மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கடந்த திங்களன்று பிரவுன் பல்கலைக்கழகத்தின் The Cost of War Project என்ற குழு (கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள், மனித உரிமைகள் பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் அடங்கிய குழு) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையானது, செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்காவால் தொடங்கப்பட்ட போர்களின் பேரழிவுகரமான விளைவாக குறைந்தது 4.5 மில்லியன் (45 இலட்சம்) மக்கள் இறந்துள்ளனர் என்று மதிப்பிடுகிறது.
இந்தப் போர்களினால் நேரிடையாக உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கை குறித்த மதிப்பீடுகளை தொடர்ந்து வெளியிட்ட இந்த ஆய்வுத் திட்டத்தின் தற்போதைய அறிக்கை, மறைமுக மரணங்கள் குறித்தும், போர்களுடன் தொடர்புள்ள வகையில், சீர்குலைந்துள்ள விவசாயம், சுகாதாரப் பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரம் குறித்தும் தனது கவனத்தைத் திருப்பியுள்ளது.
4.5 மில்லியன் இறப்புகளில் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சோமாலியா, சிரியா ஆகிய நாடுகள் அடங்கும். மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளும் ஆப்கானிஸ்தானில் போரினால் பாதிக்கப்பட்டுள்ளன. புற்றுநோய்கள், தற்கொலைகள் மற்றும் போர்களின் பிற விளைவுகளால் ஏற்பட்ட பிற்கால மரணங்கள் உட்பட அமெரிக்க படைகள் மற்றும் அதன் ஒப்பந்ததாரர்களிடையே ஏற்பட்ட மரணங்களில் அறிக்கை கவனம் செலுத்தவில்லை.
சமீபத்திய அமெரிக்கப் போர்களின் மதிப்பிடப்பட்ட இறப்பு எண்ணிக்கையானது, சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, உக்ரேனில் நடக்கும் போரில் அமெரிக்கா தலையிடுகிறது என்ற கூற்றுக்களை பொய் என்பதை நிரூபிக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்த பூமியில் மிகவும் வன்முறை மற்றும் இரத்தக்கறை படிந்த சக்தியாகும், மேலும் ஆபத்து என்னவென்றால், ரஷ்யாவிற்கு எதிரான பினாமிப் போர் அணு ஆயுதங்களை உள்ளடக்கிய பொதுவான மோதலாக மாறினால் இறப்பவர்களின் எண்ணிக்கையானது கடந்த 22 ஆண்டுகளில் ஏற்பட்ட கொடூரமான எண்ணிக்கையைக் கூட விஞ்சிவிடும் என்பதாகும்.
இந்த அறிக்கையானது, நடுநிலை மற்றும் கல்வி சார்ந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது என்றும் 'போரில் ஈடுபட்டவர்களில் எந்தவொருவர் மீதும் நேரடிப் பொறுப்பைக் கூறவில்லை' என்றும், இந்தக் குழுவின் ஆசிரியர் மற்றும் இணைத் தலைவருமான ஸ்டெபானி சேவெல் கூறுகிறார். ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி நிர்வாகங்கள் இரண்டின் கீழும், மதிப்பீடுகள் மற்றும் அதனுடன் இணைந்த நிகழ்வுக் கணக்குகள் 21 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய குற்றங்களுக்கு வாஷிங்டனின் பொறுப்பின் மோசமான சான்றுகளாக இருக்கின்றன.
இந்த ஆய்வுகள் மேற்கொள்ளபட்ட நாடுகளில் துல்லியமான பாதிக்கப்பட்ட மக்கள்தொகை புள்ளிவிவரங்களைப் பெறுவது சாத்தியமற்றது, அவற்றில் பல இன்னும் போர் மண்டலங்களாக இருக்கின்றன, 'ஒவ்வொரு நேரடி மரணத்திற்கும் சராசரியாக நான்கு நேரடியற்ற விகிதாசாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தோராயமான மதிப்பீட்டை உருவாக்குவதுடன்', இது 2008 ஆம் ஆண்டு ஜெனீவா பிரகடன செயலகத்தின் ஆய்வின் அடிப்படையில் இது அமைந்துள்ளது. இது 1990 களின் முற்பகுதியில் இருந்து அனைத்து போர்களையும் மதிப்பாய்வு செய்ததில், நேரடியற்ற இறப்பு மற்றும் நேரடி இறப்பு விகிதாசாரம் 3 க்கு 15 என்று இருந்தது.
The Cost of War Project குழுவின் முந்தைய ஆய்வுகளின் அடிப்படையில், இந்தப் போர்களின் மொத்த நேரடி இறப்புகள் சுமார் 900,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. (ஈராக் போரினால் மட்டும் 600,000 பேர் கொல்லப்பட்டதாக தி லான்செட் வெளியிட்ட மதிப்பீட்டின்படி, கொடுக்கப்பட்ட எச்சரிக்கை வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையாக உள்ளன), அதை நான்கால் பெருக்கினால் நேரடியற்ற இறப்பாக மொத்தம் 3.6 மில்லியன் கிடைக்கும். இரண்டையும் ஒன்றாகச் சேர்த்தால், ஒட்டுமொத்த இறப்புகளாக 4.5 மில்லியன் என்ற இறுதி மதிப்பீட்டைக் கொடுக்கிறது.
அத்தகைய மதிப்பீட்டிற்கான வரம்பு எதுவாக இருந்தாலும், தோராயமான இந்த எண்ணிக்கை திகைக்க வைக்கிறது. ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் முதல் இரண்டு ''21 ஆம் நூற்றாண்டின் போர்களைத்'' தொடங்கியபோது, இப்போர்கள் பாரிய மனித எண்ணிக்கையின் குற்றச்சாட்டாக இருக்கிறது. பின்பு வந்த பராக் ஒபாமா இந்த இரண்டு போர்களையும் மேற்கொண்டு தொடர்ந்தார். அத்துடன், லிபியா, சிரியா மற்றும் யேமனில் மேலும் மூன்று போர்களைச் சேர்த்துக் கொண்டார், பிந்தைய இரண்டு நாடுகளில் பினாமிப் படைகளைப் பயன்படுத்தினார். டொனால்ட் ட்ரம்பும், ஜோ பைடனும் ஏதாவது ஒரு வகையில் இந்த 5 போர்களையும் முன்னெடுத்து சென்றனர்.
நவீனகால நூரம்பேர்க் விசாரணை ஒன்று நடந்தால், (இரண்டாம் உலகப் போரில் இதர நாடுகள் மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தை மேற்கொண்ட நாஜிக்களின் பிரதிநிதிகளுக்கு எதிரான விசாரணை) சட்டவிரோத ஆக்கிரமிப்புப் போர்களை நடத்திய இந்த நான்கு ஜனாதிபதிகளும் வெகுஜன மரணம் மற்றும் துன்பங்களுக்கு பொறுப்பானவர்களாக குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவார்கள்.
இந்த போர்களில் ஆறாவது நாடான சோமாலியாவில், உண்மையில் 1992ல் அமெரிக்க தலையீட்டின் மூலம் புஷ்ஷின் தந்தையால் தொடங்கப்பட்டது, ஒவ்வொரு அமெரிக்க நிர்வாகமும் விமானத் தாக்குதல்கள், சிறப்பு நடவடிக்கைப் படைகளின் தாக்குதல்கள் மற்றும் ட்ரோன் ஏவுகணைத் தாக்குதல்கள், அத்துடன் ஒரு பிராந்தியத்திற்கு அல்லது முழு நாட்டிற்கும் உணவு மற்றும் பிற மனிதாபிமான உதவிகளை தடைசெய்வதில் ஈடுபட்டது. எத்தியோப்பியா மற்றும் கென்யாவில் இருந்து அமெரிக்க பினாமி படைகளால் இந்த நாட்டின் மீது படையெடுப்புகளும் நடந்துள்ளன.
The Cost of War Project குழுவின் அறிக்கையானது, இந்தப் போர்கள் நடந்த காலத்திலும், அதற்குப் பின்னரும் பாரிய வெகுஜன மரணத்திற்கு ஒன்றோடொன்று தொடர்புடைய நான்கு முதன்மைக் காரணங்களைக் கூறுகிறது:
பொருளாதார வீழ்ச்சி, வாழ்வாதார இழப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை;
பொது சேவைகள் மற்றும் சுகாதார உள்கட்டமைப்புகளை அழித்தல்;
சுற்றுச்சூழல் மாசுபாடு; மற்றும்
எதிரொலிக்கும் அதிர்ச்சி மற்றும் வன்முறை.
போர்களில் மிகவும் அழிக்கப்பட்ட நாடு ஆப்கானிஸ்தானாக இருக்கிறது. அது சோவியத் யூனியனின் படையெடுப்பிற்குப் பிறகு 10 ஆண்டுகள் கொரில்லாப் போரைத் தொடர்ந்து 20 ஆண்டுகள் அமெரிக்க ஆக்கிரமிப்பு மற்றும் போரை அனுபவித்தது, பின்னர் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றும் வரை ஏழு ஆண்டுகள் உள்நாட்டுப் போர் மற்றும் அமெரிக்க படையெடுப்பிற்கு முன் ஐந்து ஆண்டுகள் தலிபான் ஆட்சியை அனுபவித்தது.
ஆப்கானிஸ்தானில் அனைத்துப் பிரிவினருடைய இறப்பு விகிதம் இந்த மிகமோசமான வரலாற்றில் வேறு எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு இப்போது அதிகமாக உள்ளது. இந்த அறிக்கையின்படி:
ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இப்போது ஒரு நாளைக்கு $1.90க்கும் குறைவான டாலர்கள் வருமானத்தில் தீவிர வறுமையில் வாழ்கின்றனர். நிலைமை மோசமாக உள்ளது: 95% சதவிகிதம் ஆப்கானியர்கள் உண்பதற்கு போதுமான உணவு இல்லை, மேலும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களில் அந்த எண்ணிக்கை 100% சதவிகிதம் ஆகும். 2022 ஆம் ஆண்டில் 18.9 மில்லியன் மக்கள் —நாட்டின் மக்கள்தொகையில் ஏறக்குறைய பாதி பேர்— கடுமையான உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர். இவர்களில் 3.9 மில்லியன் குழந்தைகள் கடுமையான ஊட்டச் சத்து குறைபாடு அல்லது “மிகக் கடுமையான ஊட்டச் சத்து குறைபாட்டினால்” அத்தியாவசிய ஊட்டச் சத்துக்களை போதுமான அளவு உட்கொள்ளாமல், கடுமையான உடலியல் பாதிப்புகளுடன் உள்ளனர். ஒரு மில்லியன் ஆப்கானிய குழந்தைகள் உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளனர்.
அனைத்து நடைமுறை நோக்கங்களுக்காக, ஒரு சில முக்கிய நகரங்களைத் தவிர நாட்டில் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறை இல்லை. அறிக்கை இவ்வாறு குறிப்பிடுகிறது: 'ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகு, சுகாதாரத்திற்கான அனைத்து வெளிநாட்டு நிதியுதவிகளும் திடீரென நிறுத்தப்பட்டன, ஒரு மாதத்திற்குப் பிறகு, ஆப்கானிஸ்தானின் 80% சதவிகிதத்திற்கும் அதிகமான சுகாதார வசதிகள் செயலிழந்ததாக அறிவிக்கிறது.'
உலகில் புதிதாக பிறந்த குழந்தைகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. 'ஆப்கானிஸ்தானில், ஜனவரி மற்றும் மார்ச் 2022 க்கு இடையில் பிறந்த குழந்தைகளில் பத்தில் ஒன்று இறந்துள்ளது, வெறும் மூன்று மாதங்களில் 13,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளன' என்று அந்த ஆய்வு தொடர்கிறது.
'ஆப்கானிஸ்தான் போன்ற ஒரு நாட்டில், இன்று எந்த மரணமும் போருக்கு தொடர்பில்லாததாகக் கருதப்படுமா என்பதுதான் அழுத்தமான கேள்வியாகும்' என்று மானுடவியலாளர் அனிலா தௌலட்சாய், காபூலுக்குச் சென்றபின் ஆராய்ச்சியாளர்களுக்கு கூறினார்.
இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான நாடுகளில், விவசாயம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு அழிவு என்பது போரின் திட்டமிடப்படாத துணை விளைபொருள் அல்ல, மாறாக அதன் முக்கிய நோக்கமாக இருந்தது. குறிப்பாக சிரியாவில், அறிக்கையின்படி:
சிரியா, ரஷ்யா மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் உட்பட பல்வேறு கட்சிகளும், இஸ்லாமிய அரசு மற்றும் அல்-நுஸ்ரா முன்னணி போன்ற ஆயுதக் குழுக்களும் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வசதிகள் மீது குண்டுவீசித் தாக்கி அழித்துள்ளன.
யேமனில், அமெரிக்க ஆதரவு பெற்ற சவூதி இராணுவம், மக்களை பட்டினி கிடக்க வேண்டுமென்ற முயற்சியில் பண்ணைகள், உணவு சேமிப்பு கிட்டங்கிகள், மளிகை பொருட்கள், மீன்பிடி படகுகள் போன்றவற்றின் மீது குண்டுகளை வீசியுள்ளது. ஈராக்கில், அமெரிக்க குண்டுவீச்சு மருத்துவ வசதிகள் மற்றும் மருந்துகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை குறிவைத்தது தாக்கியது.
ஈராக்கானது மத்திய கிழக்கில் மிகவும் மேம்பட்ட சுகாதார அமைப்பு முறைகளைக் கொண்ட நாடாக இருந்தது. ஆனால், அமெரிக்கப் படையெடுப்பிற்குப் பிறகு ஐந்து ஆண்டுகளில், 2003 முதல், நாட்டின் பாதி மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர், அவர்களின் மொத்த எண்ணிக்கை 18,000 பேர்களாகும். 2014 இல் ISIS இன் எழுச்சி மற்றும் உள்நாட்டுப் போர் நிலைமைகள் தீவிரமடைந்ததால், மேலும் 5,400 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மருத்துவர்கள் மட்டுமே இந்த நாட்டில் உள்ளனர்.
The Cost of War study குழுவினது ஆய்வறிக்கையானது, தொண்டுப் பணியாளர்கள் மற்றும் அரசாங்கங்களின் அறிக்கைகளின் அடிப்படையில், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு குறித்த தற்போதைய அறிக்கைகளைத் தொகுத்துள்ளது. “தற்போது 7.6 மில்லியன் குழந்தைகள் இந்த நாடுகளில் மிகக் கடுமையான அல்லது தீவிரமான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று அது மதிப்பிடுகிறது. இவற்றில் பாதிப்பேர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ளனர், மீதமுள்ளவர்கள் யேமனில் உள்ளனர்.
யேமனில், சவுதி ஆட்சி, ஏகாதிபத்திய சக்திகள், முக்கியமாக அமெரிக்கா வழங்கிய குண்டுகள் மற்றும் போர் விமானங்களைப் பயன்படுத்தி, அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் இராணுவ அதிகாரிகளால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், குறிவைத்து 33 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டின் மீது தோராயமாக 24,000 வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்த ஆய்வின்படி, இந்த தாக்குதல்களில் 7,000 இராணுவம் அல்லாத நிலைகள் இலக்குகளாக இருந்துள்ளன. 8,000 இராணுவ நிலைகள் மற்றும் 9,000 இலக்குகளை சரியாக தீர்மானிக்க முடியவில்லை.
லிபியாவில், 2011 இல் நடந்த அமெரிக்க-நேட்டோ போரில், நீண்ட காலத் தலைவர் மும்மர் கடாபியின் வெளியேற்றம் மற்றும் கொடூரமான அவரது கொலைக்கு வழிவகுத்த நாடுகளின் குண்டுவீச்சுக்கு அமெரிக்காதான் தலைமை தாங்கியது. பின்னர், இந்த நாடு ஒரு நீண்ட உள்நாட்டுப் போரில் ழூழ்கியபோது, இஸ்லாமிய ஆயுதக் குழுக்கள் சிலர் அமெரிக்காவால் ஆதரிக்கப்பட்டனர். அதை ஏற்காதவர்கள் இவற்றில் முக்கிய பங்கு வகித்தனர்.
பென்டகன் அறிக்கையின்படி, ISIS ன் கட்டுப்பாட்டுக்குள் வந்த கடாபியின் பிறப்பிடமான சிர்டே நகரில், அமெரிக்கா ஆகஸ்ட் முதல் டிசம்பர் 2016 வரை 500 வான்வழித் தாக்குதல்களை நடாத்தியுள்ளது. இத்தாக்குதல்கள் 300 ட்ரோன்கள் மூலமாகவும், 200 ஆளில்லா விமானங்கள் மூலமாகவும் அமெரிக்காவினால் நடத்தப்பட்டன. The Cost of War study குழுவின் ஆய்வறிக்கை குறிப்பிடுவது போல், இவை 'சிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்க விமான நடவடிக்கைகளின் ஒப்பிடக்கூடிய காலகட்டங்களைக் காட்டிலும் மிகவும் மோசமான குண்டுவீச்சுக்களாக' இருந்தன.”
இந்தப் போர்களின் எண்ணற்ற பின் விளைவுகள் உள்ளன: பாரிய அளவில் இருக்கும் வெடிக்காத வெடிகுண்டுகள், சுற்றுச்சூழல் சீரழிவு, அதிர்ச்சிகரமான மன அழுத்தக் கோளாறுகள் (PTSD) மற்றும் பிற மனநலப் பிரச்சினைகள், கழிவுநீர் அமைப்புகள் மற்றும் பொது சுகாதாரத்திற்கு இன்றியமையாத பிற உள்கட்டமைப்புகள் அழிக்கப்படுள்ளன. இறுதியாக பின்வருமாறு அறிக்கை குறிப்பிடுகிறது: 'ஐந்து வயதிற்குட்பட்ட ஈராக்கிய குழந்தைகளின் இறப்புக்கு முதன்மையான காரணிகள் குறைந்த சுவாச நோய்த்தொற்றுகள், வயிற்றுப்போக்கு மற்றும் தட்டம்மை ஆகும்.'
இந்தப் போர்களின் மிக முக்கியமான விளைவுகளில் ஒன்று கோடிக்கணக்கான மக்களின் இடப்பெயர்வாகும். 9/11க்குப் பிந்தைய போர்களால் 38 மில்லியன் மக்கள் (3 கோடியே 80 இலட்சம் மக்கள்) இடம்பெயர்ந்துள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள் (53 சதவீதம்) என இந்த ஆய்வு மதிப்பிடுகிறது.
சிரியப் போருக்கு முந்தைய மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்: அதாவது மற்றய நாடுகளில் 5.6 மில்லியன் அகதிகள், 6.5 மில்லியன் அகதிகள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் ஆவர் (ஐ.நா. மற்றும் மனிதாபிமான உதவி குழுக்களின் வார்த்தைகளின்படி). 2022 இல் ஆப்கானிஸ்தானில் 4 மில்லியன் இடம்பெயர்ந்தோர் இருந்தனர், அவர்களில் 60 சதவீதம் பேர் குழந்தைகள் ஆவர். ஆனால் சில அகதிகள் கடல் வழியாக அல்லது சவூதி அரேபியா வழியாக தப்பிச் செல்வதில் சிரமம் உள்ளதால், 2019 இல் யேமனில் 3.6 மில்லியன் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் (IDP) இருந்தனர்.
இந்த அறிக்கையானது, அமெரிக்கா உட்பட பல்வேறு அரசாங்கங்களின் கொள்கை மாற்றத்திற்கான அழைப்புடன், மிகவும் மந்தமான மற்றும் சுருக்கமான முடிவோடு முடிவடைகிறது. அத்துடன், இதன் ஆசிரியரே இதனை நம்பவில்லை என்பது தெளிவாகிறது. மற்றும் நல்ல காரணத்திற்காக, இந்த அழிவுகரமான உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்களுக்கான ஒரே பகுத்தறிவு பதில், ஏகாதிபத்தியத்தையும் அதன் அனைத்து குற்றங்களையும் முடிவுக்குக் கொண்டு வர, சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புரட்சிகர சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்புவதே ஒரே வழியாகும்.