முன்னோக்கு

பொது வேலைநிறுத்தமும் வெகுஜன போராட்டங்களும் இஸ்ரேலிய ஆட்சியை உலுக்குகின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

மார்ச் 27, 2023, திங்கட்கிழமை ஜெருசலேம் நாடாளுமன்றத்துக்கு வெளியே பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவின் நீதித்துறை சீரமைப்புத் திட்டத்திற்கு எதிராக பத்தாயிரக் கணக்கான இஸ்ரேலியர்கள் போராடுகின்றனர். [AP Photo/AP]

ஜெருசலேம் நேரப்படி மார்ச் 27 மாலை, இஸ்ரேலியப் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு, அவருடைய அதிதீவிர வலது கூட்டணியால் கட்டுப்படுத்த முடியாமல் உள்ள அரசின் ஒரே அங்கமான அந்நாட்டின் நீதித்துறையைக் கவிழ்க்கும் சதித்திட்டத்திற்கு நிகரான ஒன்றை நடத்தும் அவர் திட்டத்திற்காக, இஸ்ரேலிய பாராளுமன்றம் நெசெட் எடுத்த நடவடிக்கையை அவர் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்தார்.

மாபெரும் வீதிப் போராட்டங்களும் அதன் உச்சக்கட்டமாக திங்கட்கிழமை இஸ்ரேலிய தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளின் முழு அளவிலான வெளிநடப்புகளும் என இஸ்ரேலிய வரலாற்றில் மிகப் பெரும் மக்கள் எதிர்ப்பை எதிர்கொண்டு, நெதன்யாகு இந்த தந்திரோபாய பின்வாங்கலை மேற்கொண்டார். விமான நிலையங்கள், கப்பல்துறை, போக்குவரத்து, உற்பத்தி, தொழிற்சாலைகள், பள்ளிகள், பகல்நேர பராமரிப்பு மையங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கிட்டத்தட்ட அனைத்து அரசு செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டன. உலகெங்கிலுமான இஸ்ரேலிய தூதரகங்கள் மூடப்பட்டன. நியூயார்க் நகரத்தில் உள்ள இஸ்ரேலிய தூதரக ஜெனரல் இராஜினாமா செய்தார்.

நீதித்துறையைப் பாதுகாப்பதன் மீதான அரசியல் மோதல்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளை (IDF) பிளவுபடுத்தி வருவதால், அந்தத் திட்டத்தைக் கைவிடுமாறு பாதுகாப்புத்துறை மந்திரி யோவ் காலண்ட் சனிக்கிழமை அவரைக் கேட்டுக் கொண்டதற்காக நெத்தன்யாகு அவரைப் பதவி நீக்கியதே இந்த அரசியல் வெடிப்புக்கான உடனடி தூண்டுதலாக உள்ளது. நெத்தன்யாகுவின் சொந்த லிகுட் கட்சியின் (Likud Party) ஓர் உயர்மட்டத் தலைவரான காலண்ட், இராணுவக் காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஆயிரக் கணக்கானவர்கள், ஜனநாயகத்தை அழிக்கும் ஓர் அரசாங்கத்தின் கீழ் சேவையாற்ற தங்களுக்கு விருப்பமில்லை என்பதால், தங்களுக்குக் கொடுக்கப்படும் வழமையான அழைப்புகளை நிராகரிக்க இருப்பதாக அளித்த அறிக்கைகளை மேற்கோளிட்டுக் காட்டினார்.

இராணுவத்தில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியானது, உலகிற்கு எதிராக அனைத்து யூதர்களின் ஒற்றுமையை இஸ்ரேல் பிரதிநிதித்துவம் செய்கிறது என்ற சியோனிசத்தின் (Zionism) அடிப்படைக் கட்டுக்கதையைச் சிதறடிக்கிறது. இது, இஸ்ரேலை ஆழமாக உலுக்கி உள்ள ஒரு மோதலின் வெறும் ஒரேயொரு வெளிப்பாடு மட்டுமே ஆகும். மேலும், இஸ்ரேல் மிகப் பெரும் சமூக, அரசியல் மற்றும் வர்க்க மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ளது. நெதன்யாகுவே ஒப்புக் கொண்டவாறு, நாடு 'உள்நாட்டுப் போரின்' விளிம்பில் உள்ளது.

இந்தப் போராட்ட இயக்கத்தின் தலைவர்கள் என்று தங்களைத் தாங்களே அறிவித்துக் கொண்டவர்கள், கடந்தாண்டு தேர்தலுக்குப் பின்னர் நெதன்யாகுவுக்கு வழி விட்ட முந்தைய அரசாங்கத்தின் பெரும்பாலான அதிகாரிகள், பென்னி காண்ட்ஸ் மற்றும் யாயர் லாபிட் போன்றவர்கள் ஆவர். அவர்கள் பாதுகாக்கும் நீதித்துறையில் உள்ளதைப் போலவே, தங்களைச் சியோனிச அரசின் பாதுகாவலர்களாகவும் பாலஸ்தீனிய மக்கள் மீதான அதன் அடக்குமுறையின் பாதுகாவலர்களாகவும் உறுதிப்படுத்துகின்றனர். இவர்கள் ஒரு 'முற்போக்கான' மாற்றீட்டைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. இஸ்ரேல் அரசின் ஜனநாயக மூடிமறைப்புகளை நெத்தன்யாகு அழித்துவிடுவார் என்று இவர்கள் அஞ்சுவதால் மட்டுமே நெத்தன்யாகுவின் நடவடிக்கைகளை இவர்கள் எதிர்க்கிறார்கள்.

இருப்பினும் மிகவும் ஆழமான பிரச்சினைகள் சம்பந்தப்பட்டிருப்பதையே இந்த மிகப் பெரும் மக்கள் இயக்கம் எடுத்துக்காட்டுகிறது. நீண்டகாலமாக அடக்கி வைக்கப்பட்டிருந்த சமூக முரண்பாடுகள் ஆளும் உயரடுக்கின் மோதலால் வழங்கப்பட்ட வழி மூலமாக வெடித்து, பரந்தளவில் இஸ்ரேலிய மக்களையும், எல்லாவற்றிற்கும் மேலாக, தொழிலாள வர்க்கத்தையும் அரசியல் அரங்கிற்குள் கொண்டு வருகின்றன. உச்ச நீதிமன்றம் சம்பந்தமான இந்த மோதல் ஒத்தி வைக்கப்பட்டாலும் அல்லது தீர்க்கப்பட்டாலும் கூட, இஸ்ரேலுக்குள் இருக்கும் ஆழமான பொருளாதார சமத்துவமின்மையாலும் மற்றும் உலக முதலாளித்துவ நெருக்கடியின் தாக்கத்தாலும் தூண்டப்பட்டுள்ள இந்த சமூக இயக்கம் மேற்கொண்டு கூடுதலாக வளர்வதை எதுவும் தடுத்து விடாது.

ஆனால், இந்த வெகுஜன இயக்கம் மிகப் பெரியளவில் இருந்தாலும் கூட, இது ஒரு பலவீனத்தைக் கொண்டுள்ளது. அதாவது இது பாலஸ்தீனிய மக்களின் போராட்டங்களை இதுவரை எந்த வகையிலும் அரவணைத்துக் கொள்ளவில்லை என்ற இந்தப் பலவீனத்தை எதிர்த்துப் போராடவில்லை என்றால் அது அதன் கேடான தன்மையை நிரூபிக்கும். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாலஸ்தீன மக்கள் ஒருபுறம் இருக்க, இஸ்ரேலிய அரேபியர்களிடமிருந்து ஆதரவைத் திரட்ட ஒரு முயற்சியும் இல்லாமல், இஸ்ரேலிய கொடிகள் கடல் போல உள்ளன.

வெற்றிக்கான ஏதேனும் வாய்ப்பைப் பெற வேண்டுமானால், யூத தொழிலாளர்களும் இளைஞர்களும் சியோனிச சித்தாந்த கண்மூடித்தனத்தை தூக்கி எறிந்து விட்டு, முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் யூத மற்றும் அரபு தொழிலாளர்களின் புரட்சிகர ஐக்கியத்தின் அடிப்படையில் ஒரு சோசலிச மூலோபாயத்தை ஏற்க வேண்டும்.

அத்தகைய ஓர் இயக்கத்தின் வளர்ச்சிக்கு ஒரு சக்தி வாய்ந்த புறநிலை அடித்தளம் உள்ளது. பல மாதங்களாக, டெல் அவிவ், ஜெருசலேம் மற்றும் பிற நகரங்களில் மிகப் பெரிய போராட்டங்கள் நடந்துள்ளன. இவை இஸ்ரேல் அளவுள்ள ஒரு நாட்டிற்கு மிகப் பெரிய அளவாகும். ஆனால் இந்த வாரயிறுதியின் சம்பவங்கள் ஒரு தரமான பாய்ச்சலாக இருந்தன. பெருந்திரளான மக்கள் வீதிகளில் இறங்கினர். 100,000 என மதிப்பிடப்பட்ட ஒரு கூட்டம் டெல் அவிவ்வுக்குச் செல்லும் பிரதான சாலையை மறித்ததுடன், அதை அகற்றுவதற்கு முயன்ற பொலிஸ் உடன் அது சண்டையிட்டது. ஜெருசலேமில் உள்ள நெதன்யாகுவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் முன் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்ரேலில் வழமையான வேலை நாளான ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய வேலைநிறுத்தங்கள், நீண்ட காலமாக இஸ்ரேலிய அரசின் நேரடி அங்கமாக இருந்துள்ள உத்தியோகப்பூர்வ தொழிற்சங்க கூட்டமைப்பான ஹிஸ்டாட்ரட் (Histadrut) நாடு தழுவிய ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க நிர்பந்திக்கப்படும் அளவுக்கு மிகவும் பரவலாக இருந்தது. பல முதலாளிகள் வேலைநிறுத்த இயக்கத்தின் பலத்துக்குப் பணிந்து திங்கட்கிழமை ஆலைகள் மூடப்படுமென அறிவித்தனர். பென்-குரியன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டன. அந்நாட்டின் இரண்டு முக்கிய துறைமுகங்களான ஹைஃபா மற்றும் அஷ்டோட் ஆகியவை மூடப்பட்டன.

நீதித்துறை சதி மீதான பாராளுமன்ற நடவடிக்கையைத் தற்காலிகமாக இடைநிறுத்தி நெத்தன்யாகு அறிவித்திருப்பது மக்கள் எதிர்ப்பின் சக்தியை ஒப்புக் கொள்வதாக உள்ளது. 'தேசியக் கடமைப்பாடுகளின் காரணமாக, தேசம் துண்டாடப்படுவதைத் தடுக்கும் விருப்பத்தில் இருந்து, நான் இந்தச் சட்டத்தை இடைநிறுத்தக் கோருகிறேன்,' என்று அறிவித்தார். 'பேச்சுவார்த்தைகள் மூலம் உள்நாட்டுப் போரைத் தடுக்க வாய்ப்பு இருக்கும் போது, பேச்சுவார்த்தைகளுக்கு கால அவகாசம் தருகிறேன்,' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நெதன்யாகு எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுமென உறுதியளித்த அதேவேளையில், அவருடைய சொந்த தீவிர வலது கூட்டணியில் உள்ள வெளிப்படையான பாசிசக் கூறுபாடுகளுடன்தான் உண்மையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஏனென்றால் பாரிய வெகுஜன இயக்கத்திற்கு முன்னால், ஒரு தந்திரோபாயமாக இருந்தாலும், எந்தவொரு பின்வாங்கலையும் அவர்கள் ஆரம்பத்தில் எதிர்த்தார்கள். இந்த ஒத்தி வைப்பை ஏற்க அவர்கள் உடன்பட்டார்கள் என்றால் அதற்காக அபாயகரமான ஒரு விட்டுக்கொடுப்பு வழங்கப்பட்டது: அதாவது, அரசாங்கம் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு புதிய தேசிய காவல்படையை நிறுவுவதற்கு நிதியளிக்கும். அது ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் குடியேறி உள்ள பாசிசவாதிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான  Itamar Ben-Gvir தலைமையில் இருக்கும்.

நீதித்துறை கவிழ்ப்பு சதி இடைநிறுத்தப்பட்ட இந்த நேரத்தை, பாசிசவாதிகளும் அரசாங்கமும் புதிய அரசியல் எதிர்ப்புக்கு எதிராக வன்முறையைத் திட்டமிட்டு பயன்படுத்துவதற்குத் தயாராவதற்குப் பயன்படுத்திக் கொள்வார்கள். இராணுவம் போல் இல்லாத, அரசியல்ரீதியில் நம்பிக்கைக்குரிய மிகவும் வெறித்தனமான இனவாத மற்றும் மதவாத சியோனிசவாதிகளை மட்டும் உள்ளடக்கிய ஒரு துணை இராணுவப் படையை உருவாக்குவதே அவர்களின் நோக்கமாக உள்ளது. அவ்விதத்தில் அவர்களை இஸ்ரேலிய தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களுக்கு எதிரான உள்நாட்டு அடக்குமுறைக்கு மிக எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

நீதித்துறை 'சீர்திருத்த' சட்டமசோதாவைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு தனது ஒப்புதலை கடைசியாக வழங்கிய கேபினட் மந்திரி பென்-குவிர், பின்வரும் ஒரு ட்வீட் செய்தியில் அவர் ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தினார்: 'இந்தச் சீர்திருத்தம் நிறைவேறும். தேசிய பாதுகாப்புப் படை அமைக்கப்படும். தேசிய பாதுகாப்பு அமைச்சகத்திடம் நான் கோரி உள்ள வரவுசெலவு திட்டக்கணக்கு முழுமையாக நிறைவேற்றப்படும். யாரும் நம்மை பயமுறுத்த முடியாது. யாரும் மக்கள் முடிவை மாற்றிவிட முடியாது. நான் கூறுவதைக் கூறுங்கள்: ஜ-ன-நா-ய-கம்!” அந்தக் கடைசி வார்த்தை அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களின் முக்கிய கோஷத்தைக் கேலி செய்யும் விதத்தில் கூறப்பட்டது.

அனைத்திற்கும் மேலாக இப்போது நெத்தன்யாகு அவரே மூச்சு விடுவதற்கு சற்று கால அவகாசத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இந்தக் காலத்தை அவர் ஈரானுக்கு எதிராக இராணுவ ஆத்திரமூட்டலைத் தொடங்கவும், இராணுவவாதத்தை வெடிப்பார்ந்து பரப்பும் அடிப்படையில் தேசிய 'ஒற்றுமையை' உருவாக்க முற்படவும் சரிவரப் பயன்படுத்தக்கூடும். இந்த விஷயத்தில் அவர் மேற்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள அவருடைய ஏகாதிபத்திய ஆதரவாளர்களின் முன்மாதிரியைப் பின்பற்றக்கூடும். அவர்கள் அதிகரித்து வரும் அவர்களின் உள்நாட்டு பதட்டங்களை பெரும்பகுதி ஒரு வெளிநாட்டு எதிரிக்கு எதிராகத் திருப்பி விட, உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான பினாமிப் போரைத் தூண்டிவிட்டுள்ளார்கள்.

நெத்தன்யாகு குறைந்தபட்சம் அவருடைய சொந்த செல்வாக்கைக் காப்பாற்றிக் கொள்ளும் பாகமாக நீதிமன்றங்களை, மந்திரிசபை மற்றும் பாராளுமன்றத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் நிறுத்தும் திட்டங்களை முன்நகர்த்தினார். ஆதாரங்களால் நிறுவப்பட்ட பல ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளை அவர் முகங்கொடுத்து வருகிறார் என்பதோடு, அவர் மீது குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்டால் பதவியில் இருக்க அவருக்குத் தகுதி இல்லை என்று நீதிமன்றங்கள் அறிவிக்கக்கூடும்.

ஆனால் பிரச்சினைகள் இதைவிட மிக அடிப்படையானவையாக உள்ளன. யூத மக்களில் சிறுபான்மையினராக இருந்தாலும், அரசியல் அமைப்பு முறையில் படிப்படியாக செல்வாக்கை அதிகரித்து வரும் மத சியோனிஸ்டுகள் மற்றும் குடியேறிய வெறியர்களின் கட்டுப்பாடற்ற சர்வாதிகாரத்திற்கு, எல்லா சட்ட நடைமுறை தடைகளையும் அகற்றுவதே நீதித்துறை நடவடிக்கைகளின் உண்மையான சாராம்சமாக உள்ளது.

இஸ்ரேலில் வன்முறையான அடக்குமுறை மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கிய இந்தத் திருப்பம், ஓர் உலகளாவிய செயல்முறையின் பாகமாகும். ஏகாதிபத்திய நாடுகளிலும் சரி வறிய மற்றும் ஒடுக்கப்பட்ட நாடுகளிலும் சரி, பிரான்ஸ் மற்றும் இலங்கையில் சமீபத்திய மாதங்களில் எடுத்துக்காட்டப்பட்டதைப் போல, ஆளும் வர்க்கம் உலக முதலாளித்துவத்தின் சமூக மற்றும் அரசியல் நெருக்கடியில் இருந்து வெளியேறுவதற்கு இத்தகைய அணுகுமுறைகளைத் தவிர வேறு வழியில்லை என்று காண்கிறது. ஜனநாயகத்தின் பாதுகாப்பு சுவிட்சுகள் எரிக்கப்பட்டு வருகின்றன. நவீன சமுதாயத்தில் இரண்டு மிகப் பெரும் வர்க்கங்களான முதலாளித்துவ வர்க்கமும் தொழிலாள வர்க்கமும் ஒன்றையொன்று வெளிப்படையான போராட்டத்தில் எதிர்கொள்கின்றன.

இஸ்ரேலில் கடந்த மாதங்களின் நிகழ்வுகள், இஸ்ரேலின் நீண்ட கால அரசியல் பிற்போக்குத்தனத்தின் முடிவைக் குறிக்கின்றன. அத்தகைய அரசியல் பிற்போக்குத்தனத்தில் வர்க்கப் போராட்டம் திட்டமிட்டு நசுக்கப்பட்டதோடு, பாலஸ்தீன மக்கள் மீதான ஒடுக்குமுறையைத் தொடர்வதற்காக ஏற்படுத்தப்படுத்தப்பட்ட காவல் அரணுக்குத் தொழிலாள வர்க்கத்தை அடிபணிய செய்வதை நியாயப்படுத்த சியோனிச சித்தாந்தம் பயன்படுத்தப்பட்டது. இப்போது பாலஸ்தீனர்களுக்கு எதிராக அணிதிரட்டப்பட்ட சக்திகள் — எல்லாவற்றிற்கும் மேலாக, பாசிச குடியேற்றக் கூறுபாடுகள் — யூத தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிராகவும் திருப்பி விடப்பட்டு வருகின்றன.

இந்தத் தாக்குதல்கள் ஒரு வெகுஜன இயக்கத்தைத் தூண்டிவிட்டுள்ளன. அது வெகுஜன இஸ்ரேலியர்களை வீதிகளுக்குக் கொண்டு வந்துள்ளது. அங்கே அவர்கள் அதிதீவிர வலதுசாரிகளுக்கு எதிராக தங்கள் பலத்தை அளவிடத் தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில், அவர்கள் யூதத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைச் சியோனிசத்துடன் ஓர் அரசியல் கணக்கீடு செய்வதற்கான வரலாற்றுத் தேவையை நேருக்குநேர் கொண்டு வந்துள்ளனர்.

சமூகப் பிளவுகளைத் துடைத்தழித்து அனைத்து யூத மக்களையும் ஒரே கொடியின் கீழ் ஒன்றுபடுத்தும் ஒரு வர்க்கமற்ற நாடாக இஸ்ரேலை சியோனிச பாணியில் காட்டுவது எப்போதும் ஒரு பொய்யாகவே இருந்துள்ளது. பாலஸ்தீன மக்களை திட்டமிட்ட முறையில் இடம்பெயர்த்தியதன் மூலமும் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தின் மூலம் கட்டாயமாக வெளியேற்றியதன் மூலமாகவே இஸ்ரேல் அரசுக்கு அஸ்திவாரம் அமைக்கப்பட்டது. பின்னர் இஸ்ரேலின் எல்லையை விரிவுபடுத்தவும், மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு சக்தி வாய்ந்த, அணு ஆயுதமேந்திய தாக்குமுகப்பாக அதைக் கட்டியெழுப்பவும் தொடர்ச்சியான போர்கள் நடத்தப்பட்டன.

1948 இல், உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலம், மத அடையாளத்தின் அடிப்படையில் இஸ்ரேலை நிறுவுவதை பாலஸ்தீனத்தில் வாழும் அரேபியர்கள் மற்றும் யூதர்கள் இருதரப்பினருக்குமே பிற்போக்குத்தனமான ஒரு துயரம் என்று கண்டனம் செய்தது. அது பின்வருமாறு அறிவித்தது:

யூதப் பிரச்சினைக்கான 'சியோனிச தீர்வை' கற்பனாவாத பிற்போக்குத்தனம் என்று நான்காம் அகிலம் நிராகரிக்கிறது. யூதத் தொழிலாளர்களின் போராட்டங்களை அரபு உழைப்பாளிகளின் சமூக, தேசிய மற்றும் விடுதலைப் போராட்டங்களுடன் இணைப்பதற்கு, சியோனிசத்தை முற்றிலுமாக விட்டொழிப்பது ஒரு தவிர்க்கவியலாத முன்நிபந்தனையாகும் என்று அது அறிவிக்கிறது.

யூதர்கள், அரேபியர்கள், குர்துக்கள், துருக்கியர்கள், ஆர்மேனியர்கள் மற்றும் மற்றவர்கள் என மத்திய கிழக்கின் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் ஐக்கியப்படுத்தும் இந்த முன்னோக்கு, முன்னெப்போதையும் விட இன்று மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. சர்வாதிகாரம், தேசிய ஒடுக்குமுறை மற்றும் ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான ஒரு புரட்சிகரப் போராட்டத்திற்கான ஒரே அடித்தளம் இது மட்டுமே ஆகும்.

இஸ்ரேலின் பாலஸ்தீனிய மக்கள் மீதும், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலும், ஆணவமான அடாவடிக்குழுக்களது மற்றும் ஆக்கிரமிப்பாளர்களது அதிகரித்து வரும் வன்முறை மற்றும் காட்டுமிராண்டித்தனமான இராணுவ அடக்குமுறை நிலைமைகளின் கீழ், யூத தொழிலாளர்களும் இளைஞர்களும் தங்கள் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது சாத்தியமற்றது. மேற்குக் கரையிலும் காசாவிலும் இராணுவ சர்வாதிகாரமும் இஸ்ரேலுக்குள் ஜனநாயகமும் இருக்க முடியாது.

ஒரு பொதுவான போராட்டத்தில் அரபு மற்றும் யூத தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் சாத்தியத்தை நிராகரிக்கும் அனைத்து குழுக்களும் அரசியல் ரீதியாக திவாலானவை என்பதோடு, இறுதி ஆய்வில் அவை யூதத் தொழிலாள வர்க்கத்தை ஒதுக்கி விட்டு, இஸ்ரேல் அரசை நிரந்தரமானதாகவும் மாற்ற முடியாததாகவும் ஏற்றுக் கொண்டு, ஒரு மாறுபட்ட வடிவத்தில் இருந்தாலும், அவை சியோனிச முன்னோக்கையே பகிர்ந்து கொள்கின்றன.

இதில் ஊழல்பிடித்த பாலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO) மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத ஹமாஸ் போன்ற பாலஸ்தீனர்களிடையே உள்ள முதலாளித்துவ தேசியவாத குழுக்களும், சியோனிச ஆளும் வர்க்க குற்றங்களுக்குத் திறம்பட யூதத் தொழிலாளர்கள் மீது பழி சுமத்தும், புறக்கணிப்பு, விலக்கல் மற்றும் தடைகள் (Boycott, Divestment and Sanctions - BDS) போன்ற சர்வதேச 'நல்லிணக்க' இயக்கங்களும் உள்ளடங்குகின்றன.

1948 இல் நான்காம் அகிலத்தின் சூத்திரத்தை நாங்கள் மீண்டும் திரும்பக் கூறுகிறோம்: “அரபு உழைப்பாளர்களின் சமூக, தேசிய மற்றும் விடுதலை போராட்டங்களுடன் யூதத் தொழிலாளர்களின் போராட்டங்களை இணைப்பதே' எங்கள் முன்னோக்காகும்.

இஸ்ரேலின் யூதத் தொழிலாளர்கள், பாலஸ்தீனத்தின் அரேபியத் தொழிலாளர்கள் உட்பட, உலகெங்கிலும் உள்ள அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளிடமிருந்து ஏதோவிதத்தில் வேறுபட்டவர்கள் என்ற கருத்தை கடந்த வாரங்களின் நிகழ்வுகள் பொய்யென நிரூபித்துள்ளன. பாலஸ்தீன மக்களின் தேசிய உரிமைகள் உட்பட வேலைகள், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு பொதுவான போராட்டத்தில், அரபு மற்றும் யூதத் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான போராட்ட இயக்கத்தில், பிற்போக்குத்தனமான சியோனிச தலைமையை முறியடிப்பதே மையப் பிரச்சினையாகும். இதை சர்வதேச சோசலிச வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கின் அடிப்படையில் மட்டுமே செய்ய முடியும்.

Loading