முன்னோக்கு

அமெரிக்க ஊடகங்கள் பலூன் விமானம் தொடர்பாக சீன-விரோத விஷமப் பிரச்சாரத்தை முடுக்கி விடுகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

அமெரிக்க அணுசக்தி தளங்களை உளவு பார்ப்பதற்காக சீனா கண்கூடாக தெரியும் ஒரு மிகப் பெரிய பலூனை அனுப்பியது என்ற கூற்றுடன் அமெரிக்க மக்கள் கடந்த நான்கு நாட்களாக சரமாரியான ஒரு போர் பிரச்சாரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

ஊடக இயந்திரம் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. அந்த பலூனின் இருப்புக் குறித்து கடந்த வாரம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து, மிதக்கும் அந்த வெள்ளை பலூன் மெதுவாக அமெரிக்க கண்டம் வழியாக கடந்து செல்வதால் அதன் நகர்வுகளைக் குறித்து நிமிடத்திற்கு நிமிடம் மூச்சுவிடாமல் செய்திகள் கூறப்பட்டு வந்தன. பல நாட்களாக இந்தக் கதை தான் ஒவ்வொரு பத்திரிகையிலும் தலைப்பாக இருந்தது, மாலை நேர ஒளிப்பரப்புகளில் முதல் செய்தியாக இருந்தது, 24 மணி நேர கேபிள் செய்தி வலைப்பின்னல்களில் ஆதிக்கம் செலுத்தியது.

அமெரிக்க F-22 போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்படுவதற்குச் சற்று முன்னர், தெற்கு கரோலினா மைர்டெல் கடற்கரை வழியாக ஒரு சீன பலூன் நகர்கிறது [Photo by Russotp / CC BY-SA 4.0]

வெள்ளிக்கிழமை முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்த பலூனைச் சுட்டு வீழ்த்த அழைப்பு விடுத்தார். இதே கோரிக்கை குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகளாலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. கொரிய போருக்குப் பின்னர் ஒரு சீன விமானம் மீதான முதல் அமெரிக்க தாக்குதலாக, பைடெனின் உத்தரவுகளின் கீழ், அமெரிக்க விமானப் படை அந்த பலூனைச் சனிக்கிழமை சுட்டு வீழ்த்தியது.

அந்த பலூனின் இருப்பைக் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டு ஒரு நாளைக்குப் பின்னர், வெள்ளிக்கிழமை, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் சீனாவுக்கான அவருடைய திட்டமிடப்பட்டிருந்த பயணத்தை இரத்து செய்தார். அவ்விரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவின் பாகமாக இருக்கலாம் என்று அந்தப் பயணம் விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது.. 

அந்த வான்வழி கப்பல் (airship) குறிப்பாக அமெரிக்க இராணுவத்தளங்களை இலக்கு வைத்த சீன 'உளவுபார்ப்பு பலூன்' என்ற ஆதாரமற்ற வாதத்தை ஒட்டுமொத்த ஊடகங்களும் ஏற்றுக் கொண்டன.

அந்த பலூனின் குறிப்பிட்ட நோக்கத்தைத் திட்டவட்டமாக கூற முடியாது என்றாலும், அமெரிக்க வான்வெளியில் மெதுவாக நகர்ந்து செல்லும் கண்கூடாக தெரியும் ஒரு பிரம்மாண்டமான அந்தப் பொருளைக் கொண்டு அமெரிக்க அணுசக்தி ஆயுதங்கள் பற்றிய முக்கிய தகவல்களைச் சீன அரசாங்கம் இரகசியமாக சேகரிக்க முயல்கிறது என்ற கருத்து, மேலோட்டமாக பார்த்தால் கூட, நகைப்பிற்கிடமாக உள்ளது.

பெய்ஜிங் வழங்கிய விபரங்களே வெகுவாக சாத்தியமுள்ளதாக உள்ளது. அதிக உயரத்தில் பறக்கும் அந்த பலூன் வானிலையைக் கண்காணித்துக் கொண்டிருப்பதாகவும், அதன் போக்கில் நகர்ந்து சென்று ஜனவரி 28 இல் அமெரிக்காவுக்குள் நுழையும் என்றும் அந்த விபரங்கள் தெரிவிக்கின்றன. “அது ஒரு பொதுப்பணித்துறை வான்கப்பல், ஆராய்ச்சிக்காக, முக்கியமாக வானிலை நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது,” என்று சீனாவின் வெளியுறவுத் துறை தெரிவித்தது. “மேற்கு நோக்கிய காற்றாலும், தன்னை திசைத்திருப்பிக் கொள்ளும் குறைந்த திறனாலும் பாதிக்கப்பட்டு, அந்த வான்கப்பல் அதன் திட்டமிட்ட போக்கில் இருந்து திசை திரும்பிவிட்டது.”

சனிக்கிழமை அமெரிக்க விமானப்படையால் அழிக்கப்பட்ட இதைப் போன்ற டஜன் கணக்கான பலூன் பயணங்களை நாசா மேற்கொண்டுள்ளது. ஹவாய் பல்கலைக்கழக பேராசிரியர் பீட்டர் கோர்தம் வழங்கிய ஒரு நாசா விளக்கக்காட்சியின்படி, 'பலூன்கள், விண்வெளிக்கு அருகில் தேவைப்படும் அல்லது செய்யக்கூடிய தனித்துவமான விஞ்ஞான ஆய்வுகளுக்கு வான்வழி வாய்ப்புகளை வழங்குகின்றன.'

நாசாவின் ஆர்க்டிக் பலூன் திட்டத்தின் இணையதள தகவல்களின்படி, 'இந்த பிரபஞ்சம், வளிமண்டலம், சூரியன் மற்றும் விண்வெளி சூழல் பற்றிய முக்கியமான கேள்விகளுக்கு பதிலளிக்க உதவியாக, விஞ்ஞானிகள், பலூன் விமானங்களின் போது சேகரிக்கப்பட்ட விஞ்ஞானப்பூர்வ தரவுகளைப் பயன்படுத்துகிறார்கள்.'

2016 இல் நியூசிலாந்தின் வனாகா விமான நிலையத்தில் இருந்து ஏவப்பட்ட நாசாவின் பெரும் காற்றழுத்தம் நிறைந்த பலூனில் காற்று நிரப்ப ஒரு தொழிலாளர் உதவுகிறார். பௌதீக மற்றும் வானிலை ஆய்வுகளுகாக விஞ்ஞானிகள் வழக்கமாக வளிமண்டலத்தில் பலூன்களைப் பறக்க விடுகிறார்கள். [Photo: NASA/Bill Rodman]

பிரதானமாக அரசு எந்திரத்தில் உள்ளவர்களுக்காக எழுதப்பட்ட வெளியீடுகளில், மிகவும் சர்ச்சைக்கிடமற்ற ஒரு மதிப்பீட்டைக் காண முடிந்தது. அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளுடன் தொடர்புடைய ஒரு முன்னணி சிந்தனைக் குழுவான மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் (CSIS) வெள்ளிக்கிழமை பின்வருமாறு கருத்துரைத்தது, 'இது வழி தவறி சென்ற ஒரு செயல் பிறழ்ந்த வானிலை பலூன் என்ற விளக்கம் இருக்கலாம். பல 'அடையாளந்தெரியாத பறக்கும்   பொருட்கள் (UFO) தென்படுவதற்கு', கட்டுப்பாடு இழந்த வானிலை பலூன்கள் தான் அடிப்படையாக உள்ளன.”

இந்தச் சம்பவம் 'சீனாவுக்குச் சங்கடமானது, சில சீன வானிலை ஆய்வாளர்கள் மங்கோலியாவின் உட்பிரதேசங்களுக்கு மீண்டும் பணியமர்த்துவதற்காக அவர்களின் மூட்டை முடுச்சுக்களைக் கட்டக்கூடும்' என்பதையும் CSIS சேர்த்துக் கொண்டது.

ஆனால் ஊடகங்களிலோ, இப்படி ஒரு மதிப்பீடு எங்கேயும் இல்லை. அந்த வெள்ளை உருண்டை ஓர் 'உளவு பலூன்' என்பது உண்மையாக எடுத்துக் கொள்ளப்படுகிறது, மிகவும் வழக்கமான மற்றும் நியாயமான விளக்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறை,  அதாவது நாசா டஜன் கணக்கான முறை நடத்தி இருப்பதைப் போல இதுவும் ஒரு அமைதியான ஆராய்ச்சி திட்டம் என்று அமெரிக்க ஊடகங்களின் எந்த பிரிவும் அறிவுறுத்தவும் கூட இல்லை.

அதற்குப் பதிலாக, பைடென் நிர்வாகம், குடியரசுக் கட்சியுடனும் அமெரிக்க ஊடகங்களின் ஆதரவுடனும் இணைந்து செயல்பட்டு, சீன-விரோத வெறுப்பு மற்றும் வெளிநாட்டவர் மீதான விரோதத்தைத் தூண்டுவதற்கு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியது.

பல ஆண்டுகளாகத் தயாரிக்கப்பட்டு வரும் சீனாவுடனான அமெரிக்காவின் போர் திட்டங்களை ஏற்றுக் கொள்ளுமாறு பொதுமக்களை நிபந்தனைக்கு உட்படுத்துவதும், சீனாவின் கடற்கரையில் இருந்து வெறும் சில மைல்கள் தொலைவில் தாக்கும் ஏவுகணைகளைக் கொண்டு அமெரிக்கா சுற்றி வளைத்து வந்தாலும், சீன-அமெரிக்க மோதலில் சீனா தான் வலிந்து வம்புக்கு வருகிறது என்பதாக சித்தரிப்பதுமே இந்தப் பிரச்சாரத்தின் நோக்கமாகும்.

இந்த வாரத்தின், இந்த 'ஏற்படவிருக்கும் அச்சுறுத்தல்' கதை நன்றாகவே புனையப்பட்டுள்ளது. ஒன்றுவிடாமல் இந்த மாதிரியான முழுமையான ஊடக விஷமப் பிரச்சாரம் தான், 1991 வளைகுடாப் போர், 1998 யூகோஸ்லாவியா மீதான குண்டுவீச்சு, 2001 ஆப்கானிஸ்தான் படையெடுப்பு, 2003 ஈராக் படையெடுப்பு மற்றும் 2011 சிரியா மற்றும் லிபியா மீதான குண்டுவீச்சு ஆகியவற்றை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்பட்டது. இந்தக் கூற்றுக்கள் அனைத்தும் — அனைத்திற்கும் மேலாக சதாம் ஹுசைனின் ஈராக் அரசாங்கம் 'பேரழிவுகரமான ஆயுதங்களை' வைத்திருந்ததாக புஷ் நிர்வாகத்தின் வலியுறுத்தல்கள் — நேர்மையற்றவை என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

ஆனால் அமெரிக்க மக்கள் அனைவரும் முட்டாள்கள் என்பது போல் செயல்படும் ஊடகங்கள், அமெரிக்காவின் அடுத்த 'போர் தெரிவுக்கு' அடித்தளமிடுவது பயனுள்ள விளைவைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையில், அவை அவற்றின் பாத்திரத்தைத் தொய்வின்றி செய்து வருகின்றன. இந்த முறை, இலக்கில் இருப்பது ஒரு வறிய முன்னாள் காலனி நாடல்ல. மாறாக உலகின் இரண்டாவது பெரிய இராணுவ வரவுசெலவு திட்டக்கணக்குடன் உலகின் இரண்டாவது மிகப்பெரிய அணுவாயத நாடாகும்.

அமெரிக்கா மற்றும் நேட்டோ சக்திகள் உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவுடனான போரைப் பொறுப்பற்ற முறையில் தீவிரப்படுத்தி வரும் நிலையிலும் கூட, ஆளும் வர்க்கம் சீனாவுடனான மோதலுக்கு தயாராகி வருகிறது, இதற்கு ரஷ்யாவுக்கு எதிரான போர் ஓர் அவசியமான முன்நிபந்தனையாகப் பார்க்கப்படுகிறது.

சீனாவுடனான போருக்குத் தயாராவதை அதன் அதிபட்ச முன்னுரிமை ஆக்க வேண்டுமென பென்டகனை வலியுறுத்தி, 2018 இல் அமெரிக்கா ஒரு தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தை ஏற்றது. இராணுவம் இந்தக் கருத்தாக்கத்துடன் செயல்பட்டு வந்த போது, அமெரிக்க ஊடகங்கள் இத்தகைய திட்டங்களை அமெரிக்க மக்களிடம் இருந்து மறைத்து வைத்தன.

ஆனால் இவ்வாரம் இந்த பலூன் விவகாரத்தில் ஊடகங்களின் விஷமப் பிரச்சாரம், சீனாவுடன் ஒரு போர் ஏற்படும் சாத்தியக்கூறு பற்றிய கருத்துரு ஒரு சாதகமான அம்சம் என்றும், இதற்கு அமெரிக்கா தயாராவது அவசியமென்றும் அறிமுகப்படுத்த பயன்படுத்தப்பட்டது.

2025 க்குள் சீனாவுடன் அமெரிக்கா ஒரு போரை முகங்கொடுப்பதாக விமானப்படை ஜெனரல் மைக் மினிஹனின் அறிவிப்பு, ஊடகங்களால் ஓர் ஆழ்ந்த அறிவுப்பூர்வ பாரபட்சமற்ற எச்சரிக்கையாகக் கையாளப்படுகிறது.

அவர், தைவான், ஜப்பான் மற்றும் சீனக் கடற்கரையை ஒட்டியுள்ள பிற தீவுகளைக் குறிப்பிட்டு, 'போரிட்டு, சங்கிலித் தொடர் போன்ற நீண்ட முதல் தீவுக் கூட்டங்களை ஜெயிக்க தயாராக இருக்கும் ஒரு வலுவூட்டப்பட்ட, ஆயத்தமான, ஒருங்கிணைந்த மற்றும் சுறுசுறுப்பான கூட்டுப் படை உபாயக் குழுவை' கட்டமைக்க அவர் அழைப்பு விடுத்தார்.

அத்தகைய ஒரு போரில் அவருடைய கட்டளையகத்தின் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இறக்க நேரிடும் என்பதைச் சூசகமாக சுட்டிக்காட்டி, மினிஹன் அவர்களுக்குக் கூறுகையில் 'அவர்களின் தனிப்பட்ட விவகாரங்களைப் பரிசீலித்து, சட்டப்பூர்வமாக தயாராக மற்றும் ஆயத்தமாக இருப்பதை உறுதிப்படுத்த அவர்கள் சேவையாற்றும் களத்தின் சட்ட அதிகாரியை வேண்டுமானால் சந்திக்கத் திட்டமிடுமாறு' அறிவுறுத்தினார்.

Meet the Press இன் தொகுப்பாளர் சக் டோட், ஜனநாயகக் கட்சி செனட்டர் கோரி புக்கரிடம், “தைவான் விவகாரத்தில் சீனாவுடன் தயாராவதில் நீங்கள் எதை வேண்டுமானாலும் ஆதரிக்கப் போகிறீர்களா? அந்தச் சாத்தியக்கூறுக்காக நாம் இன்னும் நிறைய தயாரிப்பு செய்ய வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

கடந்த வாரத்தில் தான், பிலிப்பைன்ஸில் கூடுதல் இராணுவத் தளங்களை அமைக்க அமெரிக்கா ஒரு திட்டத்தை அறிவித்தது. அங்கிருந்து அது சீனா மீது தாக்குதல் நடத்த முடியும். சீனாவுடனான ஒரு மோதலுக்கான தயாரிப்பில் ஜப்பானை மறுஇராணுவமயமாக்குவது சம்பந்தமாக ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடனும் பைடென் விவாதங்கள் நடத்தினார்.

ஜோடிக்கப்பட்ட அமெரிக்காவுக்கு எதிரான அச்சுறுத்தல்களைப் பெரிதுபடுத்தியும், அதன் போர்களின் இலக்குகளுக்கு எதிராக அமெரிக்காவின் ஆக்ரோஷமான நடவடிக்கைகளை மூடிமறைத்தும், ஊடகங்கள் அமெரிக்க போர் திட்டங்களை முன்னெடுப்பதற்கு எவ்வாறு செயல்படுகின்றன என்பதற்கு இந்த ஒட்டுமொத்த சம்பவமும் ஒரு படிப்பினையாகும்.

சீனாவைப் பூதாகரமாக காட்டுவதற்கான இந்தச் சமீபத்திய பிரச்சாரம், ட்ரம்ப் மற்றும் பைடென் நிர்வாகங்கள் இரண்டுமே வூஹான் ஆய்வக பொய்யை ஊக்குவிக்க செய்தவற்றுடன் சமாந்தரங்களைக் கொண்டுள்ளன. அந்த வூஹான் ஆய்வகப் பொய் என்பது கோவிட்-19 வூஹான் நுண்கிருமியியல் பயிலகத்தில் விஞ்ஞான ஆராய்ச்சியால் உருவாக்கப்பட்டது என்ற சூழ்ச்சி தத்துவமாகும்.

பெரும் பிரயத்தனத்துடன் மேற்கொள்ளப்பட்ட இந்த இரண்டு பொய்களுமே, அமெரிக்க அரசாங்கங்களின் போர் திட்டங்களுக்கு அமெரிக்க மக்களிடையே குறிப்பிடத்தக்க ஆதரவு இல்லை என்ற அடிப்படை யதார்த்தத்தைப் பிரதிபலிக்கின்றன. ஆனால் செயலூக்கமற்ற இந்த எதிர்ப்பு தொழிலாள வர்க்கத்தை நோக்கி ஒரு நோக்குநிலையோடு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் நனவுப்பூர்வமான ஒரு வெகுஜன போர்-எதிர்ப்பு இயக்கமாக மாற்றப்பட வேண்டும்.

Loading