மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், கடந்த வார இறுதியில் ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, சீனாவிற்கு நான்கு நாட்கள் அரசுமுறை பயணத்தை முடித்துள்ளார். பிரான்ஸ் முழுவதும் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களில் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்புகள் வெடித்தாலும், பெரும் மக்கள் எதிர்ப்பை எதிர்கொண்டு ஓய்வூதிய வெட்டுக்களை அவர் சுமத்திய பிறகு, மக்ரோன் ஒரு ஐரோப்பிய 'யுத்தப் பொருளாதாரத்தை' கட்டியெழுப்ப இராணுவ செலவினங்களில் மேலும் பாரிய அதிகரிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மக்ரோனின் சீனா விஜயமானது, உக்ரேனில் ரஷ்யாவுடனான நேட்டோவின் போர் மேகத்தின் கீழூம் மற்றும் தைவான் மீது சீனாவிற்கு எதிரான அமெரிக்க இராணுவ அச்சுறுத்தல்கள் அதிகரித்துவரும் நிலையிலும் நடந்துள்ளது. முதல் நாள் பேச்சு வார்த்தையில், உக்ரேனில் ரஷ்யாவை 'நியாயமான கொள்கைக்கு கொண்டு வர' ஜின்பிங்கின் உதவியை மக்ரோன் கேட்டார். 'உக்ரேன் நெருக்கடியை மேலும் மோசமடையச் செய்யும் செயல்களைத் தவிர்ப்பதற்கு பகுத்தறிவையும் கட்டுப்பாட்டையும் பேணுமாறு சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுக்க பிரான்சுடன் இணைந்து பணியாற்றுவதாக' ஜின்பிங் உறுதியளித்ததாக சீன பீப்பிள்ஸ் டெய்லி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மக்ரோனின் விஜயம், சீனாவுடனான பிரெஞ்சுப் பொருளாதார உறவுகளை ஆழப்படுத்துவது மற்றும் வாஷிங்டனுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய இராணுவப் படைகளை வலுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையாக மாறியது. ஆற்றல்துறை ஏகபோக நிறுவனமான Electricité de France, விமான நிறுவனங்களான Airbus மற்றும் Safran, இரயில் வண்டி தயாரிப்பு நிறுவனமான Alstom, மற்றும் LVMH, L'Oréal மற்றும் சுற்றுலா நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளின் பாரிய பிரதிநிதிகள் குழுவும் மக்ரோனின் விஜயத்தில் உடன் சென்றன. அத்தோடு, எலெக்ட்ரானிக் இசையமைப்பாளரான ஜோன்-மைக்கேல் ஜார் மற்றும் அவரது மனைவி, சீனத் திரைப்பட நட்சத்திரம் கோங் லி ஆகியோரும் பிரெஞ்சு பிரதிநிதிகள் குழுவில் உள்ளடங்கி இருந்தனர்.
தைவானுடன் நெருக்கமான உறவுகளை கட்டியெழுப்பும் அமெரிக்கக் கொள்கையை மக்ரோன் விமர்சித்தார். இது வாஷிங்டனுக்கு 'ஒரே சீனா' கொள்கையை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் பெய்ஜிங்-தைவான் போரைத் தூண்டுவதற்கும் நிலைமைகளை உருவாக்குகிறது. ஒரு சீன அறிக்கையின்படி, தைவான் ஜனாதிபதி சாய் இங்-வெனின் அமெரிக்க விஜயம் 'வருந்தத்தக்கது' என்று கூறிய மக்ரோன், 'ஒரு சீனா' கொள்கைக்கு தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மக்ரோன் நேற்று பாரிஸுக்கு விமானத்தில் திரும்பும் போது, நிதி நாளிதழான Les Echos க்கு கொடுத்த ஒரு நேர்காணலில் மக்ரோன் இது குறித்து தெரிவித்தார்.
மக்ரோன் கூறினார், “ஐரோப்பியர்களாகிய எங்களிடம் முன்வைக்கப்படும் கேள்வி: தைவான் மீது விரைவுபடுத்தும் விஷயங்களில் எங்களுக்கு ஆர்வம் உள்ளதா? இல்லை. மிக மோசமான விஷயம் என்னவென்றால், ஐரோப்பியர்களான நாம் அமெரிக்காவுக்கு ஏற்ற தாளம் மற்றும் சீனாவின் அதிகப்படியான எதிர்வினைகளுக்கு ஏற்றவாறு இந்த பிரச்சினையை கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டும் என்று நினைப்பது ஆகும். மற்றவர்கள் நமக்காகத் தேர்ந்தெடுத்த தாளத்தை நாம் ஏன் பின்பற்ற வேண்டும்? ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், எமது சொந்த நலன்களின் கேள்வியை நாம் முன்வைக்க வேண்டும்.… ஒரு உண்மையான ஐரோப்பிய சுயாட்சியின் மூலோபாய கூறுகளை நாம் அமைக்கும்போது, திடீரென்று ஒருவித பீதியில் அமெரிக்கக் கொள்கையைப் பின்பற்றத் தொடங்கினால், அது முரண்பாடாக இருக்கும்.'
பிரான்ஸ் மற்றும் முக்கிய ஐரோப்பிய ஒன்றிய ஏகாதிபத்திய சக்திகள் வாஷிங்டனுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களால் நிதியளிக்கப்பட்ட ஒரு பரந்த இராணுவக் கட்டமைப்பைக் கொண்டு பதிலளிக்க வேண்டும் என்று மக்ரோன் வாதிட்டார். “நான் போராடும் இந்த மூலோபாய சுயாட்சியை நீண்ட காலமாக ஐரோப்பா உருவாக்கவில்லை. இன்று சித்தாந்தப் போரில் வெற்றி பெற்று, கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர்க்க முடியாமல் ஒரு செலவில் வருகிறது. … நாங்கள் வெட்டுக்களை மேற்கொண்டோம், அவை கடுமையானவை, நாங்கள் முடிவுகளைப் பார்க்கத் தொடங்குகிறோம், அதே நேரத்தில் கடந்த 20 ஆண்டுகளில் நாங்கள் செய்யாததற்கு நாங்கள் விலை செலுத்துகிறோம்” என்று மக்ரோன் கூறினார்.
'வரலாறு வேகமெடுக்கும் போது, நாம் ஒரே நேரத்தில் ஐரோப்பிய யுத்தப் பொருளாதாரத்தை முடுக்கிவிட வேண்டும். நாங்கள் போதுமான அளவு வேகமாக [ஆயுதங்களை] உற்பத்தி செய்யவில்லை, அமெரிக்கர்களை குறைவாக சார்ந்திருப்பதற்கான திறவுகோல், நமது பாதுகாப்புத் துறையை வலுப்படுத்துவதும், ஐரோப்பாவில் ஆயுதங்கள் தயாரிப்பதற்கான பொதுவான தரநிலைகளை ஏற்றுக்கொள்வதும் ஆகும்' என்று அவர் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றிய இராணுவக் கட்டமைவு முழுமையடைவதற்குள் வாஷிங்டன் விரைவில் சீனாவுடன் முழுப் போரைத் தூண்டினால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 'அதனைச் சார்ந்திருக்கும் சிற்றரசர்களாக' விடப்படலாம் என்று மக்ரோன் கவலைப்பட்டார். '[அமெரிக்கா-சீனா] இரட்டைப் பேரரசின் வெடிப்பு முடுக்கம் ஏற்பட்டால், எங்களுடைய மூலோபாய சுயாட்சிக்கு நிதியளிக்க எங்களுக்கு நேரமோ அல்லது வழியோ இருக்காது மற்றும் சிற்றரசாக மாறுவோம். மேலும் இதனைக் கட்டியெழுப்ப சில வருடங்கள் இருந்தால் நாங்கள் மூன்றாவது துருவமாக இருக்க முடியும்‘‘ என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மக்ரோன் அமெரிக்க டாலர் மீதான நம்பிக்கையின்மையையும் சுட்டிக்காட்டினார். சிலிக்கோன் வலே (Silicon Valley) வங்கியின் பிணையெடுப்பு மற்றும் அமெரிக்க கருவூலம் டொலரைப் பயன்படுத்தி ஈரான் மற்றும் அங்கு இயங்கும் ஐரோப்பிய நிறுவனங்களை இலக்காகக் கொண்டு பொருளாதாரத் தடைகளை விதித்ததன் பின்னர் அது பெருகிவரும் கேள்விக்குறிகளை எதிர்கொள்கிறது. ரஷ்யா, பிரேசில் மற்றும் பிற நாடுகள் சீனாவுடன் தங்கள் வர்த்தகத்தை இதர நாணயங்களில் மேற்கொள்ள நகரும் போது, 'ஒரு விஷயத்தை வலியுறுத்துவதற்கான வாய்ப்பை நான் பயன்படுத்த விரும்புகிறேன்: நாங்கள் வேற்று பகுதியில் அமெரிக்க டாலரில் தங்கியிருக்கக்கூடாது' என்று மக்ரோன் கூறினார்,
சீன வர்ணனையாளர்கள் பிரெஞ்சு அரசியலின் சமீபத்திய திருப்பத்திற்கு பெய்ஜிங் ஆட்சியின் ஆதரவை அடையாளம் காட்டி, பிரெஞ்சு பத்திரிகைகளில் மக்ரோனின் 'சுதந்திரத்தை' பாராட்டி கட்டுரைகளை வெளியிட்டனர். சீன அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் ஒரு தலையங்கத்தை வெளியிட்டது, 'மக்ரோனின் சீனாவிற்கான வருகை மூலோபாய சுயாட்சியின் மதிப்பை உள்ளடக்கியுள்ளது' என்று தலைப்பிட்டுள்ளது. வாஷிங்டனை சமன்படுத்தும் சீனா-ஐரோப்பா கூட்டணிக்கான பாதையை மக்ரோன் இதன் மூலம் திறந்து வைத்துள்ளார்.
“மாறிவரும் சர்வதேச நிலப்பரப்பில் பிரான்ஸ் வெளிப்படுத்திய மூலோபாய சுயாட்சி மற்றும் சுதந்திரமான இராஜதந்திர உணர்வை சீன மக்கள் எப்போதும் பாராட்டியுள்ளனர். அந்தக் காலத்தில், பிரான்சின் தேசிய இறையாண்மை மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்காக சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுவதை முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி சார்ல் டூ கோல் கடைப்பிடித்தார். … வாஷிங்டனின் ஒரு மூலோபாய சிற்றரசராக இருப்பது ஒரு முட்டுச்சந்தாகும் என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது. சீனா-பிரான்ஸ் உறவை சீனா-ஐரோப்பா ஒத்துழைப்புக்கான பாலமாக மாற்றுவது இரு தரப்புக்கும் உலகத்துக்கும் நன்மை பயக்கும்’’ என்று குளோபல் டைம்ஸ் மேலும் எழுதியது.
இது பிரான்சில் மக்ரோனின் கொள்கையில் மிகத் தெளிவாகத் தெரிகிறது. அவர் மக்களுக்கு எதிராக ஆட்சி செய்கிறார், ஒரு பரந்த இராணுவத்தை கட்டியெழுப்புவதற்கு நிதியளிப்பதற்காக, பெரும் மக்கள் எதிர்ப்பையும் மீறி பாராளுமன்ற வாக்கெடுப்பு இல்லாமல் ஓய்வூதியத்தில் ஆழமான வெட்டுக்களை சுமத்துகிறார். உண்மையில், சீனாவில் இருந்தபோது, மக்ரோன் தனது ஓய்வூதிய வெட்டுக்களை எதிர்க்கும் பெரும்பான்மையான பிரெஞ்சு மக்களை பகிரங்கமாக கேலி செய்தார், அவருடைய ஆட்சி 'ஜனநாயகமானது' என்று வலியுறுத்திய பின்னர், 'மக்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக விரும்பினால், அவர்கள் எனக்கு வாக்களித்திருக்கக் கூடாது” என்று கிண்டலடித்தார்.
பாரிஸ் மற்றும் பெய்ஜிங்கால் பாராட்டப்படும் 'தேசிய சுயாட்சி' என்பது உழைக்கும் மக்களின் சுதந்திரம் மற்றும் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் அல்ல, மாறாக, முதலாளித்துவ வர்க்கங்கள் தங்கள் இலாப நலன்களுக்காகப் போரை நடத்துவதற்கான சுதந்திரம் ஆகும்.
இது குறிப்பாக பிரான்சில் தெளிவாக உள்ளது. 1965ல் வாஷிங்டனுக்கும் பாரிசுக்கும் இடையே அமெரிக்க டொலர் தொடர்பாக எழுந்த மோதல்கள் மற்றும் அல்ஜீரிய சுதந்திரத்திற்கு எதிரான பிரான்சின் போரின் போது டு கோலைக் கொல்ல முயன்ற பிரெஞ்சு வலதுசாரிகளின் போட்டிப் பிரிவுகளுக்கு CIA உதவியதாக பிரெஞ்சு சந்தேகங்களுக்கு மத்தியில் டு கோல் 1965 இல் நேட்டோவிலிருந்து விலகினார். இந்த மோதல்கள் அதிகரித்ததால், 1964 இல் மக்கள் சீனக் குடியரசை அங்கீகரித்த முதல் நேட்டோ நாடாக பிரான்ஸ் ஆனது.
1991 ல் ஸ்ராலினிசம் சோவியத் யூனியனை கலைத்தபின்பு, நேட்டோ அதிகார சக்திகள் ஒரு பொது எதிரியை இழந்ததிலிருந்து அமெரிக்க-பிரெஞ்சு பதட்டங்கள் கூர்மையாகிவிட்டன. இந்தப் பதட்டங்களின் மூலாதாரம் உலகப் பொருளாதாரத்தில் இருந்து இலாபங்களைப் பிரிப்பதற்கான போராட்டமாகவே இருக்கிறது. 2003ல் எண்ணெய் வளம் மிக்க ஈராக் மீது வாஷிங்டன் தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பைத் தொடங்கியதால் அமெரிக்க-பிரெஞ்சு பதட்டங்களின் காலகட்டத்தைத் தவிர, சோவியத்துக்கு பிந்தைய காலத்தில் அமெரிக்க தலைமையிலான அனைத்து முக்கிய போர்களிலும் பிரெஞ்சு ஏகாதிபத்தியம் இணைந்துள்ளது. குறிப்பாக, ஈராக், யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா மற்றும் அதற்கு அப்பாலும் பிரான்ஸ் துருப்புக்களை அனுப்பியுள்ளது.
பெய்ஜிங் மற்றும் வாஷிங்டன் இரண்டிற்கும் போட்டியாக ஐரோப்பாவை 'மூன்றாம் துருவமாக' கட்டியெழுப்பவதற்கு, தொழிலாளர்களின் முதுகில் நிதியளிக்கப்பட்ட 'யுத்தப் பொருளாதாரம்' வேண்டும் என்ற மக்ரோனின் பிற்போக்குத்தனமான அழைப்புகளுக்கு அடிகோலுவது, வாஷிங்டனுடனான பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் போட்டியாகும்.
உள்நாட்டில் வெடித்துள்ள நெருக்கடிக்கு மத்தியில் மக்ரோனின் சீன பயணம் உள்நாட்டு மற்றும் பூகோள பரிமாணத்தைக் கொண்டிருந்தது. அவர் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் போலி-இடது குழுக்களின் சேவைகளைப் பயன்படுத்தி வேலைநிறுத்தத்தை களைவதற்கும், வெட்டுக்கள் இறுதியில் கடந்துவிடும் என்பதை ஏற்றுக்கொள்ளுமாறு தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் நம்புகிறார். அத்துடன், சந்தேகத்திற்கு இடமின்றி பிரெஞ்சு தேசிய சுயாட்சி பற்றிய மக்ரோனின் சொல்லாட்சி, டு கோல் மற்றும் ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியுடனான அவரது கூட்டணியை போற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் உள்ள பேரினவாதிகள், அதிகாரத்துவத்தில் அவருக்கு ஆதரவாக இருப்பர் என்றும் மக்ரோன் நம்புகிறார்.
குறிப்பிடத்தக்க வகையில், கடந்த இலையுதிர்காலத்தில் தைவான் மீதான அமெரிக்கக் கொள்கையை போலி-இடது அடிபணியாத பிரான்ஸ் கட்சியின் தலைவரான ஜோன்-லூக் மெலன்சோன் தொடர்ந்து விமர்சித்து 'ஒரே சீனா' கொள்கையை ஆதரித்ததை அடுத்து மக்ரோனின் சீனா பயணம் வந்துள்ளது.
தொழிலாளர்கள் போருக்கு எதிரான போராட்டத்தை மக்ரோனிடமும் பெய்ஜிங்கில் உள்ள சீன ஸ்ராலினிச ஆட்சியிடமும் ஒப்படைப்பது அரசியல்ரீதியாக தற்கொலையாகும். மக்ரோன் பிரான்சில் எப்போதும் இல்லாத சர்வாதிகார ஆட்சியை வழிநடத்துகிறார். இந்த ஆட்சி தொழிலாள வர்க்கத்தின் பொது வேலைநிறுத்தத்தின் மூலம் வீழ்த்தப்பட வேண்டும். பெய்ஜிங்கிற்கான அவரது பயணம், அத்தகைய போராட்டத்தை நடத்துவதற்கு, தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதும், அமெரிக்கா, ஐரோப்பா, சீனா மற்றும் அதற்கு அப்பாலும் ஏகாதிபத்திய போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாளர்களை ஒன்றுபடுத்துவதும் தேவை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.