மலிவு விலையில் மீன்பிடி உபகரணங்கள் மற்றும் வசதிகளுக்காகப் போராடு! இலங்கை மற்றும் இந்திய மீனவர்களை பிரிக்கும் தேசியவாத ஆத்திரமூட்டல்களை நிராகரி! 

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

இலங்கையில் ஊர்காவற்துறை மீனவர் நடவடிக்கைக் குழு அண்மையில் வெளியிட்ட அறிக்கையை கீழே வெளியிடுகிறோம்.

கடற்றொழிலாளர்களாகிய நாமும், இலங்கையில் உள்ள ஒவ்வொரு தொழிலாளியையும் ஏழைகளையும் போலவே, இந்த கடுமையான நெருக்கடியில் எங்கள் தொழிலைத் தொடர முடியாமல், வாழ்வதற்குப் போதிய வருமானம் இல்லாத நிலையில், நமது இருப்பை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள ஊர்காவற்துறை தீவில் வயதான மீனவர் ஒருவர் வலையை இழுக்கின்றார்.

மீன்பிடி உபகரணங்கள், மண்ணெண்ணெய் மற்றும் டீசலினதும் விலை உயர்வுடன் சேர்ந்து நாம் எதிர்கொள்ளும் மையப் பிரச்சினை வாழ்க்கைச் செலவுகள் விண்ணைத் தொடுமளவு உயர்ந்திருப்பதே ஆகும். இலாபம் ஈட்டும் கடல் தொழிற்துறைகளால் ஏற்படுத்தப்படும் கடலின் சூழலியல் சிதைவின் விளைவாக, பிடிக்கக்கூடிய மீன்களின் எண்ணிக்கை குறைவதும் ஒரு பெரிய பிரச்சனையாகும்.

கடந்த ஓகஸ்ட் மாதம், விக்கிரமசிங்க அரசாங்கம் மண்ணெண்ணெய் ஒரு லிட்டர் விலையை ஒரே இரவில் 87 ரூபாயில் இருந்து 340 ரூபாயாக உயர்த்தியது. இது 290 சதவீதத்திற்கும் அதிகமான அதிகரிப்பாகும். மார்ச் 1 அன்று மண்ணெண்ணெய் விலை குறைக்கப்பட்டாலும், அது வெறும் 50 ரூபா அற்பத் தொகையே குறைந்துள்ளது. அரசாங்கம் எரிபொருள் மானியங்களைத் இல்லாமல் ஆக்கிவிட்டதோடு எந்த சலுகைகளையும் வழங்குவதை நிராகரித்துள்ளது. படு பாதகமான மண்ணெண்ணெய் பங்கீட்டு முறைமை ஓரளவுக்கு தளர்த்தப்பட்டாலும், இந்தப் பிரச்சனைகள் நீடிக்கின்றன.

எரிபொருள் விலையேற்றம் என்பது பெரும்பாலான சிறிய அளவிலான மீனவர்களை தொலைதூர மீன்பிடித்தலை மட்டுப்படுத்த நிர்ப்பந்தித்துள்ளதுடன் காலாவதியான, வசதியற்ற மற்றும் பாதுகாப்பற்ற மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தத் தள்ளப்பட்டுள்ளனர். எஞ்சின் மூலம் இயங்கும் மீன்பிடி படகில் ஒரு பயணத்திற்கு குறைந்தபட்சம் 20 லிட்டர் மண்ணெண்ணெய் தேவை.

வலைகள் மற்றும் வலை தயாரிக்கும் பொருட்கள், அதே போல் படகு பராமரிப்புக்கும் அதிகளவில் செலவாகின்றது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 50,000 ரூபாயாக இருந்த மீன்பிடி வலையின் விலை இப்போது 100,000 ரூபாயாக உள்ளது. பிரமாண்டமான இழுவை படகுகள் பெரும்பாலும் கடலில் விரிக்கப்பட்டிருக்கும் மீன்பிடி வலைகளை சேதப்படுத்துகின்றன. இதனால் எங்களுக்கு கணிசமான இழப்பு ஏற்படுகிறது.

கட்டுமரங்களைப் பயன்படுத்தும் ஏழை மீனவர்கள், தங்களின் பழுதடைந்த கட்டுமரங்களையும் படகுகளையும் திருத்த முடியாத நிலையில், கடலில் பயணிக்க முடியாதுள்ளனர்.

மீனவர்களுக்கு தங்களுடைய மீன்களை சந்தைக்கு எடுத்துச் செல்ல மலிவான போக்குவரத்து வசதி இல்லாததோடு, அவர்களின் மீன்களுக்கு உத்தரவாத விலை இல்லை. ஆனால் பணக்கார இடைத்தரகர்கள், வணிகர்கள் மற்றும் பெரிய மீன் ஏற்றுமதி நிறுவனங்கள் பெரும் இலாபத்தை அறுவடை செய்கின்றன.

மீன்களின் விலை குறைவதால் நமது வருமானத்தில் கடும் சரிவு ஏற்படுகிறது. ஊர்காவற்துறையை ஒட்டியுள்ள எழுவை தீவில், நவீன சேமிப்பு வசதிகள் இல்லாத மீனவர்கள், விற்பனையாகாத மீன்களை கடற்கரை ஓரங்களில் கொட்டுவது தற்போது சகஜமானதாக ஆகியுள்ளது.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக 1983 முதல் கொழும்பு அரசாங்கங்களால் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட 26 வருட கால இனவாத யுத்தம் எமது சமூக அவலத்திற்கு மற்றொரு முக்கிய காரணமாகும். வடக்கில், இந்தப் போரின் போது கணிசமான மக்கள் இடம்பெயர்ந்ததுடன் ஒரு கட்டத்தில் தங்கள் சொந்த உடமைகள் அனைத்தையும் இழந்தனர்.

1990 ஆம் ஆண்டில், இலங்கை இராணுவம் முன்னேறியதால் வடக்கு குடாநாட்டு தீவுகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. அந்த குடும்பங்கள் 2000 ஆம் ஆண்டுக்கு பிறகே சொந்த இடங்களுக்குத் திரும்ப முடிந்தது.

யுத்தத்தினால் எமது வீடுகள் அழிந்துவிட்டன. இன்னும் அரைகுறையாகக் கட்டப்பட்ட வீடுகளிலேயே வாழ்ந்து வருகின்றோம். யாழ்ப்பாண குடாநாட்டில் வசிக்கும் பெரும்பாலான மக்களைப் போலவே, நாமும் நிலத்தடி நீர் உவர் நீராக இருப்பதால் குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்கிறோம். எங்கள் வீதிகள் மோசமாகவும், அபிவிருத்தி செய்யப்படாத நிலையிலும் உள்ளன. இந்த பிரச்சினைகள் அனைத்தும் எங்கள் வாழ்க்கை நிலைமையை மோசமாக்கியுள்ளதுடன், எங்கள் பிள்ளைகளுக்கு போதுமான உணவு மற்றும் நல்ல கல்வியைக் கூட கொடுக்க முடியாதுள்ளது.

இந்த ஆழமடைந்து வரும் பிரச்சனைகள் இயற்கையானவை அல்ல, மாறாக கோவிட்-19 மற்றும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரினால் உக்கிரமடைந்த, இலங்கையில் முன் எப்போதும் இல்லாத முதலாளித்துவ நெருக்கடியின் விளைவாகும். உக்ரைனில் நடக்கும் யுத்தம் விநியோக சங்கிலியின் முறிவுக்கு வழிவகுத்ததுடன் அதுவே எரிபொருள் விலை உயர்வுக்கு பிரதான காரணம் ஆகும்.

2.9 பில்லியன் டொலர் கடனுக்கு ஈடாக சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தும் விக்கிரமசிங்க அரசாங்கம், இந்த நெருக்கடியின் சுமையை அனைத்து தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது சுமத்துகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு இடையூறு ஏற்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். அவர் வேலைநிறுத்தங்களைத் தடைசெய்து, தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்ப்புக்களை நசுக்க இராணுவம் மற்றும் பொலிஸை அணிதிரட்டியுள்ளதோடு அவருடைய அரசாங்கத்தின் கொடூரமான சமூக தாக்குதல் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களைக் கைது செய்கின்றார்.

தாங்க முடியாத வறுமையையும் சமூக அவலத்தையும் நாம் எதிர்கொண்டாலும், பல தசாப்தங்களுக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்ட மீனவர் கூட்டுறவு சங்கங்கள் எங்களின் உரிமைகளைப் பாதுகாக்க எதுவும் செய்யவில்லை.

இந்தச் சங்கங்களில் பெரும்பாலானவை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்ற தமிழ் முதலாளித்துவக் கட்சிகளை ஆதரிக்கின்றன. ஆனால் இந்தக் கட்சிகள் மற்றும் சங்கங்கள் அனைத்தும் சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளை ஆதரிக்கின்றன.

நாங்கள், இலங்கை அரசாங்கம் மற்றும் தீவின் வடக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளை எதிர்க்கும் அதே நேரம், இந்தியாவிலும் அதன் தென் மாநிலமான தமிழ்நாட்டிலும் உள்ள அவர்களின் சமதரப்பினரின் கொள்கைகளையும்  நிராகரிக்கிறோம். இந்த அமைப்புகள், வட இலங்கையையும் இந்தியாவையும் பிரிக்கும் பாக்கு நீரிணையின் இருபுறமும் உள்ள ஏழை மீனவர்களிடையே வகுப்புவாத பகையைத் தூண்ட முயல்கின்றன.

கடந்த மாதம், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) தலைவரும், இலங்கை கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, பாக்கு நீரிணையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறிய மீன்பிடி படகுகளுக்கு அனுமதி வழங்க முன்மொழிந்தார். 'இலங்கை கடல் எல்லையைத் தாண்டியதாக' குற்றம் சாட்டப்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததற்கு மத்தியிலேயே அவர் இந்த முன்மொழிவை முன்வைத்துள்ளார்.

யாழ்ப்பாணம் காரைநகர் தீவில் இலங்கை அதிகாரிகளால் இதற்கு முன்னர் கைப்பற்றப்பட்ட பல இந்திய இழுவை படகுகள்

பெப்ரவரி 28 அன்று, 40 க்கும் மேற்பட்ட வடக்கு மீனவர் சங்கங்கள் தமிழரசுக் கட்சி, தமிழ் கூட்டமைப்பு மற்றும் இனவாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து ஒரு கூட்டத்தை நடத்தின. அவர்கள் இந்த முன்மொழிவை எதிர்த்து ஒரு அறிக்கையை வெளியிட்டதுடன் உள்ளூர் மீன்பிடி படகுகளை தெருக்களில் கொண்டு வந்து போராட்டம் நடத்துவதாக அச்சுறுத்தினர். ஈபிடிபியும் இதே போன்ற இனவாத ஆத்திரமூட்டல்களின் வரலாற்றைக் கொண்டுள்ளது.

இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள முதலாளித்துவக் கட்சிகளும், இந்தியாவில் உள்ள முதலாளித்துவக் கட்சிகளும், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் அதிகரித்து வரும் கோபத்தைத் திசைதிருப்பவும், அவர்களை அந்தந்த தேசிய அரசுகளுடனும், முதலாளித்துவ இலாப முறைமையுடனும் கட்டிப்போட்டு வைக்க தேசியவாதத்தைத் தூண்டிவிடுகின்றன.

தமிழ்நாடு மாநிலத்தில், சுமார் 200,000 மீனவக் குடும்பங்களில் சுமார் 91 சதவீதம் பேர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதோடு மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தின் சமூகத் தாக்குதல்களையும் எதிர்கொள்கின்றனர்.

நமது எதிரிகள், இந்தியாவில் உள்ள நமது வர்க்க சகோதரர்கள் அல்ல, மாறாக, ஏகாதிபத்தியத்திற்கு கீழ்ப்படிந்த சேவகர்களான இலங்கை மற்றும் இந்திய ஆளும் வர்க்கங்களே ஆகும். நமது வெறுப்பு அவர்களுக்கு எதிரானதாக இருக்க வேண்டும், இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எதிரானதாக அல்ல.

நமது உரிமைகளுக்காகப் போராட, இந்த முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் மீனவர் சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, கடற்றொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களை நாம் ஸ்தாபிக்க வேண்டும்.

நாங்கள் ஊர்காவற்துறை மீனவர் நடவடிக்கைக் குழுவை (KFAC) ஸ்தாபித்திருப்பது, வடக்கில் மட்டுமல்ல. தெற்கிலும் உள்ள எமது சகோதரர்கள் மத்தியிலும் கட்டியெழுப்பி இருக்கின்றோம். அத்துடன் உங்களது சொந்த நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்புவதற்கும் உதவ நாங்கள் தயாராக உள்ளோம். மார்ச் 10 வெளியிடப்பட்ட 'இலங்கையில் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் கூட்டு அறிக்கை' ஒவ்வொரு வேலைத் தளத்திலும் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்ப அழைப்பு விடுக்கின்றது. அந்த அறிக்கையை வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நாங்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்:

  • மீனவர்களுக்கு முந்தைய விலையில் மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல் கிடைக்கச் செய்ய வேண்டும்!
  • கட்டுப்படியான விலையில் மீன்பிடி உபகரணங்களை எங்களுக்கு வழங்க வேண்டும்!
  • மீனவர்களின் அனைத்து கடன்களையும் இரத்து செய்யவதோடு, பருவ காலம் அல்லாத மாதங்களில் உதவித்தொகை வழங்கு! இந்த உதவித்தொகை அனைத்து மீனவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்!

அதே நேரத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன வெட்டுத் தாக்குதல்களை, இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள அனைத்துத் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் சர்வதேச வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஒன்றிணைந்த போராட்டத்தின் மூலம் மட்டுமே தோற்கடிக்க முடியும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் உட்பட கிராமப்புற மக்களதும் நடவடிக்கைக் குழுக்களின் பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டிற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் அழைப்பை நாங்கள் ஆதரிக்கிறோம். அத்தகைய ஒரு மாநாடு ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கு அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்கும். அத்தகைய வேலைத்திட்டத்தில் அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் நிராகரிப்பதையும் பெரும் நிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் வங்கிகளை தேசியமயமாக்குவதும் உள்ளடக்கப்பட வேண்டும்.

இந்த போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறோம். பின்வரும் மின்னஞ்சல் முகவரியிலும் தொலைபேசி இலக்கத்திலும் நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள முடியும்:

0773368401
action.committees.sl@gmail.com

இலங்கை மற்றும் இந்திய ஆளும் உயரடுக்குகள் வறுமையில் வாடும் மீனவ சமூகங்களுக்கு இடையே தேசிய பகைமையை தூண்டுகின்றன

இலங்கை கடற்படை தமிழ் மீனவர்களை கொடூரமாக தாக்குகின்றது

இலங்கை: வடக்கு மீனவர்கள் ஊர்காவற்றுறையில் நடவடிக்கை குழுவை அமைத்தனர்