இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
வியாழனன்று, பிரதான அவுஸ்திரேலிய வெளியீடுகளான, சிட்னி மோர்னிங் ஹெரால்ட் (Sydney Morning Herald) மற்றும் ஏஜ் (Age), விக்கிலீக்ஸ் வெளியீட்டாளர் ஜூலியன் மீது அமெரிக்க மத்திய புலனாய்வுப் பணியகம் (FBI) தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகக் குறிப்பிடும் புதிய தகவலை வெளியிட்டுள்ளன.
முந்தைய வாரம் ஒரு பிரிட்டிஷ் பத்திரிகையாளரான ஆண்ட்ரூ ஓ'ஹகனை FBI தொடர்பு கொண்டதாகவும், அசான்ஜைப் பற்றி அவரிடம் பேட்டி காண வேண்டும் என சொன்னதாகவும் அந்தக் கட்டுரை தெரிவித்தது. 2011 இல், அசான்ஜின் சுயசரிதையை எழுதுவதற்கு ஓ'ஹகன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
பணக்கார மற்றும் மனநிறைவு கொண்ட பிரிட்டிஷ் உயர் மத்திய தர வர்க்கத்தின் பல பிரதிநிதிகளைப் போலவே, பின்னர் விக்கிலீக்ஸின் எரிச்சலூட்டும் எதிர்ப்பாளராக ஆன அவர், லண்டன் ரிவியூ ஆஃப் புக்ஸ் இற்காக அசான்ஜ் உடனான தனது உறவைப் பற்றி ஒரு சலிப்பூட்டுகின்ற சர்ச்சையை ஏற்படுத்தும் விளக்கத்தை எழுதினார்.
FBI உடன் பேச மறுத்ததாக ஓ'ஹகன் குறிப்பிட்டுள்ளார். பத்திரிக்கையாளர்களை குறிவைத்து நடத்தப்படும் FBI நடவடிக்கைக்கு ஒத்துழைப்பதை விட சிறை செல்வதையே விரும்புவதாக அவர் கூறினார். அது ஒரு கொள்கை நிலைப்பாடு.
இருப்பினும், வெளிப்படையான விசாரணை என்பது, தொந்தரவு மட்டுமன்றி மிகவும் அசாதாரணமானதும் ஆகும். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக அசான்ஜுக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் குற்றப்பத்திரிகையை வெளியிட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. விக்கிலீக்ஸ் ஸ்தாபகர், பிரிட்டனின் அதிகபட்ச பாதுகாப்பு கொண்ட பெல்மார்ஷ் சிறையில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, தொடர் குற்றச்சாட்டுகள் மற்றும் ஒப்படைப்பு கோரிக்கையின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அசான்ஜை அல்லது ஏனைய விக்கிலீக்ஸ் பிரதிநிதிகளுக்கு எதிராகவும் கூட அமெரிக்க அரசாங்கம் புதிய குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கான முயற்சியையும் கூட இந்த விசாரணை, சமிக்ஞை செய்யக் கூடும். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், அமெரிக்க அரசிடம் அசான்ஜுக்கு எதிராக எந்த ஏற்றுக்கொள்ளக்கூடிய வழக்கும் இல்லாததோடு, தற்போதைய ஒப்படைப்புச் செயல்முறைகளில் அவரைத் தாக்குவதற்கு இன்னும் அதிகமான பொய்கள் மற்றும் பொய்மைப்படுத்தல்களைத் தொடர்ந்து தேடுகிறது என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது.
இன்று காலை, FBI விசாரணை பற்றி சிட்னி மார்னிங் ஹெரால்ட், ஏஜ் ஆகியவை செய்தி பிரசுரித்த விதம் சம்பந்தமான விடயத்தை எடுத்துக்கொண்டு, விக்கிலீக்ஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டது. ஓ'ஹகனுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு, விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் மீதான விசாரணையை FBI 'மீண்டும் தொடங்கியுள்ளது' என்பதை சுட்டிக்காட்டியதாக இரு வெளியீடுகளும் தெரிவித்தன.
எவ்வாறாயினும், விக்கிலீக்ஸ் குறிப்பிட்டதாவது: “சிஐஏ தலைவர் மைக்கேல் பொம்பியோவின் அழுத்தத்திற்குப் பிறகு டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் தற்போதைய செயல்முறை 2017 இல் தொடங்கப்பட்டதிலிருந்து, விசாரணை ஒருபோதும் நிறுத்தப்படவில்லை. எனவே அது மீண்டும் தொடங்கப்பட்டதாகக் கூறுவது அர்த்தமற்றது.”
விக்கிலீக்ஸ் தலைமை ஆசிரியர் கிறிஸ்டின் ரபன்சன் கூறியதாவது: 'FBI ஒரு பத்திரிகையாளரிடம் (திரு. ஓ’ஹகன்) அவரது கதைமூலத்துடன் (திரு. அசான்ஜ்) ஆன தொடர்பின் பெறுபேறுகளை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டதன் மூலம் அச்சம் தரும் புதிய மோசமான நடவடிக்கையை அடைந்துள்ளது. ஜூலியன் அசான்ஜ் விவகாரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் உலக அளவில் பத்திரிகையாளர்களை கிலிகொள்ளச் செய்யும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதில் சந்தேகமில்லை.
“ஜூலியனின் வக்கீல்களை உளவு பார்ப்பதில் இருந்து, அவரது படுகொலைக்குத் திட்டமிடுவது வரை, அவரைத் துன்புறுத்துபவர்களின் நடத்தை, அதிகார துஷ்பிரயோகங்களின் பண்டோராவின் பெட்டியைத் திறக்கிறது (எதிர்பார்க்காத புதிய பிரச்சினைகளை உருவாக்குகிறது). உலகம் முழுவதும் பத்திரிகை சுதந்திரத்தின் பேரில், பைடன் நிர்வாகத்திற்கும் சட்டமா அதிபர் மெரிக் கார்லண்டிற்கும் அனுப்ப வேண்டிய செய்தி என்னவென்றால், குற்றச்சாட்டுகளை கைவிடு. இதை இப்போதே நிறுத்து,' என்பதாகும்.”
இந்த அறிக்கை, அமெரிக்க வழக்கு விசாரணை முயற்சிக்கு மையமாக இருந்து வரும் அமெரிக்க புலனாய்வு அமைப்புகளால் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட அசான்ஜுக்கு எதிரான மோசமான சூழ்ச்சி நடவடிக்கைகளை மேற்கோள் காட்டுவதாக இருக்கின்றது.
இதில் ட்ரம்ப் நிர்வாகமும் சி.ஐ.ஏ.வும் லண்டனில் இருந்து அசான்ஜை சட்டவிரோதமாக நாடுகடத்துவது அல்லது அவரை படுகொலை செய்வது குறித்து விவாதித்ததாக 2021 செப்டம்பரில் யாஹூ (Yahoo!) செய்தி அறிக்கையில் அடங்கியிருந்த அம்பலப்படுத்தல்களும் உள்ளடக்கியதாகும். யாஹூ விசாரணை, குறைந்தபட்சம் 30 முன்னாள் அமெரிக்க அதிகாரிகளின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது.
2020 ஜூனில், அசான்ஜுக்கு எதிராக ஏற்கனவே 17 உளவுச் சட்டக் குற்றச்சாட்டுகளை வெளியிட்டு, அவரை நாடுகடத்தக் கோரிய பிறகு, அமெரிக்கா ஒரு மேலதிக குற்றச்சாட்டை வெளியிட்டது. இது பல ஆண்டுகளுக்கு முன்பு விக்கிலீக்ஸில் இருந்து பணத்தை திருடிய சிகுர்தூர் 'சிக்கி' தோர்டார்சன் என்பவரின் சாட்சியத்தை அடிப்படையாகக் கொண்டது. புதிய குற்றப்பத்திரிகையின் நோக்கம், அசான்ஜ் ஒரு ஹெக்கர், ஒரு பத்திரிகையாளரோ வெளியீட்டாளரோ அல்ல என்ற மோசடிக் கதையை வலுப்படுத்துவதாகும்.
2021 ஜூனில், தோடர்சன் தனது சாட்சியம் பெரும்பாலும் பொய்களைக் கொண்டிருந்தது என்று ஒப்புக்கொண்டார். அவர் மீது வழக்குத் தொடரக்கூடாது என்ற ஒப்பந்தத்திற்கு ஈடாக, இந்த சாட்சியம் FBI முகவர்களிடம் வழங்கப்பட்டது. தோர்டார்சன் ஒரு பாலியல் குற்றவாளியும், முன்பு நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒரு மனநல மருத்துவரால் 'சமூகவிரோதி' என்று விவரிக்கப்பட்ட மோசடிக்காரரும் ஆவார்.
விக்கிலீக்ஸ் அறிக்கை மேலும் கூறியதாவது: “ஜூலியன் அசான்ஜுக்கு எதிரான வழக்கு எந்த அடிப்படையும் அற்றதோடு அரசியல் உள்நோக்கம் கொண்டது. FBI இன் சமீபத்திய நடவடிக்கை அவரை துன்புறுத்துபவர்களின் அரசியல் அவநம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது. ஒரு குற்றவாளியை தங்களது நட்சத்திர சாட்சியாக (அவர் தனது சாட்சியத்தை விலக்கிக்கொண்டார்) மாற்றுவது உள்ளடங்களாக திடீரென ஒரு வழக்கை உருவாக்க FBI முயற்சிக்கின்றது.'
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், FBI ஏற்கனவே அசான்ஜைப் பின்தொடரும் அதன் இழிச்செயலின் அளவைக் கண்டுகொண்ட போதும், அதன் முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. விக்கிலீக்ஸ் மீது ஓ'ஹகனின் முந்தைய விரோதம் மற்றும் சுயசரிதையை எழுதுவதற்காக அசான்ஜுடன் மேற்கொண்ட நூற்றுக்கணக்கான மணிநேர உரையாடல்களை அவர் பதிவுசெய்துகொண்டிருக்கும் நிலையில், FBI அவரை ஏன் அணுகியது என்று புரிந்துகொள்வது கடினம் அல்ல.
பல குழப்பமான கேள்விகள் எழுகின்றன.
முதலாவதாக, ஓ'ஹகனை நேர்காணல் செய்ய FBI யிடமிருந்து வந்த எழுத்துப்பூர்வ கோரிக்கை, லண்டன் மாநகர பொலிசின் பயங்கரவாத எதிர்ப்புக் கட்டளைப் பிரிவாலேயே அவருக்கு அனுப்பப்பட்டது. நீண்டகாலமாக பிரிட்டிஷ் காவலில் இருக்கும் ஒரு பத்திரிகையாளர் மீதான அமெரிக்க விசாரணையில் பயங்கரவாத எதிர்ப்பு போலீஸ்காரர்களுக்கு ஏன் தொடர்பு இருக்கிறது என்பது முற்றிலும் தெளிவாக இல்லை, அதை முன்கணிக்க முடியாது.
பல ஆண்டுகளாக, முன்னணி அமெரிக்க அரசியல்வாதிகள் அசான்ஜை 'பயங்கரவாதி' என்று அருவருக்கத் தக்க முறையில் முத்திரை குத்தினர். அவர்களில், அசான்ஜை ஒரு 'உயர் தொழில்நுட்ப பயங்கரவாதி' என்று ஒருமுறை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் விவரித்தார்.
ஹெரால்ட் மற்றும் ஏஜ் பத்திரிகைகளுக்கு அளித்த கருத்துகளில், அசான்ஜின் ஆஸ்திரேலிய வழக்கறிஞர் ஸ்டீபன் கென்னி, ஓ'ஹகன் வெளிப்படுத்தியவை பற்றி பதிலளித்தார்: 'அவர்கள் தொடர்ந்து விசாரணை செய்ய முயற்சிப்பதாகத் தெரிகிறது, விசாரணை தொடங்கியதில் இருந்து கடந்துள்ள காலத்தின் அளவு, வழக்கத்திற்கு மாறானதாக எனக்குத் தோன்றுகிறது. ஜூலியன் வீட்டிற்கு வருவதைப் பார்க்கும் ஒரு ஏற்பாட்டைப் பெறுவதற்கு நாங்கள் முயற்சி செய்து வருவதால், இது கொஞ்சம் கவலைக்குரியது என்று நான் நினைக்கிறேன்.”
அவுஸ்திரேலிய தொழிற்கட்சி அரசாங்கம், அசான்ஜின் வழக்கு 'மிக நீண்டது' என்று பைடன் நிர்வாகத்திடம் எடுத்துக் கூறியதாகத் கூறுகிறது. வழக்கை எவ்வளவு துல்லியமாக முடிக்க வேண்டும் என்பது பற்றி தொழிற் கட்சி மிகவும் தெளிவற்றதாகவே இருந்து வருகிறது.
ஆனால் அவ்வாறு எடுத்துக்கூறப்பட்டிருப்பின், அவை நிராகரிக்கப்பட்டதாகவே தெரிகிறது.
கடந்த வாரம் அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்த்தாபனத்தின் 'QandA' நிகழ்ச்சியில் இந்த பிரச்சினை வெளிப்பட்டது. தொகுப்பாளர் பட்ரிசியா கர்வேலஸ், தொழிற்கட்சியின் உதவி வெளியுறவு அமைச்சர் டிம் வாட்ஸிடம், அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கங்களுக்கு இடையேயான, அசான்ஜின் வழக்கு விசாரணையை முடிவுக்குக் கொண்டு வரும் ஒரு ஒப்பந்தத்தின் வாய்ப்புகள் பற்றி கேட்டார்.
'இந்தப் பிரச்சினையில் எங்கள் பார்வை என்ன என்பதில் அமெரிக்கர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை' என வாட்ஸ் கூறினார்:
அப்போது, 'சரி. நீங்கள் இப்போது சொன்னதை நாங்கள் பயன்படுத்தப் போகிறோம் என்றால், நாங்கள் நெருங்கிய கூட்டாளிகள் என்பதில் அவர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை எனில், அவர்கள் எங்களுக்கு கடன்பட்டிருக்க வேண்டாமா? நெருங்கிய நண்பருடன் நீங்கள் செய்வது இது அல்லவா? என கர்வேலஸ் திருப்பி கேட்டார்.
குழம்பிப்போனது போல் தோன்றிய வாட்ஸ், 'நண்பர்கள் அடிக்கடி உடன்படுவதில்லை' என்று பதிலளித்தார். அசான்ஜின் விடுதலைக்காக தொழிற்கட்சி நிர்வாகம் நேரடியாகத் தலையீடு செய்வதால் ஏற்படும் சிரமங்களைப் பற்றி அவர் பின்னர் அலசினார்.
ட்ரம்பை விட பைடென் நிர்வாகம், அசான்ஜை உளவுபார்ப்பதில் தணிவு காட்டுகிறது என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர். பைடென் நிர்வாக அதிகாரிகள், விக்கிலீக்ஸ் நிறுவனரைப் பற்றிக் கேட்கும் போதெல்லாம், அவரது வழக்கைப் பற்றி கலந்துரையாடுவதற்கு திட்டவட்டமாக மறுக்கிறார்கள் அல்லது அதை நிர்வாகத்தின் நடவடிக்கை அன்றி, அமெரிக்க நீதித் துறையின் ஒரு விஷயமாகவே கேலிக்கூத்தாக முன்வைக்கிறார்கள்.
ஆனால், நிர்வாகத்தின் ஒப்புதல் இல்லாமல், ஜனாதிபதியே ஒப்புதல் கொடுக்காமல், FBI முகவர்கள் லண்டன் முழுவதும் சுற்றித் திரிந்து, அசான்ஜ் மீது அழுக்கைத் தடவ முயற்சிப்பார்கள் என்பது சாத்தியமற்றது.
சமீபத்திய முன்னேற்றங்கள், அசான்ஜின் விடுதலைக்காக தீவிரமாகப் போராடும் ஒரு வெகுஜன இயக்கத்திற்கு புறம்பாக, அவரது விஷயத்தில் ஒரு சாதகமான தீர்மானத்தின் சாத்தியமற்ற தன்மையை மீண்டும் சுட்டிக்காட்டுகின்றன.
பைடென் நிர்வாகம் அணுஆயுத மோதலில் முடியும் அச்சுறுத்தலுடன், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக ஒரு பினாமி போரை நடத்தி வருகிறது. அந்த நிலைமைகளின் கீழ், பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட அமெரிக்க நட்பு நாடுகளுடன் சேர்ந்து, தேசிய பாதுகாப்பு ஊடகவியல் மற்றும் போர்-விரோத எதிர்ப்பை இன்னும் பரந்த அளவில் ஒடுக்குகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, 'ரஷ்ய குறுக்கீடு' என்று கூறப்படுவதற்கு எதிரான ஒரு மெக்கார்தியி பிரச்சாரம், பைடன் நிர்வாகத்தின் அரசியல் அடையாளத்திற்கு மையமாக உள்ளது. அசான்ஜுக்கு எதிரான முற்றிலும் நிரூபிக்கப்படாத பொய்களும் அவதூறுகளும், அதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளன. அது தனது உயர் மத்தியதர வர்க்கத் தளத்தை ரஷ்யவிரோத வெறியைக் கொண்டு உசுப்பேற்றுகின்ற நிலையில், பைடன் அசான்ஜுக்கு கருணைக் கரம் நீட்டப் போகிறார் என்பது மிகவும் சாத்தியமற்றதாகத் தெரிகிறது.
அவுஸ்திரேலிய அரசாங்கம், அதன் பங்கிற்கு, சீனாவிற்கு எதிரான அமெரிக்கத் தலைமையிலான போரில் இணைவதற்கான தயாரிப்பில், முன்னெப்போதும் இல்லாத வகையில் இராணுவக் கட்டமைப்பை மேற்கொண்டு வருகிறது. அத்தகைய வேலைத்திட்டம், 'முழு தேசத்தின்' போர் முயற்சியாக இருக்க வேண்டும் என்று அது வலியுறுத்துவதானது ஜனநாயக உரிமைகள் மீதான இன்னும் கூடுதலான தாக்குதல்கள் பற்றிய அச்சத்தை தோற்றுவிக்கின்றது.
அசான்ஜ் மீதான துன்புறுத்தலானது ஒரு உலகளாவிய பிற்போக்கு பிரச்சாரத்தின் முன்னோடியாகும். இது பிரிக்கமுடியாத வகையில் ஏகாதிபத்திய போரின் புதிய காலகட்டத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. அதாவது தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலமே அவரது விடுதலைக்கான போராட்டம் தொடரப்பட வேண்டும்.
விக்கிலீக்ஸ் வெளியீட்டாளர் ஜுலியன் அசான்ஜ் சிறைவைக்கப்பட்டு நான்கு வருடங்கள்
கெர்ஷ்கோவிச்சை விடுதலை செய், ஜூலியன் அசான்ஜ் மீதான கொடூர துன்புறுத்தலை நிறுத்து