மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
உருக்குலைந்த கிரிப்டோ கரன்சி சந்தை FTX இன் நிறுவனர் சாம் பேங்க்மன்-ஃபிரைட், பஹாமாஸில் இருந்து தானாக முன்வந்து வெளியேறிய பின்னர், நேற்று ஒரு மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரது 32 பில்லியன் டாலர் திட்டம் வெடித்து சிதறியதில் இருந்து எழும் பல குற்றகரமான குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
மத்திய வழக்குத்தொடுனர் நிக்கோலஸ் ரூஸ் அந்த நீதிமன்றத்தில் கூறுகையில், பேங்க்மன்-ஃபிரைட் 'பாரிய விகிதாசாரத்தில் ஒரு மோசடியை செய்துள்ளதாகவும்', அரசிடம் டஜன் கணக்கான சாட்சியங்கள் இருப்பதாகவும், மறைகுறியீடு செய்யப்பட்ட குறுஞ்சேதிகள் மற்றும் 'பத்தாயிரக் கணக்கான' ஆவணங்கள் ஆதாரமாக உள்ளதாகவும் கூறினார்.
பேங்க்மன்-ஃபிரைடின் கிரிப்டோ வர்த்தக நிறுவனமான, 2017 இல் அவர் நிறுவிய, அலமீடா ரிசேர்ச் (Alameda Research) நிறுவனத்திற்கு, பெரிய மற்றும் சிறிய கிரிப்டோ, நிதிய பத்திரங்களை கையாழும் FTX முதலீட்டாளர்கள் வழங்கிய நிதிகளைப் பயன்படுத்தியதில் இருந்து அந்தக் குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன.
அந்த நிறுவனத்தின் பெயரே என்ன பின்தொடர்ந்து வரவுள்ளது என்பதைக் குறிப்பிடுகிறது. பேங்க்மன்-ஃபிரைட், 2021 பேட்டி ஒன்றில் கூறும் போது, “நாங்கள் நாடு கடந்து கிரிப்டோகரன்சி பிட்காய்ன் பரிமாற்ற வியாபாரம் செய்கிறோம்' என்று குறிப்பிட்டால், யாரும் வங்கிக் கணக்கு தர மாட்டார்கள் ஆனால் 'ஒவ்வொருவரும் ஆராய்ச்சி நிறுவனத்தை விரும்புகிறார்கள்' என்பதால் நாங்கள் 'ஆராய்ச்சி' என்பதை சேர்த்துக் கொண்டோம் என்றார்.
நவம்பரில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் வெளியான ஒரு கட்டுரையின் தகவல்படி, FTX க்கு வழங்கப்பட்ட பணத்தில் பாதிக்கும் மேல் அலமீடாவுக்குக் கடனாக கொடுக்கப்பட்டது.
ஆனால் முக்கிய பிரச்சினையை மூடிமறைப்பதே இந்தக் காட்சிப்படுத்தலின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக உள்ளது: அதாவது, பேங்க்மன்-ஃபிரைடின் செயல்பாட்டை எப்படி கண்காணிக்கப்படாமல் நடத்த முடிந்தது?
அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை அவர் மறைக்க முயன்றார் என்பதல்ல. கடந்த ஏப்ரலில், புளூம்பேர்க் உடனான ஒரு நேர்காணலில், அவருடைய செயல்பாட்டின் வழிமுறைகளை அவர் எடுத்துரைத்த பின்னர், நேர்காணல் செய்தவர் அதுபற்றிக் கூறுகையில், அவர் என்ன விவரித்தாரோ அடிப்படையில் அதுவொரு மோசடியான திட்டமாகும். அதில் புதிய பணம் அதனுள் வந்து கொண்டிருக்கும் வரையில் பணம் சம்பாதிக்கப்படுகிறது என்றார்.
இது 'மனச்சோர்வு தரக்கூடிய அளவு செல்லுபடியாகும்' ஒரு 'ஓரளவு நியாயமான பதில்' என்று பேங்க்மன்-ஃபிரைட் பதிலளித்தார். ஆனால் இப்படி ஒப்புதல்கள் வழங்கப்பட்ட போதும், நிதியியல், ஊடக மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் உயர்மட்டங்களில் அவர் தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டார், ஏனென்றால் குடியரசுக் கட்சிக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் பணத்தை அவர் வாரியிறைத்துக் கொண்டிருந்தார்.
பத்திரங்கள் பரிவர்த்தனை ஆணையம் போன்ற நிதி அமைப்பை கண்காணிக்கும் குழுக்கள் என்று கூறப்படும் அமைப்புகளுக்கு, அவர் செயல்பாடுகள் மீது கவனம் செலுத்த சற்று நேரம் கூட கிடைக்கவில்லை.
கடந்த வாரம் பைனான்சியல் டைம்ஸில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கமைக்கும் வங்கியின் பொருளாதார ஆலோசகரும் ஆராய்ச்சித் தலைவருமான ஹியூன் சாங் ஷின், அந்த வங்கி நடத்திய ஆராய்ச்சியின் அடிப்படையில் கிரிப்டோ சந்தையின் இன்றியமையா வழிமுறைகளை விளக்கி இருந்தார்.
FTX போன்ற இடைத்தரகு அமைப்புகள் 'பாரம்பரிய நிதி அமைப்பில் இருந்து கிரிப்டோ உலகிற்குச் செல்லும் நுழைவாயிலாக ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை புதிய முதலீட்டாளர்களின் ஓட்டத்தை ஈர்க்கின்றன, இது தான் இத்தகைய ஊக இயக்கவியலை உயிரோட்டத்துடன் வைத்திருக்கும் ஆக்சிஜன்,” என்று ஷின் குறிப்பிட்டார். புதிய முதலீட்டாளர்களை ஈர்ப்பது தான் 'கிரிப்டோவின் உயிர்வாழ்வுக்கான திறவுகோலாகும்'. மத்தியத்துவப்படுத்தப்பட்ட இடைத்தரகு அமைப்புகள் 'இந்த அமைப்பை தாங்கிப்பிடிப்பதற்கு மிகவும் முக்கியமானவை.'
அந்த ஆசிரியர் அதைக் குறிப்பிடவில்லை என்றாலும், சமூகத்தின் 'உயர்' மட்டங்களில் இருந்து பேங்க்மன்-ஃபிரைட்டை மற்றும் கிரிப்டோவை மிகைப்படுத்துவதும் அதேயளவுக்கு முக்கியமானவையாக உள்ளன.
கிரிப்டோவின் செயல்பாடுகளைக் குறித்த ஷின்னின் விவரிப்பு, 2008 நெருக்கடி வெடித்ததில் இருந்து கடந்த 14 ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ள நிதியியல் அமைப்பு முறைக்கும் கூட மிகப் பரந்த விதத்தில் பொருந்தும்.
கிரிப்டோ புதிய பண வரவைச் சார்ந்திருப்பதைப் போலவே, ஒட்டுமொத்த சர்வதேச நிதி அமைப்பும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் மற்றும் பிற முக்கிய மத்திய வங்கிகள் வழங்கும் பண வரவைச் சார்ந்துள்ளது.
இது தான் 'பணத்தைப் புழக்கத்தில் விடும்' திட்டத்தின் (quantitative easing) சாராம்சமாக இருந்தது. அதாவது, அரசு பத்திரங்கள் மற்றும் பிற நிதியியல் சொத்துக்களை விலைக்கு வாங்கியதன் மூலம் வட்டி விகிதங்கள் வரலாற்றில் இல்லாதளவிற்கு மிகவும் குறைக்கப்பட்டன, இது நிதியியல் தன்னலக்குழுவின் ஊகவணிகங்களுக்கு நிதி வழங்கும் வகையில் அடிப்படையில் அவற்றுக்கு சுதந்திரமாக பணத்தைக் கொண்டு சேர்த்தது.
கிரிப்டோ பெரும்பாலும் 'தனக்குள் தானே சுழல்வது' (self-referential) என்று ஷின் குறிப்பிட்டார், அதாவது அதன் செயல்பாடுகள் 'உறுதியான பொருளாதார நடவடிக்கையைச் சிறிதளவே சார்ந்திருப்பதுடன்' 'மற்ற வகை கிரிப்டோவில் வர்த்தகம் செய்வதை' உள்ளடக்கி இருந்தது. நிதியியல் அமைப்பு முறையின் 'வழமையான' செயல்பாடுகளுக்கும் இதற்கும் இடையிலான வித்தியாசத்தை அவர் காட்ட முயன்றார்.
ஆனால் இந்த வித்தியாசம் தவறு, ஏனென்றால் இந்த பரந்த நிதி அமைப்புமுறையின் பெரும்பான்மை பரிவர்த்தனைகளும் தனக்குள் தானே சுழல்வது (self-referential) தான். இதில் வங்கிகள், தனியார் முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் பிற நிதி அமைப்புகளுக்கு இடையிலான உடன்படிக்கைகள் சம்பந்தப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து பெரும் இலாபங்களும், கொழுத்த கட்டணங்களும் திரட்டப்படுகின்றன.
ஒரு கையகப்படுத்துதலுக்கோ அல்லது கடன் பணத்தில் ஒன்றை கொள்முதல் செய்யும் நடவடிக்கையிலோ நிதி வழங்கப்படும் போது, அல்லது வங்கிகளில் இருந்து கடன் வாங்கப்பட்டப் பணத்தில் பங்குகள் விற்றல்-வாங்கல் நடக்கும் போது (இத்தகைய செயல்பாடுகளில் ஆப்பிள் நிறுவனம் முன்னணியில் உள்ளது) ஒரு அணுவளவும் உண்மையான மதிப்பும் உருவாக்கப்படாது மிகப் பெரியளவில் இலாபங்கள் ஈட்டப்படுகின்றன.
கிரிப்டோ நெருக்கடியைச் சுருக்கமாக தொகுத்துரைத்த ஷின், 'ஒரு தொழில்துறை வெறுமனே நம்பிக்கையின் அடித்தளத்தில் மட்டும் தங்கியிருந்தால் என்ன நடக்கும் என்பதை இப்போது நாம் பார்த்து வருகிறோம்,' என்று நிறைவு செய்தார். ஆனால் இந்த விளக்கம் கிரிப்டோவையும் கடந்து செல்கிறது.
உலகளாவிய நிதி அமைப்புமுறை அமெரிக்க டாலர் மீதும், 'நம்பிக்கையின் அடித்தளத்தின்' மீதும் தங்கி உள்ளது, இந்த 'நம்பிக்கையின் அடித்தளம்' என்பது மதிப்பை உள்ளடக்கியிருப்பதை (store of value) பிரதிநிதித்துவம் செய்கிறது. ஆனால் இந்த நம்பிக்கையும் தனக்குள்தானே சுழல்வது தான். டாலர் தான் மதிப்பை உள்ளடக்கியிருப்பதாக மதிக்கப்படுகிறது, ஏனென்றால் வர்த்தக மற்றும் நிதியியல் உடன்படிக்கைகளில் அது தான் கேட்கப்படுகிறது. அது மதிப்பை உள்ளடக்கியிருப்பதாக கருதப்படுவதாலேயே இந்த அந்தஸ்தை அது பிடித்து விடுகிறது.
24 ட்ரில்லியன் டாலர் அமெரிக்க கருவூலச் சந்தை முடக்கப்பட்ட மார்ச் 2020 நெருக்கடியில் ஏற்பட்டதைப் போல, அந்த நம்பிக்கை அசைக்கப்படும் போது, இந்த ஒட்டுமொத்த உலகளாவிய நிதி அமைப்புமுறையின் ஸ்திரத்தன்மையும் கேள்விக்குள்ளாகி விடுகிறது.
அப்போது பெடரல் வங்கியும் பிற மத்திய வங்கிகளும் நிதியியல் அமைப்பு முறைக்குள் கூடுதலாக ட்ரில்லியன் கணக்கான டாலர்களைச் செலுத்துவதென்று முடிவெடுத்ததால் மட்டுமே ஒரு பொறிவு தடுக்கப்பட்டது. ஆனால் அந்த நெருக்கடிக்கு இட்டுச் சென்ற அடித்தளத்திலுள்ள பிரச்சினைகளில் எதுவுமே தீர்க்கப்படவில்லை.
வட்டி விகிதங்களை உயர்த்துவதன் மூலம் நாணயக் கொள்கையை இறுக்குவதற்கான பெடரல் மற்றும் பிற மத்திய வங்கிகளின் முனைவு காரணமாக, இப்போது ஒரு புதிய நெருக்கடி உருவாகிக் கொண்டிருக்கிறது. கிரிப்டோ பொறிவும், செப்டம்பர்-அக்டோபரில் பிரிட்டன் ஓய்வூதிய நிதி நெருக்கடியும் இதன் ஆரம்ப வெளிப்பாடுகளாகும்.
'பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுகிறோம்' என்ற பெயரில் மத்திய வங்கிகள் இந்த மாற்றத்தைச் செய்து வருகின்றன. ஆனால் விலைகளைக் குறைய செய்வதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
மாறாக, இது கொள்ளையடிக்கும் நிதி மூலதனத்திற்கு முன்னிருக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலுக்கான (அதாவது தொழிலாள வர்க்கத்திற்கான) விடையிறுப்பாகும்.
நான்கு தசாப்தங்களில் இல்லாத மிக உயர்ந்த பணவீக்கத்தைச் சமாளிக்கும் விதமான கூலி உயர்வு கோரிக்கைகளுக்கு ஆதரவான உலகளாவிய மேலெழுச்சியை ஒடுக்க, அது மந்தநிலை நிலைமைகளை உருவாக்க நோக்கம் கொண்டுள்ளது. இந்த உயர்ந்த பணவீக்கமானது, மிகவும் தளர்த்தப்பட்ட நாணய கொள்கைகள், அரசாங்கங்கள் கோவிட்டை கையாள மறுத்தமை, உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க-நேட்டோ போர், மிகப் பெரிய எரிசக்தி பெருநிறுவனங்களும் மற்றும் உணவுத்துறை பெருநிறுவனங்களும் இலாபவெறியினதும் மற்றும் ஊகவணிகங்களில் ஈடுபடுவதன் விளைவாகும்.
நீண்டகால நிதித்துறை கட்டுரையாளர் ஜோன் பிளெண்டர் இந்த வாரம் பைனான்சியல் டைம்ஸில் எழுதுகையில், முந்தைய மிகவும் தளர்வான கொள்கையில் இருந்து மத்திய வங்கிகள் மாறியிருப்பது 'உலகளாவிய நிதிய அமைப்புமுறை மீது கடுமையான சோதனையைச் சுமத்தி' வருகிறது, 2007-09 நெருக்கடிக்குப் பின்னர் நிதிய அமைப்புமுறையின் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தீவிர மாற்றங்களின் விளைவாக எதிர்காலத்தில் என்ன நடக்கலாம் என்பதற்கு பிரிட்டன் ஓய்வுதிய நெருக்கடி 'ஒரு முன்கூட்டிய எச்சரிக்கையை வழங்கியது,' என்று குறிப்பிட்டார்.
கிரிப்டோ பொறிவு மீது பெருமளவு கவலை தெரிவிக்கப்பட்டு வருகிறது. மற்றொரு பைனான்சியல் டைம்ஸ் கட்டுரையாளர் ஜெமிமா கெல்லி இந்த வாரம் எழுதிய போது, “யாரும் எதிர்பார்த்ததை விட மிக அதிக கடனால் கிரிப்டோ நாணய அமைப்பு பாதிப்பிற்குள்ளானது,” என்றார். இந்த குணாம்சப்படுத்தலும் வெறும் கிரிப்டோவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நிதியியல் அமைப்பு முறைக்கும் பொருந்தும்.
'பல கிரிப்டோ பங்குச் சந்தைகள் மற்றும் இயங்குதளங்களின்' பொறிவு, 'கிரிப்டோவுக்கு எரியூட்டும் முற்றிலும் சட்ட நெறிமுறையற்றதன்மையை நாம் முதல்முறையாக நெருக்கமாக கவனிக்கச் செய்கிறது” என்றவர் எழுதினார்.
ஆனால் வெறும் கிரிப்டோ மட்டுமல்ல. திருமதி. கெல்லி வேண்டுமானால் எப்படியோ அதை மறந்து விட்டிருக்கலாம். ஆனால் அமெரிக்க நிதிய அமைப்புமுறையானது நலன்கள் மற்றும் வெளிப்படையான குற்றவியல்தன்மையின் 'பாம்புப்புற்று' என்பதை 2008 நெருக்கடி பற்றிய 2011 அமெரிக்க செனட் அறிக்கை வெளிப்படுத்தியது. அப்போதிருந்து மட்டுப்படுத்தப்பட்ட நெறிமுறைகள் இருந்தாலும், அடிப்படை எதுவும் மாறவில்லை.
இந்த கிரிப்டோ பொறிவு ஒரு எச்சரிக்கை அறிகுறியாக இருக்கும் நிலையில் புதிய நிதிய புயல்கள் திரண்டு வருகையில் அரசியலின் அடிப்படை விதிகளில் ஒன்றைப் புரிந்து கொள்வது அத்தியாவசியமானதாகும்: அதுவாவது, ஒவ்வொரு நெருக்கடியிலும், பிரதான வர்க்கங்களான தொழிலாள வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கமும் அவற்றின் அடிப்படை நலன்களுக்கு இணங்க அணித்திரள்கின்றன.
ஆளும் நிதிய தன்னலக்குழுவின் வேலைத்திட்டம் தெளிவாக உள்ளது. அதன் பரந்த அளவிலான நிதிச் சொத்துக்கள் அவற்றில் நிஜமான மதிப்பைக் கொண்டிருக்கவில்லை. அவை தொழிலாள வர்க்கத்தின் உழைப்பு சக்தியின் சுரண்டலில் இருந்து உறிஞ்சப்படும் நிஜமான சொத்துக்கள் மீது உரிமை கோருகின்றன. ஆகவே இந்த ஊக மூலதன குவியலுக்கு மதிப்பைக் கொண்டு வர அந்தச் சுரண்டலைத் தீவிரப்படுத்தி ஆக வேண்டும்.
அதன் காவல்கார்களான தொழிற்சங்க எந்திரங்கள் மூலமாக இதை அடைய முடியாது என்றால், பின்னர் அது முதலாளித்துவ அரசின் இரும்பு முஷ்டியால் நிறைவேற்றப்பட்டாக வேண்டும். இதை ஏற்கனவே இரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்த நடவடிக்கைக்குத் தடை விதிப்பதற்கான அமெரிக்க காங்கிரஸ் சபையின் முடிவிலும், பிரிட்டிஷ் சுகாதாரத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களில் துருப்புகளைப் பயன்படுத்தியதிலும் பார்க்க முடிந்தது.
தொழிலாள வர்க்கம் அதன் மிக அடிப்படையான நலன்களைப் பாதுகாப்பதற்காக போராட்டத்திற்குள் தள்ளப்பட்டு வருகிறது.
ஆனால் தொழிலாள வர்க்கம், ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் மூலமும் அதற்கு தலைமை கொடுக்க தேவைப்படும் புரட்சிகர கட்சியைக் கட்டமைப்பதன் மூலமும், நிதியியல் தன்னலக்குழு அதன் உந்துசக்தியாக பயன்படுத்தும் இந்த முதலாளித்துவ அமைப்புமுறையை முடிவு கட்டுவதற்குக் குறைவான அதன் பணி வேறொன்றுமில்லை என்பதையும், பணயத்தில் என்ன இருக்கிறது என்பதையும் எந்தளவுக்கு நனவுபூர்வமாக உணர்கிறதோ அந்தளவுக்கு மட்டுமே அது இதை வெற்றிகரமாக நடத்தி முடிக்க முடியும்.
