செலென்ஸ்கியை வரவேற்றுள்ள போலந்து, உக்ரேன் போரில் நேரடித் தலையீட்டைத் தயாரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வாரம் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி வார்சோவிற்கு விஜயம் செய்தமை எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு விடயத்தை தெளிவாக்கியுள்ளது. அதாவது, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போரானது புவியியல் ரீதியான அளவிலும்  மற்றும் தீவிரத்தின் அடிப்படையிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போலந்து இதில் முக்கிய பங்கு வகிப்பதுடன், முன்னணி நேட்டோ சக்திகளுடனான நெருக்கமான ஒருங்கிணைப்புடன், மோதலில் நேரடியாகத் தலையீடு செய்ய தயாராகி வருகிறது.

ஏப்ரல் 5, 2023, புதன்கிழமை அன்று, போலந்தின் வார்சோவில் சந்தித்தபோது போலந்து பிரதமர் மத்தேயுஸ் மொராவியஸ்கி (வலதில் இரண்டாவதாக உள்ளவர்) உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியுடன் நடந்து செல்கிறார். [AP Photo/Michal Dyjuk]

வார்சோவின் ரோயல் கோட்டையின் முற்றத்தில் போலந்து பிரதமர் மத்தேயுஸ் மொராவியஸ்கி உடன் இணைந்து தோன்றுகையில், செலென்ஸ்கி போருக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவளிக்கும் நாடுகளில் ஒன்றான போலந்தின் பங்கைப் பாராட்டியதுடன், மேலதிக ஆயுத விநியோகத்திற்கு அழைப்பு விடுத்தார்.

“வெற்றி இன்னும் தொலைவில் உள்ளதா? இல்லை!” என்று அவர் அறிவித்தார். அவர் மேலும், ஒரு நாடு “ஒற்றுமை என்பதோடு நின்றுவிடக் கூடாது. மோதலுக்கு பீரங்கி தேவைப்பட்டால், அதையும் வழங்க வேண்டும். வெற்றிக்கு டாங்கிகள் தேவைப்பட்டால், அவர்களின் தாக்குதல் ஒலி முன் வரிசையில் கேட்கப்பட வேண்டும். மேலும் சுதந்திரத்திற்கு விமானப்படை தேவைப்பட்டால், ரஷ்யா அதன் தாக்குதலுக்கு எவ்வாறு பிரதிபலிக்கும் என்று யோசிக்கக் கூடாது” என்று அவர் கூறினார்.   

உக்ரேனுக்கு போர் விமானங்களை வழங்கும் முதன்மை நாடுகளில் போலந்தும் ஒன்றாக உள்ளது. மேலும் இப்போது அதன் ஒட்டுமொத்த MiG-29 ரக போர் விமானங்களை கியேவிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளது. செலென்ஸ்கி உடனான சந்திப்புக்குப் பிறகு போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரே டுடா இதனை அறிவித்தார். அதாவது, தனது நாடு ஏற்கனவே எட்டு போர் விமானங்களை உக்ரேனுக்கு வழங்கியுள்ளதாகவும், தற்போது மேலும் ஆறு MiG-29 ரக போர் விமானங்களை ஒப்படைக்கத் தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “நேட்டோ கூட்டாளிகள் ஒப்புக்கொண்டால்” சுமார் 30 விமானங்களை உள்ளடக்கிய “அதன் முழு MiG விமானப்படைப்பிரிவை எதிர்காலத்தில் உக்ரேனிய விமானப்படையிடம் ஒப்படைக்க வார்சோ தயாராக இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.  

வியாழன் அன்று, முன்னாள் கிழக்கு ஜேர்மனியில் உள்ள இருப்புக்களில் இருந்து MiG-29 ரக போர் விமானங்களை கியேவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான போலந்து அரசாங்கத்தின் கோரிக்கைக்கு பேர்லின் ஒப்புதல் அளித்தது. 2002 ஆம் ஆண்டில், அப்போதைய சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக் கட்சி கூட்டணி அரசாங்கம் போலந்திற்கு 23 போர் விமானங்களை விற்றுள்ளது. இவை முன்னாள் கிழக்கு ஜேர்மனியின் தேசிய மக்கள் இராணுவத்திடம் இருந்து ஜேர்மன் இராணுவத்தால் (Bundeswehr) கைப்பற்றப்பட்டவையாகும். வார்சோவின் கூற்றுப்படி, இன்று கூட அவற்றில் சுமார் ஒரு டசின் விமானங்கள் போலந்தின் விமானப்படையிடம் உள்ளது. அவை இப்போது உக்ரேனிய இராணுவத்திற்கு அனுப்பப்படுகின்றன.

திட்டமிடப்பட்ட போலந்து ஆயுத விநியோகங்கள் போர் விமானங்களுடன் நின்றுவிடவில்லை. மாறாக வார்சோவில், உக்ரேனிய பிரதிநிதிகள், போலந்து ஹோவிட்சர்கள், விமான எதிர்ப்பு ஏவுகணைகள், துருப்புக் கப்பல்கள் மற்றும் சக்கர டாங்கிகள் ஆகியவற்றைப் பெறுவதற்கான கூடுதல் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த ஆயுதக் கொள்முதல்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவிடமிருந்து கிடைக்கும் ஆதரவு நிதியில் இருந்து நிதியளிக்கப்படவுள்ளது. மேலும், உக்ரேனிய இராணுவத்திற்கு 125-மிமீ டாங்கி வெடிமருந்துகளை தயாரிக்க கூட்டு உற்பத்தி வழிகளை உருவாக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த முழு விஜயமும் வார்சோவிற்கும் கியேவிற்கும் இடையிலான நெருங்கிய கூட்டுறவைக் கொண்டாட வடிவமைக்கப்பட்டுள்ளது. போலந்தின் மிகவுயர்ந்த இராணுவ பவனியுடன் டுடா செலென்ஸ்கியை வரவேற்ற பிறகு, செலென்ஸ்கி உக்ரேனுக்கும் போலந்திற்கும் இடையேயான “பல நூற்றாண்டுகால நட்பு” பற்றி பேசினார். ஆனால் வரலாற்று மோதல்கள் இன்னும் மேற்பரப்பிற்கு அடியில் மிதமான கொதிநிலையில் உள்ளன. 

இந்த கோடைக்காலம், உக்ரேனிய தேசியவாதிகளாலும் பாசிசவாதிகளாலும் வோல்ஹினியா மற்றும் கிழக்கு கலீசியாவில் 70,000 முதல் 100,000 வரையிலான போலந்து மக்கள் படுகொலை செய்யப்பட்டதன் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. அந்த வெகுஜன படுகொலையின் தலைவர்களும் தூண்டுதலாளர்களும் கியேவில் இன்றைய தலைமையால் போற்றப்படுகின்றனர். ஜனவரி 1, 2023 அன்று, உக்ரேனிய பாராளுமன்றமும் இராணுவத் தலைமையும் இழிபுகழ் பெற்ற பாசிசவாதியும், யூத எதிர்ப்பாளரும் மற்றும் நாஜி ஒத்துழைப்பாளருமான ஸ்டீபன் பண்டேராவின் 114வது பிறந்த நாளைக் கொண்டாடின. அவரது உக்ரேனிய தேசியவாதிகளின் அமைப்பும் (Organization of Ukrainian Nationalists-OUN-B) மற்றும் அதன் துணை இராணுவப் பிரிவான உக்ரேனிய கிளர்ச்சி இராணுவமும் (Ukrainian Insurgent Army-UPA) சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான படுகொலை மற்றும் அழிப்புப் போரில் முக்கிய பங்கு வகித்தன.

தற்போதைய உக்ரேனிய அரசாங்கம் இந்த பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக தன்னைப் பார்க்கிறது. மற்றவற்றுடன், உக்ரேனிய பாராளுமன்றம் பண்டேராவின் உருவப்படத்திற்கு முன்னால் உக்ரேனிய ஆயுதப்படைகளின் தளபதி வலேரி ஜலுஷ்னியின் படத்தைக் காட்டும் ட்வீட் ஒன்றை வெளியிட்டது. அதாவது, “உக்ரேனிய தேசியவாதத்தின் முழுமையான மற்றும் இறுதி வெற்றி என்பது ரஷ்ய சாம்ராஜ்யம் இல்லாதபோது மட்டுமே வெல்லப்படும்” என்று அவர் கூறியதை மேற்கோளிட்டு ட்வீட் செய்யப்பட்டுள்ளது.

போலந்தில் ஒரு பொது எதிர்ப்புக்குப் பிறகு, உக்ரேனிய ராடா (பாராளுமன்றம்) இந்த இடுகையை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் இது பண்டேரா மற்றும் உக்ரேனில் உள்ள மற்ற பாசிசவாதிகளை புகழ்வதைக் குறைக்காது. குறிப்பாக, நாஜி ஒத்துழைப்பாளர்கள் மற்றும் நவ-பாசிசவாதிகளின் நினைவாக நினைவுச்சின்னங்கள் அமைப்பதற்கும், தெருக்களுக்கு மறுபெயரிடுவதற்கும் செலென்ஸ்கி ஆட்சி மில்லியன் கணக்கில் செலவு செய்கிறது.  

போலந்தின் தீவிர வலதுசாரி ஆளும் சட்டம் மற்றும் நீதி (PiS) கட்சியும் கூட ஒரு தீவிர ரஷ்ய விரோத போக்கைப் பின்பற்றுவதோடு, பாசிச மற்றும் யூத விரோத சக்திகளுடன் வெளிப்படையாக ஒப்பந்தங்கள் செய்து கொள்கிறது. ட்வீட்டிற்கு எதிரான அதன் எதிர்ப்பு முக்கியமாக பண்டேராவை உக்ரேனிய அரசாங்கம் மகிமைப்படுத்துவது போரின் உண்மையான தன்மையை வெளிப்படுத்திவிடும் என்பதுதான். 

வார்சோவில் செலென்ஸ்கி கூறியது போல் உக்ரேன் “சுதந்திரத்திற்கான போராட்டத்தை” நடத்தவில்லை. அணுசக்தி திறன் கொண்ட ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேனில் ஏகாதிபத்திய பினாமி போரைத்தான் நேட்டோ கூட்டணி நடத்தி வருகிறது என்ற உண்மையை பிற்போக்குத்தன ரஷ்ய படையெடுப்பு மாற்றவில்லை. இது ரஷ்யாவை இராணுவ ரீதியாக சுற்றி வளைத்தும் உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்கியும், அது இறுதியாக புட்டின் ஆட்சியை இராணுவ ரீதியாக பதிலடி கொடுக்கத் தூண்டியது. இப்போது, வளங்கள் நிறைந்த நாட்டை அடிபணிய வைப்பதற்கு நேட்டோ திட்டமிட்ட முறையில் மோதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த செயல்பாட்டில், முன்னணி நேட்டோ சக்திகள் கூட யார் உக்ரேனைக் கட்டுப்படுத்து என்பதில்தான் அக்கறை கொண்டுள்ளன.   

போருக்கு பின்னரான கொள்ளையில் தனது பங்கை எதிர்பார்க்கிறது என்பது பற்றி போலந்தின் தலைமை செலென்ஸ்கியிடம் எந்த இரகசியத்தையும் பேணவில்லை. புனரமைப்பு செயல்பாட்டில், உக்ரேனின் மிக முக்கியமான வர்த்தக பங்காளியாக வார்சோ தொடர்ந்து இருக்கும் என்று டுடா வலியுறுத்தினார். முந்தைய நாள், ஜேர்மன் பொருளாதார அமைச்சர் ரோபேர்ட் ஹாபெக் ஏற்கனவே உக்ரேனில் ஒரு முக்கிய பங்கிற்கு ஜேர்மனியின் உரிமையை உறுதிப்படுத்த ஒரு வணிக பிரதிநிதிகள் குழுவுடன் உக்ரேனுக்கு விஜயம் செய்திருந்தார். 

ஆனால் நேட்டோ சக்திகள் பொருளாதார நலன்களை மட்டும் பின்பற்றவில்லை. திரைக்குப் பின்னால், உக்ரேன் மற்றும் ஒட்டுமொத்த கிழக்கு ஐரோப்பாவின் மறுமலர்ச்சி மறுசீரமைப்பு குறித்து அரிவாள்கள் நீண்ட காலமாக கூர்மைப்படுத்தப்பட்டுள்ளன.

“இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய தீர்வின் விளைவாக ஏற்பட்ட பிராந்திய தகராறுகளின் மறுஎழுச்சியும் போரில் அதிகம் விவாதிக்கப்படாத விளைவுகளில் ஒன்றாகும்,” என்று உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) சமீபத்திய அறிக்கை கூறுகிறது.

ஜேர்மனியின் ஆளும் வர்க்கமானது “ஒரு காலத்தில் பிரெஸ்லவ் என்று அழைக்கப்பட்ட போலந்து நகரமான வ்ரோக்லா, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜேர்மன் பேரரசின் ஆறாவது பெரிய நகரமாக இருந்தது என்பதை மறந்துவிடவில்லை.” அதேபோல, போலந்து அரசாங்கமும் “இரண்டாம் உலகப் போர் வெடிப்பதற்கு முன், லுவோவ் என்றழைக்கப்பட்ட மேற்கு உக்ரேனில் உள்ள லிவேவ் நகரம் போலந்தின் மூன்றாவது பெரிய நகரமாக இருந்தது என்பதை மறக்கவில்லை.”

ஏகாதிபத்திய சக்திகள் மீண்டும் ஆயுதம் ஏந்தி போரில் நேரடியாக தலையிடுவதற்கு தயாராகி வரும் நிலையில், இத்தகைய தொலைநோக்கு இலக்குகள் ஆபத்தில் உள்ளன. இங்கே கூட போலந்து அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருகிறது.

மார்ச் மாத இறுதியில், பாரிஸிற்கான போலந்து தூதர் எமெரிக் ரோசிஸ்ஸெவ்ஸ்கி பிரெஞ்சு தொலைக்காட்சியான LCI இற்கு அளித்த பேட்டியில் இராணுவத் தலையீட்டிற்கு வெளிப்படையாக அச்சுறுத்தினார். அதாவது, “உக்ரேன் தனது சுதந்திரத்தை பாதுகாக்கவில்லை என்றால், நாங்கள் வேறு வழியின்றி மோதலில் நுழைய வேண்டிய கட்டாயத்தில் இருப்போம்,” என்று அவர் கூறினார். 

உக்ரேனில் மோசமடைந்து வரும் நெருக்கடிக்கு விடையிறுக்கும் வகையில் ரோசிஸ்ஸெவ்ஸ்கியின் அச்சுறுத்தல் இருந்தது. போர் தொடங்கி ஒரு வருடத்திற்குப் பின்னர், செலென்ஸ்கி ஆட்சியானது இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், அத்துடன் பொருளாதார ரீதியாகவும் பாரிய அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. உக்ரேனில் ரஷ்யாவை இராணுவ ரீதியாக தோற்கடிப்பதற்கு அறிவிக்கப்பட்ட இலக்கை நேட்டோ இன்னும் தொடர்கிறது. மேலும், இதை அடைவதற்கு சமீபத்திய ஆயுத விநியோகங்கள் போதுமானதாக இல்லை என்பது தெளிவாகிறது.   

நேரடி இராணுவத் தலையீடு பற்றிய வெளிப்படையான அறிவிப்பு என்பது ஆபத்தானது, ஆனால் புதியதல்ல. மார்ச் மாத இறுதியில், ஹங்கேரிய பிரதமர் விக்டோர் ஓர்பன், ஐரோப்பிய சக்திகள் “அமைதிகாப்பாளர்களை” அனுப்புவது தொடர்பாக பேச்சுவார்த்தைகளை தொடங்கவுள்ளதாக எச்சரித்தார்.

ஆளும் PiS கட்சியின் தலைவரான ஜரோஸ்லாவ் கசின்ஸ்கி ஏற்கனவே ஒரு வருடத்திற்கு முன்பு உக்ரேனுக்கு உதவ நேட்டோ “அமைதிகாக்கும் பணிக்குழுவிற்கு” அழைப்பு விடுத்திருந்தார். கடந்த மே மாதம், ஓய்வுபெற்ற அமெரிக்க தளபதி ஜேக் கீன், ரஷ்யாவிற்கு எதிராக கருங்கடலின் கட்டுப்பாட்டைப் பாதுகாக்க ஒரு “சர்வதேச கூட்டணியை” அமைப்பது பற்றிய பிரச்சினையை எழுப்பினார். 

அப்போதிருந்து, நேட்டோ சக்திகளானது தங்கள் போர் தயாரிப்புகளை முன்னெடுப்பதில் அதிகரித்தளவில் தீவிரமாக உள்ளன. கடந்த ஜூன் மாதம், நேட்டோவின் கிழக்கு பகுதியில் இராணுவக் கூட்டணியின் விரைவான எதிர்தாக்குதல் படையின் (Rapid Reaction Force) எண்ணிக்கை 40,000 இல் இருந்து 300,000 ஆக அதிகரிக்கப்படும் என்று நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பேர்க் அறிவித்திருந்தார். சமீபத்திய மாதங்களில், நேட்டோவானது கிழக்கு ஐரோப்பாவில் பல்லாயிரக்கணக்கான படையினரை நிலைநிறுத்தியுள்ளதோடு, ஒரு உண்மையான படையெடுப்பு படையை உருவாக்க செயலாற்றி வருகிறது. இந்த முயற்சியில் போலந்து முக்கிய பங்கு வகிக்கிறது. 

மார்ச் 22 அன்று, அமெரிக்க இராணுவத்தின் முதல் நிரந்தர காவல் படை போஸ்னானில் உத்தியோகபூர்வமாக தொடங்கப்பட்டது. இதை கடந்த கோடையில் வெள்ளை மாளிகை ஏற்கனவே தீர்மானித்திருந்தது. இது 1997 நேட்டோ-ரஷ்யா ஸ்தாபகச் சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகும். அதாவது இச்சட்டம், முன்னாள் வார்சோ ஒப்பந்த அங்கத்துவ நாடுகளில் “கணிசமான போர்ப் படைகளை நிரந்தரமாக நிலைநிறுத்துவதை” தடை செய்கிறது.

“நாங்கள் ‘நிரந்தர,’ என்ற வார்த்தையுடன் பல ஆண்டுகளாக போராடி வருகிறோம், இப்போது அது நிஜமாகிவிட்டது,” என்று பாதுகாப்பு அமைச்சர் மாரியுஸ் பிளாஸியாக் தொடக்க விழாவில் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தார். அவர், அருகில் Biedrusko நகரில் உள்ள “Abrams Academy” பற்றியும் குறிப்பிட்டார். அங்கு அமெரிக்க இராணுவம் போலந்து படையினருக்கு Abrams MIA2 முக்கிய போர் டாங்கிகளை இயக்குவதற்கான பயிற்சி அளிக்கிறது. கடந்த ஆண்டு, 4.75 பில்லியன் டாலர் மதிப்பிற்கு இந்த வகையிலான 250 போர் டாங்கிகளை போலந்து வாங்கியது.  

தீவிர வலதுசாரி PiS அரசாங்கமானது, ஐரோப்பாவின் வலிமைமிக்க தரைப்படையை கட்டமைக்கும் இலக்கை தானே நிர்ணயித்துள்ளது. மேலும் அந்த நோக்கத்திற்காக அதன் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தை இந்த ஆண்டு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீத அளவிற்கு அதிகரித்துள்ளது. சமீபத்தில் பாதுகாப்பு அமைச்சர் பிளாஸியாக் முதலில் புதிதாக வாங்கப்பட்டுள்ள அமெரிக்க K2 மற்றும் Abrams முக்கிய போர் டாங்கிகளின் வருகையை அறிவித்தார். மொத்தத்தில், போலந்து 1,000 டாங்கிகளுக்கு மேல் கொள்முதல் ஆணை வழங்கியுள்ளது. போலந்து இராணுவப் படையின் பலமும் பெருமளவில் அதிகரிக்கப்படவுள்ளது. அதாவது தற்போதைய படையினரின் எண்ணிக்கை 164,000 இல் இருந்து 300,000 ஆக அதிகரிக்கப்படவுள்ளது. மேலும், தேசிய காவல் படையில் இன்னும் பல்லாயிரக்கணக்கானவர்கள் சேர்க்கப்படுவார்கள். 

பெப்ரவரியில், போலந்து தன்னார்வப் படையணி (Polski Korpus Ochotniczy, PDK) உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அறிக்கைகளின்படி, பெப்ரவரி 15 அன்று கியேவில், உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகத்தின் பிரதிநிதி, பல போலந்து தன்னார்வலர்கள், படைப்பிரிவின் போலந்து அமைப்பாளர் மற்றும் ரஷ்ய தன்னார்வப் படையின் தளபதி ஆகியோரது பங்கேற்புடன் இதன் உருவாக்கம் நடந்தது. 

ரஷ்ய தன்னார்வப் படைப்பிரிவு ரஷ்யாவில் பிறந்த தன்னார்வலர்களின் ஒரு பிரிவு ஆகஸ்ட் 2022 இல் உருவாக்கப்பட்டது. இது 2014 முதல் உக்ரேனுக்காக போராடி வருகிறது. இந்த பிரிவின் தலைவர் இழிபுகழ் பெற்ற நவ நாஜி டெனிஸ் நிகிதின் ஆவார். மிக சமீபத்தில், ரஷ்ய நகரமான பிரையன்ஸ்க் அருகே, போர்முனைகளுக்குப் பின்னால் தனது படையுடன் ரஷ்ய கிராமங்களைத் தாக்குவதைப் பற்றி அவர் தற்பெருமை பேசினார்.

நேட்டோ நாடுகளில் இருந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட PDK போன்ற போர்ப் படைப் பிரிவுகளை நிலைநிறுத்துவதை, நேட்டோ தரைப்படைகளை நிலைநிறுத்துவதற்கான முன்னோடியாக மட்டுமே பார்க்க முடியும். ஏற்கனவே, பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிற நேட்டோ நாடுகளைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட சிறப்புப் படைகள் உக்ரேனுக்குள் செயல்பட்டு வருகின்றன.

Defender Europe 23, Baltops 23, Sea Breaze 23 மற்றும் Air Defender 23 போன்ற பல போர் பயிற்சிகள் உட்பட, எதிர்வரும் வாரங்களிலும் மாதங்களிலும் பாரிய நேட்டோ படைத்துறை நடவடிக்கைகள் நடைபெறவுள்ளன. அதாவது, பல்லாயிரக்கணக்கான நேட்டோ படைகளை ஈடுபடுத்தும் நேரடி இராணுவத் தலையீட்டிற்கான ஒரு தீர்க்கமான ஏற்பாடு அதிகரித்தளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

போலந்தில், பெரிய அளவிலான நேட்டோ படைத்துறை நடவடிக்கையான Anakonda 23 பயிற்சிக்கான தயாரிப்புகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்கு ஏப்ரல் 17 முதல் மே 16 வரை, சுமார் 10,000 போலந்து படையினரும், நேட்டோ கூட்டணி நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 3,000 படையினரும் அணிதிரட்டப்படுவார்கள். இந்தப் பயிற்சிகளானது, போலந்தில் உள்ள முக்கிய பயிற்சிப் பகுதிகளிலும், எஸ்தோனிய, லாட்வியா, லிதுவேனியா மற்றும் சுவீடனில் உள்ள பயிற்சி மைதானங்களிலும் நடைபெறும்.  

Loading