போர் பிரச்சாரம், வலதுசாரி வரலாற்று பொய்மைப்படுத்துதலால் அவுஷ்விட்ஸ் நினைவுகூரல்  ஆதிக்கம் செலுத்தப்படுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் யுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜனவரி 27 அன்று அவுஷ்விட்ஸ் சித்திரவதை முகாமின் 78வது ஆண்டு நினைவுகூரல், ஏகாதிபத்தியப் போர்ப் பிரச்சாரம் மற்றும் வலதுசாரி வரலாற்றுப் பொய்மைப்படுத்துதலால் முழுமையாக ஆதிக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் பார்வையில், 20 ஆம் நூற்றாண்டில் பாசிசம் மேற்கொண்ட குற்றங்களின் மேலாதிக்க அடையாளமாக அவுட்விட்ஸ் மாறியுள்ளது. இந்த முகாம் 78 ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் ஒன்றியத்தின் செம்படையால் விடுவிக்கப்பட்டவுடன், அங்கு வந்த படையினர் ஒரு பரந்த வளாகம் மற்றும் கடூழிய முகாம்களைக் கண்டுபிடித்தனர். 900,000 ஐரோப்பிய யூதர்கள் உட்பட 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இங்கு கொல்லப்பட்டனர். ஒட்டுமொத்தமாக, இரண்டாம் உலகப் போரின்போது 1.1 முதல் 1.5 மில்லியன் மக்கள் அவுஷ்விட்ஸுக்கு நாடு கடத்தப்பட்டனர். அவர்களில் குறைந்தது 140,000 போலந்து மக்கள், 20,000 சிந்தி மற்றும் ரோமாக்கள் அடங்குவர்.  இவர்களில் பெரும்பாலோர் கொல்லப்பட்டனர். மேலும் 10,000 சோவியத் போர்க் கைதிகள் இதில் உள்ளடங்குவர். ஜேர்மன் இரசாயன மற்றும் மருத்துவப்பொருட்கள் நிறுவனமான IG Farben ஆல் நடத்தப்பட்ட கடூழிய முகாம்களில் எண்ணற்ற ஆயிரக்கணக்கானோர் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இது இன்றைய BASF மற்றும் Bayer இன் முன்னோடி நிறுவனமாக இருந்தன. இவை உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க நிறுவனங்களாக உள்ளன.

1944 ஆம் ஆண்டு அவுஷ்விட்ஸில் ஹங்கேரிய யூதர்கள் 'தேர்வு' செய்யப்படுகிறார்கள். 400,000 மக்களைக் கொண்ட ஹங்கேரியின் முழு யூத சமூகமும் 1944 ஆம் ஆண்டு கோடையில் அவுஷ்விட்ஸில் விஷவாயுவால் கொல்லப்பட்டனர்.

ஆனால் உத்தியோகபூர்வ நினைவுகூரல் நிகழ்ச்சியின் போது, இந்த வரலாற்று உண்மைகள் திட்டமிட்ட முறையில் மறைக்கப்பட்டதோடு, இது ரஷ்யாவிற்கு எதிரான ஏகாதிபத்திய போர் பிரச்சார சேவையில் முழுமையாக வைக்கப்பட்டுள்ளது. அதன் நோக்கம் படுகொலை செய்யப்பட்டவர்கள் மற்றும் இன்னும் உயிருடன் இருக்கும் யூதப் படுகொலையில் (Holocaust) இருந்து தப்பிய சிலரின் நினைவை போற்றுவது அல்ல, ஆனால் ஏகாதிபத்தியத்தின் புதிய குற்றங்களை நியாயப்படுத்த போர் பிரச்சாரத்தின் முரசங்களை அடிப்பதாகும்.

78 ஆண்டுகளுக்கு முன்பு, கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியுடன் சேர்த்து, செம்படை இந்த முகாமை விடுவித்த போதிலும், தொடக்க விழாவிற்கு ரஷ்யா அழைக்கப்படவில்லை.

அவுஷ்விட்ஸ் முகாம் நினைவுச்சின்னத்தின் இயக்குனர் Piotr Cywiński, பாசிசம் மற்றும் நாசிசத்தின் குற்றங்களை கண்டனம் செய்வதில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. மாறாக, உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை, ஹிட்லர் நடத்திய போர் மற்றும் யூதப் படுகொலையுடன் ஒப்பிடுவதன் மூலம் நாஜிக்களின் குற்றங்களை நனவாக ஒப்பிட்டுப் பார்க்கிறார். அவர் தெரிவிக்கையில்: “அவுஷ்விட்ஸ் அதிகார மோகம் மற்றும் ஒருவரின் அதிகாரத்திற்கான அளவற்ற ஆசைகளில் இருந்து எழுந்தது'. இன்று, 'அதேபோன்ற நோய்வாய்ப்பட்ட அதிகாரத்திற்கான அளவற்ற ஆசையிலிருந்து, இதே போன்ற அதிகார மோகம், தனித்துவம், மகத்துவம், முதன்மை பற்றிய ஒத்த கட்டுக்கதைகள் ... ரஷ்ய மொழியில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் மீண்டும் அப்பாவி மக்கள் பாரியளவில் இறக்கிறார்கள்.”

ஒரு பெரிய யூதப் படுகொலையின் முக்கிய இடமாக அவுஷ்விட்ஸ் நினைவு கூரப்பட்டாலும், யூதப்படுகொலையில் கொல்லப்பட்ட 6 மில்லியன் பேர்களில், அதன் விஷவாயு அறைகளில் மட்டும் ஆறில் ஒரு பங்கினர் கொல்லப்பட்டார்கள்.  இந்த நாஜிக்களின் மரண முகாம்கள் பெரும்பாலும் Cywiński யால் புறக்கணிக்கப்பட்டன. போலந்து, பிரான்ஸ் மற்றும் செக் குடிமக்களின் மீது நாஜிக்கள் மேற்கொண்ட படுகொலைகள் நடந்த இடங்களைக் குறிப்பிட்ட அவர், ஆனால் யூதர்கள் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டதைபற்றி குறிப்பிடவில்லை. 'வார்சாவில் உள்ள வோலா மாவட்டம், ஜமோஜ்சிஸ்னா, பிரான்சிலுள்ள ஓரடோர் மற்றும் லிடிஸ் போன்ற இடங்கள் இன்று புச்சா, இர்பின், ஹோஸ்டோமல், மரியுபோல் மற்றும் டொனெட்ஸ்க் என்ற பேரில் அழைக்கப்படுகிறது' என்று அவர் குறிப்பிட்டார்.

Cywiński மேற்கோள் காட்டிய உக்ரேன் நகரங்களில் ரஷ்யா மேற்கொண்ட போர்க்குற்றங்கள் பற்றிய ஏகாதிபத்திய குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான ஆதாரம் எதுவும் வழங்கப்படவில்லை. இதற்கு நேர்மாறாக, 1944 ம் ஆண்டில், வோலா மாவட்டத்தில் வார்சா எழுச்சியை நாஜிக்கள் அடக்கியதில், 40,000ம் முதல் 50,000க்கும் இடையிலான போலந்து மக்கள் கொல்லப்பட்டனர் என்பது மறுக்கமுடியாத வகையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. லிடிஸ் படுகொலையில் 340 செக் குடிமக்களும், பிரான்சில் ஓரடோர் படுகொலையில் 643 பிரெஞ்சு குடிமக்களும் நாஜிக்களால் கொல்லப்பட்டனர். ஸ்லாவிக் மக்களை வெளியேற்றுவதையும் கிழக்கு ஐரோப்பாவில் ஜேர்மனியர்களை குடியேற்றுவதையும் இலக்காகக் கொண்ட நாஜிக்களின் கிழக்கிற்கான பொதுத்திட்டத்தின் (Generalplan Ost) ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையில் 100,000 க்கும் மேற்பட்ட போலந்து மக்கள் Zamojszczyzna லிருந்து நாடு கடத்தப்பட்டனர்.

அவுஷ்விட்ஸ் நினைவகத்தின் தலைவருக்கு, யூதப் படுகொலை நடந்த இடங்களை விட, மேற்குறிப்பிட்ட தளங்களை முன்னிலைப்படுத்த எந்த அப்பாவி விளக்கமும் இல்லை. இந்த படுகொலைகள் நீண்டகாலமாக போலந்து தேசியவாத மற்றும் அதிதீவிர வலதுசாரி சக்திகளால் பயன்படுத்தப்பட்டு வருவதோடு, இரு நாடுகளிலும் (ஜேர்மனி மற்றும் போலந்து) உள்ள யூத மக்களுக்கு எதிரான நாஜிக்களின் குற்றங்களை குறைப்பதற்காக இதர ஐரோப்பிய தேசியவாத மற்றும் அதி தீவிர வலதுசாரி சக்திகளால் சுரண்டப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன, இதில் உள்ளூர் தேசியவாதிகள் மற்றும் அதி தீவிர வலதுசாரி சக்திகள் மறைமுகமாக ஆதரிக்கின்றன அல்லது நேரடியாக பங்கு பெற்றுள்ளன.

போலந்தின் பிரதம மந்திரியும், சட்டம் மற்றும் நீதிக் கட்சியின் உறுப்பினருமான மத்தூஸ் மோராவிக்கி, முகநூலில்: 'நாஜி ஜேர்மன் மரண முகாம் அவுஷ்விட்ஸ்-பிர்கெனோவின் விடுதலையின் ஆண்டு நிறைவில்போது, புட்டின் கிழக்கில் புதிய முகாம்களைக் கட்டுகிறார் என்பதை நினைவில் கொள்வோம்.' இந்த அசாதாரண கூற்றுக்கு அவர் எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. சில மணிநேரங்களுக்குப் பிறகு, ரஷ்யாவிற்கு எதிரான போரை நடத்த உக்ரேனுக்கு லியோபார்ட் 2 டாங்கிகளை அனுப்ப ஜேர்மனிக்கு அழுத்தம் கொடுப்பதில் போலந்தின் பங்கு பற்றி அவர் பேஸ்புக்கில் பெருமையாக கூறினார்.

மோராவிக்கி, ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போர்த் தயாரிப்புகளில் முக்கிய பங்கு வகித்தது மட்டுமல்லாமல் தீவிர வலதுசாரி மற்றும் யூத-விரோத சக்திகளின் ஆதிக்கத்துக்கு உள்ளான ஒரு கட்சியின் உறுப்பினர் ஆவார். 2018 ஆம் ஆண்டில், போலந்து அரசாங்கம் யூதப்படுகொலையின்போது போலந்து யூத-எதிர்ப்பாளர்களின் குற்றங்களைப் பற்றி பொதுவில் குறிப்பிடுவதையும் ஆராய்ச்சி செய்வதையும் தடை செய்தது. அரசாங்கத்தின் தீவிர வலதுசாரி வரலாற்றுத் திருத்தல்வாதத்தை எதிர்த்த மக்களை வெளியேற்றி, கல்வி நிறுவனங்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் பெருமளவு தூய்மைப்படுத்தலை அது மேற்கொண்டது. 2019 ஆம் ஆண்டில், அவுஷ்விட்ஸ் விடுதலையின் 74 வது ஆண்டு நிகழ்ச்சியில், இந்த முகாம் வழியாக அணிவகுத்துச் செல்ல PiS கட்சி அரசாங்கம் உண்மையில் பாசிசவாதிகளை அனுமதித்தது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் போர் பிரச்சாரத்தின் ஊக்குவிப்பு மற்றும் அவுஷ்விட்ஸ் நினைகூரலின் போது நாசிசத்தின் குற்றங்களை வேண்டுமென்றே குறைத்துக்காட்டுவது ஆகியவை தற்போது ஐரோப்பாவில் நடைபெற்று வரும் ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் புதிய வெடிப்பிலிருந்து பிரிக்க முடியாதவையாக உள்ளன.

அவுஷ்விட்ஸ் மற்றும் ஜேர்மன் பாசிசத்தின் குற்றங்கள் இன்னும் பரந்த அளவில் முதலாளித்துவ அமைப்பின் சிதைவில் வேரூன்றியிருந்தன. தொழிலாளர் இயக்கத்தை நசுக்கவும் ஐரோப்பாவில் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தை நிறுவவும் ஜேர்மன் ஆளும் வர்க்கத்தால் நாஜி இயக்கம் அதிகாரத்திற்கு கொண்டு வரப்பட்டது. நாசிசத்தின் தீவிரமான யூத-எதிர்ப்பு, அனைத்துக்கும் மேலாக சர்வதேச மற்றும் சோசலிச தொழிலாளர் இயக்கத்திற்கு எதிரான அரசியல் மற்றும் கருத்தியல் எதிர்வினையில் வேரூன்றி இருந்தது. சோவியத் யூனியனினை அழிப்பது என்பது ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் மைய இலக்குகளில் ஒன்றாக மாறியது.

முதலாவதாக, ஜேர்மனி 1917 அக்டோபர் புரட்சியில் இருந்து வெளிப்பட்ட உருக்குலைந்த தொழிலாளர் அரசை அழித்து சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு பெரிய அடியை வழங்க முயன்றது. இரண்டாவதாக, ஜேர்மன் ஏகாதிபத்தியம் தனது முக்கிய ஏகாதிபத்திய போட்டியாளர்களுக்கு எதிராக, எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்காவிற்கு எதிராக தனது நிலையை உறுதிப்படுத்துவதற்காக, இந்த பிராந்தியத்தில் உள்ள மூலப்பொருட்களின் பரந்த ஆதாரங்களின் மீது முழுக் கட்டுப்பாட்டையும் நிறுவ முயன்றது.

இந்த இலக்குகள் மனித வரலாற்றில் இன்றுவரை இரத்தக்களரியாக இருக்கும் ஒரு போரின் அடிப்படையாகும். இது ஆரம்பத்தில் இருந்தே குற்றவியல் கட்டளைகளை அடிப்படையாகக் கொண்டது. ஜேர்மனியின் போர் நடத்தை அனைத்தும், நிறுவப்பட்ட சர்வதேச போர் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டது. நாஜிக்களின் (Wehrmacht) இராணுவத்துக்கு வழங்கப்பட்ட குற்றவியல் கட்டளைகளில் ஒன்றில், 4 வது டாங்கி குழுவின் தளபதி எரிக் ஹோப்னர், மே 2 1941 அன்று தனது படைகளுக்கு பின்வருமாறு உத்தரவிட்டார்:

'ரஷ்யாவிற்கு எதிரான போர், ஜேர்மனியின் இருப்புக்கான போராட்டத்தில் ஒரு முக்கியமான அத்தியாயமாகும். ஐரோப்பிய கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்காகவும், மொஸ்கோவாத-ஆசியர்களுக்கு எதிராகவும், யூத-போல்ஷிவிசத்தை விரட்டியடிப்பதற்காகவும், ஸ்லாவியா மக்களுக்கு எதிரான ஜேர்மானிய மக்களின் பழைய போர் இதுவாகும். இந்தப் போரின் நோக்கம் இன்றைய ரஷ்யாவை அழிப்பதாக இருக்க வேண்டும். எனவே அது முன்னோடியில்லாத வகையில் கடுமையாகப் போராட வேண்டும். அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் எதிரிகளை இரக்கமின்றி மற்றும் முற்றிலும் அழித்தொழிப்பதற்கான இரும்பு விருப்பத்தால் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக, தற்போதைய ரஷ்ய-போல்ஷிவிக் அமைப்பின் ஆதரவாளர் யாரும் தப்பக்கூடாது.

1941 ஜூனில், சோவியத் யூனியனின் மீதான நாஜிப் படையெடுப்பு, போரில் மட்டுமல்ல யூதப்படுகொலைகளிலும் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அவுஷ்விட்ஸின் விஷவாயு அறைகள் சில மாதங்களுக்குப் பிறகு செயல்படத் தொடங்கின. நாஜிக்களின் வேர்மாஹ்ட் இராணுவம் ஆக்கிரமிக்கப்பட்ட சோவியத் யூனியனில் இருந்த யூத மக்களை பரந்தளவிலான துப்பாக்கிச் சூட்டில் மொத்தமாக படுகொலை செய்து கொண்டிருந்தது. யூதப் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் 1941 கோடை மற்றும் 1943 இன் பிற்பகுதிக்கு இடையில் கொல்லப்பட்டனர்.

சோவியத் யூனியன் முழுவதிலும் உள்ள சிப்பாய்கள் மற்றும் அதன் வெவ்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த செம்படை, நாஜி படையெடுப்பிற்கு எதிராகப் போராடியதோடு, போரில் நாஜி ஜேர்மனியை தோற்கடிப்பதில் முக்கிய பங்கு வகித்தது. ஸ்ராலினிசத்தின் கொடூரமான குற்றங்கள் இருந்தபோதிலும், ஏகாதிபத்திய சக்திகளால் ஆதரிக்கப்படும் ஆக்கிரமிப்பு படைகளுக்கு எதிராக, 1917 அக்டோபர் புரட்சியின் வெற்றிகளைப் பாதுகாப்பதற்காக 1918 இல் லியோன் ட்ரொட்ஸ்கியால் நிறுவப்பட்ட செம்படை, சோசலிசப் புரட்சி மற்றும் சமூக முன்னேற்றத்தின் உணர்வை இன்னும் தன்னுள் சுமந்து சென்றது.

எனவே, அவுஷ்விட்ஸ் உத்தியோகபூர்வ நிகழ்விற்கு ரஷ்யாவிற்கு அழைப்பு விடுக்கப்படாதது ஒரு பெரிய அரசியல் ஆத்திரமூட்டல் மட்டுமல்ல, கம்யூனிச எதிர்ப்பு மற்றும் வரலாற்று பொய்மைப்படுத்தல்களை ஊக்குவிக்கும் முறையான முயற்சியின் ஒரு பாகமாகும்.

ஆனால் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஏகாதிபத்திய போர் பிரச்சாரத்தை தனது சொந்த வரலாற்று பொய்மைப்படுத்தல்கள் மற்றும் அரசியல் பொய்களால் எதிர்த்தார். உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கும் இரண்டாம் உலகப் போரில் செம்படையின் பங்கிற்கும் இடையே தவறான ஒப்புமையை உருவாக்கி, உக்ரேனில் தனது போரின் நோக்கம் நாட்டில் 'நாஜிக்களை இல்லாமல்' செய்வதே என்று கூறி, உத்தியோகபூர்வ நினைவேந்தல் விழாவில் ரஷ்யா அழைக்கப்படாததுக்கு பதிலளித்தார். 

உண்மை என்னவென்றால், உக்ரேனில் நடக்கின்ற போர் மற்றும் தீவிர வலதுசாரி சக்திகளின் மீள்எழுச்சி மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான ஏகாதிபத்தியப் போர் ஆகியவை, இறுதியில் 1917 சோசலிச அக்டோபர் புரட்சிக்கு எதிராக பல தசாப்தங்களாக நீடித்த ஸ்ராலினிச எதிர்ப்புரட்சியின் விளைவாகும். கடந்த 30 ஆண்டுகளாக வெகுஜனங்களின் இழப்பில் தன்னை வளப்படுத்திக் கொண்ட ஒரு சிறிய தன்னலக்குழுவின் நலன்களுக்காகப் பேசும் புட்டின் ஆட்சியே இந்த எதிர்ப்புரட்சியின் வாரிசாக இன்று இருக்கிறது.

பெரும்பாலும் மிகவும் ஏழை மக்களிடமிருந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ரஷ்ய இராணுவம் செம்படையின் மறுமலர்ச்சி அல்ல. தன்னலக்குழுவின் சொந்த சலுகைகளைப் பாதுகாப்பது மற்றும் ஏகாதிபத்திய சக்திகளுடன் எப்படியாவது பேச்சுவார்த்தை நடத்துவதற்கான மற்றொரு வழியைக் கண்டுபிடிப்பதே அதன் முக்கிய நோக்கமாக இருக்கிறது. ஒரு தீவிர முயற்சியில் தன்னலக்குழு ஆட்சியால் நடத்தப்படுகின்ற 'தேசிய பாதுகாப்பு' போரில் அதன் படையினர்கள் சோகமாக படுகொலை செய்யப்படுகின்றனர். ரஷ்யாவின் தன்னலக்குழு ஆட்சியின் உக்ரேன் மீதான பிற்போக்குத்தனமான படையெடுப்பு மற்றும் அதனுடன் இணைந்த வரலாற்று பொய்மைப்படுத்தல்கள் மற்றும் ரஷ்ய பேரினவாதத்தை ஊக்குவிப்பது ஆகியவை ஏகாதிபத்திய போர் இயந்திரங்கள் மற்றும் அதன் பிரச்சாரத்திற்கு நீர் ஊற்றி தொழிலாள வர்க்கத்தை மேலும் பிளவுபடுத்தவும் குழப்பவும் உதவுகிறது.

இப்போது நடந்து கொண்டிருக்கும் ஏகாதிபத்தியப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பணி மற்றும் ஐரோப்பாவில் பாசிச சக்திகளின் மீள் எழுச்சிக்கு எதிராக போராடும் பணி சர்வதேச தொழிலாள வர்க்கத்திடம் விழுகிறது. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் அக்டோபர் புரட்சியை தேசியவாத அடித்தளத்தில் காட்டிக்கொடுத்ததின் பேரழிவுவான விளைவுகளிலிருந்து தொழிலாள வர்க்கம் படிப்பினைகளைப் பெற வேண்டும். ஏகாதிபத்திய போர் வெறியர்கள் மற்றும் புட்டின் ஆட்சியின் தேசியவாதத்திற்கு எதிராக, ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கம் ஒரு ஐக்கியப்பட்ட சர்வதேச மூலோபாயத்துடன் சோசலிசத்திற்காக போராட வேண்டும்.

Loading