மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'உக்ரேனில் போரை நிறுத்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் வெகுஜன இயக்கத்திற்கு!' என்ற டிசம்பர் 10 பேரணியில் WSWS இன் சர்வதேச ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த் வழங்கிய நிறைவுரை கீழே காணலாம்.
உலகெங்கிலும் இருந்து IYSSE மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) உறுப்பினர்கள் அந்தப் பேரணியில் உரையாற்றினார்கள். IYSSE இல் இணைவது குறித்த கூடுதல் தகவலுக்கு, iysse.comஐ பார்க்கவும்.
இன்றைய இணையவழி பேரணி உக்ரேன் போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதில் ஒரு மைல்கல்லாகும். பேச்சாளர்கள், இந்தப் போரின் வரலாற்று தோற்றுவாய்கள், நிகழ்கால நோக்கங்கள் மற்றும் இப்போரால் ஏற்படக்கூடிய விளைவுகளை மட்டும் விளக்கவில்லை. அவர்கள் இந்தப் போரின் குற்றகரமான தன்மையை அம்பலப்படுத்தி உள்ளதுடன், இதை திட்டமிடுவதிலும், தூண்டி விடுவதிலும் மற்றும் செயல்படுத்துவதற்கும் பொறுப்பான எல்லா அரசாங்கங்கள் மீதும் ஒரு குற்றப்பத்திரிகையை முன்வைத்துள்ளனர். அரசாங்கங்களும் ஊடகங்களும் எதைக் கொண்டு மக்களின் பொது நனவை மழுங்கடிக்கவும் போருக்கு ஆதரவைக் கட்டமைக்கவும் முற்படுகின்றனவோ, அந்தப் பிரச்சாரத்தின் சாராம்சத்தை உருவாக்கும் பொய்களைப் பேச்சாளர்கள் மறுத்துரைத்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டால், இன்றைய உரைகள் உக்ரேனில் இந்த அமெரிக்க-நேட்டோ போரின் இயல்பையும் மற்றும் அதை நிறுத்த என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்தும் திட்டவட்டமான முடிவுகளுக்கு இட்டுச் செல்கின்றன. இந்த முடிவுகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்:
- உக்ரேனில் நடக்கும் இந்தப் போர், அதன் சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் சாராம்சத்தில், அமெரிக்காவினாலும் மற்றும் நேட்டோ கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்ற முக்கிய முதலாளித்துவ சக்திகளாலும் தூண்டப்பட்ட ஓர் ஏகாதிபத்தியப் போர் ஆகும்.
- ரஷ்ய கூட்டமைப்பின் உடைவுக்கு இட்டுச் செல்லும் வகையில் ரஷ்யாவை இராணுவரீதியில் தோற்கடித்து, அந்த பரந்த நாட்டைத் துண்டாடி, அதன் அளப்பரிய இயற்கை வளங்களை ஏகாதிபத்திய சக்திகளிடையே பங்கிட்டுக் கொள்வதே அமெரிக்கா தலைமையிலான நேட்டோவின் நோக்கமாக உள்ளது.
- யூரேஷியாவுக்குள் நேட்டோவின் கிழக்கத்திய இராணுவ விரிவாக்கத்திற்கு ரஷ்யா ஒரு தடையாக இருப்பதில் இருந்து அதை அகற்றுவது, சீனாவைச் சுற்றி வளைப்பதிலும், பின்னர் —போரின் விளைவாகவோ அல்லது பூஜ்ஜிய-கோவிட் கொள்கையைச் சீன ஆட்சி கைவிட்டதைப் போல, இடைவிடாத உலகளாவிய முதலாளித்துவ பொருளாதார அழுத்தங்களுக்கு முன்னால் விட்டுக்கொடுப்புகள் செய்ய வைப்பதன் மூலமாகவோ— அந்நாட்டை ஏகாதிபத்திய கட்டளைகளுக்கு அடிபணிய செய்வதிலும் போய் முடியும் என்று ஏகாதிபத்தியவாதிகள் நம்புகிறார்கள்.
- இறுதிப் பகுப்பாய்வில், 20 ஆம் நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்களைப் போலவே, இந்தப் போரின் அரசியல் நோக்கமும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு மத்தியில் உலகை புதிதாக மறுபங்கீடு செய்வதாகும். இந்த நிகழ்ச்சிப்போக்கின் தர்க்கம் ரஷ்யா மற்றும் சீனாவுடனான மோதலையும் கடந்து நீள்கிறது. ஆசியா மற்றும் ஆசிய-பசிபிக் நாடுகளை உள்ளடக்கிய துணை இராணுவ உடன்படிக்கைகளும் மற்றும் நேட்டோ கூட்டணியும் 'சகோதரர்களின் இசைக்குழு' அல்ல, மாறாக ஏகாதிபத்திய திருடர்கள் மற்றும் ஈவிரக்கமற்ற போட்டியாளர்களின் கூடாரமாகும். ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டிகளின் தர்க்கம், இன்றைய தற்காலிக கூட்டாளிகளுக்கு இடையே கடுமையான மோதல்களுக்கு இட்டுச் செல்வது வெகு தொலைவில் இல்லை. சான்றாக அமெரிக்காவுக்கும் ஜேர்மனிக்கும் இடையே இருந்ததைப் போல, கடந்த கால விரோதங்கள் தவிர்க்கவியலாமல் மீண்டும் எழும்.
- தொழிலாள வர்க்கத்தால் இந்த நிகழ்ச்சிப்போக்கு தடுக்கப்படாவிட்டால், இந்த செயல்முறையின் விளைவு, கடந்த கால வன்முறையையே விஞ்சுமளவுக்கு ஓர் உலகளாவிய பேரழிவாக இருக்கும். இந்தப் போர் வெடித்ததில் இருந்தே, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அரசியல் விவாதங்களில் இயல்பாக்கப்பட்டுள்ளது.
- போரைத் தூண்டுவதில் அமெரிக்க-நேட்டோ கூட்டணி மையப் பொறுப்பு வகிக்கிறது என்றாலும், பெப்ரவரி 24, 2022 இல் உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பானது, டிசம்பர் 1991 இல் சோவியத் ஒன்றிய கலைப்புக்குப் பின்னர் அதிகாரத்திற்கு வந்த ரஷ்யாவின் ஆளும் முதலாளித்துவ தன்னலக்குழுவின் சார்பாக செயல்படும், புட்டின் ஆட்சியால் மேற்கொள்ளப்பட்ட ஒரு பிற்போக்குத்தனமான மற்றும் விரக்தியான நடவடிக்கையாகும்.
- ஜாரிசம் மற்றும் நவ-ஸ்ராலினிச தேசிய பேரினவாதத்தின் பிற்போக்குத்தனமான மரபியத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தப் போரை நியாயப்படுத்துவதற்கான புட்டின் ஆட்சியின் முயற்சிகள், ஓர் இழிவான வரலாற்று பின்நகர்வைப் பிரதிபலிக்கிறது. அக்டோபர் புரட்சிக்கு ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் 1922 இல் ஸ்தாபிக்கப்பட்ட சோவியத் சோசலிச குடியரசுகளின் தொலைநோக்கு ஜனநாயகக் கொள்கைகளை முழுமையாக மறுத்ததன் விளைவு தான் புட்டின் ஆட்சி என்பது உண்மையில்லை என்றால், நேட்டோ ஆத்திரமூட்டல்கள் வெற்றி அடைந்திருக்காது. லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி தலைமையிலான போல்ஷிவிக் அரசாங்கம், சோவியத் ஒன்றியத்தை ஒரு தன்னார்வ ஒன்றியமாக நிறுவியது, அனைத்து தேசிய மற்றும் இனக் குழுக்களின் ஜனநாயக சமத்துவத்திற்கு அது அரசியலமைப்புரீதியில் உறுதியளித்தது. ரஷ்யாவில் பெரும் பிரயத்தனத்துடன் தேசிய பேரினவாதம் ஊக்குவிக்கப்பட்டதால் —உக்ரேனில் பகிரங்கமாக அதன் பாசிச எதிர்தரப்பைக் காணும் நிலையில்— பாதிக்கப்பட்ட அவ்விரு நாடுகளின் பெருந்திரளான மக்களுக்கு இடையே சகோதரத்துவ மோதலுக்கு கருத்தியல் ரீதியான முன்நிபந்தனைகளை அது உருவாக்கியது.
- உக்ரேனில் அமெரிக்க-நேட்டோ போரை அதன் இன்றியமையா வரலாற்று முன்னோக்கில் ஆராயும் போது, அது முதலாளித்துவத்தையும் அதில் உட்பொதிந்துள்ள தேசிய-அரசு அமைப்பு முறையையும் முடிவுக்குக் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை மீண்டும் நிரூபிக்கிறது. உண்மையில், உற்பத்தி சாதனங்களின் முதலாளித்துவ தனிச் சொத்துடைமை மற்றும் எதிர்விரோத தேசிய அரசுகளுக்குள் உலகின் மறுபங்கீடு என்பது மனிதகுலத்தின் முற்போக்கான வளர்ச்சியுடன், உயிர்பிழைப்புக்குமே கூட, அபாயகரமாக பொருத்தமின்றி இருப்பதற்கான ஒரு வெளிப்பாடாக இந்தப் போர் அமைகிறது.
- முந்தைய இந்த அனைத்து புள்ளிகளில் இருந்தும் பின்வரும் இறுதி முடிவுகள் வருகின்றன: போருக்கு எதிரான போராட்டமானது, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தை உருவாக்குவதன் மூலமும், உலக சோசலிசப் புரட்சி மூலம் முதலாளித்துவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலமும் முன்நகர்கிறது.
- இந்த உலக வரலாற்று கடமையைச் செய்து முடிப்பதற்கு, தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு புதிய புரட்சிகரக் கட்சியை அபிவிருத்தி செய்வது அவசியமாகும். ஆனால் இந்த பணியைப் புதிதாக ஆரம்பத்திலிருந்து செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்தப் புரட்சிகரக் கட்சியின் அடித்தளங்கள், ட்ரொட்ஸ்கியால் நிறுவப்பட்ட நான்காம் அகிலத்தில், இன்று அனைத்துலகக் குழு தலைமையில் ஏற்கனவே உள்ளன, அதன் பணி ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஒரு நூற்றாண்டு கால மகத்தான வரலாற்று அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
இன்றைய இந்த சர்வதேச பேரணி, தொழிலாள வர்க்க சக்தியின் சோசலிச புரட்சி முன்னோக்கை மற்றும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது. ஆயினும், இது முதன்மையாக உலக இளைஞர்களை நோக்கி திரும்பி உள்ளது. இது எமது வேலைத்திட்டத்திற்கு முரணானது அல்ல. மாறாக, இது உலக சோசலிசம் என்ற முன்னோக்கின் ஒரு முக்கியமான மற்றும் தவிர்க்க முடியாத ஓர் அம்சமாகும். தொழிலாள வர்க்கத்தின் சக்தி வாய்ந்த மற்றும் சமூக ரீதியில் தீர்க்கமான நடவடிக்கை இல்லாமல் இளைஞர்களால் உலகை மாற்ற முடியாது. ஆனால் இளைஞர்களின் போராடும் ஆற்றலும், உற்சாகமும் மற்றும் இலட்சியமும் இல்லாமல் ஓர் உண்மையான புரட்சிகர இயக்கம் ஒருபோதும் இருந்ததில்லை, இருக்கவும் முடியாது.
உலக மக்கள்தொகை சமீபத்தில் 8 பில்லியனைக் கடந்துள்ளது. இந்தப் பில்லியன்களில் பெரும்பான்மையினர் இளைஞர்கள், அவர்களில் பெரும்பாலோர் பதின்ம வயதிலும் இருபதுகளிலும் உள்ளனர். சுரண்டல், வறுமை, நோய், பாசிசம் மற்றும் போரைத் தவிர முதலாளித்துவத்திடம் அவர்களுக்கு என்ன வழங்க உள்ளது?
இளைஞர்கள் அவர்களின் எதிர்காலத்திற்காக போராட வேண்டும் என இன்று பல பேச்சாளர்கள் கூறினார்கள். இது மிகவும் நேரடி அர்த்தத்தில் உண்மை தான். ஏனென்றால் போர், பெருந்தொற்று மற்றும் காலநிலை மாற்றம் அனைத்தும் எதிர்காலத்திற்கான உரிமையை முற்றிலுமாக மறுப்பதைக் குறிக்கின்றன. உயிர் வாழ்க்கை இல்லையென்றால் எதிர்காலம் இல்லை.
ஆனால் ஓர் எதிர்காலத்திற்கான இளைஞர்களின் உரிமையைப் பறிக்க வேண்டுமானால், ஆளும் வர்க்கம் முதலில் அவர்களின் நம்பிக்கையைப் பறிக்க வேண்டும். அதாவது, முதலாளித்துவ உயரடுக்குகள் —அரசாங்கங்களையும் ஊடகங்களையும் கட்டுப்படுத்தும் இவை— உலகத்தை மாற்ற இளைஞர்கள் செய்யக்கூடியது எதுவும் இல்லை என்றும், இன்று நிலவும் அநீதிகள் என்றென்றும் இருக்கும் என்றும், மனித அவலத்திற்கான காரணங்கள் உண்மையில் சமூகப் போக்கைத் தீர்மானிக்கும் பொருளாதார உறவுகள் மற்றும் நலன்களில் வேரூன்றி இல்லை மாறாக மனித உயிர்களின் இயல்பிலேயும் ஏதோவிதமான மாய ஆன்மாவிலும் வேரூன்றி உள்ளன என்றும் அவர்களை நம்ப வைக்க அவற்றால் ஆன அனைத்தையும் செய்கின்றன.
ட்ரொட்ஸ்கிச இயக்கம் மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பை எதிர்ப்பவர்கள் —குறிப்பாக செல்வ செழிப்பான நடுத்தர வர்க்க போலி-இடது கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருப்பவர்கள்— IYSSE மிக உயர்ந்த தத்துவார்த்த மட்டத்தில் அதன் பணியை நடத்துகிறது என்று கூறுவார்கள். சிக்கலான வரலாற்று மேற்கோள்கள் இல்லாமல், தீவிரமாக ஒலிக்கும் வார்த்தைகள் மற்றும் முழக்கங்களுக்குள் ஒருவரைக் கட்டுப்படுத்தி வைப்பதே நல்லது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் பிற்போக்குத்தனமான திட்டநிரல் மற்றும் சிடுமூஞ்சித்தனத்தால் உந்தப்பட்ட அத்தகைய விமர்சனங்களை நாம் அவமதிப்புடன் நிராகரிக்கிறோம்.
இளைஞர்கள் உலகை மாற்ற வேண்டுமானால், அவர்கள் அதை புரிந்து கொள்ள வேண்டும். ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், 1924 இல், 'இளைஞர்களே, அரசியலைப் படியுங்கள்!' என்ற தலைப்பில் லியோன் ட்ரொட்ஸ்கி எழுதிய ஒரு கட்டுரையில் பின்வருமாறு எழுதினார்:
இளைஞர்கள் சமூகத்தில் வாழ்கிறார்கள், அவர்கள் திட்டவட்டமான நிலைமைகளில் பிறந்தவர்கள், அவர்கள் குறிப்பிட்ட வரலாற்று சூழ்நிலைகளில் வாழ்க்கையின் அரங்கில் முன்னேறுகிறார்கள், இந்த இளைஞர்கள் அவர்களைச் சுற்றியுள்ள உலகிற்கு எவ்வளவு விரைவில் தங்கள் கண்களைத் திறந்து வைக்கிறார்களோ, எந்தளவுக்கு சிறப்பாகவும் மிகவும் ஆழமாகவும் அவர்கள் வாழும் நிலைமைகளைக் புரிந்து கொள்கிறார்களோ, அந்தளவுக்கு வாழ்க்கையினூடாக அவர்கள் எளிதாக முன்நகர்வது நிரூபணமாகும்.
இந்த வார்த்தைகள் தற்போதைய சூழ்நிலைக்குப் பொருத்தமாக உள்ளன. உலகை அதன் இன்றைய பிற்போக்குப் பாதையில் இருந்து, சோசலிசத்தின் பாதைக்கு மாற்றுவது ஒரு மகத்தான வரலாற்றுப் பணியாகும். அதை எட்டுவதற்கு அரசியலை —குறிப்பாக, மார்க்சிச வரலாற்று சடவாத கருத்துருவை— தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியம், இது முதலாளித்துவ அமைப்புமுறை மற்றும் வர்க்கப் போராட்டத்தை ஆளுகின்ற விதிகளை விஞ்ஞானபூர்வமாக ஆய்வு செய்வதைச் சாத்தியமாக்குகிறது.
இளைஞர்களின் புரட்சிகரமான அறிவொளிக்கு அஞ்சும் ஆளும் வர்க்கம், இளைஞர்களை மார்க்சிசம் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்துடனான எந்தத் தொடர்பில் இருந்தும் விலக்கி வைக்க அதன் அதிகாரத்தில் அனைத்தையும் செய்கிறது. அது வரலாற்று அறியாமை, விஞ்ஞான விரோதம், புறநிலை உண்மைகள் மீதான அவமதிப்பு மற்றும் எண்ணற்ற கலாச்சார பிற்போக்கு வடிவங்களை ஊக்குவிக்கிறது. ஏகாதிபத்திய இராணுவவாதத்தைப் பெருமைப்படுத்துவது, விமர்சனபூர்வ சமூக சிந்தனையால் கீழறுக்கப்படுகிறது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஏகாதிபத்தியப் போர்களுக்கான பீரங்கித் தீவனமாக இளைஞர்களை கீழ்நிலைப்படுத்துவதற்கு, உங்கள் வேலை “ஏன் என்று பகுத்தாராய்வது அல்ல … மாறாக சொல்வதைச் செய்து விட்டு செத்து போவது” என்ற பழைய இராணுவக் கட்டளையின் அடிப்படையில், அவர்களின் கண்மூடித்தனமான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
ஆனால் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்போ, இளைஞர்களின் மற்றும் உலகெங்கிலுமான உழைக்கும் மக்களின் எதிர்காலத்திற்கான போராட்டத்தில், இளைஞர்களுக்கு தேவைப்படும் அரசியல் கல்வியை வழங்குவதில் உறுதியாக உள்ளது.
இந்த பேரணியின் முடிவில், நீங்கள் IYSSE இல் இணைவதற்கும், உக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வர ஒரு பாரிய வெகுஜன இயக்கத்தைக் கட்டியெழுப்பவும், உலக சோசலிச புரட்சிக்கான போராட்டத்தை முன்னெடுக்கவும் முடிவெடுக்குமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
