மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஜனவரி 1, 2023 அன்று, உக்ரேனிய பாராளுமன்றம், இராணுவத் தலைமை மற்றும் பல்வேறு உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் உக்ரேனிய பாசிசத்தின் தலைவரான ஸ்டீபன் பண்டேராவின் 114 வது பிறந்தநாளைக் கொண்டாடினர். சில மணிநேரங்களுக்கு முன்னர், ரஷ்ய இராணுவத் தளத்தின் மீது உக்ரேனியப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில், குறைந்தது 89 ரஷ்ய சிப்பாய்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலோர் புதிய ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள்.
'இன ரீதியாக தூய்மையான' உக்ரேனிய அரசு என்ற தனது இலக்கை அடைவதற்காக, பண்டேரா முதலில் ஜேர்மனியுடனும் பின்னர் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும் தன்னை இணைத்துக் கொண்டார். 1930 களில் அவர் தனிப்பட்ட முறையில் போலந்து அரசியல்வாதிகளின் பல படுகொலைகளில் ஈடுபட்டார். இரண்டாம் உலகப் போரின் போது, பண்டேரா தலைமையிலான உக்ரேனிய தேசியவாதிகளின் அமைப்பு (OUN-B) மற்றும் அதன் துணை இராணுவப் பிரிவான உக்ரேனிய கிளர்ச்சி இராணுவம் (UPA), நாஜி ஆதரவுடன் நூறாயிரக்கணக்கான யூதர்களை இப்போதைய உக்ரேன் மற்றும் போலந்தில் இனப்படுகொலை செய்தது. 1943-1944 இல், OUN-B மற்றும் UPA 70,000 முதல் 100,000 போலந்தினரை படுகொலை செய்தன. ஹிட்லரின் ஜேர்மனியின் தோல்வியை எதிர்கொண்ட OUN-B, போருக்குப் பிந்தைய காலம் முழுவதும், அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் ஒரு கூட்டணியை நோக்கி தன்னைத் திருப்பிக் கொண்டது.
இந்த பாசிச வெகுஜன கொலைகாரனின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், உக்ரேனிய நாடாளுமன்றம் (ராடா) ஞாயிற்றுக்கிழமை பண்டேராவின் உருவப்படத்திற்கு கீழே ஆயுதப்படைகளின் உச்ச தளபதியான வலேரி சலுஷ்னி இன் படத்தை வெளியிட்டு ட்வீட் செய்தது. பண்டேராவை மேற்கோள்காட்டி அந்த ட்வீட், 'உக்ரேனிய தேசியவாதத்தின் முழுமையான மற்றும் இறுதி வெற்றி, ரஷ்ய சாம்ராஜ்யம் இல்லாமல் போகும்போது வரும்.' உக்ரேனிய பாராளுமன்றத்தின் கணக்கு மேலும் கூறியது, “ரஷ்ய சாம்ராஜ்யத்திற்கு எதிரான போராட்டம் தற்போது நடந்து வருகிறது. ஸ்டீபன் பண்டேராவின் வழிகாட்டுதல்கள் ஆயுதப்படைகளின் தலைமை தளபதிக்கு நன்கு தெரியும்” என்கிறது.

சலுஷ்னி பண்டேராவின் நன்கு அறியப்பட்ட அபிமானியாவர். ரஷ்யாவிற்கு எதிராகப் போரை நடத்துவதற்கு நேட்டோவால் ஆயுதம் ஏந்திய ஒரு இராணுவத்தை மேற்பார்வையிடும் போது, அவர் தீவிர வலதுசாரி நினைவுச் சின்னங்களுடன் பல முறை புகைப்படம் எடுக்கப்பட்டார்.
எல்லாவற்றிற்கும் மேலாக போலந்தில் ஒரு பொது எதிர்ப்புக்குப் பின்னர், உக்ரேனிய பாராளுமன்றத்தின் ட்விட்டர் கணக்கு பண்டேராவைக் கொண்டாடும் இடுகையை விரைவாக நீக்கியது. குறிப்பாக, கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோவின் மையக் கோட்டையாக விளங்கும் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான போரில் முக்கிய பங்கைக் கொண்டுள்ள போலந்தின் சட்டம் மற்றும் நீதிக் கட்சியின் (PiS) ஆளும் தீவிர வலதுசாரி அரசாங்கம் அந்த ட்வீட்டை பகிரங்கமாக எதிர்த்தது.
PiS இன் மூத்த பிரதிநிதியான Radosław Fogiel எழுதினார், “போலந்து மக்களின் பாரிய படுகொலைக்கு காரணமான ஸ்டீபன் பண்டேராவின் நினைவேந்தல், உக்ரேனின் [பாராளுமன்றத்தின்] சுயவிவரத்தில் ஆட்சேபனைகளை எழுப்ப வேண்டும். மேலும் [இப்போது] உக்ரேனில் புதிய, உண்மையான மாவீரர்கள் உள்ளனர் என்பதை குறிப்பாக நண்பர்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும். போலந்தின் பிரதம மந்திரி Mateusz Morawiecki PAP இடம், வார்சோ 'பண்டேராவை எந்த மகிமைப்படுத்துதல் அல்லது நினைவுகூருவதல் போன்றவற்றுக்கு மிகவும் விமர்சன [நிலைப்பாட்டை] எடுத்தது' என்று கூறினார்.
தீவிர வலதுசாரி PiS கட்சியின் நட்புரீதியான எதிர்ப்பு, அதுவே வெளிப்படையாக நவபாசிச மற்றும் யூத-விரோதக் கூறுகளை உள்ளடக்கியது மற்றும் கூட்டணியில் உள்ளது, உக்ரேனில் பண்டேராவை வெளிப்படையாகக் கொண்டாடுவது அதன் தேசியவாத அடித்தளத்தை கோபப்படுத்தும் என்ற கவலையால் மட்டும் உந்துதல் பெற்றது. கிழக்கு ஐரோப்பாவின் மிகவும் இழிவான வெகுஜன கொலைகாரர்களில் ஒருவரை உக்ரேனிய அரசு பகிரங்கமாக மகிமைப்படுத்துவது, மோதலின் பாரிய சமூகப் பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள போலந்து மக்களின் பரந்த பிரிவினரிடையே அதன் எல்லைகளில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ பினாமிப் போரின் தன்மை பற்றி தீவிரமான கேள்விகளை எழுப்பும் என்பதையும் தெளிவாக அங்கீகரிக்கிறது.
போலந்திற்கு வெளியே, பண்டேராவின் வெளிப்படையான கொண்டாட்டம் முதலாளித்துவ பத்திரிகைகளில் காது கேளாத மௌனத்தை சந்தித்துள்ளது. தாராளவாத இஸ்ரேலிய செய்தித்தாள் ஹாரெட்ஸை தவிர, ஒரு பெரிய சர்வதேச செய்தித்தாள் கூட உக்ரேனிய பாராளுமன்றத்தின் ட்வீட் குறித்து செய்தி வெளியிடவில்லை.
ஹாரெட்ஸ் பண்டேராவின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஒரு நீண்ட வரலாற்றின் பின்னணியில் சரியாக வைத்துள்ளது, அதில் உக்ரேனிய அதிகாரிகள் அவரது குற்றங்களை மறுத்து OUN மற்றும் UPA ஐ ஊக்குவிக்க முயன்றனர். உக்ரேன் பாராளுமன்றத்தின் ட்வீட்டிற்கு பதிலளிக்கும் வகையில் இஸ்ரேலிய தூதரகம் எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை என்றும் அந்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேலிய தூதரகத்தின் ஒரு ஆதாரம் ஹாரெட்ஸிடம், 'நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை பலமுறை தெளிவுபடுத்தியுள்ளோம், ஆனால் வெளிப்படையாக எங்களால் எதுவும் செய்ய முடியாது, குறைந்தபட்சம் இந்த நேரத்தில்' என்று கூறியுள்ளது.
குறிப்பாக அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய பத்திரிகைகளில் உள்ள மௌனம் என்பது, இப்போது உக்ரேனில் நடத்தப்பட்டு வரும் ரஷ்யாவிற்கு எதிரான ஏகாதிபத்திய போர், நவீன பண்டேரா ஆதரவாளர்களுடனான கூட்டணியில்தான் நடைபெறுகிறது என்ற உண்மையை மறைக்க முற்படும் ஒரு போர் பிரச்சாரத்தின் தொடர்ச்சியாகும். கடந்த ஆண்டு, ஒரு ஒருங்கிணைந்த பிரச்சாரம் நவ-பாசிச அசோவ் பட்டாலியனுக்கு வெள்ளையடிக்கவும் அதை மகிமைப்படுத்தவும் முயன்றது. அதன் உறுப்பினர்களின் நவ-நாஜி நோக்குநிலை பற்றி எந்த விவாதமும் இல்லாமல் ஊடகங்களில் பலமுறை மேற்கோள் காட்டப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், எல்லாவற்றிற்கும் மேலாக, உக்ரேனிய பாராளுமன்றமும் உக்ரேனிய இராணுவத்தின் தலைவரும் பண்டேராவின் பிறந்தநாளைக் கொண்டாடுவது பற்றிய மௌனம், உக்ரேனிய பாசிசத்தை ஊக்குவிப்பதிலும் வலுப்படுத்துவதிலும் ஏகாதிபத்திய சக்திகளின் குற்றவியல் உடந்தையை காட்டிக் கொடுக்கிறது. உண்மையில், உக்ரேனில் பண்டேராவின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்கும் நபர்கள் அமெரிக்க இராணுவம் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்.
ஜனவரி 3 அன்று, உக்ரேனிய பாராளுமன்றத்தின் ட்விட்டர் கணக்கிலிருந்து பண்டேராவைக் கொண்டாடும் பதிவிற்கு மூன்று நாட்களுக்குப் பின்னர், சலுஷ்னி அமெரிக்க கூட்டுப் பணியாளர்களின் தலைவரான மார்க் மில்லியுடன் தனது முதல் நேரடி தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார். அழைப்பில், சலுஷ்னி அமெரிக்கா வழங்கிய வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு மில்லிக்கு நன்றி தெரிவித்தார். சலுஷ்னி தனது முகநூல் பக்கத்தில், “உக்ரேனுக்கு இராணுவ உதவி வழங்குவதில் ஜெனரல் மில்லியின் தலைமையை நான் மிகவும் பாராட்டுகிறேன். பரஸ்பர நம்பிக்கையும் ஒரு பொதுவான பார்வையும் நமது நாட்டின் அமைதியான நகரங்கள் மற்றும் கிராமங்களைப் பாதுகாக்க உக்ரேனிய இராணுவத்தின் திறனை அதிகரிக்க உதவுகின்றன, இது ஐரோப்பா முழுவதற்கும் பாதுகாப்புக்கான உத்தரவாதமாகும்.”
அமெரிக்க தொழிற்சங்க கூட்டமைப்பான AFL-CIO, அமெரிக்க அரசு எந்திரத்திற்கும் தீவிர வலதுசாரிக்கும் இடையிலான உறவை மறைப்பதில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டுள்ளது. அக்டோபரில், அமெரிக்க ஆசிரியர்களின் கூட்டமைப்பின் தலைவர் ராண்டி வைன்கார்டன், அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் போர் எந்திரத்தின் முகவராக உக்ரேனுக்கு விஜயம் செய்தார். தனது போர்-சார்பு சுற்றுப்பயணத்தின் போது, வைன்கார்டன் யூத மக்களுக்கு எதிரான OUN இன் கொடூரமான குற்றங்களை வேண்டுமென்றே மூடி மறைத்தார் மற்றும் எல்விவ் மேயரான ஆண்ட்ரி சடோவி ஐ சந்தித்தார், அவர் நீண்ட காலமாக உக்ரேனிய பாசிசத்தின் அரசு தலைமையிலான மறுவாழ்வில் முக்கிய நபராகவும் ஸ்டீபன் பண்டேராவின் வெளிப்படையான அபிமானியாகவும் உள்ளார்.
ஜனவரி 1 ஆம் தேதி, எல்விவ் நகரில் பண்டேராவின் 114 வது ஆண்டு விழாவின் உத்தியோகபூர்வ கொண்டாட்டத்திற்கு சடோவி தலைமை தாங்கினார், இது பாசிச தலைவரைக் கௌரவிக்கும் நாட்டின் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றாகும். ஆண்டுவிழாவைப் பற்றி தனது பேஸ்புக் பக்கத்தில், சடோவி, பண்டேராவின் வாழ்க்கை வரலாற்றை 'அடங்காமையின் கதை' என்று பாராட்டினார். அவர் எழுதினார், 'ஸ்டெபன் பண்டேராவின் முன்மாதிரியில் வளர்ந்த ஒரு புதிய தலைமுறை, புதிய மாஸ்கோ கூட்டத்துடன் போரில் இறங்கியுள்ளது. வெற்றியாளர்களின் தலைமுறை. மகிமை உக்ரேனுக்கு (ஸ்லாவா உக்ரேனி)!”
அமெரிக்க ஏகாதிபத்திய போர் எந்திரத்தின் அனைத்து பிரதிநிதிகளின் ஆழமான உறவுகள், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோ நடக்கும் போரின் உண்மையான தன்மையை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்துகிறது. நேட்டோவுடனான போருக்கான கைக்கூலியாக பல ஆண்டுகளாக உக்ரேனிய இராணுவம் மற்றும் அரசு மற்றும் தீவிர வலதுசாரிகளை கட்டியெழுப்பிய அவர்கள், தன்னலக்குழு புட்டின் ஆட்சியால் உக்ரேனின் பிற்போக்குத்தனமான ஆக்கிரமிப்பை வேண்டுமென்றே தூண்டினர். இப்போது, உக்ரேனிய அரசு மற்றும் இராணுவத்தில் பாசிச கூறுகளின் உதவியுடன், முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் பரந்த வளங்கள் மீது தங்கள் முழு கட்டுப்பாட்டையும் நிறுவுவதற்காக, இரு தரப்பிலும் ஏற்கனவே 200,000 உயிரிழப்புகளுக்கு வழிவகுத்த, மற்றும் அணுசக்தி பேரழிவால் மனிதகுலத்தை அச்சுறுத்தும் ஒரு போரை அதிகரிக்க அவர்கள் உறுதியாக உள்ளனர்.