ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான பொருளாதார போருக்கு உறுதியளிக்கும் "அட்லாண்டிக் பிரகடனத்தை" அமெரிக்காவும் பிரிட்டனும் ஏற்றுக்கொள்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இராணுவ உற்பத்தி தொடர்பான துறைகளில், இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்த 'அட்லாண்டிக் பிரகடனத்திற்கு' அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

AUKUS இராணுவக் கூட்டணியானது, புனித வெள்ளி ஒப்பந்தத்தின் ஆண்டுவிழா மற்றும் ஹிரோஷிமாவில் நடந்த ஜி 7 உச்சிமாநாட்டில் விவாதிக்கப்பட்ட கூட்டங்களைத் தொடர்ந்து, பைடனுக்கும் சுனக்கிற்கும் இடையிலான நான்கு மாதங்களில் நான்காவது சந்திப்பு இதுவாகும்.

ஜூன் 8, 2023  அன்று பிரதமர் ரிஷி சுனக் (இடது) மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோர் வெள்ளை மாளிகையில் ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்தினர் [Photo by Simon Walker/No 10 Downing Street / CC BY-NC-ND 2.0]

ரஷ்யாவுக்கு எதிரான உக்ரேனிய எதிர்த்தாக்குதல் தொடங்கியதைத் தொடர்ந்து பைடனும் சுனக்கும் உக்ரேனின் நிலைமை குறித்து விவாதித்தனர். வர்த்தகத் தடைகளை எளிதாக்குவதற்கான உறுதிமொழிகள், நெருக்கமான பாதுகாப்புத் தொழிற்துறை உறவுகள் மற்றும் தரவுகள் பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரகடனத்தை மையமாகக் கொண்ட நெருக்கமான பொருளாதார உறவுகளை உருவாக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

'இருபத்தியோராம் நூற்றாண்டின் அமெரிக்க-பிரிட்டன் பொருளாதார கூட்டாண்மைக்கான ஒரு கட்டமைப்பு' என்ற பிரகடனம், அமெரிக்காவிற்கும் பிரிட்டனுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, ரஷ்யா மற்றும் சீனாவை எதிர்கொள்வதை அடிப்படையாகக் கொண்டது என்பதை தெளிவுபடுத்துகிறது. 'ரஷ்யா மற்றும் சீன மக்கள் குடியரசு (PRC) போன்ற சர்வாதிகார நாடுகளிடமிருந்து சர்வதேச ஸ்திரத்தன்மைக்கு புதிய சவால்களை நாங்கள் எதிர்கொள்கிறோம்' என்று பிரகடனம் கூறுகிறது. 

அத்துடன், 'கடந்த ஆண்டில், யூரோ-அட்லாண்டிக் மற்றும் இந்தோ-பசிபிக் மற்றும் பிற பிராந்தியங்களில் பாதுகாப்பின் பிரிக்க முடியாத தன்மையை அங்கீகரித்து, நாங்கள் ஒத்துழைக்கும் உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு அரங்கிலும் எங்கள் இணையற்ற தற்பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை உறவுகளை ஆழப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்' என்று அது மேலும் தெரிவிக்கிறது.

ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போர் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. 'ரஷ்யாவின் சட்டவிரோத, நியாயமற்ற மற்றும் தூண்டுதலற்ற ஆக்கிரமிப்பு போரை எதிர்கொள்ளவும், சுதந்திரமான, சுயாதீனமான மற்றும் இறையாண்மை கொண்ட உக்ரேனைப் பாதுகாக்கவும் அதனை ஆதரிப்பதற்கான எங்கள் தீர்மானத்தில் நாங்கள் தோளோடு தோள் நின்றுள்ளோம். நேட்டோவின் புதிய மூலோபாய கருத்தாக்கத்திற்கு ஆதரவாக, கூட்டணி பாதுகாப்பை கீழறுக்கும் மேலும் முயற்சிகளைத் தடுப்பதற்கான நேட்டோவின் திறனை தொடர்ந்து வலுப்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்' என்று பிரகடனம் தெரிவிக்கிறது.

அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து சீனாவை எதிர்கொள்வதில் பிரிட்டனின் பங்கு குறித்து, பிரகடனம் பின்வருமாறு கூறுகிறது, 'ஆஸ்திரேலியா பாரம்பரியமாக ஆயுதம் தாங்கிய, அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதை ஆதரிப்பதற்கான எங்கள் திட்டங்களை அறிவிப்பது உட்பட, AUKUS ஐ செயல்படுத்த நாங்கள் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் எங்கள் ஆழமான ஈடுபாட்டின் மூலம், சுதந்திரமான மற்றும் திறந்த பிராந்தியத்தை ஆதரிக்க எங்கள் கூட்டாளர்களுடன் முன்னெப்போதையும் விட நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்.”

அவர்களின் செய்தியாளர் சந்திப்பில், 'சிறப்பு உறவு' என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை என்றாலும், பைடன் கருத்துத் தெரிவிக்கையில், 'பெரிய பிரித்தானியாவை விட எங்களுக்கு நெருக்கமான கூட்டாளி இல்லை. ... பிரதமர் சர்ச்சிலும் ரூஸ்வெல்ட்டும் 70 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு சந்தித்தனர், பெரிய பிரித்தானியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான கூட்டாண்மையின் பலம் சுதந்திர உலகின் பலம் என்று அவர்கள் வலியுறுத்தினர். அந்த கூற்றில் உண்மை இருப்பதாக நான் இன்னும் கருதுகிறேன்' என்று குறிப்பிட்டார்.

பிரிட்டன் நிச்சயமாக வாஷிங்டனுக்கு ஒரு முக்கியமான இராணுவ கூட்டாளியாக உள்ளது. இரு தலைவர்களின் சந்திப்புக்கு முன்னதாக, 'உக்ரேனிய இராணுவத்திற்கு பிரிட்டனின் வலுவான இராணுவ ஆதரவு, ரஷ்யாவின் படையெடுப்புக்கு மேற்கத்திய பதிலிறுப்பில் அதை ஒரு மைய பாத்திரமாக வைத்திருக்கிறது' என்று நியூயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டது. நேட்டோ உறுப்பினர்களிடமிருந்து அமெரிக்கா கோரும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்திற்கு மேல் பாதுகாப்பு செலவினங்களை அதிகரிப்பதற்கான லண்டனின் உறுதிமொழி முக்கியமானது. ஏனெனில், முக்கிய ஐரோப்பிய சக்திகள் பணத்தை இறைத்து ரஷ்யாவுக்கு எதிரான போரின் செலவைப் பகிர்வதில் பிரிட்டனின் தலைமையைப் பின்பற்ற வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்துகிறது.

செய்தியாளர் சந்திப்பில் சுனக் பின்வருமாறு பதிலளித்தார், 'அமெரிக்காவிற்குப் பிறகு, உக்ரேனில் இராணுவ முயற்சிக்கு மிகப் பெரிய பங்களிப்பாளராக இருப்பதில் பிரிட்டன் பெருமிதம் கொள்கிறது. மற்ற நாடுகளும் முன்வந்து தங்கள் பங்களிப்பை செய்வது சரி என்று நான் நினைக்கிறேன். ஐரோப்பிய பாதுகாப்பில் அமெரிக்காவின் முதலீட்டைப் பெறுவதில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள், ஆனால் நாங்கள் உங்களுடன் சுமையை பகிர்ந்து கொள்ள வேண்டும், அதனால்தான் பிரிட்டனின் பாதுகாப்பு செலவினங்கள் 2 சதவீத நேட்டோ அளவுகோலை விட அதிகமாக உள்ளன. இது அதிகரித்து வரும் பாதையில் உள்ளது, மேலும் அமெரிக்காவும் பிரிட்டனும் நிர்ணயித்த வழியைப் பின்பற்ற, இதர நாடுகளை நாங்கள் ஊக்குவிப்போம், ஏனெனில் எங்கள் பாதுகாப்பு கூட்டாக உள்ளது.'

ஐரோப்பாவில் ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு மேலாதிக்கத்திற்கு ஒரு எதிர்பலமாக பிரிட்டனை வாஷிங்டன் பயன்படுத்துவது, அது வகிக்கும் பாத்திரத்தின் முக்கியத்துவத்தை குறிக்கிறது. எவ்வாறெனினும், வாஷிங்டனின் வெளிப்படையான விருப்பங்களுக்கு எதிராக (Brexit) ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறியதால், இது கடுமையாக கீழறுக்கப்பட்டுள்ளது, இது உலக அரங்கில் பிரிட்டனின் செல்வாக்கை மேலும் கணிசமாக வீழ்ச்சியடைய வழிவகுத்துள்ளது. மாநாட்டுக்கு முன்னதாக, வடக்கு அயர்லாந்துக்கும் அயர்லாந்து குடியரசுக்கும் இடையிலான பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய வர்த்தக ஏற்பாடுகள் குறித்த பிரிட்டனின் மோதலானது புனித வெள்ளி ஒப்பந்தம் மற்றும் தெற்கில் அமெரிக்காவின் கணிசமான பொருளாதார முதலீட்டிற்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டதால், பைடனின் அயர்லாந்து பயணம் குழப்பமாக இருந்தது. 

'சிறப்பு உறவின்' உண்மையான தன்மை மிகவும் தெளிவாக்கப்பட்டது: வாஷிங்டன் லண்டனுக்கு உத்தரவிட்டது: 'உங்களுக்குச் சொன்னபடி செய்யுங்கள், இல்லையெனில்'.

பைடனுடனான தனிப்பட்ட பேச்சுவார்த்தைக்கு சுனக் 40 நிமிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார், அதைத் தொடர்ந்து சுமார் 30 நிமிடங்கள் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. பைடன் முதலில் தனிப்பட்ட விவாதத்திற்கு குறைந்த நேரத்தை ஒதுக்கியிருந்தார், ஆனால் 'இரு தலைவர்களுக்கும் இடையிலான விவாதங்கள் தாமதமாகத் தொடங்கி திட்டமிட்டதை விட நீண்ட நேரம் தொடர்ந்ததால்' செய்தியாளர் சந்திப்பு தாமதமானது என்று இன்டிபென்டன்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) எழுப்பிய ஒழுங்குமுறை சிக்கல்களைச் சுற்றி இலையுதிர்காலத்தில் ஒரு உலகளாவிய உச்சிமாநாட்டை நடத்துவதற்கான பிரிட்டனின் முன்மொழிவு விவாதிக்கப்பட்ட பிரச்சினைகளில் ஒன்றாகும். பிரிட்டன் அதில் ஒரு முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று சுனக் வாதிட்டார். எவ்வாறாயினும், நியூயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளபடி, 'பிரிட்டன் 2020 இல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதால், அதை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக அது இல்லை.' அமெரிக்காவுக்கான முன்னாள் பிரிட்டன் தூதரான கிம் டாரோக்கை மேற்கோள் காட்டி டைம்ஸ், 'அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் உடன்பட்டால், உலகின் இதர பகுதிகளும் அதை பின்பற்றுகின்றன, பிரெக்ஸிட்டானது பிரிட்டன் பிழியப்படும் அபாயத்தில் உள்ளது' என்று எச்சரித்தது. 

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறியது என்பது பிரிட்டன் பிழியப்பட்டு வருகிறது என்று பொருள்படும் ஒரே பகுதி இதுவல்ல. தனது பயணத்திற்கு முன்னதாக, சுனக் தான் ஆதரித்த பிரெக்ஸிட் நிகழ்ச்சி நிரலின் முக்கிய குறிக்கோளான அமெரிக்காவுடன் ஒரு தடையற்ற வர்த்தக உடன்படிக்கையில் கையெழுத்திடுவது— இப்போது ஒரு தொலைதூர வாய்ப்பு என்பதை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்கு பதிலாக பைடனின் பணவீக்கக் குறைப்புச் சட்டத்தால் பிரிட்டனுக்கு ஏற்பட்ட பொருளாதாரச் சேதத்தைக் குறைப்பதே தேவையாக இருந்தது. 

இராணுவ அரங்கில், சீனா மற்றும் ரஷ்யாவுடனான அடிப்படை மோதல்களுடன் தொடர்புடையது மட்டுமே பிரிட்டனால் எந்த முன்னேற்றத்தையும் அடைய முடியும். முக்கியமான கனிமங்களின் உலகளாவிய உற்பத்தியில் சீனாவின் மேலாதிக்கத்திற்கு எதிராக வாஷிங்டனுடன் அணிவகுத்து நிற்பதன் மூலம் அமெரிக்க மின்சார வாகனச் சந்தையை அணுகுவது குறித்த ஒரு உடன்பாட்டைப் பெற சுனக் விரும்பினார். 

‘’பாராளுமன்ற ஆலோசனையுடன், மின்சார வாகனங்களுக்கான ஐந்து மிக முக்கியமான கனிமங்களை உள்ளடக்கிய இலக்கு கொண்ட முக்கியமான கனிம ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் தொடங்க நாங்கள் உத்தேசித்துள்ளோம். கோபால்ட், கிராஃபைட், லித்தியம், மாங்கனீசு மற்றும் நிக்கல் ஆகியவை ஐக்கிய இராச்சியத்தில் பிரித்தெடுக்கப்பட்ட அல்லது பதப்படுத்தப்பட்டவை ஆகும். பணவீக்கக் குறைப்புச் சட்டத்தின் பிரிவு 30D சுத்தமான வாகன வரி வரவுக்கு தகுதியான, சுத்தமான வாகனங்களுக்கான ஆதாரத் தேவைகளில் கணக்கிடப்படுகின்றன’’ என்று அட்லாண்டிக் பிரகடனம் குறிப்பிடுகிறது.

இது பிரிட்டன் நிறுவனங்களுக்கு பயனளிக்கும், இது பைடனின் சட்டத்தின் கீழ் ஒரு வாகனத்திற்கு 3,750 டாலர் வரி சலுகைகளுக்கு தகுதி பெறும். உலகளாவிய அணுசக்தி சந்தையில் இருந்து ரஷ்யாவை வெளியேற்றுவதற்கான பிரிட்டனின் அதிகரித்த முயற்சிகளுக்கும் இந்த ஒப்பந்தம் உறுதியளிக்கிறது.

ஆனால் அமெரிக்காவுடன் அத்தகைய ஒப்பந்தத்தை எட்டுவதில் இங்கிலாந்து ஏற்கனவே மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது, சீனா மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான விரோதப் போக்குடன் கூட, பிடென் நிர்வாகம் ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது. அட்லாண்டிக் பிரகடனத்தில் சுனக் வாஷிங்டனிடமிருந்து ஒரு சலுகையாக சுட்டிக்காட்டக்கூடிய உறுதியான எதுவும் இல்லை. பைனான்சியல் டைம்ஸ், பிரிட்டிஷ் அமெரிக்கன் பிசினஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகி டங்கன் எட்வர்ட்ஸை மேற்கோள் காட்டியது, 4,000 வார்த்தைகள் கொண்ட அறிக்கை 'பாராட்டத்தக்கது' ஆனால் எழுப்பப்பட்ட பல பிரச்சினைகளில் 'உண்மையான உடன்பாட்டைக் காட்டிலும்' நோக்கத்தை மட்டுமே குறிக்கிறது.

Loading