கல்வியை "அத்தியாவசிய சேவையாக" அறிவிக்கப்போவதாக ஜனாதிபதி விக்கிரமசிங்க அச்சுறுத்துகிறார் 

வேலைநிறுத்தம் செய்யும் இலங்கை ஆசிரியர்களின் உரிமையைப் பாதுகாத்திடு!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது அரசாங்கம் கல்வியை 'அத்தியாவசிய சேவையாக' மாற்றக் கூடும் என்று மார்ச் 23 அன்று பகிரங்கமாக அறிவித்தார். 'ஆசிரியர் இடமாற்றச் சபையை' அகற்றுவதற்கு அரசாங்கம் எடுத்த ஜனநாயக விரோத முடிவுக்கு எதிராக கொழும்பில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய மறுநாளே சங்கமித்த பெண்கள் பாடசாலையில் ஆற்றிய உரையிலேயே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

கொழும்பில், 4 பெப்ரவரி 2023 சனிக்கிழமை நடைபெற்ற இலங்கையின் 75வது சுதந்திர தின விழாவின் போது இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பின் வரிசையில் இடதுபுறம் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன, மற்றும் வலதுபுறம், பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன ஆகியோருடன் இருக்கின்றார். [AP Photo/Eranga Jayawardena]

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) விக்கிரமசிங்கவின் அச்சுறுத்துதலைக் கண்டனம் செய்வதுடன் வேலைநிறுத்தம் செய்வதற்கான ஆசிரியர்களின் உரிமையைப் பாதுகாக்க முழு தொழிலாள வர்க்கத்தையும் முன்வருமாறு வலியுறுத்துகிறது.

உலக சோசலிச வலைத் தளம் மார்ச் 24 அன்று வெளியிட்ட ஒரு கட்டுரையில் கூறியது போல்: “சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் கோரிக்கைகளை சுமத்துவதற்கு அரச அடக்குமுறையைப் பயன்படுத்த அரசாங்கம் தயங்காது என்பதையே விக்கிரமசிங்கவின் அச்சுறுத்தல்கள் தெளிவுபடுத்துகின்றன. இது ஆசிரியர்களுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு எச்சரிக்கையாகும்.”

விக்கிரமசிங்க, பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும் “உதாரணமாக இருக்க வேண்டும்” என்றும் அவர்களின் சொந்த “நடத்தை” மற்றும் “பொறுப்புகளில்” கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஆணவத்துடன் பிரகடனம் செய்தார். பரீட்சைகளை நடத்துவது உட்பட கல்விக்கான முழு ஏற்பாடுகளுக்கும் 'இடையூறு ஏற்படுத்தவோ' அல்லது 'குழப்பவோ' முடியாது என்று அவர் தொடர்ந்தார்.

பாடசாலை மாணவர்கள் பல்வேறு குழுக்களால் 'பணயக் கைதிகளாக' பிடிக்க அனுமதிக்கப் போவதில்லை என்று அறிவித்த விக்கிரமசிங்க, ஆசிரியர்களின் போராட்டங்கள் தொடர்ந்தால், கல்வியை 'அத்தியாவசிய சேவையாக' மாற்ற தனது அரசாங்கம் சட்டம் இயற்றும் என்றும் எச்சரித்தார்.

தொழிலாளர்களை 'பணயக்கைதிகளை' பிடிப்பவர்கள் என்று குற்றம் சாட்டுவதானது ஆளும் வர்க்கம் மற்றும் அதன் ஊடக ஊதுகுழல்களால் அவர்களின் உரிமைகளுக்காக போராடும் தொழிலாளர்களுக்கு எதிரான விரோதத்தை தூண்டுவதற்கும் அரசாங்க அடக்குமுறையை நியாயப்படுத்துவதற்கும் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது.

சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் வேலைகள், ஊதியங்கள் மற்றும் நிலைமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் போதெல்லாம் நோயாளிகள் 'பணையக் கைதிகளாக' அடைக்கப்படுகின்றனர்; ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்போது பயணிகள் பணயக்கைதிகள்; மற்றும் மின்சார ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலோ அல்லது தொழில்துறை நடவடிக்கை எடுத்தாலோ மின்சார வாடிக்கையாளர்கள் பணையக் கைதிகளாக உள்ளனர். தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு போராட்டமும் இப்போது 'பணயக்கைதிகள்' பிடிக்கும் நடவடிக்கையாகவே ஆளும்தட்டால் கருதப்படுகிறது.

விக்கிரமசிங்கவின் பரிதாபகரமான குற்றச்சாட்டுகள் ஜனாதிபதியின் கடந்த கால மற்றும் தற்போதைய நடவடிக்கைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் அவநம்பிக்கையான முயற்சியாகும். ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதலில், மார்ச் 9 அன்று நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைத் தடுப்பதன் மூலம், விக்கிரமசிங்க இலங்கை பிரஜைகளின் வாக்களிக்கும் உரிமையைப் பறித்தார்.

இலங்கையின் அரசியலமைப்பின் கீழ், 'அத்தியாவசியம்' எனக் கருதப்படும் துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தம் செய்ய உரிமை இல்லை. இந்தத் தடையை மீறும் எவருக்கும் எதிராக வேலை நீக்கம், சிறைத்தண்டனை மற்றும் அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்தல் உட்பட கடுமையான தண்டனைகளை விதிக்க அரசாங்கத்திற்கு கொடூரமான சட்ட அதிகாரங்கள் உள்ளன.

அனைத்து வேலைநிறுத்த நடவடிக்கைகளையும் தடை செய்து, விக்கிரமசிங்க ஏற்கனவே பல துறைகளை 'அத்தியாவசிய சேவைகளாக' அறிவித்துள்ளார். பெப்ரவரி 28 அன்று, இலங்கை துறைமுகங்கள் மற்றும் பேருந்து, ரயில் மற்றும் விமானப் பயணம் உட்பட போக்குவரத்து சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அவரது அரசாங்கம் அறிவித்தது. கடந்த ஆண்டு சுகாதாரம், பெட்ரோலியம் மற்றும் மின்சாரம் மீது அத்தியாவசிய சேவை உத்தரவுகள் விதிக்கப்பட்டன.

இலங்கையின் முதலாளித்துவ ஊடகங்கள் ஆசிரியர்களுக்கு எதிரான விக்கிரமசிங்கவின் வேலைநிறுத்த எதிர்ப்பு அச்சுறுத்தல்களை முழுமையாக அங்கீகரித்துள்ளன. மார்ச் 24 வெளியான ஐலண்ட் பத்திரிகையின் ஒரு தலையங்கம் அறிவித்ததாவது: “தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட வேண்டும். இல்லையென்றால், வேறு யார் செய்வார்கள்? ஆனால் அவர்கள் தங்கள் பொறுப்புகளை புறக்கணிக்கக்கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் மக்களின் பொறுமையை சோதிக்கக்கூடாது.”

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஐலண்ட் பத்திரிகை விக்கிரமசிங்கவின் அச்சுறுத்தல்களை அங்கீகரிப்பதோடு, போராட்டத்திற்கு வரும் தொழிலாளர்களுக்கு எதிராக பெருமளவிலான ஆயுதம் ஏந்திய பொலிஸ் மற்றும் குண்டர்களை அரசாங்கம் அணிதிரட்டுவது பற்றி எதுவும் கூறவில்லை. மார்ச் 22 அன்று, கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்த ஆசிரியர்களை அச்சுறுத்துவதற்காக சுமார் 50 வலதுசாரி ஆத்திரமூட்டல்காரர்களைக் கொண்ட இரண்டு குழுக்களை அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் விக்கிரமசிங்க அரசாங்கமும் ஆளும் உயரடுக்கினரும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர் பிணை எடுப்பு கடன் பெறுவதை இலங்கை முதலாளித்துவத்திற்கான ஒரே தீர்வாக கருதுகின்றனர். சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் கோரிக்கைகளுக்காக அர்ப்பணித்துக்கொண்டுள்ள அரசாங்கம், அனைத்து தொழிலாள வர்க்க எதிர்ப்பையும் நசுக்குவதில் உறுதியாக உள்ளது.

விக்கிரமசிங்க ஆட்சி கடந்த ஆண்டு ஜனநாயகமற்ற முறையில் அரசாங்கத்தில் அமரவைக்கப்பட்ட பின்னர் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட அடக்குமுறை நடவடிக்கைகளின் தொடரில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான அரச சேவைகளை 'அத்தியாவசியமானதாக' அறிவித்து உள்ளூராட்சித் தேர்தலை இரத்து செய்ததுடன், அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அரசாங்க எதிர்ப்பு செயற்பாட்டாளர்களை சிறையில் அடைத்ததுடன் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மீது பொலிஸ் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டது. ஆசிரியர் இடமாற்றச் சபை அகற்றப்படுவது, தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்களில் ஒன்றாகும்.

ஆசிரியர்களும் அதிபர்களும் மாணவர்களை பணயக் கைதிகளாக பிடித்துக் கொள்வதாக ஜனாதிபதி குற்றம் சாட்டுகின்ற போதிலும், உண்மையில் உழைக்கும் மக்கள் சரவதேச நாணய நிதியத்துக்கு பணயக்கைதிகளாக ஆக்கப்பட்டுள்ளதுடன் விக்கிரமசிங்க அரசாங்கம் அதன் பொலிஸ்காரனாக செயல்படுகின்றது. இது கடந்த செவ்வாய்கிழமை இலங்கையில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக் குழு தலைவர் பீட்டர் ப்ரூயரால் தெளிவுபடுத்தப்பட்டது. 'சர்வதேச நாணய நிதியத்தால் ஆளுகை செய்யப்படும் பயிற்சியில் இலங்கையானது ஆசியாவின் முதல் நாடாக இருக்கும்' மற்றும் அது 'ஒரு கொடூரமான பரிசோதனையாக இருக்கும்' என்று அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

22 மார்ச் 2023 அன்று கொழும்பில் ஆசிரியர் இடமாற்றச் சபைகளை அரசாங்கம் கலைத்ததற்கு எதிராக இலங்கை ஆசிரியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

மாணவர்களின் கல்வி பற்றிய விக்கிரமசிங்கவின் கவலைகள் ஒரு முழுமையான மோசடியாகும். அரசாங்க நிதியைக் குறைப்பதன் மூலமும், அரச செலவினங்களைக் கடுமையாகக் குறைப்பதன் மூலமும், பொதுக் கல்வி மற்றும் சுகாதாரத்தில் எஞ்சியிருப்பதை அழிக்க அவர் உறுதி பூண்டுள்ளார். தற்போதைய முன்மொழிவுகளின்படி, இந்த ஆண்டு இறுதியில் ஓய்வுபெறவுள்ள சுமார் 30,000 ஆசிரியர்களுக்கு மாற்றீடுகள் எதுவும் இருக்காது. இது ஏற்கனவே நிலவும் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையை மேலும் மோசமாக்கும். ஏனைய செலவுக் குறைப்பு நடவடிக்கைகளுடன், கட்டிடங்கள் உட்பட பாடசாலைகளில் பௌதீக வளங்களின் கடுமையான பற்றாக்குறையும் அதிகரிக்கும்.

அதே நேரம், இப்போது உத்தியோகப்பூர்வமாக 50 சதவீதமாக உள்ள உயர்ந்த பணவீக்கம், வெகுஜனங்களை பெரிதும் பாதித்துள்ளதுடன், இதனால் அடிப்படை பாடசாலை பொருட்களை வாங்குவது மற்றும் போதுமான தினசரி உணவு தேவைகளை பெறுவது முடியாமல் இருப்பதோடு அதிகரித்துள்ள ஆகக் கூடிய அரசாங்க வரிகளையும் சமாளிக்க முடியவில்லை.

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத தாக்குதல்களையும் சர்வதேச நாணய நிதிய நடவடிக்கைகளையும் முதலாளித்துவ இலாப முறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் எதிர்த்தாக்குதல் மூலம் மட்டுமே தோற்கடிக்க முடியும். பாராளுமன்ற எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற போலி-இடது அமைப்புகள், அத்தகைய இயக்கத்தை நனவுடன் எதிர்ப்பதுடன் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் இந்தத் தாக்குதல்களை கைவிடச் செய்ய முடியும் என்ற மாயையை ஊக்குவிக்கின்றன.

மார்ச் 14 அன்று வெளியிடப்பட்ட இலங்கையில் உள்ள தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் கூட்டறிக்கை விளக்கியதாவது: “எங்கள் போராட்டங்கள் முதலாளித்துவ அமைப்புக்கு ஆயிரம் நூல்களால் பிணைக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் வரையும், நாங்கள் நிச்சயமாக காட்டிக் கொடுக்கப்படுவோம். நமது உரிமைக்கான போராட்டத்தை நமது கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வேலைத் தளங்களிலும், தொழிற்சாலைகளிலும், பெருந்தோட்டங்களிலும் மற்றும் நமது சுற்றுப்புறங்களிலும் தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளிலிருந்தும் சுயாதீனமாக, தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவதன் மூலம் மட்டுமே இதைச் செய்ய முடியும்.”

இந்த நடவடிக்கைக் குழுக்கள் அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தை ஒழிப்பதற்கும், பயங்கரவாதத் தடைச் சட்டங்களை நீக்குவதற்கும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கும், அத்துடன் வேலைநிறுத்த உரிமை உட்பட அனைத்து அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் போராட வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி இந்த நடவடிக்கைக் குழுக்களில் இருந்து ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அடிப்படையில் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டைக் கட்டியெழுப்ப பிரச்சாரம் செய்து வருகிறது. இத்தகைய மாநாடானது சோசலிசக் கொள்கைகளுக்கு அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் தனது பலத்தை ஒன்றுதிரட்டவும் கிராமப்புற ஏழைகளை அணிதிரட்டவும் அரசியல் வழிவகைகளை வழங்கும்.

இலங்கைக்கான தனது திட்டம் ஒரு 'கொடூர பரிசோதனை' என்று சர்வதேச நாணய நிதியம் அறிவிக்கிறது

இலங்கை அரசாங்கம் IMF இன் சிக்கன நடவடிக்கைகளை சுமத்துவதால் பொருளாதார அழிவு மோசமடைகிறது

ஒவ்வொரு வேலைத் தளத்திலும் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கு! இலங்கை அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஐக்கியப்பட்ட போராட்டத்தை கட்டியெழுப்ப போராடு!

Loading