அகதிகளுக்கு உதவியதுக்காக சிரிய நீச்சல் வீராங்கனை சாரா மார்டினி (Sara Mardini) மீதான குற்றச்சாட்டை கிரீஸ் கைவிடுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

ஒரு வாரத்திற்கு முன்பு, 27 வயதான சிரிய நீச்சல் வீராங்கனை சாரா மார்டினி உட்பட, இதர 24 புலம்பெயர்ந்தவர்கள் மீட்பு தன்னார்வலர்கள் மீதான குற்றச்சாட்டுகளை கிரேக்க நீதிமன்றம் கைவிட்டுள்ளது. கிரேக்க அதிகாரிகளுக்கு இது ஒரு பேரழிவுகரமான சோதனையாக இருப்பதோடு, அப்பெண்மனிக்கும் அவரது சக ஊழியர்களுக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் மூர்க்கத்தனமானவை என்பதையும் இது உறுதிப்படுத்துகிறது.

பிப்ரவரி 18, 2019 அன்று ரோசா-லக்சம்பர்க்-ஸ்டிஃப்டுங் பெர்லின் நடத்திய பேச்சு நிகழ்ச்சியில் சாரா மார்டினி. [Photo by Rosa-Luxemburg-Stiftung / CC BY-ND 3.0]

ஆகஸ்ட் 2018 இல், கிரேக்கத்தின் குட்டி-முதலாளித்துவ போலி-இடது கட்சியான சிரிசாவின் அரசாங்கம் ('தீவிர இடதுகளின் கூட்டணி') மார்டினியையும் மற்றொரு உதவி ஊழியரான சீன் பைண்டரையும் (Seán Binder) கைது செய்தது. சிரிசா, தீவிர வலதுசாரி சுதந்திர கிரேக்கர்கள் (Anel) என்ற கட்சியுடன் கூட்டணியமைத்து கிரேக்கத்தை ஆட்சி செய்து வந்தது. கடுமையான ஐரோப்பிய ஒன்றியம் தலைமையிலான சிக்கன நடவடிக்கைகளை கிரேக்கத்தில் சிரிசா மேற்பார்வையிட்ட வந்த அதே வேளையில், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் நேட்டோ போர்களில் இருந்து தப்பியோடி வந்த அகதிகளை பயங்கரமான சூழ்நிலையின்கீழ் தங்கவைக்க ஐரோப்பிய ஒன்றிய ஆதரவுடன் வதை முகாம்களையும் அமைத்தது.

மார்டினியும் மற்றும் இதர உதவிப் பணியாளர்களும், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து உயிர்தப்பிய அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர்கள் கடல் வழியாக வரும்போது, மூழ்கும் அபாயத்தில் இருந்தவர்களுக்கு உதவியதற்காக குற்றம் சாட்டப்பட்டனர். லெஸ்போஸ் (island of Lesbos) தீவில் ERCI (Emergency Response Centre International) எனப்படும் தேடுதல் மற்றும் மீட்பு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்ததற்காக 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்நோக்கியுள்ள இவர்கள்மீது, மனித கடத்தல், மோசடி, ஒரு குற்றவியல் அமைப்பில் சேருதல் மற்றும் பணமோசடி ஆகிய குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன. 

கைது செய்யப்பட்ட பின்பு, 100 நாட்களுக்கும் மேலாக சிறையில் கழித்த மார்டினியும் பைண்டரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் எட்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கூற்றுப்படி, இதர உதவிப் பணியாளர்களில் பயிற்சி பெற்ற மீட்பு பணியாளரான நாசோஸ் கரகிட்சோஸ் (Nassos Karakitsos) மற்றும் தேடல் மற்றும் மீட்புக் குழுவின் நிறுவனர் பனோஸ் மொரைடிஸ் (Panos Moraitis) ஆகியோர் 2018 ஆம் ஆண்டில் நீண்டகால விசாரணைக் காவலில் வைக்கப்பட்டதோடு, இக்குழு அதன் நடவடிக்கைகளை நிறுத்தும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். லெஸ்வோஸ் தீவில் தற்போது தேடல் மற்றும் மீட்பு அமைப்பினர் எவரும் இல்லை.

2015 ஆம் ஆண்டு துருக்கி ஏஜியன் கடற்பகுதியில் இருந்து கிரேக்க தீவான லெஸ்போஸ் வரை, தங்கள் உயிரைப் பணயம் வைத்து 18 சக அகதிகளைக் காப்பாற்றிய சாராவும் அவரது இளைய சகோதரி யுஸ்ராவும் சர்வதேச அளவில் உலகப் புகழ் பெற்றனர். 

அவர்கள் பயனம் செய்த படகின் இயந்திரம் செயலிழந்ததால், சாராவும் யுஸ்ராவும் கடலில் குதித்து, நீந்தி படகை பாதுகாப்பாக கரைக்கு கொண்டுவந்தபின்பு, 25 நாட்கள் ஜேர்மனிக்கு கால்நடையாகவும், ரயில் மற்றும் பஸ் மூலமாகவும் வந்து சேர்ந்தனர். சாராவுக்கும் யுஸ்ராவுக்கும் அங்கு தஞ்சம் கிடைத்தது. ஒரு வருடம் கழித்து, சாரா கிரேக்கத்துக்கு திரும்பினார் மற்றும் அகதிகளுக்கு உதவ தன்னார்வலராக ERCI குழுவில் சேர்ந்தார்.

சாராவின் கதை 2022 ஆம் ஆண்டு, மிகவும் பிரபலமான Netflix தயாரித்த திரைப்படமான “The Swimmers,” இல் கூறப்பட்டுள்ளது, திரைப்படம் சாரா மற்றும் அவரது சகோதரி யுஸ்ராவின் கடைசி பத்து ஆண்டுகள் வாழ்க்கையை விவரிக்கிறது. இவர்கள், 2015 இல் சிரியாவில் அமெரிக்க-நேட்டோ தலைமையிலான போரின் போது, தங்கள் பெற்றோர் மற்றும் இளைய தங்கையை சிரியாவில் விட்டுவிட்டு ஜேர்மனியில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் இருவரும் வீட்டிலிருந்து தப்பிச் செல்வதற்கு முன்பு சிரிய தேசிய அணிக்காக நீச்சலில் ஈடுபட்டனர். 2016 ரியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறும் வரை நீச்சல் பயிற்சியை மேற்கொண்டு வந்த யுஸ்ரா, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு ஜேர்மனி அகதிகள் ஒலிம்பிக் குழுவில் ஒருவராக இருந்தார்

சிரிசா அரசாங்கம் அப்பட்டமான உண்மைப் பிழைகளைக் கொண்ட கிரேக்க பொலிஸ் அறிக்கையின் அடிப்படையில் தன்னார்வ மீட்பாளர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எதுவும் காவல்துறை தரவில்லை. 2018 இல், மார்டினியின் வழக்கறிஞர் ஹாரிஸ் பெட்சிகோஸ் WSWS க்கு கூறும்போது, மார்டினி, 'எல்லாக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். … இந்த மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் போலீஸ் கோப்பில் உள்ள ஆதாரங்களால் எந்த வகையிலும் நிரூபிக்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் முற்றிலும் அப்பாவிகள். பொலிசாரால் உறுதியாக எதையும் நிரூபிக்க முடியாது, ஆனால் நீதிமன்றங்கள் எங்கள் வாதங்களைக் கேட்க நேரம் எடுக்கும் ”என்று தெரிவித்தார்.

“எனது வாடிக்கையாளர்களும் மற்ற பிரதிவாதிகளும் கிரேக்கத்தில் இருக்காத காலத்தில், குறிப்பிட்ட தேதிகளில் கிரேக்கத்தில் குற்றங்களைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட தேதிகளில் அவர்கள் ஜேர்மனி அல்லது இங்கிலாந்தில் இருந்துள்ளனர் என்பதற்கான ஆதாரங்களை ஜேர்மனி மற்றும் இங்கிலாந்தில் இருந்து, எடுப்பித்து நாங்கள் வழங்கியுள்ளோம், என்று அவர் மேலும் தெரிவித்தார்.

'இந்த குற்றச்சாட்டுகள் கிட்டத்தட்ட நம்பமுடியாதவை. … அவர்கள் ஒருவருக்கொருவர் பேசுவதற்கு ரேடியோக்களைக் கொண்டிருந்தனர், மேலும் இந்த பொது ரேடியோ அலைவரிசை, காவல்துறை சொல்வதையும் அவர்களால் கேட்க முடிந்தது. இப்போது அவர்கள் காவல்துறையின் ரேடியோ பேச்சுக்களைக் கேட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர், அவை அரச இரகசியங்கள் என்று கூறப்படுகின்றன. ஆனால், வெளிப்படையாக இதுவல்ல பிரச்சனை' என்று Petsikos மேலும் குறிப்பிட்டார்.

சிரிசாவிலுள்ள குட்டி முதலாளித்துவ பிற்போக்குவாதிகள் மார்டினி மற்றும் அவரது சகாக்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலம் முழு ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU)  கொள்கைகளை நிறைவேற்றியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம், லிபியா, சிரியா மற்றும் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் போரை நடத்துகையில், மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஐரோப்பாவிற்கு வருவதைத் தடுக்க முயல்கிறது. தஞ்சம் அடைவதற்கான அகதிகளின் அடிப்படை உரிமையை மிதித்து, அது, ஐரோப்பாவிலும் மத்தியதரைக் கடலிலும் ஒரு பரந்த தடுப்பு முகாம்களை உருவாக்கியுள்ளது, அதில் அகதிகள் கொடூரமான சூழ்நிலையின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த குற்றவியல் கொள்கையானது, தீவிர வலதுசாரி அரசியலை சட்டப்பூர்வமாக்குதல், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தீவிர சிக்கன நடவடிக்கைகள், மற்றும் பொலிஸ் அரசு நடவடிக்கைகளுக்காக பாரிய செலவினங்கள், மற்றும் மறுஇராணுவமயமாக்கல் ஆகியவற்றுடன் கைகோர்த்து செல்கிறது.

மார்டினி மற்றும் இதர மீட்புத் தன்னார்வலர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை ஜனவரி 10, 2023 அன்று தொடங்கவிருந்தது. மனித உரிமை அமைப்புகள் இந்த விசாரணைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவுவதற்காக பணிபுரியும் எவரையும் குற்றவாளியாக்கும் முயற்சியில் பொய்யான குற்றச்சாட்டுகள் இந்த வழக்கில் இருப்பதாக அவர்களும் பிரதிவாதிகளும் சுட்டிக்காட்டினர்.

'தண்ணீர் பாட்டில்களை பெரும்பாலும் வழங்குவதற்காகவும், புன்னகைத்ததற்காகவும் என்னை குற்றவாளியாக்க முடியும் என்றால், அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த விசாரணை என்னையும் சாராவையும் அல்லது இதர 22 பிரதிவாதிகளையும் பற்றியது அல்ல. இந்த விசாரணையின் மூலம் கிரேக்க அதிகாரிகள், இரக்கத்தை நசுக்க முயற்சிப்பதோடு, மக்கள் உயிர் பாதுகாப்பைத் தேடுவதையும் தடுக்கிறது. ஆனால் நீதி வெல்லும் என்று நான் நம்புகிறேன், மேலும் நாங்கள் எங்கள் வாழ்க்கையை மீண்டும் பெற முடியும்,” என்று Seán Binder கூறினார். 

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் குழந்தைகள் உரிமைகளுக்கான இணை இயக்குநர் பில் வான் எஸ்வெல்ட் கூறுகையில், 'இந்த வழக்கு உண்மையில் கிரேக்க அதிகாரிகளின் ஒரு குற்றச்சாட்டாகும். இதற்கிடையில், கிரேக்க அரசாங்கம் மனிதாபிமான மீட்பு பணிகளை தொடர்ந்தும் கட்டுப்படுத்தும் அதேவேளை, மனிதாபிமான பணியாளர்கள் தணிக்க முயன்ற உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளுக்கு, அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரை சட்டவிரோதமாக மீண்டும் தள்ளுவதற்கு அவர்களை கட்டாயப்படுத்துகிறது.'

விசாரணை தொடங்கியதும் சர்வதேச மன்னிப்பு சபை, மனிதாபிமான பணியாளர்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் கைவிடுமாறு கிரேக்க அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தது. சர்வதேச மன்னிப்பு சபையின் ஐரோப்பிய பிராந்திய அலுவலகத்தின் இயக்குனர் நில்ஸ் முய்ஸ்னிக்ஸ் (Nils Muižnieks) பின்வருமாறு கூறினார்:

சாரா மற்றும் சீனுடைய நிலையில் நாம் இருந்திருந்தால், நம்மில் எவரும் செய்ய வேண்டியதைச் செய்திருப்போம். ஐரோப்பாவின் மிகக் கொடிய கடல் வழிகளில் மூழ்கும் அபாயத்தில் உள்ள மக்களுக்கு உதவுவதும், கரையோரத்தில் அவர்களுக்கு உதவுவதும் ஒரு குற்றமல்ல. மனிதாபிமான உதவியைத் தடுப்பதற்கும், புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் நாட்டின் கரையோரங்களில் பாதுகாப்பைத் தேடுவதிலிருந்து ஊக்கமளிப்பதை தடுப்பதற்கும் கிரேக்க அதிகாரிகள் எவ்வாறு தங்களால் இயன்ற அனைத்தையும் செய்வார்கள் என்பதை இந்த விசாரணை வெளிப்படுத்துகிறது, இதனை பல ஐரோப்பிய நாடுகளில் நாம் காண்கிறோம்.

சாரா மார்டினிக்கு எதிரான கிரேக்க ஆட்சியின் பொய்யான குற்றச்சாட்டுகளின் பொறிவு, எல்லாவற்றிற்கும் மேலாக, அகதிகளைக் குறிவைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு 'ஐரோப்பியக் கோட்டை' கொள்கையும் முற்றிலும் பிற்போக்குத்தனமானது மற்றும் ஐரோப்பிய அரசுகள் மற்றும் அரசாங்கங்கள் குற்றச்செயல்களில் மூழ்கியுள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. புலம்பெயர்ந்தோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஏகாதிபத்தியப் போர், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பரந்த பொலிஸ்-அரசு எந்திரத்திற்கு எதிரான போராட்டத்தில் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச அணிதிரட்டல் அவசியமாக தேவைப்படுகிறது.

Loading