மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
இருபது ஆண்டுகளுக்கு முன்னர், மார்ச் 20, 2003 இல், அமெரிக்க அரசாங்கம் ஈராக்கிற்கு எதிராக ஒரு தூண்டுதலற்ற சட்டவிரோத போரைத் தொடங்கி, 21 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய குற்றங்களில் ஒன்றை நடத்தியது. அது நிராயுதபாணியான அந்த நாட்டின் மீது (“அதிர்ச்சியூட்டி அச்சுறுத்தும்”) செறிவார்ந்த குண்டுவீச்சைத் தொடங்கியது. அதில் மின்சாரம் மற்றும் குடிநீர் வினியோகம், உணவு பதப்படுத்தல் மற்றும் மருத்துவப் பொருட்களின் உற்பத்தி உட்பட அந்நாட்டின் சமூக உள்கட்டமைப்பும் அதன் பெரும்பாலான ஆயுதப் படைகளும் அழிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து தொழில்நுட்ப ரீதியில் மிக அதிநவீன ஆயுதமேந்திய 130,000 இக்கும் அதிகமான அமெரிக்க துருப்புக்கள் அந்த நாசமாக்கப்பட்ட நாட்டின் மீது படையெடுத்தனர். அவர்கள் மிகுதியாக இருந்த ஒழுங்கமைக்கப்பட்ட ஈராக்கிய எதிர்ப்பையும் ஊடறுத்து வெறும் இரண்டே வாரங்களில் பாக்தாத்தை அடைந்தனர். இன்னொரு வார படுகொலைக்குப் பின்னர், அமெரிக்கப் படைகள் அந்த தலைநகரைக் கைப்பற்றின. ஆயிரக் கணக்கில் எண்ணற்ற ஈராக்கிய மரணங்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஒரு தரப்பிலான இறுதி போரில் அமெரிக்க தரப்பில் வெறும் 34 பேர் மட்டுமே உயிரிழந்தனர்.
ஒட்டுமொத்த நடவடிக்கைகளின் இயல்பையும் வைத்துப் பார்க்கையில், ஈராக்கில் புஷ் நிர்வாகம் கையாண்ட அணுகுமுறைகள் ஒட்டுமொத்தமாக குற்றகரமாக இருந்தன. ஈராக்கிய ஆட்சியாளர் சதாம் ஹூசைனைக் கொல்லும் ஒரு முயற்சியில் அவர் மறைந்திருந்ததாகக் கருதப்பட்ட அரசு கட்டிடங்கள் மீது விமானந்தாங்கி போர்க்கப்பலில் இருந்து நடத்தப்பட்ட ஒரு திடீர் ஏவுகணை தாக்குதலுடன் அந்தப் போர் தொடங்கியது. அதில் தொடர்ந்து வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் போன்ற சர்வதேச சட்டத்தால் தடைவிதிக்கப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. அவை நகரங்களை எரித்ததுடன், மனித உடல்களில் பயங்கரமான தீக்காயங்களை ஏற்படுத்தின. இதற்கும் கூடுதலாக, அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படைகள், நீண்டகால புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய மற்றும் பிறப்பிலேயே கோரமான குறைபாடுகளை உண்டாக்கும் விதமான, ஒரு மதிப்பீட்டின்படி வீரியம் குறைக்கப்பட்ட 440,000 யுரேனிய குண்டுகளை வீசியது.
அந்தப் போரின் போது, அமெரிக்கப் படைகளால் மிகவும் கொடூரமான சித்திரவதை வடிவங்கள் பயன்படுத்தப்பட்டன. அபு கிரைப் சிறையில் இருந்து வந்த அதிர்ச்சியூட்டும் புகைப்படங்களில் அவை வெளிப்பட்டன. புஷ் நிர்வாக வழக்கறிஞர்கள் இந்தச் சித்திரவதைக்கு அங்கீகாரம் வழங்கினர். தலைமை தளபதியாக ஜனாதிபதிக்கு நடைமுறையளவில் வரம்பில்லா அதிகாரங்கள் இருப்பதாக அவர்கள் வலியுறுத்தினர்.
அந்தப் படையெடுப்பைத் தொடர்ந்து எட்டு ஆண்டு காலம் நாடு ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிட்டவாறு ஓர் ஒட்டுமொத்த சமூகத்தையும் திட்டமிட்டு அழிக்கும் விதமான ஒரு 'சமூகப் படுகொலையே' அந்தப் படையெடுப்பின் விளைவாக இருந்தது. அந்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பானது, மத்திய கிழக்கில் மிகவும் முன்னேறிய நாடுகளில் ஒன்றை, பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, அரசியல் ரீதியாகவும் மத்தியகால காட்டுமிராண்டித்தனத்தின் நிலைமைகளுக்குக் கொண்டு சென்றது. அமெரிக்க ஆட்சியாளர்கள் திட்டமிட்டபடி மதவாத பிளவுகளை ஊக்குவித்ததோடு, அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எந்தவித ஒருங்கிணைந்த எதிர்ப்பையும் தடுக்கும் முயற்சியில் சுன்னி மற்றும் ஷியைட் முஸ்லீம்களுக்கு இடையேயும், முஸ்லீம்களுக்கும் சிறிய மத சிறுபான்மையினருக்கு இடையேயும் குறுங்குழுவாத போர்முறையைத் தூண்டிவிட்டனர்.
வேண்டுமென்றே ஓர் ஆக்கிரமிப்புப் போரை நடத்தியதில், அமெரிக்க அரசாங்கமும் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ், ரிச்சர்ட் சென்னி, டொனால்ட் ரம்ஸ்பீல்டு, கொண்டலிசா ரைஸ் மற்றும் கொலின் பௌல் உட்பட அதன் முன்னணி அதிகாரிகளும் போர் குற்றங்களுக்காக குற்றவாளிகளாக இருந்தனர். பிரிட்டன் பிரதம மந்திரி டோனி பிளேயர் போன்ற கூட்டாளிகளுடன் சேர்ந்து, அவர்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நூரெம்பேர்க் தீர்ப்பாயம் வகுத்த அடிப்படை கோட்பாடுகளை மீறினர். தூண்டுதலற்ற ஆக்கிரமிப்பு போர்களைத் தொடங்கியதே நாஜிக்களின் மற்ற எல்லா குற்றங்களுக்கும் காரணமான அவர்களின் முக்கிய குற்றமாக இருந்தது என்று நூரெம்பேர்க் தீர்ப்பாயம் கண்டறிந்தது. (2004 இல் அயர்லாந்து டப்ளினில் நடந்த விவாதத்தில் டேவிட் நோர்த் வழங்கிய கருத்துக்களைக் கீழே காண்க.)
அமெரிக்க ஊடகங்கள் ஈராக் போர் நினைவு தினத்திற்கு வெறும் சம்பிரதாயமான கவனத்தை மட்டுமே வழங்கின. அந்தப் போரின் மிகப் பெரியளவிலான குற்றத்தையும் அதில் ஊடகங்கள் வகித்த சொந்த பாத்திரத்தையும் மூடிமறைப்பதே அந்தச் செய்திகளின் நோக்கமாக உள்ளது.
எப்போதும் போல, நியூ யோர்க் டைம்ஸின் பக்கங்களில் எரிச்சலூட்டும் தன்மை அதன் மிக அபத்தமான வெளிப்பாட்டைக் கண்டது. '20 ஆண்டுகள் ஆன நிலையில், ஈராக்கைப் பற்றி ஒரு கேள்வி நீடிக்கிறது: அமெரிக்கா ஏன் படையெடுத்தது?' என்ற தலைப்பில் மேக்ஸ் பிஷ்ஷரின் ஒரு செய்தி பகுப்பாய்வு, அந்தப் போரைத் தொடங்குவதில் புஷ் நிர்வாகத்தின் நோக்கங்களை நிச்சயமற்றதாகவும், பிஷ்ஷர் பேட்டி எடுக்கும் ஒரு 'அறிஞரின்' வார்த்தைகளில் கூறினால், “அடிப்படையில் தெரியாமல்' நடந்து விட்டதைப் போலவும் கையாள்கிறது.
டைம்ஸ் கட்டுரை, போர் தொடுக்க முடிவெடுப்பதில் துணை ஜனாதிபதி சென்னி போன்ற முன்னாள் எண்ணெய்துறை அதிகாரிகளும் மற்றும் புஷ் வகித்த முக்கியத்துவத்தைக் குறிப்பிடாமல், 'ஒரு காலத்தில் வியாபித்திருந்த கோட்பாடு: ஈராக்கின் பரந்த எண்ணெய் வளங்களைக் கட்டுப்பாட்டில் எடுக்க வாஷிங்டன் படையெடுத்தது' என்பதைத் திட்டவட்டமாக நிராகரிக்கிறது. சதாம் ஹூசைனிடம் 'பேரழிவுகரமான ஆயுதங்கள்' இருந்ததாக கூறப்பட்ட திட்டமிட்ட பொய்யை ஒரு வகையான குழு சிந்தனை என்று அது கூறுகிறது. அதில் 'பெரும் எண்ணிக்கையிலான முக்கிய மூத்த அதிகாரிகள் அனைவரும் அவர்களின் சொந்த காரணங்களுக்காக திரு. ஹூசைனைப் பதவியிலிருந்து இறக்க விரும்பி ஆலோசித்ததாகவும், பின்னர் மிகவும் தயாராக கிடைக்கக்கூடிய நியாயப்படுத்தல்களை நம்பி ஒருவருக்கொருவர் அதுபற்றிப் பேசிக் கொண்டதாகவும்' அந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது.
டைம்ஸின் “பகுப்பாய்வு”, “பேரழிவுகரமான ஆயுதங்கள்” பிரச்சாரத்தின் முக்கிய ஊக்குவிப்பாளர்களில் ஒருவராக டைம்ஸ் வகித்த பாத்திரம் பற்றிய எந்தவித விவாதத்தையும் மிகவும் கவனத்துடன் தவிர்க்கிறது. ஜூடித் மில்லர் மற்றும் மைக்கேல் கோர்டனால் எழுதப்பட்ட அறிக்கைகள், மிகவும் இழிவுகரமாக 'அணுகுண்டு பாகங்களுக்கான தேடலை ஹூசைன் தீவிரப்படுத்துவதாக அமெரிக்கா கூறுகிறது” என்ற தலைப்பில் செப்டம்பர் 2002 இல் முதல் பக்கத்தில் வெளியான ஒரு பிரத்தியேகக் கட்டுரை, புஷ் நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகளின் கூற்றை அப்படியே ஒப்பித்தது. அது ஒட்டுமொத்தமாக பெருநிறுவன ஊடகங்களால் எடுத்துக் கொள்ளப்பட்டன. பின்னர் வெள்ளை மாளிகை அதிகாரிகள், அவர்களே பரப்பிய இத்தகைய அறிக்கைகளை ஈராக்கிற்கு எதிரான 'ஆதாரமாக' மேற்கோள் காட்டினார்கள்.
போருக்கான நோக்கங்கள் 'தெரியாதவை' அல்ல. உண்மையில் சொல்லப்போனால், அவை அந்த நேரத்திலேயே அறியப்பட்டிருந்தன. உலகம் முழுவதும் பத்து மில்லியன் கணக்கானவர்கள் அந்த நிர்வாகத்தின் பொய்களை நிராகரித்து, “எண்ணெய்க்காக இரத்தம் சிந்தக்கூடாது' என்று கோரி அந்த படையெடுப்புக்கு முன்னர் நடந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்தனர். ஆர்ப்பாட்டங்களின் அளவும் வீச்சும் மிகப் பெரியதாக இருந்ததால், அமெரிக்காவும் மற்றும் 'உலக மக்கள் கருத்தும்' என்ற 'இரண்டு வல்லரசுகள்' இருப்பதாக நியூ யோர்க் டைம்ஸே கருத்துரைக்க வேண்டியிருந்தது.
மார்ச் 21, 2003 இல், அந்தப் படையெடுப்பு தொடங்கிய மறுநாள், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த் அந்தப் போரின் தன்மையை விவரித்து ஓர் அறிக்கை வெளியிட்டார்:
தூண்டுதலின்றி, சட்டவிரோதமாக அமெரிக்கா ஈராக் மீது நடத்திய படையெடுப்பு வரலாற்றில் அவப்பெயருடன் உயிர்வாழும் ஓர் நிகழ்வாகும். வாஷிங்டனில் உள்ள இந்தப் போரைத் தொடங்கிய அரசியல் குற்றவாளிகளும், இரத்த வெள்ளத்தில் நாட்டம் கொண்ட வெகுஜன ஊடகங்களில் உள்ள கேவலமான அயோக்கியர்களும், இந்த நாட்டை அவமானத்தில் மூழ்கடித்துள்ளனர். ஒரு சிறிய நிராயுதபாணியான நாட்டை வெறும் இடிபாடுகளாக ஆக்கிய ஒரு மிருகத்தனமான கட்டுக்கடங்காத இராணுவ சக்தியின் காட்சியைக் கண்டு உலகின் ஒவ்வொரு பகுதியிலும் நூறு மில்லியன் கணக்கான மக்கள் அதிர்ந்து போயினர். இந்த ஈராக் படையெடுப்பு தொல்சீர் வார்த்தையின் அர்த்தத்தில் ஓர் ஏகாதிபத்திய போராகும்: இது அமெரிக்காவில் உள்ள நிதிய பெருநிறுவன தன்னலக்குழுவின் மிகவும் பிற்போக்குத்தனமான மற்றும் சூறையாடும் பிரிவுகளின் நலன்களுக்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு மோசமான ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகும். ஈராக்கின் பரந்த எண்ணெய் வளங்கள் மீது கட்டுப்பாட்டை நிறுவுவதும், நீண்டகாலமாக ஒடுக்கப்பட்ட அந்த நாட்டை அமெரிக்க காலனித்துவத்திற்கான பாதுகாவலராக மாற்றுவதுமே அதன் வெளிப்படையான மற்றும் உடனடி நோக்கமாக உள்ளது.
சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்கு மத்தியிலும் மற்றும் அதைத் தொடர்ந்தும், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் கீழ் அமெரிக்கா தொடங்கிய தொடர்ச்சியான முடிவில்லாத படையெடுப்புகள் மற்றும் ஆக்கிரமிப்புகளின் ஒரு பகுதியாக அந்தப் போர் இருந்தது. முதல் வளைகுடா போர் (1990-91); சேர்பியா மீது குண்டுவீச்சு (1999); ஆப்கானிஸ்தான் படையெடுப்பு (2001); லிபியா மீது குண்டுவீச்சு (2011) மற்றும் சிரியாவில் அமெரிக்க ஆதரவிலான உள்நாட்டுப் போர் (2011) ஆகியவை அதில் உள்ளடங்கும். இவை அமெரிக்க முதலாளித்துவத்தின் வலிமையை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, உலகை ஜெயிப்பதற்காக இராணுவப் பலத்தைப் பயன்படுத்தும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் முயற்சியானது, தீவிர நெருக்கடியில் இருந்து எழுகிறது. இதை WSWS அறிக்கை பின்வருமாறு விளக்கியது:
தொடங்கியுள்ள இந்த மோதலின் ஆரம்ப கட்டங்களின் விளைவு என்னவாக இருந்தாலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் பேரழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. அது உலகை வெல்ல முடியாது. அது மத்திய கிழக்கின் பெருந்திரளான வெகுஜன மக்கள் மீது காலனித்துவத் தளைகளை மீண்டும் திணிக்க முடியாது. அதன் உள்நாட்டு சிக்கல்களுக்கு ஒரு நம்பகமான தீர்வை அது போர் மூலமாகக் காண முடியாது. மாறாக இந்தப் போர் ஏற்படுத்தும் எதிர்நோக்கான சிரமங்களும் அதிகரித்து வரும் எதிர்ப்பும் அமெரிக்க சமூகத்தின் அனைத்து உள் முரண்பாடுகளையும் தீவிரப்படுத்தும்.
ஈராக் போரின் இந்த 20ஆம் நினைவாண்டு, ரஷ்யாவுக்கு எதிராக விரிவாக்கப்பட்டு வரும் அமெரிக்க-நேட்டோ போருக்கு மத்தியில் நிகழ்கின்றது. இந்தப் போர், அணுஆயுதங்களைக் கொண்டு ட்ரூமன் நிர்வாகம் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களைச் சாம்பலாக்கியதற்குப் பின்னர் முதல்முறையாக அணுஆயுதங்களைப் பயன்படுத்தப்படும் அபாயத்துடன் ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் உள்ளடக்கிய இன்னும் பரந்த போராக மாறுவதற்கு அச்சுறுத்துகிறது.
அமெரிக்கக் கொள்கையின் அதே அடிப்படை நலன்களே ரஷ்யாவுக்கு எதிரான போரை உந்தி வருகிறது என்றாலும், ஈராக்கிற்கு எதிராக புஷ் நிர்வாகத்தினது போரின் முந்தைய நடுத்தர வர்க்க விமர்சகர்கள், ரஷ்யாவுக்கு எதிரான போருக்கு மிகவும் தீவிர ஆதரவாளர்களாக மாறியிருக்கிறார்கள். இப்போது பைடென் நிர்வாகத்தின் தலைமையில் உள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தப் போரைத் தூண்டிவிட்டதுடன், அதன் விளைவுகள் என்னவாக இருந்தாலும், ரஷ்யாவின் இராணுவத் தோல்வி வரையில் அதைப் பின்தொடர தீர்மானமாக உள்ளது. பெருந்தொற்றால் மிகப் பெரியளவில் தீவிரப்படுத்தப்பட்டு ஒன்றோடொன்று குறுக்கிடும் நெருக்கடிகளை முகங்கொடுத்து வரும் அமெரிக்க ஆளும் வர்க்கம் பேரழிவை நோக்கி செல்கிறது.
நேற்று 'பேரழிவுகரமான ஆயுதங்கள்' என்ற பொய்களை விளம்பரப்படுத்திய ஊடகங்கள், இந்தப் பெருந்தொற்றுக்காக சீனா மீது பழிசுமத்த 'வூஹான் ஆய்வகக் கசிவு' புரளியைக் கிளறிவிட்டு வருவதுடன், 'தூண்டுதலின்றி நடத்தப்பட்ட ரஷ்ய ஆக்கிரமிப்பு' என்றும், உக்ரேனில் நாஜி வகைப்பட்ட அட்டூழியங்கள் நடத்தப்படுவதாகவும் அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்களைப் பரப்பி வருகின்றன.
2003 இன் அந்தப் பொய்களை விட 2023 இன் இந்தப் பொய்கள் இன்னும் மிகப் பெரியவை என்பதோடு மிகவும் அப்பட்டமாக உள்ளன. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் மிகவும் சக்தி வாய்ந்த படைகள் என்ற ஒரு நிஜமான அச்சுறுத்தலுக்கு எதிராக ரஷ்ய தன்னலக் குழு அதன் வர்க்க நலன்களைப் பாதுகாக்க எடுத்த ஒரு அவநம்பிக்கையான முயற்சியே புட்டினின் பிற்போக்குத்தனமான படையெடுப்பாகும்.
ஈராக் படையெடுப்புக்கு இருபது ஆண்டுகளுக்குப் பின்னர், அதற்குக் காரணமானவர்கள் அனைவரும் சுதந்திரமாக விடப்பட்டிருக்கிறார்கள். ஆனால் உலகம் முழுவதிலும் மிகப் பெரியளவில் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியானது, உலக சமூகத்தைச் சோசலிச மறுஒழுங்கமைப்பு செய்வதன் பாகமாக, ஏகாதிபத்திய போருக்கு முடிவு கட்டி அதற்குக் காரணமானவர்களைக் பொறுப்புக்கூற கொண்டு வரும் ஒரு பாரிய இயக்கத்திற்குச் சக்தி வாய்ந்த புறநிலை அடித்தளத்தை வழங்குகிறது.