இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
வெட்கமற்ற பாசாங்குத்தனத்தின் ஒரு காட்சிப்படுத்தலாக, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான், இத்தாலி மற்றும் கனடா ஆகிய பிரதான சக்திகளின் ஜி7 குழுவின் தலைவர்கள், அவர்களின் இவ்வார உச்சி மாநாட்டுக்கு முன்னதாக ஜப்பானின் ஹிரோஷிமாவில் உள்ள சமாதான நினைவிடப் பூங்காவில் அணு குண்டுவீச்சில் இறந்தவர்களின் கல்லறையில் நேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அணு ஆயுதங்களை இனி ஒருபோதும் பயன்படுத்த மாட்டோம் என்ற உறுதிமொழியைக் குறிக்கும் விதமான சம்பிரதாய சடங்குக்கு அப்பாற்பட்டு, இந்த ஏகாதிபத்திய பரிவாரங்கள் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிராக வேகமாக விரிவாக்கப்பட்டு வரும் நேட்டோ மோதல் மீதும் மற்றும் ஓர் அணுஆயுத மனிதப் பேரழிவில் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் அச்சுறுத்தும் விதமாக சீனாவுடன் முடுக்கிவிட்டு வரும் அமெரிக்க மோதல் மீதும் ஒருமுனைப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போர் முடிந்ததற்குப் பின்னர் ஹிரோஷிமாவுக்குச் சென்ற முதல் அமெரிக்கத் தலைவரான அதிபர் ஒபாமாவைப் போலவே, அதிபர் பைடெனும் ஆகஸ்ட் 6, 1945 இல் அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திய கொடூரமான போர் குற்றத்திற்கு வரவிருக்கும் நாட்களில் எந்த மன்னிப்பும் கேட்க முடியாது என்பதை முன்னரே தெளிவுபடுத்தி இருந்தார். ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசி, அதற்கடுத்த மூன்று நாட்களுக்குப் பின்னர் நாகசாகியில் அணுகுண்டு வீசிய அந்த குற்றச்செயலை அவர் ஓர் அடையாளத்திற்கு ஒப்புக் கொள்ளக் கூட மறுப்பது, அமெரிக்கா அதன் மூலோபாய நலன்களுக்காக மீண்டும் அணுஆயுதங்களைப் பயன்படுத்தும் என்பதற்கான ஒரு கூர்மையான எச்சரிக்கையாகும்.
ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் கொடூரமான அளவில் நடத்தப்பட்ட மரணங்களும் நாசங்களும், ஓர் உலகளாவிய மோதலை நோக்கி அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் விரைந்து கொண்டிருப்பதில் என்ன பணயத்தில் உள்ளது என்பதற்கான ஓர் அச்சுறுத்தும் நினைவூட்டலாக உள்ளது.
ஒரு மில்லியனில் கால்வாசி மக்களைக் கொண்ட ஹிரோஷிமா நகரின் மீது 'லிட்டில் பாய்' என்று பெயரிடப்பட்ட அந்த அணுகுண்டு வீசப்பட்ட போது, 15 முதல் 20 கிலோ டன் TNT வெடிப்புக்குச் சமமான ஆற்றல் வெளிப்பட்டது. அந்த நொடியிலேயே, அல்லது ஒரு சில மணி நேரங்களில், பயங்கர தீக்காயங்கள் மற்றும் பிற பாதிப்புகளால் 80,000 பேர் கொல்லப்பட்டு இருந்ததாக மதிப்பிடப்பட்டது, அதேவேளையில் அந்த வெடிப்பின் அதிர்வு அலை அந்நகர் எங்கிலும் பரவியதுடன், ஒரு வெப்பப் புயலை ஏற்படுத்தியது.
உயிர் பிழைத்தவர்கள் கொடூரமான காட்சிகளை விவரித்தனர். ஒருவர் எழுதினார்: “இன்னும் உயிருடன் இருக்கும் நூற்றுக்கணக்கானவர்களும்... ஜீவனின்றி அலைந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் அரைகுறை உயிரோடு, துயரால் துடித்துக் கொண்டிருந்தார்கள்… அவர்கள் நடைபிணங்களாக இருந்தார்கள்.”
நாகசாகியில் மற்றொரு 40,000 பேர் முற்றிலுமாக கொல்லப்பட்டார்கள். ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் தீக்காயங்கள், பிற பாதிப்புகள் மற்றும் கதிர்வீச்சு நோய்க்கு ஆளானதால், அதற்கடுத்த நாட்கள் மற்றும் வாரங்களில் இந்த மரண எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்தது. அதற்குப் பின்னர் உடனடியாக மதிப்பிடப்பட்ட மதிப்பீடுகள் மரண எண்ணிக்கையை 250,000 மற்றும் 300,000 இக்கு இடையே நிறுத்தின, அவர்களில் 90 சதவீதம் பேர் அப்பாவி மக்கள் ஆவார்கள்.
ஆறு மில்லியன் யூதர்களை நாஜி ஆட்சி திட்டமிட்டு படுகொலை செய்தமை, பிடிபட்ட 300,000 வரையிலான சீன சிப்பாய்களையும் மற்றும் அப்பாவி நான்ஜிங் மக்களையும் ஜப்பானிய இராணுவம் கொன்று குவித்தமை உட்பட, முன்னர் கற்பனையும் செய்திராத அளவில் இரண்டாம் உலகப் போர் ஏற்கனவே கொடூரங்களைக் கண்டிருந்தது. இருப்பினும், ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அப்பாவி மக்களைக் கொடூரமாக கொன்று குவித்தமை, எந்த இராணுவ அவசியமும் இல்லாமல், போருக்குப் பிந்தைய உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வேட்கைகளால் மட்டுமே உந்தப்பட்ட, கணக்கிட்டு நடத்தப்பட்ட ஓர் ஈரவிக்கமற்ற அட்டூழியமாக நிற்கிறது.
பொய்களின் அடிப்படையில் வாஷிங்டன் அதன் குற்றகரமான முடிவை நியாயப்படுத்தியது. அமெரிக்க உயிர்களைக் காப்பாற்ற அணுஆயுதங்களைப் பயன்படுத்துவது அவசியமாக இருந்தது என்றும், இல்லையென்றால் ஜப்பானின் ஒட்டுமொத்த படையெடுப்பால் அமெரிக்க உயிர்கள் பலியாகி இருக்கும் என்றும் அது வாதிட்டது. ஆனால் ஆகஸ்ட் 1945 இல் ஜப்பானிய ஏகாதிபத்தியம் அதன் கூட்டாளி ஜேர்மனியின் தோல்வியால் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. மார்ச் 1945 இல் 300,000 இக்கும் அதிகமானவர்களைக் கொன்ற டோக்கியோ மீது வீசப்பட்ட நெருப்புகுண்டு வீச்சுகள் உட்பட அமெரிக்க விமானத் தாக்குதல்களுக்கு எதிராக அது நிராயுதபாணியாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் காலடியில் இருந்தது. அப்போது சமாதானத்தை வேண்டி நின்ற ஜப்பான், மத்தியஸ்தங்கள் மூலம் சரணடைவதற்கான நிபந்தனைகளைக் கோரிக் கொண்டிருந்தது.
அந்த அணுகுண்டு வீச்சுக்கள் ஜப்பான் மக்களை மட்டுமல்ல, பரந்தளவில் உலகையே, அனைத்திற்கும் மேலாக சோவியத் ஒன்றியத்தைப் பீதியூட்டும் நோக்கில் நடத்தப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகள் ஆகும். சோவியத் ஒன்றியம் அப்போது டோக்கியோவுடன் ஏற்படுத்தி இருந்த அதன் நடுநிலை உடன்படிக்கையை முறித்து விட்டு, பசிபிக்கில் போருக்குள் நுழைய இருந்தது. ஜப்பானை உடனடியாக நிபந்தனையின்றி சரணடைய நிர்பந்திப்பதற்காக மட்டுமல்ல, மாறாக போருக்குப் பின்னர் உருவெடுக்கும் நிச்சயமற்ற மற்றும் நிலையற்ற உலகில் அதன் முத்திரையைப் பதிப்பதற்காகவும், மக்களை அழிக்க புதிதாக உருவாக்கிய அந்த ஆயுதங்களைப் பயன்படுத்த அமெரிக்கா தீர்மானமாக இருந்தது.
ஒரு பேரழிவுகரமான அணுஆயுதப் போர் அபாயம், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் வேறு எப்போதையும் விட இன்று மிகப் பெரியளவில் உள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வரலாற்று வீழ்ச்சியில், அது கடந்த மூன்று தசாப்தங்களாக அதன் உலகளாவிய அந்தஸ்தை அதிகரிப்பதற்காக, ஒரு பெரும்பிரயத்தனமான பொறுப்பற்ற முயற்சியில் மத்திய ஆசியா, மத்தியக் கிழக்கு, வட ஆபிரிக்கா மற்றும் பால்கன் நாடுகளில் மீண்டும் மீண்டும் ஆக்ரோஷமான இராணுவ நடவடிக்கைகளை நடத்தி உள்ளது. இத்தகைய குற்றகரமான சாகசங்கள் இருந்தும் தங்கள் நோக்கங்களை எட்டுவதில் தோல்வி அடைந்துள்ள அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும், உக்ரேனில் ரஷ்யாவுடன் ஒரு போரில் ஈடுபட்டுள்ளன — அதாவது, இது அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான ஒரு போர் ஆகும்.
நேட்டோ மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான ஒரு நேரடி போராக விரிவடைந்து வரும் இந்த மோதலின் அபாயத்தைப் பொறுப்பின்றி கவனத்தில் கொள்ளாமல், நேட்டோ முன்பினும் அதிக எண்ணிக்கையில் உக்ரேனுக்குள் ஆயுதங்களையும், நுட்பங்களையும், அழிவு சக்தியையும் — சமீபத்தில் போர்க்கள டாங்கிகள், நீண்ட தூர கடற்படை ஏவுகணைகள் மற்றும் இப்போது F-16 போர் விமானம் ஆகியவற்றையும் — பாய்ச்சி வருகையில், இந்த ஜி7 உச்சி மாநாடு நடத்தப்படுகிறது. அதே நேரத்தில், உக்ரேன் மீது ரஷ்யாவைப் படையெடுக்கத் தூண்டியதைப் போலவே அதே விதத்தில் ஒரு நிலைகுலைக்கும் போருக்குள் பெய்ஜிங்கை இழுத்து விடும் முயற்சியில், தைவான் விவகாரத்தில் சீனாவுக்கு எதிரான அதன் ஆத்திரமூட்டல்களை அமெரிக்கா வேகப்படுத்தி வருகிறது.
உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் கண்மூடித்தனமான முனைவுடன் சேர்ந்து, அது அதன் சொந்த இராணுவ எந்திரத்தை வேகமாக விரிவாக்கி வருவதற்கு மத்தியில், ஒவ்வொரு ஜி7 உறுப்பு நாடும் அதனதன் உரிமைகோரல்களை முன்னெடுக்க முயன்று வருகின்றன. ஜேர்மனியும் ஜப்பானும் இரண்டாம் உலகப் போர் தோல்விகளுக்குப் பின்னர் நிலைநிறுத்தி இருந்த அவற்றின் சட்ட ரீதியான மற்றும் அரசியலமைப்பு ரீதியான கட்டுப்பாடுகளைத் தூக்கியெறிந்து, உக்ரேன் போர் தொடங்கியதற்குப் பின்னர் கடந்தாண்டு அவற்றின் இராணுவ வரவு செலவுத் திட்டங்களை இரட்டிப்பாக்கி உள்ளன. உக்ரேனிய ஆயுதப் படைகளுக்குப் பயிற்சியளித்து ஆயுதங்கள் வழங்குவதில் மத்திய பாத்திரம் வகித்துள்ள பிரிட்டன், அதன் இராணுவச் செலவுகளை அதிகரித்து வருகிறது. பிரான்ஸ் அதன் சொந்த இராணுவத்தை வேகமாக விரிவாக்குவதில் ஈடுபட்டுள்ளது.
1945 இல் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் நடத்தப்பட்ட பெரும் பயங்கரம் அணுஆயுத சக்திகளின் கரங்களைக் கட்டிப்போடும் என்ற எந்த அறிவுறுத்தலும் வெறும் கற்பனையாகவே இருக்கும். இந்த கொடூரங்களை நடத்திய அமெரிக்க ஏகாதிபத்தியம், அணுஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்று ஒருபோதும் அறிவிக்கவில்லை. கடந்தாண்டு வெளியிடப்பட்ட அதன் சமீபத்திய அணுஆயுத நிலைப்பாடு மீதான மீளாய்வு குறிப்பிடுகையில், மற்ற வழிவகைகள் தோல்வியுற்றால் அமெரிக்க அணுஆயுதங்கள் “அதிபரின் இலக்குகளை அடைய நமக்கு உதவும்” என்று அறிவித்தது.
பைடென், அவருடைய 2020 தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஆயுதக் கட்டுப்பாட்டையும் மற்றும் அணு ஆயுதப் பெருக்கத்தைத் தடுப்பதையும், 'உலகளாவிய அமெரிக்க தலைமையின் மைய தூணாக' மாற்ற உறுதியளித்தார். ஆனால், பதவிக்கு வந்ததும், அவர் ஆயுதக் கட்டுப்பாட்டு உடன்படிக்கைகளைத் தொடர்ந்து கலைத்து விட்டு, அமெரிக்க இராணுவத்தின் அணுஆயுத தளவாடங்கள் மற்றும் வினியோக முறைகளை நவீனப்படுத்த அதற்கு ஆண்டுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை வழங்குகிறார். உலகம் “அணுஆயுத பிரளயத்தின் சாத்தியக்கூறை” முகங்கொடுப்பதாக கடந்தாண்டு ஒப்புக் கொண்ட பைடென், அணுஆயுத அச்சுறுத்தல்களைக் காட்டி அமெரிக்காவைத் தடுத்து விட முடியாது என்று மீண்டும் மீண்டும் அறிவிக்கிறார்.
அணுஆயுதங்களின் எந்தவிதமான பயன்பாடும், ஒப்பீட்டளவில், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அணுகுண்டு வீச்சை ஒன்றுமில்லாது ஆக்கும் அளவுக்கு மிகப் பெரியளவில் அழிவையும் மரணத்தையும் ஏற்படுத்தும். ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அணுஆயுதப் போரை நியாயப்படுத்த பென்டகன் மற்றும் அமெரிக்க சிந்தனை குழாமில் உள்ள மூலோபாய பகுப்பாய்வாளர்கள் முட்டாள்தனமான கணக்கீடுகளைக் காட்டுகின்ற அதேவேளையில், ஒவ்வொன்றும் ஜப்பானில் வீசப்பட்டதை விட அதிக சக்தி வாய்ந்த ஆயிரக் கணக்கான அணு ஆயுதங்களைக் கொண்ட மிகப் பெரிய அமெரிக்க மற்றும் ரஷ்ய அணுஆயுத கிடங்குகள், இந்தப் பூமியையே அழித்து விடும் ஓர் அணுஆயுத மனிதகுல அழிவின் ஆபத்தைச் சுட்டிக்காட்டுகின்றன.
ஜப்பான் மீதான முதல் அணுகுண்டு வீச்சு ஏகாதிபத்திய வேட்கைகளால் உந்தப்பட்டு இருந்ததைப் போலவே, ரஷ்யா மற்றும் சீனா உடனான போருக்கு அமெரிக்காவின் பொறுப்பற்ற முனைவும் அதே நோக்கங்களால் வழிநடத்தப்படுகிறது. இந்த முதலாளித்துவ அமைப்புமுறை மற்றும் காலாவதியான எதிர்விரோத தேசிய அரசுகளாக இந்த உலகம் பிளவுபடுத்தப்பட்டிருக்கும் முறையை ஒழிப்பதன் மூலம், அணுஆயுதங்கள் சம்பந்தப்பட்ட ஒரு மூன்றாம் உலகப் போரைத் தடுக்கக் கூடிய ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும். தொழிலாள வர்க்கத்தின் ஓர் ஒருங்கிணைந்த போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் மற்றும் அதன் இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் போராடி வரும் முன்னோக்காகும்.