சுவீடனும் பின்லாந்தும் அமெரிக்காவுடனான இருதரப்பு இராணுவ ஒப்பந்தங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

சுவீடனும் பின்லாந்தும் அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை (DCA) பூர்த்திசெய்வதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்கின்றன. இது ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கா/நேட்டோ போரில் இன்னும் ஒரு தீவிரமடையும் படியாகும். இரு நாடுகளின் பிராந்தியங்களிலும் அமெரிக்க துருப்புக்கள் தடையின்றி செயல்படவும், மற்றும் மேம்பட்ட தளங்களில் ஆயுதங்களையும் இதர உபகரணங்களையும் சேமித்து வைக்கவும் அனுமதிக்கவிருக்கும் இந்த ஒப்பந்தங்கள், ரஷ்யாவை ஒரு அரைக்-காலனி நிலைக்கு அடிபணிய வைப்பதற்கான மற்றும் அதன் இயற்கை வளங்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்கான அதன் உந்துதலில் வடக்கு போர் முனையைத் திறக்கும் தனது திறனை வாஷிங்டன் வலுப்படுத்தும்.  

சுவீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டெர்சன்  பின்லாந்து வெளியுறவு அமைச்சர் பெக்கா ஹாவிஸ்டோ (வலது) இனை ஹெல்சின்கியில் (இடது) சந்தித்தார் [Photo by Finnish Government/Dean Calma / IAEA /CC BY 2.0] [Photo by Finnish Government/Dean Calma / IAEA / CC BY 2.0]

பிரதமர் உல்ப் கிறிஸ்டெர்சன் தலைமையிலான சுவீடனின் வலதுசாரி கூட்டணி அரசாங்கம், வாஷிங்டனுடனான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்பான அறிவிப்பில், ஸ்டொக்ஹோம், “நெருக்கடி அல்லது போர் சூழ்நிலைகளில் அமெரிக்காவிடமிருந்து மிகவும் பயனுள்ள மற்றும் விரைவான ஆதரவைப் பெற” பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் (DCA) உதவும் என கூறியுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் போல் ஜோன்சன், Dagens Nyheter என்ற செய்திப் பத்திரிகையிடம், இந்த ஒப்பந்தம் சமாதான காலத்தில் சுவீடனில் உள்ள இராணுவத் தளங்களில் ஆயுதங்களை சேமித்து வைக்கவும், நெருக்கடியின் போது அவற்றை தயார்நிலையில் வைக்கவும் அமெரிக்காவை அனுமதிக்கும் என்றும், “நாங்கள் நெருங்கிய பங்காளிகளாக இருந்து தற்போது நேச நாடுகளாக முன்னேறி வருகிறோம்” என்றும் கூறினார்.

பின்லாந்திலும் இதேபோன்ற செயல்முறை நடந்து வருகிறது. அங்கு வெளியுறவு அமைச்சர் பெக்கா ஹாவிஸ்டோ, Iltalehti என்ற செய்திப் பத்திரிகையிடம் ஜனவரி 8 அன்று, இருதரப்பு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக கூறினார். ஹாவிஸ்டோவின் அமைச்சகம் ஒரு அறிக்கையில், “பாதுகாப்பு நிலைமை தேவைபட்டால், நெருக்கமான ஒத்துழைப்புக்கான நிலைமைகளை ஒப்பந்தம் உருவாக்கும்” என்று கூறியுள்ளது. வாஷிங்டன் “பின்லாந்து மற்றும் ஐரோப்பாவில் பாதுகாப்பிற்கு உறுதியளித்துள்ளது” எனக்குறிப்பிட்ட அவ்வறிக்கை, வாஷிங்டன் “வடக்கு ஐரோப்பாவில் மிக முக்கியமான வெளிப்புற செயற்பாட்டாளர்” என்று தொடர்ந்து கூறியது.

கடந்த மே மாதம் நேட்டோவில் சேர பின்லாந்தும் சுவீடனும் கூட்டாக விண்ணப்பித்துள்ளமை வடக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவுடனான அமெரிக்க தலைமையிலான இராணுவ மோதலின் ஒரு பெரிய விரிவாக்கத்தைக் குறிக்கிறது. பின்லாந்து ரஷ்யாவுடன் 1,300 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொண்டாலும், சுவீடன் பால்டிக் கடலின் வடமேற்கில் மூலோபாயரீதியான இடத்தில் அமைந்துள்ளது. இது செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கையும் மற்றும் ஸ்வீடிஷ் தீவான கோட்லாண்டிலிருந்து தென்கிழக்கே 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கலினின்கிராட் ரஷ்ய சுற்றுப்புறத்தையும் எளிதாக சென்று தாக்கும் வகையில் படைகளை நிலைநிறுத்தியுள்ளது. 

ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் உட்பட பெரும்பான்மையான நேட்டோ உறுப்பினர்கள், சுவீடனையும் பின்லாந்தையும் கூடிய விரைவில் நேட்டோவில் ஒருங்கிணைக்க உறுதியாக உள்ளனர் என்றாலும், குர்திஸ் விடுதலை இயக்கத்துடன் (PKK) தொடர்பு வைத்துள்ள குர்திஷ் தேசியவாதிகளை சுவீடன் பாதுகாப்பதாகக் கூறி, அவர்களின் விண்ணப்பங்களை அங்கீகரிக்க துருக்கி மறுத்துவிட்டது. ஒரு புதிய உறுப்பினரை அங்கீகரிக்க ஒட்டுமொத்த நேட்டோ உறுப்பினர்களின் ஒருமித்த ஒப்புதல் தேவையாகும். 

அமெரிக்க இராணுவப் படையினரை வெளிநாட்டு மண்ணில் நிலைநிறுத்துவதற்கு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் (DCAs) முக்கியமானவை. அவை, அமெரிக்க சிப்பாய்கள் உள்ளூர் இராணுவ சட்டங்களுக்கு எந்த அளவிற்கு உட்படுவார்கள் என்பதை ஒழுங்குபடுத்துகின்றன. வாஷிங்டனுக்குத் தேவையான துருப்புக்களை நகர்த்துவதற்கான அதிகாரத்தை அதற்கு வழங்குகின்றதுடன், மேலும் ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களுக்கான முன்னோக்கி விநியோகத் தளங்களை உருவாக்க அமெரிக்க இராணுவத்தை அனுமதிக்கின்றன. அமெரிக்கா தற்போது ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளுடன் 17 பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தங்களையும், ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர் அல்லாத நாடுகளுடன் ஆறு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தங்களையும் கொண்டுள்ளது.  

கடந்த ஜூன் மாதம், வாஷிங்டனும் ஒஸ்லோவும் அமெரிக்க இராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்துவதற்கான, குறிப்பாக ரஷ்யாவுடன் 196 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நோர்வேயின் ஆர்க்டிக் பிராந்தியத்தில் விரிவுபடுத்துவதற்கான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் பற்றி இறுதி முடிவெடுத்தலை அறிவித்தன. இது அமெரிக்கப் படைகள் தடையின்றி அணுகக்கூடிய நான்கு ‘ஒப்புக்கொள்ளப்பட்ட பகுதிகளை’ உள்ளடக்கியுள்ளது. இந்த ‘ஒப்புக்கொள்ளப்பட்ட பகுதிகளை’ சுற்றியுள்ள பகுதிகளில், ஏதேனும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உணரப்பட்டால் அதற்கு ‘விகிதாச்சார’ அடிப்படையில் பதிலடி கொடுப்பது உட்பட, அமெரிக்கப் படைகள் நோர்வே குடிமக்கள் மீது அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும். இந்தப் பகுதிகளில் ஆர்க்டிக்கில் உள்ள ராம்சுண்ட் கடற்படைத் தளம் மற்றும் ஈவ்னெஸ் விமானத் தளம் ஆகியவை அடங்கும்.  

நோர்வே பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள மனுவில், அந்நாட்டின் நீதிபதியான பிரதம வழக்குரைஞர் சிக்ரிட் ரெட்சே ஜோஹன்சன், “அதிகாரத்தை செயல்படுத்துவதற்கான அணுகலை (பலத்தை) பிரயோகிப்பதற்கான உரிமை ஒவ்வொரு துருப்பு உறுப்பினருக்கும் உண்டு. மேலும் ஒப்புக்கொள்ளப்பட்ட பகுதியுடன் தொடர்பு கொள்ளும் எவர் மீதும் அல்லது வழமைக்கு மாறான சந்தர்ப்பங்களில், ஒரு அமெரிக்க நடவடிக்கையின் வழியில் குறுக்கீடு செய்யும் எவர் மீதும் அதிகாரம் செலுத்தப்படலாம்… ஒழுங்கை மீட்டெடுக்கும் அல்லது படையைப் பாதுகாக்கும் பொருட்டு எந்தவொரு அமெரிக்க துருப்பு உறுப்பினர்களாலும் நோர்வே குடிமக்களை நோக்கி அதிகாரம் செலுத்தப்படலாம்” என்று குறிப்பிட்டுள்ளார். 

அமெரிக்க முடிவுகளை அல்லது நடவடிக்கைகளை சவால் செய்ய நோர்வே அதிகாரிகளுக்கு கட்டுப்பாடுகள் இல்லாததையும் ஜோஹன்சென் எடுத்துரைத்தார். “அமெரிக்காவின் அதிகாரத்தைச் செலுத்துவதற்கான நிபந்தனைகள் மீதான நோர்வேயின் உண்மையான கட்டுப்பாடு முக்கியமானதாகத் தோன்றவில்லை” என்று சற்று தாழ்ந்த தொனியில் கூறியுள்ளார். 

இந்த ஒப்பந்தம், அமெரிக்க அதிகாரிகள் கடமையில் இல்லாதபோது குற்றங்களைச் செய்யும் துருப்புக்களைத் தண்டிக்கும் முதல் உரிமையை வழங்குவதோடு, கடமைக்குட்பட்ட செயல்களாக கருதப்படுவனவற்றை வரையறுக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்கப் படைகள் நாட்டில் இருக்கும்போது உண்மையான தண்டனையின்றி செயல்பட முடியும்.

பின்லாந்து மற்றும் சுவீடனுடன் வாஷிங்டன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் ஒப்பந்தங்கள் கூட, அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் மற்றும் சட்டப்பூர்வ எதிர்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் அதேபோன்ற விரிவான விதிகளைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. நோர்வேக்கான பின்லாந்தின் தூதர் டீமு டேனர், High North News ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “நோர்வே அதன் நேட்டோ நடவடிக்கைகளை எவ்வாறு கட்டமைக்கிறது என்பதில் இருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

நவம்பரில், பின்லாந்து, சுவீடன் மற்றும் நோர்வே ஆகியவை, மூன்று நாடுகளின் ஆர்க்டிக் பகுதிகளில் கூட்டு இராணுவ நடவடிக்கைகளை செயல்படுத்த முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேம்படுத்துவதாக அறிவித்தன. இந்த ஒப்பந்தம், கூட்டு இராணுவப் பயிற்சிகள், இராணுவ திட்டமிடல் மற்றும் நெருக்கடியான சூழ்நிலையில் கூட்டு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் நேட்டோவின் Cold Response பயிற்சியில் நோர்வேயின் கட்டளையின் கீழ் ஒரு கூட்டுப் படையில் பின்லாந்து மற்றும் சுவீடன் துருப்புக்கள் பங்கேற்றதைத் தொடர்ந்து இது நடக்கிறது.

மேலும் நவம்பரில், சுவீடனின் புதிய வலதுசாரி அரசாங்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்தை பாதுகாப்பிற்காக செலவழிப்பதோடு, நேட்டோ இலக்கை அடைய இராணுவ செலவினங்களை பெருமளவில் அதிகரிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. பழமைவாத மிதவாதிகளால் வழிநடத்தப்படும், அதேவேளை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற பாசிச சுவீடன் ஜனநாயகக் கட்சியினரின் ஆதரவை நம்பியிருக்கும் கூட்டணியானது, 2028 க்குள் இராணுவச் செலவினங்களை 64 சதவிகிதம் உயர்த்த உத்தேசித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு சில நாட்களுக்குப் பின்னர், அரசாங்கம் உக்ரேனுக்கு 3 பில்லியன் குரோனர் (சுமார் 270 மில்லியன் யூரோ) மதிப்பு கொண்ட இராணுவ உதவிப் பொதியை வழங்குவதாக அறிவித்துள்ளது. இது ஒரு வான் பாதுகாப்பு அமைப்பையும், இலகுரக கவச வாகனங்களையும் உள்ளடக்கியதோடு, மேலும் உக்ரேனுக்கு சுவீடன் முன்னர் வழங்கிய மொத்த உதவிப் பொதிகளை விட மொத்தம் 1 பில்லியன் குரோனர் அதிகமாக இருக்கிறது.  

இந்த மாத தொடக்கத்தில், கட்டாய இராணுவ சேவையை மீண்டும் செயல்படுத்தும் திட்டத்தை வெளிப்படுத்திய அரசாங்கம், இளைஞர்களுக்கு பேரிடர் நிவாரணம் மற்றும் பிற அவசர சேவைகள் குறித்து நகராட்சி மட்டத்தில் பயிற்சி அளிக்கவுள்ளது. ஒரு போர் ஏற்பட்டால் சுவீடனின் தற்காப்பு திறன்களை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்துடன் இதனை வெளிப்படையாக இணைக்கிறது. இராணுவத்தில் பொதுமக்களை கட்டாயமாக சேர்ப்பது 2017 இல் சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கத்தால் ஏற்கனவே மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. சமீபத்திய திட்டம் இராணுவத்தில் பொதுமக்களின் கட்டாய சேர்ப்பை 10,000 ஆக இரட்டிப்பாக்க உறுதியளிக்கிறது.  

ஆர்க்டிக் மீதான தீவிரமடையும் மோதல்களை உந்துவிக்கும் ஒரு முக்கிய காரணி அப்பகுதியில் உள்ள பரந்தளவிலான எண்ணெய், எரிவாயு மற்றும் பூமியிலுள்ள அரிய இயற்கை வளங்கள் ஆகும், இவை முதலாளித்துவத்தால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் எளிதாக கிடைக்கக்கூடியதாக இருக்கின்றன. கனடா, டென்மார்க், ரஷ்யா மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய ஆர்க்டிக் நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய உரிமை கோரல்கள், ஆர்க்டிக் பெருங்கடலில் பனிப் படலம் குறைந்து வருவதால், புதிய வர்த்தகப் பாதைகளைத் திறப்பதன் மூலம் உருவாக்கப்படுகின்றன. அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் இப்பிராந்தியத்தில் தத்தமது நிலைகளை வலுப்படுத்துவதில் உறுதியாக உள்ளன. அதாவது, எதிர்காலத்தில் சுத்தமான எரிசக்தி பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கத் தேவையான வளங்களை அணுகுவதற்கும், உலக வர்த்தகத்தின் போக்கைக் கட்டுப்படுத்தவும், மற்றும் அவர்களின் போட்டியாளர்கள் குறித்து இராணுவ மூலோபாய வரம்பை பெறுவதற்கும் இது வழிவகை செய்யும் என்பதை அவர்கள் அங்கீகரிக்கின்றனர்.

இப்பகுதியில் உள்ள பெரும் பொருளாதார நலன்களை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், சுவீடனின் இரும்புத் தாது சுரங்க நிறுவனம் LKAB கடந்த வாரம், சுவீடிஷ் ஆர்க்டிக்கில் உள்ள கிருனாவில் 1 மில்லியன் டன்களுக்கும் அதிகமாக அரிய பூமி ஆக்சைடுகளின் (earth oxides) பெரும் படிவங்களை கண்டுபிடித்ததை வெளிப்படுத்தியுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மதிப்பீட்டின்படி, உலகளாவிய அரிய பூமி படிமங்களில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே இந்த தளம் கொண்டுள்ளது என்றாலும், இது ஐரோப்பாவில் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும். ‘சுத்தமான எரிசக்தி மாற்றம்’ என்று அழைக்கப்படுவதன் ஒரு பகுதியாக, மின்சார வாகன உற்பத்திக்கான ‘ஐரோப்பாவின் தேவைகளில் கணிசமான பகுதியை’ வழங்குவதற்கு இந்த படிமங்கள் போதுமானதே என்று LKAB விளக்கமளித்துள்ளது.

காலநிலை மாற்றத்தைத் தடுக்க தீவிர விருப்பம் கொள்வதற்குப் பதிலாக, ஐரோப்பிய சக்திகளின் முக்கிய அக்கறை, முக்கியமான பொருளாதார விநியோகங்களுக்காக ரஷ்யா மற்றும் சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதாகும். அதனால் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் உலக அரங்கில் ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிராக மட்டுமல்ல, இறுதியில் தேவைப்படும்  போது  அமெரிக்காவிற்கும் எதிராக இன்னும் ஆக்கிரோஷமாக செயல்பட முடியும் என்பதேயாகும். சுவீடனின் எரிசக்தி மற்றும் வணிக அமைச்சரும் வலதுசாரி கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் தலைவருமான எப்பா புஷ் கூறியது போல், “மின்மயமாக்கல், ரஷ்யா மற்றும் சீனாவில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தன்னிறைவு மற்றும் சுதந்திரம் இந்த சுரங்கத்தில் இருந்து தொடங்கும்.”

Loading