட்டுமே இந்த இடுகையைப் பதிவிட்டுள்ளார். பூட்டுதல் காரணமாக தங்கள் வருமானத்தை இழக்க விரும்பாத மற்றும் வீடற்றவர்களாக இருக்க தேர்வுசேய்த பல உணவு விநியோக தொழிலாளர்களால் இந்த நிலைமை பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
'கோவிட்டின் போது உணவு விநியோகத் தொழிலாளர்கள் குளிர் இரவுகளில் தூங்க முயற்சி செய்கிறார்கள்' என்ற தலைப்பில் உணவு விநியோகத் தொழிலாளர்களின் மற்றொரு குழுவிடம் கண்ட பேட்டியில், தொழிலாளர்கள் அலுவலக கட்டிடங்களில் முகாமிட்டு, குளியலறைக்கு அருகில் உள்ள தரையில் தூங்கினர், ஏனெனில் கழிவு வெப்பத்தின் பெரும்பகுதி அங்குதான் இருந்தது எனத் தெரிவித்தனர். வானிலை மிகவும் குளிர்ச்சியாக இருந்தால், அவர்கள் தங்களை சூடேற்றிக்கொள்ள பீரில் இருந்து மதுபானத்திற்கு மாறுவார்கள். சில நேரங்களில் இரண்டு தொழிலாளர்கள் ஒரே போர்வையின் கீழ் ஒதுங்கிக் கொண்டனர். தலைக்கு மேல் ஒரு ‘கூரை’ இருந்தபோதிலும், அவர்கள் தொடர்ந்து தங்கள் உடமைகளை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டனர். அந்த நேர்காணல் சுருக்கமாக இவ்வாறு கூறியது, “அந்த -10 குளிர் இரவுகளின்போது, அவர்களுடன் இருந்தது, வயிற்று மருந்து, மதுபானம் மற்றும் சக விநியோக ஊழியர்களின் குறட்டைச் சத்தம் ஆகியவைதான்.”
பூட்டுதல் நடவடிக்கைகளால் அவர்கள் மீது மிகவும் கடினமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தாலும், தொழிலாளர்களிடையேயான உணர்வுகளானது, ‘சுதந்திரம்’ கோரும் நடுத்தர வர்க்க அடுக்குகளின் உணர்வுகளிலிருந்து மிகவும் வேற்பட்டவையாகும். சமூக ஊடகப் பதிவில், விநியோக தொழிலாளி ஒருவர் உதவி கேட்டு, இவ்வாறு கூறியுள்ளார் “நாங்கள் பல நாட்களாக வீடில்லாமல் இருக்கிறேம், ஆனால் நாங்கள் இன்னும் தினமும் PCR பரிசோதனை செய்து கொள்வதுடன், கோவிட் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து பின்பற்றுகிறோம். எங்களின் ஒரே வருமான ஆதாரத்தை இழக்க விரும்பாததால் மட்டுமே பூட்டுதலுக்கு முன்னரே குடியிருப்பு வளாகத்தை விட்டு நாங்கள் வெளியேறினோம்.”
ஷாங்க்சி மாகாணத்தின் யாங்குவான் நகரில் உள்ள நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள்
நவம்பர் 28 அன்று, வடக்கு சீனாவில் நிலக்கரி அதிகம் உள்ள ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள யாங்குவான் நகரத்தைச் சேர்ந்த ஒரு நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளி வெய்போ வலைத் தளத்தில் ‘உதவி!!!!’ என்று தொடங்கிய இடுகையை பதிவிட்டிருந்தார். இந்த சுரங்கத் தொழிலாளி, மாகாணத்தில் உள்ள ஏழு பெரிய நிலக்கரி சுரங்க நிறுவனங்களில் ஒன்றான Shanxi LuAn குழுமத்தின் கீழ் யாங்குவான் எண். 5 நிலக்கரிச் சுரங்கத்தில் பணிபுரிந்தார். யாங்குவான் நகரம் நாட்டிலேயே அதிக அளவு ஆந்த்ராசைட் நிலக்கரியை உற்பத்தி செய்கிறது.
நவம்பர் 18 முதல், யாங்குவானில் தொற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சில ஆயிரம் தொழிலாளர்கள், அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படும் அபாயத்திற்கு ஆளாகாமல் உற்பத்தியை தடையின்றி தொடரும் வகையில், சுரங்கத்திலுள்ள தங்குமிடங்களில் அவர்கள் தங்க வேண்டியிருந்தது.
தொற்றுநோய் உறுதிசெய்யப்பட்ட தொழிலாளர்களை தனிமைப்படுத்த சுரங்கத்தில் சரியான தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் எதுவும் இல்லை. சில சமயங்களில் தொற்றுநோய் உறுதிப்படுத்தப்பட்ட தொழிலாளிக்கு பாதுகாப்பு உடை வழங்கப்படுகிறது, ஆனால் விடுதிக்கு வெளியே அவர் மாற்றப்படுவதில்லை. ஒரு டஜனுக்கும் அதிகமான தொழிலாளர்கள், படுக்கைகள் மற்றும் ஒரு நீர் நீரூற்று தவிர்த்து மரச்சாமான்கள் அல்லது உபகரணங்கள் எதுவுமில்லாத ஒற்றை தங்கும் அறையில் அடைக்கப்பட்டனர். வசிக்கும் இடம் மிகவும் குறுகியதாக இருந்ததால், சில தொழிலாளர்கள் நீரூற்றை சுற்றிய தரையில் (shower) தூங்க வேண்டியிருந்தது. இது சுரங்கத் தொழிலாளர்களிடையே பலருக்கு காய்ச்சலை ஏற்படுத்தியதுடன், வைரஸ் மேலும் பரவுவதற்கு வழிவகுத்தது.
வாழ்க்கை நிலைமைகள் பயங்கரமாக இருந்தன. உணவுப் பற்றாக்குறையும் இருந்தது. இடுகையை பதிவிட்ட சுரங்கத் தொழிலாளி, “அவர்கள் ஒரு நாள் முழுவதும் சாப்பிடக்கூடிய உணவு அவர்கள் வழக்கமாக ஒரு வேளை சாப்பிடுவதை விட குறைவாக இருந்தது” என்று தெரிவித்தார். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்ததான சாதம், துருவிய உருளைக்கிழங்கு, துருவிய கேரட் மற்றும் ‘இரண்டு அல்லது மூன்று இறைச்சித் துண்டுகள்’ மட்டுமே கொண்ட உணவுப் பொதியின் படத்தையும் அவர் பதிவிட்டிருந்தார். இந்த உணவும் மாலை 6 மணியளவில் தான் அவர்களுக்கு கொண்டு வரப்பட்டது, இதுவே அவர்களின் மதிய உணவாகும். மருந்து பற்றாக்குறை காரணமாக, நோய்வாய்ப்பட்ட தொழிலாளர்கள் கவனிக்கப்படவில்லை. அதிக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சில தொழிலாளர்களுக்கு insta-ramen போன்ற உடனடி உணவுதான் சாப்பிட கிடைக்கும். இவ்வளவு கடுமையான நிலைமைகள் இருந்தபோதிலும், தொழிலாளர்கள் தொடர்ந்து பணி செய்தனர்.
தொழிலாளி தனது பதிவில், “நாடு முழுவதும் நிலவும் நிலக்கரி தேவையை பூர்த்தி செய்வதற்காக, தொழிலாளர்கள் தினசரி அடிப்படையில் சுரங்கத்தில் அதிக ஆபத்துள்ள வேலைகளை செய்கிறார்கள். ஆனால் தொழிலாளர்களுக்கு அரவணைப்பும் பாதுகாப்பும் தேவைப்படும் நேரத்தில், அவர்களுக்கு எங்கிருந்து அவை கிடைக்கும்?” என்று கேட்டிருந்தார்.
“யாங்குவான் என்பது பெரும்பாலான மக்கள் கேள்விப்பட்டிராத ஒரு சிறிய நகரமாகும், ஆனால் இது நாட்டில் மிகப்பெரிய ஆந்த்ராசைட் உற்பத்தியைக் கொண்டுள்ளது, இது நாடு முழுவதும் பல இடங்களுக்கு வெப்பமூட்டல் வசதியை வழங்குகிறது. நீங்கள் குளிர்ச்சியாக உணரும்போது, தயவுசெய்து எங்களை நினைவில் கொள்ளாதீர்கள். கடுமையான குளிர்காலத்தை நாங்கள் எதிர்கொள்ளும்போது, மற்றவர்கள் எங்களைச் சுற்றி ஒரு சூடான மேலங்கி கொண்டு போர்த்தினால் நல்லது என்று நாங்கள் நினைக்கிறோம்.”
இந்த இடுகை சமூக ஊடகங்களில் பரவியதன் பின்னர், நிறுவனம் இறுதியாக நோய்தொற்று உறுதிசெய்யப்பட்ட தொழிலாளர்களை உள்ளூர் அல்லது அருகிலுள்ள ஃபாங்காங் மருத்துவமனைகளுக்கு மாற்றியதுடன், சுரங்கத்தில் உள்ள எஞ்சிய தொழிலாளர்களுக்கு அதிகமான பொருட்களை வழங்கத் தொடங்கியது.
இந்த நிலக்கரி சுரங்கத்தில் நடந்தது அனைத்தும், உலகின் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலையான ஜெங்ஜோவுவில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நிலைமைகளை ஒத்திருந்தன. கோவிட் நோய்தொற்றால் பாதிக்கப்பட்ட ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் மற்ற தொழிலாளர்களிடமிருந்து பிரித்து வைக்கப்படாமல், இதேபோன்ற ‘மூடிய-வளைய’ நிர்வாகத்தின் கீழ் வைக்கப்பட்டனர். இது அக்டோபரில் பாரிய தொழிலாளர் வெளியேற்றத்திற்கு வழிவகுத்தது, மற்றும் நவம்பர் நடுப்பகுதியில் முக்கியமாக புதிதாக வேலைக்கு அமர்த்தப்பட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தங்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படாதது, மோசமான உணவு வழங்கப்படுவது மற்றும் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்ட தொழிலாளர்களுடன் சேர்ந்து வேலை செய்யவும் தூங்கவும் நிர்ப்பந்திக்கப்படுவது ஆகியவற்றிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் இட்டுச் சென்றது. நிலக்கரி சுரங்கத்தைப் போலவே ஃபாக்ஸ்கான் நிர்வாகத்தின் ஒரே அக்கறை, உற்பத்தியும் இலாபமும்.
பூஜ்ஜிய-கோவிட் கொள்கையின் விளைவாக பல தொழிலாளர்கள் பெரும் துன்பங்களை எதிர்கொண்டுள்ளனர். முக்கியமாக கிராமப்புற புலம்பெயர்ந்த தற்காலிக ஊழியர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தனிமைப்படுத்தலில் இருக்கும் ஒவ்வொரு நாளும் ஊதியம் இல்லாத நாளாக இருக்கும் என்பதே அர்த்தம். ஒருங்கிணைப்பு பிரிவுகளில் பணிபுரிபவர்கள், அடிப்படை வாழ்க்கை மற்றும் மருத்துவ பொருட்கள் இல்லாமல் பெரும்பாலும் வேலையில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இருப்பினும், உணவு விநியோகத் தொழிலாளர்கள், நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள், ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் ஒருங்கிணைப்பு பிரிவுகளில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் பலர் இந்த கோவிட் கட்டுப்பாடுகள் பாரிய தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களைத் தடுக்க அவசியம் என்பதை புரிந்துகொள்கிறார்கள். தொழிலாளர்களின் சமூக ஊடக இடுகைகள் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையிலிருந்து ‘சுதந்திரம்’ கோரவில்லை, மாறாக அவர்களுக்கு தங்குமிடம், சரியான உணவு மற்றும் நோய்தொற்றுக்கள் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றையே கோருகின்றன.
எதிர்கொள்ளும் சிரமங்கள் கோவிட் பூஜ்ஜியக் கொள்கையின் விளைவு அல்ல. மாறாக, அரசாங்கம் மற்றும் முதலாளிகளிடம் இருந்து தொழிலாளர்களுக்கு நிதி உதவி மற்றும் அன்றாட வாழ்க்கை உதவி பெற வேண்டியதன் அவசியத்தை முன்னிலைப்படுத்துகிறது. தொழிலாளர்கள் தங்களுக்கு உணவளிப்பதற்கும் நோய்தொற்று ஆபத்து ஏற்படுவதற்கும் இடையே தேர்வு செய்ய வேண்டியதில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சீன அரசாங்கத்தின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கை வைரஸை ஒழிப்பது சாத்தியம் என்பதை நிரூபித்துள்ளது, ஆனால் சர்வதேச அளவில் செயல்படுத்தப்பட்டால் மட்டுமே. இப்போது சர்வதேச அளவிலும், உள்நாட்டில் வணிகப் பிரிவுகள் மற்றும் நடுத்தர வர்க்கதினரிடமிருந்தும் பெரும் அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், வைரஸை அகற்றுவதில் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்ட நடவடிக்கைகளையே ஆட்சி விரைவாக கைவிட்டு வருகிறது.
நோய்தொற்றுக்களும் இறப்புக்களும் அதிகரித்து வரும் நிலையில், தவிர்க்க முடியாமல் தொழிலாள வர்க்கம் தான் கடுமையாக பாதிக்கப்படும். ஃபாக்ஸ்கான், நிலக்கரிச் சுரங்கங்கள் மற்றும் பிற பணியிடங்களில் உள்ள முதலாளிகள், நோய்தொற்றுக்களைத் தடுப்பதற்கு தற்போது நடைமுறையில் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளைக் கூட முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில், அனைத்து கோவிட் கட்டுப்பாடுகளையும் தளர்த்துவார்கள்.
