மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
இந்துப் பேரினவாத பலசாலி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சி (BJP) அரசாங்கம், சமூக ஊடகங்களில் தனது நடவடிக்கைகளை விமர்சிக்கும் குடிமக்களின், அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட உரிமையின் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்து தீவிர வலதுசாரி அரசாங்கம் 'போலியான அல்லது தவறான அல்லது தவறாக வழிநடத்தும்' இடுகைகள் என்று கருதும் அனைத்தையும் அகற்ற சமூக ஊடகத் தளங்களுக்கு உத்தரவிட அதிகாரம் கொண்ட ஒரு அதிகாரப்பூர்வ 'உண்மை சரிபார்ப்பு அலகு' ஒன்றை உருவாக்க அங்கீகாரம் அளித்துள்ளது. ஏற்கனவே 2021ல் மோடி அரசு வகுத்த ஜனநாயக விரோத தகவல் தொழில்நுட்ப விதிகளை திருத்தியமைக்கும் உத்தரவில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஏப்ரல் 6ம் தேதி இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இவையனைத்தும் ஒரு சர்வாதிகார பாணியில் அரசாங்கத்தின் 'வர்த்தமானி அறிவிப்பு' மூலம் நிறைவேற்றப்பட்டது, பெருநிறுவன ஊடக நிறுவனங்கள் மற்றும் நீண்டகாலமாக அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர் சங்கங்களுடன் எந்தவிதமான ஆலோசனையும் இல்லாமல், பரவலான ஜனநாயக ரீதியான விவாதம் நடத்தப்படவில்லை என்பது ஒருபுறம் உள்ளது. அரசாங்க வர்த்தமானி என்பது தேசிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ உறுப்பு ஆகும், இது வாரந்தோறும் ஆணைகள், சட்டம் மற்றும் ஆவணங்களை அறிவிப்பதற்கும் பரப்புவதற்கும் வெளியிடப்படுகிறது, அதன்பின் விதிகள் சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்துவதாக இருக்கும்.
புதிய விதிகளின்படி, இந்த உண்மைச் சரிபார்ப்பு பிரிவு அல்லது 'உண்மையின் அதிகாரத்துவம்' என்று சில விமர்சகர்கள் இதற்குப் பொருத்தமாக பெயரிட்டுள்ளபடி, தேர்ந்தெடுக்கப்படாத மற்றும் காரணம் சொல்ல அவசியமற்ற அதிகாரிகளை உள்ளடக்கியது, இது 'மத்திய அரசாங்கத்தின் எந்தவொரு விஷயமாக இருந்தாலும் அது குறித்த 'போலியான அல்லது தவறான அல்லது தவறாக வழி நடத்தும்' இடுகைகளை அடையாளம் காண சமூக ஊடக தள இடுகைகளை தொடர்ந்து கண்காணிக்கும்.”
வகுப்புவாதத்தை இடைவிடாமல் ஊக்குவித்தல், பெருவணிகத்துடனான ஊழல் உறவுகள் மற்றும் எதேச்சாதிகார ஆட்சி முறைகள் மற்றும் வெளிப்படையான குற்றச்செயல்களை அதிகரிப்பது உட்பட அதன் சொந்த நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகள் மீதான விமர்சனங்கள் மற்றும் அம்பலப்படுத்துதல்களை அடக்குவதில் அரசாங்கம் குறிப்பாக அக்கறை கொண்டுள்ளது என்பதை இந்த வார்த்தைகள் தெளிவுபடுத்துகின்றன. எவ்வாறாயினும், புதிய 'உண்மை சரிபார்ப்பு' தணிக்கையாளர்கள் எதை அகற்ற உத்தரவிடலாம் என்பதன் வரம்பு இதையும் தாண்டி செல்கிறது. அதில், “இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு அல்லது இறையாண்மை, வெளி நாடுகளுடனான நட்புறவு, அல்லது பொது ஒழுங்கை அச்சுறுத்தும் பதிவுகள், அல்லது ஏதேனும் அறியக்கூடிய குற்றத்தின் ஆணையைத் தூண்டும், அல்லது ஏதேனும் குற்ற விசாரணையைத் தடுக்கும், அல்லது வேறு எந்த தேசத்தையும் அவமதிப்பு செய்தல்.' ஆகியவையும் அடங்கும்.
அமெரிக்க ஏகாதிபத்தியம், சவூதி அரேபிய ஷேக்குகள் அல்லது இஸ்ரேல் போன்ற மோடி அரசாங்கத்துடன் நட்புறவைக் கொண்டிருக்கும் அரசுகள் மற்றும் அரசாங்கங்களை விமர்சிக்கும் சமூக ஊடகங்கள் நடத்தும் உரையாடல்கள் அல்லது கட்டுரைகளுக்கான இணைப்புகள், 'உண்மை சரிபார்ப்பு' தணிக்கையாளர்கள்/அதிகாரத்துவத்தால் 'தீங்கு விளைவிக்கும்' என்று கருதப்படலாம். மேலும் வெகுஜன எதிர்ப்பு போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கும் அல்லது வேலைநிறுத்த எதிர்ப்பு 'அத்தியாவசிய சேவை' உத்தரவுகளை மீறும் இடுகைகளும் கூட 'தீங்கு விளைவிப்பதாக கருதப்படும்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில், 'போலி செய்தி' தணிக்கையாளர்கள் ஆன்லைன் சமூக ஊடக நிறுவனங்கள் அல்லது ட்விட்டர், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட அவற்றின் இடைத்தரகர்களுக்கும் அறிவித்து, அத்தகைய இடுகைகளை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிடுவார்கள். அவர்கள் அவ்வாறு செய்யத் தவறினால், இந்த நிறுவனங்கள் தங்கள் 'பாதுகாப்பான தங்குமிட' பாதுகாப்பை இழக்க நேரிடும்.
2000 ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 'பாதுகாப்பான தங்குமிட' பாதுகாப்புகளின் கீழ், ட்விட்டர், பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்கள் போன்ற இடைத்தரகர்கள் தங்கள் தளங்களில், தங்கள் பயனர்களால் இடுகையிடப்பட்ட உள்ளடக்கத்திற்கான எந்தவொரு சட்டப் பொறுப்பிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறார்கள்.
இந்த பாதுகாப்பான தங்குமிடப் பாதுகாப்பை அகற்றப்போவதாக அச்சுறுத்துவதன் மூலம், அரசாங்கம் சமூக ஊடக நிறுவனங்களை அதன் 'போலி செய்தி' ஒடுக்குமுறை-ஆணைகளை அமுல்படுத்த கட்டாயப்படுத்த முயல்கிறது. அரசாங்கத்தின் நல்ல புத்தகங்களில் நிலைத்திருக்க, 'சர்ச்சைக்குரிய' உள்ளடக்கத்தை முன்கூட்டியே அடையாளம் கண்டு அகற்றும்படி அவர்களை மிரட்டவும் முயல்கிறது.
பி.ஜே.பி அரசாங்கத்தின் புதிய அரசு தணிக்கை அமைப்பு மற்றும் ஒழுங்குமுறைகளை சவால் செய்ய பத்திரிக்கை அமைப்புகள் ஒருங்கிணைந்த முயற்சி எதுவும் எடுக்கவில்லை. பத்திரிக்கை சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு என்று கூறிக்கொள்ளும் எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா, ஒரு பரிதாபகரமான அறிக்கையை வெளியிட்டது, இது கருத்து சுதந்திரத்தின் மீதான ஐடி அமைச்சகத்தின் கடுமையான தாக்குதலை 'வருந்தத்தக்கது' என்று கூறியது. அப்போது, “இந்த அறிவிப்பை திரும்பப் பெறுமாறும், ஊடக நிறுவனங்கள் மற்றும் பத்திரிகை அமைப்புகளுடன் ஆலோசனை நடத்துமாறும் அமைச்சகத்தை வலியுறுத்தியது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சமூக ஊடக தணிக்கைக்கு மிகவும் நாவுக்கினிய வழிமுறைகளைக் கொண்டு வர, கில்ட் ஒரு பங்காளியாக ஆலோசிக்க விரும்புகிறது என்பதாகும்.
இதேபோல், இந்திய ஸ்ராலினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது CPM உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அடிப்படை உரிமைகள் மீதான இந்த வெட்கக்கேடான மற்றும் வெளிப்படையான தாக்குதலுக்கு எதிர்ப்பைத் திரட்ட ஒரு சுண்டு விரலை கூட தூக்கவில்லை. ஸ்ராலினிஸ்டுகள் —சமீப காலம் வரை இந்திய முதலாளித்துவத்தின் விருப்பமான தேசிய அரசாங்க கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு உதவுவதில் கவனம் செலுத்தும் முயற்சிகளில், 2024 தேசியத் தேர்தல்களுக்கு வலதுசாரி பாஜக-எதிர்ப்பு தேர்தல் கூட்டணியை அமைப்பதில் — அரசாங்கத்தின் 'போலி செய்தி' முன்னெடுப்பை கடுமையாக விமர்சித்து ஒரு பெயரளவிலான அறிக்கையை வெளியிட்டது.
இந்த சமீபத்திய தகவல் விதிகளுக்கு எதிரான ஒரே நீதிமன்ற சவாலை ஸ்டாண்டப் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா பம்பாய் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். கம்ராவின் மனுவை விசாரித்த நீதிமன்றம், 'முதன்மையான பார்வையில், கேலிக்குரியதாக காட்டும் மற்றும் நையாண்டி போன்ற அரசாங்கம் குறித்த நியாயமான விமர்சனங்களுக்கு விதிகள் பாதுகாப்பை வழங்குவதாகத் தெரியவில்லை' என்று குறிப்பிட்டது.
2002 ஆம் ஆண்டு மேற்கு மாநிலமான குஜராத்தில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலைகளுக்கு மோடி நேரடியாக உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டி “இந்தியா: மோடி குறித்த கேள்வி” என்ற ஆவணப்படத்தை பிரிட்டிஷ் அரசு ஒளிபரப்பியதை அடுத்து சமீபத்தில் மோடி அரசாங்கம் பிபிசி அலுவலகங்களில் சோதனைக்கு உத்தரவிட்டது. அங்கே அவர் முதல் அமைச்சராக இருந்தார். அரசாங்கமும் பாஜக தலைவர்களும் இந்த ஆவணப்படத்தை கண்டித்தனர், மேலும் மோடி அரசாங்கம் அதை பொதுமக்கள் பார்ப்பதை தடுத்தனர்.
இந்த சமீபத்திய நகர்வுகள் கார்ப்பரேட் ஊடகங்களை பயமுறுத்துவதற்கும் மவுனமாக்குவதற்குமாக எடுக்கப்பட்ட மோடி அரசாங்கத்தின் பெரும் வெற்றிகரமான பிரச்சாரத்தின் நீட்டிப்பாகும். 2014ல் மோடியை ஆட்சிக்குக் கொண்டு வந்த தேர்தல் அலை பெருமளவில் ஊடகங்களால் உந்தப்பட்டது, ஏனெனில் ஆளும் வர்க்கம் பி.ஜே.பியைச் சுற்றி அணிதிரண்டது, உள்நாட்டில் முதலீட்டாளர் சார்பு “சீர்திருத்தங்களை” இன்னும் தீவிரமாகப் பின்பற்றுவதற்கும் மற்றும் உலக அரங்கில் பெரும் வல்லரசாகும் லட்சியங்களை முன்னெடுப்பதற்குமான சிறந்த கருவியாக பிஜேபியை பார்த்தது. இருப்பினும், தொடர்ந்து வலுவான ஊடக ஆதரவை உறுதி செய்வதற்காக, பிஜேபி பதவிக்கு வந்தவுடன் பத்திரிகைகளை மிரட்டுவதற்கு வலுவான கையை முறுக்கும் தந்திரங்களையும் குண்டர் பாணி மிரட்டல்களையும் அது பயன்படுத்தியது.
ஹிந்துஸ்தான் டைம்ஸின் முன்னாள் ஆசிரியர் பாபி கோஷ், மும்பை மற்றும் டெல்லியில் உள்ள பிபிசியின் அலுவலகங்களில் போலியான வரி மோசடி குற்றச்சாட்டின் பேரில் இந்திய அரசாங்கம் சோதனையிட்டதைத் தொடர்ந்து ஜப்பான் டைம்ஸுக்கு எழுதிய கட்டுரையில் இதை விரிவாகக் குறிப்பிட்டார். 'இரண்டு வருடங்கள் ஆட்சியில் இருந்தபோது, மோடி அரசாங்கம் ஏற்கனவே மத்திய கிழக்கு சர்வாதிகாரத்தில் வெளிநாட்டு நிருபராக இருந்த எனது அனுபவங்களிலிருந்து எனக்கு நன்கு தெரிந்த விமர்சனங்களின் சகிப்புத்தன்மையின்மையை ஏற்கனவே நிரூபித்துள்ளது' என்று கோஷ் எழுதினார். அரசாங்கத்திற்கோ அல்லது ஆளும் கட்சிக்கோ அவமானகரமானதாகக் கருதப்படும் கதைகள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து சிறு தொலைபேசி அழைப்புகளுக்கு வழமையாக இட்டுச் சென்றன: ‘’விளம்பரங்களைத் தடுப்பது மற்றும் தண்டனைக்குரிய வழக்குகளைப் பின்தொடர்வது முதல் எனது தனிப்பட்ட நிதி மற்றும் எனது குடும்பத்தின் மீதான விசாரணைகள் வரை அச்சுறுத்தல்கள் வரம்பில் உள்ளன’’ என்று கோஷ் தெரிவித்தார்.
இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பத்திரிகைகளுக்கு எதிராக மோடி அரசு நடந்து கொண்டது போல் கொடூரமாக வேறு எங்குமே நடந்து கொள்ளவில்லை. அக்டோபர் 19, 2020 அன்று, இந்தியாவின் ஒரே முஸ்லீம் பெரும்பான்மை மாநிலமான ஜம்மு மற்றும் காஷ்மீரின் சுயாட்சி அந்தஸ்தை ரத்து செய்த மோடி அரசாங்கத்தின் ஆகஸ்ட் 2019 அரசியலமைப்பு சதிக்கு ஒரு வருடத்திற்குப் பிறகு, காஷ்மீர் டைம்ஸின் ஸ்ரீநகர் அலுவலகங்களை போலீசார் சோதனை செய்து நிரந்தரமாக பூட்டி வைத்தனர். பிரசுரத்தின் நிர்வாக ஆசிரியர் அனுராதா பேசின், நியூயார்க் டைம்ஸ் பத்தியில், “இந்த ரெய்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளை கேள்வி கேட்கும் துணிச்சலுக்கான தண்டனை” என்று குறிப்பிட்டுள்ளார்.
மோடி ஆட்சி மற்றும் பல்வேறு இந்திய மாநிலங்களில் உள்ள பாஜக அரசாங்கங்கள் தங்கள் கொள்கைகளை விமர்சிப்பதாகக் கருதும் எவருடனும் விஷமத்தனமான முறையில் செயல்படுவதால், இந்தியாவில் ஒரு பத்திரிகையாளராக இருப்பது ஆபத்தானதாகி விட்டது. அவர்கள் பல ஊடகவியலாளர்கள் மீது தேச துரோக குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். UAPA 'பயங்கரவாத எதிர்ப்பு' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சிலர், விசாரணையின்றி பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எல்லைகளற்ற நிருபர்கள் (Reporters Without Borders) என்ற இலாப நோக்கற்ற அமைப்பின்படி, உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் 180 நாடுகளில் இந்தியா 161வது இடத்தில் உள்ளது.
மோடி அரசாங்கம் இந்த சமீபத்திய சமூக ஊடக விதி மாற்றங்களைத் துணிச்சலுடன் முன்னெடுத்துச் செல்கிறது, அதன் அடக்குமுறையை மேலும் விரிவுபடுத்தவும், சாதாரண உழைக்கும் மக்கள், அரசியல் எதிரிகள் மற்றும் சுதந்திர ஊடகக் குரல்கள், குறிப்பாக இடதுசாரி மற்றும் சோசலிசக் குரல்கள் போன்றவற்றின் விமர்சனக் கருத்துக்கள் மற்றும் அம்பலப்படுத்தல்களைப் பரப்புவதைத் தடுக்கவும். 2021 ஆம் ஆண்டில் ஐடி விதிகளில் முந்தைய திருத்தங்கள், 'போலி அல்லது தவறான செய்திகள்' என்று அரசாங்கம் அடையாளம் காணும் இடுகைகளை 'தானாக முன்வந்து' அகற்றுமாறு சமூக ஊடக நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த போதிலும், அது நீதிமன்ற சவாலுக்கு உட்பட்டது. ஆகஸ்ட் 2021 இல், பம்பாய் உயர் நீதிமன்றம் இரண்டு புதிய விதிகளுக்கு எதிராகத் தடை விதித்தது, ஆனால் குடிமக்களின் அடிப்படையான பேச்சுரிமைகளை கடுமையாக மீறினாலும், சில திருத்தங்களை முழுவதுமாக தூக்கி எறிய மறுத்தது.
நீதிமன்றங்களே தீவிர வலதுசாரி, இந்து மேலாதிக்கவாத மோடி அரசாங்கம் ஜனநாயக உரிமைகளை திட்டமிட்டு நசுக்கி அதன் சர்வாதிகார ஆட்சியை திணிக்க உதவுகின்றன என்பதை மீண்டும் எடுத்து காட்டுகிறது. குடிமக்களின் ஜனநாயக உரிமைகளின் காவலாளியாக தொடர்ந்து காட்டிக் கொள்ளும் இந்தியாவின் உச்ச நீதிமன்றம், ஜம்மு-காஷ்மீரில் ஜனாதிபதி ஆணை மூலம் அடிப்படையில் சர்வாதிகார ஆட்சியை திணிப்பது மற்றும் 2019ல் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டப்படுவது போன்ற மோடி அரசாங்கத்தின் மற்றும் இந்து வலதுசாரிகளின் சட்டவிரோத செயல்களுக்கு மீண்டும் மீண்டும் பச்சைக் கொடி காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.