இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
வியாழன் மாலை ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த ஒரு நிகழ்வில், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த், லியோன் ட்ரொட்ஸ்கியும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டமும் என்ற தனது புதிய நூலை வெளியிட்டார். அவருடன் இணைந்து அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி உறுப்பினரான இவான் பிளேக், மெஹ்ரிங் புக்ஸ் பிரசுரித்துள்ள கோவிட், முதலாளித்துவம் மற்றும் வர்க்கப் போர்: தொற்றுநோயின் சமூக மற்றும் அரசியல் காலவரிசை என்ற மற்றொரு புதிய நூலை வெளியிட்டார்.
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய சோசலிச சமத்துவக் கட்சியின் (ஆஸ்திரேலியா) தேசிய செயலாளர் செரில் கிறிஸ்ப், கூட்டத்தின் தனித்துவமான பண்பை சுட்டிக்காட்டினார். உலக முதலாளித்துவ முறைமையின் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடிக்கு மத்தியில், இந்த நிகழ்வில் புரட்சிகர முன்னோக்கு மற்றும் மூலோபாயத்தின் தீர்க்கமான பிரச்சினைகளை பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
நேரில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் N95 முக கவசங்களை அணிந்திருந்த அதே நேரம், சோசலிச சமத்துவக் கட்சி புற ஊதா கதிர் விளக்குகள் மற்றும் உயர்திறன் காற்று வடிகட்டிகள் (HEPA) உட்பட கிடைக்கக்கூடிய ஒவ்வொரு கோவிட்-19 தற்பாதுகாப்புகளை பயன்படுத்தியது. அக்கறையுடன் முகக் கவசங்களை அணிந்துகொண்டமை, அவசியமான வழிமுறைகள் கிடைத்தால் சாதாரண மக்கள் தொற்றுநோய்க்கு முடிவுகட்டுவதற்காக போராட முடியும் என்பதை எடுத்துக் காட்டியது.
மண்டபத்துக்கு ஏற்ப பார்வையாளர்கள் சிட்னி நிகழ்வில் நேரில் கலந்து கொண்டனர். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள அனைத்து பெரிய நகரங்களிலிருந்தும் 70க்கும் மேற்பட்டோர் நேரடி ஒளிபரப்பு மூலம் பங்கேற்றனர். சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கும் மேலதிகமாக, ஆஸ்திரேலியாவில் பூச்சிய-கோவிட்டை பரிந்துரைப்பதில் முன்னணியில் இருக்கும் பலரும் கலந்து கொண்டனர்.
உரையின் ஆரம்பத்தில், நோர்த் தனது புத்தகத்தில் உள்ள ஆவணங்கள் 40 வருட காலப்பகுதியில் எழுதப்பட்டவை என்று குறிப்பிட்டார். தொகுதியின் முதல் பகுதி, லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் மார்க்சிசத்தின் வளர்ச்சி பற்றிய தொடர் கட்டுரைகள் அடங்கியுள்ளன. அவை 1982 இல் எழுதப்பட்டவை. கடைசியாக உள்ள, ரஷ்யாவிலும் முன்னாள் சோவியத் ஒன்றியத்திலும் உள்ள இளம் ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு எழுதப்பட்ட கடிதம் சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
நீண்ட கால இடைவெளி இருந்தபோதிலும், “இந்தத் தொகுதியில் உள்ள படைப்புகளைத் திரும்பிப் பார்க்கும்போது, அவை ஒன்றோடொன்று தொடர்புபட்டதாக இருப்பது கவனத்தை ஈப்பதாகும். பகுப்பாய்வுகள் மேம்படுத்தப்பட்டிருந்தாலும், இந்தத் தொகுதியில் வரும் அனைத்து கட்டுரைகள், விரிவுரைகள் மற்றும் ஒரு கடிதத்தினதும் அடிப்படைக் கருப்பொருள், லியோன் ட்ரொட்ஸ்கி வரலாற்றின் முன்னோக்கில் 20 ஆம் நூற்றாண்டின் சோசலிசத்திலும், 21 ஆம் நூற்றாண்டின் சோசலிச இயக்கத்திலும் தீர்க்கமான நபராக வெளிப்படுகிறார் என்பதே ஆகும்,' என நோர்த் கூறினார்.
ட்ரொட்ஸ்கியின் வேலைகள் இன்றைய காலத்துக்கு எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்பதை நோர்த் வலியுறுத்தினார். அவர் கூறியதாவது: 'எல்லாவற்றையும் விட, ஒருவரை ஈர்ப்பது என்னவென்றால், அவரது எழுத்துக்களின் வியத்தகு சமகாலப் பொருத்தமாகும். நாம் கையாளும் அரசியல் பிரச்சனைகள் ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வோடு மிகவும் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளன. … ட்ரொட்ஸ்கி இந்த அறைக்குள் நுழைந்தால், அவர் தன்னைத்தானே வேகமாக நோக்குநிலைப்படுத்திக் கொள்ள முடியும்.
'முதலாளித்துவத்தின் மரண ஓலம், உலக சோசலிசப் புரட்சி, வர்க்கப் போராட்டத்தின் பூகோளமயமாக்கல், முதலாளித்துவ தேசிய அரசின் திவால்நிலை' போன்ற ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களுடன் தொடர்புடைய சொற்கள், நமது காலத்திற்கு மிகவும் பொருத்தமானவை என்று நோர்த் சுட்டிக் காட்டினார். ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வு வளர்ந்து வரும் உலகப் போரின் ஆபத்துக்கு மிகவும் பொருத்தமானது. இது உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமி போர் மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவுடன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரோஷமான மோதலில் மிகக் கூர்மையாக வெளிப்படுத்தப்பட்டுகிறது.
உண்மையான மார்க்சிசம் 'சோசலிசப் புரட்சி இல்லாவிட்டால், உலகம் அழிந்துவிடும் என்ற உண்மையைப் பற்றிக் கொள்வதில் அக்கறை கொண்டுள்ளதுடன், இந்தப் புரட்சியைக் முன்னெடுக்கக் கூடிய ஒரே சக்தி தொழிலாள வர்க்கம்தான். தன்னை ஒரு மார்க்சியவாதியாகக் கருதும் ஒவ்வொருவரும் உள்வாங்க வேண்டிய மைய உண்மை அதுதான். … நம் காலத்தின் பெரும் அரசியல் பிரச்சினைகளுக்குப் பதிலை வழங்கப் பயன்படுத்தப்படுகின்றன மார்க்சிசத்தின் சக்திவாய்ந்த வழிமுறைகளானவை ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களே ஆகும். இந்தப் புத்தகம் கவனம் செலுத்துவது இந்த விடயத்திலேயே ஆகும்,' என்று நோர்த் விளக்கினார்.
கோவிட், முதலாளித்துவம் மற்றும் வர்க்கப் போர் என்ற நூலை முன்வைத்த பிளேக், அதில் உள்ள பகுப்பாய்வு நோர்த் விரிவுபடுத்திய வழிமுறையின் நடைமுறைப் பயன்பாடாகும் என்று விளக்கினார். புத்தகத்தில் உள்ள ஆவணங்கள், 'வரலாற்றில் மிகப் பெரிய பொது சுகாதார நெருக்கடியான' தொற்றுநோய்க்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரதிபலிப்பின் ஒரு வரலாறாகும், என விளக்கினார்.
கோவிட் நெருக்கடி முடிந்துவிட்டது என்ற கூற்றுகளை பிளேக் மறுத்தார். ஒவ்வொரு நாளும், மில்லியன் கணக்கானவர்கள் தொடர்ந்து நோய்த்தொற்றுக்கு ஆளாகின்றனர், ஆயிரக்கணக்கானோர் இறக்கின்றனர், மேலும் ஆயிரக்கணக்கானோர் நெடுங் கோவிட் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
புத்தகத்தில் உள்ள தொகுப்பு, இந்த வெகுஜன மரணங்களும் தொற்றுநோயும் தவிர்க்க முடியாதவையாகும் என்ற முதலாளித்துவ அரசாங்கங்களின் கூற்றுக்களை அம்பலப்படுத்துகிறது என பிளேக் வலியுறுத்தினார். நூலில் உள்ளடங்கியுள்ள உலக சோசலிச வலைத் தளம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கைகள் 2020 ஜனவரியில் எழுதத் தொடங்கியவை ஆகும். அவற்றில் தொற்றுநோயை விரைவாக முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய விஞ்ஞான அடிப்படையிலான பொது சுகாதாரத் திட்டத்தை பற்றி விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இந்த கொள்கைகள் கூட்டுத்தாபன இலாபங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதன் காரணமாக அவை அரசாங்கங்களால் நிராகரிக்கப்பட்டன.
தான் தலைமை வகிக்கும் கோவிட்-19 தொற்றுநோய்க்கான உலகளாவிய தொழிலாளர் விசாரணை உட்பட, ட்ரொட்ஸ்கிச இயக்கம் மட்டுமே, உத்தியோகபூர்வ பிரதிபலிப்பின் குற்றவியல் தன்மையை அம்பலப்படுத்தியது, என்று பிளேக் விளக்கினார். தொழிலாள வர்க்கம் மற்றும் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நலன்களுக்காக வைரஸை ஒழிப்பதற்காக தொடர்ந்து போராடும் ஒரே அரசியல் போக்கு இது மட்டுமே ஆகும்.
இந்த நூல்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட பின்னர், கிரிஸ்ப் மற்றும் நியூசிலாந்தில் உள்ள சோசலிச சமத்துவக் குழுவின் முன்னணி உறுப்பினரான மற்றும் டொம் பீட்டர்சும் வழிநடத்திய ஒரு கேள்வி பதில் அமர்வு நடைபெற்றது. பங்கேற்பாளர்கள் நோர்த் மற்றும் பிளேக்கிடம் அவர்களது சமீபத்திய படைப்புக்களின் தோற்றம், தொற்றுநோய் மற்றும் பெருநிறுவன நிதி நலன்களுக்கு இடையேயான உறவு மற்றும் உலகளாவிய விசாரணையின் நோக்கம் மற்றும் பங்கு ஆகியவற்றை பற்றி விரிவாகக் கேட்டறிந்துகொண்டனர்.