மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
மே 26 வெள்ளியன்று, பல அரசுப் பள்ளித் தொழிலாளர்களைப் போலவே, உள்ளூர் மற்றும் நகரங்களுக்கு இடையேயான சேவைகள் உட்பட தனியார் மற்றும் பொது நிறுவனங்களில் உள்ள இத்தாலிய பொதுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் 24 மணி நேர வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். 25 க்கும் குறைவான நகரங்களில், ரயில், டிராம், பேருந்து ஓட்டுநர்கள், ஆசிரியர்கள் மற்றும், ட்ரைஸ்டேயில், கப்பல்துறை தொழிலாளர்கள் ஆகியோர், அதிக ஊதியம் மற்றும் பாதுகாப்பற்ற மற்றும் ஆபத்தான வேலைகளுக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மிலான், நேபிள்ஸ் மற்றும் டுரினில் வேலைநிறுத்தம் செய்பவர்கள், நகர மையத்தின் வழியாக 'கீழே ஆயுதங்களை வை, கூலியை உயர்த்து!' என்று கோஷமிட்டபடி அணிவகுத்துச் சென்றனர்.
ரோமில், பள்ளி சிறுவர்களும் மாணவர்களும், அடிப்படை தொழிற்சங்கத்தின் (Base Trade Union USB) அழைப்புக்கு ஆதரவளித்து கல்வி அமைச்சகத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். லம்பார்டியில், ட்ரெனார்ட் நிறுவனத்தின் ரயில் சேவை 24 மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டது, அதே நேரத்தில் ட்ரென்இத்தாலியா காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது. நேபிள்ஸில், மெட்ரோ, பேருந்து, டிராம் மற்றும் கேபிள் கார் உட்பட முழு பொதுப் போக்குவரத்து அமைப்பும் 24 மணிநேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டது. டுரின் மற்றும் பலேர்மோவில் இருந்து ஜெனோவா, புளோரன்ஸ், லிவோர்னோ, பாரி மற்றும் கேடானியா ஆகிய இடங்கள் வரையிலும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். முக்கிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடி தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மிலானில் பலத்த பாதுகாப்புடன் கூடிய கான்ஃபிண்டஸ்ட்ரியா (Confindustria) தலைமையகத்திற்கு வேலைநிறுத்தக்காரர்கள் சென்றபோது மோதல்கள் வெடித்தன. ஆர்ப்பாட்டக்காரர்கள் தக்காளி மற்றும் முட்டைகளை வீசி தடைகளை உடைக்க முயன்றனர். இராணுவ பொலிஸாரால் வலுப்படுத்தப்பட்ட பொலிசார், கேடயங்கள் மற்றும் பொல்லுகள் மூலம் இதற்கு பதிலடி கொடுத்தனர்.
சில அதிவேக Frecce மற்றும் ICE ரயில்கள், ரோம் நகரம் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளான எமிலியா-ரோமக்னா மற்றும் மார்ச்சே ஆகிய இடங்களுக்கான போக்குவரத்துக்கு வேலைநிறுத்தத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டன. விமான நிலையங்களில், ஜூன் 4 ஞாயிற்றுக்கிழமை தேசிய வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளாக, நிகர மாதாந்திர சம்பள உயர்வு 300 ஈரோக்கள் மற்றும் பணவீக்கத்திற்கு ஏற்ப சம்பளத்தை சரிசெய்தல், குறைவான வருமானம் ஈட்டும் அனைவருக்கும் 10 ஈரோ குறைந்தபட்ச மணிநேர ஊதியம், மற்றும் ஆபத்தான, தற்காலிக மற்றும் குறைந்த ஊதியம் பெறும் வேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தல் ஆகியவை முன்வைக்கப்பட்டன.
மே மாதம், ஊதிய உயர்வு மற்றும் அதிக வேலைப் பாதுகாப்பைக் கோரி இத்தாலியில் பல வேலைநிறுத்தங்கள் நடந்தன. இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள், பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன், ஜேர்மனி மற்றும் ஸ்காண்டிநேவியாவில் இருந்து ருமேனியாவில் சமீபத்திய ஆசிரியர் வேலைநிறுத்தங்கள் வரை, ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் முழுவதும் வளர்ந்து வரும் போராட்ட இயக்கத்தின் ஒரு பகுதியாக உள்ளனர்.
இத்தாலியில், மே 2 அன்று, நான்கு மணிநேர தேசிய போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நடந்தது. மே 3 அன்று, ஏர் டோலோமிட்டி மற்றும் வுல்டிங் (Air Dolomiti and Vuelding) விமானப் பணிப்பெண்களின் ஆதரவுடன் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மே 19 அன்று, அனைத்து இத்தாலிய விமான நிலையங்களிலும் தரைத் தொழிலாளர்கள் சுரண்டல், வறுமை ஊதியங்கள் மற்றும் ஆபத்தான நிலைமைகளுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்தனர். லுஃப்தான்சா நிறுவனத்தினால் கைப்பற்றப்பட்ட அலிடாலியாவின் வாரிசான ITA ஏர்வேஸில், 4,000ம் வேலைகள் இழப்புக்கு எதிராக ஏற்கனவே பல வெளிநடப்புக்கள் நடந்துள்ளன.
இந்த வேலைநிறுத்த இயக்கம், இத்தாலியின் சகோதரர்கள் (Fratelli d’Italia) என்ற பாசிச இயக்கத்தை சேர்ந்த பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனியின் அரசாங்கத்தின் வணிக சார்பு, சமூக மற்றும் போர்க் கொள்கைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்றது. மெலோனி அரசாங்கம் பொதுத்துறையில் காலாவதியான கூட்டு ஒப்பந்தத்தை 2024 வரை நீட்டிக்கவும், அதை தன்னிச்சையாக, சிறிய பணவீக்க போனஸுடன் மாற்றவும், பிரஸ்ஸல்ஸ் கட்டளையிட்ட பட்ஜெட் கட்டுப்பாடுகளை திணிக்கவும் முயற்சிக்கிறது.
தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்களுக்கான புதிய ஆணையை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது, இதில் சமூக நலன்களை வெட்டிக் குறைத்தல் மற்றும் குறுகிய கால வேலை ஒப்பந்தங்கள் மீதான விதிமுறைகளை தளர்த்துதல் ஆகியவை அடங்கும். மே மாதம், CGIL, CISL மற்றும் UIL ஆகிய மூன்று பாரம்பரிய தொழிற்சங்கக் கூட்டமைப்புகள் இந்தக் கொள்கைகளை எதிர்த்து மூன்று பெரிய பேரணிகளை ஏற்பாடு செய்தன, இதில் 30,000 முதல் 40,000 தொழிலாளர்கள் போலோக்னா, மிலன் மற்றும் நேபிள்ஸில் பங்கேற்றனர்.
மெலோனி, தொழில்முனைவோர் மற்றும் பணக்காரர்களுக்கு வரி குறைப்புகளை செயல்படுத்தி வருகிறார். ஜனரஞ்சக முறையில், அவர் சிறு வணிகங்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் மீதான வரிகளை மாஃபியா பாதுகாப்பு மோசடிகளுடன் ஒப்பிடுகிறார். மெலோனியின் முன்னோடியான மரியோ ட்ராகி அறிமுகப்படுத்திய எரிசக்தி நிறுவனங்களின் அதிகப்படியான லாபத்தின் மீது, அவரது நிதி மந்திரி ஜியான்கார்லோ ஜியோர்கெட்டி (லெகா) முக்கால்வாசி வரியை குறைத்தார். அதிக ஆற்றல் கொண்ட பெராரிகள், லம்போர்கினிகள் மற்றும் மசெரட்டிகள் ஆகிய கார்கள் மீதான இத்தாலியின் கூடுதல் வரியை ரத்து செய்வது அரசாங்கத்தின் அடிவானத்தில் உள்ள மற்றொரு வரிச் சலுகையாகும்.
மெலோனி ஒரே நேரத்தில் குடிமக்களின் வருமானத்தை (அடிப்படை வருமானம்) படிப்படியாகக் குறைக்கிறார். இது பெப்பே கிரில்லோவின் ஐந்து நட்சத்திர இயக்கத்தின் மத்திய தேர்தல் வாக்குறுதியாகும். இது கடலில் ஒரு துளி மட்டுமே என்றாலும், அது தேவைப்படும் சுமார் 1 மில்லியன் மக்களுக்கு €780 வரை கூடுதல் சமூக உதவியை வழங்கியுள்ளது. கூட்டாளிகள் மற்றும் நிதிச் சந்தைகளின் கைதட்டலுக்கு, மெலோனி நவம்பர் 2022 இல் குடிமக்களின் வருமானத்தை 2023 இல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்குவதாகவும், 2024 முதல் அதை முற்றிலும் ஒழிப்பதாகவும் அறிவித்தார்.
அதே நேரத்தில், இத்தாலியில் வறுமை மேலும் அதிகரித்து வருகிறது. Caritas வறுமை அறிக்கையின்படி, 5 மில்லியன் இத்தாலியர்கள் முழுமையான வறுமையில் வாழ்கின்றனர். குறிப்பாக இத்தாலியின் தெற்குப்பகுதி ஒரு ஏழை இல்லமாக மாறி வருகிறது: கடந்த 10 ஆண்டுகளில் அங்கு வறுமை இரட்டிப்பாகி மக்கள் தொகையில் 10 சதவீதத்தை எட்டியுள்ளது. இத்தாலி முழுவதும், 1.4 மில்லியன் குழந்தைகள் வறுமையின் ஆபத்தில் உள்ளனர். இளைஞர்களின் வேலையின்மை அதிகரித்து வருகிறது, அதேபோன்று வேலையின் நிச்சயமற்ற தன்மையும் அதிகரித்து வருகிறது, அதற்கான காரணங்களுக்காக 'முழுமையான ஏழைகள்' மத்தியில் புலம்பெயர்ந்தோர்கள் குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து இத்தாலியர்களில் 7.2 சதவீதம் பேர் ஏழைகளாக இருந்தாலும், குடியேறியவர்களிடையே, வறுமை மூன்றில் ஒருவரை (32.4 சதவீதம்) பாதிக்கிறது.
சமூக சமத்துவமின்மை இடைவெளியானது, செல்வந்தர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு வரிக் கொடுப்பனவுகள் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தால் கட்டளையிடப்பட்ட சிக்கன நடவடிக்கைகளால் மட்டுமல்ல, போர் கொள்கைகளும் பில்லியன்கணக்கான ஈரோக்களை விழுங்குகிறது. அவரது இராணுவவாதக் கொள்கையில் ஜியோர்ஜியா மெலோனி, டிராகியால் கண்டுபிடிக்கப்பட்ட நேட்டோ சார்பு போக்கைப் பின்பற்றுகிறார். உக்ரேனை இராணுவ மற்றும் நிதி உதவியுடன் ஆதரிக்கும் அவர், இத்தாலியில் இராணுவம் மற்றும் பொலிஸ் அரசை ஆயுதபாணியாக்குகிறார். கடந்த மார்ச் மாதம், கியேவில் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியை சந்தித்த அவர், வான் பாதுகாப்பு அமைப்பை வழங்குவதற்கு அவருக்கு உறுதியளித்தார். சில நாட்களுக்கு முன்பு, அவர் ரோமில் செலென்ஸ்கியை தலைவரை வரவேற்றார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வலதுசாரி, இராணுவவாத மற்றும் மிகவும் ஆபத்தான கொள்கைகளுடனான தனது உடன்பாட்டை முன்னிலைப்படுத்த மெலோனி முயற்சிக்கிறார். ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்று, இத்தாலியும் உழைக்கும் மக்களின் இழப்பில் மூன்றாம் உலகப் போருக்கு தன்னை ஆயுதபாணியாக்குகிறது.
இதற்கு ஒரே பதில் முதலாளித்துவத்திற்கு எதிரான ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் பொதுவான போராட்டமாகும். வேலைகள், ஊதியங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை எதிர்கொள்ள, தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியம் ஒரு சோசலிச அடிப்படையில் நிறுவப்பட வேண்டும். இதற்கு இத்தாலியில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) ஒரு பிரிவான புரட்சிகர தலைமையை கட்டியெழுப்புவது அவசரமாக தேவைப்படுகிறது.
இதர நாடுகளைப் போலவே, இத்தாலிய தொழிற்சங்கங்களும் மூலதனத்தின் மோசமான முகவர்களாக இருக்கின்றன. ஜனநாயகக் கட்சியினர் ஆட்சியிலிருந்தபோது, பாரிய சமூக வெட்டுக்களை திணிப்பதற்கு உடந்தையாக இருந்தது மட்டுமல்ல, மெலோனியுடனும் நெருக்கமாக இந்த தொழிற்சங்க முகவர்கள் வேலை செய்கிறார்கள். உதாரணமாக, CGIL என்ற மிகப்பெரிய தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவரும், இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் (PCI) முன்னாள் உறுப்பினருமான மொரிசியோ லாண்டினி, கடந்த தொழிற்சங்க மாநாட்டில் உரையாற்றுவதற்கு மெலோனியை அழைத்தார்.
பாரம்பரிய தொழிற்சங்கக் கூட்டமைப்புகளான CGIL, CISL மற்றும் UIL ஆகியவை இத்தாலியப் பொருளாதாரத்தில் மிகவும் ஆழமாகச் சிக்கியுள்ளதால், அதன் உறுப்பினர்கள் கூட்டம் கூட்டமாக இந்த அமைப்புகளிலிருந்து வெளியேறுகிறார்கள். மே 26 அன்று வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த யூ.எஸ்.பி மற்றும் கோபாஸ், கியூபி போன்ற பிற தொழிற்சங்கங்கள் இந்த வெற்றிடத்தை நிரப்ப முயற்சிக்கின்றன. ஆனால், அவர்களின் தேசிய நோக்குநிலை மற்றும் முன்னோக்கு பழைய தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் இருந்து அடிப்படையில் வேறுபட்டதல்ல.
மீண்டும் மீண்டும், தொழிற்சங்கங்கள் ஒரு நாள் வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்து வளர்ந்து வரும் இயக்கத்தின் மீதான கட்டுப்பாட்டை தக்கவைத்துக்கொள்ளவும், போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக ஒரு சமூக எழுச்சி ஏற்படுவதை தடுக்கவும் முயற்சிக்கின்றன. தொழிற்சங்கங்களின் தலைவர்கள் இத்தாலிய போலி-இடது மற்றும் ஸ்ராலினிசக் கட்சிகளுடன் தொடர்புடையவர்களாக இருக்கின்றார்கள். குறிப்பாக, கம்யூனிஸ்ட் மறுசீரமைப்பு (PRC) மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட இத்தாலி கம்யூனிசக் கட்சி (PCI), மக்கள் அதிகாரம் (PaP), இத்தாலிய இடதுகள் மற்றும் ஜனநாயகவாதிகள் ஆவர். கம்யூனிஸ்ட் மறுசீரமைப்பு அமைப்புடன் நெருக்கமாக உள்ள, USB தலைவர் பியர்போலோ லியோனார்டி மற்றும் கோபாஸ் தலைவர் பியரோ பேர்னோச்சி ஆகியோர், 2006 மற்றும் 2008 க்கு இடையில் ரோமானோ பரோடி அரசாங்கத்தின் பட்ஜெட் வெட்டுக்கள் மற்றும் போர்க் கொள்கைகளுக்கு ஆதரவாக இருந்தனர்.
சமீபத்திய உள்ளாட்சித் தேர்தல்களில், தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் எல்லாவற்றிலும் ஜனநாயகக் கட்சிக்கு (PD) ஆதரவளித்தனர். PD யின் புதிதாக உருவாக்கப்பட்ட தலைவர், 38 வயதான எலி செலைன் என்ற பெண்மணி ஆவர். அவரது ஒரே துருப்புச் சீட்டு அவரது உறவினர்களான இளைஞர்கள் ஆவர். அமெரிக்காவில் பராக் ஒபாமாவின் பிரச்சாரக் குழுவில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், இரண்டு ஆண்டுகளாக எமிலியா-ரோமக்னா பகுதியின் துணைத் தலைவராக இருந்து பணியாற்றினார். எவ்வாறாயினும், தேர்தல்களில், 'இடது முகாம்' என்று அழைக்கப்படுபவர்களின் திவாலான கொள்கைகள், மெலோனியைச் சுற்றியுள்ள வலதுசாரிகள் மற்றும் பாசிஸ்டுகளின் மற்றொரு, இன்னும் குறிப்பிடத்தக்க தேர்தல் வெற்றிக்கு வழிவகுத்தது.
எமிலியா-ரோமக்னா பகுதியில் இந்த திவாலான கொள்கைகள் குறிப்பாக வெளிப்படையானவை. 15 பேரின் உயிரைப் பறித்த சமீபத்திய பாரிய வெள்ளம், அவர்களின் மோசமான தோல்வியை இடைவிடாமல் வெளிப்படுத்துகிறது. 78 வருடங்களாக “இடது” முகாம் ஆட்சியில் இருக்கும் இப்பிரதேசத்தில் வெள்ளம், மண்சரிவு மற்றும் ஏனைய அனர்த்தங்களைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
இப்பகுதியின் உள்கட்டமைப்பு மட்டும் புறக்கணிக்கப்பட்டது அல்ல, மாறாக, நடைபாதைகள், ஆறுகள் மற்றும் மலைக் காடுகள் அழிக்கப்பட்டன. மற்றும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அணைக்கட்டுப் பணிகள் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன. பொதுத்துறையின் சிக்கன நடவடிக்கைகளும் இப்போது அவற்றின் எண்ணிக்கையை எடுத்துக் கொள்கின்றன. வேளாண் வல்லுநர்கள், நகர்ப்புற திட்டமிடுபவர்கள், உள்கட்டுமான பொறியியலாளர்கள், தீயணைப்பு படையினர்கள், சமூகப் பணியாளர்கள் மற்றும் பலர் உட்பட நன்கு பயிற்சி பெற்ற மற்றும் நியாயமான ஊதியம் பெறும் தொழிலாளர்கள் பற்றாக்குறை இப்பகுதியில் உள்ளன.
பேரழிவுகரமான வெள்ளம் முதலாளித்துவ நெருக்கடியின் உண்மையான முகத்தைக் தோலுரித்துக் காட்டுகிறது. ரோம் மற்றும் போலோக்னாவில் உள்ள பொறுப்பாளர்கள், பொறுப்புகள் மற்றும் நிதிகள் பற்றி வாதிடுகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள, தன்னார்வலர்களின் உதவியை நம்பியிருக்கிறார்கள்.