மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார், உலகப் பொருளாதாரத்தின் பிளவானது சர்வதேச நிதிய அமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி, அத்துடன் பணவீக்கத்தை ஊக்குவிப்பதில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதான அதிகரித்து வரும் எச்சரிக்கை குரல்களுடன் சேர்ந்து கொண்டுள்ளார்.
உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க தலைமையிலான நேட்டோ போரினாலும், சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் தீவிரப்படுத்தப்பட்ட மோதலினாலும் பொருளாதாரப் பிளவுகள் தீவிரமடைந்துள்ளன.
திங்களன்று நியூயோர்க்கில் வெளிநாட்டு உறவுகள் சபையில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றுகையில், லகார் பூகோள அரசியலின் டெக்டோனிக் தட்டுகள் “வேகமாக மாறுகின்றன” என்று கூறினார்.
மேலும், “உலகப் பொருளாதாரம் போட்டியிடும் தொகுதிகளாகப் பிளவுபடுவதையும், ஒவ்வொரு தொகுதியும் உலகின் மற்ற பகுதிகளை அதனதன் மூலோபாய நலன்கள் மற்றும் பகிரப்பட்ட மதிப்புகளுக்கு நெருக்கமாக இழுக்க முயற்சிப்பதையும் நாம் காண்கிறோம். மேலும் இந்த பிறவுறுதல் முறையே உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களால் வழிநடத்தப்படும் இரண்டு தொகுதிகளைச் சுற்றி ஒன்றிணைக்கப்படலாம்” என்றும் அவர் கூறியுள்ளார்.
இது மத்திய வங்கிகளின் கொள்கை சூழலில் “கடுமையான விளைவுகளை” ஏற்படுத்தக்கூடும். மேலும், “உலகளாவிய விநியோக நெகிழ்ச்சி குறைந்து வருவதால் அதிக ஸ்திரமற்றத் தன்மையை நாம் காணலாம் என்பதோடு… பூகோள அரசியல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதிக பன்முகத்தன்மையையும் நாம் காணலாம்” என்கிறார்.
பனிப்போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஒப்பீட்டளவில் ஸ்திரத்தன்மையின் காலம் இப்போது நீடித்த ஸ்திரமற்ற தன்மைக்கு வழிவகுத்துள்ளமை, “குறைந்த பொருளாதார வளர்ச்சி, அதிக செலவுகள் மற்றும் அதிக நிச்சயமற்ற வர்த்தக கூட்டாண்மைகள்” ஆகியவற்றை விளைவித்துள்ளது. இது மீண்டும் மீண்டும் விநியோக தடங்கல்களுக்கான அபாயத்திற்கு வழிவகுக்கும்.
ஐரோப்பிய எரிசக்தி நெருக்கடி இதுவரை அதிகம் காணக்கூடிய ஒரு விநியோக பாதிப்பாகும், அதேவேளை மற்ற முக்கியமான விநியோகங்களும் பாதிக்கப்படலாம். அமெரிக்கா குறைந்தது 14 முக்கிய கனிமங்களின் இறக்குமதியை முழுமையாகச் சார்ந்துள்ளதையும் மற்றும் ஐரோப்பா, பொருளாதாரத்தின் முக்கிய பகுதிகளுக்கு மிகவும் முக்கியமான அதன் 98 சதவீத அரிய பூமித் தனிமங்களின் விநியோகத்திற்கு சீனாவை நம்பியிருந்ததையும் பற்றி அவர் குறிப்பிட்டார்.
“உலகளாவிய மதிப்பு சங்கிலிகள் பூகோள அரசியல் பாதைகளுக்கு ஒருங்கே பிளவுபட்டால், உலகளாவிய நுகர்வோர் விலையில் ஏற்படும் அதிகரிப்பானது குறுகிய காலத்திற்கு 5 சதவீதமாகவும் மற்றும் நீண்ட காலத்திற்கு சுமார் 1 சதவீதம் வரையிலும் இருக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.
பாக்ஸ் அமெரிக்கானா என்று குறிப்பிடப்படும் 1945 இற்கு பிந்தைய அமெரிக்க மேலாதிக்க காலத்தில், டாலர் உலகளாவிய இருப்பு மற்றும் பரிவர்த்தனைக்கான நாணயமாக மாறியது, யூரோவுடன், மிக சமீபத்திய காலத்தில், அது இரண்டாவது இடத்திற்கு உயர்ந்தது. ஆனால் புதிய வர்த்தக முறைகள் சர்வதேச கொடுப்பனவு முறைக்கு மாற்றங்களைக் கொண்டிருந்தன.
“சமீபத்திய தசாப்தங்களில்,” “சீனா ஏற்கனவே வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுடன் பொருட்களின் இருதரப்பு வர்த்தகத்தை 130 மடங்கு அதிகரித்துள்ள நிலையில், அந்நாடு உலகின் சிறந்த ஏற்றுமதியாளராக மாறியுள்ளது” என்று அவர் கூறினார்.
சீனாவுடனான ஒரு நாட்டின் வர்த்தகத்திற்கும் அதன் நாணயமான ரென்மின்பியை கையிருப்பாக வைத்திருக்கும் அதன் விருப்பத்திற்கும் இடையே குறிப்பிடத்தக்க தொடர்பு இருந்தது.
இது சில நாடுகள், அரசியல் முன்னுரிமை, நிதிச் சார்பு, அல்லது பொருளாதாரத் தடைகளைப் பயன்படுத்துதல் ஆகிய காரணங்களுக்காக மேற்கத்திய கொடுப்பனவு முறையை சார்ந்திருப்பதை அவர்கள் குறைக்க முனைவதற்கு வழிவகுக்கக்கூடும். சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப்படி, கிட்டத்தட்ட அனைத்தும் அமெரிக்காவின் நடவடிக்கைகளால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளின் கீழ் உள்ள நாடுகளின் எண்ணிக்கையானது, 2012 முதல் 2022 ஆம் ஆண்டிற்குள் இரட்டிப்பாகியுள்ளது.
இத்தகைய அபிவிருத்திகளானது, டாலர் மற்றும் யூரோ மேலாதிக்கத்தின் எந்தவொரு உடனடி இழப்பையும் சுட்டிக்காட்டவில்லை. “ஆனால் அவை சர்வதேச நாணய நிலையை இனி ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று பரிந்துரைக்கின்றன.”
தனது கருத்துக்களை தயாரிப்பதில், லகார் சந்தேகத்திற்கு இடமின்றி பிரேசில் ஜனாதிபதி லூலா சில நாட்களுக்கு முன்பு சீனாவிற்கு விஜயம் செய்த போது ஆற்றிய உரையை கவனத்தில் எடுத்திருப்பார்.
ஷாங்காயில் புதிய வளர்ச்சி வங்கி (New Development Bank) ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஒரு “உணர்ச்சிமிக்க உரையில்” விவரிக்கப்பட்டது என்னவென்றால், வளரும் நாடுகள் தங்கள் சர்வதேச வர்த்தக உறவுகளில் டாலரை விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளதாகும்.
பிரேசில் மற்றும் சீனாவைத் தவிர, ரஷ்யா, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவை உள்ளடக்கிய BRICS குழுவின் வங்கியாக சீனாவின் புதிய வளர்ச்சி வங்கி அறியப்படுகிறது.
சீன மற்றும் பிரேசிலிய அதிகாரிகள் அடங்கிய பார்வையாளர்களிடமிருந்து கிடைத்த பலத்த கரகோஷத்திற்கு மத்தியில் அவர் இவ்வாறு கேள்விகள் எழுப்பினார்: “அனைத்து நாடுகளும் ஏன் டாலரை அடிப்படையாகக் கொண்டு வர்த்தகம் செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு இரவும் நான் என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். நமது சொந்த நாணயங்களின் அடிப்படையில் நாம் ஏன் வர்த்தகம் செய்யக் கூடாது? தங்கத்தின் தரம் காணாமல் போன பிறகு டாலர்தான் நாணயம் என்று யார் முடிவு செய்தது?” என்று லூலா கேள்வி எழுப்பினார்.
சீனாவுடனான பிரேசிலின் வர்த்தகம் கடந்த தசாப்தத்தில் வேகமாக விரிவடைந்துள்ளது. இப்போது அதன் மதிப்பு மொத்தம் 150 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது. மேலும் வர்த்தகத்தை அவர்களின் சொந்த நாணயங்களை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளும் முயற்சிகள் நடந்து வருகின்ற நிலையில், சமீபத்திய வாரங்களில் அது தொடர்பான முதல் ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளன.
தனது கருத்தை வலியுறுத்தும் வகையில் லூலா தொடர்ந்து இவ்வாறு பேசினார்: “பிரேசிலுக்கும் சீனாவுக்கும், மற்றும் பிரேசிலுக்கும் பிற நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளுக்கு நிதியளிக்க ஏன் BRICS போன்ற வங்கி நாணயத்தை கொண்டிருக்கக் கூடாது? இது கடினம், ஏனென்றால் நாம் யோசனைக்கு பழக்கமில்லாதவர்களாக இருக்கிறோம். அனைத்து நாடுகளும் ஒரே நாணயத்தை மட்டுமே சார்ந்துள்ளன.”
எவ்வாறாயினும், இது பிரதிபலிப்புக்கான கேள்வி மட்டுமல்ல, பைனான்சியல் டைம்ஸ் சுட்டிக்காட்டியபடி, பொருட்களின் சந்தைகள் டாலரை அடிப்படையாகக் கொண்டு நடக்கின்றன என்பதோடு, மாபெரும் இரும்புத்தாது நிறுவனமான Vale போன்ற சுரங்க நிறுவனங்கள் தங்கள் பரிவர்த்தனைகளில் பெரும்பாலானவற்றை டாலரில் வைத்துள்ளன.
எவ்வாறாயினும், தற்போதுள்ள இந்த உறவுகள் இருந்தபோதிலும், டாலர் மேலாதிக்கத்தின் காரணமாக அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டுள்ள மகத்தான சக்தியை முறிப்பதற்கல்லாமல் வலுவிழக்கச் செய்வதற்கான ஒரு உந்துதல் தெளிவாக உள்ளது.
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமெரிக்க கருவூலச் செயலாளர் லோரன்ஸ் சம்மர்ஸ் ப்ளூம்பேர்க் தொலைக்காட்சியில் கருத்துத் தெரிவிக்கையில் பலவீனமடைந்து வரும் அமெரிக்க நிலைப்பாடு பற்றி பேசினார். அதாவது அது செல்வாக்கை இழந்து வருவது “பிரச்சினைக்குரியது” என்று கூறினார்.
“பொருளாதாரப் பிளவு அதிகரித்தளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. இது இன்னும் அதிக பிரச்சினையை உருவாக்கலாம். மேலும், அதனுடன் தொடர்புடையதாக நமது பிளவு சிறந்ததாக இருக்கக்கூடாது என்ற உணர்வு வளர்ந்து வருவதாக நான் நினைக்கிறேன்” என்று அவர் கூறினார்.
கடந்த வாரம் வாஷிங்டனில் நடந்த சர்வதேச நாணய நிதியம் – உலக வங்கி கூட்டங்களின் பக்கவாட்டில் சம்மர்ஸ் பேசிக் கொண்டிருந்தார். அங்கு பொருளாதாரப் பிளவு என்பது விவாதத்தின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக இருந்தது.
“வளர்ந்து வரும் நாட்டைச் சேர்ந்த ஒருவர் என்னிடம், ‘சீனாவிலிருந்து நமக்குக் கிடைப்பது ஒரு விமான நிலையம் என்றால், அமெரிக்காவிலிருந்து நமக்குக் கிடைப்பது ஒரு விரிவுரையாகும்’ என்று கூறினார்,” என்று அவர் கூறினார்.
சவுதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்த சீனாவால் சமீபத்தில் தரகு பேசப்பட்ட ஒப்பந்தம் “அமெரிக்காவிற்கு ஒரு பெரிய சவால்” என்று சம்மர்ஸ் கூறினார்.
அரசியல் மற்றும் நிதியியல் முன்னணிகள் இரண்டின் அடிப்படையில் எப்போதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உறுதியான பாதுகாவலராக, அவர் மேலும் இவ்வாறு கூறினார்: “நாம் வரலாற்றின் வலது பக்கத்தில் இருக்கிறோம். அதாவது, ஜனநாயகத்திற்கு நமது அர்ப்பணிப்பையும், ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு நமது எதிர்ப்பையும் காட்டுவதில் நாம் சரியாக இருக்கிறோம். ஆனால் வரலாற்றின் வலது பக்கத்தில் இது சற்று தனிமையாகத் தெரிகிறது. ஏனெனில், வரலாற்றின் வலது பக்கத்தில் மிகவும் குறைவாகத் தோன்றுபவர்கள் ஒரு முழு அளவிலான கட்டமைப்புகளில் அதிகரித்தளவில் ஒன்றாக இணைந்துள்ளனர்.”
டாலரின் பங்கு மற்றும் அதன் உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அச்சுறுத்தல்கள் பற்றி அவர் குறிப்பிடுகையில், “Bretton Woods முறை உலகம் முழுவதும் போதுமான அளவு வலுவாக வழங்கப்படவில்லை என்றால், அங்கு கடுமையான சவால்களும் முன்மொழியப்பட்ட மாற்றீடுகளும் உருவாகலாம்” என்று அவர் கூறினார்.
வர்த்தகமும் நிதியும் மட்டும் பிரச்சினை இல்லை. மாறாக, அமெரிக்க டாலர் மேலாதிக்கத்தைப் பயன்படுத்தி அதன் பூகோள அரசியல் நோக்கங்களை அது செயல்படுத்த முனைவதுதான் எதிர்ப்பை உருவாக்குகிறது. குறிப்பாக, உக்ரேன் போரின் தொடக்கத்தில் ரஷ்ய மத்திய வங்கியின் டாலர் பங்குகளை முடக்குவதற்கு அது எடுத்த முடிவைக் குறிப்பிடலாம்.
பைனான்சியல் டைம்ஸின் வெளியுறவு விவகாரங்கள் சம்பந்தப்பட்ட கட்டுரையாளர் கிடியோன் ராச்மேன் செவ்வாயன்று ஒரு கருத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்: “‘பாதுகாப்பான புகலிட’ நாணயமாக சர்வதேச நம்பகத்தன்மையைப் பெற்ற அமெரிக்க டாலரானது, ஒரு நாள் வாஷிங்டனுடனான பூகோள அரசியல் சர்ச்சையின் தவறான பக்கத்தில் நாம் இருக்கக்கூடும் என்று அஞ்சுபவர்களுக்கு இப்போது பாதுகாப்பு குறைவானதாகத் தெரிகிறது.”
டாலர் மேலாதிக்கத்திற்கு பெருகும் எதிர்ப்பானது, சந்தேகத்திற்கிடமின்றி வாஷிங்டனில் விவாதப் பொருளாக இருக்கும். உலகளாவிய நாணயமாக உடனடியாக அது மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றாலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது சக்தியை குறைக்க அனுமதிக்கவில்லை.
1971 ஆம் ஆண்டில் உலகளாவிய சந்தைகளில் நிலவிய அமெரிக்காவின் பலவீனமான நிலை, அமெரிக்க நாணயத்தில் இருந்து தங்க உத்தரவாதத்தை அகற்றுவதன் மூலம் 1944 இன் Bretton Woods ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதி நிக்சன் முடிவெடுத்ததை இப்போது நினைவுகூர வேண்டும். ஞாயிறு இரவு தொலைக்காட்சி ஒளிபரப்பில் நிக்சன் இதை அறிவித்தபோது தான், மற்றவர்களைப் போல, அமெரிக்காவின் பங்காளர்கள் மற்றும் கூட்டாளிகள் என்று அழைக்கப்படுபவர்கள் கூட இந்த முடிவைப் பற்றி அறிந்து கொண்டனர்.
நிக்சனின் முடிவிற்குப் பிறகும் டாலர் அதன் உலகளாவிய பங்கைத் தக்கவைத்துக் கொண்டது. ஏனென்றால், அமெரிக்கா இன்னும் கணிசமான பொருளாதார சக்தியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஆனால், அதற்குப் பிறகு அரை நூற்றாண்டுக்கும் மேலாக, அந்த சக்தி கணிசமாகக் குறைக்கப்பட்டு வந்துள்ளது. மேலும், அமெரிக்க நிதிய அமைப்பானது, உலகப் பொருளாதாரம் மற்றும் அதன் நிதிய அமைப்பின் பெரும் நெருக்கடிகளின் ஆதாரமாக மாறியுள்ளது.
பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ளும் அமெரிக்க ஏகாதிபத்தியம், டொலரின் மேலாதிக்கத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு, இராணுவ வழிமுறைகளை ஒரு முக்கிய அங்கமாக கொண்டிருக்கிறது. ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் போருக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் சர்வதேசப் போராட்டத்தை கட்டியெழுப்புவதற்கு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட ஏப்ரல் 30 மே தின நினைவேந்தலின் முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
