இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் அரசாங்க ஆதரவு இனவாத ஆத்திரமூட்டல்கள் தீவிரமடைகின்றன

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் கடந்த வாரங்களில் பாதுகாப்புப் படைகள் மற்றும் பௌத்த பிக்குகள் உட்பட அரசாங்க ஆதரவு சக்திகளால் இனவாத ஆத்திரமூட்டல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பதிலுக்கு, தமிழ் மக்களின் உண்மையான எதிர்ப்பை சுரண்டிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கட்சிகள், அந்த ஆத்திரமூட்டல்களைத் தங்கள் இனவாதக் கொள்கைகளுக்காகப் பயன்படுத்திக்கொள்கின்றன.

யாழ்ப்பாணத்தில் வலிகாமத்தில் வடக்கில் பாதுகாப்பு படை ஆக்கிரமித்துள்ள தையிட்டி கிராமத்தில், இராணுவம் எட்டு தமிழ் குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகளில் பௌத்த கோயிலையும் 100 அடி உயர பௌத்த விகாரையையும் நிர்மாணித்துள்ளது. இதற்கு எதிராக, தமது சொந்த நிலங்களைக் கோரி 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நடத்திய போராட்டத்திற்கு எதிராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் பொலிஸ் மற்றும் இராணுவத்தை ஏவிவிட்டது.

தையிட்டி கிராமத்தில் பொதுமக்கள் காணியில் இராணுவம் அமைத்துள்ள உயரமான பௌத்த விகாரை

'திஸ்ஸ ராஜ மகா விகாரை' என பெயரிடப்பட்டுள்ள பௌத்த கோயிலைச் சுற்றிலும் இராணுவத்தினர் அதிகளவான காணிகளை ஆக்கிரமித்துள்ளதாகவும், விகாரை ஜூன் 3 அன்று உத்தியோகபூர்வமாக திறக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நில உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை புறக்கணித்தே இராணுவம் ஸ்தூபியை கட்டியுள்ளது.

மே 3 முதல் மே 5 வரை உள்ளூர் மக்கள் நடந்திய போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல்வாதிகளும் நுழைந்துகொண்டனர். இந்த விவகாரம் பிரசித்தமான போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கைத் தமிழ் அரசு கட்சியினதும் தலைவர்கள் ஆதரவு தெரிவிக்க நிர்ப்பந்தித்தனர்.

குறைந்த எண்ணிக்கையிலான எதிர்ப்பாளர்களை மிரட்டுவதற்காக, பெளத்த விகாரையைச் சுற்றி அதிக அளவில் ஆயுதம் ஏந்திய பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். அவர்கள் விகாரைக்கு செல்லும் வழியில் முற்கம்பிகளை விரித்ததோடு கூர்களைக் கொண்ட இரும்பு தடுப்புகளைப் பயன்படுத்தி வீதித் தடைகளையும் அமைத்தனர்.

தையிட்டி கிராமத்தில் பொதுமக்கள் காணியில் இராணுவம் அமைத்துள்ள பௌத்த கோயில்

பத்திரிகையாளர்களுக்கும் முற்றுகையிடப்பட்ட போராட்டக்காரர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மருந்து எடுத்துச் சென்ற ஆதரவாளர்களுக்கும் பொலிஸ் அனுமதி மறுத்தது. அவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டைத் தொடர்ந்து மறுநாள் அதிகாலை 1 மணிக்கே அனுமதிக்கப்பட்டனர். அடக்குமுறை நடவடிக்கைகளை முன்னெடுத்த அதே வேளை, 'அமைதியை சீர்குலைக்க' அனுமதிக்க முடியாது என்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் அபத்தமான முறையில் வழக்கறிஞர்களிடம் வாதிட்டார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். கஜேந்திரன் உட்பட ஐந்து பேரின் பெயர்களை குறிப்பிட்டு முன்கூட்டியே போராட்டத்திற்கு எதிராக பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தடை உத்தரவு ஒன்றை பெற்றிருந்தனர்.

ஒரு பெண் உட்பட ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐவர் பொலிஸாரால் குற்றச்சாட்டுக்கள் இன்றி கைது செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் மல்லாகம் நீதவானால் விடுவிக்கப்பட்டனர். தனியார் காணியில் அமைத்திருந்த போராட்டக்காரர்களின் கூடாரத்தை வலுக்கட்டாயமாக அகற்றிய பொலிஸார், நீதிமன்றில் ஒப்படைத்தனர்.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தம் முடிவடைந்து பதினான்கு வருடங்கள் கடந்துள்ள போதிலும், இராணுவம் வடக்கு மற்றும் கிழக்கில் தனது நான்கு தசாப்தங்களுக்கும் மேலான ஆக்கிரமிப்பை தொடர்வதோடு முகாம்களைப் பலப்படுத்துகிறது. அது பௌத்த விகாரைகளை கட்டியெழுப்புவதுடன் தமிழ் மக்களைக் கண்காணிப்பதிலும் ஈடுபட்டு வருகின்றது. .

1990 களில் யாழ்ப்பாணத்தில் இருந்து இந்த ஆக்கிரமிப்பு நிலங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மோசமான அகதி முகாம்களில் அல்லது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகள் மற்றும் வாடகை வீடுகளில் அவதிப்படுகின்றனர்.

மே 14 அன்று, கிழக்கில் திருகோணமலையில் இனவாத குண்டர்கள் உட்பட நூற்றுக்கணக்கான சிங்கள மக்களை ஒன்று திரட்டிய பௌத்த பிக்குகள் குழு, இந்துக் கோவில் ஒன்றுக்குச் சொந்தமான நிலத்தை நோக்கி பேரணியாகச் சென்றது. அங்கு புத்தர் சிலை ஒன்றை வைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களும் சில பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வரலாற்று ரீதியாக இந்த நிலம் பௌத்தர்களுக்கு சொந்தமானது என்று பிக்குகள் கூறிக்கொள்கின்றனர். பேரிணியைத் தடுத்த பெருமளவிலான பொலிஸாரை தள்ளிவிட்டுக்கொண்டு கும்பல் அந்த இடத்திற்கு செல்ல முற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்கள் ஒரு மோதலைத் தவிர்ப்பதற்காக அங்கிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர். அந்த இடத்தில் பிக்குகள் பிரார்த்தனை நடத்திவிட்டு சென்றனர்.

இந்த சமீபத்திய இனவாத ஆத்திரமூட்டல்கள் சிங்கள-பௌத்த மயமாக்களை தீவிரப்படுத்துவதன் ஒரு பகுதியாகும். தமிழர்களும் முஸ்லிம்களும் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கில் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. நாட்டின் சட்டத்தை புறக்கணித்தும், இராணுவத்தின் ஆதரவோடும், மக்களின் எதிர்ப்பை அடக்கியும் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இராணுவத் தேவைகளுக்காகவும் ஏனைய திட்டங்களுக்காகவும் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை பாதுகாப்புப் படையினர் ஆக்கிரமித்துள்ள நிலையில், தொல்பொருள் திணைக்களம் இந்துக் கோவில்கள் இருந்த இடங்கள் உட்பட காணிகளைக் கையகப்படுத்துவதில் எதேச்சதிகாரமாக ஈடுபடுவதுடன், பின்னர் அந்த இடங்கள் (சிங்கள) பௌத்த பாரம்பரியத்துடன் தொடர்புபட்டவை என கூறுகின்றது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வடக்கிலும் சில தமிழ் மக்கள் பௌத்த மதத்தைப் பின்பற்றியுள்ளனர்.

தொல்பொருள் திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகளில், பௌத்த தொல்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறி, அரசாங்கத்தின் ஆதரவுடன், பௌத்த பிக்குகளின் தலைமையில், இராணுவத்தினர் விகாரைகளை அல்லது பௌத்த கோயில்களை நிர்மாணித்து வருகின்றனர். அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் பௌத்த மதத்திற்கு சொந்தமானவை என்று 'அங்கீகரிக்கப்படுகின்றன'. பல சந்தர்ப்பங்களில், பிக்குகள் காணிகளுக்கு ஆத்திரமூட்டும் வகையிலான பயணங்களை மேற்கொள்ளும் போது அமைச்சர் பாதுகாப்பு பிரிவும் அவர்களுடன் சென்றுள்ளது.

முல்லைத்தீவு குருந்தூர்மலையில் இந்து ஆலயத்தை அகற்றி பிரமாண்ட பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டமை மற்றும் வவுனியா வெடுக்குநாரிமலையில் உள்ள இந்து ஆலயத்தை ஆக்கிரமிக்கும் ஆத்திரமூட்டும் முயற்சிகள் பரவலாக அறியப்பட்ட இழிவான சம்பவங்களாகும்.

முன்னாள் கடற்படை அட்மிரலும் இராஜாங்க அமைச்சருமான, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர, இனவாத அச்சுறுத்தல்களுக்கு பேர் போனவராவார். இவர் அண்மையில் வெடுக்குநாரிமலைக்கு பௌத்த பிக்குகளுடன் சென்றிருந்தார். அவர் தேசியப் பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்றத் துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய வீரசேகர, “பழைய பௌத்த சின்னங்கள் மீது சிவலிங்கம் அல்லது திரிசூலத்தை வைத்துவிட்டு அதைக் கோயில் என்று வரலாற்றை திரிபுபடுத்த முயற்சிப்பார்கள் எனில், அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்' என ஆத்திரமூட்டும் கோரிக்கையை முன்வைத்தார்.

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் மீது குற்றம் சுமத்திய வீரசேகர, “மிகவும் பழைய பௌத்த ஸ்தூபிகளை நாசம் செய்து அதற்கு மேல் சிவலிங்கத்தை வைத்து பூசை செய்யும்போது, தொல்பொருள் திணைக்களம் அவர்களுக்கு எதிராக வழக்கு போட்டால், சுமந்திரன் வடக்குக்கு சென்று அவர்களுக்காக வாதாடிவிட்டு கொழும்பு வந்து நன்றாக இருப்பதற்கு காரணம் இது பௌத்த நாடு என்பதாலேயே ஆகும்,” என்றார்.

அதே மூச்சில், சுற்றிவளைத்து மரண அச்சுறுத்தல் ஒன்றை விடுத்த வீரசேகர, “வேறொரு நாட்டில் பெரும்பான்மை இனத்தவரின் மதத்தை இப்படி அழித்த பிறகு அவரது உயிருக்கு எந்தப் பொறுப்பும் கிடையாது” என்று கூறி, இனவாத சக்திகளுக்கு மறைமுக அறிவுறை ஒன்றை வழங்கினார். 

இந்த நாடு பௌத்த நாடு என்பதாலேயே ஐம்பது வீதமான தமிழ், முஸ்லிம் மக்கள் சிங்களவர்களுடன் இணைந்து வாழ்கின்றனர், இந்த நாடு பௌத்த நாடு என்பதால்தான் தமிழர்களும் முஸ்லிம்களும் இந்நாட்டில் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றனர், அந்த அடையாளத்தை அழிக்க முற்பட்டால், அது அவர்களின் அழிவாகிவிடும்' எனவும் அவர் எச்சரித்தார்.

உண்மையில், சுதந்திரத்திற்குப் பின்னர் கொழும்பு ஆட்சிகள் மற்றும் ஒட்டுமொத்த ஆளும் உயரடுக்கினால் கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழர் மற்றும் முஸ்லிம் விரோத பாகுபாடு, அடக்குமுறை மற்றும் போர் காரணமாக, இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் தங்கள் உயிரை விலையாக கொடுத்துள்ளனர். இந்த திட்டமிட்ட செயல்கள் தொழிலாள வர்க்கத்தை பிற்போக்கு இனவாத அடிப்படையில் பிளவுபடுத்தி பலவீனப்படுத்தும் நச்சுத்தனமான கொள்கையின் ஒரு பகுதியாகும்.

கடந்த வாரம் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரியொருவர், அரச நிறுவனமான குறித்த திணைக்களத்துக்கு, சில பௌத்த பிக்குகள் உட்பட வெளியார் நிதியளிப்பதாக அறிவித்தார். இந்த திணைக்களம் தொல்பொருள் விஞ்ஞான நெறிமுறைகளின்படி அன்றி, பௌத்த ஸ்தாபனத்தின் கட்டளையின் கீழேயே இயங்குகிறது என்பதை இது வெளிப்படுத்துகிறது.

இத்தகைய சட்டவிரோத அட்டூழியங்களைக் கண்டிக்காத விக்கிரமசிங்க, தமிழ் முதலாளித்துவக் கட்சிகளை வளைத்துப் போடும் அவநம்பிக்கையான முயற்சியில், அதை எதிர்ப்பதாக பாசாங்கு காட்டிக்கொண்டார். சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த அவர் தமிழ் கட்சிகளின் ஆதரவை எதிர்பார்க்கிறார். கடந்த வாரம் தமிழ் கட்சிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு விக்கிரமசிங்க உத்தரவிட்டார்.

விக்கிரமசிங்கவின் உத்தரவுகளால் ஏற்கனவே கட்டப்பட்ட கட்டிடங்களை எதுவும் செய்ய முடியாது. எவ்வாறெனினும், அவரே இனவாத சக்திகளின் ஆதரவில்தான் தங்கியிருக்கின்றார். ஒருபுறம் அவர் சிங்கள இனவாத ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவில் தங்கியிருக்கிறார். மறுபுறம், எல்லாவற்றிற்கும் மேலாக அவர் போர்க்குற்றங்களுக்கு பொறுப்பான அதே இராணுவத் தளபதிகளை நம்பியிருக்கின்றார்.

விக்கிரமசிங்கவின் சொந்த ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) தேர்தல் விஞ்ஞாபனமும் வடக்கு மற்றும் கிழக்கில் ஆயிரம் பௌத்த விகாரைகளை அமைப்பதற்கு மில்லியன் கணக்கான ரூபா நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

1983ல் தமிழர் விரோத படுகொலைகளை கட்டவிழ்த்துவிட்டு 26 ஆண்டுகளாக இனவாதப் போரை நடத்திய ஐ.தே.க. அரசாங்கங்களில் விக்கிரமசிங்க ஒரு அமைச்சரவை அமைச்சராக இருந்தார். கொழும்பு ஆளும் உயரடுக்கின் இனவாத குணாம்சத்தை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, தமிழ் கட்சிகள் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளுக்கு பேரம் பேசி அதனுடன் ஒரு உடன்பாட்டைக் காண முயல்கின்றன.

முன் கூட்டியே புகார் அளித்தும் விகாரை கட்டி முடிக்கும் வரை மௌனம் காத்துவந்த தமிழ் கட்சிகளைப் பற்றி தையிட்டி மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழ் முதலாளித்துவக் கட்சிகள், அவற்றின் பங்கிற்கு, தொடக்கத்தில் இருந்தே சிங்கள ஆளும் உயரடுக்கின் இனவாத பாகுபாட்டைப் பயன்படுத்திக்கொண்டு, தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக உரிமைகளை அன்றி, தங்கள் சொந்த முதலாளித்துவ நலன்களை முன்னேற்றுவதற்குப் பயன்படுத்தி வந்துள்ளன. தமிழ் உழைக்கும் மக்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுவதற்கு, தமிழ் உயரடுக்கின் நலனைப் பாதுகாப்பதற்காக அமெரிக்காவிடமும் இந்தியாவிடம் முறையிடுவதற்காக தமிழ் மக்களின் அவல நிலையைப் பயன்படுத்திக் கொள்ளும் இந்தக் கட்சிகள் மீது எந்த நம்பிக்கையும் வைக்க முடியாது.

சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை நசுக்குவதற்கு எதிராக இனப் பாகுபாடுகளைக் கடந்து தொழிலாள வர்க்கப் போராட்டம் அபிவிருத்தியடையும் சூழ்நிலையிலேயே இந்த இனவாத ஆத்திரமூட்டல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இனவாத பாரபட்சங்களின் மூல காரணமான முதலாளித்துவ அமைப்பை தூக்கி எறிந்துவிட்டு, தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்தை கட்டியெழுப்புவதன் ஒரு பகுதியாக, சோசலிச கொள்கைகளுக்கு அர்ப்பணித்துக்கொண்ட ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசின் வடிவில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதன் மூலம், ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை உறுதிப்படுத்தப் போராடும் ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே. 

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மட்டுமே இந்த வேலைத்திட்டத்திற்காக போராடுகிறது.